நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

அந்திமழை புதிய மாத இதழ்!




சென்னையிலிருந்து அந்திமழை மாத இதழ் வெளிவரத் தொடங்கியுள்ளது (ஆகத்து-செப்டம்பர் 2012). இலக்கிய ஆர்வலர்களை மகிழ்ச்சியூட்டவும், சமூக, அரசியல் ஆர்வலர்களைச் சிந்திக்கச் செய்யவும், விளையாட்டு, திரைத்துறையினர்க்குப் புத்துணர்ச்சியூட்டவும் இந்த இதழ் பயனுடைய செய்திகளைத் தாங்கி வெளிவருகின்றமை பாராட்டினுக்கு உரியது. தன்னம்பிக்கைக் கட்டுரைகள், பெருமைக்குரிய எழுத்தாளர்களின் படைப்புகள், நாட்டு நடப்புகள் குறித்த கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன.

இந்த மாத இதழில் பாமரன், அந்திமழை இளங்கோவன், இரா.கௌதமன், சஞ்சனா மீனாட்சி, ஜோதி ஸ்வரூபா, குமரன் மணி, சகாயம் ஐ.ஏ.எஸ், அ.முத்துலிங்கம், பேராச்சி கண்ணன், திருச்சி லெனின், செல்வி, என்.அசோகன், நாகராஜ சோழன், அ.தமிழன்பன், மு.இளங்கோவன், பெருமாள் முருகன், புதுவை இளவேனில், சுகுமாரன், இயக்குநர் மணிவண்ணன், ஆர்.சி.ஜெயந்தன் ஆகியோரின் படைப்புகள், திறனாய்வுகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன.

கான் அகாடமியின் நிறுவுநர் சல்மான் கான் பற்றிய கட்டுரையும், சின்னப்பிள்ளை அவர்களின் சாதனை வாழ்வும், சகாயம் அவர்கள் அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் தமிழ் உணர்வு குறித்துப் பகிர்ந்துகொண்ட அனுபவப் பகிர்வும், புதுவை இளவேனிலின் குறிப்பிடத்தக்க ஒளிப்படங்களும் இதழை அழகூட்டி வியக்க வைக்கின்றன. பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள்,சமூகச் சிந்தனையாளர்கள் படிக்க வேண்டிய இதழ்.

அந்திமழை ஆசிரியர் குழு:

சிறப்பாசிரியர்: சுகுமாரன்
நிர்வாக ஆசிரியர் என்.அசோகன்
ஆசிரியர்: கௌதமன்

தனி இதழ் விலை: 20 ரூபாய்

முகவரி:

அந்திமழை,
24 ஏ, கண்பத்ராஜ் நகர், காளியம்மன் கோயில்தெரு,
விருகம்பாக்கம், சென்னை- 600 092
தொலைபேசி: 044- 43514540

புதன், 29 ஆகஸ்ட், 2012

தமிழின் தொன்மை

தமிழின் தொன்மை குறித்து இலண்டனிலிருந்து வெளிவரும் தி மிர்ரர் இதழில் வினா விடை வடிவில் வெளிவந்த செய்தியைக் கீழே காணலாம்.



THE MIRROR, 09 07 2012.

நன்றி: பேராசிரியர் மருதூரார்

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

கலகம் செய்யும் இடது கை - பிரெஞ்சு மொழி சிறுகதைத்தொகுப்பு



கலகம் செய்யும் இடது கை எனும் தலைப்பில் பிரெஞ்சுமொழிப் பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள் பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்த எட்டு சிறுகதைகளின் தொகுப்பினை நற்றிணைப் பதிப்பகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

இந்த நூலில் உள்ள சிறுகதைகளின் விவரம்:

1. பியர் கிரிப்பாரியின் ஜோடிப்பொருத்தம், .
2. பெர்நார் வெர்பரின் கலகம் செய்யும் இடது கை,
3. ஹான்ஸ் ழுயுர்ழென் க்ரேய்ப் எழுதிய அவளுடைய கடைசிக் காதலன்,
4. தாகர் பென்ஜலூனின் அடையாளம்,
5. ஈசாக் பஷ்வீஸ் சிங்கரின் சொர்க்கத்தின் கதை,
6, 7, ஹான்ரி த்ரோயாவின் அந்தப் பச்சை டைரி,
நெஞ்சத்தைத் துளைத்தவள்,
8. லெ க்ளேஸியோவின் திருடா என்ன வாழ்க்கையடா உன் வாழ்க்கை
இந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு அணிந்துரை வழங்கிய எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் “வெங்கட சுப்புராய நாயகரின் மொழி எளிமையானது. அதோடு இயல்பானது. சாதாரண வாசகரும் அவரை வாசிக்ககூடும் என்பது இந்தப் புத்தகத்தின் பலம். புலமையை விரிப்பதல்ல இலக்கியத் தளம். மனங்களை இணைப்பதே மொழியாக்கத்தின் முக்கியப் பணி. வெங்கட சுப்புராய நாயகர் அதைச் செய்திருக்கிறார்”. என்று குறிப்பிட்டுள்ளார்.

நூல் கிடைக்குமிடம்:

நற்றிணைப் பதிப்பகம்,
பழைய எண் 123 எ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை- 600 005,தமிழ்நாடு.

செல்பேசி: 9486177208

மின்னஞ்சல்: natrinaipathippagam@gmail.com

நூலின் விலை: 90 உருவா

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

உக்கல் இளைஞர்களின் அன்பான வரவேற்பு...




 மழையும் காற்றுமாக மாலை நேரம் இருந்தது (15.08.2012). பெருமழை வந்தால் நிகழ்ச்சியை உக்கல் பெருமாள்கோயிலில் வைத்துக்கொள்ளலாம் என்று ஆசிரியர் சு.மோகனவேல் சொன்னார். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் உள்ள கூழமந்தலிலிருந்து மூன்றுகல் தொலைவில் உக்கல் உள்ளது. குண்டும் குழியுமான தார்ச்சாலை.

