பனசைக்குயில் கூவுகிறது
திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயின்றுகொண்டிருந்த பொழுது பனசைக்குயில் கூவுகிறது என்ற என் நூல் உருவானது(1990 அளவில்). கோடை விடுமுறைக்குப் பிறகு வகுப்பிற்குத் திரும்பினேன். எங்கள் வகுப்பில் சிற்றிலக்கியங்களைப் பாடம் நடத்திய பேராசிரியர் சு.இராமன் அவர்கள் கோடை விடுமுறையில் என்ன செய்தீர்கள் என்று ஒவ்வொரு மாணவரையும் கேட்டார்.
என்முறை வந்தபொழுது ஐயா நான் கோவை அமைப்பில் ஒரு சிற்றிலக்கியம் எழுதிப் பழகினேன் என்று கூறினேன். ” இவன் பெரிய கவி காளமேகம்… பெரிய கவிதை எழுதிக் கிழித்தானாம் ” என்று மாணவர்கள் நடுவில் நகைச்சுவை பொங்க என்னை அறிமுகம் செய்தார். அவ்வாறு எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பைப் பனசைக்குயில் கூவுகிறது என்னும் பெயரில் வெளியிடத் திட்டமிட்டேன்.
இந்த நூலைத் திருப்பனந்தாள் மாரியம்மன்கோயில் தெருவில் உள்ள அம்பாள் அச்சகத்தில் அச்சிட்டேன். அந்த நூல் அச்சான பிறகு அம்பாள் அச்சகத்தின் உரிமையாளர் திருவாளர். சோமசுந்தரனார் அவர்களின் குடும்பத்தில் நானும் ஒருவனாக வளர்ந்தேன். இன்றும் அவர்கள் வீட்டில் என் புகைப்படம் ஒன்று சுவரில்மாட்டிப் பாதுகாக்கப்படுகின்றது.
இன்று உரிமையாளராக விளங்கும் திரு.சோ.சிவநேசனார் அவர்கள் என் உடன் பிறப்பினைப் போல் பழகும் இயல்பினர். மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர். அவரின் மகளுக்கு நற்றமிழ் நங்கை என்று பெயரிடும் அளவிற்குத் தமிழ் ஈடுபாடு கொண்டவர். அவர் மகள் நற்றமிழ் நங்கை குடந்தைக் கல்லூரியில் பயில்கின்றார். அவரிடம் உனக்கு யார் இந்தப் பெயர் சூட்டியது என்று கேட்டால் எங்கள் சித்தப்பா என்று என்னை அறிமுகம் செய்துகொள்வதை வழக்கமாகக் கொண்டவர்.
பனசைக்குயில் கூவுகிறது என்னும் நூல் “பனசை” என்று சுருக்கிக் கூறும் திருப்பனந்தாளின் சிறப்பையும் இயற்கை அழகையும் அகப்பொருள் சுவை ததும்ப எடுத்துரைக்கின்றது.
இளம் மாணவன் ஒருவனின் முயற்சி என்ற வகையில் இது குறிப்பிடத்தகுந்த நூலாகும். இந்த நூல் பின்னாளில் எங்கள் பிறந்த ஊரான உள்கோட்டையில் நூல்வெளியீட்டு விழாவையும் கண்டது. அந்த நூல்வெளியீட்டு விழாவிற்குப் பேராசிரியர் கு.அரசேந்திரன், பனசைக் கதிரொளி, குடந்தைக் கதிர் தமிழ்வாசணன் உள்ளிட்டோர் வந்திருந்து சிறப்பித்தனர். ஒரு பொங்கல் திருநாளில் இந்த விழா நடைபெற்றது.
