புகழ்பெற்ற ஆங்கில மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்களின் முத்தொள்ளாயிரம் ஆங்கிலமொழிபெயர்ப்பு நூலினை Red Lilies and Frightened Birds என்னும் பெயரில் பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்த நூலின் அறிமுக விழா 09.10.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும் விழாவுக்கு முனைவர் க.பஞ்சாங்கம் தலைமை தாங்குகின்றார். முனைவர் த.செங்கதிர் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.
முனைவர் நிர்மல் செல்வமணி, முனைவர் ய.மணிகண்டன், முனைவர் தங்க.செயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
முனைவர் அரிமாப்பாமகன் வாழ்த்துரை வழங்குகின்றார்.
பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா ஏற்புரையாற்றுகின்றார்.
நன்றியுரை த.விண்மீன் பாண்டியன்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வானகப் பதிப்பகத்தினர் செய்துள்ளனர்.
தொடர்புக்கு:
வானகப் பதிப்பகம்,
7, 11 ஆம் குறுக்கு, ஔவை நகர்,
புதுச்சேரி - 605 008
பேசி: 0413- 2252843
நூலின் விலை: 299-00
புதன், 28 செப்டம்பர், 2011
திங்கள், 26 செப்டம்பர், 2011
வீணங்கேணி என்கிற அழகாபுரம்…
நூலட்டை
அண்மையில் ஊற்றங்கரை பயிலரங்கத்திற்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்த இரவுப்பொழுது எங்கள் தாத்தா இறந்த செய்தி கிடைத்தது. பயிலரங்கு ஒழுங்குசெய்வது பெருஞ்செயல். இச்செய்தியால் கிடைத்த வாய்ப்பும் நழுவப் பார்க்கின்றதே என்று நினைத்தேன். இந்த நெருக்கடியில் என்ன செய்வது என்று திட்டமிட்டேன். காலையில் 120 கி.மீ. உள்ள எங்கள் ஊருக்குச் சென்று இறப்புச்சடங்கில் கலந்துகொள்வது எனவும் அடுத்த அரைமணி நேரத்தில் மீண்டும் புதுவைக்குப் புறப்பட்டு வந்து, அங்கிருந்து ஊற்றங்கரைக்கு மாலையில் புறப்படுவது என்றும் எண்ணினேன்.
என் திட்டப்படி காலையில் கடலூர் வழியாக வடலூர் வந்து இறங்கினேன். காலை 9 மணி என்பதால் அங்குள்ள கடையில் சிற்றுண்டி முடித்துப் பேருந்தேற நின்றேன். அப்பொழுது அங்கிருந்த ஒரு விளம்பரப் பலகையில் திரைப்பா ஆசிரியர் அண்ணன் அறிவுமதி அவர்களின் பெயர் இருக்கக்கண்டு என்ன நிகழ்வு என்று படித்துப் பார்த்தேன். மறுநாள் “வீணங்கேணி என்கிற அழகாபுரம்” என்ற நூல்வெளியீடு எனவும் அண்ணன் அறிவுமதி அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு எனவும் அறிந்தேன். மறுநாள் நான் ஊற்றங்கரையில் இருக்க வேண்டியுள்ளதால் நல்ல இலக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற வருத்ததுடன் என் பிறந்த ஊர் சென்று இறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு அடுத்த அரைமணி நேரத்தில் புதுவைக்குப் பேருந்தேறினேன்…..
இரு கிழமை கழித்து நெய்வேலியிலிருந்து ஒரு செல்பேசி அழைப்பு. வி.சண்முகம் பேசுகின்றேன் என்றார். இவர்தான் வீணங்கேணி என்கிற அழகாபுரம் நூலாசிரியர். செயல்திறம் மிக்க இளைஞர். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட மக்கள் பற்றாளர். தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார். அதற்குள் வீணங்கேணி ஆசிரியர் பற்றிய பல செய்திகள் நண்பர்கள் வழியாக அறிந்தேன். அடுத்தமுறை ஊருக்குச் செல்லும்பொழுது திருவாளர் வி.சண்முகம் அவர்களைக் கண்டு உரையாட நினைத்திருந்தேன். அதற்குள் அவர் எழுதிய வீணங்கேணி என்கிற அழகாபுரம் நூல் தனித்தூதில் வந்தது.
நிலக்கரியாலும் அனல் மின் உருவாக்கத்தாலும் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெரும் செல்வம் ஈட்டித் தரும் நெய்வேலியை ஒட்டியுள்ள ஒரு சிற்றூரான வீணங்கேணியில் பிறந்த வி.சண்முகம் அவர்களின் தன்வரலாறும், ஊர்வரலாறும்தான் நூல் செய்தி.
வீணங்கேணி ஊர் முன்னேற்றத்திற்கு வி.சண்முகம் அவர்கள் நடத்திய பலநிலைப் போராட்டங்கள் இந்த நூலில் சிறப்பாகப் பதியப்பட்டுள்ளன. கடலூர் மாவட்ட வரலாறு, வடலூர் சார்ந்த முதன்மை ஊர்கள், வள்ளலார் அறநிலை குறித்த தகவல்கள் என்று பல அரிய செய்திகள் இந்த நூலில் உள்ளன. வி.சண்முகம் அவர்களின் முன்னோர்கள் இந்த ஊருக்குக் குடிபெயர்ந்த வரலாறு சிறப்பாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பகுத்தறிவுக்கொள்கையும், தமிழ்ப்பற்றும், மக்கள் பற்றும் கொண்ட வி.சண்முகம் அவர்கள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிந்தபடி பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளதை அறிந்து வியப்பு மேலிடுகின்றது.
வீணங்கேணியின் நிலப்பரப்பு, நீர்நிலைகள், குடும்பவரலாறுகள், இப்பகுதியில் உள்ள கல்விநிறுவனங்களின் வரலாறு, இயற்கைக் காட்சிகள், மக்கள் வாழ்க்கைமுறை, இங்கு நடந்த சாதிய மோதல்கள் குறித்து அரிய செய்திகள் பலவற்றைத் தந்துள்ளார்.
ஒவ்வொருவரும் தம் வரலாற்றை எழுத வேண்டும் என்ற உந்துதலையும் அவ்வாறு எழுதும்பொழுது தம் ஊர்வரலாற்றையும் இணைத்து எழுத வேண்டும் என்ற அரிய விருப்பத்தையும் இந்த நூல் தருகின்றது. இந்த நூலில் ஏற்றம் இறைக்கும்பொழுது பாடப்படும் பாடல்கள் சிறப்பாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வருவதற்கு முன்பு இந்தப் பகுதியில் இயற்கையான ஆர்ட்டீசியன் ஊற்றுகள் இருந்தன. அந்த அளவு நீர்வளம் மிகுந்த பகுதி இது. கரி தோண்டியெடுக்கச் சுரங்கம் தோண்டிய பிறகு தண்ணீர் வளம் குறைந்தது. இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையும் நீர்வளமும் காணாமல்போயின. அவற்றைப் போலவே மக்கள் நாவில் குடியிருந்த ஏற்றப்பாடல்களும் இன்று காணாமல் போகும் சூழலில் அரிய பாடல்களைப் பதிவுசெய்து மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வந்த வி.சண்முகம் போன்ற இளைஞர்கள்தான் தமிழக வரலாற்றை எழுதுவதற்கு முன்வர வேண்டும்.
வீணங்கேணி என்கிற அழகாபுரம் நூல் தொடர்புக்கு:
வி.சண்முகம்
வீணங்கேணி சிற்றூர்
வடக்குச் சேப்ளாநத்தம் ஊராட்சி
வடலூர் அஞ்சல் – 607 303
கடலூர் மாவட்டம்
செல்பேசி : + 91 94434 02522
நூல் விலை: 70 உருவா, பக்கம் 120.
சென்னையில் நூல்பெற: தமிழ் அலை இசாக், பேசி: 9786218777
ஞாயிறு, 25 செப்டம்பர், 2011
நாமக்கல்லில் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது விழா 2011
அழைப்பிதழ்
கு.சின்னப்ப பாரதி அவர்கள் பொதுவுடைமைக் கொள்கைகளைத் தாங்கி, உழைக்கும் மக்களின் வாழ்க்கையைத் தம் புதினங்களில் இடம்பெறச் செய்தவர். நிலைத்த படைப்புகளை வழங்கி உலகப் புகழ்பெற்றவர். இவர்தம் பெயரில் அமைந்துள்ள அறக்கட்டளை சார்பில் சிறந்த நூல்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றுப் பணப்பரிசில் வழங்கிப் பாராட்டப்பட உள்ளன. இதற்கான விழா எதிர்வரும் அக்டோபர் இரண்டாம் நாள் (ஞாயிற்றுக் கிழமை) நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள செல்வம் பொறியியல் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற உள்ளது.
காலை 9.30 மணியளவில் தொடங்கும் விழாவிற்குச் செல்வம் பொறியியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்குகின்றார். இந்த விழாவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இதழாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். வெளிநாட்டிலிருந்தும் பல பேராளர்கள் வருகைதர உள்ளனர்.
முனைவர் பா,கவீத்ரா நந்தினி, எழுத்தாளர் அந்தோனி ஜீவா, எஸ்.பி.இராமசாமி, எஸ்.கே.சம்பத், ஆர்.செந்தில்முருகன், எஸ்.இராஜ்குமார், ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெறுகின்றது.
கா.பழனிச்சாமி வரவேற்புரையாற்றவும், ச.தமிழ்ச்செல்வன் தொடக்க உரையாற்றவும் உள்ளனர். பரிசளிப்பின் நோக்கத்தைக் கு.சின்னப்ப பாரதி விளக்கிப் பேச உள்ளார். சி.ப.கருப்பண்ணன் அவர்கள் பரிசுபெறுபவர்களை அறிமுகம் செய்து உரையாற்றுவார்.
சிறப்பு விருந்தினராகத் தினமணி நாளிதழின் ஆசிரியர் கே.வைத்தியநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். வவுனியா இரா.உதயணன், அத்திப்பள்ளி இராம மோகனராவ் (தெலுங்குமொழிப் படைப்பாளர்) ஆகியோர் விருதும் பரிசும் பெற உள்ளனர்.
சிறப்புப் பரிசிலாக வெளிநாட்டினர் பத்துப்பேரும், தமிழ்நாட்டினர் பன்னிருவரும் பரிசுபெற உள்ளனர். நாமக்கல் என்.சிவப்பிரகாசம் அவர்களுக்கு ஊழல் எதிர்ப்புச் சேவைக்கான பரிசு வழங்கப்பட உள்ளது. நூல் வெளியீடும் நடைபெறுகின்றது. சி.அரங்கசாமி நன்றியுரையாற்ற உள்ளார். விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நா.செந்தில்குமார் தொகுப்புரை வழங்க உள்ளார்.
அழைப்பிதழ் (பின்பகுதி)
சனி, 24 செப்டம்பர், 2011
பாரதிதாசன் பல்கலைக்கழகப் புத்தாக்கப் பயிற்சியில்...
புத்தாக்கப் பயிற்சியில் கலந்துகொண்ட பேராசிரியர்கள்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புத்தாக்கப்பயிற்சியில் கலந்துகொண்ட பேராசிரியர்கள்
செவ்வாய், 20 செப்டம்பர், 2011
கூத்துக்கலைஞர் நாசர்…
மு.இளங்கோவன், திரைக்கலைஞர் நாசர்
பேராசிரியர் தண்டபாணி அவர்களின் இல்லத்தை மாலை மயங்கும் நேரத்தில் அடைந்தோம். தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்ற எண்ணத்தில் எங்கள் மகிழ்வுந்து நேர்ச்சி பற்றிய நினைவு அலைபோல் மனதுக்குள் வந்து போனது. ஏதேனும் எங்களுக்கு ஏற்பட்டிருந்தால் எங்கள் பயணத்திட்டம் தவிடுபொடியாவதுடன் ஊர், உலகப் பேச்சுக்கு ஆளாகியிருப்போம். நல்லூழ் எங்களைக் காத்தது. பேராசிரியர் தண்டபாணி அவர்கள் பேராசிரியராக இருப்பதுடன் தம் குடும்பத்தினரைத் தமிழ்ப்பற்றுடன் வளர்த்துள்ளமை அறிந்து மகிழ்ந்தேன். பேராசிரியர் தண்டபாணி அவர்கள் தமிழகத்தின் ஊற்றங்கரை அடுத்த சிற்றூரைச் சேர்ந்தவர். உழைத்து முன்னேறியவர். இவரின் மைத்துனர் உள்ளிட்ட உறவினர் சில்லோர் அமெரிக்காவில் இருப்பதை அறிந்தேன்.
நாங்கள் பேராசிரியர் தண்டபாணி ஐயா இல்லத்தை அடைந்தபொழுது திரைக்கலைஞர் அண்ணன் நாசர் அவர்கள் முன்பே அங்கு வந்திருந்தார். அவருடன் சில நாள் செலவிட்டிருந்தாலும் பழகப்பழக மேலும் இனித்தார். வீட்டிலேயே எடுத்துண்ணும் வகையில் உணவு ஆயத்தம் செய்திருந்தார்கள். எங்களுக்கு விருப்பமான உணவுகளை எடுத்து உண்டோம். நான் வைகறையில் வானூர்தி பிடிக்க வேண்டியிருந்ததால் அளவாக உண்டேன். இட்டிலியை விரும்பி உண்டேன். பொருத்தமான துவையல், தொடுகறி, பழங்கள் இருந்தன. உணவை ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் உண்டோம். உணவும் பேச்சும் சுவையூட்டி இனித்தன.
பேராசிரியர் தண்டபாணி ஐயா அவர்களின் மாமனார் உள்ளிட்டவர்கள் தமிழகத்திலிருந்து வந்திருந்தனர். எங்களைப் பார்த்ததும் அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. எங்களுக்குக் குடும்பத்தினர் அனைவரும் அன்புடன் விருந்தோம்பினர். அமெரிக்கத் தன்னுரிமை நாளை முன்னிட்டு இரவில் நடைபெறும் வானவேடிக்கையைப் பார்க்க நாங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மகிழ்வுந்துவண்டிகளில் புறப்பட்டோம். வானவேடிக்கை முடிந்து தண்டபாணியார் அவர்களின் இன்னொரு வீட்டில் தங்குவதற்கு வாய்ப்பாக ஒரு மகிழ்வுந்தில் என் உடைமைகளை மாற்றிக்கொண்டோம். எங்கள் மகிழ்வுந்து வானவேடிக்கை நடைபெறும் கடற்கரை நோக்கி விரைந்தது.
நம்மூரில் தேர்த்திருவிழா பார்க்க மக்கள் திரள்வதுபோல் அமெரிக்க மக்கள் தன்னுரிமை நாளைக் கொண்டாடக் கடலை நோக்கிக் குடும்பம் குடும்பமாக வந்தனர். போக்கு வரவு காவலர்கள் போக்கு வரவை ஒழுங்குபடுத்த குறிப்பிட்ட இடம் வரைதான் மகிழ்வுந்து வர அனுமதித்தனர். சாலைகளில் போக்குவரவுக்கு இடையூறு இல்லாமல் பல கல் தொலைவு மகிழ்வுந்து நின்றன.
நாங்கள் மகிழ்வுந்திலிருந்து இறங்கி நடந்து ஒரு கல் தொலைவுக்கு மேல் நடந்தோம். அண்ணன் நாசர், அம்மா கமிலா நாசர், தண்டபாணி ஐயாவின் மகன், அவர் மைத்துனர், என்று ஒரு குழுவாகச் சென்றோம். வான வேடிக்கை தொடங்கியது. சென்ற கூட்டம் அப்படியே அங்கும் இங்கும் நின்றது. சிலர் தரையில் அமர்ந்தனர். நம்மூரில் எச்சில்துப்பும் பெருமகன் ஒத்தோர் யாரும் தென்படவில்லை. தரைகள் தூய்மையாக இருந்தன, புல்வெளியில் அண்ணன் நாசரும் நானும் அமர்ந்தோம். தலைசாய்த்து அண்ணன் நாசர் அவர்கள் அக்காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தார்.அம்மா கமிலா நாசர் அவர்கள் எங்களைப் பலமுனைகளில் படம் எடுத்து உதவினார்.
வானில் வெடித்து மகிழ்வூட்டும் வான்வெடி
மு.இ, நாசர்
வானவேடிக்கையைப் பார்த்து மகிழும் மு.இ,நாசர்
அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று பேசிய நாம் இன்று இந்த நாட்டின் தன்னுரிமை நாள் கொண்டாட்டத்தை நேரில் காணும்படி சூழல் அமைந்ததே என்று அண்ணன் நாசர் அவர்கள் குறிப்பிட்டார்கள். கட்டொழுங்காக மக்கள் அமைதிகாத்து அந்த நிகழ்வைக் கண்டுகளித்தனர். அரை மணி நேரம் இந்த நிகழ்வு நடந்திருக்கும். வானவேடிக்கை நிறைவுற்றதும் நாங்கள் எங்கள் மகிழ்வுந்து நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு வந்தோம். அண்ணன் நாசர் உள்ளிட்டவர்களிடம் விடைபெற்றுப் பேராசிரியர் தண்டபாணி அவர்களின் இன்னொரு விருந்தினர் இல்லத்துக்குச் சென்றோம்.
அந்த வீட்டின் வாயில் வரை வந்து பேராசிரியர் எனக்கு விடை தந்தார். நானும் பேராசிரியர் தண்டபாணி ஐயாவின் மைத்துனர் மருத்துவர் சிவா அவர்களும் உரிய அறையில் தங்கினோம். காலை நான்கு மணிக்கு எழுவதாகத் திட்டம். ஒரு மணி நேரத்தில் புறப்பட்டு, ஐந்து மணிக்கு வெளியேற வேண்டும் என்று படுக்கைக்குச் சென்றோம்.
நான் ஒரு மணி நேரம் விழித்துத் தேவையற்ற பொருள்களைக் கழித்துப் பெட்டியை ஒழங்கு செய்து அடுக்கினேன். நடு இரவில் உறங்கி, காலை நான்கு மணிக்கு எழுந்தேன். மருத்துவர் சிவா அவர்களும் என்னை எழுப்ப வந்து நான் ஆயத்தமாவதை அறிந்து மீண்டும் அவர் படுக்கையில் சாய்ந்தார்.
ஐந்து மணிக்குப் பேராசிரியர் தண்டபாணி ஐயாவும், அவர்களின் துணைவியாரும் பதற்றத்துடன் எங்களை எழுப்ப வந்தனர். காரணம் விடியற்காலை நான்கு மணிக்குத் தொலைபேசியில் மருத்துவர் சிவா அவர்களுக்கு ஐயா தண்டபாணியார் பேசி எழுப்ப நினைத்து, முயற்சி செய்தார். ஆனால் தொலைபேசியை அமைதியில் வைத்திருந்ததால் தண்டபாணி ஐயாவின் அழைப்பொலி எங்களுக்குக் கேட்கவில்லை. நானும் மருத்துவர் சிவாவும் எழவில்லை. அதனால்தான் தொலைபேசியை எடுக்கவில்லை என நம் பேராசிரியர் அவர்கள் நினைத்துத் தம் துணைவியாருடன் நேரில் எங்களை எழுப்ப வந்தனர்.
ஏனெனில் நான் வானூர்தியை விட்டால் என் பயணத்திட்டம் சிக்கலாகிவிடும். பொறுப்புணர்வுடன் பேராசிரியர் தண்டபாணி ஐயா செயல்பட்டு என்னை வழியனுப்ப நினைத்து வந்தமையை நினைத்து உள்ளுக்குள் அந்த நல்லுள்ளத்தைப் போற்றினேன். பிறகுதான் நடந்த நிகழ்வு அலசப்பட்டது. ஒருவழியாகப் பேராசிரியரிடம் விடைபெற்றுக்கொண்டு வானூர்தி நிலையத்தை அரை மணி நேரத்தில் அடைந்தோம்.
ஐந்தரை மணிக்கு ரொட்டியும் குளம்பியும் அருந்தினேன். வானூர்திக்குரிய பாதுகாப்பு ஆய்வு முடிந்து நன்முறையில் நான் வானூர்திக்குக் காத்திருந்தேன். மருத்துவர் சிவா பிரியா விடை தந்து பிரிந்துசென்றார். அரை மணி நேரம் காத்திருந்தேன். 6.30 மணிக்குச் சௌத்வெசுட்டு என்னும் வானூர்தியில் ஏறி அமர்ந்தேன். அது பால்டிமோர் நகருக்குப் பறந்தது. எட்டு மணிக்கு அந்த நகரின் வானூர்தி நிலையம் அடைந்தேன். அங்கு ஒன்றரை மணி நேரம் காத்திருந்து அதே நிறுவனத்தின் வானூர்தியில் காலை 9.25 மணிக்குப் அங்கிருந்து பறந்து நியூயார்க்கு - லகார்டியா உள்நாட்டு வானூர்தி நிலையம் வந்தேன். அங்கு என் உடைமைகள் காத்திருந்தன. எடுத்துக்கொண்டு உள்ளூர்ப் பேருந்தில் நியூயார்க்குச் சான் கென்னடி பன்னாட்டு விமான நிலையத்தை 11.30 மணிக்கு அடைந்தேன்.
என் அடுத்த செலவுக்குரிய ஏர் இந்தியா வானூர்தி மாலை 5 மணிக்குதான் என்பதால் வானூர்தி நிலையத்தின் மாடிப்பகுதியில் இருந்த ஏர் இந்தியா அலுவலகத்தின் அருகில் என் பெட்டிகளை வைத்துவிட்டுக் காத்திருந்தேன்.
சனி, 17 செப்டம்பர், 2011
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின்(பெட்னா) தமிழ்த்திருவிழா…
பெட்னா விழாவில் தமிழ்நாட்டியம்
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் அந்நாட்டின் ஐம்பது மாநிலங்களிலும் பரந்து வாழ்கின்றார்கள். அந்தந்த மாநிலங்களில் பள்ளிகள் அமைத்தும், தமிழ்ச்சங்கங்கள் நிறுவியும் தமிழ்ப்பணிபுரிகின்றனர். அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் கல்வி, கணினி, வைப்பகம், மருத்துவம், விண்ணியல், வானியல், சுற்றுச்சூழலியல் சார்ந்த துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர்.
ஐம்பது மாநிலத் தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் நிகழ்வுதான் பெட்னா எனப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவையின் ஆண்டு விழாவாகும். இதுவரை இருபத்து நான்கு ஆண்டுகளாக இந்த நிகழ்வு அமெரிக்காவின் பல மாநிலங்களில் நடந்துள்ளது. இருபத்து நான்காம் ஆண்டு நிகழ்வு பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் நூற்றாண்டு விழாவாகவும், ஆண்டு விழாவாகவும் அமெரிக்காவின் தெற்குக் கரோலினா மாநிலத்தில் உள்ள சார்ல்சுடன் மாநகரில் நடைபெற்றது. சார்ல்சுடன் நகர் கடற்கரையோரம் அமைந்துள்ள அழகிய நகரம் ஆகும். இந்த ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும், பனைநிலத் தமிழ்ச்சங்கத்தாரும் இணைந்து நான்கு நாள் தமிழ்த்திருவிழாவை மிகச்சிறப்பாக இந்த நகரில் நடத்தினர்(2011சூலை1- 4).
தமிழகத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினர்களை அழைத்துத் தாய்த் தமிழகத்துடன் உள்ள உறவைப் புதுப்பித்துக்கொள்வது பேரவையினரின் விருப்பமாகும். இந்த ஆண்டு கல்வித்துறை சார்ந்து பேராசிரியர் மருதநாயகம், முனைவர் புனிதா ஏகாம்பரம், முனைவர் மு.இளங்கோவன் அழைக்கப்பட்டிருந்தனர். திரைத்துறை சார்ந்து நடிகர் நாசர், சார்லி, நா.முத்துக்குமார், தேவன்(பாடகர்), வித்யா(நாட்டியம்) அழைக்கப்பட்டிருந்தனர். கலைத்துறை சார்ந்து திண்டுக்கல் சக்தி கலைக்குழு, புதுகை பூபாளம் குழுவினர் அழைக்கப்பட்டிருந்தனர். மட்டைப்பந்து வருணனையாளர் அப்துல் சப்பார் அழைக்கப்பட்டிருந்தார். துரை. எழில்விழியன் அவர்கள் தமிழுணர்வுடன் உரையாற்ற அழைக்கப்பெற்றிருந்தார்.
முதல்நாள் நிகழ்வு மாலைநேரத்தில் கடற்கரை ஒட்டிய மீன்காட்சியகத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து அறிமுகம் செய்துகொள்ளும் நிகழ்வாகவும் விருந்துண்டு மகிழும் நிகழ்வாகவும் இருந்தது. மறுநாள் முறைப்படி பேரவையின் விழா இனிதே தொடங்கியது. மங்கள இசையுடன், தமிழ்த்தாய் வாழ்த்தும், அமெரிக்கத் தேசிய கீதமும் இசைக்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்கள் மேடையில் தோன்றிக் குத்துவிளக்கேற்றினர். பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி அவர்களும் பேரவையின் சார்பில் முனைவர் பழனிசுந்தரம் அவர்களும் வரவேற்புரையாற்றினர். பல்வேறு மாநிலத் தமிழ்ச்சங்கங்களைச் சேர்ந்தவர்களின் சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் தொடங்கின. ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாகச் சிலம்பு சுழற்றுவது அரங்கில் இருந்தவர்களை வியப்படையச் செய்தது. கணினித்துறையில் உழைப்பவர்களும், பேராசிரியர்களும், வங்கிப் பணியாளர்களும் என்று பல திறத்துத் துறை சார்ந்தவர்கள் மேடையில் தமிழர்களின் பண்பாட்டைக் காட்டும் கலை நிகழ்வுகளை நிகழ்த்தியமை தாயகத் தமிழ்க்கலைகளில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டைக் காட்டியது.
அமெரிக்கக் கல்விக்கழகத்தின் பாடநூல் உருவாக்கம் பற்றி முனைவர் அரசு.செல்லையா விளக்கம் அளித்து அந்தப் பாட நூல்களைத் தமிழ்நாட்டின் கல்வித்துறை சார்ந்த அறிஞர்களான முனைவர் புனிதா ஏகாம்பரம், முனைவர் மு.இளங்கோவன் இவர்களை வெளியிடச்செய்து நடிகர்கள் நாசர், சார்லி, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்டவர்களைப் பெற்றுக்கொள்ளும்படி செய்தனர். அதனைத் தொடர்ந்து வில்லிசை, கவியரங்கம் என்று நிகழ்வுகள் கலையுணர்வுடன் படைக்கப்பட்டன. மாலையில் இனிமைத் தமிழ்மொழி என்னும் குறுவட்டு வெளியிடப்பட்டது. இதனை உருவாக்கி வெளியிட்டவர் பொற்செழியன் ஆவார். இசையமைத்தவர் திருப்பூவனம் ஆத்மநாதன். கனடாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபேசன் அவர்கள் வெளியிட முனைவர் மு.இளங்கோவன் பெற்றுக்கொண்டார்.
மேலும் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா மலரினை முனைவர் மு.இளங்கோவன் வெளியிட்டு, பெருமழைப்புலவரின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்ந்தார். இம்மலரின் முதற்படியை நடிகர் நாசர் அவர்கள் பெற்றுக்கொண்டார். கோடை மழை வித்யா குழுவினர் வழங்கிய நாட்டிய நாடகம் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தது. கனடாவின் முதல் பாராளுமன்ற பெண் உறுப்பினர் இராதிகா சிற்சபேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். தமிழும் ஆங்கிலமும் கலந்து அவர் வழங்கிய உணர்வுரை அனைவரையும் கவர்ந்தது.
திரைக்கலைஞர் நாசர் அவர்கள் எது நல்ல திரைப்படம்? என்ற தலைப்பில் வழங்கிய செறிவான உரை அரங்கினரைச் சிந்திக்கச் செய்த்து. இன்னிசை ஏந்தல் திருப்பூவனம் ஆத்மநாதன் அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி இசையார்வலர்களின் விருப்பத்திற்கு இணங்க நள்ளிரவு வரை தொடர்ந்தது. தமிழிசையில் மயங்கிய அரங்கினர் மீண்டும் மீண்டும் பாடும்படி வேண்டிக்கொண்டதால் தமிழிசைப்பாடல்களை மகிழ்ச்சியுடன் இசையறிஞர் பாடி மகிழ்வூட்டினார்.
சூலை மூன்றாம் நாள் பேரவையின் மூன்றாம் நாள் நிகழ்ச்சி மங்கள இசையுடன் தொடங்கியது. தமிழ்ப்பண்பாடு இதழினை அறிஞர் பிரான்சிசு முத்து அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை வழங்கினார். கிரீன்வில் தமிழ்ச்சங்கத்தாரின் நாட்டிய நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. தமிழ்த்தேனீ சிறார்களுக்கான நொடி வினா போட்டி மிகச்சிறப்பாக நடந்தது. பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து நிகழ்ச்சியை நடத்தினார். அமெரிக்க மண்ணில் வாழும் நம் தமிழ்க்குழந்தைகளின் தமிழார்வத்தை இந்த நிகழ்ச்சியின் மூலமாக அறியமுடிந்தது.
அடுத்துத் தமிழ் இலக்கிய வினாடி வினா பல்லூடக நிகழ்ச்சியை நாஞ்சில் பீற்றர் ஒருங்கிணைப்பில் நடத்தினார். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வினாக்களுக்கு அமெரிக்காவில் வாழும் பலதுறை சார்ந்த அறிஞர்கள் அளித்த விடை பெரும் வியப்பைத் தந்தது. பாவலரேறு பெருஞ்சித்திரனார் அணி, முனைவர் இரா.திருமுருகனார் அணி என இரண்டு அணிகளுக்கு மறைந்த தமிழறிஞர்களின் பெயரினை வைத்தது பொருத்தமாக இருந்தது. முனைவர் புனிதா ஏகாம்பரம், முனைவர் மு.இளங்கோவன், முனைவர் சங்கரபாண்டி நடுவர்களாக இருந்து சிறப்பித்தனர். பல்வேறு நடனப் போட்டிகள், திண்டுக்கல் சக்தி குழுவினரின் தப்பாட்டம் பெட்னா விழாவை உயிர்பெறச்செய்தன. பாரியின் கதை, மருதுபாண்டியர் வரலாறு உள்ளிட்ட நாடகங்களும் அனைவராலும் சுவைத்துப் பார்க்கப்பட்டன.
தமிழைச் சிதையாமல் காப்பது ஊடகங்களா? பொதுமக்களா? என்ற தலைப்பில் திரு.அப்துல் சபார் அவர்களின் தலைமையில் சுவையான பட்டிமன்றம் நடைபெற்றது.
மூன்றாம் நாள் மாலை நிகழ்ச்சியில் இனம்பேணல் நம் பொறுப்பு என்ற தலைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய வரலாற்றை நினைவுகூர்ந்து இன்றைய நிலையை விளக்கினார். மனித உரிமை வழக்கறிஞர் கேரன் பார்க்கர் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நடிகர் சார்லியின் சிறப்பு நிகழ்ச்சியும், புதுகை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சியும் அனைவராலும் பாராட்டப்பட்டன. தேவன் ஏகாம்பரம் சிறப்புப் பாடகராகக் கலந்துகொண்டு இன்னிசை நிகழ்ச்சி வழங்கினார்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கிய இலக்கியக் கூட்டம் 04.07.2011 காலை தொடங்கியது. தில்லைக்குமரன் வரவேற்புரையாற்றினார் பிரான்சிசு முத்து தமிழ்ப்பண்பாடு இதழ் பற்றி அறிமுகம் செய்தார். பொறியாளர் பிரபாகரன், பேராசிரியர் மருதநாயகம், புனிதா ஏகாம்பரம், முனைவர் பழனியப்பன், முனைவர் மு.இளங்கோவன், துரை.எழில்விழியன் ஆகியோர் இலக்கிய உரையாற்றினர். ஒவ்வொருவர் உரையும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை வாய்ந்தவையாகும். நடிகர் நாசர் அவர்கள் இன்றைய திரைக்கலை பற்றியும் சமூக நிலை பற்றியும் ஆழ்ந்த உரையாகத் தம் பேச்சை அமைத்தார்.
அடுத்த ஆண்டு 2012 சூலை முதல் வாரத்தில் அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இருபத்தைந்தாம் ஆண்டு விழா, வெள்ளி விழாவாக அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன்னில் கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையினர் இப்பொழுதே ஈடுபட்டுவருகின்றனர்.
குற்றுவிளக்கேற்றும் கோதையர்கள்
பெட்னா விழாவில் தமிழ்நாட்டியம்
பெட்னா விழாவில் தமிழ்நாட்டியம்
திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினரின் தப்பாட்டம்
ஆடவரின் கலைநிகழ்வு
தமிழ்ப்பண்பாடு காட்டிய இசையும் ஆட்டமும்
குச்சி விளையாட்டு(சிலம்பாட்டம்)
தமிழ் நாட்டியம்
பெட்னா விழாவில் பங்கேற்ற கலைஞர்கள்
தமிழர்களின் வில்லுப்பாட்டு
நனி நன்றி: படங்கள் உதவி: திரு.கண்ணன், தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகம்
வெள்ளி, 16 செப்டம்பர், 2011
ஆனந்த விகடனுக்கு நன்றி...
ஆனந்த விகடன் இதழின் இணைப்பு இதழாக வெளிவரும் என் விகடன் இதழில் (21.09.2011) செய்தியாளர் திரு.முருகன் அவர்கள் என்னை நேர்காணல் செய்து எழுதியுள்ளார். என் விகடனில் வெளிவந்த இந்த நேர்காணல் பகுதி புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மட்டும் கிடைக்கும். அனைவரும் காணும் வகையில் என் வலைப்பக்கத்தில் பதிகின்றேன். செய்தியாளர் திரு.முருகன் அவர்களுக்கும் ஆனந்தவிகடன் நிறுவனத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ் பயிற்றுவிக்கும் பணிகளுக்கு இடையே நேரம் கிடைக்கும்பொழுது தமிழ் இணையப் பரவல் பணிகளிலும், தமிழ்நூல் பதிப்பிலும், இசையாய்வுகளிலும், நாட்டுப்புறப் பாடல்கள் தொகுப்பிலும் நான் ஈடுபட்டு வருவதை அறிந்து இந்த நேர்காணலில் சில செய்திகளைப் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து இந்தத் துறைகளில் உழைக்கும் ஊக்கத்தை இந்த நேர்காணல் எனக்கு வழங்கியுள்ளது. படித்து மகிழ்ந்து வாழ்த்துரைத்த தூய நெஞ்சங்களுக்கு என் நன்றி உரியதாகும்.
இவருக்கும் தமிழ் என்று பேர்!
தமிழ் வளர்ச்சி என்பது பலருக்கும் வயிறு வளர்க்கும் வாய்ச் சொல் வார்த்தை. ஆனால், பேராசிரியர் இளங்கோவனுக்கோ அது அர்த்த பூர்வமான வாழ்க்கை!
புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி தமிழ் விரிவுரையாளரான இளங்கோவன், இணையத்திலும் அச்சிலும் தமிழ் இலக்கியங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், தமிழர் வரலாறு ஆகியவற்றை அடர்த்தியாகவும் ஆழமாகவும் பதிவுசெய்பவர். இவருடைய தமிழ்ப் பணிக்காக, மத்திய அரசின் 'செம்மொழி தமிழாய்வு நிறுவனம்’ சார்பில், 'செம்மொழி இளம் அறிஞர்’ என்ற விருதினை ஜனாதிபதியிடம் பெற்றுள்ளார்.
ஐ-பாடில் சீவக சிந்தாமணியை டிரான்ஸ்ஃபர் செய்துகொண்டு இருந்தவர், முகமலர்ச்சியுடன் வரவேற்று மனம் மகிழப் பேசினார். ''கங்கை கொண்ட சோழபுரத்துக்கு அருகில் உள்ள இடைக்கட்டு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். எனது ஊரில் இருந்து 13 கி.மீ-யில் உள்ள மீன்சுருட்டியில்தான் உயர்நிலைக் கல்வி. சைக்கிள் வாங்கும் அளவுக்கு வசதி இல்லாததால் பள்ளிக்குத் தினமும் நடந்துதான் சென்றுவர வேண்டும். 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், அப்பா என்னை விவசாயத்தில் ஈடுபடுத்தினார். பிறகு, தமிழ் ஆசிரியர் சுந்தரேசனார் ஆலோசனையின் பேரில், திருப்பனந்தாள் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை, முதுகலைப் பட்டங்களை முடித்து கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். கல்லூரிக் காலத்திலேயே தமிழ் ஆர்வத்தால் 'மாணவராற்றுப்படை’ என்ற நூலை எழுதினேன். பிறகு, படிப்படியாக முனைவர் பட்டமும் பெற்றேன்!'' - என்று சொல்லும் இவர், இதுவரை 17 புத்தகங்களை எழுதி இருக்கிறார்.
தமிழ்(எழுத்து)ச் சீர்திருத்தம், கிரந்த கலப்பு போன்றவை தொடர்பாக நடக்கும் உலக அளவிலான விவாதங்களில் கலந்துகொள்வது, கிராமங்களுக்குச் சென்று ஒப்பாரிப் பாடல்கள், நடவுப் பாடல்களைத் தொகுப்பது என்று ஆர்வத்துடன் ஆய்வுகள் மேற்கொள்கிறார். குறிப்பாக, இணையத்தில் தமிழ் அறிஞர்கள் குறித்து இவர் ஏற்றி உள்ள தரவுகள், மிகவும் பயன் உள்ளவை.
'' 'ஜீவா’ என்று இணையத்தில் தேடினால், முதலில் நடிகர் ஜீவாதான் வருகிறார். அதற்குப் பிறகுதான், தோழர் ஜீவானந்தம் பற்றிய குறிப்புகளே வருகின்றன. அதனால் தமிழ் அறிஞர்களைப் பற்றிய வரலாறுகளையும் அவர்களுடைய புத்தகங்களையும் அவர்களின் புகைப்படங்களோடு வலை ஏற்றினேன். சங்க இலக்கியங்கள், அக நானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற பல நூல்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்ற ஆரம்பித்தேன். சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை போன்றவற்றை இசை அமைத்துப் பாடிய இசைமேதை குடந்தை ப.சுந்தரேசன் அவர்களைப்பற்றி 20 ஆண்டு காலங்கள் தேடி, அவர் பாடிய பாடல்களைக் கண்டுபிடித்து, அதில் சிலவற்றை வலை ஏற்றி இருக்கிறேன். திருத் துறைப்பூண்டியைச் சேர்ந்தவரும் அகநானூறு, புறநானூறு போன்றவற்றுக்கு விளக்க உரை எழுதியவருமான பெருமழைப் புலவர் திரு. போ.வே.சோமசுந்தரனார் அவர்களுடைய குடும்பம், வறுமையின் கோரப்பிடியில் இருக்கிறது என்று இணையத்தில் எழுதி இருந்தேன். அது தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க... அவருடைய குடும்பத்துக்கு 10 லட்சம் கொடுத்து கௌரவப் படுத்தியது.
தொடர்ச்சியான எனது செயல் பாடுகளால் கவரப்பட்ட 'வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை’ (ஃபெட்னா), பெருமழைப் புலவனாரின் நூற்றாண்டு விழாவில் என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்து விழா மலரை வெளியிடவைத்தனர்!'' என்று சொல்லும்போதே பெருமிதம் பெருமழையாகப் பொழிகிறது இளங்கோவனின் வார்த்தைகளில்.
