கமில் சுவலபில்
இருபதாம் நூற்றாண்டு தமிழ் மொழிக்கு ஆக்கமான நூற்றாண்டாக அமைந்தது. தமிழ்க் கவிதைத்துறையும் உரைநடைத் துறையும் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றது. தகவல் தொழில் நுட்பங்கள் தமிழ் மொழிக்கு மிகப்பெரிய ஆக்கம் நல்கின. அயல்நாட்டு அறிஞர்கள் பலர் தமிழ்மொழி, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டுத் தமிழை உலகத் தரத்திற்குக் கொண்டு சென்றனர். எமனோ, பர்ரோ, மார், கமில் சுவலபில், சுசுமு ஓனோ, குரோ, அலெக்சாண்டர் துபியான்சுகி, உருதின், சாங்க்சிலின், தக்காசி உள்ளிட்டவர்கள் தமிழ்மொழியை, தமிழ் இலக்கியங்களைப் பிற மொழியினர்க்கு அறிமுகம் செய்து வைத்தனர். ஈழத்து மக்களின் புலம்பெயர் வாழ்க்கை வழியாகவும் தமிழர், தமிழ் பற்றிய செய்திகள் உலகம் முழுவதும் பரவின.
தமிழ் தமிழர் பற்றிப் பிறமொழியினருக்குச் சிறப்பாக அறிமுகம் செய்துவைத்தவர்களில் செக்கோசுலேவியா நாட்டைச் சார்ந்த கமில் சுவலபில் அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. கமில் சுவலபில் அவர்கள் பல மொழிகளை அறிந்த அறிஞர். தமிழ்மொழியை நன்கு படிக்கவும் எழுதவுமான ஆற்றல் பெற்றவர். தமிழ் அறிஞர்களுடன் இவர் பழகியதுடன் தமிழ்ப்பற்றுடைய உணர்வாளர்கள் பலருடன் பழகிய பெருமைக்கு உரியவர். தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியில், நாட்டுப்புறவியல், பக்தி இலக்கியம், புத்திலக்கியம் பாரதியார், பாரதிதாசன் பாடல்களில் நல்ல பயிற்சியுடையவர். இவர்தம் பாடல்களின் சிறப்பைப் பிற மொழியினருக்கு எடுத்துரைத்தவர். ஆங்கிலத்திலும் செக் மொழியிலும் மொழிபெயர்த்தவர். இவர் தம் வாழ்வியலை இங்கு நோக்குவோம்.
கமில் சுவலபில் அவர்கள் செக்கோசுலேவியா நாட்டில் உள்ள பிராகா(Prague) என்னும் மாநகரில் 17-11-1927 ஆம் ஆண்டில் பிறந்தவர்.தந்தை கமில் சுவலபில் தாயார் மரியம்மா. கமில் வக்ளாவ் சுவலபில்(Kamil Vaclav Zvelebil) என்பது இவர்தம் முழுப்பெயராகும்.(சுவலபில் என்பதற்கு To make everything better,to make everything more perfect:more beautiful என்பது பொருளாகும்.எனவே பின்னாளில் சைவசித்தாந்த நூற்பதிப்புகழக ஆட்சியர் வ.சுப்பையா பிள்ளை அவர்கள் நிரம்ப அழகியர் என்ற பெயரைக் கமில் சுவலபிலுக்குத் தமிழில் சூட்டினார்).
பிராகாவில் அமைந்துள்ள சார்லசு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர் (1946-52). இந்தியவியல்,ஆங்கில இலக்கியம்,சமற்கிருதம்,தத்துவம் பயின்றவர் .சமற்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்(1952).பின்னர் திராவிட மொழியியலில் இரண்டாவது முனைவர் பட்டத்தையும் பெற்றவர்(1959). 1952 முதல் 1970 வரை செக்கோசுலேவியாவில் அமைந்துள்ள கீழையியல் துறையில் தமிழ் திராவிட மொழியியல் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். கமில் சுவலபில் அவர்களுக்கு கிரேக்கம், இலத்தீன், செருமன், ஆங்கிலம், உருசியன், சமற்கிருதம், தமிழ் முதலிய மொழிகள் நன்கு தெரியும். மலையாளம், இந்தி, பிரஞ்சு,இத்தாலியன்,போலிசு உள்ளிட்ட மொழிகளையும் அறிவார்.
