சனி, 31 ஜனவரி, 2009
குறிஞ்சிமலர் பார்க்காதவர்களுக்கு...
பூத்துக்குலுங்கும் குறிஞ்சிமலர்,வரையாடுகள்,மூனாறு மலைப்பகுதி
சங்க நூல்களில் குறிஞ்சிமலர் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூப்பது என்று பரவலாக நாம் அறிந்து வைத்துள்ளோம்.குறிஞ்சிமலர் அதிகம் பூத்தால் வறட்சி ஏற்படும் எனப் படுகமொழியில் ஒரு பழமொழி உண்டு.குறிஞ்சிமலர் பூத்துள்ள இடத்துக்கு அருகில் ஆணும் பெண்ணும் நின்றால் இன்ப உணர்வுகள் பெருகுமாம்.பாலுறவு வேட்கை மிகுமாம்.
அண்மையில், என்னுடன் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் வாழ்த்தட்டை ஒன்று வழங்கினார்.மூனாறு பகுதியில் உள்ள மலையின் பின்புலத்துடன் வரையாட்டுடன் கூடிய குறிஞ்சிமலர் காட்சி அஃது.கண்டு மகிழுங்கள்.
(மூனாறு= மூன்று ஆறு.நல்லதண்ணி தோட்டம்(எசுடேட்),பெரியவர் தோட்டம்(எசுடேட்),மாட்டுப்பட்டித்தேட்டம்(எசுடேட்) என்ற மூன்று தோட்டப்பகுதியிலிருந்து வரும் ஆறுகள் ஒன்றாகக் கலக்கும் இடம் மூனாறு.இவ்வாறு ஒன்றாகக் கலக்கும் தண்ணீர் சொக்கநாடு தேக்கம்வரை ஒன்றாகச்செல்லுமாம்.மேலும் விவரம் தெரிந்தவர்கள் எழுதலாம்)
படம் வெளியிட்ட நிறுவனத்துக்கு நன்றி
வெள்ளி, 30 ஜனவரி, 2009
இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் நினைவுகள்...1
மு.வளர்மதி,மு.இளங்கோவன்,வீ.ப.கா.சு,ஒப்பிலா.மதிவாணன்,கண்ணன்(1997,மார்ச்சு)
இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் பல ஆண்டுகள் நான் பழகியிருந்தாலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அவரின் உதவியாளராகப் பணியமர்த்தப்பட்டுப்
பணிபுரிந்த காலம் குறைவுதான்(01.04.1997-31.12.1998).ஆனாலும் குறைந்த காலம் பணி செய்தாலும் அந்தக் காலத்தில் அவருக்கு உற்றுழி உதவி உயிர்காத்தது நான் எனில் மிகையன்று. ஐயா அவர்களின் உயிர்காத்தவன் யான் என்பதை ஐயா அவர்கள் எனக்கு நன்றியுரைத்து எழுதிய மடல் உறுதி செய்யும்.
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் யான் பணிசெய்துகொண்டிருந்தேன்.அப்பொழுது நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு(மார்ச்சு 97) ஐயா அவர்கள் வந்திருந்தார்.பேராசிரியர் பே.க. வேலாயுதம் அவர்கள் உடன் வந்ததாக நினைவு.கருத்தரங்கம் முடிந்து ஐயா மட்டும் தனியாகத் திரும்புவதாகத் திட்டம்.தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள இசைப்பகுதிகள் பற்றி கட்டுரை படித்தார்.
கருத்தரங்கிற்கு வந்திருந்த அறிஞர்கள் கருத்தரங்கம் நிறைவுற்றதும்அனைவரும் தத்தம் ஊருக்குத் திரும்பிவிட்டனர்.
ஐயாவுக்கு இரவு பத்து மணியளவில் திருச்சிராப்பள்ளித் தொடர்வண்டி.எனவே இரவு ஏழுமணியளவில் புறப்பட்டால் நிலையம் சென்று உணவுமுடித்து வண்டியேற
வாய்ப்பாக இருக்கும் என நிறுவனத்தில் இருந்தார்.நான் கருத்தரங்கம் முடிந்து இரவு ஒன்பது மணியளவில் புறப்பட்டால் என் ஊர் செல்ல நேரம் வாய்ப்பாக இருக்கும் என நினைத்து அறைக்குச் சென்று என் பெட்டிகளை எடுத்துவர எண்ணினேன்.அதன்பொருட்டு அறைக்குச் சென்று பெட்டி எடுத்துக்கொண்டு உ.த.நிறுவனம் வந்தேன்.அப்பொழுது நிறுவனத்தில்
பணிபுரிந்தவர்கள் விவரம் சொல்லத் திடுக்கிட்டேன்.
வீ.ப.கா.சுந்தரம் ஐயா அவர்கள் கழிவறைக்குச் சென்றதாகவும் தண்ணீரில் கால் பதிக்கும் பொழுது தவறி விழுந்து பின்பகுதியில் அடிபட்டுக் கிடந்ததாகவும் அங்குச் சென்ற ஊழியர் கண்டு அவரை நிறுவன உந்தில் அருகில் உள்ள வி.எச்.எசு.மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் சொன்னார்கள்.
உடனே புறப்பட்டு மருத்துவமனைக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்றேன். மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு அனைவரும் வந்துவிட்டனர். ஊழியர்களுக்கோ, மருத்துவர்களுக்கோ ஐயாவின் அருமை தெரியாது.எளிய நோயாளிகளுக்கு என்ன நிலை கிடைக்குமோ அதே நிலைதான் ஐயாவுக்கும்.
மருத்துவரைத் தனியே நான் கண்டு இவரை மற்றவர்களைப் போல் நினைக்கவேண்டாம்.இவர் மிகச்சிறந்த தமிழறிஞர் எனவும்,இசைமேதை எனவும் கூறினேன்.ஐயா அவர்கள் அரசர் முத்தையாவேள் பரிசு பெற்றவர் என்பதைச் சொல்லி,அரசர் குடும்பத்துக்கு வேண்டியவர் என எடுத்துரைத்தேன்.அந்த மருத்துவமனை அரசர் குடும்பத்துக்கு உரியது.ஐயா இங்கு மருத்துவம் பார்க்கிறார் என்ற செய்தி அரசர் குடும்பத்துக்குத் தெரிந்தால் உடன் உதவுவார்கள் எனவும் கூறினேன்.இதன் பிறகு ஐயாவுக்குச் சிறப்பு மருத்துவம் நடந்தது.
அண்ணன் ஒப்பிலா.மதிவாணன் அவர்கள் செய்தி அறிந்து வந்து சேர்ந்தார்.முனைவர் மு.வளர்மதி அவர்களுக்குத் தகவல் தந்தேன்.அவரும் பதறியடித்து வந்தார்.பின்னர் பேராசிரியர்கள் நிர்மல் செல்வமணி,வீரபாண்டியனார் உள்ளிட்டவர்களுக்குத் தகவல் தந்தேன்.அந்நாளைய பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் சி.தங்கமுத்து அவர்களுக்கும் தகவல் தந்தேன்.ஏனெனில் ஐயா அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்தார்கள்.பதிவாளர் அவர்கள் ஐயாவை உயிர் காப்பாற்றி அனுப்ப உள்ளமைக்கு நன்றி தெரிவித்தார்கள்.இரவு முழுவதும் ஐயாவுக்குக் காவல்,ஏவல் பணிசெய்தோம். கண்விழித்துக் காத்தோம்.
மறுநாள் காலை முதல் முனைவர் வளர்மதி அவர்கள் இல்லத்திலிருந்து ஐயாவுக்குக் கஞ்சியுணவு கொண்டுவருவேன்.
மறுநாள் காலை பேராசிரியர் நிர்மல்,வீரபாண்டியனார் உள்ளிட்டவர்கள் வந்தனர்.ஓரிருநாள் ஐயா மருத்துவம் பார்த்துக்கொண்டு நிர்மல் இல்லம் சென்று ஓய்வெடுத்தார்.இதன் இடையே என் பணிநிலை கண்ட இசைமேதை அவர்கள் ஒரு விருப்பம் தெரிவித்தார்.தாம் தமிழிசைக் கலைக்களஞ்சியம் உருவாக்கி வருவதாகவும் நான்காம் பகுதி எழுதத் தொடங்கியுள்ளதாகவும், இதுபோன்ற உடல் நலிவுற்ற நிலையில் நான் அருகில் இருந்தால் களஞ்சியம் பணி நிறைவுறும் எனவும் கூறினார்.
எனக்கும் உ.த.நி.பணி நிறைவுற்றதால் நானும் ஐயாவுடன் பணிபுரிய இசைவு தெரிவித்தேன். பல்கலைக்கழக ஆணையும் வாங்கித் தந்தார்.ஐயா மருத்துவம் முடித்து
பேராசிரியர் நிர்மல் இல்லத்தில் ஓய்வில் இருந்தபொழுது என்னைப் பல்கலைக்கழகத்தில் பணியேற்க இசைவுமடல் வழங்கியும் நான் செய்யவேண்டிய பணிகள் இன்னன
எனவும் சொல்லித் திருச்சிராப்பள்ளிக்கு அனுப்பினார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்று பதிவாளர் அவர்களைக் கண்டு வணங்கினேன். வீ.ப,கா.சு அவர்களின் உடல்நிலை கேட்ட பதிவாளர் எனக்குப் பணி ஆணை வழங்கிட, பணியில் இணைந்தேன்.ஐயாவின் அறை திறந்தேன். நிலைப்பேழைத் திறவிகளை ஐயா முன்பே வழங்கியிருந்தார்.உரிய நூல்களை எடுத்து என் வேலைகளைத் தொடங்கினேன். ஒரு கிழமைக்குப் பிறகு ஐயா திருச்சிராப்பள்ளி வந்து சேரந்தார்கள்.
ஒவ்வொரு நாளும் பதிவாளர் அவர்களின் இசைவுடன் காலையில் அலுவலகத்தில் பணிபுரிவேன்.பிற்பகல் உணவுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள
ஞானசம்பந்தர் மனையில் உள்ள ஐயா வதிவிடம் செல்வேன்,திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையத்தில் இறங்கிச் சற்றொப்ப மூன்று கல்லுக்கு மேலிருக்கும் ஐயா இல்லம்
செல்வேன். கடுங்கோடை வெய்யிலில் அடைந்து, பணிமுடித்து மீள்வது மிகவும் சிக்கலாகவே இருந்தது.என்றாலும் தமிழிசை வரலாற்று மீட்சிப்போரில் என் பணி தேவை
என்பதால் உவப்புடன் செய்தேன்.
இதற்கிடையே பதிவாளர் அவர்கள் மாறிப் புதிய பொறுப்புப் பதிவாளர் ஒருவர் வந்தார். அவருக்கு ஐயாவின் அருமை தெரியாது.அவர் தமிழறிவு நிரம்பாதத் தமிழ்ப் பேராசிரியர். எனக்கு அவர் ஓர் ஆணை தந்து என் ஊதியத்தை நிறுத்த ஆணையிட்டார். அவர் தந்த தமிழ் வடிவ ஆணையில் ஐந்து வரியில் நான்கு எழுத்துப்பிழை இருந்தது. ஐயா வருகை தந்த பிறகு என் பணியைத் தொடரலாம் எனவும் அதுவரை ஊதியத்தை நிறுத்திவைக்கவும் அவர் ஆணையிட்டார்.
ஆனால் அலுவலகம் வருவதும் பிற்பகல் ஐயா இல்லம் சென்று இன்று நடைபெற்ற பணிகள் காட்டி ஒப்புதல் பெறல்,நாளை நடைபெற வேண்டிய பணிகளைத் தெரிந்து வருவதுமாக இருந்தேன்.ஐயாவுக்கு இன்று வந்த மடல்களைச் சேர்ப்பேன்.விடைதரவேண்டிய மடலுக்கு விடை எழுதுவேன்.ஐயா கையொப்பம் இடுவார்கள்.சில நேரம் அவருக்காக நானே மடல் எழுதவும் இசைவு தந்திருந்தார்.அவர் மடல்தாள்கள் என்னிடமே வைத்திருக்க வேண்டினார்.
ஐயாவிடம் ஒரு கிழமை பணி செய்வது மற்றவர்களால் முடியாது.நான் அவர் மன உணர்வு புரிந்தவன் என்பதாலும்,நாங்கள் செய்வது தமிழிசைப்பணி என்பதாலும் பல்வேறு இடையூறுகளைத் தாங்கிக்கொண்டு பணிசெய்தேன்.
எங்களுக்குப் பணிவிடை செய்யும் பணிப்பெண்கள் எங்களை விடவும் மும்மடங்கு அதிகம் ஊதியம் பெற்றனர்.எனக்கு ஊதியம் 2500 உரூவா தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது. முனைவர் பட்டம் முடித்த என் நிலை இவ்வாறு இருந்தது. உணவு, தங்குமிடம், இதழ்கள், நூல்கள் வாங்குதல்,போக்குவரவு செலவுக்கு இது போதுமானதாக இல்லை. என் தந்தையார் எனக்குப் பணம் அனுப்பிக்கொண்டிருந்தார்.
கைச்செலவுக்குக் கிடைத்த குறைந்த தொகையும்(2500 உரூவா) பொறுப்புப் பதிவாளர் அவர்களின் தயவால்(!)நின்றது.இதற்குப் பின்புலமாகத் தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் இயங்கினார் என்பதையும் இங்குச் சுட்டியாக வேண்டும்.ஐயாவும் நானும் மிகப்பெரிய சிக்கலுக்கு இடையில்தான் தமிழிசைக் கலைக்களஞ்சியப் பணிகளில் மூழ்கிக் கிடந்தோம்.
முத்துக்குமார் முடிவும் தமிழக நிலையும்
ஈழத்தில் வாழும் தமிழர்கள் உரிமைக்கும் உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இருப்பிடங்களை இழந்து காடுகளில் தஞ்சம் புகுந்து, மரத்தடிகளிலும்,தற்காலிகக் குடியிருப்புகளிலும் தங்கியிருக்கும் இவர்களுக்கு உணவு,உடை சிக்கல் உள்ளது.உணவுக்கும் மருத்துவத்துக்கும் ஒன்றுகூடும் இவர்களைச் - சொந்தநாட்டுக் குடிமக்களையே இலங்கை இராணுவம் கொத்துக்குண்டுகளையும்,பிறவகைக் குண்டுகளையும் வீசிக் கொன்றுவருவது மிகப்பெரிய மாந்தப் பேரவலமாக உள்ளது.உசாவல் என்ற பெயரில் இளைஞர்களை அடித்துக் கொல்வதும்,இளம்பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதுமாக ஒவ்வொரு நாளும் செய்தி ஏடுகளைப் படிக்கும்பொழுது தெரியவருகிறது.பண்பாடு உள்ளவர்களால் பொறுத்துக்கொள்ளமுடியாத செயலாக இது உள்ளது.
பன்னாட்டு உதவிகளுடன் இலங்கை இராணுவம் தமிழினத்தை அழிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதை உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், கையெழுத்து வேட்டைகள் நிகழ்த்தி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள ஏடுகள் பலவும் இலங்கை அரசுக்குச் சார்பாகச் செய்திகளை வெளியிட்டு வருவது இன்னும் வேதனைக்கு உரிய செய்தியாகும். இலங்கை அரசின் உயரிய விருதுகளைச் சில தமிழக இதழாளர்கள் வாங்கி(!) வருவதும் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயலாகும்.
தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் சிலர் உண்மையாக ஈழத்தமிழர்களுக்குக் குரல்கொடுத்து வருவதை நன்றியுடன் குறித்தாக வேண்டும்.அதே நேரத்தில் வேறு சில தலைவர்கள் பொதுக்குழு,செயற்குழு கூட்டுவது,தீர்மானம் நிறைவேற்றுவது, கலந்து பேசுவது,பதவிவிலகல் நாடகம் நடத்துவது,மாந்தச் சங்கிலிக்கு அழைப்பு விடுப்பது,கவிதை எழுதுவது,கட்டுரை வரைவது,கண்ணீர் மடல் வரைவது என அடுத்த தேர்தல்நாள் நெருங்கும்வரை அலைக்கழிப்பு வேலைகளைச் செய்துவருவதையும் தமிழக மக்கள் கண்டு வருகின்றனர்.
காசுமீரில் ஒரு "பண்டிட்" இறந்தால் இந்தியன் என்கின்றதும், இராமேசுவரத்தில் ஒரு தமிழன் இறந்தால் மீனவன் என்பதும் எத்தனை நாளைக்கு என்பது தெரியவில்லை.வடநாட்டு வல்லாதிக்கம் எனத் தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா குறிப்பிட்டது இதனைத்தான் போலும்.இவ்வாறு அரசியல் கூத்தர்கள் ஒவ்வொரு வகையில் ஈழப்போராட்டத்தை நாடகமாக்கித் தமிழக மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் சூழலில் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பேரெழுச்சி கொண்டு ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவுக்குரல் கொடுத்துவருகின்றனர்.
செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள்,சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநோன்பு இருந்து உயிர்துறக்க முனவந்தனர்.அதுபோல் தமிழகத்தின் புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.தமிழகத்தின் பல கல்லூரி,பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வீதிக்கு வந்து ஈழத்தமிழர்களுக்குக் குரல்கொடுத்து வருகின்றனர்.இன்று புதுச்சேரியில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணிக்க உள்ளதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு மாணவர்கள் போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பெருகிவரும் வேளையில் நேற்று முத்துக்குமார் என்ற இளைஞர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி நடுவண் அரசு அலுவலகத்தின் முன்பாக தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.இதனைத் தொலைக்காட்சிகளில் கண்ட மக்கள் ஆறாத்துயர் உற்றனர்.தமிழகத் தலைவர்கள் இத்தகு முடிவுகளை எடுக்கவேண்டாம் என்று வற்புறுத்தி வருகின்றனர்.தமிழகத்து மக்களின் உணர்வுகளை எடுத்துரைக்கும் முகமாகவே முத்துக்குமாரின் முடிவு உள்ளது.
