நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
செம்மொழி மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செம்மொழி மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 ஜூன், 2010

கோவை செம்மொழி மாநாடும் தமிழ் ஆய்வுப் போக்குகளும்


பேராசிரியர் கிரிகோரி சோம்சு தலைமையில் நான் கட்டுரை படைத்தல்

கோவையில் 2010 சூன் 23 முதல் 27 வரை முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும்,அதன் சார்பாக ஒன்பதாம் தமிழ் இணைய மாநாடும் மிகச்சிறப்பாக நடந்தன.தமிழ் நாட்டரசின் சார்பில் நடந்ததால் அரசு எந்திரத்தின் அனைத்து ஆற்றலும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு மாநாடு வெற்றியுடன் நடந்தேறியது.

தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களும்,துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களும் ஆர்வமுடன் ஒன்றிணைந்து செயல்பட்டதும்,இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள்,காவல்துறை உயர் அதிகாரிகள் ஒன்றுகூடித் திட்டமிட்டதும் இந்தமாநாட்டின் வெற்றிக்கு அடிப்படைக் காரணங்களாகும்.

மாநாட்டுக்கான இடத்தேர்வு,போக்குவரவு,தங்குமிடம்,உணவு,அரங்க அமைப்புகள், கண்காட்சிகள், சிறப்பு மலர்கள்,பொது அமர்வு,கருத்தரங்க அமர்வுகள் என மாநாட்டின் அனைத்துக் கூறுகளும் எவ்வகையான குறையும் சொல்ல முடியாதபடி இருந்தன.மாநாட்டுக்கு வந்த அனைவரும் மாநாட்டின் சிறப்பினை இவ்வாறு குறிப்பிட்டனர். "இதுபோலும் ஒரு மாநாட்டை எதிர்காலத்திலும் கூட்ட முடியாது. அந்த அளவு இந்த மாநாடு வெற்றியுடன் நடந்தேறியது". ஆம்.இதுவரை நடந்த உலகத் தமிழ் மாநாடுகள் கட்சி மாநாடகாப் பல இடங்களில் நடந்தன. ஆனால் கோவையில் எங்கும் ஆளும் கட்சியினரின் கொடிகளோ,வெட்டுருவங்களோ காணப்படவில்லை.உலகெங்கும் இருந்து வந்த அறிஞர்கள் மாநாட்டைப் போற்றிப் புகழ்ந்த வண்ணம் சென்றதைக் கேட்க முடிந்தது.

ஓரிருவருக்குத் தங்குமிடம் கிடைக்காமல் போனதையும் குறிப்பிட்டார்கள்.பெரும்பபாலும் முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் மிகச்சிறப்பான விடுதிகளில் ஒதுக்கப்பட்டிருந்தது.இது போன்ற பெரு நிகழ்வுகளில் சிறு குறைகள் தென்படுவது இயற்கைதான்.செய்திப் பரிமாற்றத்தின் இடைவெளியால் மாநாட்டு அரங்கிலிருந்து பலர் இனியவை நாற்பது கண்காட்சிக்குச் செல்ல முடியாமல் தங்கிவிட்டனர்.

தமிழுக்கும்,தமிழருக்கும் பெருமை சேர்க்கும் தமிழாய்வை உலகத் தரத்தில் செய்துவரும் பின்லாந்து பேராசிரியர் ஆசுகோ பார்ப்போலா,பேராசிரியர் சார்ச்சு கார்ட்டு,பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்சுகி, ஐராவதம் மகாதேவன்,தினமலர் கிருட்டினமூர்த்தி,கார்த்திகேசு சிவத்தம்பி உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கனவாகும்.

தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் உல்ரிக் நிக்கோலசு,மில்லர்,தாமசு லெமான், உள்ளிட்டவர்களை மாநாட்டில் கண்டு பேசும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது.துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கண்டு பேசவும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழ் இலக்கிய, இலக்கணங்களை மட்டும் ஆய்வு செய்யும் மாநாடாக இல்லாமல் தமிழர்களின் தொழில்நுட்பம்,அறிவியல்,வானியல், கட்டடக்கலை, கடலியல்,கப்பல் கலை பற்றிய செய்திகளை விளக்கும் மாநாடாகவும் இது விளங்கியது.அறிவியல் அறிஞர்கள் மயில்சாமி அண்ணாதுரை(சந்திரயான் திட்ட இயக்குநர்),நா.கணேசன்(நாசா விண்வெளி ஆய்வுமையம்,நெல்லை சு.முத்து,ஆரோக்கியசாமி பால்ராசு, ஆகியோரின் உரை கேட்கும் வாய்ப்பும் கண்டு உரையாடும் வாய்ப்பும் எனக்கு அமைந்தன.

செம்மொழி மாநாட்டுக்கு 2605 விருந்தினர்கள் உள்நாட்டிலிருந்தும்,வெளிநாட்டிலிருந்தும் வந்துள்ளனர்.இவர்கள் 92 விடுதிகளில் 1242 அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 55 தலைப்புகளில் 239 அமர்வுகளில் 913 ஆய்வுக்கட்டுரைகள் ( சூன் 24 முதல் 27 வரை ) படைக்கப்பட்டுள்ளன. 50 நாடுகளிலிருந்து 840 வெளிநாட்டுப் பேராளர்கள் வந்துள்ளதாகத் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்(தினமணி 29.06.2010).

ஆய்வுக்கட்டுரைகள் சங்க இலக்கியப் புலவர்களின் பெயரில் திருவள்ளுவர் அரங்கு,இளங்கோ அரங்கு,நக்கீரர் அரங்கம்,கபிலர் அரங்கு,பரணர் அரங்கு,ஔவை அரங்கம்,பூங்குன்றனார் அரங்கம், வெள்ளிவீதியார் அரங்கம், பெருஞ்சித்திரனார் அரங்கம்,கோவூர் கிழார் அரங்கம், சாத்தனார் அரங்கம், காக்கைபாடினியார் அரங்கம்,அம்மூவனார் அரங்கம்,மாசாத்தியார் அரங்கம், நக்கண்ணையார் அரங்கம்,மாமூலனார் அரங்கம், மாங்குடி மருதனார் அரங்கம், உருத்திரங் கண்ணனார் அரங்கம், நப்பூதனார் அரங்கம்,பிசிராந்தையார் அரங்கம்,கல்லாடனார் அரங்கம், கம்பர் அரங்கம் என்று பெயரிடப்பட்டுக் கட்டுரை படிக்க உரிய இடமாக அமைந்தன.

கட்டுரை படைக்கப்பட்ட காட்சிகள் யாவும் காணொளியில் பதிவு செய்யப்பட்டன.
கட்டுரை படைக்கப்பெற்ற அரங்கு தவிர வளாகங்களில் அமர்ந்து உரையாட நிறைய இடவசதிகள் இருந்ததால் பலரும் வெளியில் அமர்ந்தும் கலந்துரையாடினர்.வளிக்கட்டுப்பாட்டு அறை என்பதால் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தொல்காப்பியர் அரங்கில் பொது அமர்வுகளும்,ஆய்வரங்கத் தொடக்க விழாவும் நடந்தன. ஆய்வரங்கத் தொடக்க விழாவைத் தமிழ் நாட்டு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றினார்.

உலகெங்குமிருந்து வந்திருந்த தமிழறிஞர்கள் பலருடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. கனடாவிலிருந்து வந்திருந்த யோகரத்தினம்(திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்), மில்லர்,மன்னர்மன்னன்(மலேசியா)திண்ணப்பன்(சிங்கப்பூர்),இரத்தின.வேங்கடேசன்(சிங்கப்பூர்),ஆ.இரா.சிவகுமாரன்(சிங்கப்பூர்),மலேசியாவைச்சேர்ந்த பாவலர் சீனி நயினா முகம்மது, திருச்செல்வம், இளந்தமிழ், முத்து நெடுமாறன்,முரசு நெடுமாறன்,நற்குணன்,மதிவரன்,குமரன் உள்ளிட்டவர்களைக் கண்டு உரையாடினேன்.மேலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த திண்ணப்பன் அவர்களுக்கு அவர் ஆய்வு தொடர்பாக உதவும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது.

