நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

கூத்துக்கலைஞர் நாசர்…


மு.இளங்கோவன், திரைக்கலைஞர் நாசர்

பேராசிரியர் தண்டபாணி அவர்களின் இல்லத்தை மாலை மயங்கும் நேரத்தில் அடைந்தோம். தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்ற எண்ணத்தில் எங்கள் மகிழ்வுந்து நேர்ச்சி பற்றிய நினைவு அலைபோல் மனதுக்குள் வந்து போனது. ஏதேனும் எங்களுக்கு ஏற்பட்டிருந்தால் எங்கள் பயணத்திட்டம் தவிடுபொடியாவதுடன் ஊர், உலகப் பேச்சுக்கு ஆளாகியிருப்போம். நல்லூழ் எங்களைக் காத்தது. பேராசிரியர் தண்டபாணி அவர்கள் பேராசிரியராக இருப்பதுடன் தம் குடும்பத்தினரைத் தமிழ்ப்பற்றுடன் வளர்த்துள்ளமை அறிந்து மகிழ்ந்தேன். பேராசிரியர் தண்டபாணி அவர்கள் தமிழகத்தின் ஊற்றங்கரை அடுத்த சிற்றூரைச் சேர்ந்தவர். உழைத்து முன்னேறியவர். இவரின் மைத்துனர் உள்ளிட்ட உறவினர் சில்லோர் அமெரிக்காவில் இருப்பதை அறிந்தேன்.

நாங்கள் பேராசிரியர் தண்டபாணி ஐயா இல்லத்தை அடைந்தபொழுது திரைக்கலைஞர் அண்ணன் நாசர் அவர்கள் முன்பே அங்கு வந்திருந்தார். அவருடன் சில நாள் செலவிட்டிருந்தாலும் பழகப்பழக மேலும் இனித்தார். வீட்டிலேயே எடுத்துண்ணும் வகையில் உணவு ஆயத்தம் செய்திருந்தார்கள். எங்களுக்கு விருப்பமான உணவுகளை எடுத்து உண்டோம். நான் வைகறையில் வானூர்தி பிடிக்க வேண்டியிருந்ததால் அளவாக உண்டேன். இட்டிலியை விரும்பி உண்டேன். பொருத்தமான துவையல், தொடுகறி, பழங்கள் இருந்தன. உணவை ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் உண்டோம். உணவும் பேச்சும் சுவையூட்டி இனித்தன.

பேராசிரியர் தண்டபாணி ஐயா அவர்களின் மாமனார் உள்ளிட்டவர்கள் தமிழகத்திலிருந்து வந்திருந்தனர். எங்களைப் பார்த்ததும் அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. எங்களுக்குக் குடும்பத்தினர் அனைவரும் அன்புடன் விருந்தோம்பினர். அமெரிக்கத் தன்னுரிமை நாளை முன்னிட்டு இரவில் நடைபெறும் வானவேடிக்கையைப் பார்க்க நாங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மகிழ்வுந்துவண்டிகளில் புறப்பட்டோம். வானவேடிக்கை முடிந்து தண்டபாணியார் அவர்களின் இன்னொரு வீட்டில் தங்குவதற்கு வாய்ப்பாக ஒரு மகிழ்வுந்தில் என் உடைமைகளை மாற்றிக்கொண்டோம். எங்கள் மகிழ்வுந்து வானவேடிக்கை நடைபெறும் கடற்கரை நோக்கி விரைந்தது.

நம்மூரில் தேர்த்திருவிழா பார்க்க மக்கள் திரள்வதுபோல் அமெரிக்க மக்கள் தன்னுரிமை நாளைக் கொண்டாடக் கடலை நோக்கிக் குடும்பம் குடும்பமாக வந்தனர். போக்கு வரவு காவலர்கள் போக்கு வரவை ஒழுங்குபடுத்த குறிப்பிட்ட இடம் வரைதான் மகிழ்வுந்து வர அனுமதித்தனர். சாலைகளில் போக்குவரவுக்கு இடையூறு இல்லாமல் பல கல் தொலைவு மகிழ்வுந்து நின்றன.

நாங்கள் மகிழ்வுந்திலிருந்து இறங்கி நடந்து ஒரு கல் தொலைவுக்கு மேல் நடந்தோம். அண்ணன் நாசர், அம்மா கமிலா நாசர், தண்டபாணி ஐயாவின் மகன், அவர் மைத்துனர், என்று ஒரு குழுவாகச் சென்றோம். வான வேடிக்கை தொடங்கியது. சென்ற கூட்டம் அப்படியே அங்கும் இங்கும் நின்றது. சிலர் தரையில் அமர்ந்தனர். நம்மூரில் எச்சில்துப்பும் பெருமகன் ஒத்தோர் யாரும் தென்படவில்லை. தரைகள் தூய்மையாக இருந்தன, புல்வெளியில் அண்ணன் நாசரும் நானும் அமர்ந்தோம். தலைசாய்த்து அண்ணன் நாசர் அவர்கள் அக்காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தார்.அம்மா கமிலா நாசர் அவர்கள் எங்களைப் பலமுனைகளில் படம் எடுத்து உதவினார்.