 எங்கள் உந்து வண்டியில் கூழமந்தல் வழியாக நாங்கள் ஊர்முனையை நெருங்கியதும் ஒலிபெருக்கி எங்களை வரவேற்றது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் “உறியடி” என்னும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. உறியடி மகிழ்ச்சியிலும் எங்களைக் கண்டு ஓரிருவர் வரவேற்றனர். சிற்றூர்ப்புற நிகழ்ச்சி என்றாலும் வழக்கம்போல் வெட்டுருக்கள், பதாகைகள் வரவேற்றன. சு. மோகனவேல் அவர்களின் இல்லத்தை அடைந்தோம். சு.மோகனவேல் அவர்களின் தந்தையார் திரு. கோ.சுப்பிரமணியம் அவர்கள் அரசியல் ஈடுபாடு கொண்டவர். ஒன்றியக்குழு உறுப்பினராக இருந்து மக்கள்பணி செய்து வருகின்றார்.

 சு. மோகனவேல் வீடு எளிமையாகவும் அதேபொழுது வசதியாகவும் அமைந்துள்ளது. அவர்களின் குடும்பத்தார் யாவரும் ஒற்றுமையாக இருந்தமை எனக்கு மகிழ்ச்சி தந்தது. வீட்டில் காற்றுவளிப்பாடு இருந்தது. பகல் முழுவதும் அலைந்த அலைச்சல் சிறிது நேரம் ஓய்வாக அமர்ந்தேன்.

 மோகனவேல் அவர்களின் தந்தையாருடன் உரையாடி ஊர்நிலை அறிந்தேன். உக்கல் சிற்றூர் சற்றொப்ப 800 குடும்பங்களைக் கொண்ட ஊர். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு பிள்ளைகள் காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்குதான் படிக்கவும், பணிக்கும் செல்ல வேண்டும்.

 உக்கலுக்கு அருகில் காஞ்சிபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் இப்பொழுது பன்னாட்டு நிறுவனம் ஒன்று தோல்பொருள் தொழிற்சாலை தொடங்கி, பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கி வருவதாக உரைத்தார்கள். இந்தத் தொழிற்சாலை வந்த பிறகு காவல் நிலையங்களுக்குப் புதுப்புது வகையான வழக்குகள் வருவதாக அனைவரும் கூறிச் சிரித்தனர்.

 மோகனவேல் அவர்களின் தந்தையார் திரு. கோ.சுப்பிரமணியம் அவர்கள் உக்கலின் பழங்காலச் சிறப்புகளையும் இந்த ஊரில் அண்மைக்காலம் வரை வேளாண்மை செழித்திருந்த வரலாற்றையும் நினைவுகூர்ந்தார். இந்த ஊரின் தென்பகுதியில் சேயாறும் (செய்யாறு), வட பகுதியில் பாலாறும் ஓடும் பெருமைக்குரியது. பண்டைக் காலத்தில் மழைவளம் மிக்கிருந்ததால் சோழப்பேரரசன் காலத்தில் புகழ்பெற்ற கோயில்களை எடுத்துள்ளனர். மேலும் மாமண்டூர் போன்ற ஏரிகளை உருவாக்கிப் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வேளாண்மை செய்து நாட்டை வளப்படுத்தியுள்ளனர். இன்று இந்த ஊரின் நிலங்கள் யாவும் வீட்டு மனைகளாக்கப்பட்டுவிட்டன. சென்னை, காஞ்சிபுரம், நெய்வேலி முதலான ஊரிகளில் வாழும் செல்வ வளம் உடையவர்கள் இந்தப் பகுதியில் வீட்டு மனைகளை மூலப்பொருளாக்கிவிட்டனர். இதனால் வேளாண்மைக்கு உகந்ததாக இல்லாமல் ஊர் பாழடைந்து வருகின்றது என்ற கவலையை அனைவரும் பகிர்ந்துகொண்டனர்.

 இரவு 7.30 மணி ஆன பிறகும் நிகழ்ச்சி தொடங்கவில்லை. மோகனவேல் நேரு இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்களைப் பார்த்து வேகப்படுத்தினார். அதற்குள் அங்கிருந்த கல்லூரி மாணவர்கள், மாணவியர்கள் பலரும் குடும்பத்தினருடன் வந்து என்னுடன் உரையாடி மகிழ்ந்தனர். அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும் வகையில் பல அறிவுரைகளை வழங்கியும் எப்பொழுதும் உதவிக்குத் தொடர்புகொள்ளுங்கள் என்றும் கூறி என் முகவரி கொடுத்து ஊக்கப்படுத்தினேன். என் கையிலிருந்த ஐபேடில் என் வளர்ச்சி நிலை காட்டும் பல படங்களைக் கண்டு மோகனவேல் அவர்களின் தந்தையாருக்கு என்மேல் பேரீடுபாடு ஏற்பட்டது.

 இரவு 7.45 மணியளவில் மேடைக்குச் சென்றோம். ஒலிவாங்கி ஆய்வு, விளக்குகள் பொருத்தம் என்று மேடையருகில் வேலைகள் முனைப்பு காட்டின. மோகனவேல் நிகழ்ச்சியைத் தொடங்கிவிடுவோம். அதன் பிறகுதான் மக்கள் கூடுவார்கள் என்று வரவேற்புரையாற்றி, என்னை அறிமுகம் செய்தார். நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் தெருவெங்கும் மக்கள் அமர்ந்து பார்க்க ஆயத்தம் ஆனார்கள்.

 இளைஞர்கள், பெரியவர்கள், சிறியவர்கள், தாய்மார்கள் என்று பல தரத்து, மக்கள் கூடிக் கேட்க வந்திருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாகத் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பெற்றது. பள்ளியில் பயிலும் இரு பெண்கள் நன்கு பாடினர். அதன் பிறகு கூட்டத்தைச் சேர்க்க அதே பெண்கள் வேப்பிலையைக் கையில் பிடித்தபடி “வெக்காளி அம்மனை” அழைத்துச் சாமிஆடும் பாடலுக்குத் தக ஆடினர். தங்கள் பிள்ளைகள் ஆடுகின்றனர் என்று இப்பொழுது கூட்டம் கூடத் தொடங்கியது.

 நான் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவே புதுவை திரும்பவேண்டும் என்பதால் முதலில் என்னைப் பேசச் சொன்னார்கள். அங்கிருந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் தன்னம்பிக்கையூட்டும் சில கருத்துகளை எடுத்துப் பேசினேன். வறுமையில் வாடி, உழைத்து முன்னேறிய புகழ்பெற்றவர்கள் பலரின் வாழ்வியலை நினைவுகூர்ந்தேன். சிற்றூர்ப்புறத்தில் பிறந்து கல்வியை மட்டும் துணையாகக் கொண்டு முன்னேறிய என் வாழ்க்கையையும் சொன்னேன். மாணவர்கள் அமைதியாகக் கேட்டனர். முன்னேறுவதற்கும், படிப்பதற்கும் பணம் ஒரு தடையில்லை. படிக்க முன்வந்தால் பலர் உதவுவதற்குத் தயாராக உள்ளனர் என்று மாணவர்களை ஊக்கப்படுத்தினேன்.