செக்நாட்டில் தூதுவரகத்தில் பணிபுரிந்த தமிழ் அன்பர் ஒருவர் வழியாக தமிழ் கற்கத் தொடங்கிய கமில் அவர்கள் வானொலி வழியாகவும் நூல்கள் வழியாகவும் தமிழ் படிக்கத் தொடங்கினார்.தமிழ் பற்றி பிரஞ்சுமொழியில் பியாரே மெய்லே (Perre Meile) என்பவர் எழுதிய Introduction an Tamoul என்ற நூல் வழியாகவும் தமிழ் அறிமுகம் கிடைத்தது. தென்னிந்தியாவிற்கு பலமுறை களப்பணி ஆய்வுக்காக வந்துள்ளவர். சென்னைக்கு இவர் வருகை தரும்பொழுது தமிழகத்து அறிஞர்கள் இவருக்கு வரவேற்பு நல்கியும் பாராட்டு வழங்கியும் பன்முறை ஊக்குவித்துப் போற்றியுள்ளனர்.
கமில் சுவலபில்
சென்னை மாநிலக்கல்லூரியில் சென்னைத் தமிழ்க்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் 07.09.1962 இல் அறிஞர் மு.வ. தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிஞர்கள் பலர் கமில் சுவலபில் அவர்களைப் பாராட்டிப் பேசினர். மு.வ.கமில் பற்றி குறிப்பிடும்பொழுது "இவர்கள் நம்மிடையே வாழ்ந்து வருகின்ற போப்; நம்மிடையே வாழ்ந்து வருகின்ற கால்டுவெல், தமிழ்மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து வெளியிட்டிருக்கிறார். நற்றிணை, புறநானூறு நன்கு அறிந்தவர். சிலப்பதிகாரத்தை மொழிபெயர்த்து வருகிறார். கல்கியின் நாவல்களையும் மொழிபெயர்த்து வருகிறார். தானே தமிழ் கற்றவர். தமிழ் ஒலியே கேட்காத நாட்டிலிருந்துகொண்டே தமிழ் கற்றவர்." என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார்(செந்தமிழ்ச்செல்வி 37: 1.பக்கம் 33).
முனைவர் கா.மீனாட்சிசுந்தரம், வில்லியம் வில்லட்சு உள்ளிட்டவர்களின் உரைக்குப் பிறகு அன்று அறிஞர் கமில் சுவலபில் உரையாற்றியுள்ளார். திருக்குறள், பாவேந்தர் பாடல்களை மேற்கோள்காட்டி தமிழில் உரையாற்றியுள்ளார். அவர் பேச்சில் 1958 இல் ஒரு முறை சென்னைக்கு வந்துள்ளதை அறியமுடிகிறது.மேலும் செக் மொழியில் குழந்தைகளுக்குத் தென்னிந்தியா பற்றி ஒரு நூல் எழுதியுள்ளதையும், கடந்த நான்காண்டுகளில் உருசியா, செக், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தமிழ் வளர்ச்சி பற்றி பேசியுள்ளார்.
அதுபோல் 14.09.1962 இல் மறைமலையடிகள் நூல் நிலையத்தில் கமில் சுவலபில் அவர்களுக்கு ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கழக ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளை அவர்கள் கமில் சுவலபில் அவர்களுக்கு "நிரம்ப அழகிய கமிலர்" என்ற செந்தமிழ்ப் பெயரைச் சூட்டினார். பேராசிரியர் அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்கள் தலைமை தாங்கியுள்ளார். மு.வ, மயிலை சீனி. வேங்கடசாமி உள்ளிட்ட அறிஞர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
கமில் கற்கவும் கற்பிக்கவும் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர். அவ்வகையில் 1965-66 இல் அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ பல்கலைக்கழகத்திலும், 1967-68 இல் செருமனி கெய்டல்பெர்க் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர். 1968 இல் சார்லசு பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியுயர்வு பெற்றார்.1970 இல் பிரான்சில் வரகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார். லெய்டன் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். நெதர்லாந்து யூட்ரிச் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். 1992 இல் தம் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று இப்பொழுது பிரான்சு தலைநகரம் பாரிசுக்கு அருகில் ஒரு சிற்றூரில் அமைதி வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். உடல்நலக்குறைவு ஏற்பட்டபொழுதும் எழுதுவதிலும் படிப்பதிலும் கவனம் செலுத்தியவர்.
1952 இல் நீனா (Dr. Nina Zvelebil) என்னும் அம்மையாரை மணந்துகொண்டு மூன்று மக்கள் செல்வங்களைப் பெற்றவர்.
கமில் சுவலபில் அவர்கள் தமிழ்மொழியை அறிஞர் மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை அவர்கள் வழியாகவும் நன்கு அறிந்துள்ளார். இதன் நன்றி அறிகுறியாகத் தம் நூல் ஒன்றினை தம் ஆசிரியருக்குப் படையல் இட்டுள்ளமை இவரின் நன்றியுணர்வைக் காட்டுவதாகும். அதுபோல் மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்களிடத்தும் கமில் சுவலபில் அவர்களுக்கு நல்ல ஈடுபாடு இருந்துள்ளது.
தமிழின் மிகப்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தை மொழிபெயர்க்கும் அளவிற்கு இவருக்குத் தமிழ்ப்புலமையும் ஆங்கிலப்புலமையும் இருந்துள்ளமை நமக்கு வியப்பளிக்கின்றது. தமிழ் நூல்கள் பலவற்றை ஆங்கிலத்திற்கும் செக்மொழிக்கும் பெயர்த்துள்ளார். கமில் சுவலபில் அவர்கள் தமிழ் இலக்கியம்,இலக்கணம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியதுடன் மொழியியல் நோக்கிலும் இம்மொழியையும் இலக்கியங்கள், இலக்கணங்கள், நாட்டுப்புறவியல் சார்ந்த செய்திகளையும் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்துள்ளார். இவர் மொழிபெயர்த்த தொல்காப்பியம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்காப்பிய உரைவளத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
தமிழ்க்கடவுளான முருகனிடத்து இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.திருமுருகன் பற்றி இவர் எழுதியுள்ள ஆங்கில நூலில் முருகபெருமான் குறித்த அனைத்துச் செய்திகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சிவன், முருகன், வள்ளியை மணம் முடித்தல் தொடர்பான புராண, இதிகாச் செய்திகள் விளக்கப்பட்டுக் களப்பணிகள் வழியாகச் செய்திகள் சிறப்புடன் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் கமில் சுவலபில் அவர்கள் Smile of Murugan என்று பெயரிட்டுள்ளமை இவரின் முருக ஈடுபாட்டுக்கு மற்றொரு சான்றாகும்.அதுபோல் நடராசரின் ஆனந்த தாண்டவம் பற்றி மிக விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.
தமிழ் யாப்புப் பற்றி அறிஞர் சிதம்பரநாதன் செட்டியார் அவர்கள் வழியாக ஈடுபாடு வரப்பெற்ற கமில் சுவலபில் தமிழ் யாப்புப் பற்றியும் விரிவாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவர்தம் யாப்பு குறித்த பல நூல்களை முனைவர் பொற்கோ அவர்கள் மதிப்பீடு செய்யும் வாய்ப்பைப் பெற்றவர்.கமில் சுவலபில் அவர்களுக்குத் தமிழ் யாப்புப் பற்றிய நல்ல புரிதல் உண்டு என அறஞர் பொற்கோ குறிப்பிடுவார். தமிழ்-சப்பானிய மொழி உறவு குறித்த கருத்தில் நல்ல கருத்து கமில் சுவலபில் அவர்களுக்கு இருந்துள்ளது.
