நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

பெரியநற்குணம் நினைவுகள்...

சேத்தியாத்தோப்புக்கு மேற்கே வெள்ளாற்றங்கரையை ஒட்டிய ஊர் பெரியநற்குணம்.என் அம்மா பிறந்த ஊர்.என் தந்தையாருடன் பிறந்த அத்தையை அந்த ஊரில் கொடுத்திருந்தனர்.என் மாமா பெயர் திரு.வை.சாமியப்பா. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியில் இருந்தவர்.மேலதிகாரிக்குக் கீழ்ப்படியாத காரணத்தால் பணி இழந்தவர்.அந்த நாளின் செல்வச் செழிப்பில் வேலை இழப்பைப் பொருட்படுத்தாமல் இருந்தார்.

நெய்வேலி நிலகரி எடுப்பால் அப்பகுதியில் நிலத்தடி நீர் வற்றியதால் தானாகப் பீறிட்டு வந்த ஆர்ட்டீசியன் ஊற்றுகள் நின்றன.நிலத்தடி நீர் கீழே சென்றது.வேளாண்மை பொய்த்தது. குடும்ப நிலை பின்னாளில் இறங்குமுகமானது.அந்தப் பணியில் நீடித்திருந்தால் மிக உயர்நிலைக்கு வந்திருக்கலாமே என நாற்பதாண்டுகளாக ஊராரும் உறவினரும் அவரைக் கீழாகப் புறம் பேசி வருகின்றனர். அவற்றையெல்லாம் அவர் அடிக்கடி ஏற்றுக்கொண்டு விடைசொல்வார்.

அவர் தங்கையைத்தான் என் அப்பாவுக்குக் கொடுத்தனர்.சுருங்கச்சொன்னால் பெண்கொடுத்துப் பெண் கட்டிக்கொண்டனர்.எங்கள் வீடும் நல்ல வளமான செல்வவளம் கொண்டிருந்தது.என் தந்தையார் தங்கையர்களை மணம் முடித்தபிறகு தனித்து இருந்தார்.அவர் செல்வம் வீணாவதைக் கண்ட என் தாய்வழிப்பாட்டனார் திரு.வையாபுரி அவர்கள் குடும்ப ஒற்றுமை கருதி பெண்கொடுத்தார்.கடைசிக் காலம் வரை எங்கள் தாத்தா ஆடாகவும் மாடாகவும், கருவாடாகவும், வீராணத்து ஏரி கெண்டை மீனாகவும் கொடுத்தும் எங்கள் குடும்பம் முன்னேற்றம் காணவில்லை. உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட நில வழக்குக் காரணமாக மிகத்தாழ்ந்த நிலைக்குச் சென்றது.எங்கள் தாத்தா ஒவ்வொரு புதன் கிழமையும் சேத்தியாத்தோப்பு சந்தையில் வேண்டிய பொருள்களை வாங்கிக்கொண்டு எங்கள் வீடு வந்துவிடுவார்.அந்த அளவு மகள்மீது பாசம்.


முதல் குழந்தை தாய்வீட்டில் பிறப்பது வழக்கம் என்ற அடிப்படையில் பெரியநற்குணத்தில் பிறந்த என் அம்மாவுக்கு அவர்களின் பாசம் நிறைந்த பெற்றோர் சேத்தியாத்தோப்பில் இருந்த மருத்துவர் பழனி அவர்களின் மருத்துவமனையில் மகப்பேற்றுக்காகச் சேர்த்தனர்.நான் 11.02.1967 இல் சனிக்கிழமை காலை பிறந்தேன்.மிகவும் சிறப்பாக என்னை வளர்த்தனர்.

திருமணம் ஆகிப் பல ஆண்டுகள் என் தாயாருக்கு மகப்பேறு இல்லையாம்.ஒரு சித்தர் வழங்கிய தழை, செடி, கொடிகளை,மருந்துகளை உண்டதால் நான் பிறந்ததாகச் சொல்வார்கள்.இவ்வாறு பிறந்த நான் எங்கள் தாத்தா பாட்டியால் சிறப்பாக வளர்க்கப் பெற்றேன். ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் இளம் அகவையில் பெரியநற்குணம் செல்வது வழக்கம்.எங்கள் தாத்தா வீட்டில் கரும்பும்,நெல்லும் மிகுதி. திருச்சிராப்பள்ளிக்குச் சருக்கரை,வெல்லம் விற்கச் செல்லும் எங்கள் சிறிய மாமா திரு.வை.மணிவேல் ஒரு சாக்கில் பணத்தைக் கட்டிக்கொண்டு வருவாராம்.எனக்கு முதலில் சட்டை எடுப்பதுதான் முதல் செலவாம்.

பெரியநற்குணத்தில் நான் வளர்ந்ததற்குப் பல தடயங்கள் இன்றும் என் உடலில் உண்டு. நடக்கும் சிறுவனாக இருந்த பொழுது அங்கிருந்த நீர் அடிக்கும் குழாயில் வலக்கையை விட்டு ஆள்காட்டி விரல் நசுங்கிவிட்டது.அந்த விரல்கொண்டுதான் இன்றும் எழுதுகிறேன்.அதுபோல் எங்கள் பெரியப்பா ஒருவரின் வீடு வீராணம் ஏரிக்கரையில் உள்ளது.இந்த ஊர்ப்பெயர் கூளாப்பாடி என்பது.ஒரு கோடை விடுமுறையில் சென்றது 38 ஆண்டுகளைக் கடந்தாலும் நிழலாக நினைவில் உள்ளது.

கோடைக்கால விருந்து முடிந்து எங்கள் பெரியப்பா என்னை மிதிவண்டியில் பெரியநற்குணத்துக்குப் பகல் உணவுக்குப் பிறகு அழைத்து வந்தார்.மிகச்சிறிய சிறுவனான நான் வீராணம் ஏரியின் அழகை அன்று சுவைத்தபடியே பெரியப்பா பேசிய பேச்சுகளைக் கேட்டபடி வந்தேன்.கதை கடைசியில் தூக்கத்தில் கொண்டு போய்விட்டது.பிறகுதான் தெரிந்தது.

என் இடக்கால் மிதிவண்டியில் மாட்டிப் பாதத்தை ஒட்டிய முட்டிப் பகுதி உடைந்தது. பொங்கி வழிந்த குருதியை நிறுத்த என் பெரியப்பா வீராணத்து ஏரித் தண்ணீரைத் துண்டில் நனைத்துப் போட்டுக் கட்டி,சேத்தியாத்தோப்பு மருத்துவமனையில் மருத்துவரிடம் காட்டிப் பல தையல் போட்டு மாத இடைவெளிக்குப் பிறகு ஊருக்கு என்னைத் தூக்கி சென்றனர்.இதனால் என் தந்தையாருக்கும் என் பெரியப்பா குடும்பத்திற்கும் முப்பத்தைந்து ஆண்டுகளாகக் குடும்பப் பகை ஏற்பட்டது.சாகும் வரை என் அப்பா பெரியப்பாவிடம் பேசியதே இல்லை.அந்த அளவு மன உறுதிக்காரர்.இப்படி பல நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்...

இப்படி என் வாழ்வுடன் கலந்த பெரியநற்குணம் ஊர் வெள்ளாற்றின் வட கரையில் உள்ளது,மழைக்காலத்தில் வெள்ளம் வந்து மக்களை மிகப்பெரிய துன்பத்தில் ஆழ்த்திவிடும். எங்கள் உறவினர் வீட்டுப் பிள்ளைகள் இருவர் மடுவில் வீழ்ந்து மாட்டிக்கொண்டனர். அவர்களைக் காக்க சென்ற தாயும் இறந்துவிட்டார்.

ஆற்றின் கரையை ஒட்டி முன்பு சாலை இருந்தது.சுடுகாடும் அங்குதான்.தனித்துச் செல்ல மக்கள் அஞ்சுவர்.இப்பொழுது சாலை நிலத்தைக்கையகப்படுத்தி நன்கு புதியதாகப் போடப்பட்டுள்ளது.மழைக்காலத்தில் முன்பு ஆற்றங்கரையில் செல்ல அச்சமாக இருக்கும். மணிலா,கரும்பு நன்கு விளையும்.சிலர் வெங்காயம்.கருணைக்கிழங்கு விளைய வைப்பதும் உண்டு.பயிறு,உளுந்து.நரிப்பயிறு விளையும்.நரிப்பயிறு எடுத்த பிறகு அதன் தழை, சருகுகளைத் தின்னும் ஆடு மாடுகள் கொழுத்து நிற்கும்.

அமைதியும் ஆற்றால் மட்டும் மழைக்காலத்தில் சலசலப்பும் கொண்ட அந்த ஊர் இன்று பல மாற்றங்களைக் கொண்டுள்ளது.இன்று வரை அந்த ஊரில் வடக்கு,தெற்கு என்னால் அடையாளம் காணமுடியாதபடி இருக்கும்.களிமண்.மழைபெய்தால் அந்தக் காலத்தில் மாட்டுவண்டிகளைத் தூக்காத குறையாகத் தள்ளிக்கொண்டு போகவேண்டும். மாடுகள் மிகப்பெரிய துன்பம் அடையும்.சேத்தியாத்தோப்பை அடைவதற்குள் பெரும்பாடாகும்.மாடுகள் உலையில் படுத்துக்கொள்ளும்.ஓரிடத்தில் கால் வைத்தால் வேறொரு இடத்திற்கு இழுத்துச் செல்லும்.வெள்ளைவேட்டி கட்டியவர் நிலை அதோகதிதான்.

மழைக்காலத்தில் காலைக்கடனுக்கு ஒதுங்க இடம் இருக்காது.அந்த ஊரின் நிலைக்கு அஞ்சி மழைக்காலத்தில் நாங்கள் அந்த ஊருக்குப் போவதைத் தவிர்ப்போம்.கோடைக்காலத்தில் கரும்பு ஆடும்பொழுது தேன்பாகு கலயங்களில் பிடித்து அனுப்பி வைப்பார்கள்.அதனை ஆறுமாத காலமாகப் பாதுகாத்து அம்மா வைத்திருப்பார்.மழைக்காலத்தில் அந்தப் பாகு கற்கண்டாக உறைந்திருக்க யாருக்கும் தெரியாமல் பரணில் இருப்பதை எடுத்துத்தின்று இன்று பல பற்கள் பூச்சிப்பற்களாக ஆகிவிட்டன.என் பல் சிதைவுகளுக்குத் தாத்தா வீட்டு வெல்லம், வெல்லப்பாகு,தேன்பாகு,சருக்கரைதான் காரணம்.

அந்த ஊரில் நடந்த என் அத்தைமகன் திருமணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை சென்றேன்
(19.04.2009).தாய்வழி மாமன் என்ற முறையில் எங்கள் குடும்பம் சடங்குகள் நிகழ்த்தியது.அதனை நிகழ்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு அமைந்தது.

அப்பொழுது அந்த ஊரில் இருபதாண்டுகளில் நடந்துள்ள மாற்றங்களை மெதுவாக கவனித்தேன்.குளத்தங்கரைதான் அந்த ஊரின் நுழைவு வாயில்.ஊர்ப்பொதுக்குளம் முன்பு கருமைநிறமான தூய நீரைக் கொண்டிருக்கும்.செந்தாமரை மிகுதியாக இருந்து அழகான மலர்களைக்கொண்டிருக்கும்.தாமரைக்காய் பறிக்க,பூ பறிக்க குளத்தில் நீந்துவோம். ஓரியடிப்போம்.உடல்முழுவதும் தாமரைக்கொடி கிழித்து எரிச்சல் எடுக்கும்.குளம் வற்றியபொழுது தாமரைக்கிழங்கு வெட்டிய பட்டறிவும் உண்டு.

காளிக்கோயில் ஒன்று இருந்தது.வெறும் சூலம் மட்டும் இருந்தது.இன்று புதியதாக கோயில் கட்டியுள்ளனர்.நல்லவை நடக்கும்பொழுது அந்தக்கோயிலை வழிபட்டுதான் நிகழ்வுகள் தொடங்குகின்றன.குளத்தின் அருகில் ஒரு கிணறு இருந்தது.அதில் இளைஞர்கள் முன்பு அமர்ந்து வெட்டிக்கதை பேசுவர்.விளையாடுவர்.இன்று கிணறு தூர்க்கப்பட்டு அதன் நடுவே ஒரு வேப்பமரம் இருகிறது.அருகில் நியாயவிலைக்கடை முளைத்துள்ளது.ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.கூரை வீடுகள் சுவர் மட்டும் மாற்றம்.பெரிய வசதி என்று சொல்லமுடியாதபடி இருக்கிறது.

இளைஞர்கள் இப்பொழுது படிக்கத் தொடங்கியுள்ளனர்.சிலர் வெளிநாடு சென்று சம்பாதிக்கின்றனர்.முன்பு மொரீசியசுக்குச் சென்ற பலர் இந்த ஊரில் இருந்தனர்."மோர்சார்" என அவர்களை அழைப்பர்.வீரனார் கோயிலுக்குப் பக்க வேலி அமைக்க இரும்புமுள் கட்டிவைத்துள்ளனர்.அங்கிருந்த பள்ளிக்கூடத்தைத் தேடினேன்.சரியாகக் கண்ணில் தென்படவில்லை.பாட்டாளிமக்கள் கட்சி கொடிக்கம்பம் வன்னியர் சங்கக் கொடிக்கம்பம் முளைத்துள்ளன.

குளத்தங்கரையை ஒட்டிப் புதியதாக ஒரு கட்டடம் திறக்கப்படாமல் இருந்தது.அதன் பலகையைப் படித்துப் பார்த்தேன்.நூலகத்துக்கு எனத் தனிக்கட்டடம் எனத் தெரிந்தது.அடுத்த முறை செல்லும்பொழுது கட்டாயம் நூலகம் திறந்திருக்கும் என நினைக்கிறேன்.அப்பொழுது அந்த ஊர் பெற்றுத்தந்த என் அம்மாவின் நன்றி தெரிவிப்பாக அந்த நூலகத்துக்கு மறக்காமல் என் நூல்களை எடுத்துச்சென்று வழங்குவேன்...

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

வரலாற்றுப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி


பேராசிரியர் இராசசேகர தங்கமணி

தமிழகத்து நகரங்களுள் கரூருக்குத் தனிச்சிறப்பு உண்டு.பல்வேறு ஏற்றுமதி வணிகங்கள் இன்று இந்த ஊரில் நடைபெறுவது போன்று பண்டைக்காலத்திலும் இந்த ஊரில் பல்வேறு வணிகங்கள் நடைபெற்றிருக்க வேண்டும்.இந்த ஊரை ஒட்டி ஓடி வளம் பரப்பும் அமராவதி ஆற்றங்கரையில் உலகின் பல அரசர்கள் காலத்திய நாணயங்கள் இன்றும் கிடைத்தபடி உள்ளதை நோக்கும்பொழுது இந்த ஊரின் வரலாற்று முதன்மை நமக்கு ஒருவாறு விளங்கும்.
கரூர் பகுதியின் அத்தனை வரலாற்று உண்மைகளையும் மனத்தில் தேக்கியபடி அறிஞர் ஒருவர் உள்ளார். அவர்தாம் பேராசிரியர் இராசசேகர தங்கமணி.

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் 28 ஆண்டுகளாக வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.70 அகவையைக் கடக்கும் இவர் இன்னும் முப்பது ஆண்டுகள் உயிருடன் இருப்பேன் என்கிறார்.அந்த அளவு என் உடல் வலிமை வாய்ந்தது என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.அடிப்படையில் தாம் ஒரு மற்போர் வீரர்(பயில்வான்) என மார்தட்டிக்கொள்ளும் பேராசிரியர் இளம் அகவை முதல் வேட்டைக்குச் செல்வதில் நாட்டம் உடையவர்.இன்றும் ஓட்டமும் நடையுமாக இருக்கும் இவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது சுறுசுறுப்பு என்னும் அருங்குணத்தையாகும்.

இலங்கை, அமெரிக்கா எனப் பல நாடுகளுக்கும் காசுமீர் தவிர்த்த இந்தியப் பகுதிகளுக்கும் சென்றுவந்த இந்தப் பேராசிரியர் ஓய்வுபெற்ற பிறகு சோம்பி அமர்ந்திருக்கும் இயல்புடையவர் அல்லர்.தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதில் தம் நேரத்தைச் செலவிடுகிறார். இவரைச் சந்தித்ததிலிருந்து...

உங்கள் இளமைப்பருவம் பற்றி...

என் பிறந்த ஊர் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருமழபாடிக்கு அருகில் உள்ள புதுக்கோட்டை என்னும் சிற்றூர்.என் தந்தையார் புலவர் மருதமுத்து.தமிழாசிரியராகவும்,ஓவிய ஆசிரியராகவும் விளங்கியவர்.நான் 10.10.1939 இல் பிறந்தேன்.என் தந்தையார் பேராசிரியர் சதாசிவப்பண்டாரத்தார் நூல்களை எப்பொழுதும் படிப்பவர்.அவர் வழியாகப்பண்டாரத்தாரையும் அவர்தம் நூல்களையும் அறிந்தேன்.

எங்கள் ஊரைச் சுற்றி வரலாற்று முதன்மை வாய்ந்த பல ஊர்கள்,கோயில்கள்,ஏரிகள் உள்ளன.இந்தப் பின்புலம் எனக்கு வரலாற்றுத் துறையில் ஈடுபாட்டை ஏற்படுத்தியது.எங்கள் ஊருக்கு அருகில் திருமழபாடி, கீழைப்பழூர், கண்டாராதித்தம், திருவையாறு,தஞ்சாவூர், அரியலூர்,குலமாணிக்கம்,செம்பியக்குடி,ஆலம்பாக்கம்(மதுராந்தக சதுர்வேதிமங்கலம்), செம்பியன் மாதேவி ஏரி உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய ஊர்களும் பிற அடையாளங்களும் எங்கள் பகுதியின் பெருமையைத் தாங்கி நிற்கின்றன.இந்தச் சூழல் என்னை இளம் அகவையிலேயே வரலாற்றில் ஆர்வம் வரும்படி செய்தது.

உங்கள் கல்வி பற்றி...

திருமழபாடியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றேன். சமால் முகமது கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்புப் பயின்றேன்.தேசியக் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்தேன். திருப்பராய்த்துறையில் பி.டி என்ற ஆசிரியர் பயிற்சி பெற்று, பள்ளி ஆசிரியராகப் பணியேற்றேன்.1966 இல் முதுகலை வரலாறு படித்துக் கல்லூரியில் பேராசிரியர் பணியேற்றேன்.

வரலாற்றுத் துறைக்கு உங்களின் பங்களிப்பு...

தமிழ்நாட்டு அரசின் பாட நூல் நிறுவனத்துக்கு முதலாம் இராசேந்திரசோழன் பற்றிய நூல் எழுதி வழங்கியுள்ளேன்(1973).இதற்கு முன் இதுபோல் தனி அரசனைப் பற்றி விரிந்த நூல் வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.பின்னர்ப் பாண்டியர் வரலாறும் எழுதி வழங்கினேன்.அதனை அடுத்து இரசிய நாட்டு வரலாறும் எழுதி வழங்கினேன்,இவ்வாறு அரசு நிறுவனத்துக்கு மூன்று வரலாற்று நூல்கள் எழுதி வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.

தொல்பொருள்,அகழாய்வு,கல்வெட்டு,நாணயங்கள் பற்றி பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன்.பல ஆய்வாளர்களுக்கு உதவியாக இருந்து பல ஆய்வுகள் சிறப்பாக நடைபெற உதவியுள்ளேன்.என் வரலாற்றுத் துறைப் பங்களிப்பைக் கண்டு பல நிறுவனங்கள் சிறப்புச் செய்துள்ளன.அவற்றுள் வரலாற்று வித்தகர்,வரலாற்றுச்செம்மல்,தமிழக வரலாற்று மேதை என்னும் பட்டங்களைச் சிறப்பிற்குரியனவாகக் கருதுகிறேன்.


பேராசிரியர் இராசசேகர தங்கமணி

உங்கள் இலக்கியத்துறைப்பங்களிப்பு பற்றி...

தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட வாழ்வியற் களஞ்சியம் என்ற பேரகராதிக்கு 200 மேற்பட்ட கட்டுரைகள் நான் எழுதி வழங்கியுள்ளேன். என் தந்தையார் உடன் பிறப்புகள் மூவரின் கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.என் நூல்களை வெளியிட்டுள்ள துடன் தமிழறிஞர் பே.க.வேலாயுதம் அவர்கள் தொகுத்த சங்க நூற் சொல்லடியம் என்ற நூலின் இரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ளேன்.அறிஞர் கோடப்பிள்ளை எழுதிய பண்டிதமணியார் நூலையும் வெளியிட்டுள்ளேன். தமிழகத்து அறிஞர்கள் எழுதிய பல்வேறு நூல்களை என்னுடைய கொங்கு ஆய்வு மையத்தின் சார்பில் வெளியிட்டு வருகிறேன்.

உங்கள் அயல்நாட்டுப் பயணம் பற்றி...

இலங்கை,அமெரிக்காவுக்குக் கல்விப் பயணமாகச் சென்று வந்துள்ளேன்.என் மகன்கள் இருவர் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.அங்குப் பல்வேறு இலக்கிய அரங்குகளில் தமிழ் வரலாறு பற்றி உரையாற்றியுள்ளேன்.அமெரிக்க மாணவர்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்திய பட்டறிவும் எனக்கு உண்டு.அங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சியகங்கள், நூலகங்களைப் பயன்படுத்திய பட்டறிவும் உண்டு.

உங்கள் நூல்களில் குறிப்பிடத்தகுந்த நூல்களைப் பட்டியலிட முடியுமா?

தமிழக வரலாற்றில் புதிய ஒளி,சுற்றுலாவியல்,தொல்பொருள் ஆய்வும் பண்பாடும்,வேட்டுவர் வரலாறு,முத்தரையர் வரலாறு,இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்,கொங்குச் சமுதாயம், கருவூரார்வரலாறு,வெஞ்சமன் வரலாறு,கரூர் பசுபதீசுவரர் கோயில் தலவரலாறு, தொல்லியல், தமிழ்நாட்டு வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகள்,கருவூரும் கன்னித்தமிழும், தமிழ்நாடும் தொல்லியலும் உள்ளிட்ட நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் பழங்காசு இதழின் சிறப்பாசிரியராகவும்,பல்வேறு வரலாற்று ஆய்வு அமைப்புகளில் உறுப்பினராகவும் உள்ள பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்கள் நடமாடும் வரலாற்று நூலகம் எனில் மிகையன்று.

பேராசிரியரின் முகவரி:
ம.இராசசேகர தங்கமணி
488/9, பாண்டியர் நகர்,
கரூர்-639 001
செல்பேசி: 94430 88144

நனி நன்றி:
தமிழ் ஓசை,களஞ்சியம் 12.04.2009,சென்னை

சனி, 11 ஏப்ரல், 2009

என் பேராசிரியர் மா.இராமலிங்கம்(எழில்முதல்வன்)


முத்தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களிடம் நான் கவிதைப்போட்டிக்கு உரிய முதல்பரிசு பெறுதல்(1992). பின்பகுதியில் பேரா.மா.இராமலிங்கம், பேரா.அரு.மருததுரை

 புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம்முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தேன் (1992-93). அப்பொழுது பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்ய நிதியுதவி நல்கும் ஒரு விளம்பரம் வந்தது. விண்ணப்பம் செய்தேன். நேர்காணல் வந்தது.பாரதியார் அறக்கட்டளை சார்பில் அந்த நிதியுதவி வழங்கப்படுவதாகவும் குறிப்பு இருந்ததாக நினைவு.

 நேர்காணலில் ஆங்கிலப் பேராசிரியர் கா.செல்லப்பன் ஐயாவும் என் பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்களும் இருந்தார்கள் 50 பேருக்கு மேல் நேர்காணலுக்கு வந்திருந்தனர். என் சான்றிதழ்கள், மதிப்பெண், கல்வி ஈடுபாடு கண்டு நல்ல வினாக்கள் கேட்டனர். நானும் இயன்ற விடை தந்தேன். நேர்காணலுக்கு முன்பாக ஓர் எழுத்துத் தேர்வும் நடந்தது.

 பேராசிரியர் முனைவர் அரு.மருததுரை, முனைவர் பட்ட ஆய்வாளர் மோ.தமிழ்மாறன் (இப்பொழுது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்) எனக்கு அப்பொழுது அறிமுகமானார்கள். (சில ஆண்டுகளுக்கு முன் பாவேந்தர் நூற்றாண்டு விழாவைப் பல்கலைக் கழகம் கொண்டாடியபொழுது பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் யான் முதல் பரிசுபெற்றவன். இந்த விவரம் கூறி, அப்பொழுது பேராசிரியர் அரு.மருததுரை உள்ளிட்டவர்களைப் பரிசுபெற வந்தபொழுது கண்டுள்ளேன் எனவும் கூறி, அறிமுகம் ஆனேன். முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்கள் திருக் கையால் 500 உரூவா முதல் பரிசைப் பல்கலைக்கழகம் வழங்கியது.)

 சில மாதத்தில் எனக்குப் பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு ஆணை வந்தது. உடன் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்று நண்பர் நாராயணநம்பி அவர்களின் உதவியுடன் பல்கலைக்கழகத்தில் சேர உரிய படிவங்கள் வாங்கினேன். அப்பொழுது கோடை விடுமுறை. அந்தப் பருவத்தில் (சூன்,சூலை) சேர்ந்தால் நல்லது. இல்லையேல் சில மாதம் காத்திருக்கவேண்டும் என்றனர். உடனடியாகப் பல்கலைக்கழகத்தில் இணைய விரும்பினேன்.

  என் பேராசிரியர் மா.இரா. அவர்கள் அப்பொழுது திருச்சிராப்பள்ளி உறையூரில் தங்கியிருந்தார். தமிழ்த்துறையிலிருந்து தொலைபேசியில் பேசி அவரைச் சந்திக்க இசைவு பெற்றேன். அவரை இல்லம் சென்று கண்டு வணங்கினேன். உரிய படிவங்களில் கையொப்பம் இட்டு, நான் அவர் மேற்பார்வையில் ஆய்வு செய்வதற்கு இசைவு வழங்கினார். எனக்கு அளவுக்கு அதிமான மகிழ்ச்சி. தமிழகத்தின் புகழ்பெற்ற அறிஞர் ஒருவரின் மாணவனாக முறைப்படி இணைந்துள்ளமையே என் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம். ஆய்வுக்கு என்ன தலைப்பு எடுக்கலாம் எனப் பேராசிரியர் கேட்டார்கள். எனக்குக் கவிதைத் துறையில் ஈடுபாடு. எனவே கவிதை குறித்துத் தலைப்பு அமையலாம் என்றேன். அவர்களும் "இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம்,வரலாறு மதிப்பீடு"என்று தலைப்பை உறுதி செய்தார்கள்.


ஆய்வு மாணவனாக நான்(1995)

  ஒரு நல்ல நாளில் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுமாணவனாக அறிமுகம் ஆனேன். ஆய்வுத் துறைகளை முன்பே புதுவைப் பல்கலைக்கழகத்தில் கற்றவன் ஆதலின் என் பேராசிரியர் ஆய்வுத் தொடர்பாகச் சொல்லும் செய்திகளை உடனுக்குடன் புரிந்துகொண்டு செய்யும் அளவிற்கு யான் அணியமாக இருந்ததால் எனக்கு முழு விடுதலை தந்தார்கள்.உரிய அறிஞர்களைச் சந்தித்துவர அனுமதி தந்தார்கள்.அவர்கள் வழியாக உவமைப் பாவலர் சுரதா உள்பட தமிழகத்தின் பல கவிஞர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.எழில்முதல்வன் அனுப்பினார் என்றால் எனக்கு ஒரு சிறப்பு இருப்பதைப் போகும் இடங்களில் எல்லாம் உணர்ந்தேன்.ஆய்வுத் தொடர்பாகப் பேராசிரியர் எனக்கு முழு விடுதலை வழங்கி என் போக்கில் ஆய்வு செய்ய வழிவிட்டமைக்கு அவர்களுக்கு யான் என்றும் நன்றிக்கடன் பட்டவனாவேன்.

  மூன்றாண்டுகள் அவரிடம் ஆய்வு செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது.நல்ல பட்டறிவுகள் எனக்குக் கிடைத்தன.மிகப்பெரிய செய்தி என்பதையெல்லாம் தம் அறிவுத்திறமையால் மிக எளிதாக விளக்குவார்.அவரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டுவிட்டமையை இப்பொழுது நினைத்தும் நான் வருந்துவதுண்டு.எழில்முதல்வன் அவர்களுக்கு ஈடுபாடான துறை திறனாய்வு,புதின இலக்கியம்,சிறுகதை,கவிதை என அறிஞர் உலகம் அறியும்.ஆனால் அவருக்குச் சிலப்பதிகாரத்தில் இருந்த ஈடுபாடு பலருக்குத் தெரியாது.அவரின் சிலப்பதிகாரப் புலமைக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்பேன்.அந்த அளவு சிலம்பைக் கற்றவர்கள். பொழிவாற்றியவர்கள்.நல்ல கட்டுரைகள் பலவற்றை எழுதியவர்.ஆய்வு என்னும் ஒற்றைக் கொம்பை யான் பற்றிக்கொண்டதால் அவரின் பிற துறை ஆளுமைகளை அறியாமல் இருந்துவிட்டேன்.இப்பொது எண்ணி எண்ணி ஏங்கி என்ன பயன்?.

  பேராசிரியர் ஒவ்வொரு கிழமையும் நடக்கும் துறைசார் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் படிக்கும் கட்டுரைகள் குறித்து கருத்துகளைச் சொல்லும்பொழுது அரங்கம் அமைதியாகக் கிடக்கும். தமிழகத்தின் புகழ்பெற்ற அறிஞர்களை அழைத்துப் பல்வேறு கருத்தரங்குகள் நடத்தியவர். பல சொற்பொழிவுகளுக்கு வழி வகுத்தவர். அவ்வகையில் தொல்காப்பியக் கருத்தரங்கு பொள்ளாச்சி அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் உதவியால் நடத்தியது, எழுத்துச் சீர்திருத்தம் குறித்த கருத்தரங்கு, சாகித்திய அகாதெமியுடன் இணைந்து நடத்திய ஒரு கருத்தரங்கு இவையெல்லாம் குறிப்பிடத்தக்கன (இந்தக் கருத்தரங்கில் கோமல் சுவாமிநாதன், இளைய பாரதி, நஞ்சுண்டன் உள்ளிட்டவர்களுடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது).

  ஆய்வு மாணவனாக இருக்கும் பொழுது, என் பலவாண்டு முயற்சிக்குப் பிறகு "விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்" நூல் வெளியீட்டுக்கு அழகிய அணிந்துரை ஒன்று வழங்கியமையும் நான் திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தில் பாவலர் முடியரசனார் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதித் தங்கப்பதக்கம் பெற்றபொழுது என் படத்தைத் தமிழ்த்துறையில் வைக்கவேண்டும் அது எதிர்கால மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்று வற்புறுத்தியதற்கும் என்றும் அவர்களுக்கு நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளேன்.

  மா.இராமலிங்கம் என்னும் இயற்பெயருடைய என் பேராசிரியர் திறனாய்வுலகில் எழில்முதல்வன் என்ற பெயரில் நன்கு அறிமுகமானவர்கள். பாவேந்தரின் குயில் இதழில் எழுதிய பெருமைக்கு உரியவர். சுரதா, அகிலன் உள்ளிட்ட எழுத்தாளர்களிடம் நன்கு பழகியவர். சாகித்திய அகாதெமியின் பரிசில் பெற்றவர். இவர்தம் புதிய உரைநடை நூல் இவரின் புதிய சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். நோக்குநிலை என்னும் நூலும் குறிப்பிடத்தக்க நூலாகும். வேள்வி என்ற இதழையும் இவர் நடத்தியவர். ஓங்குதமிழ் என்ற இதழைத் தமிழகப்புலவர் குழுவுக்காக நடத்தியவர். படைப்பும் ஆய்வும் இரண்டு கண்ணெனப் போற்றியவர். எதனையும் புதுமையாகச் சிந்திக்கவும் சொல்லவும் வல்லமை பெற்றவர். இவரின் மாணவர்கள் பலரும் உயர்நிலையில் பல இடங்களில் உள்ளனர்.

  பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றில் மா.இராமலிங்கம் என்ற திருப்பெயர் பெருமைக்குரிய பெயராக விளங்கும்.

  மா.இராமலிங்கம் அவர்கள் தஞ்சை மாவட்டம் தகட்டூரில் பிறந்தவர் (பெருமழைப் புலவர் பற்றி நன்கு அறிந்தவர், உறவினரும்கூட). சென்னை மாநிலக்கல்லூரியில் பயின்றவர். அக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும், பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவும் விளங்கியவர். மரபுக்கவிதைகள் வரைவதிலும், புதுக்கவிதை வரைவதிலும் வல்லவர்.

 மரபுக்கவிதை நூல்களாக இனிக்கும் நினைவுகள்(1966), எங்கெங்கு காணினும்(1982), யாதுமாகி நின்றாய்(1990), புதுக்கவிதை நூல்களாக இரண்டாவது வருகை(1985), பயணம் தொடரும் (1990) என்ற நூல்களைத் தந்தவர். மா.இராமலிங்கம் அவர்கள் எழுதியுள்ள கவிதை நூல்களைக் கற்கும்பொழுது புதிய சிந்தனைகளுக்கு வழிவகுப்பது போன்றே சங்க இலக்கியம், சமய இலக்கியம், பாரதி, பாரதிதாசன், சுரதா படைப்புகளின் செல்வாக்கினைக் காண முடிகிறது.

 மா.இராமலிங்கம் அவர்கள் 1960-71 காலத்தில் எழுதிய கவிதைகள் "எங்கெங்கு காணினும்" என்னும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலில் 75 மரபுக்கவிதைகள் இடம் பெற்றுள்ளன. பாவேந்தர் பாடல்களைப் போல இயற்கை, காதல், தமிழ் என்ற நிலைகளில் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

புதுக்கவிதைகள் அடங்கிய நூலைக் கற்கும்பொழுது இவரின் புதுப்பார்வைகளும் கவிதை வீச்சுகளும் புலப்படும். சமுதாயக் கொடுமைகளை நினைவூட்டி அவற்றிற்குத் தீர்வுகாணும் நோக்கில் படைப்புகள் உள்ளன. இவை பற்றி என் முனைவர் பட்ட ஆய்வேட்டில் விரிவாக வரைந்துள்ளேன்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு தஞ்சாவூரில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருவதாக நண்பர்கள் வழியாக அறிந்தேன். கல்லூரிப்பணி, தமிழ் இணையம் பரப்பும் பணி, பிற ஆய்வுகள் என ஓய்வின்றி இயங்கும் நான், என் பேராசிரியர் அவர்களைக் கண்டு மகிழும் வேட்கையுடன் பத்தாண்டுகளாகக் காத்துக்கிடக்கிறேன்...

மீண்டும் அவர் நினைவுகளுடனும், படத்துடனும் வருவேன்...

வியாழன், 9 ஏப்ரல், 2009

கயிலைமாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார்


தவத்திரு கயிலைமாமுனிவர் முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார்

 தமிழகத்துத் திருமடங்களுள் திருப்பனந்தாள் காசித் திருமடத்திற்குத் தனி இடம் உண்டு. தவத்திரு குமரகுருபர சுவாமிகளின் பெருமுயற்சியால் உருவான காசித் திருமடத்தின் கிளை மடமாகத் திருப்பனந்தாளில் இம்மடம் அமைக்கப் பெற்றாலும் காசியில் இருக்கும் மடத்தை நிருவகிக்கும் அளவிற்கு இம்மடம் இன்று சிறப்புற்று விளங்குகிறது.

 தமிழ் மொழியை, தமிழர் சமயத்தை வடநாட்டில் நிலைபெறச் செய்த பெருமை இம் மடத்திற்கே உண்டு. இசுலாமியர் காலத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்த்துப் பாதுகாத்த வகையில் தமிழர்கள் இந்தத் திருமடத்தை என்றும் நன்றியுடன் போற்றியாக வேண்டும்.

  இசுலாமியர் ஆட்சியில் இசுலாமிய சமயமும் இசுலாமியர்களின் அரபி, உருது மொழிகளும் செல்வாக்குப் பெற்றிருந்த சூழலில் இசுலாமிய மன்னன் தம்மை மதிக்கும்படி "மண்கண்ட வெண்குடை கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண்கண்ட அளவில் பணியச்செய்வாய்" என்று பாடித் தமிழ் வளர்த்தவர் தவத்திரு குமரகுருபர அடிகளார் ஆவார். அவர்தம் திருமரபில் இன்று காசித் திருமடத்தின் இருபத்தோராம் அதிபராக விளங்கித் தமிழ் மொழிக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றி வருபவர் கயிலைமாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் ஆவார். இவர்தம் வாழ்க்கைக் குறிப்பை இங்குச் சுருக்கமாக வரைய விரும்புகிறேன்.


திருப்பனந்தாள் கல்லூரியின் இன்றைய முகப்பு


கல்லூரியின் அழகிய முகப்பு

  காசித் திருமடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரியில் யான் 1987- முதல் 1992 வரை ஐந்தாண்டுகள் தமிழ் கற்றேன். கண்டிப்புக்கும்,நெறிமுறைகளுக்கும் பெயர்பெற்ற அக் கல்லூரியில் தமிழகத்தின் புகழ்பெற்ற பல அறிஞர்கள் பேராசிரியர்களாகப் பணிபுரிந்துள்ளமை யையும் பலர் கல்வி கற்றுள்ளமையையும் இங்குச் சுட்டியாக வேண்டும்.

  அவ்வகையில் பேராசிரியர். கா. ம. வேங்கடராமையா, தி.வே.கோபாலையர், தண்டபாணி தேசிகர், மு.சுந்தரேசன் பிள்ளை, கு. சுந்தரமூர்த்தி, தா.ம. வெள்ளைவாரணம், ம.வே.பசுபதி உள்ளிட்ட பேராசிரியர்கள் அக்கல்லூரியின் புகழ்பெற்ற பேராசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். மேற்கண்ட பேராசிரியர்களுள் சிலர் அக்கல்லூரியின் மாணவர்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 மேலும் ம.வே. செயராமன், பொற்கோ, செ.இராசு உள்ளிட்ட அறிஞர்கள் அக்கல்லூரியில் கற்றவர்களே. தமிழகத்திலும் அயல்நாடுகளிலும் இக்கல்லூரியில் கற்ற பலர் தமிழ்ப்பணி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தகு வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்லூரிக்கு என் ஆசிரியர் வாரியங்காவல் புலவர் ந.சுந்தரேசனார் அவர்களின் நெறிப்படுத்தலில் யான் தமிழ் கற்கச் சென்றேன்.

 எனக்குப் பேராசிரியர்களாக வாய்த்தவர்களுள் முனைவர் கு.சுந்தரமூர்த்தி, புலவர் ம.வே.பசுபதி என்னும் இருவரும் குறிக்கத்தக்க சான்றோர்கள். அதுபோல் பேராசிரியர்கள் சி. இராமன், சொ.இரவி, ப.பாசுகரன், திருவாட்டி வே. சீதாலெட்சுமி, சிவ. பங்கயச்செல்வி, நா. மாதவி, க. மாரியப்பன், சி.மனோகரன். ச. திருஞானசம்பந்தன், துரை. லோகநாதன் உள்ளிட்ட பேராசிரியர் பெருமக்களும் எனக்குத் தமிழறிவு ஊட்டியவர்களே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறப்பிற்கு உரியவர்கள்.


கயிலைமாமுனிவரின் வலக் கையருகில் நான்
(நாடகம் ஒன்றில் மாணவப்பருவத்தில்)

  இங்குத் தமிழ் கற்ற பொழுதே தமிழ்நூல்கள் எழுதத் தொடங்கிவிட்டேன். பல கட்டுரைகள் வரையுவும், கல்லூரிகளில் உரையாற்றவும் பயிற்சி பெற்றேன். தனித்தமிழ் இலக்கியக் கழகத்தில் தங்கப்பதக்கம், வெள்ளிச் சுழற்கோப்பை முதன் முதல் பெற்றதும் இக்கல்லூயில் பயின்றபொழுதுதான். தமிழோசை நற்பணி மன்றத்தின் தங்கப்பதக்கம் பெற்றதும் இக் கல்லூரியில் பயின்றபொழுதுதான். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாவேந்தர் நூற்றாண்டில் பல்கலைக்கழக அளவில் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதும் இங்குப் பயின்ற பொழுதுதான்.


நெல்லையில் வெள்ளிச்சுழற்கோப்பை,தங்கப்பதக்கத்துடன் பெற்றபொழுது (பனசைக் கல்லூரி வளாகத்தில்)

  பல இதழ்களுக்கு எழுதத் தொடங்கியதும் இங்குப் பயிலும்பொழுதுதான். முனைவர் மு. தமிழ்க்குடிமகன் உள்ளிட்ட தமிழறிஞர்களை முதற்கண் கண்டதும் (தருமபுரம் சென்று) இக்கல்லூரியில் பயின்றபொழுதுதான்.

  திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் உள்ள நூலகத்தின் அனைத்து நூல்களையும் தொட்டுப் படித்துப் பார்த்ததும் அக்கல்லூரியின் நூலகர் பேராசிரியர் திரு சம்பத்குமார் அவர்களின் உதவியால் பல நூல்கள், இதழ்களைப் படித்து மகிழ்ந்ததும் இக்கலூரியில்தான். இங்குப் படிக்கும்பொழுதுதான் வானொலியில் உரையாற்றும் வாய்ப்புகள் அமைந்தன .என் மாணவராற்றுப்படை, பனசைக்குயில் கூவுகிறது, அச்சக ஆற்றுப்படை, அரங்கேறும் சிலம்புகள் நூல்கள் உருவானதும் இக்கல்லூரியில் பயின்றபொழுதுதான்.

  காசித்திருமடத்திற்கு உரிமையான ஏழுகடை மாடியில் தங்கியிருந்து மன்னியாற்றங்கரையில் இயற்கை வளங்களைக் கண்டபடி தமிழ் கற்ற இந்தக் கல்லூரி என் வாழ்வில் இரண்டறப் பின்னிக் கிடப்பது என்று சொன்னால் மிகையில்லை.


கயிலைமாமுனிவர் அவர்களிடம் நான் பரிசு பெறல்(1989 அளவில்)

  இக்கல்லூரியில் கற்ற பொழுது நடந்த பல்வேறு கட்டுரை,கவிதை, பேச்சு,ஒப்புவித்தல், முதல்மதிப்பெண் எடுத்தல் எனப் பல போட்டிகளில் பரிசில் பெறும்பொழுது அன்பொழுகப் பரிசுப் பொருள்களை வழங்கி வாழ்த்திய பேரறிவாளரே நம் வணங்குவதற்குரிய கயிலை மாமுனிவர் அவர்கள்.மேலும் திருமடத்திலிருந்து வெளிவந்த குமரகுருபரர் என்னும் இதழில் கட்டுரைகள் எழுத வாய்ப்பு நல்கியவரும் தவத்திரு அடிகளாரேயாவார்கள்.

  எனவேதான் என் முதல் நூலான மாணவராற்றுப்படை வெளிவந்த பொழுது அடிகளாரின் இத்தகு தமிழுள்ளம் நினைத்து என் முதல் நூலைக் கயிலைமாமுனிவர் அவர்களுக்குப் படையலிட்டுச் செந்தமிழ்க் கல்லூரியைப் புரந்தருளிய தவதிரு கயிலைமாமுனிவர் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தேன்.மாணவப்பருவத்தில் உருவான மாணவராற்றுப்படை நூலைக் கண்ணுற்று உரூவா ஐந்நூறு அந்நாளில்(1990)மகிழ்ச்சியுடன் வழங்கிப் புரந்தருளி எதிர்காலத்தில் பல நூல்கள் உருவாக,வெளியாக வழியமைத்த தவத்திரு கயிலைமாமுனிவர் அவர்களின் நினைவுகளைச் சுமந்தபடி இப்பதிவை இட்டு வைக்கின்றேன்.

கயிலை மாமுனிவர் அவர்களின் தமிழ் வாழ்க்கை

  தென்னார்க்காடு மாவட்டம் திருக்கழிப்பாலையை ஒட்டிய காரைமேடு என்னும் சிற்றூரில் மாணிக்கம் பிள்ளை, குஞ்சம்மாள் ஆகியோரின் மூன்றாம் குழந்தையாக 22.03.1931 இல் பிறந்தவர் கயிலைமாமுனிவர் அவர்கள். இவர் தம் பிள்ளைப் பருவத்துப் பெயர் நடனசபாபதி ஆகும். நடனசபாபதியின் பாட்டனார் பெயர் சபாபதி என்பதாகும். இச் சபாபதியார் கங்கை கொண்டசோழபுரம் திருக்கோயிலில் அதிகாரியாகப் பணி செய்த பெருமைக்குரியவர்.

  நடனசபாபதியை அவர் உறவினர் இராசமாணிக்கம் பிள்ளை அவர்கள் சிதம்பரத்தில் இருந்த காசி மடத்தின் கிளை மடத்துக்கு அழைத்துச் சென்று தம் கண்காணிப்பில் சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் படிக்க வைத்தார். எட்டாம் வகுப்புப் படிக்கும் வரை நடனசபாபதி அவர்கள் காசி மடத்திலேயே தங்கிப் பயின்றார். இராசமாணிக்கம் பிள்ளை திருமடப் பணியிலிருந்து விலக நேர்ந்ததால் அவருடன் தங்கிப் பயின்ற நடனசபாபதி தம்பெற்றோருடன் தங்கித் தம் கல்வியைத் தொடரவேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்ற பிறகு உடல் நலக்குறைவால் இவர் படிப்பு தடைப்பட்டது. பிறகு தருமையாதீனத்தில் இவர் எழுத்தர் பணி புரிந்தார். இதற்கு முன் இந்தப் பணியைக் கவனித்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் ஆவார்.

  1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் துறவு மேற்கொண்டார்.15.11.1953 இல் சமயத் தீட்சை வழங்கப்பெற்றது. தம் மகன் துறவு மேற்கொண்டதில் பெற்றோருக்கு உடன்பாடு இல்லை. துறவுக்குப் பிறகு பல ஆண்டுகளாகத் தந்தையார் அடிகளாரைப் பார்த்ததும் இல்லை. தாய் மகன் நினைவிலான ஏக்கத்துடன் உடல் நலம் குன்றி இயற்கை எய்தினார். இத்தகு துயர நிகழ்வுகள் நடந்தாலும் பற்றற்றான் பற்றினைப் பற்றிய அடிகளார் தம் தவ வாழ்வில் உறுதியுடன் விளங்கினார்.

  தருமையாதீன அடிகளாரின் அருளாணையின் வண்ணம் தருமையாதீனப் பல்கலைக் கல்லூரியில் பயின்று (1955-59) சென்னைப் பல்கலைக்கழகழகத்தின் வழியாக வித்துவான் பட்டம் பெற்றவர். 1960 ஆம் ஆண்டு காசித்திருமடத்தின் இளவரசாக அமர்த்தப்பட்டார். இதன் பிறகு காசித்திருமடத்தின் நிருவாகங்களைச் சிறப்பாகச் செய்து இருபதாம் பட்டத்தில் சிறப்புடன் விளங்கிய அருள்நந்தித் தம்பிரான் அடிகளார் அவர்களின் நம்பிக்கைக்குரியவராக விளங்கினார்.

  காசித் திருமடத்தின் கல்விப்பணிகள், இலக்கியப் பணிகள், அறக்கொடைகள் இவற்றைச் சிறப்புடன் நடத்த உழைத்தார். இவர்கள் இளவரசாகப் பணியாற்றியபொழுது திருக்குறள் உரைக்கொத்து, கந்தபுராணம், திருவிளையாடல் புராணம் ஆகியன உரைநடை வடிவில் வெளிவந்தன. 11 ஆண்டுகள் காசித்திருமடத்தின் இளவரசாகப் பணியாற்றினார்கள்.

  1972 மே மாதம் 16 ஆம் நாள் இருபதாம் பட்டத்து அதிபர் தவத்திரு அருள்நந்தித்தம்பிரான் அடிகளார் இயற்கை எய்தியதும் 21 ஆம் அதிபராகத் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் பட்டம் பெற்றார்கள்.

  18.10.1978 முதல் குரமரகுருபரர் என்னும் இதழ் வெளிவரத் துணைசெய்தவர். 15.07.1982 இல் இவர் கயிலைக்குச் சென்று இறைவனை வழிபட்டதன் நினைவாக 16.08.1982 இல் இவருக்குக் "கயிலை மாமுனிவர்" பட்டம் தருமையாதீனத் தலைவரால் வழங்கப்பெற்றது. 20.03 1991 இல் இவருக்கு மணிவிழா சிறப்பாக நடைபெற்றது.

  இவர்மேல் சிற்றிலக்கியங்கள் பல பாடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் பலவற்றை உருவாக்கியதாலும், அறக்கொடைகள் பல நிறுவி உணவளித்தல், பதிப்பித்தல் வழியாகத் தமிழ்நூல்கள் பல வெளிவர உதவியதாலும் இவரைப் போற்றி வணங்க வேண்டும்.


காசிமடத்தின் முகப்பு


காசிமடத்தின் அரண்மனை போன்ற சுவர்

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

தமிழ்நூல் காப்பகத் தந்தை பல்லடம் மாணிக்கம்


பல்லடம் மாணிக்கம்

 இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கு நடைபெறும் கல்வி நிறுவன வளாகங்களில் பேராசிரியர் மெய்யப்பன் ஐயாவுடன் இணைத்துப் பார்க்கும் அறிஞராகப் பல்லடம் மாணிக்கம் ஐயா அவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தெரிந்தார்கள். அதுபோல் நூல்கள் வெளியீடு காணும் இடங்கள், புத்தகக் கண்காட்சிகள், இலக்கியச் சந்திப்புகளிலும் பல்லடம் மாணிக்கம் ஐயாவைக் கண்டு மகிழ்வேன். யாரிடமும் உரிமை பாராட்டிப் பேசும் இயல்புடையவர். படபடப்பும் சுறுசுறுப்பும் நிறைந்து சொற்களை வாரி வீசிப் பேசும் ஆற்றல் கொண்டவர். அன்பால் அனைவரையும் கட்டிப்போட்டு விடுவார்கள்.

 விரிக்கப்பட்டிருக்கும் புத்தக அரங்குகளில் புதியதாக வெளிவந்துள்ள புத்தகங்களைக் கண்டுகாட்டி வாங்குவார்கள். கங்காரு தன்குட்டியைச் சுமந்தபடி இருப்பதுபோல் புத்தகமும் கையுமாக இருப்பார். புத்தகம் வாங்கிவரும் நடையில் ஒரு மாணவனின் ஆர்வம் தெரியும்.

 தாம் வாங்குவதுடன் நல்ல நூல்களை அருகில் இருக்கும் நமக்கும் பரிந்துரைப்பார். பல நேரங்களில் அவர் செலவில் வாங்கி அன்பளிப்பாக வழங்குவதும் உண்டு.இளைஞர்கள் எழுதும் புத்தகங்களைக் கூடுதல் படிகள் வாங்கி ஊக்குவிப்பதும் உண்டு. சிலர் நூல் வெளியிடத் தவிக்கும்பொழுது பண உதவி யாருக்கும் தெரியாமல் நடப்பதும் உண்டு.என் நூல்கள் வெளிவந்த உடன் ஐயாவுக்கு வழங்குவேன். அவர்கள் வழங்கும் தொகை மாணவப் பருவத்தில் எனக்கு வழிசெலவுக்கு ஆவதும் உண்டு.ஆண்டுதோறும் நூல்கள் வெளிவர வேண்டும் என என் பேராசிரியர் க.ப.அறவாணருக்கு அடுத்துப் பல்லடம் ஐயாதான் அன்புக்கட்டளை போடுவார்கள்.

 தமிழகத்தின் அறிஞர்கள் அனைவரும் நம் பல்லடம் ஐயவின் அன்புக்குரிய நண்பர்களாகவே இருப்பார்கள். அறிஞர்கள் பொற்கோ, இ.சுந்தரமூர்த்தி, மெய்யப்பன், ச.வே.சு, க.ப.அறம், கி.நாச்சிமுத்து உள்ளிட்டவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் (இந்தப்பட்டியல் நீளும்). இத்தகு பெருமைக்குரிய பல்லடம் ஐயா வள்ளுவம் என்ற இதழை மிகத் திறம்பட நடத்தினார்கள். கண்கவர் வண்ண அச்சில் இதுபோல் தமிழ் ஏடு வந்து யான் கண்டதில்லை.

 தமிழ்நூல் காப்பகம் என்ற பெயரில் நூலகம் தொடங்கப்பட்டுள்ள விவரம் அடிக்கடி நண்பர்கள் வழியாகக் கிடைக்கும்.ஐயாவும் பார்க்க வரும்படி அழைப்பார்கள்.என் இடைவிடாத சுற்றுச் செலவில் இயலாமல் இருந்தது.

 நேற்று இரவு என் உயிர்த்தோழர் இரத்தின. புகழேந்தியுடன் செல்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தபொழுது பல்லடம் ஐயாவின் பக்கம் பேச்சுத் திரும்பியது. ஐயாவுக்குச் சிறிது உடல் நலமில்லை என்று புகழ் சொன்னார். நாளை காரிக் கிழமை விடுமுறைதான். நாளை திருமுதுகுன்றம் வருகிறேன். இருவரும் தமிழ்நூல் காப்பகத்தையும் அதன் காப்புத்தந்தை பல்லடம் மாணிக்கம் ஐயாவையும் காண்போம் என்று திட்டமிட்டோம்.

அவ்வகையில் நேற்று(04.04.2009) மாலை ஐந்து மணிக்குத் தமிழ்நூல் காப்பக மாளிகைக்குச் சென்றோம்.

 ஐயா அவர்கள் எங்களைக் கண்டதும் அன்புடன் வரவேற்று உரையாடினார்கள். அப்பொழுது செம்மண் இதழாசிரியர் கோ.அரங்கநாதன் அவர்களும் உடன் இருந்தார். வழக்கமாக நலம் வினவி, உடல்நலம் போற்றும்படி வேண்டிக்கொண்டோம். பின்னர்த் தமிழ்நூல் காப்பகத்தின் உள்ளே ஐயா அழைத்துச் சென்று ஒவ்வொரு வரிசையாக நூல்களின் இருக்கை முறையை விளக்கினார்கள். அரிய நூல்களை எடுத்துக்காட்டினார்கள். நாங்கள் சென்ற சிறிது நேரம் மின்சாரம் இல்லை. எனினும் இயற்கை வெளிச்சத்தில் பார்த்தோம். பிறகு மின்சாரம் வந்தது. உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களுக்கு இந்தச் செய்தியை அறிவிக்கக் காப்பகத்தைப் பல கோணங்களில் படமாக எடுத்துக்கொண்டோம். இவ்வகையில் என் நண்பர் புகழ் உதவினார்.


பல்லடம் மாணிக்கம்,மு.இளங்கோவன்

 நூல்கள் எப்படிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கும் எவ்வாறு தொகுக்கவேண்டும் என்பதற்கும் இந்த நூலகம் நல்ல சான்றாக விளங்குகிறது. சற்றொப்ப ஒரு இலட்சம் நூல்கள், இதழ்கள், ஆய்வேடுகள் இங்குத் தொகுத்துவைக்கப்பட்டுள்ளன. முனைவர் பட்ட ஆய்வேடுகள் பல முனைவர் பொற்கோ உள்ளிட்ட அறிஞர் பெருமக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.  அதுபோல் முனைவர் பட்டம் பெற்று நூலாக வெளிவந்த நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

 கம்பராமாயணத்தில் பத்துக்கும் மேற்பட்ட பதிப்புத் தொகுப்புகள் உள்ளன. திருக்குறள் சார்ந்த மொழிபொயர்ப்புகள், பதிப்புகள், ஆய்வுகள் 1500 மேல் உள்ளன. சங்க இலக்கியத்தின் பல முதல் பதிப்புகள் உள்ளன. இராமாயணம், நான்கு வேதங்கள், உபநிடதங்கள், பன்னிரு திருமுறைகள், சாத்திர நூல்கள், அவை குறித்த ஆய்வுகள் நூல்களாக உள்ளன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்களும் உள்ளன. மகாபாரதம், காந்திய நூல்கள், மார்க்சிய நூல்கள், அம்பேத்காரிய நூல்கள் உள்ளன.

 தமிழில் வெளிவந்த அரிய பெப்ரிசியசு அகராதி(1786) எங்கும் கிடைத்தற்கு அரியது பாதுகாப்பாகப் பார்வையிடும்படி உள்ளது.இலக்கிய இதழ்கள், நாளிதழ்களின் இணைப்பு மலர்கள், கிழமை இதழ்கள்,மாத இதழ்கள் பல பாதுக்காக்கப்படுகின்றன. புதினம்,சிறுகதை எனத் தமிழின் அனைத்து வடிவ நூல்களும் உள்ளன.

 மறைமலையடிகள்,தெ.பொ.மீ,வையாபுரிப்பிள்ளை,மு.வ,பாவாணர்,ந.சி.கந்தையா உள்ளிட்டவர்களின் முழுத்தொகுப்புகளும் உள்ளன.

 ஆயிரக்கணக்கான கர்நாடக,இந்துத்தானி, மேற்கத்திய இசை ஆகியவற்றின் இசைப்பேழைகள், குறுந்தகடுகள் உள்ளன.மேலும் விருதுபெற்ற உலகத் திரைப்படங்களின் குறுந்தகடுகளும் உள்ளன. இலக்கியச் சந்திப்புகள் நிகழ்த்த வாய்ப்பான அரங்கும் அனைத்து வசதிகளுடன் முதல் தளத்தில் உள்ளது. தமிழுக்கும் தமிழ் நூல்களுக்கும் தமிழர் ஒருவர் தன்னந்தனியாக இவ்வளவு தொகை செலவிட்டிருப்பது அறிஞர் பல்லடம் மாணிக்கம் ஐயாவாகவே இருப்பார்கள்.

 திருமுதுகுன்றம்(விருத்தாசலம்) மணிமுத்தாற்றங்கரையில் அரை ஏக்கர் அளவு நிலத்தில் எட்டாயிரம் சதுர அடியில் இந்த நூலக மாளிகை அமைந்துள்ளது. நூல்கள் முற்றாக வரிசைப்படுத்தப்பட்டு, கணிப்பொறியில் தரவுகள் உளிட்டப்பெற்று உலகத் தரத்திற்குப் பாதுகாக்கப்பட உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஐயா அவர்களுக்கு இயன்ற வகையில் உதவலாம்.

பல்லடம் மாணிக்கம் ஐயாவின் தமிழ் வாழ்க்கை

 கோவையை அடுத்த பல்லடத்திற்கு அருகில் உள்ள சிற்றூரில் சாமியப்பா, வள்ளியம்மா ஆகியோரின் மகனாக 23.11.1936 இல் பிறந்தவர். சிற்றூரில் தொடக்கக் கல்வியை முடித்து, பல்லடத்தில் உயர்நிலைக் கல்வி கற்றவர்.புலவர் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் (1962). ஆயிரம் பூ என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டவர்.இந்நூல் பாவேந்தர், கா.அப்பாத்துரையார் வாழ்த்துப் பெற்ற நூல்.

 சென்னையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1962 முதல் 1975 வரை இத் தமிழாசிரியர் பணி நீடித்தது. 1972 இல் விருத்தாசலத்தில் திலகவதி அம்மாவைத் திருமணம் செய்துகொண்டு இரண்டு மக்கட் செல்வங்களைப் பெற்றார்.

 தேவி திரைப்படத்தில் திரைப்பாடல்கள் எழுதிப் புகழ்பெற்றவர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தத்துவக் கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கில் சிறப்புடையன. இசைமேதை தட்சணாமூர்த்தி அவர்கள் இப்படத்திற்கு இசையமைப்பாளர். இப்படத்திற்குத் துணை இசையமைப்பாளராக விளங்கியவர் திரு.சேகர் (இசையமைப்பாளர் இரகுமான் அவர்களின் தந்தையார்). டி.எம்.சௌந்தரராசன் பல பாடல்களைப் பாடினார். இப்படத்தில் சோ நடித்துள்ளார். இப்படப் பாடல்கள்,இலங்கை,சிங்கப்பூர் வானொலிகளில் அடிக்கடி ஒலிபரப்பப்படுவது உண்டு.

தேவி தேவி உன்னைத்தேடி அலைகிறேன்...
தித்திக்கும் முத்தமிழே...

என்னும் பாடல்கள் சிறப்புடையன.

நடிகர்கள் ம.கோ.இராமச்சந்திரன்,சிவாசி கணேசன், இயக்குநர் சிறீதர் உள்ளிட்டவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.

 தமிழாசிரியர் பணியை விடுத்து விருத்தாசலத்தில் செங்கல் சூளை, வேளாண்மைத்தொழிலில் ஈடுப்பட்டவர். படித்த காலத்தில் நல்ல நூல்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அதன் பிறகு தாம் படித்த நூல்களைப் பாதுகாக்கும் எண்ணம் உண்டானது. அதன் பிறகு பலருக்கும் பயன்படப் பாதுகாப்போமே என நினைத்துப் பல நூல்களை வாங்கத் தொடங்கினார். நண்பர்கள் தங்களிடம் உள்ள முதன்மையான நூல்கள், ஆய்வேடுகளை வழங்கினர் இவ்வகையில் இந்த நூலகம் இன்று இலட்சக்கணக்கான அறிவுச்செல்வங்களைத் தாங்கி நிற்கின்றது.

 பழமலைநாதரையும் அருள்மிகு கொளஞ்சியப்பரையும் வழிபடச் செல்வோர் தமிழ் நூலகத்தையும் பார்த்து வரலாம். பேருந்து, தொடர்வண்டி இந்த ஊருக்கு உள்ளது.

தொடர்பு முகவரி

பல்லடம் மாணிக்கம் அவர்கள்
தமிழ்நூல் காப்பகம்,
சேலம் நெடுஞ்சாலை,
தமிழ்நகர்,விருத்தாசலம்-606 001

பல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம்


அறிவுநூல்கள் கொண்ட தமிழ்நூல் காப்பக மாளிகை


பல்லடம் மாணிக்கம் அவர்களுடன் மு.இ


ஆய்வேடுகளைச் சுமந்து நிற்கும் நூலகம்


நூலகத்தில் நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் காட்சி


பயன்பாட்டில் நூலகம்


அரிய அகராதி ஒன்றைப் பல்லடம் மாணிக்கம் காட்ட, பார்வையிடும் நான்


நூல்களின் கண்கவர் அணிவகுப்பு


மு.இ. நூலகத்தில்


பல்லடம் மாணிக்கம் தம் நூல்களுக்கு இடையே...


நூல்களின் அணிவகுப்பு


வனப்பு மிக்க நூலகம்


நூலகத்தின் நான்


தமிழ்நூல் காப்பகத்தின் நூல்களின் பதிவேடு


அரிய அகராதியின் முதல் பக்கம்(வெளியான ஆண்டு 1786)


அகராதியின் தொடக்கப் பக்கம்


அரிய அகராதியின் பக்கங்கள்


(என் பக்கத்திலுள்ள படங்கள், குறிப்புகளை எடுத்தாளுவோர் உரிய குறிப்புடன் மேற்கோளாக வரைய வேண்டுகிறேன். இணையத்தில் உள்ள என் கட்டுரைகள், குறிப்புகள், படங்களைப் பல ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் தங்கள் பெயரில் தமிழகத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அமைப்புகள் நடத்தும் ஆய்வரங்குகளில் வெளியிட்டும் தங்கள் இணையப்பக்கங்களில் மீள்பதிப்புச் செய்தும் வருவதை நண்பர்கள் வழியாக அறிவதால் இக்குறிப்பு). 

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையம் பற்றிய என் சிறப்புரை...


கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி முகப்பு

கோயமுத்தூரில் உள்ள புகழ்பெற்ற தனியார் கல்லூரி கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியாகும்.இது தன்னாட்சி பெற்ற கல்லூரி.இகல்லூரியின் தமிழ்த்துறையில் ஆய்வு செய்யும் முனைவர் பட்ட, இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மாதம் ஒருமுறை அறிஞர்களை அழைத்து ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வண்ணம் சிறப்புரை வழங்குவது வழக்கம்.

அவ்வகையில் மார்ச்சு மாதம் 29 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் உரையாற்ற எனக்குக் கல்லூரியின் தமிழ்த்துறைத்துறைத் தலைவர் பேராசிரியர் பழனிச்சாமி அவர்களும்,பேராசிரியர் முருகேசன் அவர்களும் அழைப்பு விடுத்திருந்தனர்.

28.03.2009 காலை 9 மணியளவில் புதுச்சேரியில் புறப்பட்டு விழுப்புரம்,சேலம் வழியாகக் கோவை வந்து சேர்ந்தேன்.

கோவையை அடைந்தபொழுது இரவு 7.15 மணி.

என் வருகை முன்பே திட்டமிடப்பட்டதால் பேராசிரியர் முருகேசன் அவர்கள் எனக்காகப் பேருந்து நிலை வந்து எதிர்கொண்டு அழைத்தார்.தனியார் விடுதியில் இரவு தங்க ஏற்பாடு செய்தார்.

நான் வந்த உடனேயே நண்பர் காசி அவர்களுக்குச் செல்பேசியில் தெரிவித்தேன்.அடுத்த அரை மணி நேரத்திற்குள் காசி அவர்கள் நான் தங்கியிருந்த அறைக்கு வந்து சேர்ந்தார்.இருவரும் இரவு உணவு உண்டோம்.அறைக்கு மீண்டு, கணிப்பொறி தொடர்பான பல செய்திகளைக் காசி வழியாக அறிந்து மகிழ்ந்தேன்.இரவு 11.30 மணி வரை காசி என்னுடன் உரையாடிவிட்டுக் காலையில் கல்லூரி அரங்கிற்கு வருவதாகச் சொல்லி விடைபெற்றார்.நானும் பயணக்களைப்பில் கண்ணயர்ந்தேன்.

காலையில் ஆறு மணிக்கு எழுந்து காலைக்கடமைகளை முடித்து,இரவே பேசியது போல பேராசிரியர் கனல்மைந்தன் இல்லம் சென்றேன்.அம்மா அவர்கள் காலைச்சிற்றுண்டி வழங்கினர்கள்.கனல்மைந்தன் அவர்கள் என் குடும்பத்துடன் நல்ல தொடர்பில் இருப்பவர்கள்.

நான் ஆய்வு மாணவனாக இருக்கும்பொழுது அவர் கருத்துகளை அடிப்படையாக வைத்தே என் ஆய்வுக்கட்டுரையை வடிவமைத்தேன்.பல்வேறு கருத்தரங்குகளில் நானும் கனல்மைந்தனும் ஒன்றாகவே உலவுவோம்.கனல் எழுந்தால் வினாக்கணையால் துளைத்தெடுப்பார்.அவரின் சிந்தனையாற்றல் எண்ணி எண்ணி நான் மகிழ்வேன்.கருத்தரங்க நாளில் இரவு முழுவதும் நம் பேராசிரியர் கனல்மைந்தன் அவர்கள் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசித் தீர்ப்பார்.கல்லூரிப் பல்கலைக்கழகங்களில் நடக்கும் ஆய்வுகள், தில்லுமுல்லுகள் பற்றி கனல்கக்க உரையாற்றுவார்.அவரின் ஒரே பார்வையாளனாக நான் இருப்பேன்.எங்களுடன் வந்த நண்பர்கள் ஆய்வாளர்கள் அவ்வப்பொழுது புறப்பட்டாலும் நான் மட்டும் வைகறைப்பொழுது வரை கண் விழித்துக் கேட்டபடி இருப்பது வழக்கம்.எந்த ஊரில் கருத்தரங்கம் நடந்தாலும் அவரை நான் தேடுவதும் என்னை அவர் தேடுவதுமாக இருப்போம்.அத்தகு பேராசிரியரை இல்லம் கண்டு உரையாடி மீண்டமை மகிழ்ச்சி தந்தது.


ஆய்வாளர்கள் பார்வையாளர்கள்

காலை 9.30 மணிக்குப் பேராசிரியர் முருகேசன் அவர்கள் என்னை அழைத்துச் சொல்ல விடுதிக்கு வந்ததற்கும் நான் பேருந்திலிருந்து இறங்குவதற்கும் சரியாக இருந்தது.இருவரும் கல்லூரிக்குப் புறப்பட்டு காலை 10.30 மணியளவில் சென்றோம்.நாங்கள் வருவதற்கு முன்பாகவே நண்பர் காசி முதலாமவராக வந்திருந்தார்.காலத்தாழ்ச்சிக்குப் பொறுத்தருளும்படி வேண்டினேன்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பழனிச்சாமி ஐயாவை முதற்கண் துறைக்குச் சென்று கண்டேன்.மற்ற துறைப் பேராசிரியர்களையும் கண்டு மகிழ்ந்தேன்.

அரங்கிற்கு வந்து இணைய இணைப்புகளைச் சரி செய்வது என் முதற்கண் வழக்கம்.முன்பே கல்லூரியில் அனுமதி பெற்றிருந்ததால் கணிப்பொறி இயக்கும் நண்பர் வந்திருந்தார். மடிக்கணினி,இணைய இணைப்பு சரியாக இருக்கும் என நினைத்த எனக்கு சிறிது தயக்கம் ஏற்பட்டது.கணிப்பொறிக்கும் இணையத்துக்கும் இணைப்பு கிடைக்காமையே என் தயக்கத்துக்குக் காரணம்.என்ன செய்ய?

நண்பர் காசியை அழைத்துச் சரி செய்து, என் மடிக்கணினியில் இணைப்பு கொடுத்து ஒருவாறு 11.30 மணிக்குதான் நிகழ்ச்சி தொடங்கியது.

அதற்குள் காசி வழியாகவும் நண்பர் நா.கணேசன் ஐயா அவர்களின் வழியாகவும் செய்தியறிந்த திருவாளர்கள் இலதானந்து,கோவை சிபி உள்ளிட்ட பதிவர்களும் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களும் வேறு சில நண்பர்களும் வந்திருந்தனர். அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கினோம்.


பயிற்சியளிக்கும் நான்(மு.இ)

தமிழ்மணம் தந்த காசி அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்து அவர் ஊரில் அவர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடக்கும் பொருத்தப்பாட்டை எடுத்துரைத்தேன்.பிறகு தமிழ்த்தட்டச்சு முறைகள் பற்றி எடுத்துரைத்துத் தமிழ் 99 விசைப்பலகை பழக எளிது எனவும் அரசு இதனை ஏற்றுக்கொண்டு அறிவித்துள்ளது எனவும் விளக்கினேன்.


காசி உள்ளிட்ட நண்பர்கள்

எதிர்பாராத நிலையில் பதிவர் இலதானந்து அவர்கள் ஒலிப்புவழி தட்டச்சு சிறந்தது எனவும் என் தமிழ்ப்பற்றால் தமிழ் 99 விசைப்பலகையைத் திணிப்பதாகவும் கருத்துரைத்தார்.மேலும் 99விசைப்பலகையே என் முயற்சி போலவும் கருதி கருத்துரைத்தார்.தமிழ் 99 இல் உள்ள பல்வேறு சிறப்புகளை எடுத்துரைத்து தமிழ் மரபிலக்கண முறைப்படி அறிஞர்கள் குழு இதனை உருவாக்கியது என்று உரைத்தும் விவாதம் நீண்டது.இதுபற்றி நாம் பதிவு வழிவிவாதிக்கலாம் எனவும் இது பற்றி நெடுநாழிகை உரையாடினால் பேச வேண்டிய, சொல்லவேண்டிய பிற செய்திகளைப் பேச காலம் குறைவாகும் எனவும் குறிப்பிட்டேன்.

பேராசிரியர் முருகேசன் அவர்கள் விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.உரை தொடர்ந்தது. பகல் 1.30 மணி வரை பல்வேறு இணையத்தளங்களை எடுத்துக்காட்டிச் சிறப்புகளை விளக்கினேன்.தமிழ்மணத்தின் சிறப்பை விளக்க முயற்சி செய்யும் பொழுது தமிழ் மணம் உள்ளிட்ட சில தளங்கள் கல்லூரியில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்தோம் தமிழ் மணம் தெரியும் படி செய்ய ஓர் அன்புவேண்டுகோளை வைத்தோம்.ஆய்வாளர்கள் பலருக்கும் ஏற்பட்ட ஐயங்களைப் போக்கினேன்.ஆய்வுக்கு உதவும் பக்கங்களைக் காட்டினேன்.

தமிழ்த் தட்டச்சு 99 விசைப்பலகை அமைப்பை ஒளியச்சிட்டு அனைவருக்கும் ஒரு படி வழங்கினோம்.

நண்பர் பத்ரி அவர்கள்(கிழக்குப் பதிப்பகம் உரிமையாளர்) தம் நிறுவனம் உருவாக்கிய NHM WRITER என்னும் மென்பொருளைக் கூடுதலாக என் விருபத்தின் பேரில் குறுவட்டாக அனுப்பி வைத்திருந்தார்கள்.அதனைநிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ஒரு படி வீதம் வழங்கினோம்.

அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்டு நள்ளிரவு புதுச்சேரி வந்து சேர்ந்தேன்.

நாமக்கல்-கடலூர் இணையப் பயிலரங்குகள்

கடலூர் மாவட்ட மைய நூலகம் 
 
 கடந்த மார்ச்சு மாதம் 16.03.2009 வைகறை நான்கு மணியிருக்கும். கரூர் வள்ளுவர் விடுதியல் நல்ல தூக்கத்திலிருந்தேன். செல்பேசி மணி அடித்தது. மறுமுனையில் இன்னும் விழிக்கவில்லையா?. நான் பேராசிரியர் இராசசேகர தங்கமணி பேசுகிறேன் என்று பேராசிரியர் பேசினார். நான் நள்ளிரவு இரண்டு மணிக்குதான் படுத்தேன். இன்னும் ஒருமணி நேரத்தில் விழிக்கிறேன் என்று சொல்லி சிறிது நேரம் அயர்ந்து கிடந்தேன். 
 