 இளைஞர்களைத் திரைப்பட நடிகர்கள், அரசியல்காரர்கள் பின் செல்லாமல் ஆக்கபணி செய்ய முன்வந்தமைக்குப் பாராட்டினேன். இணையம், கணினி, தட்டச்சு இவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினேன். நிறைவாகச் சிற்றூர்ப்புற மக்கள் மிகுதியாக இருந்ததால் நாட்டுப்புறப் பாடல்கள் பலவற்றைப் பாடி மகிழ்ச்சியூட்டினேன். தமிழர்களின் கலை, பண்பாடு, நாகரிகம், இன்றைய திரைப்படம், தொலைக்காட்சியால் அழிந்துவருவதை நினைவுகூர்ந்தேன். நடவுப்பாடல், ஒப்பாரி, தாலாட்டு, கும்மி, கோலாட்டம், உலக்கைப்பாடல்கள் என்று பலவகைப் பாடல்களைப் பாடி விளக்கியதால் அனைவரும் ஈடுபாட்டுடன் கேட்டனர். இதனை நண்பர்களும் உறுதிப்படுத்தினர். சற்றொப்ப ஒரு மணி நேரத்திற்கும் மேல் என் உரை நீண்டது.

 என்னிடம் இருந்த இணையம் கற்போம் நூல்களை அனைவரும் ஆர்வமுடன் வாங்கிக்கொண்டனர். குறைந்த படிகள் கையில் இருந்ததால் தேவையானவர்களுக்குத் தனித்தூதில் அனுப்புவதாக உறுதியுரைத்துப், பெயர் விவரம் பெற்றுக்கொண்டேன். உணவு முடித்துதான் செல்ல வேண்டும் என்று நேரு இளைஞர் நற்பணி மன்றத்துத் தோழர்கள் கேட்டுக்கொண்டனர். உக்கல் பெருமாள்கோயிலில் அமர்ந்தபடி சில நண்பர்களுடன் உரையாடியபடி உண்டோம். நினைவுக்குச் சில படங்களை எடுத்துக்கொண்டோம்.

 சிற்றூர்ப்புறத்தில் பிறந்து வளர்ந்த நான் இந்த ஊரையும் மக்களையும் கண்டு அவர்களுள் ஒருவனாக மாறினேன். பத்து மணியளவில் அண்ணன் உதயகுமார், மோகனவேல், முகிலன் உள்ளிட்டவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, கூழமந்தல் தார்ச்சாலையை நெருங்கினோம். அவர்களின் உந்து வண்டி எங்கள் வண்டிக்குப் பின்னாக வந்துகொண்டிருந்தது. மழை இப்பொழுது வலுவாகத் தூறுவதற்குரிய அறிகுறி இருந்தது. எனவே எங்கள் உந்துவண்டி வேகமெடுத்தது. கூழமந்தலை நாங்கள் அடைவதற்கும் எனக்குரிய பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. இரவு நேரங்களில் இந்த நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காது என்பதால் கிடைத்த பேருந்தில் ஏறவேண்டிய நிலை. மற்ற நண்பர்களிடம் விடைபெறத் திரும்பியபொழுது யாரும் இல்லை என்பதால் என்னை அழைத்து வந்த நண்பரிடம் மட்டும் சொல்லிவிட்டு உடன் பேருந்தில் ஏறினேன். பேருந்தில் ஏறிய பிறகு ஒவ்வொரு தோழர்களுக்கும் செல்பேசி வழியாக நன்றி கூறினேன். இரவு புதுச்சேரி வரும்பொழுது நடு இரவு இரண்டு மணியாகும்.


பார்வையாளர்களாக ஊர்ப் பெரியவர்கள்


பார்வையாளர்கள்(மகளிர்)


மாணவப் பார்வையாளர்கள்


உக்கல் விழாவில் மு.இ


உக்கல் விழாவில் மு.இ.


நேரு இளைஞர்கள் மன்றத்தின் தோழர்களுடன்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் முனைவர். கே.இராமசாமி அவர்கள் இன்று பதவி ஏற்பு!


பேராசிரியர் கே.இராமசாமி அவர்கள்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் (வேளாண் மற்றும் பாசனம்) கே. இராமசாமி அவர்கள் திங்கள்கிழமை பதவியேற்கிறார்.

இதற்கான உத்தரவை, தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான கே.ரோசய்யா பிறப்பித்துள்ளார்.

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், மாநில திட்டக்குழு உறுப்பினருமான (வேளாண்மை) கே.இராமசாமியைப் புதிய துணைவேந்தராக நியமித்து ஆளுநர் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் 1948-ல் பிறந்தவர் கே.ராமசாமி அவர்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டம் படித்தவர். பெல்சியத்தில் உள்ள கத்தோலிக் லீயுவென் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். மற்றும் முனைவர் பட்டம் முடித்துள்ளார்.

முனைவர் கே.இராமசாமி அவர்கள் உயிரித்தொழில்நுட்பம், நுண்ணுயிரியல்துறையில் உலக அளவில் புகழ்பெற்ற அறிஞர், கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக்கல்லூரியில் புல முதன்மையராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். கலவையில் பேராசிரியர் அவர்கள் பணியாற்றியபொழுது அவர்களுக்குக் கீழ் வேளாண்மைக்கல்லூரி மாணவர்களுக்கு நான் தமிழ்ப்பாடம் நடத்தும் வாய்ப்பினைப் பெற்றேன்.

பழகுதற்கு இனிய பண்பாளர். நேர்மையும் அடக்கமும் கொண்ட பேராசிரியர். மாணவர்களிடத்தும், நண்பர்களிடத்தும் இயல்பாகப் பழகக் கூடியவர். இவர்தம் பணிக்காலத்தில் கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக்கல்லூரிக்கு வெளிநாட்டு அறிஞர்கள் பலர் வந்து பேராசிரியர் அவர்களைக் கண்டு ஆய்வுத் தொடர்பாகக் கலந்துரையாடிச் செல்வார்கள். பின்னர் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் சில காலம் பணிசெய்து வந்தார்கள். அண்மையில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்திற்கு நான் சென்றபொழுது பேராசிரியர் கே.இராமசாமி அவர்களைக் காண நினைத்தேன். துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ ஐயா அவர்களை வினவினேன். ஆனால் அவர்கள் கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணிபுரிவதாக அறிந்தேன்.

இன்று முதல் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராகப் பணியாற்றும் பேராசிரியர் கே.இராமசாமி அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உலகெங்கும் பணிபுரியும் பேராசிரியர் கே.இராமசாமி அவர்களுடன் பணிபுரிந்த பேராசிரியர்கள், அவர்களின் மாணவர்களுக்கு இந்தச் செய்தி இனிப்பானது ஆகும்.

மிகச்சிறந்த கல்வியாளரைத் தகுதி அடிப்படையில் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக நியமித்த தமிழக ஆளுநரும், தமிழக அரசும், உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் என்றும் பெருமைக்கும் பாராட்டிற்கும் உரியவர்களாவர்.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

தனித்தமிழ் அறிஞர் தா.சரவணத்தமிழன் மறைவு

  த.ச.தமிழன் இலக்கண நூல் ஆசிரியரும் தனித்தமிழ் அறிஞருமான தா.சரவணத்தமிழன் அவர்கள் இன்று (26.08.2012) இரவு 8 மணி அளவில் சென்னைப் போரூரில் உள்ள இராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். அவரது உடல் மருத்துவமனை வளாகத்திலேயே இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. அவர் உடலை மருத்துவ ஆய்வுக்குக் கொடையாக வழங்கிருப்பதால், நாளை மாலை 4 மணி அளவில் அவரது உடல் அதே மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கப்பட உள்ளது. 
 
  திருவாரூரில் இயற்றமிழ்ப் பயிற்றகம் என்ற அமைப்பினைத் தொடங்கிப் பல்வேறு புலவர்களையும், படைப்பாளிகளையும், உருவாக்கியவர் சரவணத்தமிழன் என்பது குறிப்பிடத்தக்கது. த.ச.தமிழன் அவர்கள் தமிழறிஞர் திரு.விக. அவர்களுக்குத் திருவாரூரில் சிலை நிறுவியவர். தமிழன் பதிப்பகம், இயற்றமிழ்ப் பயிற்றகம் நிறுவிப் பல நூல்களை வெளியிட்டவர். இவரின் தமிணூல், தனித்தமிழ் நாவலரின் கனித்தமிழ்க் கட்டுரைகள், இருநூல் பிழிவு, பழமையிலே பூத்த புதுமை மலர், யாப்பு நூல் உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன. 
 
 அடியார்க்குமங்களம் அவரது ஊர். த.சரவணத்தமிழன் அவர்களின் மனைவி பெயர் சுசிலா தமிழச்சி. சில ஆண்டுகளுக்கு முன்பு இதய நோயால் இறந்துபோனார். இவர்களுக்கு இல்லற வாழ்வில் மொத்தம் பிறந்தது எட்டுக் குழந்தைகள். நான்கு குழந்தைகளே பிழைத்தனர். மூத்த மகன் பெயர் குறளேந்தி. இவருக்கு ஐந்து மகள்கள். தற்போது காந்தாவனம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். 
 
 தமிழறிஞரின் மூன்று மகள்களில் இரண்டு மகள்கள் விதவையாக வாழ்கின்றனர். மூத்தமகள் தமிழரசியின் கணவர் ராமையன். சென்னையில் குளிர்சாதன பெட்டி பழுது நீக்குபவராக தொழில் செய்து வாழ்ந்தவர், சரியான நேரத்துக்கு உண்ணாமல் வயிற்றுப்புண் வந்து திருமணமான ஏழு ஆண்டில் இறந்துபோனார். 
 
 அதன் பிறகு மகளுக்கு துணையாகச் சென்னைத் தாம்பரம் அருகில் உள்ள கரிசங்கால் கிராமத்தில் பக்கவாதம் பாதித்த நிலையில் வாழ்ந்துவந்தார். அடுத்த சில ஆண்டுகளில் அவரது இரண்டாவது மகள் மெய்யறிவின் கணவர் இறந்துபோனார். இருச்சக்கர பழுது நீக்குபவராக தொழில் செய்து வந்தவர், தன்னிடம் இருந்த நுரையீரல் பிரச்சினைக்குச் சரியாக சிகிச்சை எடுக்காததால் அவரும் மறைந்தார். பலவகை இழப்புகளுக்கு நடுவிலும் கொண்டகொள்கையில் மாறாமல் தனித்தமிழ் ஈடுபாட்டுடன் வாழ்ந்தவர். 
 
த.ச.தமிழன் நடத்திய தமிழோசை மாத இதழ்(1975) 
 
நன்றி: யாணன் தமிழம்.நெட்

தமிழ்ப் பண்பாடு காக்க வழிசெய்யுங்கள்! உலகத் தமிழ்க் கல்வி மாநாட்டில் பன்னாட்டு அறிஞர்கள் கோரிக்கை!


முனைவர் மு.பொன்னவைக்கோ தொடக்கவுரை

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கமும் மாநாடும் நேற்று(25.08.2012) காலை 10 மணிக்குத் தொடங்கியது. மறைந்த தமிழறிஞர் ஈழத்துப்பூராடனார் நினைவு அரங்கில் மாநாடு நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா, பிரான்சு, செர்மனி, கனடா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டனர்.


நிகழ்ச்சியின் தொடக்கமாக ஈழத்தில் நாடு காக்க உயிரிழந்தவர்களைப் போற்றும் முகமாக ஒரு நிமிடம் அமைதி காக்கப்பட்டது.

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் கல்வி கற்கத் தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் பாடத்திட்டங்கள் உருவாக்கி இணையத்தில் வைக்கப்பட்டுள்ளதை நினைவூட்டிய முனைவர் பொன்னவைக்கோ முதுகலை, ஆய்வியல் நிறைஞர் படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தின் இணையவழிக் கல்வித்துறையின் வழியாக வழங்கப்பட உள்ளதை எடுத்துரைத்தார்.

அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகத்திற்காக எஸ். ஆர். எம்.பல்கலைக்கழகம் பாடத்திட்டங்களை அச்சிட்டு விரைந்து வழங்க உள்ளதையும் எடுத்துரைத்தார். தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அயல் நாடுகளில் வாழும் தமிழ்க்குழந்தைகள் கல்வி பெறுவதற்கு இயன்ற உதவிகளைச் செய்ய எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம் தயாராக உள்ளதை எடுத்துரைத்தார்.

மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி அவர்களின் தலைமையில் பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் இரா.மதிவாணன் அவர்கள் குறுகிய காலத்தில் மாநாடு நடைபெறுவதன் நிலையை விளக்கி வரவேற்புரையாற்றினார். தென்னாப்பிரிக்காவிலிருந்து வருகை தந்த திருமதி மிக்கி செட்டி அவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் கல்விப் பொறுப்பாளர் விசு. துரைராசா அவர்கள் நோக்கவுரையாற்றினார். வேல்.வேலுபிள்ளை அவர்களும், துரை கணேசலிங்கம் அவர்களும் முன்னிலையுராயாற்றினர்.

இலங்கை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வர் சோதி குமாரவேல் அவர்கள் தங்கள் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறுவது குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

பகலுணவுக்குப் பிறகு பேராசிரியர் மறைமலை அவர்களின் தலைமையில் இலக்கியக் கல்வியில் இணையத்தின் பங்களிப்பு என்ற தலைப்பில் முனைவர் அர்த்தநாரீசுவரன் உரையாற்றினார்.

மாலை 3 மணியளவில் தொடங்கிய ஆய்வரங்கில் அன்னை தெரேசா மகளிர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஜானகி அவர்களின் தலைமையில் முனைவர் பரமசிவம்(மலேசியா), முனைவர் மு.இளங்கோவன்(புதுச்சேரி), முனைவர் வசந்தாள்(சென்னை) ஆகியோர் ஆய்வுரை வழங்கினர்.

மாலையில் நடைபெற்ற நிகழ்வில் உச்சநீதி மன்ற மேனாள் நீதிபதி நீதியரசர் அரு.இலட்சுமணன் கலந்துகொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டார்.


முதுநிலை வழக்கறிஞர் இரா.காந்தி அவர்கள் தலைமையுரை


மேடையில் சான்றோர்கள்


பார்வையாளர்கள் ஒரு பகுதியினர்


பார்வையாளர்கள்




பார்வையாளர்கள் ஒரு பகுதி


பேராசிரியர் இ.மறைமலை


கனடா விசு துரைராசா நோக்கவுரை



மலேசியப் பேராளர் பா.கு.சண்முகம் அவர்களுக்குச் சிறப்புச்செய்தல்(மு.இ)


புதுவை வீர.மதுரகவி அவர்கள் முனைவர் மு.இளங்கோவனைச் சிறப்பித்தல்

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் நடத்தும் உலகத் தமிழ்க் கல்வி மாநாடு



உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியும் இணைந்து உலகத் தமிழ்க் கல்வி மாநாட்டினை 2012, ஆகத்து மாதம் 25, 26 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்களில் நடத்துகின்றன. அயல்நாடுகளில் தமிழ் கற்றல் கற்பித்தலில் எதிர்நோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற கருப்பொருளில் மாநாடு நடைபெறுகின்றது.

இடம் : கருத்தரங்கக்கூடம், எத்திராஜ் மகளிர் கல்லூரி(தன்னாட்சி), சென்னை,தமிழ்நாடு.

நாள்: 25,26-08.2012(சனி,ஞாயிறு)

நேரம்: காலை 10 மணி முதல்

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் என்ற தமிழ் அமைப்பு கடந்த 37 ஆண்டுகளாகத் தமிழ் வளர்ச்சி நோக்கி உலக அளவில் சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றது. இந்த அமைப்பும், 65 ஆண்டுகளாகக் கல்விப்பணியாற்றி வரும் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியும் இணைந்து உலகத் தமிழ்க் கல்வி மாநாட்டினை நடத்துகின்றன. இந்த மாநாட்டில் தொடக்கவிழா, மலர் வெளியீடு, கருத்தரங்கம், ஆய்வரங்கம், இசைநிகழ்ச்சி, கலைநிகழ்ச்சிகள், சிறப்புரைகள், நிறைவு விழா நடைபெற உள்ளன.

உலகத் தமிழ்க்கல்வி மாநாட்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்பமை நீதியரசர் அரு. இலட்சுமணன் அவர்களும், மேனாள் துணைவேந்தர்கள் முனைவர் ஔவை.நடராசன் அவர்களும், முனைவர் பொற்கோ அவர்களும், முனைவர் க.ப.அறவாணன் அவர்களும், முனைவர் ச.முத்துக்குமரன் அவர்களும், துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்களும், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதி ராஜா, சிவஞானம் சிரீதரன் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

திரு&திருமதி மிக்கி செட்டி (தென்னாப்பிரிக்கா), வி.சு.துரை ராசா(கனடா), வேல். வேலுப்பிள்ளை (அமெரிக்கா), துரை. கணேசலிங்கம் (செர்மனி) ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

மாநாட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வி.சு.துரைராசா(கனடா), உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன், மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி ஆகியோர் செய்துள்ளனர்.













சனி, 18 ஆகஸ்ட், 2012

மாமண்டூர் குகைக்கல்வெட்டுகள்...

மாமண்டூர் குகை 
 
 திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள "உக்கல்" என்ற ஊரில் வாழும் இளைஞர்கள் நேரு இளைஞர் நற்பணி மன்றம் என்ற பெயரில் அமைப்பை நிறுவி ஆண்டுதோறும் விழா நடத்தி வருகின்றனர். மூன்றாண்டுகளுக்கு முன் இந்த ஊரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று என்னிடம் கேட்டனர். நானும் இசைவு தந்தேன். அறிக்கைகள், விளம்பரங்கள் ஆயத்தமாயின. விழாவுக்கு இரண்டு நாளுக்கு முன்பாக எனக்கு மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டு அசைய வழியில்லாமல் படுக்கையில் இருந்தேன். என் நிலையை விழா ஏற்பாட்டாளர்களுக்கு, என்னை அறிமுகம் செய்த நல்லாசிரியர் கோ.சு. மோகனவேல் அவர்களிடமும் அண்ணன் உதயகுமார் அவர்களிடமும் தெரிவித்தேன். பெரும்பாடுபட்டு விழாவை ஒழுங்குசெய்த அவர்களுக்கு உள்ளுக்குள் வருத்தம் இருந்திருக்கும். ஆண்டுகள் சில ஓடின. 
 
 மீண்டும் உக்கல் இளைஞர்கள் இந்த ஆண்டு என்னை அழைத்தனர். முன்புபோல் ஏதேனும் நடந்து, மீண்டும் விழாவுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டால் சிக்கலாகிவிடும் என்று பல்வேறு பணிகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு ஆகத்து மாதம் பதினைந்தாம் நாளுக்குக் காத்திருந்தேன். ஆகத்து மாதம் பதினைந்தாம் நாள் காலையில் ஒன்பது மணிக்குப் புதுச்சேரியில் பேருந்தேறினேன். ஆறுநாள் புதுவையில் தொடர்ந்து விடுமுறை என்பதால் மக்கள்கூட்டம் எம்பெருமான் ஏழுமலையானை வழிபடத் திருவேங்கடம் புறப்பட்டது. பேருந்தில் கால் வைக்க இடமில்லை. வேறு வழியில்லாமல் நின்றகோலத்தில் பேருந்துச் செலவு அமைந்தது. இடையிடையில் என் வருகையை அண்ணன் உதயகுமார் அவர்களுக்குத் தெரிவித்தபடி சென்றேன். 
 
 திரு. உதயகுமார் சமூகச் சீர்திருத்த உணர்வுடையவர். கூழமந்தல் என்ற ஊரில் பிறந்தவர். சென்னையில் தொலைத் தொடர்புத்துறையில் பணிபுரிகின்றார். இளைஞர்களை ஒருங்கிணைத்து ஆக்கப்பணிகளுக்கு வழிகாட்டுபவர். பத்தாண்டுகளுக்கு முன் நான் கலவையில் பணிபுரிந்தபொழுது கூழமந்தல் என்ற தம் பிறந்த ஊரில் என்னைப் பேச அழைத்தவர். அன்று ஏற்பட்ட நட்பு இன்று வரை வளர்பிறைபோல் வளர்ந்து வருகின்றது. நான் உக்கலில் பேசவேண்டும் என்பதில் திரு. உதயகுமார் அவர்கள் பேரார்வம் கொண்டவர். என்னை வரவேற்கப் பேருந்து நிலையத்தில் காத்திருப்பார் என்று ஆர்வமாகச் சென்றேன். அவரைக் காணவில்லை. இருப்பினும் அந்த ஊருக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே நான் சென்றுள்ள பட்டறிவு இருப்பதால் இறங்கி உதயகுமார் அவர்களின் இல்லத்திற்குச் சென்று யாரையும் கேட்காமல் திண்ணையில் அமர்ந்தேன். 
 
 அங்கிருந்த தினத்தந்தி நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தேன். மீண்டும் தொலைபேசியில் பேசினேன். இன்னும் பத்து மணித்துளியில் வருவதாகச் சொன்னார். வேறு வேலையில் இருக்கின்றார் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்குள் அண்ணன் உதயகுமார் ஏற்பாட்டில் வேறொரு தம்பி வந்து என்னை வரவேற்றார். குளிர்ந்த நீர் கொணர்ந்தார். அருகில் உள்ள சிவன்கோயில் வரை சென்று வருவோம் என்றார். முன்பே அந்தக் கோயிலைப் பார்த்திருந்தேன் எனினும் படம் பிடித்தேனில்லை. எனவே புகைப்படக் கருவியுடன் கோயிலுக்குச் சென்றோம் அக்கோயில் எங்கள் ஊரான கங்கைகொண்டசோழபுரத்துடன் தொடர்புடையது. சோழமண்டலம் என்பதை ஒலிக்கத்தெரியாத வெள்ளைக்காரன் அந்த ஊரைக் கூழமந்தல் (CHOLAMANDAL) என்றழைக்க, நம் மக்களும் கூழமந்தலாக்கிக் குழப்பிவருகின்றனர். கூழமந்தல் கோவிலின் பல பகுதிகளைப் பார்வையிட்டோம். அங்குள்ள கல்வெட்டுகள் சிதைந்து உள்ளன. முன்பே படி எடுக்கப்பட்டுள்ளதாகச் சொன்ன பிறகு பெருமூச்சுவிட்டேன். அங்குள்ள தென்முகக்கடவுள், சிவலிங்கம், அழகிய நந்தி யாவும் அங்குமிங்குமாகப் பராமரிப்பின்றி அண்மைக்காலம் வரை இருந்துள்ளன. கோயிலும் குழந்தைகள் விளையாடும் ஆடுகளமாக மாறியிருந்தது. நல்ல உள்ளம் வாய்த்த அன்பர்களின் முயற்சியால் கோயில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. 
                      கூழமந்தல் கோயிலின் அழகிய பகுதி 
                            கூழமந்தல் கல்வெட்டு 
                            கூழமந்தல் கல்வெட்டு 
                         கூழமந்தல் சிவன்கோயில் 
                      சிதிலமடைந்த முன்மண்டபம் 
  
 கூழமந்தல் சிவன்கோயிலையும் கல்வெட்டுகளையும் பார்வையிட்டுக்கொண்டிருந்தபொழுது அண்ணன் உதயகுமார் அவர்கள் வந்து என்னை வரவேற்றுப் பல விளக்கங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். கோயில் பார்வையிடல் முடிந்து வீடு வந்தோம். திண்ணையில் அமர்ந்து பயணம் பற்றி உரையாடினோம். அதுவரையில் அண்ணன் உதயகுமார் அவர்கள் வந்துசேரக் காலம் தாழ்ந்தமைக்குரிய காரணத்தைச் சொல்லாமல் இருந்தார். காரணத்தைச் சொன்னவுடன் உள்ளம் குமைந்தேன். மிகவும் வருந்தினேன். 
 
 அண்ணன் உதயகுமார் அவர்களின் தங்கையின் கணவர் ஓரிரு நாளுக்கு முன்பாக மாரடைப்பால் இறந்த செய்தியைச் சொல்லி, தங்கைக்கு ஆறுதலாக அவர்கள் வீட்டில் இருப்பதாகவும் சொன்னார். சில சடங்குகளின்பொருட்டு அனைவரும் தங்கையின் வீட்டில் இருப்பதைச் சொன்ன பிறகு அனைவரும் பேச்சற்று அமைதியானோம். அருமைத் தங்கையினுக்கு ஆதரவாக இருக்க வேண்டியவர் எங்களுடன் இருகின்றாரே என்று உடன் புறப்படும்படி வேண்டிக்கொண்டோம். ஆனால் எங்களுக்குப் பகலுவுக்கு வழி செய்துவிட்டு என்னை மாமண்டூர் குகைக் கல்வெட்டுகளைப் பார்வையிட நண்பர் மோகனவேலுவிடம் ஒப்படைத்துவிட்டு அண்ணன் உதயகுமார் விடைபெற்றுக்கொண்டார். 
 
  பகல் ஒரு மணியளவில் மாமண்டூர் நோக்கி எங்கள் உந்துவண்டி பாய்ந்தோடியது.  மாமண்டூர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். இது காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து 10 கல் தொலைவில் தென்திசையில் உள்ளது. நரசமங்கலம் என்ற ஊரில் இறங்கி மேற்காக இரண்டு கல் தொலைவு நடந்தால் மாமண்டூர் மலையை அடையலாம். சதாசிவ பண்டாராத்தார், முனைவர் மா.இராசமாணிக்கனார் நூல்கள் வழியாக மாமண்டூர் பற்றி ஆர்வமுடன் கற்ற மாணவப்பொழுதுகள் இப்பொழுது நினைவுக்கு வந்தன. 
 
  எங்கள் உந்துவண்டியை ஓரமாக நிறுத்திவிட்டுக் குகைக்குச் செல்ல நினைத்தோம். இந்திய அரசின் தொல்லியல்துறையின் சார்பில் மாமண்டூர் மலையைச் சுற்றிலும் சுற்றுவேலி அமைக்கும் பணி நடந்துவருகின்றது. தொல்பொருள் ஆய்வகம் சார்பில் ஓர் அலுவலகமும் கட்டப்பட்டு வருகின்றது. மகேந்திரவர்மன் காலத்திலும் அதனை அடுத்துப் பராந்தக சோழன் காலத்திலும் புகழ்பெற்ற ஏரியாக மாமண்டூர் ஏரி இருந்துள்ளது. 4500 ஏக்கர் பரப்பளவுகொண்டிருந்த ஏரியால் சுற்றியுள்ள 18 சிற்றூர் சார்ந்த நிலங்கள் பாசனவசதி பெற்றன. இன்று ஏரியை நிலமாக்கி மக்கள் உழுதுவருகின்றனர். ஏரி சுருங்கி இப்பொழுது குட்டையாகக் காட்சியளித்து வருகின்றது. ஏரியில் பழங்கால மதகு ஒன்றும் உள்ளது. ஏரியின் கீழ்ப்பகுதி மலையால் அமைந்துள்ளது. ஏரிக்குக் கரையாக இந்த மலைப்பகுதி அமைந்துள்ளது. 
 
 மலையில் பழங்காலத்தில் சமண முனிவர்கள் தங்கியிருக்கவேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் அவை யாவும் போதிய பராமரிப்பின்றி, வௌவால் மூத்திரத்தால் அர்ச்சிக்கப்பட்டுச் சிதைந்து காணப்படுகின்றன. குடிமகன்களுக்கு ஏற்ற இடமாக இன்று குகைக்கோயில் மாறியுள்ளது. மாமண்டூர் பற்றி ஆராயப் புகுவோர் குகைகள், கல்வெட்டுகளுடன் தங்கள் ஆராய்ச்சியை முடித்துக்கொள்வார்கள். ஆனால் இங்குத் தமிழிக் கல்வெட்டுகளும், கற்பதுக்கைகளும், கற்படை வட்டங்களும் உள்ளன என்பதைத் தமிழக வரலாற்றில் ஆர்வமுடைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களைப் போன்ற அறிவார்ந்த ஆய்வாளர்களை நம் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். போற்றி மதிக்கமாட்டார்கள். இவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆய்வுத்துறையில் ஈடுபடும் தமிழார்வலர்களின் முயற்சிகள்தான் எதிர்காலத்தில் பேசப்படும். அந்த வகையில் மாமண்டூர் குகைக் கல்வெட்டுகளும், கற்பதுக்கைகளும், கற்படைகளும் பலநாள் தங்கி ஆராய்வதற்கு ஆராய்ச்சியாளர்களுக்குக் களமாக உள்ளது என்பதை மட்டும் ஒருவரியில் குறிக்கலாம். இதுவும் நிற்க. 
 
  மாமண்டூரில் நான்கு குடைவரைகள் உள்ளன. ஒன்று முற்றுப்பெறாமல் உள்ளது. எஞ்சியவை அழகிய தூண்களைக் கொண்டும். சிலைகளை நிறுவுவதற்குரிய அகழ்வுப்பகுதிகளைக் கொண்டும் விளங்குகின்றன. சில குகைகளில் பூவேலைப்பாடுகளுடன் உள்ள தூண்களைக் காணமுடிகின்றது. சுவரில் கல்வெட்டுகள் சிதைந்து காணப்படுகின்றன. கிரந்த எழுத்துகளால் அமைந்த கல்வெட்டுகளைப் படிக்கும் புலமையுடைவர்கள்தான் இதனைப் படிக்க இயலும். வடக்குப் பகுதிக் குகையில் தென்சுவரில் மகேந்திரவர்மன் "மத்தவிலாச பிரகசனம்" எழுதிய குறிப்பு உள்ளது. மேலும் அவனுக்குச் "சத்ருமல்லன்", "நித்திய விநீதன்", "சத்தியசாந்தன்" எனும்பெயர்கள் உண்டு என்பதையும் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. 
 
  மற்றொரு கோயிலில் மூன்று கருவறை உள்ளது. பராந்தகன் காலத்துக் கல்வெட்டில் "வாலீச்வரம்" எனவும், முதல் இராசராசன் காலத்தில் இந்த ஊர் "உருத்திர வாலீச்சரம்" எனவும் வழங்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பெரிய பாசன வசதியுடைய இந்த ஏரி பராந்தகன் காலத்தில் "சித்திர மேக தடாகம்" எனப்பட்டுள்ளது. மழைபொழியும் பொழுது தண்ணீர் குகைக்குள் நுழையாதபடி தண்ணீர் வழிந்தோடும் சிறு பாதைகள் மலைக்கல்லில் மேல்பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன. குகைப்பகுதியில் வாழ்ந்தோர் மாழைகளை (உலோகங்களை) உருக்குவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதையும் ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதற்குரிய தடயங்கள் உள்ளன. அருகில் கற்படை வட்டங்கள் (பழந்தமிழரின் வானியல் ஆய்வுக்கூடம்) காணப்படுவதையும் ஆய்வாளர்கள் கண்டுகாட்டியுள்ளனர்.
 
  மாமண்டூர் குகையின் தென்புறத்தில் இருந்த முற்றுப்பெறாத குகையை முதலில் பார்வையிட்டோம். பின்னர் வடபகுதியிலிருந்த அடுத்த குகையைப் பார்வையிட்டோம். அதனை அடுத்து மேலும் வடக்குப் பகுதியில் இருந்த குகைகளைப் பார்வையிட்டோம். இப்பொழுது வெயிலின் கடுமை எங்களை வாட்டி எடுத்தது. கையில் கொண்டு சென்ற தண்ணீரை எவ்வளவு குடித்தாலும் தாகம் அடங்கிய பாடில்லை. குகைகளைப் பார்வையிட்டும் படமாக்கியும், கல்வெட்டுகள், தூண்கள் யாவற்றையும் பார்த்தும் எங்கள் விருப்பத்தை நிறைவேற்றினோம். கீழே உள்ள பகுதிகளைப் பார்த்த நாங்கள் மலைமீதிருந்த கோயிலை அடையும் பாதையை அருகில் மாடுமேய்த்த சிறுவனிடம் கேட்டுக்கொண்டு, மலையேறினோம். குறைந்த தூரம் மலையேறுவதாக இருந்தாலும் வெயிலின் கொடுமையில் தலைச்சுற்றுவதுபோல் இருந்தது. மெல்ல ஏறி நின்று மாமண்டூர் ஏரியின் அழகிய காட்சியைப் பார்த்து மகிழ்ந்தோம். ஆனால் ஏரி இப்பொழுது நஞ்சைப்பயிர்களும் புஞ்சைப் பயிர்களும் விளையும் இடமாக மாறியுள்ளது. ஏரி குட்டையாகக் காட்சி தருகின்றது. மலைப்பகுதிகளில் இருந்த சில நீர்வழியும் பாதைகளைப் பார்த்தபடி கீழிறங்கினோம். 
 
 அடுத்துப் பழைய மதகுகள் இருப்பதை நண்பர் மோகனவேல் நினைவூட்டினார். அங்கு முள்வேலி அமைக்கும் பணியிலிருந்த பெண்களிடம் வழிகேட்டபடி மலைப்பாதை கடந்து ஏரிக்கரையில் எங்கள் உந்துவண்டியை ஏற்ற முனைந்தோம். இதுவரை எங்களைச் சுமந்துவந்த வண்டியை இப்பொழுது நாங்கள் சுமக்க வேண்டியிருந்தது. தண்ணீர் பிடிக்கும் இரண்டு பெண்கள் எங்கள் வண்டியைக் கரையேற்ற உதவினார்கள். ஏரியின் உள்பகுதியில் இறங்கி மதகு இருக்கும் பகுதிக்குச் சென்றோம். பாதை முட்டி நின்றது. வந்த வழியே திரும்பிவந்து வேறுவழியாக ஏரியில் இறங்கினோம். 
 
  வெயிலில் அலைந்த அலைச்சல் மதகும் வேண்டாம், ஆராய்ச்சியும் வேண்டாம். நல்ல நிலையில் வீடுபோய்ச் சேர்ந்தால் போதும் என்று இருந்தது. நண்பர் மோகனவேல் விடாப்பிடியாக என்னை மதகு காட்ட அழைத்துச் சென்றார். அழகிய வேலைப்பாடுடன் பல நூறு ஆண்டுகளாக அந்த மதகு பழந்தமிழரின் பெருமையைப் பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுற்றேன். இதுபோல்தான் சோழகங்கம் என்ற பொன்னேரியில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட மதகு ஒன்று எங்கள் ஊரில் இருந்தது. அந்த மதகடியில்தான் கல்லூரிக் காலங்களில் நான் தேர்வுக்குப் படித்ததுண்டு. மாமண்டூர் ஏரி மதகுகளைப் பார்த்ததும் எனக்கு அந்த நினைவு வந்தது. மாமண்டூர் ஏரி மதகுகளைப் படம்பிடித்துக்கொண்டோம். 
 
  மீண்டும் ஒரு சுற்று அந்த ஏரியைச் சுற்றியபடி நரசமங்கலம் தார்ச்சாலையைப் பிடித்தோம். இப்பொழுது சிறிதளவு தூறல் பெய்தது. இன்னும் சற்று நேரத்தில் நான் உக்கல் என்ற ஊரில் பேச வேண்டும். மணி ஆறானது. வழியில் வேகமாக நாங்கள் வந்தபொழுது தமிழன்பர் தமிழ்.முகிலன் எதிர்ப்பட்டார். அவரிடம் உரையாடிச் சில படங்களைப் பெற்றுகொண்டோம் விழாவுக்கு அவரையும் அழைத்தோம். சிறிது காலம் தாழ்ந்து வருவாதக உரைத்தார். நாங்கள் மட்டும் உக்கல்நோக்கி மழையில் நனைந்தபடி வந்துசேர்ந்தோம். 
முதல் குகைக்குச்செல்லும் வழி பீடம் புதைக்கத்தக்க அளவில் அமைந்த குகை குகை குறித்த அறிவிப்பு மாமண்டூர் குகையில் சிவலிங்கம்
  குகை குறித்த விளக்கப்பலகை குகையின் உள் பகுதி குகையின் உள் வாயிலில் உள்ள சிற்பங்கள் குகையின் தூரக்காட்சி மாமண்டூர் குகை சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த குகை வௌவால் சிறுநீர்ப்பெருக்கால் நனைந்த அரிய கல்வெட்டுகள் குகையின் தூரக்காட்சி மலைக்கோயிலுக்குச் செல்லும் வழி மலைக்கோயில் கல்வெட்டு அரிய கல்வெட்டு(நன்றி:முகிலன்) கற்பதுக்கைகளில் நீர்விழிந்தோடும் பாதை (நன்றி: முகிலன்) அரிய கல்வெட்டு(நன்றி: முகிலன்) மாமண்டூர் ஏரி மதகு அண்மைத் தோற்றம் மாமண்டூர் ஏரி மதகு மாமண்டூர் ஏரி ஏரிப் பின்புலம் மாமண்டூர் ஏரியைக் காட்சிப்படுத்தும் முயற்சியில் மு.இ.