அறிஞர் தமிழண்ணல் சப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கமில்சுவலபில் அவர்களைக் கண்டு பழக ஒரு கிழமை வாய்ப்புக் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார். தமிழ் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கும் சமற்கிருத முதன்மை கமில் சுவலபில் அவர்களிடம் தொடக்கத்தில் தென்பட்டாலும் தமிழ் இலக்கணத் தையும், சங்க இலக்கியத்தையும் தமிழ் இலக்கிய வரலாற்றையும் வரன்முறைப்படுத்தி ஆங்கிலம் வழியாக உலகிற்கு வெளிப்படுத்தியவர்களில் கமில் சுவலபில் குறிப்பிடத்தகுந்தவர் என்கிறார் தமிழண்ணல்.
அதுபோல் தமிழுக்கு அமைந்த செவ்வியல் பண்புகளைத் தொடக்கத்தில் சான்றுகள்வழி விளக்கியவரும் கமில் சுவலபில் அவர்களே எனக் கருதுகிறார். தமிழண்ணல் அவர்களிடம் மதுரையில் சங்க இலக்கியம் கற்ற தக்ககசி அவர்கள்(சப்பான்) கமில் சுவலபில் அவர்களிடம் சங்க இலக்கியம் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
நீலகிரிப்பகுதியில் பேசப்படும் இருளர் மொழி பற்றிய ஆய்வில் கமில் சுவலபில் அவர்கள் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர். இருளர் மொழியை மொழியியல் நோக்கில் ஆராய்து வெளிப்படுத்தியவர். கமில் சுவலபில் அவர்கள் கடுமையான உழைப்பாளி. படித்தல், எழுதுதல், ஆராய்தல், வெளியிடுதலில் கவனமுடன் செயல்பட்டவர். இவர்தம் நூல்கள் கட்டுரைகள் பல்லாயிரம் பக்கங்களில் வெளிவந்து தமிழின் சிறப்பை உலகிற்கு வெளிக்காட்டுவனவாகும். தமிழின் எல்லாத்துறை பற்றியும் மேலைநாட்டிற்கு அறிமுகம் செய்தவர் கமில் சுவலபில்.
திராவிட மொழியியல், சங்க இலக்கியம் பற்றி விரிவாக ஆங்கிலத்தில் எழுதியவர். தமிழ் வழக்குச்சொற்கள் பற்றியும் எழுதியுள்ளார்.
அறிஞர் வானமாமலை அவர்கள் தமிழில் எழுதிய நாட்டுப்புறவியல் சார்ந்த பல கட்டுரைகளை ஆங்கிலத்திலும் செக்மொழியிலும் மொழிபெயர்த்துள்ளதாக அறியமுடிகிறது. குறிப்பாக முத்துப்பட்டன் கதை பற்றி வானமாமலை அவர்கள் சரசுவதி ஏட்டில் எழுதிய கட்டுரைகளைக் கண்ட கமில் சுவலபில் அவர்கள் அக்கதையை உலகிலேயே மிகச்சிறந்த கதைப்பாடல்களுள் இது ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மதன காமராசன் கதை, மயில் இராவணன்கதை இரண்டையும் ஆங்கிலத்தில் பெயர்த்து பிற நாட்டினர்க்கு அறிமுகம் செய்துள்ளார்.1987 இல் வெளி வந்துள்ள இந்நூல் நம் நாட்டுப்புறக் கதைப்பாடல்களையும் இதிகாசங்கள், புராணங்களையும் நன்கு அறிமுகம் செய்யும் முன்னுரையைப் பெற்றுள்ளது.இருளர்மொழியில் வழங்கும் கதைப்பாடல்களையும் இக் கதையுடன் இணைத்து ஆராய்ந்துள்ளார். தமிழ் சமற்கிருத மொழிகளில் கிடைக்கும் விக்கிரமா தித்தியன் கதையையும் ஆய்வு செய்துள்ளதாக அறியமுடிகின்றது.
பாரதியார் பாடல்களில் கமில் சுவலபில் அவர்களுக்கு நல்ல பயிற்சி இருந்தது.பாரதியார் பற்றி 1952 அளவில் மிகச்சிறந்த ஆய்வுகளை நிகழ்த்தி தரமான கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிப் பாரதிப் புகழை உலகிற்கு உணர்த்தியவர்.'தமிழ் கல்சர்'என்னும் இதழில் பாரதி குறித்து பல கட்டுரைகளைக் கமில் சுவலபில் எழுதியுள்ளார்.பாரதி பாடல்கள் (bharathis Poems) என்னும் தலைப்பில் இவர் எழுதியுள்ள கட்டுரை பாரதியை நன்கு அறிமுகம் செய்கிறது.
