நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 22 ஜூன், 2010

கோவை செம்மொழி மாநாட்டில் நான்...

கோவை செம்மொழி மாநாட்டிற்குக் கட்டுரை உருவாக்கும் பணியில் மூன்று மாதத்துக்கு முன்பே ஈடுபட்டேன்.இடையில் வேறு பல பணிகளும் இடையிட்டதால் நேற்றுவரை கட்டுரைக்குரிய காட்சி விளக்கம் தயாரிப்பில் முனைப்பு காட்டினேன்.பன்னாட்டு அளவில் அறிஞர்பெருமக்கள் வருவதால் என்னளவில் தரமுடன் கட்டுரை உருவாக்கும் எண்ணம் இயல்பாகவே தழைத்திருந்தது.

செம்மொழி மாநாட்டில் 24.06.2010 பகல் 12.00 - 1.30 மணிக்கு நடைபெறும் மாசாத்தியார் அரங்கில் திரு.கிரிகோரி சேம்சு அவர்கள் தலைமையில் தமிழ் மின் அகரமுதலிகள் என்ற தலைப்பில் கட்டுரை படிக்கிறேன்.

மேலும் அன்றே தமிழ் இணைய மாநாட்டிலும் கட்டுரை படிக்கும் வாய்ப்பு அமைகிறது. அதாவது 24.06.2010 பிற்பகல் முரசொலி மாறன் அரங்குவலைப்பதிவர் நிகழ்வுகளில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, (பிரான்சு )அவர்களின் தலைமையில் 2:16-2:45 மணிக்குத் தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் கட்டுரை படிக்கின்றேன்.என் இரு உரைகளும் தமிழ் இணையம் சார்ந்து இருப்பதால் தக்கவாறு காட்சி விளக்கத்துடன்(பவர் பாயிண்டு) படைக்க அணியமாயுள்ளேன்.

மேலும் 26.06.2010 மாலை 5.00-6.30 மணிக்கு யாழன் சண்முகலிங்கம் அரங்கில் பத்ரி முன்னிலையில் வலைப்பூக்கள், விக்கிப்பீடியா பற்றிய கலந்துரையாடலில் கலந்துகொள்கிறேன்.

இதன்பொருட்டு யான் கோவை செல்ல முடிவெடுத்து, அரசிடம் தகவல் தெரிவித்துவிட்டு, அயல்நாட்டு நண்பர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பாக முதல்நாள் அதாவது (21.06.2010) புதுச்சேரியில் இரவு பேருந்தில் ஏறினேன்.புதுச்சேரியில் இன்று நல்ல மழை இடியுடன் பெய்ததால் பேருந்தைப் பிடிக்க இயலுமா என்ற ஓர் அச்சம இருந்தது.ஆனால் முன்பதிவு செய்திருந்ததால் இனிய செலவு. தூங்கியபடியே செலவு. 22.06.2010 காலை 7 மணிக்குக் கோவை வந்தேன்.எனக்குரிய விடுதியில் தங்கினேன்.அதற்குள் நண்பர் காசி அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு என் செலவு பற்றி வினவினார்.அவர் அலுவலகம் செல்லும் வழியில் நான் தங்கியுள்ள விடுதி இருந்ததால் அறையில் வந்து கண்டு உரையாடினார்.

உணவுக்குப் பிறகு கனடாவிலிருந்து வந்திருந்த திரு. யோகரத்தினம் அம்மா அவர்களைக் காணும் ஆவலில் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றேன்.அவர்கள் சற்று உடல்நலம் இல்லாமல் இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவரின் அறிவுரை பெற்றுத் திரும்பினேன். அதற்குள் திரு.பாலா பிள்ளை(மலேசியா) மதுரையிலிருந்து கோவைக்கு வரும் செய்தியைச் சொன்னார்கள். பிரான்சிலிருந்து என் மூத்த நண்பர் திரு.விசயரங்கன் அவர்கள், அவர்களின் குடும்ப நண்பர் திரு.முருகையனும்,பெஞ்சமின் லெபோவும் கோவை வந்துள்ள செய்தியைச் சொல்லி என்னைச் சந்திக்கும்படி அறிவுறுத்தினார்.

கோவை மாநாட்டையொட்டித் திருக்குறள் ஒலிப்பதிப்பு செய்த திரு.மதன் அவர்கள் தம் குழுவினருடன் வந்து சந்தித்தார்.அவர்களிடம் விடைபெற்று என் அறைக்கு வந்து பகல் உணவு உண்ணும்பொழுது மணி 3.45 இருக்கும்.உத்தமம் அமைப்பின் செயல் இயக்குநர் திரு.மணியம் அவர்களிடம் நான் கோவை வந்த செய்தியையும் கட்டுரை படிக்க அணியமாக உள்ளதையும் கூறினேன்.மகிழ்ந்தார்.

மலேசியாவிலிருந்து வருகை தரும் திரு.மாரியப்பனார் உள்ளிட்ட தமிழ்நெறிக்கழக அமைப்பினரை வரவேற்கவும் அவர்களைத் தங்க வைக்கவும் காத்துள்ளேன்.இரவு மாநாட்டுப் பந்தலைப் பார்வையிட்டு மகிழ உள்ளளேன்.மாநாட்டு ஏற்பாடுகள் மிகச்சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடந்துவருகின்றன.

திங்கள், 21 ஜூன், 2010

உக்கல் கோயிலின் இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டு


உக்கல் திசைகாட்டி

திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு வட்டத்தில் உக்கல் என்னும் ஊர் உள்ளது.இந்த ஊரை அடைவதற்கு வந்தவாசி-காஞ்சி நெடுஞ்சாலையில் கூழமந்தல் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்(கூழமந்தல் என்பது பண்டைக்காலத்தில் சோழமண்டலம் என்னும் பெயர் உடைய ஊராகும்.இதனை ஆங்கிலத்தில் chozhamandalam என்று எழுதினர்.இதனை ஒலிக்கத் தெரியாத ஆங்கிலேயர் கூழமந்தல் என்றனர். தமிழறியாத அவர்கள் வாயில் கூழமந்தல் என்று வர அன்றுமுதல் இவ்வூர் கூழமந்தலானது. இவ்வூரில் அழகிய சிவன்கோயில் உள்ளது. சோழர்காலத்துக் கட்டடக்கலைக்குச் சான்றாக உள்ள இந்தக் கோயில் கலையுணர்வுடன் உருவாக்கப்பட்டுள்ளது).

காஞ்சிபுரத்திற்குத் தெற்கே 18 கி.மீ. இல் இந்த ஊர் உள்ளது.அருகில் மாமண்டூர் ஏரி வரலாற்றுச் சிறப்பு மிக்கது(7.கி.மீட்டரில்).உக்கல் ஊரின் சிறப்புகளுள் ஒன்று பெருமாள்கோயில் இங்குக் கட்டப்பட்டுள்ளது.சோழர் காலத்துக் கோயில் என்பதும்,அரிய கல்வெட்டுகள் உள்ளதும் குறிப்பிடத்தகுந்த செய்திகளாகும்.

கூழமந்தலிலிருந்து உக்கல் 3 கி.மீ.நடந்தும், பகிர்வுத்தானியிலும் செல்லலாம்.காலையிலும் மாலையிலும் பேருந்துகள் செல்லும். 1000 குடும்பம் இந்த ஊரில் இருக்கும். 5000 பேர் அளவில் வாழ்கின்றனர். அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அடிப்படை வசதிகளை எதிர் நோக்கிக் காத்திருக்கும் இந்த ஊர் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.இவ்வூரின் கோயிலும் கல்வெட்டுகளும் பாதுகாக்கப்படாமல் சிதிலமடைந்து கிடக்கின்றன.அரசும்,பொதுமக்களும் இணைந்து இக்கோயிலைப் புதுப்பிக்க வேண்டும்.தொல்பொருள் துறையினர் கட்டுப்பாட்டில் இக்கோயில் இருப்பின் நல்லது.

உக்கல் பெருமாள் கோயிலில் முன்பு புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.இன்று முறையான வழிபாடு இல்லாமலும் பராமரிப்பு இல்லாமலும் உள்ளது.

உக்கல் என்ற ஊரில் உள்ள பெருமாள் கோயிலின் மேற்குப் புறச்சுவரில் உள்ள கல்வெட்டு இராசராசன் காலத்து கல்வெட்டாகும்.இது தமிழும் கிரந்தமும் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
கி.பி 1014 இல் வெட்டப்பட்ட கல்வெட்டாகும் இது. இராசராசனின் வெற்றிச்சிறப்பைக் கூறும் கல்வெட்டு இதுவாகும்.