பழைமையைப் பாதுகாப்பது, புதுமையைப் பயன்படுத்திக்கொள்வது என்ற நோக்கங்களைக் கொண்டு செயல்படும் இளங்கோவன் போன்றவர்கள்தான், தமிழர்களின் இன்றைய தேவை!
- ஜெ.முருகன்
வியாழன், 15 செப்டம்பர், 2011
அதுவும் நடந்தது…
தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முகப்பில் மு.இளங்கோவன்
அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் நிறைவுநாள் நிகழ்வில் உரையாற்றி மேடையிலிருந்து இறங்கிய உடன் விடுதி அறையை ஒப்படைக்க வேண்டும் என்ற செய்தி கிடைத்தது. நாளை காலைதானே நாம் புறப்படுகின்றோம் என்று என் பொருட்களை ஒழுங்குபடுத்தாமலிருந்தேன். ஆனால் திடுமெனக் கிடைத்த செய்தியால் நானும் நண்பர் ஒருவரும் அறையில் இருந்த பொருட்களை ஐந்து நிமிடங்களுக்குள் என் பெட்டிக்குள் திணித்தோம். வரவேற்பறையில் கொண்டு வந்து அவற்றை வைத்தோம். நிறைவாக நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பிரியா விடைபெற்றேன். இந்த நேரத்தில் சென்னை மணிமேகலை பிரசுரத்தின் உரிமையாளர் ரவி தமிழ்வாணன் அவர்களின் அறிமுகம் அமைந்தது. இடைப்பட்ட நேரத்தில் நாங்கள் இருவரும் பேராசிரியர் சந்தோஷ் அவர்களின் விருந்தோம்பலில் இருக்கும்படி திட்டம் இருந்தது. பகலுணவுக்குத் திரு. சந்தோஷ் இல்லம் சென்றோம்.
எளிமையான முறையில் சிறப்பான உணவு வழங்கினர். அவர்களின் வீட்டில் இருந்த குழந்தைகள் சுவரில் இடைவெளியில்லாமல் கிறுக்கி இருந்ததைப் பார்த்ததும் என் குழந்தைகள் நினைவு வந்தது. எங்கள் பிள்ளைகள் இவ்வாறு கிறுக்கியதால் நாங்கள் ஒரு வீடுமாறும் அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போனதையும் நாங்கள் கொடுத்த முன்தொகையைப் பெறுவதில் இழுபறி ஏற்பட்டதையும் நினைத்துக்கொண்டேன். இரவி தமிழ்வாணன் அவர்கள் இரவு தொடர்வண்டியில் பயணம் செய்ய உள்ளதை நினைவூட்டிச் சிறிது ஓய்வெடுக்க விரும்பினார். அவரை ஓய்வுகொள்ளச்செய்து நானும் திரு. சந்தோஷ் அவர்களும் புகழ்பெற்ற தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றோம்.
இன்று(04.07.2011) அமெரிக்கத் தன்னுரிமைநாள் என்பதால் பல்கலைக்கழகம் விடுமுறை. என்றாலும் ஓய்வு இல்லாமல் ஆய்வு மாணவர்கள் இங்கும் அங்கும் ஆய்வில் மூழ்கிக் கிடந்தனர். இவர்களைப் பார்த்தபொழுது ஓய்வுநாளிலும் ஆய்வில் ஈடுபட்டிருந்த செயல் நினைத்து மகிழ்ந்தேன். என் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் தமிழகப் பல்கலைக்கழகங்களைப் பார்த்து, “இரவில் விளக்கெரியாத பல்கலைக்கழகங்கள் குட்டிச்சுவராகிக்கொண்டிருக்கும்” என்று சாபமிட்டது நினைவுக்கு வந்தது. தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகம் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாகும்.
இங்குதான் நம் ஐயா தண்டபாணி குப்புசாமி அவர்கள் பேராசிரியராகப் பெருமையுடன் பணிபுரிகின்றார் என்பது அறிந்து பூரித்துப் போனேன். நண்பர் சுந்தரவடிவேல், ஒளி ஓவியர் கண்ணன், நம் சந்தோஷ் உள்ளிட்ட அன்பர்கள் அங்குப் பணிபுரியும் நிலையை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன்.
இந்த இடத்தில் ஒரு குறிப்பு: இங்குதான் என் மாணவர் நாகேசுவரன் அவர்கள் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு வருவதைத் தமிழகம் திரும்பிய பிறகு அறிந்து வருந்தினேன். ஆனாலும் செய்தி அறிந்தவுடன் அவர்க்கு உதவும்படி என் பேராசிரியர் நண்பர்களுக்குப் பிறகு வேண்டுகை மடல் விடுத்தேன். திரு நாகேசுவரன் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் என்னிடம் பயின்ற உயர் பண்பு வாய்த்த மாணவர். அவர்போல் உலகின் பல பகுதிகளில் என்னிடம் கலவையில் பயின்ற மாணவர்கள் இருப்பதும், இணையம் வழியாகப் பெரும்பான்மையானவர்கள் தொடர்பில் இருப்பதும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.
தெற்குக் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகம் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கு முதன்மையான பல ஆய்வுகள் நடைபெற்று வருவதாக நண்பர் சந்தோஷ் குறிப்பிட்டார். அவர் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் என்ற முறையில் அவரின் ஆய்வுக்கூடத்தைப் பார்வையிட்டேன். நானும் மேல்நிலைக் கல்வியில் அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்ததால் ஆய்வுக்கூடப் பட்டறிவு எனக்கு உண்டு.
மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி
சற்றொப்ப முப்பதாண்டுகளுக்கு முன்பு மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் வேதிக்கூடத்தில் நடந்த பல நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. எங்கள் வேதியியல் பேராசிரியர் கலியமூர்த்தி ஐயா அவர்கள் இல்லாதபொழுது எம் உடன் பயின்ற மாணவர்கள் செய்த ஒவ்வொரு சிறுசெயலும் நினைவுக்கு வந்து என்னைத் திருத்தின. அங்குள்ள பல ஆய்வுக்கூடங்களைச் சுற்றிப் பார்த்தோம். ஆய்வுக்கு முதன்மையளிக்கும் உயர்கல்வித்துறையினரின் ஈடுபாடு மகிழ்ச்சி தந்தது. ஒவ்வொரு துறையிலும் ஆய்வாளர்கள் வரைந்த ஆய்வுக்கட்டுரைகள் அறிக்கைப் பலகையில் இருந்தது. ஆய்வாளருக்கு அந்த நாடு தரும் முதன்மை வியப்பைத் தந்தது. நம் நாட்டில் உள்ள இருட்டடிப்பு, அழுக்காறு, சேறுபூசல் நினைத்து வருந்தினேன். மீண்டும் சந்தோஷ் இல்லம் திரும்பினோம்.
இரவி தமிழ்வாணன் அவர்கள் ஓய்விலிருந்து மீண்டு எங்களுக்காகக் காத்திருந்தார். சந்தோஷ் மகிழ்வுந்தில் போளி பீச் எனப்படும் அழகிய கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். எங்கள் மகிழ்வுந்து ஒரு மணி நேரம் ஓடி நின்றது.
அன்று அமெரிக்கத் தன்னுரிமை நாள் என்பதால் கடற்கரையெங்கும் மக்கள் தம் குடும்பத்தாருடன் பொழுதைக் கழிக்க வந்திருந்தனர். கடற்கரையெங்கும் ஒரே திருவிழாக் கோலம். காற்று வாங்கும் உடையில் அனைவரும் கதிரவக் குளியலில் கிடந்தனர். சேற்றில் புரண்டு தங்கள் செம்மேனியை அழுக்காக்கினர்.. சிலர் படகுகளைக் கையில் கொண்டு வந்து கடலில் போட்டு உல்லாசமாகக் கடற்பரப்பில் சுற்றி வந்தனர். சிலர் தம் வரியிளஞ்செங்காற் குழவியினருடன் வந்து அவர்களைக் கடல் மணல் பரப்பில் நடை பழக்கினர். சிலர் சிறு சிறு குழுக்களாக அமர்ந்து உரையாடியபடி இருந்தனர். இளம்பெண்டிர் பலர் தங்கள் காதற் கிழவனுடன் மணற்பரப்பில் மனம்போன போக்கில் நடந்து உலா பயின்றனர். அங்கு எங்கள் நண்பர் பழமைபேசி தம் குடும்பத்தாருடன் களித்துக் குளித்தார். நானும் இரவி தமிழ்வாணனும் சந்தோஷும் மாறி மாறிப் படங்கள் சில நினைவுக்காக எடுத்துக்கொண்டோம்.
