நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 12 நவம்பர், 2009

தோட்டக்கலை அறிஞர் ச.சம்பந்தமூர்த்தி அவர்கள்


முனைவர் ச.சம்பந்தமூர்த்தி

தோட்டக்கலை அறிஞர் ச.சம்பந்தமூர்த்தி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் 1936 அக்டோபர் 11 இல் பிறந்தவர். பெற்றோர் ந.சதாசிவம், சானகி அம்மாள். தொடக்கக் கல்வியைப் பொன்பரப்பியில் முடித்த இவர் பெண்ணாடத்தில் உயர்நிலைக்கல்வி பயின்றவர். திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரியில் இடைநிலை வகுப்பு(இண்டர்மீடியட்) முடித்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலையில் முதுநிலை வரை பயின்றவர். தம் பணிக்காலத்தில் முனைவர் பட்ட ஆய்வைக் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செய்தவர். ”நில சம்பங்கியில் சடுதி மாற்றம்” என்பது இவர்தம் ஆய்வுத்தலைப்பாகும். 38 ஆண்டுகள் தோட்டக்கலைத்துறையில் பணிபுரிந்த பட்டறிவு உடையவர். தோட்டக்கலைக் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

பல முறை வெளிநாடுகளுக்கு ஆய்வின் பொருட்டு சென்று வந்த பட்டறிவு உடையவர். அவ்வகையில் செர்மனி, இங்கிலாந்து, ஆத்திரேலியா, இசுரேல், இத்தாலி, ஆலந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வரைந்தவர். வீட்டினுள் தோட்டம், உடல் நலம் உங்கள் கையில் என்ற தலைப்பில் இரு நூல்கள் வெளிவந்துள்ளன.

உடல் நலம் உங்கள் கையில் நூல் முகப்பு

இந்தியாவின் மிகப்பெரிய உரோசாத் தோட்டமான உதகை உரோசாத் தோட்டத்தை உருவாக்கியவர்.

ஆறு மாதத்தில் காய்க்கக்கூடிய செடிமுருங்கை (பெரியகுளம்1) என்ற இரகத்தை உருவாக்கியவர். இதன் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், ஒரிசா உள்ளிட்ட மாநில உழவர்கள் இந்த இரகத்தைப் பயன்படுத்திப் பயன்பெற்றுள்ளனர்.

ஒட்டுப்புளி (பெரியகுளம் 1) என்னும் புளி இரகத்தை உருவாக்கியவர். இது நான்காண்டுகளுக்குள் காய்ப்புக்கு வந்துவிடும்.


மலரியல் துறை, மூலிகைப் பயிர்த் துறையில் நல்ல ஈடுபாடு உடையவர்.
மலர்களிலிருந்து வாசனைப் பொருள் தயாரிக்கும் தொழில் பெருகுவதற்குப் பெரிதும் உதவி செய்தவர்.

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியின் உருவாக்கத்திற்கு இவரின் பங்களிப்பு மிகுதி. மக்கள் தொலைக்காட்சியில் வேளாண் நிகழ்ச்சிகளை இரண்டாண்டுகளுக்கும் மேலாகப் பொறுப்பாளராக இருந்து நடத்தியவர்.

விவசாய முன்னேற்றத்திற்காக அமைக்கப்பெற்ற அரசின் பல்வேறு மேல்நிலைக் குழுக்களில் இடம்பெற்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கியவர்.

பயிற்றுவித்தலிலும் ஆய்விலும் பணிக்காலத்தில் சிறப்புற்று விளங்கிய ச.சம்பந்தமூர்த்தி அவர்கள் தற்பொழுது புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.

முனைவர் ச.சம்பந்தமூர்த்தி
40,நான்காவது குறுக்குச்சாலை,
இரண்டாம் முதன்மைத்தெரு,
மூகாம்பிகை நகர்,
புதுச்சேரி-605 004
செல்பேசி: 9443254543

கருத்துகள் இல்லை: