நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 17 செப்டம்பர், 2011

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின்(பெட்னா) தமிழ்த்திருவிழா…


பெட்னா விழாவில் தமிழ்நாட்டியம்

 அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் அந்நாட்டின் ஐம்பது மாநிலங்களிலும் பரந்து வாழ்கின்றார்கள். அந்தந்த மாநிலங்களில் பள்ளிகள் அமைத்தும், தமிழ்ச்சங்கங்கள் நிறுவியும் தமிழ்ப்பணிபுரிகின்றனர். அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் கல்வி, கணினி, வைப்பகம், மருத்துவம், விண்ணியல், வானியல், சுற்றுச்சூழலியல் சார்ந்த துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர்.

 ஐம்பது மாநிலத் தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் நிகழ்வுதான் பெட்னா எனப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவையின் ஆண்டு விழாவாகும். இதுவரை இருபத்து நான்கு ஆண்டுகளாக இந்த நிகழ்வு அமெரிக்காவின் பல மாநிலங்களில் நடந்துள்ளது. இருபத்து நான்காம் ஆண்டு நிகழ்வு பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் நூற்றாண்டு விழாவாகவும், ஆண்டு விழாவாகவும் அமெரிக்காவின் தெற்குக் கரோலினா மாநிலத்தில் உள்ள சார்ல்சுடன் மாநகரில் நடைபெற்றது. சார்ல்சுடன் நகர் கடற்கரையோரம் அமைந்துள்ள அழகிய நகரம் ஆகும். இந்த ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும், பனைநிலத் தமிழ்ச்சங்கத்தாரும் இணைந்து நான்கு நாள் தமிழ்த்திருவிழாவை மிகச்சிறப்பாக இந்த நகரில் நடத்தினர்(2011சூலை1- 4).

 தமிழகத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினர்களை அழைத்துத் தாய்த் தமிழகத்துடன் உள்ள உறவைப் புதுப்பித்துக்கொள்வது பேரவையினரின் விருப்பமாகும். இந்த ஆண்டு கல்வித்துறை சார்ந்து பேராசிரியர் மருதநாயகம், முனைவர் புனிதா ஏகாம்பரம், முனைவர் மு.இளங்கோவன் அழைக்கப்பட்டிருந்தனர். திரைத்துறை சார்ந்து நடிகர் நாசர், சார்லி, நா.முத்துக்குமார், தேவன்(பாடகர்), வித்யா(நாட்டியம்) அழைக்கப்பட்டிருந்தனர். கலைத்துறை சார்ந்து திண்டுக்கல் சக்தி கலைக்குழு, புதுகை பூபாளம் குழுவினர் அழைக்கப்பட்டிருந்தனர். மட்டைப்பந்து வருணனையாளர் அப்துல் சப்பார் அழைக்கப்பட்டிருந்தார். துரை. எழில்விழியன் அவர்கள் தமிழுணர்வுடன் உரையாற்ற அழைக்கப்பெற்றிருந்தார்.

 முதல்நாள் நிகழ்வு மாலைநேரத்தில் கடற்கரை ஒட்டிய மீன்காட்சியகத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து அறிமுகம் செய்துகொள்ளும் நிகழ்வாகவும் விருந்துண்டு மகிழும் நிகழ்வாகவும் இருந்தது. மறுநாள் முறைப்படி பேரவையின் விழா இனிதே தொடங்கியது. மங்கள இசையுடன், தமிழ்த்தாய் வாழ்த்தும், அமெரிக்கத் தேசிய கீதமும் இசைக்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்கள் மேடையில் தோன்றிக் குத்துவிளக்கேற்றினர். பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி அவர்களும் பேரவையின் சார்பில் முனைவர் பழனிசுந்தரம் அவர்களும் வரவேற்புரையாற்றினர். பல்வேறு மாநிலத் தமிழ்ச்சங்கங்களைச் சேர்ந்தவர்களின் சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் தொடங்கின. ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாகச் சிலம்பு சுழற்றுவது அரங்கில் இருந்தவர்களை வியப்படையச் செய்தது. கணினித்துறையில் உழைப்பவர்களும், பேராசிரியர்களும், வங்கிப் பணியாளர்களும் என்று பல திறத்துத் துறை சார்ந்தவர்கள் மேடையில் தமிழர்களின் பண்பாட்டைக் காட்டும் கலை நிகழ்வுகளை நிகழ்த்தியமை தாயகத் தமிழ்க்கலைகளில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டைக் காட்டியது.