கடற்கரை மணலில் காலார நடந்தோம். அமெரிக்கர்கள் உருவாக்கி வைத்திருந்த சில தற்காலிகப் படுக்கையில் உடல் சாய்த்துக் கிடந்தோம். பின்னர் மரத்தில் அமைத்திருந்த பாலத்தில் ஏறி கடலின் உட்பகுதிக்குச் சென்றோம். அங்குச் சிலர் மீன்பிடிக்கும் காட்சிகளைப் பார்த்தோம். சிறுவர்களுக்கு இணையாகப் பெரியவர்களும் அமர்ந்து மீன்பிடித்தனர். மக்கள் நடப்பதால் உருவாகும் அழுக்குகளை அவ்வப்பொழுது பணியாளர்கள் துடைத்துத் தூய்மை செய்தனர். அவ்வாறு செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் இறுதிப்பகுதியில் அடுக்குமாடி போன்ற அமைப்பில் காற்று வாங்க வசதியாக மரத்தால் கட்டியிருந்தனர். அங்கிருந்து பார்த்தால் நெடுந்தொலைவுக் கடல் கண்ணுக்குத் தெரிந்தது. எல்லாவற்றையும் எங்கள் புகைப்படக்கருவியில் காட்சிகளாக எடுத்துக்கொண்டோம். அந்த இயற்கைப் பேரழகைச் சுவைத்தபடி நாங்கள் கரைக்குத் திரும்பினோம்.
கரையில் அமைக்கப்பட்டிருந்த கடையில் எங்களுக்குப் பனிக்குழம்பையும், நினைவுப் பரிசிலையும் நண்பர் சந்தோஷ் அவர்கள் வாங்கி மகிழ்ச்சியுடன் தந்தார். அந்த இயற்கைக் காட்சியை இனி என்று காண்போம் என்ற ஏக்கத்துடன் நாங்கள் திரும்பினோம். எங்களை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நண்பர் சந்தோஷ் அவர்கள் தம் மகிழ்வுந்தை எடுத்து வரச்சென்றார்.
அப்பொழுது இரவி அவர்களுடன் அவர்களின் பதிப்பக வளர்ச்சி, அவர்களின் தந்தையார் திரு.தமிழ்வாணன், இரவி அவர்களின் உடன்பிறப்பு எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பற்றி பல செய்திகளைத் தெரிந்துகொண்டேன். திரு. இரவிதமிழ்வாணன் அவர்கள் மணிமேகலை பிரசுரம் வழியாகப் பல நூல்களை வெளியிட்டுள்ளமையும், அந்த நூல்களை உலக அளவில் பலரின் பார்வைக்கு வைத்து வருகின்றமையும் அனைவரும் அறிவோம். அவர் அயல்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளைச் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியிட்டு வருவதை இந்தப் பயணத்தில் முழுமையாக அறிந்தேன். அந்த வகையில் எங்கள் அம்மா யோகரத்தினம் செல்லையா, தங்கேசுவரி, ஈழத்துப்பூராடனார் உள்ளிட்ட அன்புக்குரியவர்களின் நூல்களை வெளியிட்டுள்ளமை இங்குக் குறிப்பிடத்தகுந்தது.
அதுபோல்தான் இந்தப் பயணத்தில் அடுத்து அவர் இலண்டன் மாநகரில் நடக்கும் தம் பதிப்பகம் வெளியிட்ட புத்தக வெளியீட்டு விழாவுக்குச் செல்வதைச் சொன்னார்கள். அதுபோல் குமுதம் இதழின் உரிமையாளர் திரு ஜவஹர் பழனியப்பன் அவர்கள் நெஞ்சாங்குலை மாற்று அறுவைப் பண்டுவத்தில் உலக அளவில் வல்லுநர் என்ற செய்தியையும் என்னிடம் தெரிவித்தார்கள். ஒவ்வொரு முறை அமெரிக்கா வரும்பொழுதும் திரு ஜவஹர் பழனியப்பன் அவர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதைத் தெரிவித்தார். பல நினைவுகளை அசைபோட்டபடி இருந்தபொழுது சந்தோஷ் அவர்களின் மகிழ்வுந்து எங்களை அழைக்க வந்து நின்றது.
சந்தோஷ் அவர்கள் மகிழ்வுந்தை ஓட்டினார். முன்னிருக்கையில் இரவி தமிழ்வாணன் அமர்ந்திருந்தார். நான் பின்னிருக்கையில் இருந்தேன். சாலைகளில் முறையான போக்குவரவு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டாலும் அன்று தன்னுரிமைத் திருநாள் என்பதால் மக்கள் சிறிய அளவில் விதிமுறைகளில் கவனம் செலுத்தாமல் இருந்தனர். எங்கள் வண்டியை மக்கள் நெரிசலில் இருந்து தவிர்க்கப் புறவழியில் ஓட்ட சந்தோஷ் முயன்றார். அப்பொழுது நான்கு வழிச்சந்திப்பில் எதிர்பாராத வகையில் எங்கள் வண்டியில் வேறொரு வண்டி வந்து மோதியது. இரவி அவர்கள் செய்வதறியாது கதறினார். நல் வாய்ப்பாக இருவர் வண்டியும் நின்றது. இன்னும் ஒரு நொடி முன்னே சென்றிருந்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும். நல்வாய்ப்பாக சந்தோஷ் வண்டியின் முன்பகுதியில் சிறு பள்ளம்.
பக்கவாட்டிலிருந்து வந்த வண்டியை ஓட்டி வந்தவர் ஓர் இளம்பெண். அவரும் இறங்கினார். அவருடன்இன்னொரு இளம் பெண்ணும் இறங்கினார். இருவரும் இந்தியக் குடிவழியினர் என்று பின்பு அறிந்தோம். அவர்களின் அன்புக்காதலர்களாக இரண்டு இளைஞர்கள் வண்டியிலிருந்து இறங்கினர். அவர்கள் அனைவரும் குடித்திருக்க வேண்டும். வண்டியை ஓட்டிய இருவர் மேலும் தவறு என்பதால் அமைதியாகப் பிரிய நினைத்தோம். வழிப்போக்கன் ஒருவன் நாங்கள் வந்த வண்டியை ஓட்டியவர் செய்தது பிழை என்றதால் காவல்துறைக்குத் தகவல் சொன்னோம். காவலர்கள் அடுத்த சில மணித்துளிகளில் எங்களுக்கு அருகில் இருந்த தீயணைப்புத் துறையினர்க்குத் தகவல் சொல்ல, அந்தத் துறை சார்ந்த இருவர் வந்து வினவினர். சற்றுப் பொறுத்திருங்கள். காவலர் வருவார் என்று சொன்னார்கள்.
அரை மணி நேரத்தில் காவலர் வந்தார். எங்களிடம் சில புள்ளி விவரங்களைக் கேட்டு வாங்கினார். எங்களைப் பாதுகாப்பாக ஓட்டிச்செல்லுங்கள் என்று வாழ்த்தி அனுப்பினார். நாங்கள் சார்ல்சுடன் நகரின் முதன்மையான குடியிருப்புகளையும் கடற்கரையையும் பார்த்தபடி வண்டியில் வந்தோம். மாலை ஐந்து மணிக்கெல்லாம் அமெரிக்கத் தன்னுரிமை நாளுக்கு மக்கள் வான வேடிக்கை பார்க்க குவிந்தனர். நம் ஊர்போல் ஆள் ஆளுக்கு வெடி வெடிக்க அனுமதி இல்லை. குறிப்பிட்ட இடத்தில் அரசு சார்பில் பாதுகாப்பாக வான வேடிக்கை நடக்கும். அதனைப் பார்க்க நம்மூர்த் தேர்விழாவுக்குக் குவிவதுபோல் மக்கள் வண்டிகளில் வந்து குவிந்திருந்தனர்.