அமெரிக்காவிலிருந்து வந்த ஆல்பர்ட்டு பெர்னான்டோவையும் இலண்டனிலிருந்து(பி.பி.சி) வந்திருந்த எல்.ஆர் செகதீசன் அவர்களையும்,பிரான்சிலிருந்து வந்த பேராசிரியர் முருகையன், பெஞ்சமின் லெபோ ஆகியோரையும் கண்டு உரையாடினேன்.

நான் பேராசிரியர் கிரிகோரி சோம்சு(ஹாங்காங்) அவர்கள் தலைமையில் தமிழ் மின் அகரமுதலிகள் என்ற தலைப்பில் செம்மொழி மாநாட்டில் கட்டுரை படித்தேன்.தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் இணையம் வளர்ச்சியும்,வாய்ப்பும் என்ற தலைப்பில் பேராசிரியர் கிருட்டினமூர்த்தி அவர்கள் தலைமையில் உரை நிகழ்த்தினேன்.

மேலும் தமிழ் இணைய மாநாட்டில் வலைப்பதிவு,தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துதல் பற்றிய என் பட்டறிவுகளைத் திரு.பத்ரி முன்னிலையில் இரவி, தேனி சுப்பிரமணியுடன் இணைந்து பகிர்ந்து கொண்டேன்.

நிறைவு விழா வரை இருந்து உலகத் தமிழர்களுடன் இணைந்து தமிழாராய்ச்சிப் போக்குகளை அறிந்து வந்தேன்.

வியாழன், 24 ஜூன், 2010

செம்மொழி மாநாடு இரண்டாம் நாள் நிகழ்வுகள்-படங்கள்


மயில்சாமி அண்ணாதுரை,நான்


மயில்சாமி அண்ணாதுரை,நான்,நா.கணேசன்(நாசா விண்வெளி)


நான்,மயில்சாமி அண்ணாதுரை(என் இணையம் கற்போம் நூலுடன்),நாசா.கணேசன்

24.06.2010 செம்மொழி இரண்டாம் நாள் ஆய்வரங்கத் தொடக்கவிழா காலை 9.30மணிக்கு மிகச்சிறப்பாகத் தொடங்கி நடைபெற்றது.ஆய்வரங்கச் சிறப்பு நிகழ்வாகத் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் சிறப்புரையில் தமிழுக்குச் செய்ய வேண்டிய பணிகளைத் தமிழறிஞர்கள் ஆணையிட்டுச் சொன்னால் தமிழக அரசு செய்யக் கடமைப்பட்டிருக்கிறது என்று சொன்னதும் அரங்கில் இருந்த பன்னாட்டுத் தமிழறிஞர்களும் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

பேராசிரியர் கா.சிவத்தம்பி தலைமையில் பன்னாட்டு அறிஞர்கள் வாழ்த்துரைத்தனர்.
12.மணிக்குத் தமிழ் இணைய மாநாடு தொடங்கியது.மருத்துவர் பூங்கோதை அருணா அவர்களின் வரவேற்பும் நடுவண் அமைச்சர் திரு.ஆ.இராசா அவர்களின் சிறப்புரையும் கொண்டு விழா சிறப்பாக நடந்தது.

நான் இணைய மாநாடு தொடங்கும் நேரத்தில் வேறொரு அரங்கில் கட்டுரை படிக்க வேண்டியிருந்தது.சிறிது நேரம் இருந்து விட்டு என் கடமையாற்றச் சென்றேன்.
ஆங்காங்கு நாட்டுப் பேராசிரியரும் மிகச்சிறந்த அகராதியியல் அறிஞருமான கிரிகோரி சோம்சு அவர்கள் தலைமையில் தமிழ் மின் அகரமுதலிகள் என்ற கட்டுரையைக் காட்சி விளக்கத்துடன் வழங்கினேன். கட்டுரையை நாளை இணையத்தில் ஏற்றுவேன்.

அதன் பிறகு பகலுணவுக்குச் சென்றேன்.சிறந்த உணவு ஏற்பாடு.
அதன் பின்னர் நண்பர்கள் சந்திப்பு.ஆய்வரங்க நிகழ்வு உற்றுநோக்கல் என்று நேரம் போனதே தெரியவில்லை. நண்பர் முகுந்து,மயூரன் ஆகியோரைக் கண்டு உரையாடினேன்.

அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களும்,நாசா கணேசனும் தொழில்நுட்பம் சார்ந்த அரங்கில் இருந்தனர்.நா.கணேசன் அவர்கள் மிகச்சிறந்த செய்திகளை அரங்கிற்கு முன்வைத்தார். அமர்வு முடிந்ததும் நான்,மயில்சாமி அண்ணாதுரை,நா.கணேசன் ஆகியோர் உரையாடி மகிழ்ந்தோம்.என் இணையம் கற்போம் நூலை மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வழங்கினேன்.என் இணையப் பணி பற்றி நா.கணேசன் அவர்கள் எடுத்துரைத்தார். நான் மாணவர்களுக்குத் தமிழ் இணையம் பயிற்றுவிப்பதை அறிந்து மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ந்தார்.

பின்னர்த் தமிழ் இணையக் கண்காட்சி அரங்கிற்கு நானும் நண்பர் புகழேந்தியும் வந்தோம்.
அங்கிருந்த தமிழ் விக்கிப்பீடியா ஆர்வலர்களைக் கண்டு உரையாடி அவர்களிடம் இருந்து விடைபெற்று இரவு 9 மணியளவில் தங்கும் விடுதிக்கு வந்தேன்.நேரம் இன்மையால் விரிவாக எழுத முடியவில்லை.நினைவுக்குச் சில படங்களை இணைக்கின்றேன்.


நான்,பேராசிரியர் கிரிகோரி சோம்சு


பேராசிரியர் கிரிகோரி சோம்சு


நானும் சிலம்பொலி ஐயாவும்


முனைவர் ச.வே.சுப்பிரமணியனுடன் நான்


நான்,மயூரன்,முகுந்து



பதிவுலக முன்னோடிகளுடன்



கண்காட்சியைக் காண வரிசையில் காத்து நிற்கும் மக்கள்



பதிவுலக நண்பர்களுடன்(இணையக் கண்காட்சி அரங்கில்)

செவ்வாய், 22 ஜூன், 2010

கோவை செம்மொழி மாநாட்டில் நான்...

கோவை செம்மொழி மாநாட்டிற்குக் கட்டுரை உருவாக்கும் பணியில் மூன்று மாதத்துக்கு முன்பே ஈடுபட்டேன்.இடையில் வேறு பல பணிகளும் இடையிட்டதால் நேற்றுவரை கட்டுரைக்குரிய காட்சி விளக்கம் தயாரிப்பில் முனைப்பு காட்டினேன்.பன்னாட்டு அளவில் அறிஞர்பெருமக்கள் வருவதால் என்னளவில் தரமுடன் கட்டுரை உருவாக்கும் எண்ணம் இயல்பாகவே தழைத்திருந்தது.

செம்மொழி மாநாட்டில் 24.06.2010 பகல் 12.00 - 1.30 மணிக்கு நடைபெறும் மாசாத்தியார் அரங்கில் திரு.கிரிகோரி சேம்சு அவர்கள் தலைமையில் தமிழ் மின் அகரமுதலிகள் என்ற தலைப்பில் கட்டுரை படிக்கிறேன்.

மேலும் அன்றே தமிழ் இணைய மாநாட்டிலும் கட்டுரை படிக்கும் வாய்ப்பு அமைகிறது. அதாவது 24.06.2010 பிற்பகல் முரசொலி மாறன் அரங்குவலைப்பதிவர் நிகழ்வுகளில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, (பிரான்சு )அவர்களின் தலைமையில் 2:16-2:45 மணிக்குத் தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் கட்டுரை படிக்கின்றேன்.என் இரு உரைகளும் தமிழ் இணையம் சார்ந்து இருப்பதால் தக்கவாறு காட்சி விளக்கத்துடன்(பவர் பாயிண்டு) படைக்க அணியமாயுள்ளேன்.

மேலும் 26.06.2010 மாலை 5.00-6.30 மணிக்கு யாழன் சண்முகலிங்கம் அரங்கில் பத்ரி முன்னிலையில் வலைப்பூக்கள், விக்கிப்பீடியா பற்றிய கலந்துரையாடலில் கலந்துகொள்கிறேன்.