நூல்: பனசைக்குயில் கூவுகிறது
ஆசிரியர்: முனைவர் மு.இளங்கோவன்
விலை: உருவா 2.50
பக்கம்: 16
பஃறுளிப் பதிப்பகம்
இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்)
கங்கைகொண்டசோழபுரம் (வழி),
உடையார்பாளையம் (வட்டம்),
அரியலூர் மாவட்டம்- 612 901
வெளியீட்டு ஆண்டு:14.01.1991(திருவள்ளுவர் ஆண்டு 2022,சுறவம் 1)
மரபுப்பாடல்களின் தொகுப்பு:
சான்றுக்குச் சில பாடல்கள்:
தமிழ்த்தாய் வாழ்த்து
இயலுடன் இசையும் கூத்தும் இனித்திட எமக்கே ஊட்டி
நயனுடன் வாழ்வைத் துய்க்க நன்மைகள் இயற்றும் தாயே!
கயல்பல உலவி ஆர்க்கக் கவின்பனை செறிந்து நிற்கும்
வயல்வளப் பனசை வாழும் வண்டமிழ் வாழி! வாழி!
காட்சி
மதகோரம் குளிர்காய மாலைவெயில் ஏற்றதெனச்
சிதலெறும்புப் புற்றுகளில் சிரித்தபடி கால்நீட்டிப்
புதுமைகளைப் பேசிடவே, புகழ்நண்பர் வீற்றிருக்க
உதித்தனளே திங்களென உயர்பனசை இன்மகளே!
ஐயம்
அழகுறையும் காவினிலே அடிபதியா அணங்கோ!
பழகுதமிழ் வண்டெழுந்து பண்ணிசைக்கும் மலைமகளோ!
ஒழுகருவி உறைகின்ற உருவிலியோ! உளம்மகிழச்
செழும்பனசை நகரினிலே சிரிக்கின்ற சேதாம்பல்!
வேட்கை
கல்வியிலே முதிர்ந்தோர்கள் களித்திருக்கும் பனசையிலே
முல்லையிதழ் மொட்டவிழ்ந்து முகைமகளின் குழலினிலே
எல்லையிலா மணம்வீச, எழிலார்ந்த தோழியுடன்
வெல்லமென இனிக்கின்ற வேட்கைதனை ஊட்டினளே!
செஞ்சடையன் வீற்றிருக்கும் சீர்பனசை நகரினிலே
மஞ்சளும்நல் இஞ்சிகளும் மாளாத விளைவாகக்
கொஞ்சிமகிழ் குறுவயதுக் காதலர்கள் தஞ்சமாகும்
பஞ்சிமலர்க் கொல்லையிலே பாவையவள் மயக்கினளே!
நடையழகும் உடையழகும் நாகரிகக் கருமைநிறக்
குடையழகும், குருதிநிற உடலழகும் கொண்டவளாய்ச்
சடையப்பன் வீற்றிருக்கும் சங்கதமிழ்ப் பனசையிலே
விடையனுப்பி நெஞ்சமெலாம் வௌவினளே என்செய்வேன்?
அஃறிணையை வினவுதல்
பேருந்தே! பலபெண்டிர் மேலிருந்து செலவுசெயக்
கார்வண்ணக் கருந்தரையைக் கண்டபடி ஊர்ந்தவாறே
நீயெத்தனைக் காவதம்தான் நடந்தாயே! நீள்பனசைக்
கூரெயிற்றுக் கோதையிவள் குறுவடிபோல் கண்டதுண்டோ!
ஐயன்மீர்! பொத்தகத்தை இவளொத்த மகளிர்தாம்
மெய்யினிலே சுமந்துவரும் மேலாணை நிறுத்துகவே!
கைப்பிடியில் இடுப்பையெல்லாம் கணப்பொழுதில் அளவிடுமோர்
பொய்யாகும் இடைமுறியும் புதுப்பனசை மகள்வாழி!
தலைவன் உடல் மெலிவுற்றுழி நண்பன் வினவுதல்
கல்லூரிப் போட்டிதனில் கேட்போர்கள் வியந்திடவே
சொல்லூற்றுப் பாட்டெழுதிச் சுடர்மணியாய் ஒலித்தவனே!
மெல்லூற்று நீராக மிகப்பேசும் நீயேனோ
மெல்லொற்றாய்ப் பேச்சொழிந்தாய் மேல்பனசை நகரினிலே!
உடல் மெலிவுக்குக் காரணம் கூறல்
தூயதமிழ் வளர்வதற்குத் தொண்டாற்றி வாழ்பவனே!
தாயவளாய்த் தமிழ்மொழியைத் தலையினிலே சுமப்பவனே!
மாயவளாய் மதிமயக்கி மன்னுபுகழ் செல்லரிக்க
வேய்மரத்துப் பனசையிலே வேல்விழியால் மயக்கினளே!
தலைவியின் இருப்பிடம் சுட்டல்
தோப்புகளும் தோட்டங்களும் தொகையடங்கா; தொன்மைமிகு
காப்புகளும் களங்களும்தான் கணக்கடங்கா; காரிருளாய்
மூப்புமிகு முனியனிவன் முன்கோயில் வாசலிலே
பாப்புகளும் பலநெளியும் பழம்பனசைப் பாவைகாண்!
பனசை சிறப்புரைத்தல்
தமிழன்னைச் சீர்பெறவே தண்பனசைப் பொழிலகத்துப்
தமைச்சூழும் இளையோரின் தடைகளுக்கு விடையளித்து
நிமையமெலாம் நெஞ்சினிலே நினைப்பூறும் நிலைதமிழை
அமைவுறவே கற்றவனாம் அருள்பொற்கோ வாழ்கவென்பேன்!
அலராமல் மீசைமயிர் அடக்கத்தில் இருக்கையிலே
புலவோரைப் பாட்டாலே பசுபதிதான் புகழ்ந்தானே!
குலவழியில் பலர்வரவே குறும்பாகப் பாட்டெழுதும்
நலமிகுந்த பனசையிலே நங்கதிரோன் தோன்றினனே!
மழலையர்கள் விளையாடி மேல்நாட்டு மொழிபேச
வழியினிலே செல்லுகின்ற வஞ்சியர்கள் வெறித்தபடி
குழிவிழுந்த கண்நோகக் குதலையர்கள் மொழிகேட்டுப்
பழியென்றே பழம்பனசைப் பைந்தமிழைப் போற்றுவரே!
தலைவி நிலை
பஞ்சணையில் தலைசாய்த்து பாவையவள் துயின்றாலும்
நெஞ்சனைய செம்மலவன் நீள்நினைவு வந்திடவே
துஞ்சிருளைக் கிழிக்கின்ற தொல்பனசை விளக்கத்தை
விஞ்சுகால் உந்தெனவே விம்மிவிம்மி அழுவாளே!
தலைவன் தலைவியைக் காணச்செல்லுதல்
கள்ளிறக்கும் தொழிலாளர் கால்மிதித்துப் பனையேறி
உள்ளிருக்கும் கள்ளதனை ஓர்நொடிக்குள் கீழிறக்க
முள்காட்டு மதிலகத்தே மொத்தத்தில் குடித்தவனாய்த்
தள்ளாடிக் கும்மிருளில் தேமொழியைக் காண்பனனே!
பொருள்வயிற் பிரிவு
அணிமுல்லை ஆடிடுமே! இன்கொம்பை ஈகவென
உணர்த்திடுமே! ஊதைவந்தே எல்வளையர் ஏங்குவண்ணம்
புணர்மொழியைக் கௌவைமிகக் கொளுத்திடுமே! கோட்டிதழின்
இணர்சூழும் பொழிலாற்றைப் பனசைமகன் கடந்தனனே!
வரலரும் அருவியை இருவிழி புருவினில்
உரமிகு திருமகன் நிரலெனச் சிறையிட,
அரும்பனை மகளவள் இருமுகை வருதுளி
திருமகன் நினைவினில் திகழ்ந்திடும் அறிகவே!