முத்துக்குமாரின் இறுதி வாக்குமூலமும்,அவரிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளும் அவரின் தேர்ந்த அரசியல் அறிவு உலகியல் அறிவு காட்டுகின்றன.தமிழர்கள் எந்த அளவு ஏமாற்றப்படுகின்றனர் என்பதைக் காட்டுகின்றன.இந்தி எதிர்ப்பில் மாணவர்கள் ஈடுபட்டு இன்னுயிர் ஈந்த வரலாற்றை நினைவுகூரும் விதமாக இந்த நிகழ்வு உள்ளது. மொழிக்காக, இனத்துக்காக உயிர்மாய்த்துக்கொள்ளும் இனமாகத் தமிழினம் எத்தனை ஆண்டுகளுக்கு வாழவேண்டுமோ?.
தந்தையே நீ இல்லாது போனாய்!-இந்தத்
தமிழினம் சாகையில் நீ ஊமை ஆனாய்!
வெந்து கிடந்தன உடல்கள்!-இந்த
வேதனைக்கு அழுதன நாற்புறக் கடல்கள்!
என்ற புலவர் புலமைப்பித்தனார் வரிகளும்
வடக்கிலோ மேன்மேலும் அதிகார வீக்கம்
வருமான வீழ்ச்சியோ தெற்கினைத் தாக்கும்!
என்ற பெருஞ்சித்திரனார் வரிகளும் நினைவுக்கு வருகின்றன.
பன்னாட்டு உதவிகளுடன் இலங்கை இராணுவம் தமிழினத்தை அழிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதை உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், கையெழுத்து வேட்டைகள் நிகழ்த்தி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள ஏடுகள் பலவும் இலங்கை அரசுக்குச் சார்பாகச் செய்திகளை வெளியிட்டு வருவது இன்னும் வேதனைக்கு உரிய செய்தியாகும். இலங்கை அரசின் உயரிய விருதுகளைச் சில தமிழக இதழாளர்கள் வாங்கி(!) வருவதும் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயலாகும்.
தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் சிலர் உண்மையாக ஈழத்தமிழர்களுக்குக் குரல்கொடுத்து வருவதை நன்றியுடன் குறித்தாக வேண்டும்.அதே நேரத்தில் வேறு சில தலைவர்கள் பொதுக்குழு,செயற்குழு கூட்டுவது,தீர்மானம் நிறைவேற்றுவது, கலந்து பேசுவது,பதவிவிலகல் நாடகம் நடத்துவது,மாந்தச் சங்கிலிக்கு அழைப்பு விடுப்பது,கவிதை எழுதுவது,கட்டுரை வரைவது,கண்ணீர் மடல் வரைவது என அடுத்த தேர்தல்நாள் நெருங்கும்வரை அலைக்கழிப்பு வேலைகளைச் செய்துவருவதையும் தமிழக மக்கள் கண்டு வருகின்றனர்.
காசுமீரில் ஒரு "பண்டிட்" இறந்தால் இந்தியன் என்கின்றதும், இராமேசுவரத்தில் ஒரு தமிழன் இறந்தால் மீனவன் என்பதும் எத்தனை நாளைக்கு என்பது தெரியவில்லை.வடநாட்டு வல்லாதிக்கம் எனத் தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா குறிப்பிட்டது இதனைத்தான் போலும்.இவ்வாறு அரசியல் கூத்தர்கள் ஒவ்வொரு வகையில் ஈழப்போராட்டத்தை நாடகமாக்கித் தமிழக மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் சூழலில் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பேரெழுச்சி கொண்டு ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவுக்குரல் கொடுத்துவருகின்றனர்.
செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள்,சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநோன்பு இருந்து உயிர்துறக்க முனவந்தனர்.அதுபோல் தமிழகத்தின் புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.தமிழகத்தின் பல கல்லூரி,பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வீதிக்கு வந்து ஈழத்தமிழர்களுக்குக் குரல்கொடுத்து வருகின்றனர்.இன்று புதுச்சேரியில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணிக்க உள்ளதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு மாணவர்கள் போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பெருகிவரும் வேளையில் நேற்று முத்துக்குமார் என்ற இளைஞர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி நடுவண் அரசு அலுவலகத்தின் முன்பாக தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.இதனைத் தொலைக்காட்சிகளில் கண்ட மக்கள் ஆறாத்துயர் உற்றனர்.தமிழகத் தலைவர்கள் இத்தகு முடிவுகளை எடுக்கவேண்டாம் என்று வற்புறுத்தி வருகின்றனர்.தமிழகத்து மக்களின் உணர்வுகளை எடுத்துரைக்கும் முகமாகவே முத்துக்குமாரின் முடிவு உள்ளது.
முத்துக்குமாரின் இறுதி வாக்குமூலமும்,அவரிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளும் அவரின் தேர்ந்த அரசியல் அறிவு உலகியல் அறிவு காட்டுகின்றன.தமிழர்கள் எந்த அளவு ஏமாற்றப்படுகின்றனர் என்பதைக் காட்டுகின்றன.இந்தி எதிர்ப்பில் மாணவர்கள் ஈடுபட்டு இன்னுயிர் ஈந்த வரலாற்றை நினைவுகூரும் விதமாக இந்த நிகழ்வு உள்ளது. மொழிக்காக, இனத்துக்காக உயிர்மாய்த்துக்கொள்ளும் இனமாகத் தமிழினம் எத்தனை ஆண்டுகளுக்கு வாழவேண்டுமோ?.
தந்தையே நீ இல்லாது போனாய்!-இந்தத்
தமிழினம் சாகையில் நீ ஊமை ஆனாய்!
வெந்து கிடந்தன உடல்கள்!-இந்த
வேதனைக்கு அழுதன நாற்புறக் கடல்கள்!
என்ற புலவர் புலமைப்பித்தனார் வரிகளும்
வடக்கிலோ மேன்மேலும் அதிகார வீக்கம்
வருமான வீழ்ச்சியோ தெற்கினைத் தாக்கும்!
என்ற பெருஞ்சித்திரனார் வரிகளும் நினைவுக்கு வருகின்றன.
செவ்வாய், 27 ஜனவரி, 2009
புதுச்சேரி மாநிலத் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இணையம் பற்றிய அறிமுகம்
பயிற்சிபெறும் ஆசிரியர்கள்
பயிற்சிபெறும் ஆசிரியர்கள்
புதுச்சேரி அரசு தமிழாசிரியர் பணி வழங்கி அவர்கள் பணியேற்கும் முன்பாக ஒரு புத்தொளிப்பயிற்சி வழங்கி அவர்களைத் தகுதியுடைய ஆசிரியப்பெருமக்களாக வகுப்பறைக்குள் அனுப்புகிறது.அவ்வகையில் பல அணியினர் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர்.
அண்மையில் இரு அணியினருக்கு யான் தமிழ் இணையம் பற்றிய பயிற்சியளிக்கும் வாய்ப்பு அமைந்தது.ஒவ்வொரு அணிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்தனர். இவர்களுக்குத் தமிழ்த்தட்டச்சு,எ.கலப்பை,தமிழில் வெளிவரும் இணைய இதழ்கள்,தமிழ்மரபு அறக்கட்டளை,மதுரைத்திட்டம்,விருபா,வலைப்பூ,உருவாக்கம்,தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டிஉள்ளிட்ட திரட்டிகள்,மின்னஞ்சல்,உராயாடல் உள்ளிட்ட பல செய்திகளைச் சொல்லியும் படக்காட்சி வழி விளக்கியும் தமிழ் இணையம் வளர்ந்து வந்துள்ள வரலாற்றை விளக்கினேன்.
பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.பயிற்சியில் ஆர்வமுடன் ஐயங்களை எழுப்பித் தெளிவு பெற்றனர்.பல வகைப் பயிற்சிகள் பெற்ற இவர்களுக்கு இணையத்தில் தமிழ் வளர்ந்துவரும் முறைபற்றி அறிந்ததும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
முனைவர் இராச.திருமாவளவன்(ஒருங்கிணைப்பாளர்)
புதுவை மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் தமிழ் இணையம் சார்ந்த செய்திகள் ஆசிரியர்கள் வழியாகச் செல்ல வழிவகை செய்தவர் முனைவர் இராச.திருமாவளவன் அவர்கள் ஆவார். இவர்தான் பயிற்சிக்குரிய ஒருங்கிணைப்பாளர்.தமிழ்ப்பற்றுடைய இவர் இலக்கண, இலக்கியங்களில் பரந்துபட்ட பேறிவுடையவர்.காலத்துக்கேற்ற புதுமைகளையும் விரும்புபவர்.
பயிற்சியளிக்கும் யான்
திங்கள், 26 ஜனவரி, 2009
மருத்துவமனையில் ஒரு தமிழ் அரிமா...குடந்தைக் கதிர் தமிழ்வாணன் அவர்கள்.
குடந்தைக் கதிர் தமிழ்வாணன் அவர்கள்.
புதுச்சேரியில் எங்கள் இல்லத்திற்கு நேற்று அண்ணன் சனதா மாணிக்கம் அவர்கள் வந்திருந்தார். இவர் எங்கள் ஊரில் சனதா மளிகை(சனதா கட்சி தொடங்கப்பட்ட அன்று ஒரு சிறுகடை வைத்தார்.அன்று முதல் அவருக்குச் சனதா என்ற பெயர் நிலைத்துவிட்டது)என்ற ஒரு மளிகைக்கடையும்,சனதா அழகுப்பொருள் அங்காடி என்று ஒரு கடையும் வைத்துள்ளார்.
பொதுப்பணிகளில் ஆர்வம் காட்டுபவர்.அதனால் ஊரினரின் எதிர்ப்புகளைக் கணக்கின்றிப் பெற்றவர்.அவரின் நேர்மைக்குத் தண்டனையாகும்படி ஒரு முறை அவர் வீடு,மளிகைக்கடை எல்லாம் சமூக எதிரிகளால் அடித்துநொறுக்கப்பட்டது.அவர் கையில் வீச்சரிவாள் பாய்ந்தது. அப்படிப்பட்ட நிலையிலும் துணிச்சலுடன் நின்று (சிங்கத்தை அதன் குகையில் சென்று) கண்டவர்.
சனதா சி.மாணிக்கம்
எங்கள் ஊரான உள்கோட்டையில் தந்தை பெரியார் சிலையைத் தனியொருவராக நின்று அமைத்தவர்.பல மாணவர்கள் படிக்க உதவியவர்.தானே வலிய சென்று உதவுவது இவர் இயல்பு.அவ்வாறு உதவி பெற்றவர்கள் யாரும் அவர் உதவியை நினைவு கூர்ந்தது இல்லை. மாறாக அவரிடம் பகைமை பாராட்டித் தொல்லை தருவர்.இவற்றையெல்லாம் வாழ்நாள் முழுவதும் கண்ட இவர் தொடர்ந்து பனைமரம்போலும் உதவிக்கொண்டே இருப்பவர்.
புதுச்சேரிக்கு நான் பணிமாறுதல் பெற்று வந்த பிறகு மாதம் ஒருமுறை வந்து எங்களை மகிழ்வூட்டுவது அவர் இயல்பு.இந்த முறையும் புதுச்சேரியில் நடைபெறும் முப்பெரும் விழாவில் ஆசிரியர் கி.வீரமணி ஐயா அவர்கள் உரையாற்ற உள்ளதாகவும் அதன்பொருட்டுத் தாம் வந்ததாகவும் கூறினார்கள்.அத்துடன் குடந்தைக் கதிர் தமிழ்வாணன் அவர்கள் உடல்நலமின்றி இங்குதான் மருத்துவமனையில் உள்ளதாகவும் கூறினார்.
புதுச்சேரி சிப்மர் மருத்துவமனையில் காட்டியதாகவும் அங்கு மருத்துவர்கள் பார்க்கமுடியாது எனக் கூறியதால் மகாத்துமா காந்தி பெயரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் எனவும் கூறினார்.அப்படியென்றால் காலையில் சென்று ஐயாவைக் கண்டு வரவேண்டும் என்று திட்டமிட்டோம்.
25.01.2009 காலையில் புறப்பட்டு இருவரும் பேருந்தேறிப் புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள மகாத்துமா காந்தி மருத்துவமனையில் இறங்கும்பொழுது காலை 8.15 மணியிருக்கும். மருத்துவமனை மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.வணிக நோக்கில் செயல்பட்டாலும் அனைத்து வசதிகளையும் கொண்ட நான்கடுக்கு மாடியாக மருத்துவமனை மிகப்பெரியப் பரப்பில் அமைந்துள்ளது.நான்காம் மாடிக்குத் தூக்கி வழியாகச் சென்றோம்.கதிர் ஐயா அவர்களின் பேச்சொலி யானையின் பிளிறல்போல் இருக்கும்.அக்குரல் ஒலி சன்னமாகக் கேட்டது.ஒலியின் ஓசை வந்த திசையில் நடந்து சென்று ஐயாவைக் கண்டு வணங்கினோம்.
அண்ணன் சனதா மாணிக்கம் கையை ஐயா அவர்கள் பற்றிக்கொண்டு உணர்வு வயப்பட்டு தெரிந்தார்கள்.என்னைக் கண்டதும் உணர்வு மேலிட்டு ஆரத் தழுவ முயன்றார்கள். அமைதிப்படுத்தி இருக்கச் செய்து ஐயாவை மெதுவாகப் படுக்கையிலிருந்து எழுந்திருக்க உதவினோம்.கிழங்குபோல் இருந்த உருவம் வாடிய கீரைத்தண்டு போல் இருந்தது.கால்,கை வீக்கம் இருந்தது.மாம்பழத்தை அழுத்தினால் என்ன தன்மையில் இருக்குமோ அந்தத் தன்மையில் இருந்தது.சிறுநீரகம் சரியாக இயங்காததால் இந்த நிலை என்றார்கள்.
அவர்களின் துணைவியார் தனியே எங்களை அழைத்து இரண்டு சிறுநீரகங்களும் பழுதுபட்டன. குருதியைக் கிழமைக்கு ஒருமுறை தூய்மை செய்யவேண்டும் என்றனர். அதற்குத் தொகை மிகுதியாகச் செலவாகும் என்றனர்.அதுவும் புதுச்சேரியில் தங்கி ஆண்டுக் கணக்கில் பார்க்க இயலாது எனக் குடும்ப நிலையைச் சொன்னார்கள்.மூன்று நாளாக தீவிரப் பண்டுவப்பிரிவில் வைத்திருந்தனர் எனவும் நேற்றுதான் பொதுப்படுக்கைக்கு மாற்றினர் எனவும் கூறினார். இவ்வாறு ஐயா நலம்பெற உதவியவர் தம் இளவல் கதிர் முத்தையனார் அவர்கள் என்று எடுத்துரைத்தார்.ஐயாவுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சுவாங்கியது.
நாங்கள் அவர்களிடம் நலம் வினவவும் அவர்கள் எங்களை நலம் வினவவுமாக மெதுவாகப் பேச்சுத் தயங்கித் தயங்கி வேகம் எடுக்கத் தொடங்கியது.பல நாள் பேச்சுக்கு உகந்த உணர்வுடையவர்கள் கிடைக்காததால் ஐயா பேச வாய்ப்பின்றி இருந்தார்கள்,மெதுவாக ஒவ்வொரு சொற்களாகத் தலைகாட்டத் தொடங்கிய அவர் பேச்சு வேகமெடுத்தது.
நான், "ஐயா நீங்கள் களைப்பாக இருக்கின்றீர்கள்.அமைதியாக ஓய்வெடுங்கள்.சிறிதுநேரம் கழித்துப்பேசுவோம்" என்றேன்.அதை அவர்கள் மனத்தில் வைக்கவில்லை.தமிழின் நிலை பற்றியும்,தம் தமிழ்ப்பற்றுக்குக் காரணமான ஆசிரியர்கள் பற்றியும் தாம் செய்த தமிழ்ப்பணிகள் பற்றியும் சற்றொப்ப இரண்டு மணிநேரம் பேசி ஓய்ந்தார்கள்.இதற்குப் பிறகும் பேசினால் ஐயா அவர்களுக்கு உடல் மிகவும் பாதிக்கும் என அஞ்சி அவர்களை அமைவுப்படுத்தி மெதுவாக விடைபெற்றோம்.
குடந்தைக் கதிர் தமிழ்வாணன் யார்? அவரின் வியத்தகு பணிகள் என்ன? தமிழக வரலாற்றில் அவர் இடத்தை நிரப்ப ஆள் உள்ளனரா? அவருக்கும் எனக்குமான தொடர்பு என்ன? அவருக்குத் தமிழ் உணர்வுடையவர்களாகிய நாம் இப்பொழுது உடன் என்ன செய்யவேண்டும்? என்பன பற்றியெல்லாம் அடுத்த பதிவில் இடுவேன்.
திரு.கதிர்.தமிழ்வாணனார் செல்பேசிஎண்:
+91 9487077184
திரு.கதிர்.முத்தையனார்(இளவல்) செல்பேசி எண்:
+91 9944478763
ஞாயிறு, 25 ஜனவரி, 2009
நாடகத் தமிழறிஞர் முனைவர் சி.மௌனகுரு(இலங்கை)
முனைவர் சி. மௌனகுரு
பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பட்டமளிப்பு விழாக்கள் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கிற்கு வரும் ஆளுநர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களைத் துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட உயர்பொறுப்பில் உள்ளவர்கள் இசைக்கருவிகள் முழங்க அழைத்து வருவார்கள்.அவ்வாறு அழைத்துவரும்பொழுது ஆங்கிலேயர் காலத்திலிருந்து "பேண்டு"இசைக்கருவிகள் முழங்குவதுதான் தமிழகத்தில் வழக்கில் உள்ளது. பிற பல்கலைக் கழகங்களிலும் அவ்வாறுதான் நடக்கின்றன.
இலங்கையில் உள்ள மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் அவ்வாறுதான் பட்டமளிப்பு விழாக்கள் நடந்தன. ஆனால் பல்கலைக்கழக ஆளவையின் இசைவுடன் தமிழர்களின் மரபுவழிப்பட்ட பெரும்பறை, சிறுபறை, தப்பட்டை, மேளம், உடுக்கு, மத்தளம், நாதசுரம், சொர்ணாளி, புல்லாங்குழல், சிறுதாளம், பெரும்தாளம், மிருதங்கம், சங்கு, எக்காளம், சிலம்பு, சேகண்டி, அம்மனைக்காய், சவணிக்கை, கூத்து, பரதம், கழிகம்பு உள்ளிட்ட இசைக்கருவிகள் முழங்கவும் தமிழர்களின் மரபுவழி உடையுடனும் இசைக் கலைஞர்கள் முன்னே வரப் பட்டமளிப்பு விழாவுக்கு வரும் விருந்தினர்களைப் பழங்கால அரசர்களைக் குடிமக்கள் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியுடன் அழைத்துவருவதுபோல் இன்று நடப்பது தமிழர்களாகிய நமக்குத் தேன்பாய்ந்த செய்தியாகும்.
ஆங்கிலேய மரபிலிருந்து காலத்திற்கு ஏற்ப நம் மரபைப் புதுப்பித்துக் கொள்வது தவறாகாது என்ற சிந்தனையை விதைத்தவர் ஈழத்தில் நாடகம், கூத்துக் கலைகளில் வல்ல பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் ஆவார். ஈழத்தில் தமிழர்களின் பண்பாட்டுக் கலைகள் இன்றும் சிற்றூர்ப்புறங்களில் கலப்பில்லாமல் வழங்கப்படுகின்றன. மண்ணின் மணம் மாறாமல் அக் கலைகளை உயிர்ப்பிக்கும் பணிகளில் தம்மை ஒப்படைத்துக்கொண்டு பணிபுரிபவர் சி.மௌனகுரு.
இவர் ஆய்வாளராகவும் கூத்துக் கலைஞராகவும், பேராசிரியராகவும் கவிஞராகவும், ஆளுமைத்திறம் வாய்ந்த கல்வியாளராகவும் விளங்கி ஈழத்துக் கலை மரபுகளை மீட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவித்துத் தமிழர்களின் கலையுணர்வு அழியாமல் காத்த பெருமைக்கு உரியவர். கூத்துகள், நாடகங்கள்,நாட்டுப்புற இசைகள், இசைக்கருவிகள் யாவும் ஆவணப்படும் வகையில் பல நூறு குறுவட்டுகளில் ஆவணப்படுத்தி வைத்துள்ள அறிஞர். ஆழிப்பேரலையில் தம் ஆய்வுச் செல்வங்களை இழந்த போதிலும் தப்பியவற்றைக் கொண்டு தமிழ்ப்பணியில் தொய்வின்றி இயங்குகிறார். அவர்தம் வாழ்க்கையை எண்ணிப்பார்ப்போம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சீலாமுனை என்ற சிற்றூரில் வாழ்ந்த சின்னையா
- முத்தம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாக 09.06.1943 இல் பிறந்தவர். அமிர்தகழி மெதடிசு மிசன் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை பயின்றவர்(1948-53). ஐந்தாம் வகுப்பில் புலமைப் பரிசில் பெற்று வந்தாறுமூலையில் உள்ள நடுவண்(மத்திய) கல்லூரியில் பயின்றவர். ஆறாம் வகுப்பு முதல் பள்ளியிறுதி வகுப்புவரை அங்குப் பயின்றவர். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நாடகம் நடிப்பதில், பேச்சாற்றலில் வல்லவராக விளங்கினார். தலைமை தாங்கும் பண்பு கைவரப் பெற்றிருந்தார்.
தந்தையார் சிற்றூர்ப்புறக் கலைகளில் ஈடுபாடு கொண்டவராக விளங்கியதால் மௌனகுரு அவர்களுக்கும் இக்கலைகளில் ஈடுபாடு இயல்பாகவே இருந்தது. பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை(ஆனர்சு) (1961-65), முதுகலை(1970-73) பட்டம் பெற்றவர். கொழும்பில் உள்ள இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல்(1975-76), யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம்(1980-84)பெற்றவர்.
1966-70 வரை ஆசிரியர் பணிபுரிந்த மௌனகுரு அவர்கள் 1971-75 வரை கொழும்பில் பாடநூல் எழுதும் பொறுப்பில் இருந்தார். 1976-81 வரை மீண்டும் ஆசிரியர் பணிபுரிந்தார். யாழ்ப்பாணம் பலாலியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த (1982-83) இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறையில் துணை விரிவுரையாளராகப் பணிபுரிந்தார் (1984-88). பின்னர் முதுநிலை விரிவுரையாளராகப் பணி உயர்வு பெற்று 1989-91 வரை பணிபுரிந்தார்.
1991 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். நுண்கலைத்துறையின் தலைவராகவும், கலைப்புல முதன்மையராகவும் திறம்படப் பணிபுரிந்துள்ளார். 1997 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறுப்புத் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர். அதன் பிறகு கலைப்புலத் தலைவராகத் தொடர்ந்து பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
சுவாமி விபுலானந்தர் இசைக்கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராகவும் பெருமையுறப் பணிபுரிந்தவர்(2003-05).
யாழ்ப்பாணத்தில் பதினேழு ஆண்டுகளும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதினேழு ஆண்டுகளும் பணிபுரிந்த சி.மௌனகுரு மிகப்பெரிய சாதனைகளைத் தாம் சார்ந்த துறையில் நிகழ்த்தியுள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் மொழியால் இனத்தால் ஒன்றுபட்டவர்களாக இருந்தாலும் கலை, பண்பாடுகளுக்கு இடையே வேறுபாடுகளைக் கொண்டவர்கள்.
மாவட்டத்துக்கு மாவட்டம் வழிபாடு, சடங்குமுறைகள், பண்பாட்டில் வேறுபாடு உண்டு. அவரவர்களுக்கும் தனித்த அடையாளங்கள் உண்டு.இவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு தம் ஆய்வுகளை நிகழ்த்தியதுடன் இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களிடம் உள்ள கூத்துகள், நாடகங்கள் பற்றிய பேரறிவும் மௌனகுருவுக்கு உண்டு. அதுபோல் தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் வழங்கப்படும் கூத்து, நாடக மரபுகளை அறிந்தவர். தமிழகத்தில் உள்ள தெருக்கூத்து பற்றி அறிந்தவர். நாடகத்துறை சார்ந்த அறிஞர்கள் பலரும் மௌனகுருவுக்கு நல்ல நண்பர்கள்.
தமிழகத்தில் வழங்கப்படும் தெருக்கூத்துகள் பலவற்றைக் காண்பொளியில் பதிவு செய்து பாதுகாத்த மௌனகுரு ஆழிப்பேரலையின் பொழுது இவற்றைப் பறிகொடுத்ததை மிகப்பெரிய இழப்பாகக் கருதுகிறார்.தமிழ்க்கூத்து மரபுகள் சிங்களத்தில் எந்த வடிவில் வழங்குகிறது என்பதையும் தமிழர் இசை,இசைக்கருவிகள் என்ன பெயரில் வழங்குகின்றன என்பதையும் சிறப்பாக விளக்கிக்காட்டும் ஆற்றல் பெற்றவர்.சிங்களக் கலைஞர்களுடன் இணைந்தும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். இலங்கையில் தமிழ்க்கலைகளும் சிங்களக்கலைகளும் எந்த வகையில் உறவுடையன என்பதைக் கற்று வல்லவர்கள் ஒப்பும்படி மெய்பித்துக்காட்டியவர்.
மௌனகுரு இலங்கைத்தமிழர்கள் பயன்பெறும்படி பல கூத்துகளை நிகழ்த்திக் காட்டியுள்ளார். பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.பல நாடகங்களை எழுதி வழங்கியுள்ளார்.நாடகம், கூத்துத் தொடர்பிலான பல நூல்களை எழுதியுள்ளார். தொன்மம்(புராண),பழங்கதை(இதிகாசம்), வரலாறு, சமுதாயம் சார்ந்த பல கதைகளை நாடகமாக, கூத்துகளாக அரங்கேற்றியுள்ளார். மௌனகுரு குழந்தைகளுக்காகப் பல நாடகங்களை உருவாக்கி நடித்தவர். தப்பி வந்த தாடி ஆடு என்ற நாடகம் புகழ்பெற்ற நாடகமாகும்.இந்நாடகம் கல்வி நிறுவனங்களில் இவருக்கு நல்ல புகழை ஈட்டித் தந்ததுடன் பல உயர் பரிசில்கள் கிடைக்கவும் வழிவகுத்தது.
ஆதிச்சநல்லூரில் பேராசிரியர் மௌனகுரு
மௌனகுரு அவர்கள் செய்த பல நாடக,கலை,இலக்கிய முயற்சிகளுக்கு எதிர்ப்புகள் அவ்வப்பொழுது கிளம்பி அடங்கியுள்ளதையும் அறியமுடிகிறது.கிழக்குப் பகுதியில் இடம்பெறும் கண்ணகையம்மன் வழிபாட்டில் இடம்பெறும் குளிர்த்திப்பாடல்களுக்குப் பொதுவான ஓர் இசையை உருவாக்கிப் பயன்படுத்தியபொழுது புனிதமாக கருதப்பட்ட பாடலைச் சந்திக்கு இழுத்து வந்துவிட்டதாகவும்,இசையைக் கெடுத்துவிட்டதாகவும் கூறியவர்கள் உண்டு.அதுபோல் இன்னிய அணி உருவாக்கலின் பொழுது இவ்வணி எழுப்பிய இசையில் சிங்கள இசை,கருவிகளுக்கு முதன்மையுள்ளன எனச் சிலர் தவறான கருத்துப் பரப்பியதும் உண்டு. இவற்றுக்கெல்லாம் சலிப்பன்றித் தமிழ் மக்களின் மரபுசார்ந்த செய்திகளைக் காலத் தேவைக்கேற்ப மீட்பதில் கவனமாக இருந்தார்.
"புதியதொரு வீடு" ,"சங்காரம்","இராவணேசன்" உள்ளிட்ட நாடகங்கள் இவருக்கு நிலைத்த புகழ் தரும் நாடகங்களாகும்.
மௌனகுரு அவர்கள் தான்மட்டும் நாடகம் கூத்துத்துறைகளில் வல்லவராக அமையாமல் தம் மாணவர்கள்,சார்ந்தவர்கள் என யாவரையும் இக்கலையில் பயிற்றுவித்து வளர்த்தவர்.
புத்துயிர்ப்பு, மழை, தப்பி வந்த தாடி ஆடு, சரிபாதி, வேடனும் புறாக்களும், சக்தி பிறக்குது, நம்மைப் பிடித்த பிசாசுகள், ஒரு முயலின் கதை, ஒரு உண்மை மனிதனின் கதை,கலையில் உயிர்க்கும் மனிதன், புதியதொரு வீடு, பரதமும் கூத்தும், இலங்கைத் தமிழர் கூத்துகள், கண்ணகி குளிர்த்தி,கிழக்கு ஆட்டங்கள், கிழக்கிசை, வடமோடி, தென்மோடி ஆட்ட அறிமுகம், இலயம் என்னும் பெயரில் உருவாக்கியுள்ள இசை, கூத்து தொடர்பான படைப்புகள் பேராசிரியரின் ஆழ்ந்த கலை உணர்வை வெளிப்படுத்தவல்லன.
இவற்றுள் புத்துயிர்ப்பு , மழை , தப்பி வந்த தாடி ஆடு,சரி பாதி, வேடரும் புறாக்களும் ,சக்தி பிறக்குது,நம்மைப் பிடித்த பிசாசுகள், பரபாஸ், ஒரு உண்மை மனிதனின் கதை, சங்காரம், இராவணேசன்,வனவாசத்தின் பின் என்பன அச்சுவடிவம் கண்டன.
மௌனகுரு கூத்து, நாடகம் இவற்றை வகுப்பறைகளுடன் நிறுத்திக்கொள்ளாமல் பல்வேறு பயிலரங்குகள் நடத்தி மாணவர்களுக்குப் பயிற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்(1984), சடங்கிலிருந்து நாடகம் வரை (1985), மௌனகுருவின் மூன்று நாடகங்கள்(1985),தப்பி வந்த தாடி ஆடு(1987)பழையதும் புதியதும்- நாடகம் அரங்கியல்(1992),சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும்(1992), சங்காரம்- ஆற்றுகையும் தாக்கமும்- (நாடகம்)(1993),ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு(1993), கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் -நீலாவணன்(1994), கலை இலக்கியக் கட்டுரைகள்(1997), சக்தி பிறக்குது - நாடகம் (1997), பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திராவும் ஈழத்து நாடக மரபும்(1998), இராவணேசன் -நாடகம்(1998), மடக்களப்பு மரபுவழி நாடகங்கள்(1998), அரங்கு ஓர் அறிமுகம் -இணை ஆசிரியர்(2000), சுபத்திரன் கவிதைகள் (தொகுப்பாசிரியர்) (2001), வனவாசத்தின் பின் நாடகம் (2002),மட்டக்களப்பு தமிழகத்தில் இந்துப் பண்பாடு -பதிப்பாசிரியர் (2003),அரங்கியல்(2003), ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு (2வது திருத்திய பதிப்பு) (2004), என்ற நூல்களின் ஆசிரியராகவும் விளங்குகிறார்.
மரபுவழி நாடகம் நூல்
மௌனகுரு அவர்களின் நாடகங்களுள் குறிப்பிடத்தக்கது இராவணேசன் நாடகம் ஆகும்
.மௌனகுரு அவர்களிடம் காணப்படும் கூத்து,இசை,பாடல்,தாளம் குறித்த பேரறிவை விளக்கும் நாடகமாக இது மிளிர்கிறது. இராவணனின் துன்ப வாழ்க்கையை அழுகைச்சுவை ததும்ப இவர் உருவாக்கியுள்ளது போற்றற்குரியது.இராவணன் வாழ்க்கையை நடுவணாகக் கொண்டு பல்வேறு உட்பொருள்களை, அதன் உள்ளே கலைக்கூறுகள் பொருந்த வைத்துள்ளமையை எண்ணி எண்ணி மகிழவேண்டியுள்ளது. பல கலைஞர்கள் அந்த அந்தக் கதைமாந்தர்களாகவே வாழ்ந்துள்ளனர்.
இலங்கையில் வழங்கும் பல்வேறு இசைக்கருவிகள், தென்மோடி,வடமோடிக் கூத்து மரபுகள் அமைக்கப்பட்டு அந்த நாடகத்தில் இலங்கையின் பல நிலை வாழ்க்கைக் கூறுகளைப் பதிவு செய்துள்ளார்.
இராமன், இராவணன் சண்டைக்காட்சியில் இடம்பெற்றுள்ள தாள அடைவுகள், உணர்ச்சியோட்டங்கள் காண்பவரை வியப்பில் ஆழ்த்துகின்றன. நாடகத் தமிழிற்கு ஈழத் தமிழர்களின் பங்களிப்பு எந்த அளவு உயர்வாக அமைந்துள்ளது என்பதைக் காட்ட இந்த ஒருநாடகம் இணைசொல்ல முடியாதபடி அமைந்துள்ளது.
மௌனகுரு அவர்கள் நெஞ்சாங்குலை அறுவைப் பண்டுவம் செய்துகொண்ட நிலையிலும் ஆடியும் பாடியும் துள்ள்ளிக் குதித்தும் மாணவர்களைப் பழக்கியுள்ள பாங்கறியும்பொழுது இவரின் கலைக்காதல் புலப்படும்.
பேராசிரியர் மௌனகுரு அவர்களின் துணைவியார் சித்திரலேகா மௌனகுரு அவர்களும் மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிபவர். இவர்களின் மகன் சித்தார்த்தன் அவர்களும் கலையுணர்வு நிரம்பப்பெற்றவர்.
பேராசிரியர் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, சு.வித்தியானந்தன் ஆகிய மூவரின் சேர்ந்த கலை உருவாக மௌனகுரு நமக்குத் தெரிகிறார். இவர் திறமை உணரும் எதிர்காலத் தமிழர்கள் பல நூற்றாண்டுகள் இவரை வாயாரப் பேசிக்கொண்டே இருப்பார்கள்.
மௌனகுரு அவர்கள் தமிழ், ஆங்கிலம் வல்லவர். தமிழில் பலநூல்களை எழுதியுள்ளதுபோல ஆங்கிலத்திலும் பல மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார். இவை யாவும் நாடகத்திற்கு ஆக்கம் சேர்க்கும் நூல்களாகும்.
இவரிடம் பல மாணவர்கள் உருவாகியுள்ளனர்.அவர்களுள் யாழ்ப்பாணத்தில் சிதம்பரநாதன், பாலசுகுமார், கணேசன், செயசங்கர், காலம் சென்ற செல்வி, பா.அகிலன், கனகரத்தினம், (வளநாடன்) சோ.தேவராசா அவர் மனைவி கலாலட்சுமி, இளங்கோ போன்றோரையும் மட்டக்களப்பில் சீவரத்தினம், அன்பழகன், சதாகரன், இன்பமோகன், பிரியந்தினி, ரவிச்சந்திரன், தவராசா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்கள் அனைவரும் நாடகத் துறையில் இன்றும் ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள்.
மௌனகுரு சற்றொப்ப முப்பது நாடகங்களில் நடித்துள்ளார். பத்து நாடகங்கள் எழுதியுள்ளார். இருபது நாடகங்கள் இயக்கியுள்ளார். மௌனகுரு அவர்களின் நாடகப்புலமை இவருக்குத் தேசிய அளவில் பரிசில்கள் பலவற்றை வாங்கித் தந்துள்ளது.
குழந்தைகளுக்கான நாடகம் உருவாக்கியமைக்கும், இலக்கிய ஆராய்ச்சிக்கும், நாடக அரங்கப் பணிக்காகவும் எனப் பலமுறை பரிசு பெற்றுள்ளார்.
பல்வேறு பல்கலைக்கழகங்கள் அனுப்பும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் பணிபுரிந்துள்ளார்.இலங்கைப் பல்கலைக்கழகங்கள் சார்ந்த பல்வேறு கல்விக்குழுக்களிலும் இணைந்து பணிபுரிந்துள்ளார்.தமிழ் நாடகம்,கூத்து வரலாற்றில் என்றும் நின்று நிலவும்பெயராக மௌனகுரு அவர்களின் பெயர் விளங்கும்.
நனி நன்றி:
தமிழ் ஓசை களஞ்சியம், அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 18, 25.01.2009
http://monaguru.blogspot.com/
முனைவர் அம்மன்கிளி முருகதாசு
வியாழன், 22 ஜனவரி, 2009
முதலாவது பன்னாட்டுச் செவ்வியல்மொழி மாநாடு-கருத்தரங்கம்
திருச்செங்கோடு கே.எசு.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வரும் 2009 ஏப்பிரல் மாதம்25,26 இருநாள் நடைபெற உள்ளது.கருத்தரங்கின் மையப்பொருள் செவ்வியல் - மொழிகள், இலக்கணங்கள், இலக்கியங்கள் என்பதாகும்.கருத்தரங்கில் படிக்கத் தக்க கட்டுரையைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஐந்து முதல் பத்துப் பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சில் அனுப்பவேண்டும்.
பதிவுக்கட்டணம் பேராசிரியர்கள் 300-00 உருவா.ஆய்வுமாணவர்கள் 200-00 உருவா.
THE PRINCIPAL,K.S.R.COLLEGE OF ARTS AND SCIENCE,TIRUCHENGODE என்ற பெயருக்கு வரைவோலை அமைதல்வேண்டும்
பங்கேற்பாளர்கள் 25.02.2009 நாளுக்குள் பணம்,கட்டுரை அனுப்பிவைக்கவேண்டும்.
தொடர்பு முகவரி:
முனைவர் இரா.சந்திரசேகரன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
கே.எசு.ஆர்.கலை,அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு-637215
தமிழிநாடு,இந்தியா
என்னும் முகவரியில் தொடர்புகொள்ளலாம்
செல்பேசி :+91 9443551701
மின்னஞ்சல் : tamilchandru@yahoo.com
மேலும் விவரங்களுக்கு,அழைப்பிதழுக்குக் கல்லூரியின் வலைப்பூவைக் காண்க!
பதிவுக்கட்டணம் பேராசிரியர்கள் 300-00 உருவா.ஆய்வுமாணவர்கள் 200-00 உருவா.
THE PRINCIPAL,K.S.R.COLLEGE OF ARTS AND SCIENCE,TIRUCHENGODE என்ற பெயருக்கு வரைவோலை அமைதல்வேண்டும்
பங்கேற்பாளர்கள் 25.02.2009 நாளுக்குள் பணம்,கட்டுரை அனுப்பிவைக்கவேண்டும்.
தொடர்பு முகவரி:
முனைவர் இரா.சந்திரசேகரன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
கே.எசு.ஆர்.கலை,அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு-637215
தமிழிநாடு,இந்தியா
என்னும் முகவரியில் தொடர்புகொள்ளலாம்
செல்பேசி :+91 9443551701
மின்னஞ்சல் : tamilchandru@yahoo.com
மேலும் விவரங்களுக்கு,அழைப்பிதழுக்குக் கல்லூரியின் வலைப்பூவைக் காண்க!
திங்கள், 19 ஜனவரி, 2009
தமிழ்-சப்பானிய மொழியறிஞர் சுசுமு ஓனோ(23.08.1919 -14.07.2008)
சுசுமு ஓனோ
உலகில் முன்னேறிய நாடுகளில் சப்பான் நாடு குறிப்பிடத் தகுந்தது. சப்பானியர்களின் கடும் உழைப்பும் சுறுசுறுப்பும் நேர்மையும் இவர்களுக்கு உலக அளவில் நற்பெயரைப் பெற்றுத் தந்தன. அறிவாற்றலிலும் தொழில்நுட்பத்திலும் முன்னணியில் இருக்கும் இவர்கள் மொழி, பண்பாட்டாலும் உயர்வுடையவர்கள் என்ற உண்மை தெரிந்ததும் மிக மகிழ்ந்தனர்.
ஆம். சப்பானிய மொழி உலகில் எந்த மொழிக்குடும்பத்துடன் உறவுடையது என்ற ஆய்வில் ஈடுபட்டபொழுது மொழியியல் அறிஞர்கள் தொடக்கத்தில் பல மொழிகளைச் சப்பானிய மொழியுடன் உறவுடையது என ஆராய்ந்து உரைத்தனர். ஆனால் அடுத்தடுத்து நிகழ்ந்த ஆய்வுகளில் அந்தச் செய்திகள் மறுக்கப்பட்டன. சப்பானிய மொழி தமிழ்மொழியுடன் தொடர்புடையது என்ற ஆய்வு முடிவைப் பல்வேறு சான்றுகளுடன் முன்வைத்தபொழுது சப்பானியர்களும் மொழியாராய்ச்சி உலகினரும் மகிழ்ச்சியடைந்தனர்.
பல வகையிலும் சிறப்புப் பெற்ற தாங்கள் உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியுடன் உறவுடையவர்கள் என்று நினைத்துப் பேருவகை அடைந்தனர். இப்பெருமைக்குரிய ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டவர் அறிஞர் சுசுமு ஓனோ அவர்கள் ஆவார். அவர்தம் வாழ்க்கையை இங்கு எண்ணிப்பார்ப்போம்.
டோக்கியோவில் 23.08.1919 இல் பிறந்த சுசுமு ஓனோ அவர்கள் பழங்கால சப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்தவர். 1943 ஆம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1944 இல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியத் தொடங்கினார். 1952 ஆம் ஆண்டு காக்சுயின் பலைகலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியில் உயர்ந்தார். அந்தப் பணியுடன் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1953 இல் விரிவுரை நிகழ்த்தியுள்ளார். 1960 இல் காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியுயர்வு பெற்றுத் தொடர்ந்து அங்குப் பணிபுரிந்தார்.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு பழஞ்சுவடியை ஆராய்ந்து இவர் வெளியிட்டதைச் சப்பானிய அறிஞர்கள் போற்றி இவருக்கு முனைவர் பட்டம் வழங்கினர். இந்த ஆய்வு 1950 இல் ஓர் ஆராய்ச்சி இதழில் வெளிவந்துள்ளதாக அறிஞர் பொற்கோ குறிப்பிடுவார். கியோட்டோ பல்கலைக்கழகம் வழியாக இவர் முனைவர் பட்டம் பெற்றவர் (1952). சுசுமு ஓனோ பழஞ்சுவடிகளை ஆராய்வதில் பேரறிவு பெற்றவர். சொல்லாராய்ச்சி, அகராதிகளில் ஈடுபாடு உடையவர். இவர் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட சப்பானிய அகராதியின் படிகள் சப்பானில் பல்லாயிரக்கணக்கில் விற்கப்பட்டன. 1981 இல் இவர் வேறொரு அறிஞருடன் இணைந்து உருவாக்கிய சப்பானிய ஒருபொருட் பன்மொழி அகராதி ஓர் ஆண்டில் இலட்சம் படிகள் விற்றனவாம்.
"சப்பானிய மொழியின் தோற்றம்" என்ற ஒரு நூலை உருவாக்கி 1957 இல் வெளியிட்டவர். இந்த நூல் ஐந்து இலட்சம் படிகள் விற்றனவாம். இந்த நூலின் வருகைக்குப் பிறகு சப்பான்மொழி பற்றி அறியும் வேட்கை சப்பானியர்களுக்கு உருவானது.
ஓனோ அவர்கள் பதினொரு ஆய்வு நூல்களை வெளியிட்டவர். ஏழு நூல்களைப் பிற அறிஞர்களுடன் இணைந்து பதிப்பித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.
பேராசிரியர் சிங்கிச்சி காசிமொத்தோ அவர்களின் மேல் சுசுமு ஓனோ அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு. அவர் வழியாகவே சப்பானிய மொழியாராய்ச்சியில் ஓனோ அவர்கள் ஈடுபட்டார். ஆய்வு ஈடுபாடும் மொழிப்புலமையும் கொண்ட ஓனோ அவர்கள் மொழி வரலாற்று ஆய்வு, இலக்கண ஆய்வு, தொன்மையான சப்பானிய இலக்கிய ஆய்வுகளில் நல்ல ஈடுபாடு உடையவர்.
1957 இல் அவர் சப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் தொடங்கினார். அவர் சப்பானிய மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன் மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த மொழிகளுடன் அமைந்த எந்த மரபு சார் தொடர்புகளையும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. அப்போது அவர் கவனம் திராவிட மெழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் பொன். கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் சப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார்.
இரண்டாம் உலகப் போரின் பொழுது கல்வித்துறைக்கு இவர் மிகப்பெரிய பங்களிப்புச் செய்ததையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். டோக்கியோ காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றிய சுசுமு அவர்கள் மொழிக்கல்வி உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர். தமிழ் மொழிக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள உறவை 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து 1999 இல் தம் ஆய்வை நூலாக வெளியிட்டார். சப்பானிய மொழியில் வெளிவந்த அந்நூல் 20 இலட்சம் படிகள் விற்பனை ஆயின (நாம் நூல்களை அச்சிட்டுவிட்டு நூலகத் துறையின் ஆணைக்கு ஆண்டுக் கணக்கில் காத்துக்கிடப்பதை எண்ணி வருந்துக).
தமிழ் படிக்கத் தமிழகத்திற்கு வந்த சுசுமு ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர். 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகச்சிறந்த ஆய்வு முடிவுகளை வெளியிடும் அளவிற்குச் சுசுமு ஓனோ அவர்களுக்குத் தமிழ் - சப்பானிய மொழி உறவு பற்றிய உண்மைகள் வெளிப்படத் தொடங்கின.
1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சப்பானிய மாந்தவியல் கழகத்தின் சார்பில் "சப்பானிய மொழிகளின் தோற்றம்" என்ற தலைப்பில் ஓனோ அவர்கள் டோக்கியோவில் உள்ள ஆசகி மண்டபத்தில் உரையாற்றினார். ஆசகி இதழில் இக்கட்டுரை வெளியானது. தமிழ் சப்பானிய மொழிகுறித்து வெளிவந்த முதல் கட்டுரையாக பொற்கோ இதனைக் குறிப்பிடுகிறார். கெங்கோ என்ற இதழிலும் 1980 சனவரி முதல் செப்டம்பர் வரை ஓனோ அவர்கள் தமிழ்-சப்பானிய உறவு பற்றி எழுதினார். இதன் விளைவாகத் தமிழ்-சப்பானிய மொழி உறவு பற்றி சப்பான் நாட்டில் ஒரு பரவலான அறிமுகம் ஏற்பட்டது.
ஆசகி என்ற நாளிதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றைச் சப்பானில் உள்ள இந்தியத் தூதரகம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அந்நாள் துணைவேந்தர் முனைவர் தாமோதரனுக்கு அனுப்பியது. இதன் பிறகு துணைவேந்தரின் இசைவுடன் பொற்கோவும் ஓனோவும் இணைந்து தமிழ்-சப்பானிய மொழியாய்வில் ஈடுப்பட்டனர். மடல் வழியாக ஆய்வு முயற்சி நீண்டது. இந்த ஆய்வு பற்றி பொற்கோவுடன் கலந்துபேச ஓனோ அவர்கள் தனிப்பயணமாக 03.04.1980 இல் சென்னை வந்தார். இரண்டு நாள் உரையாடலுக்குப் பிறகு சப்பான் திரும்பினார்.
தமிழ் சப்பானிய மொழித்தொடர்பு பற்றிய பல உண்மைகள் புரியத் தொடங்கியதும் சப்பானிய ஒலிபரப்பு நிறுவனம் (Nippon Hoso Kyokay)) கள ஆய்வுப்பணிக்கு உதவ முன்வந்தது. ஆசகி என்ற செய்தித்தாள் நிறுவனமும் உதவ முன்வந்தது. 11.09.1980 இல் சப்பானிலிருந்து களப்பணிக்குக் குழு புறப்பட்டது.
ஒருமாத காலம் இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து களப்பணியாற்றித் தகவல் திரட்டியது. கள ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பிய ஓனோ அவர்கள் தம் குழுவினருடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடினர். பல்கலைக்கழக இசைவுடன் இந்தக் கலந்துரையாடலைச் சப்பான் என்.எச்.கே நிறுவனம் சப்பானிய தொலைக்காட்சிக்காகப் படம் எடுத்துக்கொண்டது.
தமிழகத்தில் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள், தரவுகள் யாவும் ஒழுங்குபடுத்தப் பட்டு 01.11.1980 இல் சப்பான் நாட்டில் ஒளிபரப்பானது. ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. தமிழ்மொழியுடனும் தமிழ்நாட்டுடனும் பலவகையில் தொடர்புகள் தங்கள் மொழிக்கு உள்ளது என்று உணர்ந்ததே சப்பானியர்களின் மகிழ்ச்சிக்ககுக் காரணம். இத்தகு பெருமைக்குரிய ஓனோவுக்கு மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்குச் சிறப்பு அழைப்பு அனுப்பத் தமிழக அரசு முடிவுசெய்தது. மாநாட்டின் பொது அரங்கில் இவர் கட்டுரை தமிழ் சப்பானிய மொழிக்கு இடையிலான உறவு பற்றி படிக்கப்பட்டது. இந்து, எக்சுபிரசு உள்ளிட்ட ஏடுகள் புகழ்ந்து எழுதின. இவ்வாய்வு முடிவில் உடன்பாடு இல்லாமல் சில அறிஞர்கள் இருந்துள்ளமையையும் அறியமுடிகிறது.
12.09.1980 ஆம் ஆண்டு இந்து நாளிதழில் "தமிழ் சப்பானிய மொழியில் திராவிடமொழிகளின் செல்வாக்கு" பற்றிய ஒரு கட்டுரையை எழுதினார். சப்பானிய மொழிகளின் வேர்ச்சொற்கள் தமிழில் இணைவதை விளக்க ஐந்நூறு சொற்களைச் சான்றாகக் காட்டி வேறொரு கட்டுரையும் வரைந்தார். இவையெல்லாம் தமிழுக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள உறவுகளை விளக்கும் வகையில் அமைந்திருந்தன. இக்காலத்தில் "உயிரிடைப்பட்ட வல்லொலிகள்" என்ற தலைப்பிலும், "மொழிமுதல் சகரம்" என்ற தலைப்பிலும் இவர் உருவாக்கிய ஆய்வுரைகள் சிறப்புடையனவாகும்.
ஓனோ அவர்கள் தமிழ்-சப்பானிய உறவு பற்றிய தம் ஆய்வுகள் குறித்துத் திராவிட மொழிகளைப் பற்றி நன்கு ஆராய்ந்த எமனோ, பர்ரோ அவர்களின் கருத்தறிய விரும்பினார். அதன்பொருட்டு அமெரிக்கா சென்று எமனோ அவர்களைக் கண்டு உரையாடினார். எமனோ அவர்கள் மிக மகிழ்ந்து இவ்வாய்வைப் பாராட்டினார். 1981 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகம் வந்து தம் ஆய்வைத் தொடர்ந்தார். "தமிழ் சப்பானிய ஒலி ஒப்புமை" என்ற ஒரு நூல் எழுதித் தம் ஆய்வை உலகிற்கு வழங்கினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு வந்த பிறகு பொற்கோ அவர்களின் நெறிப்படுத்தலில் பல வகையில் தம் ஆய்வுப் பணிகளை வரன்முறைப்படுத்தி ஈடுபட்டார். மொழி ஒப்பியல் வரலாற்றுக் கொள்கைகளை ஊன்றிப் படித்தார். திராவிட மொழியியலில் வெளிவந்த நூல்களைக் கற்றார். ஆழமாகத் தமிழ் மொழியையும் இலக்கண இலக்கியங்களையும் அறிந்தார்.
தமிழ்மொழிக்கும் சப்பானிய மொழிக்கும் மொழிக்கூறுகளில் ஒப்புமை இருப்பது போலவே இலக்கியப் பாடுபொருளிலும் ஒற்றுமை உள்ளதை உணர்ந்தார். நம் சங்க இலக்கியங்கள் போலச் சப்பானிய மொழியில் மங்யோசு என்ற தொகை இலக்கியம் உள்ளது. இரண்டு தொகைகளிலும் பாடுபொருள் ஒற்றுமை உள்ளது. தமிழ் சப்பானிய உறவுக்கு ஒலி அமைப்பு, சொல் அமைப்பு, சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றையும் தொல் இலக்கியங்களையும் சார்ந்து ஆய்வை வளர்த்துள்ளார். ஒலியாலும் பொருளாலும் ஒப்புமை உடைய நானூறு சொற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
(எ.கா)
நம்பு- நமு
யாறு- யற
நீங்கு-நிகு
உறங்கு-உரகு
கறங்கு-கரகு
அகல்-அகரு
அணை-அண
கல்-கர
எனச் சொல் ஒற்றுமை உள்ளன.