இதன்பொருட்டு யான் கோவை செல்ல முடிவெடுத்து, அரசிடம் தகவல் தெரிவித்துவிட்டு, அயல்நாட்டு நண்பர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பாக முதல்நாள் அதாவது (21.06.2010) புதுச்சேரியில் இரவு பேருந்தில் ஏறினேன்.புதுச்சேரியில் இன்று நல்ல மழை இடியுடன் பெய்ததால் பேருந்தைப் பிடிக்க இயலுமா என்ற ஓர் அச்சம இருந்தது.ஆனால் முன்பதிவு செய்திருந்ததால் இனிய செலவு. தூங்கியபடியே செலவு. 22.06.2010 காலை 7 மணிக்குக் கோவை வந்தேன்.எனக்குரிய விடுதியில் தங்கினேன்.அதற்குள் நண்பர் காசி அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு என் செலவு பற்றி வினவினார்.அவர் அலுவலகம் செல்லும் வழியில் நான் தங்கியுள்ள விடுதி இருந்ததால் அறையில் வந்து கண்டு உரையாடினார்.

உணவுக்குப் பிறகு கனடாவிலிருந்து வந்திருந்த திரு. யோகரத்தினம் அம்மா அவர்களைக் காணும் ஆவலில் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றேன்.அவர்கள் சற்று உடல்நலம் இல்லாமல் இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவரின் அறிவுரை பெற்றுத் திரும்பினேன். அதற்குள் திரு.பாலா பிள்ளை(மலேசியா) மதுரையிலிருந்து கோவைக்கு வரும் செய்தியைச் சொன்னார்கள். பிரான்சிலிருந்து என் மூத்த நண்பர் திரு.விசயரங்கன் அவர்கள், அவர்களின் குடும்ப நண்பர் திரு.முருகையனும்,பெஞ்சமின் லெபோவும் கோவை வந்துள்ள செய்தியைச் சொல்லி என்னைச் சந்திக்கும்படி அறிவுறுத்தினார்.

கோவை மாநாட்டையொட்டித் திருக்குறள் ஒலிப்பதிப்பு செய்த திரு.மதன் அவர்கள் தம் குழுவினருடன் வந்து சந்தித்தார்.அவர்களிடம் விடைபெற்று என் அறைக்கு வந்து பகல் உணவு உண்ணும்பொழுது மணி 3.45 இருக்கும்.உத்தமம் அமைப்பின் செயல் இயக்குநர் திரு.மணியம் அவர்களிடம் நான் கோவை வந்த செய்தியையும் கட்டுரை படிக்க அணியமாக உள்ளதையும் கூறினேன்.மகிழ்ந்தார்.

மலேசியாவிலிருந்து வருகை தரும் திரு.மாரியப்பனார் உள்ளிட்ட தமிழ்நெறிக்கழக அமைப்பினரை வரவேற்கவும் அவர்களைத் தங்க வைக்கவும் காத்துள்ளேன்.இரவு மாநாட்டுப் பந்தலைப் பார்வையிட்டு மகிழ உள்ளளேன்.மாநாட்டு ஏற்பாடுகள் மிகச்சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடந்துவருகின்றன.

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்கிற பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது(07.01.2010 மாலைமலர்). தமிழ் அறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள் எல்லாம் விழிப்புற வேண்டிய காலகட்டம் இது.

மேடைகளிலும், அச்சிலும் பரவுவதற்கு முன்பே இணையத்தில் இது தொடர்பான விவாதங்கள் வேகமாக உலவி வருகின்றன. இணையம் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவுவதால் சென்னை,பெசண்டு நகரில் நடப்பதைக் கோடம்பாக்கத்தில் இருப்பவர்கள் அறிவதற்கு முன்பே உலகத் தமிழர்கள் தெரிந்துகொள்கின்றனர்.

'வடவேங்கடம் தென்குமரி' எல்லை கடந்து தமிழும், தமிழர்களும் உலகெங்கும் பரவியிருப்பதால் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும் தமிழ் பற்றி இனி முடிவு செய்யமுடியாது. அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருப்பவர்களையும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

தமிழகத்தில் ஒரு கருத்துப்பொறி வெளிப்படுவதற்கு முன்பே இணையத்தில் தமிழர்கள் கருத்துச் சொல்லத் தொடங்கிவிடுகின்றனர். அவ்வகையில் தமிழக அரசு நடத்த உள்ள தமிழ்ச்செம்மொழி, தமிழ் இணைய மாநாடு பற்றி இணையத்தில் பலரும் பலவகையில் உரையாடி வருகின்றனர். அதில் ஒன்று தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய உரையாடலாகும்.

தமிழ் எழுத்துகள் காலந்தோறும் மாறி வந்துள்ளன என்பது வரலாறு. பானை ஓடுகள், நாணயங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், பனை ஓலைகள், அச்சு, கணிப்பொறி என்று பயன்பாட்டுப் பொருளுக்கு ஏற்பத் தமிழ் எழுத்துகள் வரிவடிவ வேறுபாட்டுடன் எழுதப்பட்டு வருகின்றன. தொல்காப்பியர், வீரமாமுனிவர், பெரியார் காலத்தில் தமிழ் எழுத்துகள் தேவை கருதி வடிவ மாற்றங்களைச் சந்தித்துள்ளன.

பழைமைக்குப் பழைமையாக விளங்கும் தமிழ் புதுமைகளை ஏற்றுக்கொள்ளும் மொழியாகவும் விளங்குகிறது. கல்வெட்டில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள் கணிப்பொறி வந்த பிறகு எந்த வகையான இடையூறும் இன்றி அதில் பயன்பாட்டுக்கு வந்தது. கணிப்பொறி அறிமுகமான சூழலில் தமிழார்வம் உடைய பொறியாளர்கள் சிலர் கணிப்பொறிக்கு ஏற்பத் தமிழ் எழுத்து வடிவங்களை மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். ஆனால் அறிஞர் வ.சுப.மாணிக்கம் போன்றவர்கள் இதனை எதிர்த்தனர்.

தமிழ் எழுத்தைத் திருத்த வேண்டும் என்பவர்கள், தந்தை பெரியார் திருத்தி எழுதியதை முன்னுதாரணமா கக் காட்டுகின்றனர். பெரியார் ண,ல,ள,ற,ன என்ற ஐந்து எழுத்துகளும் ஆ,ஐ.ஒ,ஓ, என்னும் நான்கு எழுத்துகளுடன் இணைந்த(ணா,ணை,ணொ,ணோ,லை, ளை,றா, றொ,றோ,னா,னை,னொ,னோ என்று ) 13 எழுத்து வடிவங்களைச் சீர்மைப்படுத்தினார். இது சீர்மைப்படுத்தம் ஆகும். முன்பே பெரியார் எழுத்துத் திருத்தம் தேவை என்று வலியுறுத்தியதுடன் அதனை 1935 முதல் தம் விடுதலை ஏட்டில் நடைமுறைப்படுத்தினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு 1978 இல் தமிழ்நாட்டு அரசு தந்தைபெரியாரின் வடிவ மாற்றத்தினை ஏற்றுக்கொண்டு அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஓர் ஆணையிட்டது.

அதன் பிறகு எந்த மாற்றமும் வேண்டாம் என்பது தமிழறிஞர்களின் நிலைப்பாடாக இருந்துவருகிறது. ஆனால் சில அறிஞர்கள் இ,ஈ,உ,ஊ எழுத்துகளில் மாற்றம் வேண்டும் எனவும் அவ்வாறு மாற்றினால் 4 x 18 = 72 எழுத்துகளில் சீர்மை காணப்படும் எனவும் வாதிடுகின்றனர். ஆனால், இதைச் சீர்மை என ஏற்றுக்கொள்ள முடியாது. இது முற்றாக மாற்றம் ஆகும். இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.நாம் எழுதும் சொற்களில் இவ்வகை எழுத்துகள்தான் (அதாவது கி,கீ,மு,மூ) அதிகம் புழங்குகின்றன. இவ்வாறு வரும் 72 எழுத்துகளைப் புதிய குறியீடுகளால் எழுதத் தொடங்கினால் கற்றவர்களால் தமிழைப் படிப்பதே இயலாததாகிவிடும். புதியவர்கள் எப்படித் தமிழ் கற்பார்கள்?ஆகவே, சீர்மைக்கும் மாற்றத்திற்கும் அறிஞர்கள் வேறுபாடு உணர வேண்டும்.