 அமெரிக்கக் கல்விக்கழகத்தின் பாடநூல் உருவாக்கம் பற்றி முனைவர் அரசு.செல்லையா விளக்கம் அளித்து அந்தப் பாட நூல்களைத் தமிழ்நாட்டின் கல்வித்துறை சார்ந்த அறிஞர்களான முனைவர் புனிதா ஏகாம்பரம், முனைவர் மு.இளங்கோவன் இவர்களை வெளியிடச்செய்து நடிகர்கள் நாசர், சார்லி, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்டவர்களைப் பெற்றுக்கொள்ளும்படி செய்தனர். அதனைத் தொடர்ந்து வில்லிசை, கவியரங்கம் என்று நிகழ்வுகள் கலையுணர்வுடன் படைக்கப்பட்டன. மாலையில் இனிமைத் தமிழ்மொழி என்னும் குறுவட்டு வெளியிடப்பட்டது. இதனை உருவாக்கி வெளியிட்டவர் பொற்செழியன் ஆவார். இசையமைத்தவர் திருப்பூவனம் ஆத்மநாதன். கனடாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபேசன் அவர்கள் வெளியிட முனைவர் மு.இளங்கோவன் பெற்றுக்கொண்டார்.

 மேலும் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா மலரினை முனைவர் மு.இளங்கோவன் வெளியிட்டு, பெருமழைப்புலவரின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்ந்தார். இம்மலரின் முதற்படியை நடிகர் நாசர் அவர்கள் பெற்றுக்கொண்டார். கோடை மழை வித்யா குழுவினர் வழங்கிய நாட்டிய நாடகம் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தது. கனடாவின் முதல் பாராளுமன்ற பெண் உறுப்பினர் இராதிகா சிற்சபேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். தமிழும் ஆங்கிலமும் கலந்து அவர் வழங்கிய உணர்வுரை அனைவரையும் கவர்ந்தது.

 திரைக்கலைஞர் நாசர் அவர்கள் எது நல்ல திரைப்படம்? என்ற தலைப்பில் வழங்கிய செறிவான உரை அரங்கினரைச் சிந்திக்கச் செய்த்து. இன்னிசை ஏந்தல் திருப்பூவனம் ஆத்மநாதன் அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி இசையார்வலர்களின் விருப்பத்திற்கு இணங்க நள்ளிரவு வரை தொடர்ந்தது. தமிழிசையில் மயங்கிய அரங்கினர் மீண்டும் மீண்டும் பாடும்படி வேண்டிக்கொண்டதால் தமிழிசைப்பாடல்களை மகிழ்ச்சியுடன் இசையறிஞர் பாடி மகிழ்வூட்டினார்.

 சூலை மூன்றாம் நாள் பேரவையின் மூன்றாம் நாள் நிகழ்ச்சி மங்கள இசையுடன் தொடங்கியது. தமிழ்ப்பண்பாடு இதழினை அறிஞர் பிரான்சிசு முத்து அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை வழங்கினார். கிரீன்வில் தமிழ்ச்சங்கத்தாரின் நாட்டிய நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. தமிழ்த்தேனீ சிறார்களுக்கான நொடி வினா போட்டி மிகச்சிறப்பாக நடந்தது. பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து நிகழ்ச்சியை நடத்தினார். அமெரிக்க மண்ணில் வாழும் நம் தமிழ்க்குழந்தைகளின் தமிழார்வத்தை இந்த நிகழ்ச்சியின் மூலமாக அறியமுடிந்தது.