அங்கு ஆப்பிரிக்க மக்களை விலங்குகளைப் போல் வாங்கி அடைத்து வைத்திருந்த சில சந்தைக்காட்சிக் கட்டடங்கள் இன்றும் நினைவிடமாக இருப்பதைப் பார்த்தோம். சந்தோஷ் இல்லத்தில் விடைபெற்று அடுத்துப் பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி இல்லம் வந்தோம். அங்கு இரவு உணவுக்கு ஏற்பாடு. அண்ணன் நடிகர் நாசர் அவர்களும் அம்மா கமிலா நாசர் அவர்களும் அங்கு இருந்தனர்.
போளி பீச் என்னும் கடற்கரை
மு.இ, இரவி தமிழ்வாணன் கடலின் உள்ளே உள்ள மரப்பாலத்தில்
சந்தோஷ், மு.இளங்கோவன்
மு.இ, இரவி தமிழ்வாணன்
மு.இ, இரவி தமிழ்வாணன்
மு.இ. கடலில் அமைக்கப்பட்டுள்ள மரப்பாலத்தில்
திங்கள், 5 செப்டம்பர், 2011
பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தாள் விழா
படத்தைத் திறந்துவைக்கும் முனைவர் ழான் லூய்க் செவ்வியார்
பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள் விழா, படத்திறப்பு நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள இலப்போர்த்து வீதியில் அமைந்துள்ள இரெவே சொசியால் அரங்கில் 05.09.2011 மாலை 6.30 மணியிலிருந்து எட்டு மணி வரை நடைபெற்றது.
பேராசிரியர் கோ.விசயவேணுகோபால் தலைமை தாங்கினார். பிரஞ்சு நாட்டுத் தமிழறிஞர் ழான் லூய்க் செவ்வியார் அவர்கள் பெருமழைப்புலவரின் படத்தைத் திறந்துவைத்தார்.
திருவள்ளுவர் தவச்சாலை நிறுவுநர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்கள் பெருமழைப்புலவரின் வாழ்க்கை, கல்வியார்வம், உரைச்சிறப்பு, சைவ சிந்தாந்தக் கழகத் தொடர்பு, உள்ளிட்ட பல செய்திகளை ஒரு மணி நேரம் நிரல்பட எடுத்துரைத்தார்.
புலவர் இ.திருநாவலன், புவர் நாகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் முனைவர் மு.இளங்கோவன் வரவேற்புரையாற்ற, முனைவர் ஆ.மணி நன்றியுரையாற்றினார். தமிழாசிரியர் மூ. பூங்குன்றன் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். புதுவைத் தமிழறிஞர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மேலைப்பெருமழையிலிருந்து புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் மகன் சோ.பசுபதி அவர்களும், திரு.சிவபுண்ணியம் அவர்களும் வந்திருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், கலந்துகொண்டவர்களுக்கும் வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்தனர்.
முனைவர் கோ.விசய வேணுகோபால்(தலைமையுரை)
முனைவர் ழான் லூய்க் செவ்வியார்
முனைவர் இரா.இளங்குமரனார் உரை
அறிஞர்கள் சிறப்பிக்கப்படுதல்
கல்விச்செம்மல் முத்து, மு.இளங்கோவன்
விழாவில் கலந்துகொண்ட அறிஞர்கள்
புலவர் இரா.இளங்குமரனாருடன், சோ.பசுபதி(பெருமழைப்புலவரின் தலைமகன்)
வியாழன், 1 செப்டம்பர், 2011
பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்த நாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்
புதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென விழாக்குழு அமைக்கப்பெற்று உரிய பணிகள் நடைபெற்று வருகின்றன. விழாக்குழுவில் முனைவர் மு.இளங்கோவன்,முனைவர் ஆ.மணி, முனைவர் உரு. அசோகன்,பைந்தமிழ்ப்பாவலர் பூங்குன்றன், தனித்தமிழ்ப்பாவலர் சீனு.தமிழ்மணி,புலவர் நாகி, புலவர் இ.திருநாவலன், வசந்தகுமார், அ.சந்திரசேகரன் ஆகியோர் உள்ளனர். விழா நடைபெறும் நாள், நேரம்,இடம், நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு அமைகின்றன.
நாள்: 05.09.2011, திங்கட்கிழமை. நேரம்: மாலை 6.30 - 8.00 மணி
இடம்: இரெவேய் சொசியால் சங்கம், 26, இலப்போர்த் வீதி, புதுச்சேரி- 605 001
சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல்,பத்துப்பாட்டு நூல்கள்; பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி, பெருங்கதை, இலக்கண நூல்களான புறப்பொருள் வெண்பாமாலை, கல்லாடம், பக்திப் பனுவல்களான திருக்கோவையார், பட்டினத்தார் பாடல்கள் ஆகிய நூல்களுக்கு அரும்புலமை நலம் தழைக்க உரை வரைந்தும், படைப்பு நூல்கள் பலவற்றைப் படைத்தும் தமிழ்ப்பணியாற்றிய தமிழ்ச்சான்றோர் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்(05.09.1909-03.01.1972) அவர்களின் பிறந்தநாள் விழாவும் படத்திறப்பு நிகழ்ச்சியும் சிறப்புற நடைபெற உள்ளன. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து:
தலைமை : முனைவர் கோ.விசயவேணுகோபால் அவர்கள் (பிரெஞ்சு கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO).
முன்னிலை: புலவர் இ. திருநாவலன் அவர்கள், புலவர் நாகி அவர்கள்
வரவேற்புரை : முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்
பெருமழைப்புலவரின் படத் திறப்பு: முனைவர் ழான் லூய்க் செவ்வியார் (பிரெஞ்சு கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO).
சிறப்புரை : தமிழ்க்கடல் இரா.இளங்குமரனார் அவர்கள்
(நிறுவுநர், திருவள்ளுவர் தவச்சாலை, அல்லூர், திருச்சிராப்பள்ளி)
நன்றியுரை : முனைவர் ஆ.மணி அவர்கள்
பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்த நாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்
நாள்: 05.09.2011, திங்கட்கிழமை. நேரம்: மாலை 6.30 - 8.00 மணி
இடம்: இரெவேய் சொசியால் சங்கம், 26, இலப்போர்த் வீதி, புதுச்சேரி- 605 001
சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல்,பத்துப்பாட்டு நூல்கள்; பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி, பெருங்கதை, இலக்கண நூல்களான புறப்பொருள் வெண்பாமாலை, கல்லாடம், பக்திப் பனுவல்களான திருக்கோவையார், பட்டினத்தார் பாடல்கள் ஆகிய நூல்களுக்கு அரும்புலமை நலம் தழைக்க உரை வரைந்தும், படைப்பு நூல்கள் பலவற்றைப் படைத்தும் தமிழ்ப்பணியாற்றிய தமிழ்ச்சான்றோர் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்(05.09.1909-03.01.1972) அவர்களின் பிறந்தநாள் விழாவும் படத்திறப்பு நிகழ்ச்சியும் சிறப்புற நடைபெற உள்ளன. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து:
தலைமை : முனைவர் கோ.விசயவேணுகோபால் அவர்கள் (பிரெஞ்சு கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO).
முன்னிலை: புலவர் இ. திருநாவலன் அவர்கள், புலவர் நாகி அவர்கள்
வரவேற்புரை : முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்
பெருமழைப்புலவரின் படத் திறப்பு: முனைவர் ழான் லூய்க் செவ்வியார் (பிரெஞ்சு கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO).
சிறப்புரை : தமிழ்க்கடல் இரா.இளங்குமரனார் அவர்கள்
(நிறுவுநர், திருவள்ளுவர் தவச்சாலை, அல்லூர், திருச்சிராப்பள்ளி)
நன்றியுரை : முனைவர் ஆ.மணி அவர்கள்
பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்த நாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)