இவ்வாறு முப்பதாண்டுக் காலம் எழுத்துத்திருத்தம் வலியுறுத்திவரும் அறிஞர்கள் எதிர்வரும் செம்மொழி மாநாட்டில் தங்கள் விருப்பத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கின்றனர். இவர்களை உலகெங்கும் பரவி வாழும் தமிழறிஞர்களில் பெரும் பிரிவினர் இணையம் வழியாகக் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொருவரும் தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் என்ற போர்வையில் திருத்த முனைந்தால் தமிழ்மொழியின் அமைப்பு கட்டுக்குலையத் தொடங்கும் எனவும் இத்தகு செயலால் இதுவரை அச்சான நூல்களைப் படிப்பதில் மிகப்பெரிய சிக்கல் எழும் என்கிற கருத்து வலியுறுத்தப்படுகிறது. எளிமைப்படுத்த என்று முனைந்து தமிழ் வளர்ச்சிக்கு இடையூறு செய்துவிடக்கூடாது என்கிற நியாயமான அச்சத்தையும் பல அறிஞர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சீன, சப்பான் மொழிகள் சிக்கலான குறியீடுகளையும் அதிக எண்ணிக்கையிலான எழுத்துக்களையும் கொண்டுள்ளன. அவர்கள் இதுபோன்ற திருத்த வேலைகளில் ஈடுபடாமல் உலகில் வெளிவரும் அறிவு நூல்களை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வகையிலும் மொழிபெயர்க்கப்பட்டவற்றை மக்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் வகையிலும் செயல்படுகின்றனர். தாய்மொழிவழிக் கல்விக்கு அங்கெல்லாம் முதன்மையிடம்தான். ஆனால் இங்கு அந்த நிலையில்லை.

பெரும்பாலான தமிழறிஞர்கள் கணிப்பொறி நுட்பம் அறியாதவர்களாக இவ்வளவு காலமும் இருந்ததால் கணிப்பொறிக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்கிற முழக்கம் முன்பு காதுகொடுத்துக் கேட்கப்பட்டது. இம்முழக்கம் இப்பொழுது வலுவிழந்துவிட்டது. ஏனெனில் தமிழறிஞர்கள் இப்பொழுது மடிக்கணினியுடன் வலம்வரத் தொடங்கிவிட்டனர். மதுரையில் அமர்ந்தபடி ஒரு பேராசிரியர் அமெரிக்காவில் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளருக்குச் சிலப்பதிகாரம் நடத்தும் அளவிற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். எனவே தமிழ் எழுத்துத் திருத்தம் என்றவுடன் இது கணிப்பொறி தெரிந்தவர்கள் எடுக்க வேண்டிய முடிவு என்கிற காலம் மலையேறிவிட்டது. தமிழும்,மொழியியலும், கணினியும், இணையமும் அறிந்த தமிழ்ப்பேராசிரியர்களைக் கேட்டு எடுக்க வேண்டிய முடிவாகிவிட்டது.

கனடா நாட்டில் வாழும் அறிஞர் ஈழத்துப்பூராடனார்(அகவை 82) முதன்முதலாகக் கணிப்பொறி கொண்டு அச்சிட்டு நூல் வெளியிட்டவர் (1984).அவர் நூற்றுக்கணக்கான நூல்களைப் பழைய எழுத்து முறையிலேயே இன்றும் வெளியிட்டு வருகிறார்.இனியும் தொடர்ந்து வெளியிட உள்ளதாகவும் எழுத்துச் சீர்திருத்தத்தால் அச்சிடும் இடம்,தாளின் அளவு,செலவு அதிகரிக்குமே தவிர வேறொரு பயனும் இல்லை என்கிறார். பிற நாடுகளில் நூலகங்களில் உள்ள நூல்களைப் படிக்க ஆள் இல்லாமல் போவார்கள் என்று குறிப்பிடும் அவர் இன்று கல்வெட்டுகளை,ஓலைச்சுவடிகளைப் படிக்க ஆள் தேடுவதுபோல் எதிர்காலத்தில் தமிழ் நூல் படிப்புக்கு ஆள்தேடும் நிலையைத் தமிழுக்குப் புதிய எழுத்துச்சீர்திருத்தம் உண்டாக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்.