சுசுமு ஓனோ அவர்கள் சப்பானிய அரசின் பரிசும், பாராட்டும் பெற்றவர்.
இலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் சண்முகதாசு, பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசு ஆகியோரும் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளனர். மொழியியல் ஆய்வில் வல்ல பேராசிரியர் அ.சண்முகதாசு அவர்களும் பண்பாட்டு ஆய்வுகளில் சிறந்த அவர் மனைவி மனோன்மணி அவர்களும் ஓனோ அவர்களின் ஆய்வுக்குப் பல வகையில் உதவியவர்கள். மனோன்மணி அவர்கள் சுசுமு ஓனோவுடன் இணைந்து அரிய பணிகள் பலவற்றைச் செய்தவர் என்பதை இங்கு, கவனத்தில் கொள்ளவேண்டும்.
தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவைப் போலச் சப்பானில் அறுவடைத் திருவிழா நடைபெறுவதை எடுத்துரைத்தவர் சுசுமு ஓனோ. தமிழர்களின் திருவிழாவான பொங்கலைப் பற்றி ஆராயத் தொடங்கினார். பொங்கலை ஒத்த அதே நாளில் சப்பானில் ஒரு விழா நடைபெறுகிறது. அதனைச் சிறிய புத்தாண்டு (Koshogatsu) என்பர். விழா நாளில் கொங்கரா எனக் குரல் எழுப்புவர். எனவே இதனைக் கொங்கரா என்பர். தமிழ்நாட்டுப் பொங்கலுக்கும் சப்பானிய கொங்கராவிற்கும் மொழிவகையிலும் பண்பாட்டு வகையிலும் தொடர்பு உண்டு என்பதை உணர்ந்தார்.
1982 இல் தமிழகத்துப் பொங்கல் விழாவைக் கண்டு, இது சப்பானில் கொண்டாடப்படும் பொங்கலுடன் நெருக்கமாக உள்ளதை எண்ணி வியந்தார். நான்கு நாள் நடைபெறும் விழாக்களும் சப்பானில் நடைபெறும் விழாவும் எந்தவகையில் ஒற்றுமையுடையன எனக் கண்டு புலமை இதழில் (1981 திசம்பர்) எழுதினார். பழையனவற்றைக் கழித்தல், சிறுபறை முழக்கல், அரிசியிட்டுப் பொங்கலிடுதல், வாசற் பொங்லன்று காக்கைக்குச் சோறிடல், ’கொங்கரோ கொங்க’ என்று கூவுதல் ஆகிய நிகழ்வுகள் சப்பானில் நடைபெறுகிறதாம். மாடுகளுக்கு நாம் உணவு ஊட்டுவதுபோல் சப்பானில் சில பகுதிகளில் குதிரைக்கு உணவு ஊட்டுவது உண்டாம்.
தமிழுக்கும் சப்பான் மொழிக்கும் இடையில் இலக்கிய, இலக்கண, கல்வெட்டு, நாட்டுப்புறவியல் செய்திகளுடன் உள்ள உறவையும் வெளிப்படுத்தியவர். சப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள (கி.மு. 1300300) காலப்பகுதி கல்லறைகளுடன் ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1990 - களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அவரின் ஆய்வு முடிவுகள் இரு பண்பாட்டுக்குமிடையில் இலக்கியம், பண்பாட்டு நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் ஒற்றுமைத் தன்மைகள் வியக்கத் தக்க வகையில் இருந்தமையை வெளிப்படுத்தின.
இவருடைய பணியைப் பற்றி கமில் சுவலபில் அவர்கள் 1990 இல் சொன்னது : சப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்.
சென்னையில் தங்கியிருந்தபொழுது அவர் எழுதிய "உயிரிடை நின்ற வல்லினம்" என்ற கட்டுரை திராவிட மொழியியல் கழகத்தின் ஏட்டில் வெளிவந்தது. உலக அளவில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகள் மாநாடுகளில் கலந்துகொண்டு தமிழ் சப்பானிய உறவு பற்றிய கட்டுரை படித்தவர். தமிழகப் புலவர் குழு இவருக்குத் தமிழ்ச்சன்றோர் என்ற பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சப்பானிய மொழியைக் கற்பிக்க தில்லியிலிருந்து முனைவர் பாலாம்பாள் அவர்களை அழைத்துப் பணியமர்த்தம் செய்ததில் இவருக்குப் பங்கு உண்டு.
1999 இல் தமிழகம், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தமிழியல் மற்றும் மொழியியல் அறிஞர்களைச் சப்பானுக்கு அழைத்துத் தமிழ் சப்பானிய மொழி உறவு பற்றிப் பேசினார் இதில் பொற்கோ ஒருங்கிணைப்பாளர். பேராசிரியர்கள் ச. அகத்தியலிங்கம், செ.வை. சண்முகம், கி.அரங்கன், வ.ஞானசுந்தரம், தங்க.மணியன் ஆகியோர் இந்தியாவிலிருந்தும், சண்முகதாசு, மனோன்மணி சண்முகதாசு இலங்கையிலிருந்தும், மணியன் கிருட்டினன், கந்தசாமி, குமரன் மலேசியாவிலிருந்தும் சென்றனர். இந்த ஆய்வரங்க உரைகள் தொகுக்கப்பட்டுச் சப்பானிய மொழியில் வெளிவந்தன. 29 ஆண்டுகள் தமிழ் - சப்பானிய மொழி ஆய்வில் தொடர்ந்து ஈடுப்பட்ட ஓனோ அவர்களைச் சப்பானிய மக்களும், ஆய்வறிஞர்களும் போற்றி மதிக்கின்றனர்.
தமிழ்க் கல்வி நிறுவனங்கள், தமிழ் அறிஞர்களுடன் பேராசிரியர் சுசுமு ஓனோ நீண்டகாலத் தொடர்புகளைப் பேணிவந்தார். சப்பானிய மாணவர்கள் பலரைத் தமிழ் மொழியைக் கற்குமாறு அவர் ஊக்குவித்தார். தமிழுக்கும் சப்பானுக்கும் உறவுப்பாலம் அமைத்தார். தமிழ் மொழிக்கும் சப்பான் மொழிக்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு உள்ளதைப் பல்வேறு சான்றுகள் வழியாக உலகிற்கு வெளிப்படுத்திய பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள் தம் 89 ஆம் அகவையில் 14.07.2008 திங்கள் கிழமை டோக்கியோவில் இயற்கை எய்தினார். அறிஞரை இழந்து தமிழுலகம் வருந்துகிறது.
நனி நன்றி:
தமிழ் ஓசை களஞ்சியம், 18.01.2009
முனைவர் பொற்கோ,தமிழ் ஜப்பானிய ஆராய்ச்சி:பாதையும் பயணமும்(2005)
முனைவர் ஒப்பிலா.மதிவாணன்
முனைவர் மனோன்மணி சண்முகதாசு
முனைவர் அ.சண்முகதாசு
தமிழ்நெட்.காம்
விக்கிபீடியா
தட்சு தமிழ்,இணைய இதழ்
AOL இணைய இதழ்
சனி, 17 ஜனவரி, 2009
செக்நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில் இயற்கை எய்தினார்!
அறிஞர் கமில் சுவலபில்
செக்கோசுலேவியா நாட்டிலிருந்து வந்து தமிழ் கற்று, தமிழ் நூல்களைச் செக் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்த அறிஞர் கமில் சுவலபில் அவர்கள் இன்று 17.01.2009 இயற்கை எய்திய செய்தியை அவர் துணைவியார் நினா சுவலபில் அம்மா அவர்கள் எனக்கு ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கும் மொழியியல்,தமிழ்த்துறை சார்ந்த அறிஞர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கமில் சுவலபில் அவர்களைப் பற்றித் தமிழ் ஓசையில்(16.11.2008) அயலகத் தமிழறிஞர்கள் வரிசையில் நான் எழுதியிருந்தேன்.என் பதிவிலும் தகவல் உள்ளது.அவர் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்
நினா சுவலபில் அவர்களின் மடல்
Dear DR,Elangovan
Dear dr, Elongovan, I just want to inform you that my husband Kamil Zvelebil died 17th of January yours N. Zvelebil.
வியாழன், 15 ஜனவரி, 2009
வரலாற்று முதன்மை இடமான ஆலம்பரைக்கோட்டை...
இடைக்கழிநாடு பெயர்ப்பலகை
12.01.2008 காலை புதுச்சேரியில் புறப்பட்டு சென்னை நோக்கி மகிழ்வுந்தில் செல்லும் வாய்ப்பு அமைந்தது. கிழக்குக்கடற்கரைச்சாலை வழியில் எங்கள் பயணம் அமைந்தது. நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த கடப்பாக்கம், அருகில் உள்ள ஆலம்பரைக்கோட்டையைப் பார்க்க நினைத்தோம். கடப்பாக்கம் பகுதி சங்க காலத்தில் இடைக்கழிநாடு எனப்பட்டது. இன்றும் அப்பகுதியில் இடைக்கழிநாடு என்ற பெயரில் ஊர் உள்ளது. சிறுபாணாற்றுப்படையைப் பாடிய புலவர் பெருமகனார் நத்தத்தனார் பிறந்த நல்லூர், இங்குதான் உள்ளது.
புதுச்சேரி - சென்னைக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள கடப்பாக்கத்திலிருந்து பிரிந்து கிழக்கே நான்கு கல் தொலைவில் கடற்கரையை ஒட்டியமைந்துள்ள ஆலம்பரைக் கோட்டையை அடையும்பொழுது முற்பகல் 11.30 மணியிருக்கும்.
ஆர்க்காடு நவாப்பு ஆட்சியில் (கிபி.பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த இடம் புகழ்பெற்ற இடமாக விளங்கியுள்ளது. கடற்கரை வணிகத்தளமாக இப்பகுதி அமைந்திருந்தது. கி.பி.1735 இல் நவாப் தோசுது அலிகான் என்பவன் இக்கோட்டைய ஆண்டுள்ளான். கி.பி.1750 இல் ஆங்கிலேயப் படைகளை எதிர்க்க உதவிய பிரஞ்சு தளபதி துய்ப்ளக்சு சுபேதார் முசார் பர்சங்குக்கு இக்கோட்டையைப் பரிசாக அளித்தான். கி.பி.1760 இல் பிரஞ்சுப்படையை வெற்றிகொண்ட ஆங்கிலேயப்படை இக்கோட்டையைச் சிறிது சிதைத்தது. இச்சிதைவுகளுடன் இக்கோட்டை பராமரிப்பின்றி இன்று சிதைந்து காணப்படுகிறது. அண்மையில் திரைப்படம் எடுக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்தியதால் மக்கள் பார்வைக்கு இக்கோட்டை நன்கு அறிமுகம் ஆயிற்று.
பண்டைய நாளில் கப்பலில் இருந்து பொருள்கள் படகுகளில் இறக்கப்பட்டுக் கோட்டைக்கு அருகில் இருந்த படகுத்துறையின் வழியாகக் கோட்டையில் பொருள்கள் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்குரிய அமைப்புகள் கோட்டையின் சிதைவுகள் சொல்கின்றன. மிகப்பெரிய சுற்றுச்சுவர்கள், அழகிய வேலைப்பாடுடைய முகப்பு.படிகள் அரண்கள், கட்டடங்கள், கோயில்கள் எனப் பல பகுதிகள் நம்மைப் பழங்கால வரலாற்றைச் சொல்லிச் சிந்திக்க வைக்கின்றன.
கடற்காற்று இதமாக இருந்தது. காலையில் அல்லது மாலையில் சென்றிருந்தால் இயற்கை அழகை முழுமையாகக் கண்டு மகிழ்ந்திருக்கலாம். கடற்கரையில் மீன்பிடித்தொழில் சிறப்பாக நடக்கிறது. அருகில் மீனவர்களின் வாழ்விடங்கள் உள்ளன. ஆழிப் போரலையின் தாக்கத்தில் இந்தப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் கட்டிக் கொடுத்துள்ள புதிய குடியிருப்புகள் அந்த மக்களுக்கு இன்று உதவியாக உள்ளன. குழுவாகச் செல்வது நல்லது. பாதுகாப்பானது.
ஆலம்பரைக்கோட்டை பதினைந்து ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. நவாபுகளின் ஆட்சியில் கடற்கறைத் துறைமுகமாக விளங்கியது. சரிகைத் துணி, உப்பு, நெய் ஏற்றுமதிக்கு இந்த இடம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்புகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இங்கு இருந்த நாணயச் சாலையில் ஆலம்பரைக்காசு, ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இங்குப் பணிபுரிந்த பொட்டிப்பத்தன் என்பவன் காசி இராமேசுவரம் செல்லும் பக்தர்களின் வசதிக்காகச் சிவன்கோயில் பெரியகுளம், சத்திரம் கட்டியதாக அறியமுடிகிறது. வடநாட்டைத் தமிழகத்துடன் இணைக்கும் பெருவழி கோட்டையின் மேற்கே இரண்டுகல் தொலைவில் இருந்துள்ளது.
ஆயிரம் ஆயிரம் கதைகள் சொல்லும் ஆலம்பரக்கோட்டையைக் கண்டுகளிக்க மீண்டும் ஒருமுறை செல்ல உள்ளேன். என் பயணத்தில் பேராசிரியர் முனைவர் கல்பனா (அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்) அவர்களும் உடன் வந்திருந்தார்கள். அவருக்கு நன்றி.
கோட்டை பற்றிய குறிப்புப் பலகை
கோட்டை முகப்பு
கடற்கரை ஒட்டிய கடல்பகுதி
சிதைந்த முகப்புப் பகுதி
கடலொட்டிய கோட்டைச்சுவர்கள்
கடலில் கரையும் கோட்டையின் இடிபாடுகள்
கோட்டையின் உள்பகுதியில் உள்ள கட்டடம்
முகப்பு
கோட்டைச் சிதைவுகள்
கோட்டைச் சிதைவுகள்
புதன், 14 ஜனவரி, 2009
சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்தேன்...
முகப்பு
சென்னை அடையாற்றில் 12.01.2009 அன்று பகலுணவு முடித்துப் பச்சையப்பன் கல்லூரி எதிரில் இருந்த புத்தகக் கண்காட்சியை அடையும்பொழுது பிற்பகல் 2.30 மணியிருக்கும்.
புத்தகக் கண்காட்சியில் அரங்குகள் சிறப்பாக அமைக்கப்படிருந்தன.முந்தைய காட்சிகளில் இருந்து இது மேம்பட்ட வளர்ச்சியைக் கண்டுள்ளது.தம்மைத் தாமே விளம்பரப்படுத்திக் கொண்ட கவிப்பேரரசர்கள் கவிவேந்தர்கள் வித்தகக்கவிஞர்கள் உருவம்தாங்கிய விளம்பரப்பலகைகள் நம் கண்ணில் முதலில் தெரிந்தன. பல்வேறு நிறுவனம் சார்ந்த தோரணவாயில்கள் நம்மை வரவேற்றன.
நுழைவுச்சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தோம்.உடன் வந்தவர்களிடமிருந்து என் விடுதலையை வாங்கிக்கொண்டு தேவைக்கேற்பத் தொலைபேசியில் அழ்த்துக்கொள்ளலாம் என்ற பின்குறிப்புடன் அவரவர் சுவைக்கேற்பப் புத்தக அரங்குகளில் நுழைந்து வெளியேறத் தொடங்கினோம்.
முதலில் ஓவியர் புகழேந்தி நூல்களைக் கொண்டிருக்கும் தோழமை அரங்கில் நுழைந்து புதிய நூல்களைப் பார்வையிட்டேன்.பின்னர் என் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் தமிழ்க்கோட்டம் அரங்கிற்குச் சென்றேன்.
புதுவைப் பேராசிரியர் முனைவர் மதியழகன் அவர்களைக் கண்டேன்.பின்னர் பேராசிரியர் தாமசு இலேமான்(செர்மனி)அவர்கள் பல அரங்குகளில் நுழைந்து களைப்புடன் காணப்பட்டார். அவரையும் கண்டு வணங்கினேன்.உரையாடினேன்.அருகில் இருந்த பேராசிரியர் கல்பனா அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தேன்.மீண்டும் எனக்கு விருப்பமான அரங்குகளுக்கு நுழைந்து மீண்டு வந்தேன்.
கிழக்குப் பதிப்பக அரங்கு, காலச்சுவடு அரங்கு,உயிர்மை அரங்கு,புதுநூற்றாண்டுப் புத்தக நிறுவன அரங்கு உள்ளிட்டவை சிறப்பாக இருந்தன.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் திரு. வீரபாகு அவர்களின் அமுத நிலையத்தில் நண்பர் பெரியநாடார்
இருந்தார்.நண்பர் கண்ணன் அவர்களும் இருந்தார்.எல்லோரும் நாங்கள் பத்தாண்டுகளுக்கு முன் உ.த.நியில் பணிபுரிந்தவர்கள்.உரையாடி மகிழ்ந்தேன்.புதுநூல்கள் விவரம் அறிந்தேன்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் பா.மதிவாணன் அவர்களைக் கண்டு அவர்களின் தந்தையார் பாவலரேறு.ச.பாலசுந்தரனார் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன்.
மணிவாசகர் பதிப்பகம் சென்று பார்வையிட்டேன்.மெய்யப்பனார் படமாக இருந்தார்.அவர் நினைவுகள் வந்து உள்ளத்தை உருக்கின.தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்ப்பணி செய்த அப்பெருமகனார் நினைவுடன் அரங்கிலிருந்து வெளியே வந்தேன்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக அரங்கு எளிமையாகக் காட்சியளித்தது.மூன்றாண்டுகளுக்கு முன் சங்க இலக்கியத்திற்கு நூல்வெளியிட முன்விலைத்திட்டத்தில் பதிவு செய்திருந்தேன். இன்னும் நூல்கள் வந்தபாடில்லை என்ற புலம்பல்களைக் கூறியும் பல மடல்கள் இட்டும் விடையில்லை என்றும் நூல்களை உடன் அனுப்பிவைக்கும்படியும் வேண்டினேன்.
பின்னர்த் தமிழ்ஓசை இதழின் அரங்கு,பெண்ணே நீ அரங்கு உள்ளிட்டவற்றையும் கண்டு பேசினேன்.
தமிழ்மையம் அரங்கில் திரு.தளபதி என்னும் தோழரைக் கண்டு அறிமுகம் ஆனேன். அருட்தந்தையார் கசுபார் அவர்களைப் பற்றி உரையாடும்பொழுது ஒத்த கருத்துடையவர்களாக அவர்கள் தெரிந்ததால் மகிழ்ச்சியுடன் உரையாடினோம்.அதனை விடுத்து அடுத்து நகர்ந்ததும் தோழர் வைகறை அவர்களின் பொன்னி நூல் வெளியீட்டக அரங்கு தெரிந்தது.தோழர் வைகறை அவர்களுடன் அண்ணன் பழ.அதியமான்(வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர்),பேராசிரியர் த.கனகசபை உள்ளிட்ட அன்பர்கள் இருந்தனர்.அவர்களிடம் உரையாடி மகிழ்ந்தேன். நூல் விவரம் குறித்து அறிந்தேன்.என் தமிழ் இணையப்பணி பற்றி உரையாடினோம்.
அடுத்து நகர்ந்ததும் நண்பர் திரு.ப.திருநாவுக்கரசு அவர்கள்(தாரமைச்செல்விப் பதிப்பகம்) எதிர்ப்பட்டார்.அவருடன் நீண்டநாள் நட்பு.நெடுநாழிகை உரையாடினேன்.என் அயலகத் தமிழறிஞர்கள் தமிழ்ஓசைத் தொடரைத் தொடர்ந்து படிப்பதாக உரைத்து அந்தத் தொடரில் இடம்பெறவேண்டிய பிற அறிஞர்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்.ப.சுந்தரேசனார் பாடல் தொகுப்பு முயற்சி,தமிழ் இணையப்பணிகள்,நூல் அச்சிடல் பற்றியெல்லாம் எங்கள் பேச்சு நீண்டது.அவரின் ஆவணப்படம்,குறும்படம் பயிற்சிப்பட்டறைப் பணிகளைப் பாராட்டி விடைபெற்றேன்.
மீண்டும் உலகத் தமிழிராய்ச்சி நிறவன அரங்கிற்கு வந்து நண்பர் திரு.இராசா அவர்களைக் கண்டு உரையாடி அறிஞர் ச.வே.சு அவர்களின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டி மீண்டேன். மீண்டும் தொலைபேசியில் பேசி நாங்கள் ஒன்று கூடித் திரும்பத் திட்டமிட்டோம்.இரவு 8.30 மணியளவில் அரங்கிலிருந்து வெளியே வந்தோம்.
பேராசிரியர் கல்பனா அவர்கள் கண்காட்சியிலுருந்த பாதி நூல்களை வாங்கி வந்துவிட்டார்கள். அவர்களுக்கு உதவிக்கு இரு இளைஞர்கள் வந்திருந்தனர்.பேராசிரியர் அம்மா அவர்கள் வாங்கும் நூல்கள் உடனுக்குடன் மகிழ்வுந்துக்கு வந்தன.மகிழ்வுந்து அருகே வந்து பார்த்த பொழுது உட்கார இடம் இல்லாதபடி நூல்கள் இருந்தன. இருக்கும் இடங்களில் நூல்களைத் திணித்துப் புறப்பட்டோம்.
அப்பொழுது பேராசிரியர் அவர்களின் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு உணவு உண்டு புறப்படத் திட்டமிட்டார்கள்.பகலுணவுக்கே வரவில்லை என்று அவர்களின் உறவினர்கள் வருந்தி, அன்பால் சண்டையிட்டனர்.இரவு ஒன்பது மணிக்கு அரும்பாக்கத்தில் இருந்த அவர்களின் உறவினர் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.பேராசிரியர் கல்பனா அம்மா அவர்களுக்கு உதவியாக அரங்கிற்கு வந்து உதவிய அந்த இளைஞரின் வீடுதான் அவர்களின் உறவினர் வீடு எனப் பின்பு தெரிந்துகொண்டேன்.உறவினர் என்றதும் எந்த வகையில் உறவினர் அவர்கள் என வினவினேன்.பிறகுதான் தெரிந்தது.
தஞ்சாவூர் அருகில் பேராசிரியரின் தந்தையார் ஊர் என்பதும் அந்த ஊருக்கு தொழில் நிமித்தம் வந்தவர்கள்தான் உறவினர்களாக இன்று பழகுகின்றனர் என்பதும் புரிந்துகொண்டேன்.இரு குடும்பமும் சாதியால் வேறுபட்டன என்பதும் மதுரைக்கு அருகிலிருந்து பிழைக்க வந்த இடத்தில் பழகி ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு பிரிக் கமுடியாதபடி அன்பால் கட்டுண்டு
கிடக்கின்றனர் என்பதும் அறிந்து வியந்துபோனேன்.
ஏனெனில் எங்ளுக்கு உறவாக வாய்த்த பலரின் கசாப்பான உறவுப் பட்டறிவுகள் என்னை இந்த மகிழ்ச்சிக்கு ஆற்றுப்படுத்தின.ஆசையோடு உழுது பயிர்செய்ய நினைத்திருப்பேன்.அவர்கள் ஏர்பூட்டி விதைத்து அறுவடைசெய்துகொள்வார்கள்.வாரம்கொடுக்கமாட்டார்கள் "உறவுக்
கிலுகிலுப்பைக்"காட்டி ஏமாற்றுவார்கள்.இருக்கும் நிலத்தை விலைக்குக் கேட்டுத் தராததால் சினம்கொண்டு 'சாவு வாழ்வு இல்லை' என்பார்கள்.பணத்துக்காக எங்கள் நிலத்துப் பக்கத்து நிலங்களைப் பிறருக்கு விற்று எங்களுக்கு எதிரானவர்களைக் கொண்டுவைத்து அடிக்கடி இடையூறு கொடுக்கும் அவர்களைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.இப்படியான எங்கள் உறவுகளுக்கு நடுவே இந்த உறவு எட்டாவது வியப்பாக எனக்கு இருந்தது.
அரும்பாக்கம் வீட்டுக்குச் சென்றதும் அகவை முதிர்ந்த அம்மா எங்களை அன்புடம் வரவேற்றோர்.உணவு ஆயத்தம்செய்து தந்தார்கள்.அனைவரும் உண்டு மகிழ்ந்தோம.
மதுரைத் தமிழில் எங்களை அன்பால் நனைத்தார்கள்.அந்த அம்மாவின் கடைசி மகன்தான் எங்களைப் புத்தக் கண்காட்சிக்கு வந்து அழைத்துவந்த இளைஞர் என்பதும் புரிந்தது. அந்த இளைஞர் பெயர் சுதாகரன்.நிதி நிறுவனம் நடத்தி நல்ல வசதியாகவே உள்ளார்.அவரும் பத்தாயிரம் உருவா அளவுக்குப் புத்தகம் வாங்கினார்.அம்மா ஏசுவார்கள் எனப் புத்தகத்தைத் தெரியாமல் கொண்டுபோய் வீட்டில் சேர்த்தார்.கவிஞர் பழனிபாரதியின் கவிதைகளை மெச்சிப் பேசினார்.பா.விசய் அவர்கள் அரசியலில் ஈடுப்பட்டடுக் கவிதைத்துறையில் கீழிறங்கி வருவதாக அந்த அன்பர் குறிப்பிட்டார்.
அவர் நிதி நிறுவனம் நடத்துவதால் கரடுமுரடாக இருப்பார் என நினைத்து ஏமாந்தேன். அவருக்குள் ஒரு கலையுணர்வு உண்டு.அறிவுத் தாகம் உண்டு.நல்லொழுக்கம் உண்டு. புதியதாகச் சிந்திக்கும் ஆற்றல் உண்டு.இறை நம்பிக்கை அவர் உள்ளத்தில் இழை ஓடுவதை உணர்ந்தேன்.பிறருக்கு உதவும் இயல்பும் உண்டு.அவர் பல ஆண்டுகளாகப் படித்த இதழ்களின் முதன்மைப் பகுதிகளை வெட்டி ஒழுங்குசெய்து நூற்கட்டு செய்து வைத்திருந்தார். அதனைக் கண்டதும் அவரைப் பற்றிய என் பார்வை உயர்வாக இருந்தது.இவர் படித்திருந்தால் மிகச் சிறந்த நிலைக்கு வந்திருக்கமுடியுமே என நினைத்தேன்.
பணத்தொழிலில் இருப்பதால் குழப்பமான சூழலில் படிப்பதால் மனமாற்றம் பெறுவதாக உரைத்தார். அவர் காட்டிய அன்பும் அவரின் எண்ணமும் எனக்குப் புதிய பாடங்களைத் தந்தன. புத்தகக் கண்காட்சிக்குச் சென்று புத்தகங்களை வாங்காமல் திரும்பிய நான் சுதாகரன் என்ற புத்தகத்தைப் படித்துப் புதிய புதிய அறிவைப் பெற்றேன்.இப்பொழுது நினைத்தேன். முதலிலேயே சுதாகரன் வீட்டிற்கு வந்திருக்கலாம் எனத் தோன்றியது.
அவர்கள் அம்மா கையசைத்து அன்பொழுக வழியனுப்பியபொழுது இரவு பத்துமணியிருக்கும். புதுச்சேரி நோக்கி எங்கள் மகிழ்வுந்து விரைவாக முன்னேறியது.எனக்குச் சுதாகரனின் முகம் புதுப்புதுப் புத்தகங்களாக விரிந்து அறிவு தந்தது...
மக்கள் தொலைக்காட்சியின் வரவேற்பு வளைவு
தென்திசை அரங்கு
மலேசியத் தமிழ் நூல்கள் இடம்பெற்ற அரங்கு
குமரன் புத்தக அரங்கு(இலங்கை நூல்கள்)
அமுத நிலைய அரங்கு
தமிழ் ஓசை அரங்கு
தென்திசையில் தோழர் தளபதி
பொன்னி அரங்கில் தோழர் வைகறை உள்ளிட்டவர்கள்
ஞாயிறு, 11 ஜனவரி, 2009
கணிப்பொறித்துறை வல்லுநர் கோபி அவர்களுடன் நேர்காணல்
தகடூர் கோபி அவர்கள்
கணிப்பொறித்துறையில் உழைப்பவர்களை இருவகைப்படுத்திப் பார்க்கலாம். தங்கள் குடும்பம், வயிற்றுப்பாட்டுடன் பெங்களூர் அல்லது சென்னை முடிந்தால் அயல்நாடுகளில் தங்கித் தொழில் செய்யும் ஒரு வகையினர். இவர்களால் நம் மொழிக்கோ, இனத்துக்கோ சிறு பயனும் இல்லை.இன்னொரு வகையினர் தொழில் நிமித்தம் வேறு இடங்களில் வாழ்ந்தாலும் தாம் பிறந்த மண்ணையும் மக்களையும் மறவாமல் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் மொழியைக் கணிப்பொறி, இணையத்தில் பயன்படுத்தும் வகையில் பல்வேறு மென்பொருள்களை உருவாக்கி இலவசமாக வழங்கும் கொடையுள்ளம் கொண்டவர்கள். இவர்களால்தான் தமிழ் இணையத்துறை இன்று உயிர்மூச்சுவிட்டுக் கொண்டுள்ளது.
இத்தகு கொடையுள்ளம் உள்ளவர்களுள் இளைஞர் கோபி குறிப்பிடத்தகுந்தவர். ஐதராபாத்தில் முன்னணிக் கணிப்பொறி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவரை அண்மையில் சந்திக்க நேர்ந்தது. மென்பொருளறிஞர் பட்டத்தைப் பெற்றுள்ள இவரின் கண்டுபிடிப்புகள் தமிழுலகிற்குத் தேவையான ஒன்றாகும். உமர் பன்மொழி மாற்றி, அதியமான் எழுத்துரு மாற்றி, அதியன் பயர்பாக்சு நீட்சி உள்ளிட்ட மென்பொருள்களைத் தந்துள்ளார்.
தமிழில் பேசுவதை அப்படியே தட்டச்சிடும் மென்பொருளையும், தமிழில் உரையாக உள்ளதைப் பேச்சொலியாக மாற்றித் தரும் மென்பொருளையும் உருவாக்கிக் கண்பார்வை அற்றவர்களையும், வாழ்வின் பெரும்பகுதி வெளியூர்ச் செலவுகளில் இருப்பவரையும் இலக்கியம் படிப்பவர்களாக (மன்னிக்க! கேட்பவர்களாக) மாற்றும் இக் கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளராக விளங்கப் போகும் இவரிடம் சில வினாக்களை முன்வைத்தேன்.
தங்களின் இளமைப்பருவம் பற்றி...
என் தாய் திருமதி. தோகையர்க்கரசி பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிகிறார். தந்தை திரு. தணிகாசலம், திருவள்ளுவர் அறிவகம் மற்றும் அண்ணா அறிவகம் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1976 ஆம் ஆண்டு சூன் முதல் நாள் பிறந்தேன். தருமபுரியிலேயே என் இளமைப் பருவம் முழுவதும் கழிந்தது. தொடக்கக் கல்வியைத் தந்தை பணியாற்றிய பள்ளியிலேயே படித்து முடித்தேன். பின்னர் அதியமான் அரசு மேனிலைப் பள்ளியில் உயர்நிலைக்கல்வியும் மேல்நிலைக் கல்வியும் முடித்தேன். ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் இளநிலை மின்பொறியியல் பட்டம் பெற்றேன். பின்னர் அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலைத் தகவல் தொழில்நுட்பப் பட்டயம் முடித்தேன்.
நீங்கள் முதலில் பணிபுரிந்த இடம் பற்றிய விவரம்?
முதலில் சப்தகிரி பொறியியல் கல்லூரியில் மின்னியல் விரிவுரையாளர் பணி. அதன் பின் ஓராண்டுக் காலம் தமிழ்நாடு மின்வாரியத்தில் மின் பொறியாளர் பயிற்சி பெற்றேன். அடுத்ததாகச் சென்னையில் இரண்டரை ஆண்டுக் காலம் சில தொடக்க நிலை சிறு மென்பொருள் நிறுவனங்களில் பணி புரிந்தேன். அதன் பின் நியூயார்க் நகரில் சுமார் ஆறுமாத காலம் ஒரு நிதிநிலை மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துவிட்டு, கடைசியாகக் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஐதராபாத்தில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன்.
தமிழ்க் கணிப்பொறியில் ஈடுபாடு எப்பொழுது ஏற்பட்டது? யாரால்?
2004 ஆம் ஆண்டு, தமிழில் வலைப்பதிவு தொடங்கக் காரணமாய் இருந்தவர் என் நண்பர் திரு.சீனு. வலைப்பதிடுவதற்குத் தமிழில் தட்டச்சிட திரு.சுரதா அவர்களின் புதுவைத் தமிழ் மாற்றியைப் பயன்படுத்திய போது அதனை மேம்படுத்திப் புதிதாய் வெளியிடலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதற்காகச் சுரதா அவர்களைத் தொடர்புகொண்டேன். அதற்காக அவர் ஒப்புதல் அளித்துத் தகடூர் தமிழ் மாற்றியின் உருவாக்கத்தில் ஒவ்வொரு நிலையிலும் ஆலோசனை வழங்கினார். இப்படியாக என் இனையத் தமிழ் ஈடுபாடு தொடங்கியது.
தமிழுக்குத் தாங்கள் தந்துள்ள மென்பொருள்கள்?அதன் பயன்பாடு?சிறப்பு?
தகடூர் தமிழ் மாற்றி என்னும் மென்பொருள் உருவாக்கியுள்ளேன். இது தமிழில் தட்டச்சிட உதவும் ஒரு கருவி. இதைக் கணினியில் நிறுவத் தேவையில்லை. இதைப் பயன்படுத்த ஒரு உலாவி மட்டுமே போதுமானது.
உமர் பன்மொழி மாற்றி:
தகடூர் தமிழ் மாற்றியைப் போலவே இந்தியாவின் பிற மொழிகளுள் தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஒரியா,பெங்காலி, பஞ்சாபி, குசராத்தி மற்றும் இந்தி ஆகியவற்றுக்கான தட்டச்சுக் கருவி. தேனீ எழுத்துரு அளித்த அமரர் திரு. உமர் அவர்களின் நினைவாக இந்தப் பன்மொழி மாற்றிக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.
அதியமான் எழுத்துரு மாற்றி:
தமிழ் இணையப் பக்கங்களில் காணப்படும் பல்வேறு எழுத்துருக்கள்/குறியேற்றங்களால் ஆன பக்கங்களை ஒருங்குகுறிக்கு மாற்றிப் படிக்க உதவும் ஒரு கருவி. இதையும் கணினியில் நிறுவத் தேவையில்லை. இதைப் பயன்படுத்த ஓர் உலாவி மட்டுமே போதுமானது.தற்சமயம் TAB,TAM,TSCII குறியேற்றங்களால் ஆன வலைப் பக்கங்களையும் தினமணி, தினத்தந்தி ஆகிய எழுத்துருவில் அமைந்த வலைப் பக்கங்களையும் ஒருங்குகுறிக்கு மாற்றிப் படிக்க இயலும்.
அதியன் ஃபயர்ஃபாக்சு நீட்சி:
அதியமான் எழுத்துரு மாற்றியின் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி வடிவம். இதன் மூலம் உள்நுழைவு/கடவுச்சொல் தேவைப்படும் வலைப்பக்கங்களையும் ஒருங்கு குறிக்கு மாற்றிப் படிக்க இயலும்.
TABUni/TAMUni/Unicode எழுத்துருக்கள்:
பனாசியா நிறுவனம் வெளியிட்ட சில அழகிய எழுத்துருக்களை ஒருங்குகுறிக்கு மாற்றி அளித்துள்ளேன். இதற்கான செயல் விளக்கத்தை எனது வலைப்பதிவில் காணலாம்.
தமிழ் விசை ஃபயர்ஃபாக்சு நீட்சி:
ஃபயர்ஃபாக்சு இணைய உலாவிக்குள் எந்த வலைப்பக்கத்தில் உலாவினாலும் (உதாரணமாக ஜி-மெயில், யாகூமெயில்) அதற்குள் தமிழில் தட்டச்சிட உதவும் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி இது. தமிழா! முகுந்த் அவர்களால் உருவாக்கப்பட்டு, வாய்ஸ் ஆன் விங்க்சால் மேம்படுத்தப்பட்ட இந்த நீட்சியைத் தற்போது நான் மேம்படுத்திப் பராமரித்து வருகிறேன்.
தாங்கள் தமிழுக்கு அடுத்துத் தர உள்ள மென்பொருள்?அதன் பயன் என்ன?
ஔவை உரைபேசிச் செயலி, மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி என்னும் மென்பொருள்கள். இதன் மூலம் ஒருங்குகுறி தமிழ் உரை மற்றும் வலைப்பக்கங்களை ஒலி வடிவில் மாற்றிக் கேட்கலாம். கண் பார்வை குறைபாடுள்ள பயனர்களுக்கும், படிப்பதை விட கேட்பதற்கு ஆர்வம் அதிகம் உள்ள பயனர்களுக்கும் இது மிகுந்த பயனளிக்கும்.
தமிழ் இணையம் இப்பொழுது மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளதா?செல்வாக்குப்பெற என்ன வழிகள் உள்ளன?
தமிழ் இணையத்தின் பயன்பாடு குறித்த விழிப்பு, இன்னும் இணையம் சார் மக்களிடமே அதிக அளவில் இல்லை (என்னிடம் கணினியில் தமிழில் தட்டச்சிட முடியுமா என்று கேட்ட நண்பர்களுள் சிலர் அன்றாடம் இணையத்தில் உலாவுபவர்கள்) இப்படி இருக்கும் போது, இணையம் குறித்தே அதிகம் அறிந்திடாத பொதுமக்களிடம் தமிழ் இணையத்தின் பயன்பாடு குறித்த செய்தியை எடுத்துச் செல்வது மிகப் பெரிய செயல். தமிழ் இணையத்தில் பங்களித்து வரும் நண்பர்கள், தத்தமது பகுதிகளில் பயிலரங்கு, கருத்தரங்குகள், கூட்டங்கள் மூலம் தமிழ் இணையம் குறித்த விழிப்பை ஏற்படுத்துவதே அதன் செல்வாக்கை அதிகரிக்க சரியான வழி.
உலக அளவில் தமிழ் இணையத்துறைக்கு இன்று யார் யார் உழைத்து வருகின்றனர்?
நான் அறிந்த வரையில் தமிழ் இணையத் துறைக்கு அரசு சார் நிறுவனங்களின் பணியை விடத் தனிப்பட்ட குழுக்களின் பங்களிப்பே அதிகம். தமிழ் இணைய இலக்கியத்தில் அவ்வளவாக அறிமுகம் இல்லாததால் தமிழ் இணையத் தொழில்நுட்பப் பங்களித்து வரும் சில குழுக்களை மட்டும் கீழே பட்டியலிட்டுள்ளேன்.
தமிழா!
கட்டற்ற தமிழ்க் கணிமை
தமிழ் லினக்ஸ்
தமிழ் இணையத்திற்குத் தங்களின் எதிர்காலத்திட்டம்?
தமிழ் இணைய நுட்பத்தில் இன்றைக்கு வெற்றிடமாய் இருக்கும் உரைபேசி (Text to Speech), பேச்சிலிருந்து உரை(Speech to Text) மற்றும் ஒளியியல் குறிமுறை உணர் செயலி (Optical Code Recognition) போன்ற சில மென்பொருள் தேவைகளுக்காக உழைப்பது எனது எதிர்காலத் திட்டம்.
நனி நன்றி:
தமிழ் ஓசை,களஞ்சியம்,11.01.2009
காசி ஆறுமுகம்
தருமபுரித் தமிழ்ச்சங்கம்
முகுந்து
மருத்துவர் கூத்தரசன்
தகடூர் நரசிம்மன்
சனி, 10 ஜனவரி, 2009
தமிழ் தமிழர் இன்றையநிலை...
தமிழில் சற்றொப்ப இருபத்தைந்து மொழிகளின் சொற்கள் கலந்துள்ளன.75 விழுக்காட்டுப் பிறமொழிச்சொற்களை நாம் அன்றாடம் கலந்து பேசுகிறோம்.
(எ.கா) "இந்த வருஷம் ஜாஸ்தி லீவு" என்று பேசும் நான்கு சொற்களில்
நான்கும் நான்கு மொழிச்சொல்லாக இருப்பதை அறிஞர் அருளி அவர்கள் தம் நூலில்
குறிப்பார்.இந்த-தமிழ்; வருஷம்-சமற்கிருதம்;ஜாஸ்தி -உருது; லீவு-
ஆங்கிலம்.
இப்படி பன்மொழிகளைக் கலந்து பேசக் காரணம் பிறமொழிக்காரர்களுடன் நாம் கலந்து வாழவேண்டிய தமிழகச் சூழல் என்க.பிறமொழியினர் நம்மை ஆண்டு, அடிமைப்படுத்தி இருந்தமையும் இதற்குக் காரணம்.
பிறமொழிக்காரர்களுடன் வாழவேண்டிய சூழலில் பிறமொழி கலப்பது இயல்பே. ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பிறமொழிச்சொற்கள் கலந்தால் அம்மொழிக்கு வளம்தான்.நம் மொழியில் பிறமொழிச்சொற்கள் கலப்பது தமிழுக்கு இழப்பே.
சான்று:
காலதர்(கால் =காற்று;அதர்=வழி) என்ற சொல் வழக்கத்தில் இருந்தது (சிலம்பு). சன்னல் என்ற போர்த்துக்கீசிய சொல் வந்த பிறகு நம் காலதர் மறைந்துது.எனவே பிறமொழிக் கலப்பால் தமிழில் வழங்கும் சொல் இழப்பது நிலையாக உள்ளது.எனவே தமிழ்மொழியில் பிறமொழிச்சொல் கலவாமல் எழுதுவதை,பேசுவதை கற்றவர்கள் முன்னெடுக்கவேண்டும். அதனை விடுத்து அவ்வாறு பேசுபவர்களை,பேசுபவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்துபவர்களை இகழ்ந்து தாம் பெரிய அறிவாளிகளாகக் காட்டிக் கொள்ளவதைத் தவிர்க்கவேண்டும்.
இன்றைய தமிழகத்தின் சாபக்கேடு தமிழ் பற்றி முழுமையாக அறியாதவர்கள் பலரும்
தமிழ் பற்றி கருத்துரைப்பதும் தமிழ்ப் பரிசளிப்புக்குழுக்களில் அமர்ந்துகொள்வதும் கேடான
முன்காட்டாகும்.இவர்கள் தமிழுக்கான குழுக்களில் அமர்வதும் அமர்த்தப்படுவதும் கண்டிக்கத்தக்கது.
மேலும் தமிழ் அரசியல்காரர்களின் மரப்பாச்சிப் பொம்மையாகிவிட்டது.கருத்தரங்க ஏற்பாட்டாளர்களின் காசுக்குரிய தொழிலுக்கும் தமிழ் இன்று நல்ல வணிகப் பொருளாகிவிட்டது. சென்ற ஆண்டு சமய இலக்கியத்தில் மாநாடு கூட்டி ஆராய்ச்சி செய்தவர்கள் இந்த ஆண்டு பகுத்தறிவுக்கொள்கையுடைய அண்ணாவுக்கு நூற்றாண்டு விழா காணும் அவலம்.இவர்கள் பெரியாருக்குக் காசியில் கங்கைக்கரையில் "புண்ணியதானம்" செய்தாலும் செய்வார்கள்.
சங்க இலக்கியம் சென்ற ஆண்டு வரை சீண்டுவார் இல்லாமல் தமிழகக்கல்வி நிறுவனங்களில் தள்ளாடியது.காரைக்குடி அழகப்பா பல்கலையில் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் பணியாற்றிதால் அவர் வளர்த்த மாணவர்கள் சங்க இலக்கியக் குழந்தைக்கு ஆராய்ச்சிப் பாலூட்டி வளர்த்தனர்.இன்று செம்மொழி நிறுவனத்தில் காசு வாங்க பலரும் சங்க இலக்கியப் புலிகளாகிவிட்டனர்.படம் எடுக்கிறார்கள்.ஆவணமாக்குகிறார்கள்.பதிப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.மொழிபெயர்க்கத் துடிக்கின்றனர்.படிக்க மட்டும் மறுக்கிறார்கள்.
புதுச்சேரியில் சங்க இலக்கிய விழிப்புணர்ச்சியூட்ட ஊர்வலம்போனார்கள். மதுக்குடி நாயகர்கள் அடித்த பறையாட்டத்தில் தமிழ்த்தாய் தள்ளாட்டம் போட்டாள்.கரகாட்டம், வானவேடிக்கை நடந்தது.உ.வே.சாமிநாதர் படம் தூக்கி நடந்தார்கள்.உ.வே.சாவைத் தவிர வேறு யாரும் சங்க இலக்கிய ஆய்வுகளில் ஈடுபடவில்லையா?பதிப்பிக்கவில்லையா?என்று ஒருவரும் கேட்கவில்லையே.மழவை மகாலிங்க ஐயர்,பின்னத்தூர் நாராயணசாமியார், சி.வை. தாமோதரனார் போன்றவர்களை நினைவுகூர ஆள் இல்லையே!
பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார் ஐயா அவர்கள் தம் மிகப்பெரியஇசைப்புலைமையை இந்தத் தமிழ்ச்சமூகம் பயன்படுத்திக் கொள்ளாததால்அவர்கள் வறுமையுடன் சுற்றிவந்து தமிழகம் முழுவதும் தமிழிசைப்பணியை ஆற்றவேண்டியிருந்து.கோவை மாவட்டத்துக்காரர்கள் பண்ணாராய்ச்சி வித்தகருக்குக் கடைசிக்காலம் வரை அன்புகாட்டியமை தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் சுந்தரேசனாரின் துணைவியார் இறக்கும்வரை அவர்களுக்கு நிதியுதவி நல்கியமை என்றும் போற்றத் தகுந்த செயலாகும்.
பாவாணர் மனைவி பத்து உரூவா பணம் இல்லாததால் உயிர் பிழைக்கச் செய்யமுடியாத நிலையைப் பாவாணர் குறிப்பிடுவார்.திரு.வி.க.அவர்கள் உணவுக்கு இறுதிக்காலத்தில் தொல்லைப்பட்டதாகவும் அறியமுடிகிறது.மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் இறுதிக்காலமும் மகிழ்ச்சியாக அமையவில்லை.பெரும்பாவலர் பாரதியின் வறுமையை இவ்வுலகம் அறியும்.அவர் உயிருடன் இருந்தபொழுது சிறுமைப்படுத்தியவர்கள் இன்று அவரைத் தெய்வாமாக்கி அழகு பார்க்கின்றனர்.மாநாடு கூட்டி மார்தட்டுகின்றனர்.
இன்றைய பட்டிமன்றக்காரர்களும் சமயப்பேச்சாளர்களும் இந்த நாளை இனிய நாளாக்க மணிக்கு நாற்பதாயிரம் கறக்கும் மடமையை என்னென்பது?திரைப்பா ஆசிரியர்கள் பேசுவதுதான் தமிழ் என மூடத்தனமாக நம்பி அவர்களை மதுரைக்கு விமானத்தில் அழைக்க,வளியறையில் தங்கவைக்க,உதவிளருக்கு ஒரு மகிழ்வுந்து தனக்கு ஒரு மகிழ்வுந்து கேட்கும் கவிராசர்களை என்னென்பது?அவர்களுக்கு முதன்மைதரும் கல்வி உலகை என்னென்பது?காலமெல்லாம் வறுமையில் வாடினாலும் தமிழ்ப்பணியில் தளராத, நாளும் பணவிடை கொணரும் அஞ்சல்காரரின் வருகைக்கு ஏங்கிய பெருஞ்சித்திரனார் போன்ற கொள்கையாளர்களின் வறுமையை என்னென்பது?மொழிக்கும் இனத்துக்கும் நாட்டுக்கும் உண்மையாக உழைத்த இவர்களை இன்னும் தமிழகத்தில் அனைவரும்
அறியாமல் இருப்பது நம் கீழ்நிலைகாட்டும் சான்றாகும்.
தமிழ் நம் தாய்மொழி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.தமிழ் தமிழர்களின் பொதுச்சொத்து. புலவர்களின் சிறப்புச் சொத்து.எனவே தமிழ்பற்றி முடிவெடுக்கும் இடங்களில் எல்லாம் தமிழாய்ந்த தமிழர்கள்தான் இருக்கவேண்டும்.பொறியியல்,மருத்துவம் துறைசார்ந்த குழுக்களில் கருத்துரைஞராகத் தமிழ் அறிஞர்கள் இடம்பெறச்செய்தால் அந்தத் துறை
சார்ந்தவர்கள் கொதித்தெழுந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.நெஞ்சாங்குலை மருத்துவப்பண்டுவம் சார்ந்த அறிஞர்கள் குழுவுக்கு யான் தலைமை தாங்கலாமா?அல்லது நாளும் இடுந்து விழும் கட்டட மாதிரி உருவாக்குபவனை நீண்ட பாலம் கட்ட அனுமதிக்கலாமா?ஆனால் தமிழுக்கு எதிரானவர்கள், தொடர்பற்றவர்கள் பல குழுக்களில் இன்று அமர்ந்துள்ளனர்.அவர்கள் அமரவைக்கப்பட்ட பிறகும் அவர்களைப் பற்றி கருத்து கூறாமல் இருப்பது நம் தன்னலங்காட்டும் செய்கையாகும்.
இது நிற்க.
விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் மதிப்பிற்குரிய தொல். திருமாவளவன்
அவர்கள் ஒரே நாளில் பத்தாயிரம் பேருக்குத் தமிழில் பெயர்மாற்றியது எளிய செயல் அன்று. தமிழ் வளர்ச்சிக்கு எதிராக நிற்பவர்களுக்கு அவர் கொடுத்த முதல் அதிர்ச்சி மருத்துவம்.அவர் செயல் தமிழ்மொழி வரலாற்றை எம்போல்வார் எழுதும்பொழுது அது நன்றியுடன் மதிக்கப்படும். குறிக்கப்பெறும். பாவாணர்,பெருஞ்சித்திரனார்,வ.சுப.மாணிக்கம்,தமிழண்ணல்
உள்ளிட்ட அறிஞர்கள் வழியில் தமிழுக்கு வளம் சேர்ப்பவர்கள் பல்லாயிரவர் உள்ளனர் என்பதற்குத் திருமாவளவன் அவர்களின் செயல் ஒரு சான்றாம்.
தமிழீழத்தில் உயிருக்கும் உரிமைக்கும் போராடும் நிலையிலும் அவர்கள் தங்கள் மறவர்களுக்குத் தூயதமிழில் பெயரிட்டுள்ளதும்,அவர்களின் அரசாட்சியில் தமிழீழ வைப்பகம் எனவும் மாவீரர் துயிலும் இடம் எனப் பொறித்துள்ளதும்,வழக்குகள்,கல்வி,கலை,பண்பாடு யாவும் தமிழில் தமிழுக்கு ஆக்கமான வகையில் செய்யப்படுவதாகவும் ஏடுகளில் படிக்கின்றமை நம்பிக்கை தரும் செயல்களாகும்.சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தமிழ்மொழி ஆட்சி அதிகாரம் பெற்ற மொழியாக உள்ளமையும் இங்கு எண்ணிப்பார்க்கத்தகும்.
மொரீசியசு,தென்னாப்பிரிக்கா நாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகத் தமிழர்களுடன் தொடர்புகொள்ள நினைத்து அதற்குரிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றமையும், மலேசியா,அத்திரேலியா.கனடா.அமெரிக்கா,இலண்டன்,பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்தாலும் தங்கள் பண்பாட்டையும்,சமயத்தையும்,மொழியையும் காக்க முனையும் செயல்களையும் அவர்களின் பற்றையும் எண்ணி எண்ணி வியப்படைய வேண்டியுள்ளது.
மலேசியாவில் வாழ்ந்த தமிழர் ஒருவர் தமக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு மன்னர்மன்னன், இளந்தமிழன், அண்ணாதுரை எனப் பெயரிட்டுள்ள பாங்கறிந்து வியந்துபோனேன்.தமிழகத்தில் தமிழ்ப்பேராசிரியர் ஒருவரின் மகனும் தமிழ்ப்பேராசிரியர்.அவர் தமிழில் கையெழுத்திடு வதில்லை. மகனுக்கே தமிழில் கையெழுத்திடுக எனப்பயிற்றாத அந்த தந்தைப்பேராசிரியரிடம் படித்த பல்லாயிரம் மாணவர்கள் உணர்வற்ற பிண்டங்களாகத்தானே வெளியேறியிருப்பார்கள். இவர்களைப் போன்ற மொழிப்பற்றற்ற தொடைநடுங்கிப் பேர்வழிகளால்தான் தமிழுக்கு இழப்பு ஏற்படுகிறது.
