நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 3 ஜனவரி, 2009

பிடாரியம்மன்(கங்கைகொண்டசோழபுரம்)...


கோயில் தோற்றம்

கங்கைகொண்டசோழபுரத்தின் மேற்கே உள்ள குருகாவலப்பர்கோயிலில் இறங்கி, சிறிது மேற்கே நடந்து தெற்கே திரும்பினால் சிறு பாதை இருக்கும்.ஒரு கல் தொலைவு நடந்தால் குளம் ஒன்று தெரியும்.அதன் கரை கடந்து சென்றால் பாதையின் கீழ்ப்புறமாக ஒரு கோயில் தெரியும். சுற்றுமதில் சுவர் மட்டும் இருக்கும்.உள்ளே கருங்கல்லில் வடிக்கப் பெற்ற ஒரு அழகிய சிலை இருக்கும்.பிடாரியம்மன் என்பர்(மக்கள் வழக்கில் "பொடரியா கோயில்" என இக்கோயில் வழங்கப்படுகிறது).

கங்கைகொண்ட சோழபுரத்தின் மேற்கு எல்லைக் காளியாக இதனைக் குறிப்பிடுவது உண்டு.கங்கைகொண்ட சோழபுரத்தின் நான்கு திசைகளிலும் நான்கு எல்லைக் காளிகள் இருப்பதாகக் குறிப்பிடுவது உண்டு.இவற்றை முறையே என் தளத்தில் வேறு வேறு நாளில் பதிவு செய்து முதன்முதல் வெளியுலகிற்கு வழங்கியுள்ளேன்.

இச்சிலைகள் யாவும் கலிங்கநாட்டுப் பகுதிகளிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவை யாவும் பண்டைத்தமிழரின் கலையுணர்வு காட்டும் சான்று ஆவணங்கள் என்பதில் ஐயமில்லை.இச் சிலைகளைப் பற்றிய அறிவுடைய சிற்பிகள் அல்லது வரலாற்று ஆய்வாளர் கள்தான் இதன் காலம்,இதில் உள்ள கலைநயம்,சிலை குறிப்பிடும் தொன்ம(புராண)ச் செய்திகள் பற்றி விளக்கமுடியும்.தமிழர்களின் அரிய கலைக்கருவூலங்கள் போற்றப்படாமல் உள்ளமைக்கு இச்சிலையும் ஒரு சான்றாகும்.

இச்சிலை இப்பகுதி சார்ந்த மக்கள் புஞ்சை நிலங்களில் புல் செதுக்கும்பொழுது மண்ணில் புதைந்திருந்ததைக் கண்டு வெளியே எடுத்துப் பராமரித்து வருவதாகக் கூறுகின்றனர். இடைக்கட்டு ஊர் சார்ந்த நாட்டார் வீட்டுக் குடும்பத்தாருக்கு உரிய கோயிலாக இது விளங்குகிறது.அவர்களின் கொல்லையின் நடுவே இச் சிலை உள்ளது.சக்தி வாய்ந்த தெய்வமாக இது நம்பப்படுகிறது.

பிடாரியம்மன் முகத்தில் சினம் வெளிப்பட்டு நிற்கிறது.அம்மையின் இரண்டு பல் வெளியே தெரியும்படி வடிக்கப்பட்டுள்ளது.இரண்டு வீரர்களை அம்மை மிதித்துத் துன்பப்படுத்துவதாக(வதம்)க் காலடியில் இருவரின் உருவம் தெரிகிறது.அவர்கள் கையில் கத்தி,கேடயம் உள்ளிட்ட கருவிகள் உள்ளன.அம்மைக்குப் பல கைகள் உள்ளன.இடப்புறம் சிதைவின்றியும் வலப்புறம் சிறிது சிதைந்தும் காணப்படுகிறது.மேல்பகுதி அவ்வளவு செய்நேர்த்தியுடையதாக விளங்குகிறது.மிகத் தேர்ந்த கல்லும் மிச்சிறந்த சிற்பியின் திறனும் வெளிப்படுத்தி இச்சிலை உள்ளது.

பல நூறு ஆண்டுகள் மண்ணிலும் மழையிலும் வெயிலிலும் இருந்த அச்சிலையை இனியும் அந்த நிலையில் வைக்காமல் கூரையமைத்து வழிபடுவது பக்தியுடையவர்களின் கடமையாகட்டும்.சிதைவுபடாமல் பாதுகாப்பது வரலாற்று ஆய்வாளர்களின் கடமையாக
இருக்கட்டும்.அலுவலகத்தில் மாத இறுதியை நினைத்துக்கொண்டும்,மிகப்பெரிய "புராஜெக்ட்" செய்வதாக, "பண்ட்டு"க்கு ஏங்கி மனிதவளத்துறையை உறிஞ்சுவதை ஆய்வு(!) நோக்காகக் கொள்ளாமல் ஆய்வார்வம் உடையவர்கள் இந்த வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க இன்றே இணைவோம்.


அம்மையின் அழகிய வடிவம்


அம்மையின் மார்பளவுப்படம்


கலையுணர்வுடன் வடிக்கப்பெற்றுள்ள அம்மை வடிவம்


கலை நேர்த்தியில் அம்மையின் வடிவம்


வீரர்களைத் துன்புறுத்தும் அம்மை


அம்மையின் முழு உருவம்


பிடாரியம்மன் கோயில் என் பழைய நினைவுகள்...

முப்பது ஆண்டுகளுக்கு முன் சின்னஞ்சிறுவனாக இருந்த நான் இடைக்கட்டுத் தெருவுக்கு விளையாட வருவேன்.அங்குள்ள இராசு நாட்டார் என்பவரின் குடும்பம் எங்கள் உறவினர் குடும்பம்.காலையில் வரும் நான் அங்குள்ள என் அகவையொத்த சிறுவர்களுடன் விளையாடிவிட்டு அவர்கள் வீட்டில் பகல் உணவு உண்டு மாலை வீடு திரும்புவது வழக்கம்.

காரி(சனி),ஞாயிறு இதுவே என் வழக்கம்.பகலில் அவர்கள் வீட்டில் இருக்கும் நாரத்தம்பழம் பறித்து உண்போம்.அவ்வளவு சுவையுடையதாக இருக்கும்.ஓடிப்பிடுத்து விளையாடுவது, பந்தடிப்பது,வேடம் கட்டி ஆடுவது,திரைப்படம் காட்டுவது,"செட்டு"சேர்த்து அடிதடியில் ஈடுபடுவதும் உண்டு.மிகவும் துணிச்சல்காரன் நான்.பிள்ளைமார்கள் தெருவில் இருக்கும் சுவற்றில் அரசியல் தலைவர்களின் படத்தில் சாணி அடிப்போம்.சுப்பிரமணியன் ஆசிரியர் இதற்காக ஒருமுறை கன்னத்தில் அறைந்துள்ளார்.(இப்பொழுது அவர் வாங்க தம்பி! என்று அன்பொழுக அழைக்கும்பொழுது இந்த நிகழ்ச்சியை நினைவூட்ட நினைப்பேன்.)

பகலில் திருக்குளத்தில் சென்று ஓரியடித்து மீள்வோம்.ஊரில் உள்ள அனைவரும் ஒருவருக்குதான் அஞ்சுவோம்.அவர் எங்கள் "தோலு" சித்தப்பா. குளிக்கும் போது
தண்ணீரைக் குழப்பிச் சேறாக்கும் எங்களை அவர் காதைப் பிடித்துத் திருகி அடிப்பார். சட்டையை எடுத்து வைத்துக்கொண்டு தோப்புகரணம் போடச் சொல்வார்.அவர் மீசை ஐயனார்கோயில் சாமி மீசைபோல் இருக்கும்.வளைவான கொடுவாள் போல் அது இருக்கும்.எண்ணெய் தடவுவார்.அவர் மீசைக்கு முதன்மை தருபவர்.அழகிய வண்டிமாடுகள் வைத்திருப்பார். வண்டியின் ஏறி அமர்ந்து மாட்டு வாலைப்பிடித்து முறுக்கினால் சின்ன வளையம் முருகன் டாக்கீசு திரைப்படக்கொட்டகையில் போய் வண்டி நிற்கும். மாடு, வண்டி,மீசையுடன் புகைப்படம் எடுத்துத் தன் வீட்டில் மாட்டிவைத்திருந்தார்.

அப்படி விளையாடிய விளையாட்டுப் பருவம் ஒன்றில் எல்லைத்தாண்டி இப்பொழுது "பொடரியா கோயில்" வந்தோம்.நெடுநாள் திட்டம்.பனங்காய் வெட்டுவது.அது
நிறைவேற உள்ளதில் எனக்கு மகிழ்ச்சி."பொடரியா கோயில்" உள்ளே போகக்கூடாது என்பது நண்பர்கள் கட்டளை.கொடுமையான சாமி என்றனர்.ஆனால் நம் கொல்லைகளைக் காப்பது இதுதான் என்றனர்.

நாட்டான் வீட்டுக் குடும்பத்துக்கு நில புலம் காவலுக்கு அங்குக் கொட்டகை இருந்தது. அறுவடைக் காலங்களில் அங்கு கடலை,எள் பாதுகாப்பது உண்டு.வைக்கோல் போர் இருக்கும்.மாடு கன்றுகள் அங்குக் கட்டிவைப்பது உண்டு.நெல்லிக்காய் மரம் இருந்தது. பதம்பார்த்தோம்.

நீண்டிருந்த பனை மரத்தைச் சுற்றிப் பார்த்தோம். ஒருவரும் இல்லை.பனங்காய் தன் அழகு காட்டி அழைத்தது.இன்று வெட்டித் தின்னும் ஆசையில் எங்கள் நெஞ்சம் சிறகுகட்டிப்
பறந்தது.

முன்னெச்சரிக்கையாய்க் கையில் கத்தி ஒன்று கொண்டுபோயிருந்தோம்.இப்பொழுதுதான் எங்களுக்குள் மெதுவாக கருத்துவேறுபாடு உரவாகும் சூழல்.யார் மரத்தில் ஏறுவது?
அனைவரும் பின் வாங்கினர்.நண்பர்களைக் குறை சொல்லிப் பயன் இல்லை.அந்த அளவு அந்தப் பனைமரம் உயரமாக வளர்ந்திருந்தது.அதிலும் களையெடுக்காமல் அதன் மட்டைகள் தாடியும் தம்பட்டையுமாக இருந்தது.பனங்கருக்கு மட்டைகள் நீண்டிருந்தன.பழுத்த மட்டைகள் வேறு தொங்கிக்கொண்டிருந்தன.அவற்றின் இடையே கருத்த பெண்ணின் மார்புபோல் பனங்காய் தன் அழகுகாட்டி அழைத்தது.

கடைசியில் யானே அந்தத் தற்கொலை முயற்சிக்கு ஆயத்தமானேன்.
கத்தியை எடுத்து அரைஞாண் கயிறு அடங்கிய கால்சட்டை வரம்பில்(இடுப்பில்)பக்குவமாக மாட்டிக்கொண்டேன்.இலாவகமாக மரத்தைப் பற்றிக் காலை உந்தி மார்பை மரத்தில் பதித்து ஏறினேன்.

பத்துப் பதினைந்து முறை மரத்தை அணைந்ததும் பனையின் சிராய்ப்பு மார்பில் பட்டது. மார்பில் இரத்தம் கசியத்தொடங்கியது.அது எனக்குப் பொருட்டாகத் தெரியவில்லை. மேலும் மேலும் ஏறினேன்.நீண்டு கிடக்கும் பனையின் காய்கள்தான் கண்ணுக்குத் தெரிந்ததே தவிர தூரம் எனக்குப் பொருட்டாக இல்லை.மெதுவாக மரத்தின் நுனிக்கு வந்துவிட்டேன்.காய்ந்த மட்டைகளில் தலையை விட்டு, மட்டைகளைச் சரித்துவிட்டும் காய்ந்த மட்டைகளை வெட்டியும் ஒரு போர் வீரனைப்போல் முன்னேறிக்கொண்டிருந்தேன்.பனங்குலை உறுதியானது.பச்சைமட்டையும் உறுதியானது.அவறைப் பற்றிக் கொண்டு மெதுவாக மேலேறிவிட நினைத்தேன்.

இப்பொழுது கீழே பார்க்கும் பொழுது அச்சம் ஏற்பட்டது.இறங்க மனம் இல்லை.கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தரை தெரியவில்லை.கீழை விழுந்தால் செத்த இடம் பில் முளைத்திருக்கும்.அந்த அளவு உயரத்தில் இருந்தேன்.மெதுவாக மேலே ஏறிப் பனங்காயை வெட்டிவிட முயற்சி செய்தபொழுது கொம்பேறி மூக்கன் பாம்பு வேகமாகப் புறப்பட்டு என்னை நோக்கி வந்தது...


(படங்களைப் பயன்படுத்துவோர் இசைவு பெறுக)

2 கருத்துகள்:

S.Lankeswaran சொன்னது…

பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பொக்கிசங்கள். தமிழக அறநிலையத்துறையும் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகமும் என்ன செய்து கொண்டு இருக்கின்றன?

நா. கணேசன் சொன்னது…

அரிய சோழர்காலக் காளியின் சிலை. சூலம் தாங்கிய கோலம், அலங்காரத்தில் இரும்போ, வெள்ளியினாலோ சூலம் சாத்துதல் மரபு.

காலடியினில் சும்பன், நிசும்பன் என்னும் அசுரர்கள். கதையைத் தேவி மகாத்மியத்தில் காணலாம். காளி உபாசகர் பாரதியை விட யார் "இவள் யார்?" என்று விண்டுரைக்க வல்லார்?

அன்புடன்,
நா. கணேசன்


சக்தி விளக்கம்
~ பாரதியார்

ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் - அதை
அன்னை எனப்பணிதல் ஆக்கம்
சூதில்லை காணுமிந்த நாட்டீர் - மற்றத்
தொல்லை மதங்கள்செயும் தூக்கம்.

மூலப் பழம்பொருளின் நாட்டம் -இந்த
மூன்று புவியும்தன் ஆட்டம்
காலப் பெருங்களத்தின் மீதே - எங்கள்
காளி நடமுலகக் கூட்டம்.

காலை இளவெயிலின் காட்சி -அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி
நீல விசும்பினிடை இரவில் - சுடர்
நேமி யனைத்துமவள் ஆட்சி.

நாரண னென்றுபழ வேதம் - சொல்லும்
நாயகன் சக்திதிருப் பாதம்
சேரத் தவம்புரிந்து பெறுவார் - இங்குச்
செல்வம் அறிவுசிவ போதம்.

ஆதி சிவனுடைய சக்தி -எங்கள்
அன்னை யருள்பெறுதல் முக்தி
மீதி உயிரிருக்கும் போதே - அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி.

பண்டை விதியுடைய தேவி - வெள்ளைப்
பாரதி யன்னையருள் மேவி
கண்ட பொருள்விளக்கும் நூல்கள் - பல
கற்றலில் லாதவனோர் பாவி.

மூர்த்தி கள்மூன்று பொருளொன் - றந்த
மூலப் பொருளொளியின் குன்று:
நேர்த்தி திகழும்அந்த ஒளியை - எந்த
நேரமும் போற்றுசக்தி என்று.