நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 6 நவம்பர், 2009

அந்தமான் வந்துசேர்ந்தோம்!

அந்தமான் தமிழர் சங்கமும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா, கருத்தரங்கில் கலந்துகொள்ள அரசின் இசைவு பெற்று நான் 05.11.2009 மாலை 4.30 மணிக்குப் புதுச்சேரியில் புறப்பட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வந்த மூடுந்தில் முன்னேற்பாட்டின்படி இணைந்துகொண்டேன். இரவு சென்னை வந்து அனைவரும் விடுதியில் தங்கியிருந்தோம்.

06.11.09 நள்ளிரவு 1.50 மணிக்குப் புறப்பட்டு 2.30 மணிக்கு வானூர்தி நிலையம் வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்பாக ஐயா குமரி அனந்தன் அவர்கள் வானூர்தி நிலையத்தில் இருந்தார்.அவரிடம் அனைவரும் அறிமுகமானோம்.

பின்னர் பேராசிரியர் உலகநாயகி பழனி அவர்கள் எங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்கள். அதே நேரத்தில் வி.ஜி.பி. நிறுவனங்களின் அண்ணாச்சி திரு.சந்தோசம் அவர்கள் வந்து அன்பொழுக அனைவரையும் வரவேற்றார். அங்கு நினைவுக்காக அண்ணாச்சி அவர்களுடன் சில படங்களை எடுத்துக்கொண்டோம்.

எங்கள் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.நான் மடிக்கணினி எடுத்து வந்த்தால் அதனைக் கையில் கொண்டுபோக நினைத்தேன். மடிக்கணினி கையில் எடுத்துச் செல்ல இசைவு உண்டு என்பதால் பாதுகாப்பாகக் கையில் எடுத்துச் சென்றேன்.

வானூர்தி நிலையத்தின் உள்ளே முனைவர் ஔவை. நடராசனார் அவர்கள் தேனொழுகும் குரலில் உரையாடியபடி இருந்தார்கள். என்னை அறிமுகம் செய்துகொண்டேன். புதுச்சேரிதானே என்று அன்பொழுக வினவினார்கள்.

எங்கள் அருமை நண்பர் கண்ணன் நடராசன் அவர்கள்(மின்தமிழ் நட்பினர்)நேற்று ஐயா நடராசனாரிடம் பேசும்பொழுது என் பணிகளை நினைவுகூர்ந்ததாகத் துணைவேந்தர் அவர்கள் சொன்னார்கள். என் அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் நூல்கள் பற்றி பேச்சு எழுந்தது. துணைவேந்தர் அவர்கள் ஊக்கமூட்டிப் பாராட்டினார்கள். ஔவை துரைசாமியார் பற்றி நான் முன்பே என் வலைப்பூவில் எழுதிய செய்தியைச் சொன்னதும் மிக மகிழ்ந்தார்கள்.

எங்கள் பொருள்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, செலவுச்சீட்டுப் பெற்றுக்கொண்டு, உண்டிச்சீட்டு உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொண்டு “கிங்பிசர்” வானூர்தியில் வைகறை 4.30 மணிக்கு ஏறி அமர்ந்தோம். சரியாக 4.45 மணிக்கு வானூர்தி புறப்பட்டது. 1937 கி.மீட்டர் தூரம் உடைய அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயர் சென்று சேர இரண்டு மணி நேரம் ஆகும் என்ற அறிவிப்பு கண்டோம்.

பலர் வானூர்தியில் புதிய பயணம் மேற்கொள்பவர்கள் என்பதால் அச்சத்துடன் காணப்பட்டனர். வானூர்தி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அசைந்தாடி எழுந்து மேலே பறந்த அரைமணி நேரத்தில் சிற்றுண்டி வழங்கினார்கள். அனைவரும் உண்டு மகிழ்ந்தோம். புலர்காலைப் பொழுது என்பதால் முகிற் கூட்டங்களைக் கண்டபடியும், உரையாடியபடியும், ஒருவரை ஒருவர் படம் எடுத்தபடியும் வந்தனர். அகவை முதிர்ந்த சில பேராளர்கள் கண்ணயர்ந்தனர். காலை 6.45 மணிக்குப் போர்ட் பிளேயர் அடைந்தோம்.

10700 மீட்டர் உயரத்தில் எங்கள் வானூர்தி பறந்தது. திரு.வெங்கட் என்ற வானோடி எங்கள் வானூர்தியின் வலவராக விளங்கினார். இனிதே அவர் வானூர்தியை ஓட்டினார்.

எங்கள் கருத்தரங்கப் பயணத்த்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சுப்பிரமணியன், அரங்க.பாரி, கல்பனா சேக்கிழார், கணேசன் (மொழியியல் துறைப் பேராசிரியர்) ஞானகுரு, தனி அலுவலர் சண்முகசுந்தரம், இராசா உள்ளிட்டவர்கள் வந்தனர். கடலூர்ப் பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார் அவர்கள் என் அருகில் அமர்ந்து உரையாடித் தம் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார். பணிப்பெண்கள் அன்புடன் உணவளித்துப் போற்றினர்.

வானூர்தி தனியார் என்பதால் நன்கு பராமரிக்கப்படுகிறது. இனீய எதிர்பார்ப்புகளுடன் போர்ட்பிளேயர் வந்து, உண்டு ஓய்வுற்று, செல்லுலர் சிறைச்சாலையைப் பார்வையிடச் செல்கிறோம். சிறைச்சாலை என்றதும் என் அண்ணன் அறிவுமதி அவர்கள் அந்தப் படப் பாடல், உரையாடல் எழுதிய காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. அந்தப் பாடல்களுக்கு உரிய பொருள் சொன்னதும் அந்த நினைவுகளை மாணவர்களுக்குச் சொல்லி நான் வகுப்பெடுத்ததும் நினைவுக்கு வருகின்றன.

அலைபுரளும் கடலுக்கு நடுவிலிருந்து மீண்டும் எழுதுவேன்.

கருத்துகள் இல்லை: