நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 2 ஏப்ரல், 2009

பேராசிரியர் வெங்கடசுப்புராய நாயகர்


பேராசிரியர் வெங்கடசுப்புராய நாயகர்

பேராசிரியர் வெங்கடசுப்புராய நாயகர் பிரஞ்சு மொழிபெயர்ப்பாளராகவும்,பேராசிரியராகவும் விளங்குபவர்.

புதுவை இலாசுப்பேட்டையில் பிறந்தவர்.பெற்றோர் திருவாளர் மு.சு.ஆறுமுகநாயகர், இராசரத்தினம் அம்மாள்.03.04.1963 இல் பிறந்த இவர் தொடக்கக் கல்வியைப் புதுச்சேரி குளுனி,பாத்திமா பள்ளிகளில் பயின்றவர்.பின்னர் தாகூர் கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை பிரஞ்சு பயின்றவர்.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர்(1988). தமிழ், பிரஞ்சு வினைச்சொற்கள் ஒப்பாய்வு என்னும் பொருளில் ஆராய்ந்தவர்.1989 இல் தாம் படித்த தாகூர் கலைக்கல்லூரியில் பிரஞ்சு விரிவுரையாளராகப் பணியில் அமர்ந்தார்.1991-95 பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியிலும்,1996-99 வரை ஔவையார் மகளிர் கல்லூரியிலும் பணியாற்றி,1999 முதல் புதுச்சேரி,காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் பிரஞ்சுப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

2006 இல் தம் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்து புதுவைப்பல்கலைக்கழகத்தின் பிரஞ்சுத்துறையின்வழிப் பட்டம் பெற்றார்.பிளேசு சாந்திரர் என்னும் சுவிசில் பிறந்த பிரஞ்சு எழுத்தாளர்தம் புதினங்களில் விலகித் தப்புதல் என்னும் பொருள்கோள் கொண்டு ஆய்வு செய்தவர்.இவர் நெறியாளர் செவாலியே இரா.கிருட்டினமூர்த்தி அவர்கள் ஆவார்.

பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவும் பிரஞ்சு அரசும் வழங்கிய நிதியுதவியைப் பெற்றுப் பிரான்சு சென்று பாரிசு நூலகங்களைப் பயன்படுத்தி மீண்டவர்.புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழிலிருந்து பிரஞ்சுக்குச் சென்ற மொழிபெயர்ப்பு இலக்கியங்களைப் பற்றி ஆய்வு செய்தவர்.பிரஞ்சிலிருந்து தமிழுக்குப் பல சிறுகதைகள், கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.திசையெட்டும்,புது எழுத்து,யுகமாயினி உள்ளிட்ட இலக்கிய இதழ்களில் எழுதிவருகிறார்.தமிழிலிருந்தும் பிரஞ்சுக்குப் பல படைப்புகளை மொழிபெயர்த்துவருகிறார்.

இவர் வெளியிட்ட நூல்கள்

பிரஞ்சு வழிப் பேச்சுத்தமிழ் கற்றல்(குறுந்தகடுடன்)
புதுச்சேரி பொது அறிவு நொடி வினா-விடைகள்

1 கருத்து:

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

en anbu naNbar kuRittha thangkaL kuRippukaLaik kaNdu makizhndhaen! parAttukaL!