மெய்க்கீர்த்தியால் அறியப்படும் செய்திகள்.

காந்தளூர்ச்சாலையிலுள்ள கலங்களை அறுத்தருளினான்.வேங்கைநாடு,நுளம்பபாடி,தடிகைபாடி, குடமலை நாடு,கொல்லம்,கலிங்கம்,ஈழமண்டலம்,இரட்டபாடி,பழந்தீவு இவைகளை இராசராசன் வென்றான் என்று செய்திகள் புலனாகின்றன.

கல்வெட்டால் அறியப்படும் செய்தி

இராசராச சோழனது பணிமகனும், நித்த விநோத வளநாட்டிலுள்ள ஆவூர்க் கூற்றத்து ஆவூரைத் தனக்குப் பிறப்பிடமாகக் கொண்டவனுமாகிய கண்ணன் ஆரூரன்,தன் அரசன் பெயரால் சயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துத் தனியூர் உக்கலாகிய விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்தின் மேலைப் பெருவழியில் ஒரு கிணற்றை அமைப்பித்து அதற்கு நிவந்தம் அளித்துள்ளான்.

நிவந்தத்தின் வகை

இராசராசன் கிணற்றிலிருந்து தொட்டிக்கு நீர் இறைப்பார்க்கு அருண்மொழித் தேவன் மரக்காலால் நாள் ஒன்றுக்கு நெல் இரு குறுணி ஆகத் திங்கள் ஆறுக்கு நெல் முப்பது கலமும், இராச ராசன் பெயரால் தண்ணீர் வார்ப்பார்க்கு நாடோறும் நெல் இரு குறுணியாகத் திங்கள் ஆறுக்கு முப்பது கலமும்,இப்பந்தலுக்கு மட்கலம் இடுவார்க்குத் திங்கள் ஒன்றுக்கு நெல் இரு தூணியாகத் திங்கள் ஆறுக்கு நெல் நான்கு கலமும், இராச ராசன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதம் ஏற்பட்டால் அவைகளைப் புதுப்பிக்க ஆண்டுதோறும் இருகலனே இரு தூணி நெல்லும் ஆக 66 கலம் எட்டு மரக்கால் நெல் விளையக் கூடிய நிலத்தின் விலைக்குரிய பணத்தையும், அதற்கு வரிக்கு உரிய பணத்தையும் தனியூர் உக்கலாகிய விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார், கண்ணன் ஆரூரனிடம் பெற்றுக்கொண்டு வரி இல்லாமல்(நிலத்தை விற்றுக்கொடுத்து அத்தர்மத்தை நடத்துவதாக இசைந்தனர்)

கல்வெட்டில் அரிய செய்திகள்

இராசராசக் கிணற்றிலிருந்து தொட்டிக்கு நீரிறைப்பார் முதலான பலபணியாளர்களுக்கு ஓர் ஆண்டில் ஆறு மாதங்களுக்குத்தான் கூலிகள் கொடுக்கப்பட்டு வந்தன. தண்ணீர்ப் பந்தல் இக்காலம்போல் அல்லாமல் பண்டைக்காலத்தில் ஆறு மாத காலம் நடத்தப்பெற்று வந்தது என்பது புலனாகின்றது. இக்கல்வெட்டில் வந்துள்ள பெருவழி, பணிமகன்,புதுக்கு என்னும் சொற்கள் தூய தமிழ்ச்சொற்களாகும்.

உக்கல் கல்வெட்டு


கல்வெட்டு


கல்வெட்டு

(கீழே கல்வெட்டின் தட்டச்சு வடிவம்)

1. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் பொல் பெருநிலச் செ(ல்வி) யுந் தனகெ உரிமை பூண்டமை மனக்கொளக் கா(ந்த) ளூர்ச்சா(லைக)ல (மறுத்த(ரு)ளி (வெக) நாடும் கங்க (பா)டி(யும்) நுளம்ப பாடியு(ந்த)டி(¬)க ப(£) -

2.டியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் முரட்டொழில் சிங்களர் ஈழ (ம)ண்டலமும் (இ)ரட்ட(பா)டி ஏழரை இலக்கமும் முன்(னீ)ர்ப்ப(ழ)ந்(தீவு) பன்(னீ)ராயிர(மும் திண்டி)றல் வெ(ன்)றித் தண்டாற்-