மொழிகாக்கும் நிறுவனங்களில்,அமைப்புகளில் பணிபுரிந்த பலரும் அரசியல் எடுபிடிகளாக
ஒப்பனை முகம் பெற்றார்களே தவிர அறிஞர் வ.அய்.சுப்பிரமணியன்,தமிழண்ணல்
போல தனிமுத்திரை பதித்தார்கள் இல்லை.இத்தகு சான்றோர்கள் தமிழுக்கு அதிகம்
கிடைத்தால் தமிழ் வீறுகொண்டு வளர்ந்திருக்கும்.
கன்னட மொழிக்காரர்கள் யாரும் தங்கள் மொழிக்கு உழைத்தவர்களை அவமதிப்பதில்லை. எதிர் கருத்துச்சொல்வதில்லை.அவர்களை மதிப்பார்கள்.தமிழகத்தில் தமிழுக்கு உழைப்பவர்கள் வாழும் காலத்தில் மதிக்கப்பட்டமை மிகக் குறைவு.
தமிழகத்தை இலக்கியத்தால் மாற்றப் போவதாகப் புறப்பட்ட சில எழுத்தாளர்கள் தங்கள் இதழின் பெயரையே தமிழாக வைக்காமல் தமிழ்வளர்க்கப் புறப்பட்டுள்ளமையை நினைத்து வெட்க வேண்டியுள்ளது.இவர்களைத் தான் பேராசிரியர் தங்கப்பா அவர்கள் கரித்துணியால் தூய்மை செய்பவர்கள் என்பார்.
சிற்றூர்ப்புற மக்களும்,தமிழ் உணர்வுடைய நகர மாந்தரும் அயல்நிலத்தாரும் இருக்கும்வரை தமிழுக்கு ஆக்கம் அமையும். தமிழுக்கு இழப்பு வந்தபொழுதெல்லாம் அது தன்னைத்தானே பாதுகாத்துக்கொண்டுள்ளது.தமிழுக்கு அத்தகு ஆற்றல் உள்ளது.அழிவுநாள் குறித்து வைத்து யாரும் அழவேண்டாம்.
(மின்தமிழ் குழுவில் திருவாளர் முனைவர் நா.கணேசனார் தமிழின் இன்றைய நிலை பற்றிய என் கருத்தறிய விரும்பினார்.அவருக்கும் நண்பர்களுக்கும் நன்றி)
(எ.கா) "இந்த வருஷம் ஜாஸ்தி லீவு" என்று பேசும் நான்கு சொற்களில்
நான்கும் நான்கு மொழிச்சொல்லாக இருப்பதை அறிஞர் அருளி அவர்கள் தம் நூலில்
குறிப்பார்.இந்த-தமிழ்; வருஷம்-சமற்கிருதம்;ஜாஸ்தி -உருது; லீவு-
ஆங்கிலம்.
இப்படி பன்மொழிகளைக் கலந்து பேசக் காரணம் பிறமொழிக்காரர்களுடன் நாம் கலந்து வாழவேண்டிய தமிழகச் சூழல் என்க.பிறமொழியினர் நம்மை ஆண்டு, அடிமைப்படுத்தி இருந்தமையும் இதற்குக் காரணம்.
பிறமொழிக்காரர்களுடன் வாழவேண்டிய சூழலில் பிறமொழி கலப்பது இயல்பே. ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பிறமொழிச்சொற்கள் கலந்தால் அம்மொழிக்கு வளம்தான்.நம் மொழியில் பிறமொழிச்சொற்கள் கலப்பது தமிழுக்கு இழப்பே.
சான்று:
காலதர்(கால் =காற்று;அதர்=வழி) என்ற சொல் வழக்கத்தில் இருந்தது (சிலம்பு). சன்னல் என்ற போர்த்துக்கீசிய சொல் வந்த பிறகு நம் காலதர் மறைந்துது.எனவே பிறமொழிக் கலப்பால் தமிழில் வழங்கும் சொல் இழப்பது நிலையாக உள்ளது.எனவே தமிழ்மொழியில் பிறமொழிச்சொல் கலவாமல் எழுதுவதை,பேசுவதை கற்றவர்கள் முன்னெடுக்கவேண்டும். அதனை விடுத்து அவ்வாறு பேசுபவர்களை,பேசுபவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்துபவர்களை இகழ்ந்து தாம் பெரிய அறிவாளிகளாகக் காட்டிக் கொள்ளவதைத் தவிர்க்கவேண்டும்.
இன்றைய தமிழகத்தின் சாபக்கேடு தமிழ் பற்றி முழுமையாக அறியாதவர்கள் பலரும்
தமிழ் பற்றி கருத்துரைப்பதும் தமிழ்ப் பரிசளிப்புக்குழுக்களில் அமர்ந்துகொள்வதும் கேடான
முன்காட்டாகும்.இவர்கள் தமிழுக்கான குழுக்களில் அமர்வதும் அமர்த்தப்படுவதும் கண்டிக்கத்தக்கது.
மேலும் தமிழ் அரசியல்காரர்களின் மரப்பாச்சிப் பொம்மையாகிவிட்டது.கருத்தரங்க ஏற்பாட்டாளர்களின் காசுக்குரிய தொழிலுக்கும் தமிழ் இன்று நல்ல வணிகப் பொருளாகிவிட்டது. சென்ற ஆண்டு சமய இலக்கியத்தில் மாநாடு கூட்டி ஆராய்ச்சி செய்தவர்கள் இந்த ஆண்டு பகுத்தறிவுக்கொள்கையுடைய அண்ணாவுக்கு நூற்றாண்டு விழா காணும் அவலம்.இவர்கள் பெரியாருக்குக் காசியில் கங்கைக்கரையில் "புண்ணியதானம்" செய்தாலும் செய்வார்கள்.
சங்க இலக்கியம் சென்ற ஆண்டு வரை சீண்டுவார் இல்லாமல் தமிழகக்கல்வி நிறுவனங்களில் தள்ளாடியது.காரைக்குடி அழகப்பா பல்கலையில் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் பணியாற்றிதால் அவர் வளர்த்த மாணவர்கள் சங்க இலக்கியக் குழந்தைக்கு ஆராய்ச்சிப் பாலூட்டி வளர்த்தனர்.இன்று செம்மொழி நிறுவனத்தில் காசு வாங்க பலரும் சங்க இலக்கியப் புலிகளாகிவிட்டனர்.படம் எடுக்கிறார்கள்.ஆவணமாக்குகிறார்கள்.பதிப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.மொழிபெயர்க்கத் துடிக்கின்றனர்.படிக்க மட்டும் மறுக்கிறார்கள்.
புதுச்சேரியில் சங்க இலக்கிய விழிப்புணர்ச்சியூட்ட ஊர்வலம்போனார்கள். மதுக்குடி நாயகர்கள் அடித்த பறையாட்டத்தில் தமிழ்த்தாய் தள்ளாட்டம் போட்டாள்.கரகாட்டம், வானவேடிக்கை நடந்தது.உ.வே.சாமிநாதர் படம் தூக்கி நடந்தார்கள்.உ.வே.சாவைத் தவிர வேறு யாரும் சங்க இலக்கிய ஆய்வுகளில் ஈடுபடவில்லையா?பதிப்பிக்கவில்லையா?என்று ஒருவரும் கேட்கவில்லையே.மழவை மகாலிங்க ஐயர்,பின்னத்தூர் நாராயணசாமியார், சி.வை. தாமோதரனார் போன்றவர்களை நினைவுகூர ஆள் இல்லையே!
பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார் ஐயா அவர்கள் தம் மிகப்பெரியஇசைப்புலைமையை இந்தத் தமிழ்ச்சமூகம் பயன்படுத்திக் கொள்ளாததால்அவர்கள் வறுமையுடன் சுற்றிவந்து தமிழகம் முழுவதும் தமிழிசைப்பணியை ஆற்றவேண்டியிருந்து.கோவை மாவட்டத்துக்காரர்கள் பண்ணாராய்ச்சி வித்தகருக்குக் கடைசிக்காலம் வரை அன்புகாட்டியமை தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் சுந்தரேசனாரின் துணைவியார் இறக்கும்வரை அவர்களுக்கு நிதியுதவி நல்கியமை என்றும் போற்றத் தகுந்த செயலாகும்.
பாவாணர் மனைவி பத்து உரூவா பணம் இல்லாததால் உயிர் பிழைக்கச் செய்யமுடியாத நிலையைப் பாவாணர் குறிப்பிடுவார்.திரு.வி.க.அவர்கள் உணவுக்கு இறுதிக்காலத்தில் தொல்லைப்பட்டதாகவும் அறியமுடிகிறது.மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் இறுதிக்காலமும் மகிழ்ச்சியாக அமையவில்லை.பெரும்பாவலர் பாரதியின் வறுமையை இவ்வுலகம் அறியும்.அவர் உயிருடன் இருந்தபொழுது சிறுமைப்படுத்தியவர்கள் இன்று அவரைத் தெய்வாமாக்கி அழகு பார்க்கின்றனர்.மாநாடு கூட்டி மார்தட்டுகின்றனர்.
இன்றைய பட்டிமன்றக்காரர்களும் சமயப்பேச்சாளர்களும் இந்த நாளை இனிய நாளாக்க மணிக்கு நாற்பதாயிரம் கறக்கும் மடமையை என்னென்பது?திரைப்பா ஆசிரியர்கள் பேசுவதுதான் தமிழ் என மூடத்தனமாக நம்பி அவர்களை மதுரைக்கு விமானத்தில் அழைக்க,வளியறையில் தங்கவைக்க,உதவிளருக்கு ஒரு மகிழ்வுந்து தனக்கு ஒரு மகிழ்வுந்து கேட்கும் கவிராசர்களை என்னென்பது?அவர்களுக்கு முதன்மைதரும் கல்வி உலகை என்னென்பது?காலமெல்லாம் வறுமையில் வாடினாலும் தமிழ்ப்பணியில் தளராத, நாளும் பணவிடை கொணரும் அஞ்சல்காரரின் வருகைக்கு ஏங்கிய பெருஞ்சித்திரனார் போன்ற கொள்கையாளர்களின் வறுமையை என்னென்பது?மொழிக்கும் இனத்துக்கும் நாட்டுக்கும் உண்மையாக உழைத்த இவர்களை இன்னும் தமிழகத்தில் அனைவரும்
அறியாமல் இருப்பது நம் கீழ்நிலைகாட்டும் சான்றாகும்.
தமிழ் நம் தாய்மொழி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.தமிழ் தமிழர்களின் பொதுச்சொத்து. புலவர்களின் சிறப்புச் சொத்து.எனவே தமிழ்பற்றி முடிவெடுக்கும் இடங்களில் எல்லாம் தமிழாய்ந்த தமிழர்கள்தான் இருக்கவேண்டும்.பொறியியல்,மருத்துவம் துறைசார்ந்த குழுக்களில் கருத்துரைஞராகத் தமிழ் அறிஞர்கள் இடம்பெறச்செய்தால் அந்தத் துறை
சார்ந்தவர்கள் கொதித்தெழுந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.நெஞ்சாங்குலை மருத்துவப்பண்டுவம் சார்ந்த அறிஞர்கள் குழுவுக்கு யான் தலைமை தாங்கலாமா?அல்லது நாளும் இடுந்து விழும் கட்டட மாதிரி உருவாக்குபவனை நீண்ட பாலம் கட்ட அனுமதிக்கலாமா?ஆனால் தமிழுக்கு எதிரானவர்கள், தொடர்பற்றவர்கள் பல குழுக்களில் இன்று அமர்ந்துள்ளனர்.அவர்கள் அமரவைக்கப்பட்ட பிறகும் அவர்களைப் பற்றி கருத்து கூறாமல் இருப்பது நம் தன்னலங்காட்டும் செய்கையாகும்.
இது நிற்க.
விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் மதிப்பிற்குரிய தொல். திருமாவளவன்
அவர்கள் ஒரே நாளில் பத்தாயிரம் பேருக்குத் தமிழில் பெயர்மாற்றியது எளிய செயல் அன்று. தமிழ் வளர்ச்சிக்கு எதிராக நிற்பவர்களுக்கு அவர் கொடுத்த முதல் அதிர்ச்சி மருத்துவம்.அவர் செயல் தமிழ்மொழி வரலாற்றை எம்போல்வார் எழுதும்பொழுது அது நன்றியுடன் மதிக்கப்படும். குறிக்கப்பெறும். பாவாணர்,பெருஞ்சித்திரனார்,வ.சுப.மாணிக்கம்,தமிழண்ணல்
உள்ளிட்ட அறிஞர்கள் வழியில் தமிழுக்கு வளம் சேர்ப்பவர்கள் பல்லாயிரவர் உள்ளனர் என்பதற்குத் திருமாவளவன் அவர்களின் செயல் ஒரு சான்றாம்.
தமிழீழத்தில் உயிருக்கும் உரிமைக்கும் போராடும் நிலையிலும் அவர்கள் தங்கள் மறவர்களுக்குத் தூயதமிழில் பெயரிட்டுள்ளதும்,அவர்களின் அரசாட்சியில் தமிழீழ வைப்பகம் எனவும் மாவீரர் துயிலும் இடம் எனப் பொறித்துள்ளதும்,வழக்குகள்,கல்வி,கலை,பண்பாடு யாவும் தமிழில் தமிழுக்கு ஆக்கமான வகையில் செய்யப்படுவதாகவும் ஏடுகளில் படிக்கின்றமை நம்பிக்கை தரும் செயல்களாகும்.சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தமிழ்மொழி ஆட்சி அதிகாரம் பெற்ற மொழியாக உள்ளமையும் இங்கு எண்ணிப்பார்க்கத்தகும்.
மொரீசியசு,தென்னாப்பிரிக்கா நாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகத் தமிழர்களுடன் தொடர்புகொள்ள நினைத்து அதற்குரிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றமையும், மலேசியா,அத்திரேலியா.கனடா.அமெரிக்கா,இலண்டன்,பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்தாலும் தங்கள் பண்பாட்டையும்,சமயத்தையும்,மொழியையும் காக்க முனையும் செயல்களையும் அவர்களின் பற்றையும் எண்ணி எண்ணி வியப்படைய வேண்டியுள்ளது.
மலேசியாவில் வாழ்ந்த தமிழர் ஒருவர் தமக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு மன்னர்மன்னன், இளந்தமிழன், அண்ணாதுரை எனப் பெயரிட்டுள்ள பாங்கறிந்து வியந்துபோனேன்.தமிழகத்தில் தமிழ்ப்பேராசிரியர் ஒருவரின் மகனும் தமிழ்ப்பேராசிரியர்.அவர் தமிழில் கையெழுத்திடு வதில்லை. மகனுக்கே தமிழில் கையெழுத்திடுக எனப்பயிற்றாத அந்த தந்தைப்பேராசிரியரிடம் படித்த பல்லாயிரம் மாணவர்கள் உணர்வற்ற பிண்டங்களாகத்தானே வெளியேறியிருப்பார்கள். இவர்களைப் போன்ற மொழிப்பற்றற்ற தொடைநடுங்கிப் பேர்வழிகளால்தான் தமிழுக்கு இழப்பு ஏற்படுகிறது.
மொழிகாக்கும் நிறுவனங்களில்,அமைப்புகளில் பணிபுரிந்த பலரும் அரசியல் எடுபிடிகளாக
ஒப்பனை முகம் பெற்றார்களே தவிர அறிஞர் வ.அய்.சுப்பிரமணியன்,தமிழண்ணல்
போல தனிமுத்திரை பதித்தார்கள் இல்லை.இத்தகு சான்றோர்கள் தமிழுக்கு அதிகம்
கிடைத்தால் தமிழ் வீறுகொண்டு வளர்ந்திருக்கும்.
கன்னட மொழிக்காரர்கள் யாரும் தங்கள் மொழிக்கு உழைத்தவர்களை அவமதிப்பதில்லை. எதிர் கருத்துச்சொல்வதில்லை.அவர்களை மதிப்பார்கள்.தமிழகத்தில் தமிழுக்கு உழைப்பவர்கள் வாழும் காலத்தில் மதிக்கப்பட்டமை மிகக் குறைவு.
தமிழகத்தை இலக்கியத்தால் மாற்றப் போவதாகப் புறப்பட்ட சில எழுத்தாளர்கள் தங்கள் இதழின் பெயரையே தமிழாக வைக்காமல் தமிழ்வளர்க்கப் புறப்பட்டுள்ளமையை நினைத்து வெட்க வேண்டியுள்ளது.இவர்களைத் தான் பேராசிரியர் தங்கப்பா அவர்கள் கரித்துணியால் தூய்மை செய்பவர்கள் என்பார்.
சிற்றூர்ப்புற மக்களும்,தமிழ் உணர்வுடைய நகர மாந்தரும் அயல்நிலத்தாரும் இருக்கும்வரை தமிழுக்கு ஆக்கம் அமையும். தமிழுக்கு இழப்பு வந்தபொழுதெல்லாம் அது தன்னைத்தானே பாதுகாத்துக்கொண்டுள்ளது.தமிழுக்கு அத்தகு ஆற்றல் உள்ளது.அழிவுநாள் குறித்து வைத்து யாரும் அழவேண்டாம்.
(மின்தமிழ் குழுவில் திருவாளர் முனைவர் நா.கணேசனார் தமிழின் இன்றைய நிலை பற்றிய என் கருத்தறிய விரும்பினார்.அவருக்கும் நண்பர்களுக்கும் நன்றி)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)