 ஐந்து மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்து வரவேற்பறைக்கு வரும்பொழுது ஆறு மணி. எனக்காகப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி உந்து வண்டியில் காத்திருந்தார். அவர் வீட்டுக்குச் சென்று அவர்தம் வளமார்ந்த வீடு கண்டு மகிழ்ந்தேன். கரூவூரில் மனை வாங்கிப் புதியதாக வீடு கட்டித் தம் பணி சிறக்க வாழ்ந்து வருகிறார். இவர் தம் மக்கள் இருவர் அமெரிக்காவில் உள்ளனர். பேராசிரியர் இராசசேகர தங்கமணி எழுதிய பதிப்பித்த நூல்களை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினார். அவர் பெற்ற விருது, பட்டங்கள், பரிசில்களை எடுத்துக்காட்டி மகிழ்ந்தார். முற்றாக அனைத்தையும் பார்வையிட ஒருநாள் ஆகும். ஒரு மணி நேரத்தில் அவற்றை இயன்றவரை பார்த்தேன். அதற்குள் அவர் கணிப்பொறியைத் தமிழ் மென்பொருள் இறக்கித் தமிழில் தட்டச்சிடும்படி செய்தேன். அதற்குள் வழக்குரைஞர் இராம. இராசேந்திரன் அவர்கள் வள்ளுவர் விடுதியில் காத்திருப்பதைத் தொரிவித்தார். எனவே பேராசிரியர் இராசசேகர தங்கமணி என்னை வள்ளுவர் விடுதிக்கு உடன் அழைத்து வந்தார். 
 
 வழக்கறிஞரிடம் பேசிய பொழுது அவரின் தமிழார்வம் கண்டு வியந்தேன்.பல்வேறு தமிழ்நலம் சார்ந்த பணிகளில் அவர் ஈடுபட்டு வருவது அறிந்து மகிழ்ந்தேன். அவரிடம் என் நாமக்கல் செலவு பற்றித் தெரிவித்தபொழுது நாமக்கல்லில் உள்ள தமிழார்வலர்கள் சிலருக்குத் தொலைபேசியிட்டுப் பேசி என் வருகை பற்றி உரைத்தார். அவரிடமும் விரைந்து விடைபெற நேரந்தது. அதற்குள் முன்பே திட்டமிட்டபடி கரூர் நூலக அலுவலர் திருவாளர் செகதீசன் ஐயா அவர்கள் என் அறைக்கு வந்தார்கள். அனைவரும் சிற்றுண்டி உண்டோம். காலை 8.30 மணியளில் பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்களிடமும் நூலக அலுவலர் திரு.செகதீசன் அவர்களிடமும் விடைபெற்று 9.45 மணியளவில் நாமக்கல் சென்று சேர்ந்தேன். 
 
  நாமக்கல் மாவட்ட நூலகம் முகப்பு 
  நாமக்கல் மாவட்ட நூலகர்கள் 
 
 அங்கு நூலக அலுவலர் அவர்களும்  பொது உந்தில் வந்து என்னை அழைத்துச் சென்றனர். நாமக்கல் மாவட்டம் சார்ந்த நூலகர்கள் பலருக்குக் கணிப்பொறி, இணையம் சார்ந்த பயிற்சிகளை வழங்கினேன்.அனைவரும் கற்றுத் தெரிந்துகொண்டனர். மிகச்சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
மாவட்ட நூலக அலுவலர், நூலகர் 
 
  மாலை நான்கு மணியளவில் புறப்பட்டுப் புதுவை வரத்திட்டமிட்டிருந்தேன். அதற்கிடையில் திருவாளர் நா. ப. இராமசாமி ஐயாவுடன் மாரண்ணன் அவர்களும் வந்திருந்தார். நாமக்கல் இராமசாமி ஐயா தாம் முப்பதாயிரம் நூல்களைப் பாதுகாத்து வருவதைச் சொன்னார்கள். அதைக் காணாமல் வந்தால் என்னால் இரவு தூங்கமுடியாது எனக் கருதி அவர் நூலகம் சென்று அனைத்து நூல்களையும் மேலோட்டமாகப் பார்வையிட்டு மீண்டும் ஒருநாள் அமைதியாக வந்து பார்வையிடுவேன், பயன்கொள்வேன் என்று உரைத்து, ஐயாவிடம் விடைபெற்று மீண்டேன். 
 
  நூலகர் திரு. வேலு அவர்கள் என் உடன் வந்து உதவினார். 5.15 மணியளவில் பேருந்து ஏறிச் சேலம், விழுப்புரம் வழியாக நடு இரவு புதுவை வந்து சேர்ந்தேன். காலையில் என் கல்லூரிப்பணி முடிந்தேன் .மாலை நான்கு மணிக்கு முன்பே திட்டமிட்டபடி கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் கடலூர் மாவட்டம் சார்ந்த பல நூலகர்களுக்கு தமிழ் இணையம் சார்ந்த பயிற்சிக்கு அழைத்திருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் கல்பனா சேக்கிழார் அவர்களும் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தகுந்தது. 
 
கடலூர் மாவட்ட நூலக அலுவலர், நூலகர் 
 
கடலூர் மாவட்ட மைய நூலகத்தில்... 
 
நூலக அலுவலர் அவர்களும் நூலகரும் விழாவிற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர். 6 மணி வரை என் உரை அமைந்தது. இணையமும் மின்சாரமும் வாய்ப்பாக இருந்தன. ஆறு நாட்களாகப் பல்வேறு பயிற்சிபெற்ற அவர்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டி மகிழ்ச்சியூட்டினேன். அனைவரிடமும் விடைபெற்று இரவு வீடு வந்து சேர்ந்தேன். இரண்டு நாளும் கடுமையான பணி. கடுமையான உழைப்பு. ஆனால் பலருக்கு இணையம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியதில் அனைத்துத் துன்பங்களும் பறந்தன.

வியாழன், 2 ஏப்ரல், 2009

பிரஞ்சுப் பேராசிரியர் வெங்கடசுப்புராய நாயகர்

பேராசிரியர் வெங்கடசுப்புராய நாயகர்

 பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகர் பிரஞ்சு மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும் விளங்குபவர்.

 புதுவை இலாசுப்பேட்டையில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் மு. சு. ஆறுமுகநாயகர், இராசரத்தினம் அம்மாள். 03.04.1963 இல் பிறந்த இவர் தொடக்கக் கல்வியைப் புதுச்சேரி குளுனி, பாத்திமா பள்ளிகளில் பயின்றவர். பின்னர் தாகூர் கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை பிரஞ்சு பயின்றவர்.

 புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர்(1988). தமிழ், பிரஞ்சு வினைச்சொற்கள் ஒப்பாய்வு என்னும் பொருளில் ஆராய்ந்தவர். 1989 இல் தாம் படித்த தாகூர் கலைக்கல்லூரியில் பிரஞ்சு விரிவுரையாளராகப் பணியில் அமர்ந்தார். 1991-95 பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியிலும், 1996-99 வரை  காரைக்கால் ஔவையார் மகளிர் கல்லூரியிலும் பணியாற்றி, 1999 முதல் புதுச்சேரி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் பிரஞ்சுப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

 2006 இல் தம் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்து புதுவைப் பல்கலைக்கழகத்தின் பிரஞ்சுத் துறையின்வழிப் பட்டம் பெற்றார். பிளேசு சாந்திரர் என்னும் சுவிசில் பிறந்த பிரஞ்சு எழுத்தாளர்தம் புதினங்களில் விலகித் தப்புதல் என்னும் பொருள்கோள் கொண்டு ஆய்வு செய்தவர். இவர் நெறியாளர் செவாலியே இரா.கிருட்டினமூர்த்தி அவர்கள் ஆவார்.

 பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவும் பிரஞ்சு அரசும் வழங்கிய நிதியுதவியைப் பெற்றுப் பிரான்சு சென்று, பாரிசு நூலகங்களைப் பயன்படுத்தி மீண்டவர். புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழிலிருந்து பிரஞ்சுக்குச் சென்ற மொழிபெயர்ப்பு இலக்கியங்களைப் பற்றி ஆய்வு செய்தவர். பிரஞ்சிலிருந்து தமிழுக்குப் பல சிறுகதைகள், கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். திசையெட்டும், புது எழுத்து, காலச்சுவடு, தீராநதி, மணல்வீடு, அமுதசுரபி, அம்ருதா, தளம், பல்சுவைக் காவியம், வெல்லும் தூய தமிழ், வணக்கம் புதுவை, மீண்டும் அகரம்,  சூரியோதயம், நற்றிணை, கரந்தடி, யுகமாயினி உள்ளிட்ட இலக்கிய இதழ்களில் எழுதிவருகிறார். தமிழிலிருந்தும் பிரஞ்சுக்குப் பல படைப்புகளை மொழிபெயர்த்துவருகிறார்.

பிரான்சு அரசின் சார்பில் அழைக்கப்பெற்று, பலமுறை பிரான்சுக்குக் கல்விப்பயணம் மேற்கொண்டவர்.

இவர் வெளியிட்ட நூல்கள்:

  • பிரஞ்சு வழிப் பேச்சுத்தமிழ் கற்றல்(குறுந்தகடுடன்)
  • புதுச்சேரி பொது அறிவு நொடி வினா-விடைகள் - 2009
  • கலகம் செய்யும் இடதுகை (2012)
  • Le Kurunthokai, குறுந்தொகை பிரஞ்சு மொழிபெயர்ப்பு.மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம்.சென்னை.2023.
  • Les fleurs du Kuruntbokai, தமிழன்னை ஆய்வகம்,புதுச்சேரி 2023.
  • ஐங்குறுநூறு ( பிரஞ்சு மொழிபெயர்ப்பு)
  • அத்தையின் அருள் - 2013
  • அப்பாவின் துப்பாக்கி - 2013
  • கடவுள் கற்ற பாடம்(பிரெஞ்சு சிறுகதைகள், தமிழில்) - 2015
  • சூறாவளி, அடையாளத்தைத் தேடி அலையும் பெண்(குறுநூவல்) - 2015
  • ஃபுக்குஷிமா - 2016
  • விரும்பத்தக்க உடல் - 2018
  • ஆண்டன் செக்காவ், ஆகச்சிறந்த கதைகள், தடாகம் 2019
  • உல்லாசத் திருமணம்(பிரஞ்சுப் புதினம்), தடாகம் - 2020
  • வாழ்வு, இறப்பு - வாழ்வு(வாழ்க்கை வரலாறு) - 2020
  • வீழ்ச்சி (பிரஞ்சுப் புதினம்) - 2021
  • தண்டனை(பிரஞ்சுப் புதினம்) 2022
  • இல்லறவாசிகள் (பிரஞ்சுப் புதினம்) - 2023
  • பெருந் தொற்று, காலச்சுவடு, நாகர்கோயில், 2023
  • புகழ் பெற்ற உலக சிறுகதைகள்,மொழிபெயர்ப்பு மையம்.பொள்ளாச்சி.2023.
  • நாயகரின் நாயகர், அகநாழிகை 2023.
  • Pondicherry General knowledge quiz,அகநாழிகை, 2023.