புதிய ஆத்திசூடியையும் அதன் சிறப்புகளையும் கமில் மிகச்சிறப்பாகப் பாராட்டி எழுதியுள்ளார். பாப்பா பாட்டு என்னும் பாடலைக் கமில் ஆய்வுக்கு உட்படுத்தி, குழந்தைகளுக்குப் பாராதியார் சொன்ன அறிவுரைகளை நினைவுகூர்ந்து எழுதியுள்ளார்.பாப்பா பாட்டின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் வழங்கியுள்ளார். 16 பாடல்களில் பாரதியார் 30 சமற்கிருதச் சொற்களை ஆண்டுள்ளார் எனக் கமில் சுவலபில் குறிப்பிட்டுள்ளார்.'வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே' என்று பாரதி பாடியுள்ள பாடலையும் திறனாய்வுக்கு உட்படுத்தியுள்ளார். பாரதியாரின் பாடல்களை அறிமுகம் செய்யும் கட்டுரையாகவும் திறனாயும் கட்டுரையாகவும் இது உள்ளது.
பாரதியாரின் இளமை வாழ்க்கையையும் கமில் சுவலபில் ஆங்கிலத்தில் மிகச்சிறப்பாக அறிமுகம் செய்துள்ளார். பாரதியார் கால இந்திய நிலை, தமிழக நிலை ஆகியவற்றை அரசியல், சமூகப் பின்புலத்துடன் ஆராய்ந்து எழுதியுள்ளார். பாரதியாரின் கல்வி, காசி வாழ்க்கை, திருமணம், எட்டயபுர அரண்மனை வாழ்க்கை, விடுதலை உணர்வு, கல்வியில் சிறந்து விளங்கியமை யாவும் கமில் சுவலபில் அவர்களால் மிகச்சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.
உ.வே.சாமிந்தரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் என் சரித்திரம் என்னும் நூலை கமில் சுவலில் அவர்கள் The Story of My Life என்னும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ள இந்நூல் வெளிநாட்டினருக்கு உ.வே.சா. அவர்களின் பணிகளை அறிவிக்கும் ஆவணமாக விளங்குகிறது.
திராவிட மொழிகளின் ஒப்பீட்டு ஒலியியல் (Comparative Phonology), நீலகிரிப் பழங்குடி மக்கள் மொழி (இருளர் மொழி) உள்ளிட்ட நூல்கள் இவருக்கு நிலைத்த புகழைப் பெற்றுத் தந்தன.
சமற்கிருதம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலிருந்து செக், ஆங்கிலம், செர்மனி, சுலோவக் மொழிகளுக்கு மொழிபெயர்ப்புப் பணிகள் வழியாக இலக்கியப் பணி செய்துள்ளார். நூல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என இதுவரை 500 மேற்பட்ட படைப்புகளை வழங்கியவர். பல்வேறு அமைப்புகளில் இருந்து பணிசெய்துள்ளார். சாகித்திய அகாதெமியின் சிறப்பு கருத்துரையாளரகவும் இருந்துள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழியில் ஆய்வு இதழ் உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளார். பணி ஓய்வுக்குப் பிறகும் பிரான்சில் நூலாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். தமிழுக்கு இவர் ஆற்றியுள்ள பங்களிப்பு என்றும் தமிழர்களால் நினைவுகூரத்தக்கன. ஆராயாத் தக்கன.
கமில் சுவலபில் நூல்கள் சில :
1.Siddha Quest for Immortality Sexual, Alchemical and Medical Secrets of the Tamil Siddhas,the Poets of the Powers
2.Hippalos The conquest of the Indian Ocean
3.Comparative Dravidian Phonology,
4.Dravidian Linguistics: An Introduction
5.Tamil Literature, E.J. Brill, Leiden, 1975,
6.Companion Studies to the History of Tamil Literature,
7.The Smile of Murugan: On Tamil Literature of South India,
8.The Poets of the Powers: Magic, Freedom, and Renewal,
9.Literary Conventions in Akam Poetry
10.Two Tamil Folktales: The Story of King Matanakama, the Story of Peacock Ravana,
11.Lexicon of Tamil Literature,
12.Nilgiri areal studies,
13.Introducing Tamil literature,
14.Ananda-tandava of Siva-sadanrttamurti: The development of the concept of Atavallan-Kuttaperumanatikal in the South Indian textual and iconographic tradition,
15.Introduction to the Historical Grammar of the Tamil Language,
16.The Irulas of the Blue Mountains, Foreign & Comparative Studies
17.Tamulica et Dravidica: A Selection of Papers on Tamil and Dravidian Linguistics,
18.Classical Tamil Prosody An Introduction
19.The Story of My Life (2 volumes)
20. History of Tamil Literature
21.Tirumurugan
22.The Poets of Powers
23.Tamil Literature
24.Tolkappiyam - collatikaram
25.Tamil Trations on Subrahmannya Murugan
முருகன் பற்றிய கமில் நூல்
கமில் நூல்
கமில் நூல்
கமில் கட்டுரை
கமில் நூல்
உ.வே.சா வாழ்க்கை வரலாறு
கமில் நூல்
கமில் நூல்
கமில் நூல்
கமில் நூல்
கமில் நூல்
நனி நன்றி
தமிழ் ஓசை நாளேடு - களஞ்சியம்,
அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 8,சென்னை(16.11.2008)
http://www.tamilnation.org/
பிரஞ்சு நிறுவன நூலகம்(IFI),புதுச்சேரி
முனைவர் நீனா(Dr. Nina Zvelebil.),பாரிசு,பிரான்சு
பேராசிரியர் மரேக் சுவலபில் (Professor Marek Zvelebil)Sheffield,United Kingdom.
முனைவர் பொற்கோ
முனைவர் க.இராமசாமி
முனைவர் தமிழண்ணல்
திரு.இரகுநாத் மனே(பிரான்சு)
முனைவர் நா.கணேசன்,நாசா விண்வெளி ஆய்வு நடுவம்,அமெரிக்கா
4 கருத்துகள்:
தமிழராய்ப் பிறந்த நாம் தமிழை சரியாக உச்சரிக்காமல் ஆங்கிலம் கலந்து தான் இன்று உபயோகிக்றோம்.
ஆனால் செக் நாட்டு அறிஞர். கமில் கவலபபில் ஐயா அவர்களின் தமிழார்வம் மெய்ச்சிலிர்க்க வைக்கிறதென்றால்.... திரு.மு.இளங்கோவன் ஐயா அவர்களே தங்களின் இந்த ஓயாத தமிழ்ப்பணியை நினைத்து நாம் பெருமிதம் கொள்கின்றோம்.
உலகில் இவ்வளவு தமிழரிஞர்கள் இன்றும் உள்ளார்களா என்று வியக்கும் வண்ணம் உள்ளது உங்கள் பணி. மெல்ல தமிழ் இனி சாகும் .... இல்லையில்லை இல்லையில்லை மெல்ல இனி தமிழ் இங்கு வாழும் திரு.மு.இளங்கோவன் ஐயா போன்றவர்களின் பங்களிப்புக்களால்...
தங்களின் இடையரா பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் உரித்தாகட்டும்.
அறிஞர் கமில் சுவலபில் குறித்த தங்கள் உரைச்சித்திரம் சிறப்பாக உள்ளது.
அன்புடன்
தேவமைந்தன்
வணக்கம் திரு.இளங்கோவன் அவர்களே,
அருமையான தகவல் அளித்தமைக்கு நன்றி. இந்த தகவலை நான் எனது வலைப்பூவில் பதிந்துகொள்ளலாமா?
தோழமையுடன்,
இந்துமதி.
மிக அருமையான கட்டுரை.அறிஞர் கபில் சுவலபில் அவர்களின் தமிழார்வம் மெய்சிலிர்க்க வைக்கிறது.அவருடைய தமிழ் தொண்டு ஓர் உண்மையான,உயர்வான ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
நன்றி,
பாஸ்கர்.
கருத்துரையிடுக