 அடுத்துத் தமிழ் இலக்கிய வினாடி வினா பல்லூடக நிகழ்ச்சியை நாஞ்சில் பீற்றர் ஒருங்கிணைப்பில் நடத்தினார். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வினாக்களுக்கு அமெரிக்காவில் வாழும் பலதுறை சார்ந்த அறிஞர்கள் அளித்த விடை பெரும் வியப்பைத் தந்தது. பாவலரேறு பெருஞ்சித்திரனார் அணி, முனைவர் இரா.திருமுருகனார் அணி என இரண்டு அணிகளுக்கு மறைந்த தமிழறிஞர்களின் பெயரினை வைத்தது பொருத்தமாக இருந்தது. முனைவர் புனிதா ஏகாம்பரம், முனைவர் மு.இளங்கோவன், முனைவர் சங்கரபாண்டி நடுவர்களாக இருந்து சிறப்பித்தனர். பல்வேறு நடனப் போட்டிகள், திண்டுக்கல் சக்தி குழுவினரின் தப்பாட்டம் பெட்னா விழாவை உயிர்பெறச்செய்தன. பாரியின் கதை, மருதுபாண்டியர் வரலாறு உள்ளிட்ட நாடகங்களும் அனைவராலும் சுவைத்துப் பார்க்கப்பட்டன.

 தமிழைச் சிதையாமல் காப்பது ஊடகங்களா? பொதுமக்களா? என்ற தலைப்பில் திரு.அப்துல் சபார் அவர்களின் தலைமையில் சுவையான பட்டிமன்றம் நடைபெற்றது.

 மூன்றாம் நாள் மாலை நிகழ்ச்சியில் இனம்பேணல் நம் பொறுப்பு என்ற தலைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய வரலாற்றை நினைவுகூர்ந்து இன்றைய நிலையை விளக்கினார். மனித உரிமை வழக்கறிஞர் கேரன் பார்க்கர் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

 நடிகர் சார்லியின் சிறப்பு நிகழ்ச்சியும், புதுகை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சியும் அனைவராலும் பாராட்டப்பட்டன. தேவன் ஏகாம்பரம் சிறப்புப் பாடகராகக் கலந்துகொண்டு இன்னிசை நிகழ்ச்சி வழங்கினார்.

 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கிய இலக்கியக் கூட்டம் 04.07.2011 காலை தொடங்கியது. தில்லைக்குமரன் வரவேற்புரையாற்றினார் பிரான்சிசு முத்து தமிழ்ப்பண்பாடு இதழ் பற்றி அறிமுகம் செய்தார். பொறியாளர் பிரபாகரன், பேராசிரியர் மருதநாயகம், புனிதா ஏகாம்பரம், முனைவர் பழனியப்பன், முனைவர் மு.இளங்கோவன், துரை.எழில்விழியன் ஆகியோர் இலக்கிய உரையாற்றினர். ஒவ்வொருவர் உரையும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை வாய்ந்தவையாகும். நடிகர் நாசர் அவர்கள் இன்றைய திரைக்கலை பற்றியும் சமூக நிலை பற்றியும் ஆழ்ந்த உரையாகத் தம் பேச்சை அமைத்தார்.

 அடுத்த ஆண்டு 2012 சூலை முதல் வாரத்தில் அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இருபத்தைந்தாம் ஆண்டு விழா, வெள்ளி விழாவாக அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன்னில் கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையினர் இப்பொழுதே ஈடுபட்டுவருகின்றனர்.


குற்றுவிளக்கேற்றும் கோதையர்கள்


பெட்னா விழாவில் தமிழ்நாட்டியம்


பெட்னா விழாவில் தமிழ்நாட்டியம்


திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினரின் தப்பாட்டம்


ஆடவரின் கலைநிகழ்வு


தமிழ்ப்பண்பாடு காட்டிய இசையும் ஆட்டமும்


குச்சி விளையாட்டு(சிலம்பாட்டம்)


தமிழ் நாட்டியம்



பெட்னா விழாவில் பங்கேற்ற கலைஞர்கள்


தமிழர்களின் வில்லுப்பாட்டு


நனி நன்றி: படங்கள் உதவி: திரு.கண்ணன், தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகம்

1 கருத்து:

santa சொன்னது…

எங்கள் விழா பற்றி சிறப்பாக எழுதியதற்க்கு நன்றி அய்யா.

தாங்கள் இங்கு வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி.

அன்புடன்
சந்தோஷ்.