எழுத்துத் திருத்தத்தில் கவனம் செலுத்துவதற்கு மாறாக நம் இணையப்படைப்புகள் உலகம் முழுவதும் செல்வதால் அதற்கேற்ற ஒருங்குகுறியில்(யுனிகோடு)கவனம் செலுத்த வேண்டும். தரப்படுத்தப்பட்ட எழுத்துகளில் இணையத்தில் இருக்கும் படைப்புகள் யாவும் ஒருங்குகுறிக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். குறிப்பாகத் தமிழர்களின் பொதுச்சொத்தான தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளம் முதலில் ஒருங்குகுறிக்கு மாறவேண்டும். அதனை அடுத்துத் தமிழக அரசின் தளம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தளம் யாவும் உடனடியாக ஒருங்குகுறிக்கு மாற வேண்டும்.

ஏழாண்டுகளாக(2003) ஒருங்கு குறி பயன்பாட்டுக்கு வந்து உலகெங்கும் இவ்வகை எழுத்துகள் பயன்பாட்டில் இருப்பதைப் புறக்கணிக்கக்கூடாது. தரப்படுத்தப்பட்ட எழுத்துகள் ஒருங்குகுறிக்கு மாற்றுவதற்கு ஆகும் காலம் மிகவும் குறைவாகும். செலவு இல்லை என்றே சொல்லலாம். அரசும் அனைத்துத் துறையினரும் தமிழ் ஒருங்குகுறி எழுத்தில்தான் அச்சிட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் தமிழ் வளங்கள் உலகம் முழுவதும் பரவும்.எனவே உலகத் தமிழர்களுக்கு இனிப்பான செய்தி தர அரசு நினைத்தால் ஒருங்குகுறியை ஏற்று அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும்.

தமிழகத்தில் புற்றீசல் போல ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகிவிட்டன. அனைத்துப் பிள்ளைகளும் ஆங்கில நூல்களைப் படிக்கின்றனர். அவ்வாறு இருக்கத் தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.அதனையும் இல்லாமல் செய்யும் நிலைக்கு எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்துவிடும் எனத் தமிழ்ப்புலவர்கள் அஞ்சுகின்றனர்.எனவே எழுத்துத்திருத்தம் பற்றி இனி யோசிக்கத் தேவையில்லை. எழுதப்பட்டுள்ள நூல்களைப் படிக்க தமிழ்வழிப் பள்ளிகளை அரசு நடத்த வேண்டும் என்பதும் தமிழ்வழிக் கல்விக்கு அரசு ஆணையிடவேண்டும் என்பதும் உலகச்செம்மொழி மாநாட்டின் குறிக்கோளாகவும் அறிவிப்பாகவும் இருக்க வேண்டும் என்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்னும் பழைய எழுத்துவடிவில் எழுதுவதையே வழக்கமாகவும்,வசதியாகவும் நினைக்கும் தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்று கூறி இப்பேச்சுக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் எழுத்துச்சீர்திருத்தம் தொடர்பிலான பாடம்

நனி நன்றி: தமிழ்ஓசைநாளிதழ்,சென்னைப் பதிப்பு(31.01.2010)

1.அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் பேச்சு

2.எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப்போக்கு,கனடாவில் வாழும் பேராசிரியர் செல்வா கட்டுரை இங்கே

3.தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத்துச்சீர்திருத்தம் பற்றி இங்கே

2திரு.இரவியின் கட்டுரை இங்கே

4.மலேசியா திரு.சுப.நற்குணன் கட்டுரை இங்கே

5.தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய கட்டுரையறிய
எழுத்து மாற்ற வரலாறு என்ற பகுதியைப் பார்க்கவும்

6.திருவாளர் பெரியண்ணன் சந்திரசேகரன் அவர்களின் அரிய கட்டுரை

7.கணியத்தமிழ் நிறுவனம் வா.செ.கு எழுத்துருக்கான அறிவிப்பு

புதன், 9 டிசம்பர், 2009

கோவை உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டு இணையத்தளம் தொடக்கம்...

கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சூன் 23-27 இல் நடைபெற உள்ளது.இம்மாநாட்டு விவரங்களை அறியவும்,பேராளர்கள் ஆய்வுக்கட்டுரை வழங்கவும் உதவும் வகையில் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டுக்குப் புதிய இணையத்தளம் இன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கண்டு மகிழ இங்கே அழுத்துக.