3.கொண்ட தன்னெழில் வளருழியு ளெல்லாய(£)ண்டுந் தொழுதகை விளங்கும் யாண்டெ செழியரை(த்ª)தசுகொள் ஸ்ரீ கொ ராஜ கெஸரி வந்மரான ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்-

4.டு,உயக ஆவது ஜயங் கொண்ட சோள மண்டல(த்)துக் காலியூர்க் கொடத்துத் தனியூர் உக்கலாகிய ஸ்ரீ விக்கிரமா பரணச் சதுவெதி மங்கலத் தின் மெலை-

5.ப் பெருவழியில் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் திரு(ந)£மத்தால்க் கிணறுந் தொட்டியும் சமைப்பித்தான் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் பணிமகன் சௌ (ம)ண்டலத்து ª(த)ன்க¬(ர) நா(ட்)டு நித்த-

6.வினோ(த) வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து (ஆ)வூருடையான் கண்ணனாரூரன்,இவனெ ஸ்ரீ ராஜ ராஜ கி(ணற்)றில் (த் தொட்டிக்கு நீரிறை(ப்)பதார்க்கு அருமொழி தெவன் மரக்கா(ல)£ல் நிசதம் (நெ)ல் ஜுங (ஆ)

7.கத் திங்கள் ச க்கு நெல் ஜ ங ய(கள)மும் ஸ்ரீ ராஜ ராஜன் தண்ணீரட்டுவார்க்கு நிசத(ம்) நெல் ஜ (உங) ஆக திஙள் ச க்கு நெல்லு ஙய (கள)ம் இப் பந்தலுக்கு குசக் கலம் இ (டு)

8.வ(£)ர்க்கு திங்கள் க க்கு நெல்லு வத ஆக திங்கள் ச க்கு நெல்லு (சகள)மும் ஸ்ரீ ராஜ ராஜன் கிணற்(று)க்கு(ம் ª(த)£ட்டிக்(கு)ம் ª(ச)த்தத்துக்கும் ஆட்டாண்டு தொறு(ம் பு(து)க்குப் புறமாக (¬)வச்ச

9.நெல்லு உ கள வத ஆக ஜ ச ய ச(கள)வத இந்நெல்லுக்கு இவன் பக்கல் இவ்வூர் ஸ(பை (யம் இ)¬(ற திர) விய(மு)ம் (கிரய திர) விய (மு)ம் கொண்டு இறை இழிய்ச்சி -

(அளவைக்குறிகளை என்னால் தமிழ் எண்களால் சரியாகக் குறிக்க இயலவில்லை.மேலும் தட்டச்சிட்டவற்றை ஒருங்கு குறிக்கு மாற்றிய பொழுது எழுத்துருக்கள் உடைகின்றன(கால், ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு)அறிஞர் உலகம் மூல நூலைக் கண்டு உறுதிசெய்ய வேண்டுவன்)


உக்கல் பெருமாள்கோயில் முகப்பு


உக்கல் கோயில் முன் மண்டபமும்,கருவறையும்


உக்கல் கோயில் முகப்பின் உள்பகுதி


கோயில் கிணறு


உக்கல் கோயில் கல்வெட்டு


உக்கல் கோயில் சுவர்


கோயில் கருவறை வெளிப்புறம்


உக்கல் கோயிலின் ஒரு பகுதி(யானை மண்டபம்)


உக்கல் கல்வெட்டு


இடிபாடுகளுடன் கோயில்(காஞ்சிபுரத்துக்குச் சுரங்கப் பாதை இருந்ததாக நம்பப்படும் பகுதி)


உக்கல் கோயில் முன்மண்டபம்

(இக்கட்டுரைப் பகுதிகள்,படம் ஆகியவற்றை எடுத்தாள விரும்புவோர் இத்தளத்திலிருந்து எடுக்கப்பெற்றது என அற உணர்வுடன் குறித்தல் நன்று.பலரும் இன்னவண்ணம் சுட்டாமல் கள்வர்போலும் கவர்தலால் இக்குறிப்பு.)

நன்றி:
1.30 கல்வெட்டுக்கள்,வித்துவான் வை.சுந்தரேச வாண்டையார்,பழனியப்பா பிரதர்சு வெளியீடு.
2.திருவாளர்கள் கூழமந்தல் உதயகுமார், உக்கல் மோகனவேல்