வானில் வெடித்து மகிழ்வூட்டும் வான்வெடி



மு.இ, நாசர்


வானவேடிக்கையைப் பார்த்து மகிழும் மு.இ,நாசர்

அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று பேசிய நாம் இன்று இந்த நாட்டின் தன்னுரிமை நாள் கொண்டாட்டத்தை நேரில் காணும்படி சூழல் அமைந்ததே என்று அண்ணன் நாசர் அவர்கள் குறிப்பிட்டார்கள். கட்டொழுங்காக மக்கள் அமைதிகாத்து அந்த நிகழ்வைக் கண்டுகளித்தனர். அரை மணி நேரம் இந்த நிகழ்வு நடந்திருக்கும். வானவேடிக்கை நிறைவுற்றதும் நாங்கள் எங்கள் மகிழ்வுந்து நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு வந்தோம். அண்ணன் நாசர் உள்ளிட்டவர்களிடம் விடைபெற்றுப் பேராசிரியர் தண்டபாணி அவர்களின் இன்னொரு விருந்தினர் இல்லத்துக்குச் சென்றோம்.

அந்த வீட்டின் வாயில் வரை வந்து பேராசிரியர் எனக்கு விடை தந்தார். நானும் பேராசிரியர் தண்டபாணி ஐயாவின் மைத்துனர் மருத்துவர் சிவா அவர்களும் உரிய அறையில் தங்கினோம். காலை நான்கு மணிக்கு எழுவதாகத் திட்டம். ஒரு மணி நேரத்தில் புறப்பட்டு, ஐந்து மணிக்கு வெளியேற வேண்டும் என்று படுக்கைக்குச் சென்றோம்.
நான் ஒரு மணி நேரம் விழித்துத் தேவையற்ற பொருள்களைக் கழித்துப் பெட்டியை ஒழங்கு செய்து அடுக்கினேன். நடு இரவில் உறங்கி, காலை நான்கு மணிக்கு எழுந்தேன். மருத்துவர் சிவா அவர்களும் என்னை எழுப்ப வந்து நான் ஆயத்தமாவதை அறிந்து மீண்டும் அவர் படுக்கையில் சாய்ந்தார்.

ஐந்து மணிக்குப் பேராசிரியர் தண்டபாணி ஐயாவும், அவர்களின் துணைவியாரும் பதற்றத்துடன் எங்களை எழுப்ப வந்தனர். காரணம் விடியற்காலை நான்கு மணிக்குத் தொலைபேசியில் மருத்துவர் சிவா அவர்களுக்கு ஐயா தண்டபாணியார் பேசி எழுப்ப நினைத்து, முயற்சி செய்தார். ஆனால் தொலைபேசியை அமைதியில் வைத்திருந்ததால் தண்டபாணி ஐயாவின் அழைப்பொலி எங்களுக்குக் கேட்கவில்லை. நானும் மருத்துவர் சிவாவும் எழவில்லை. அதனால்தான் தொலைபேசியை எடுக்கவில்லை என நம் பேராசிரியர் அவர்கள் நினைத்துத் தம் துணைவியாருடன் நேரில் எங்களை எழுப்ப வந்தனர்.

ஏனெனில் நான் வானூர்தியை விட்டால் என் பயணத்திட்டம் சிக்கலாகிவிடும். பொறுப்புணர்வுடன் பேராசிரியர் தண்டபாணி ஐயா செயல்பட்டு என்னை வழியனுப்ப நினைத்து வந்தமையை நினைத்து உள்ளுக்குள் அந்த நல்லுள்ளத்தைப் போற்றினேன். பிறகுதான் நடந்த நிகழ்வு அலசப்பட்டது. ஒருவழியாகப் பேராசிரியரிடம் விடைபெற்றுக்கொண்டு வானூர்தி நிலையத்தை அரை மணி நேரத்தில் அடைந்தோம்.

ஐந்தரை மணிக்கு ரொட்டியும் குளம்பியும் அருந்தினேன். வானூர்திக்குரிய பாதுகாப்பு ஆய்வு முடிந்து நன்முறையில் நான் வானூர்திக்குக் காத்திருந்தேன். மருத்துவர் சிவா பிரியா விடை தந்து பிரிந்துசென்றார். அரை மணி நேரம் காத்திருந்தேன். 6.30 மணிக்குச் சௌத்வெசுட்டு என்னும் வானூர்தியில் ஏறி அமர்ந்தேன். அது பால்டிமோர் நகருக்குப் பறந்தது. எட்டு மணிக்கு அந்த நகரின் வானூர்தி நிலையம் அடைந்தேன். அங்கு ஒன்றரை மணி நேரம் காத்திருந்து அதே நிறுவனத்தின் வானூர்தியில் காலை 9.25 மணிக்குப் அங்கிருந்து பறந்து நியூயார்க்கு - லகார்டியா உள்நாட்டு வானூர்தி நிலையம் வந்தேன். அங்கு என் உடைமைகள் காத்திருந்தன. எடுத்துக்கொண்டு உள்ளூர்ப் பேருந்தில் நியூயார்க்குச் சான் கென்னடி பன்னாட்டு விமான நிலையத்தை 11.30 மணிக்கு அடைந்தேன்.

என் அடுத்த செலவுக்குரிய ஏர் இந்தியா வானூர்தி மாலை 5 மணிக்குதான் என்பதால் வானூர்தி நிலையத்தின் மாடிப்பகுதியில் இருந்த ஏர் இந்தியா அலுவலகத்தின் அருகில் என் பெட்டிகளை வைத்துவிட்டுக் காத்திருந்தேன்.

2 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

தொடரும் போடனும்னா கடைசி வரியில ஒரு எதிர்பார்ப்பு இருக்கிற மாதிரி இருக்கனுங்க.

இப்படி//

மாடிப்பகுதியில் இருந்த ஏர் இந்தியா அலுவலகத்தின் அருகில் என் பெட்டிகளை வைத்துவிட்டுக் காத்திருந்தேன்.
அப்போது எதிர்பாராமல்....(தொடரும்)

Murugeswari Rajavel சொன்னது…

அழகான நிகழ்வுகளை உங்களுக்கே உரிய நடையில் சொல்லியிருக்கும் விதம் அருமை.