நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 25 நவம்பர், 2009

உலகக் கணினித்தமிழ்க் கருத்தரங்கம்,தமிழ்மொழித்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறை வருகிற 2010 பிப்ரவரி 24 முதல் 26 வரை மூன்று நாட்கள் கணினித்தமிழ் பற்றிய ஒரு ஆய்வுக் கருத்தரங்கை (International Semionar on Tamil Computing) நடத்தவுள்ளது.

தமிழ்மொழித்துறை கடந்த 10 ஆண்டுகளாகக் கணினித் தமிழில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. துறையில் மொழியியல் ஆய்வுப் பிரிவு(Linguistic Studies Unit) ஒன்று நிறுவப்பட்டுள்ளது. செயற்பாட்டு மொழியியல் ( Applied Linguistics) மற்றும் கணினிமொழியியலில் ( Computational Linguistics) முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம் ஆகியவற்றிற்கான படிப்பை நடத்திவருகிறது. 15 -க்கும் மேற்பட்ட கணினி மொழியியல் துறையில் பட்டம் பெற்ற மாணவர்கள் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டுவருகிறார்கள். தமிழ் முதுகலைப் பட்ட மாணவர்களுக்கும் கணினித் தமிழ்ப் பாடத்தை நடத்திவருகிறது.

ஒரு சிறந்த கணினிமொழியியல் ஆய்வுக்கூடம் ( Computer Assisted Language Technology Lab) அமைக்கப்பட்டுள்ளது. கணினிமொழியியல் மற்றும் மொழித்தொழில்நுட்பம் சம்பந்தமாக ஏராளமான நூல்களைக்கொண்ட ஒரு நூலகம் உள்ளது. மின்னகராதி ( E-Dictionary) , உருபன் பகுப்பி ( Morphological Parser), தொடர் பகுப்பி ( Syntactic Parser) , கணினிவழித் தமிழ் பயிற்றல் போன்ற பல கணினித் தமிழ் மென்பொருள்களை உருவாக்கியுள்ளது.

இதுவரை மூன்று தேசிய அளவிலான கணினித்தமிழ்க் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது நடைபெற இருப்பது நான்காவது கருத்தரங்கு ஆகும். 2010 சூன் இறுதியில் தமிழக அரசின் துணையுடன் உத்தமம் நடத்த உள்ள உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்குச் சிறப்புசேர்க்கும் வகையில் இக்கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

கணினித் தமிழ் ஆய்வில் மட்டுமல்லாமல், கணினிமொழியியல் மற்றும் மொழித்தொழில் நுட்பத் துறையில் ஈடுபட்டுவரும் ஆய்வாளர்களும் கட்டுரை அனுப்பலாம். பதிவுக்கட்டணம் கிடையாது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகள், பிற நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆய்வாளர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழக விதிப்படி பயணப்படி, நாட்படி வழங்கப்படும். பிற ஆய்வாளர்களுக்கும் நிதிவசதிக்கேற்ப பயணப்படி வழங்கப்படலாம். வெளிநாடுகளில் இருந்து பங்கேற்க வரும் ஆய்வாளர்களுக்கு விடுதி, உணவு போன்ற உள்ளூர் தங்கும் வசதிகள் செய்து தரப்படும்.

பங்கேற்க விரும்பும் அயல்நாட்டு அன்பர்கள் டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் தங்கள் பங்கேற்பு பற்றி விவரம் அளித்தால், பிற ஏற்பாடுகளுக்கு உதவியாக அமையும். ஆய்வுக்கட்டுரை சுருக்கம் அளிக்க கடைசி நாள் 2009, திசம்பர் 15. முழுக்கட்டுரையையும் அனுப்ப இறுதி நாள் சனவரி 15.

தொடர்புக்கு:
முனைவர் ந. தெய்வ சுந்தரம்
பேராசிரியர் & தலைவர், தமிழ்மொழித்துறை
இயக்குநர், மொழியியல் ஆய்வுப்பிரிவு
சென்னைப் பல்கலைக்கழகம்
மெரினா வளாகம்
சென்னை 600 005
tamilcomput.seminar2010@gmail.com
ndsundaram@hotmail.com

நன்றி: பேராசிரியரின் மின்மடல்

கருத்துகள் இல்லை: