நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்கிற பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது(07.01.2010 மாலைமலர்). தமிழ் அறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள் எல்லாம் விழிப்புற வேண்டிய காலகட்டம் இது.

மேடைகளிலும், அச்சிலும் பரவுவதற்கு முன்பே இணையத்தில் இது தொடர்பான விவாதங்கள் வேகமாக உலவி வருகின்றன. இணையம் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவுவதால் சென்னை,பெசண்டு நகரில் நடப்பதைக் கோடம்பாக்கத்தில் இருப்பவர்கள் அறிவதற்கு முன்பே உலகத் தமிழர்கள் தெரிந்துகொள்கின்றனர்.

'வடவேங்கடம் தென்குமரி' எல்லை கடந்து தமிழும், தமிழர்களும் உலகெங்கும் பரவியிருப்பதால் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும் தமிழ் பற்றி இனி முடிவு செய்யமுடியாது. அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருப்பவர்களையும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

தமிழகத்தில் ஒரு கருத்துப்பொறி வெளிப்படுவதற்கு முன்பே இணையத்தில் தமிழர்கள் கருத்துச் சொல்லத் தொடங்கிவிடுகின்றனர். அவ்வகையில் தமிழக அரசு நடத்த உள்ள தமிழ்ச்செம்மொழி, தமிழ் இணைய மாநாடு பற்றி இணையத்தில் பலரும் பலவகையில் உரையாடி வருகின்றனர். அதில் ஒன்று தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய உரையாடலாகும்.

தமிழ் எழுத்துகள் காலந்தோறும் மாறி வந்துள்ளன என்பது வரலாறு. பானை ஓடுகள், நாணயங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், பனை ஓலைகள், அச்சு, கணிப்பொறி என்று பயன்பாட்டுப் பொருளுக்கு ஏற்பத் தமிழ் எழுத்துகள் வரிவடிவ வேறுபாட்டுடன் எழுதப்பட்டு வருகின்றன. தொல்காப்பியர், வீரமாமுனிவர், பெரியார் காலத்தில் தமிழ் எழுத்துகள் தேவை கருதி வடிவ மாற்றங்களைச் சந்தித்துள்ளன.

பழைமைக்குப் பழைமையாக விளங்கும் தமிழ் புதுமைகளை ஏற்றுக்கொள்ளும் மொழியாகவும் விளங்குகிறது. கல்வெட்டில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள் கணிப்பொறி வந்த பிறகு எந்த வகையான இடையூறும் இன்றி அதில் பயன்பாட்டுக்கு வந்தது. கணிப்பொறி அறிமுகமான சூழலில் தமிழார்வம் உடைய பொறியாளர்கள் சிலர் கணிப்பொறிக்கு ஏற்பத் தமிழ் எழுத்து வடிவங்களை மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். ஆனால் அறிஞர் வ.சுப.மாணிக்கம் போன்றவர்கள் இதனை எதிர்த்தனர்.

தமிழ் எழுத்தைத் திருத்த வேண்டும் என்பவர்கள், தந்தை பெரியார் திருத்தி எழுதியதை முன்னுதாரணமா கக் காட்டுகின்றனர். பெரியார் ண,ல,ள,ற,ன என்ற ஐந்து எழுத்துகளும் ஆ,ஐ.ஒ,ஓ, என்னும் நான்கு எழுத்துகளுடன் இணைந்த(ணா,ணை,ணொ,ணோ,லை, ளை,றா, றொ,றோ,னா,னை,னொ,னோ என்று ) 13 எழுத்து வடிவங்களைச் சீர்மைப்படுத்தினார். இது சீர்மைப்படுத்தம் ஆகும். முன்பே பெரியார் எழுத்துத் திருத்தம் தேவை என்று வலியுறுத்தியதுடன் அதனை 1935 முதல் தம் விடுதலை ஏட்டில் நடைமுறைப்படுத்தினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு 1978 இல் தமிழ்நாட்டு அரசு தந்தைபெரியாரின் வடிவ மாற்றத்தினை ஏற்றுக்கொண்டு அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஓர் ஆணையிட்டது.

அதன் பிறகு எந்த மாற்றமும் வேண்டாம் என்பது தமிழறிஞர்களின் நிலைப்பாடாக இருந்துவருகிறது. ஆனால் சில அறிஞர்கள் இ,ஈ,உ,ஊ எழுத்துகளில் மாற்றம் வேண்டும் எனவும் அவ்வாறு மாற்றினால் 4 x 18 = 72 எழுத்துகளில் சீர்மை காணப்படும் எனவும் வாதிடுகின்றனர். ஆனால், இதைச் சீர்மை என ஏற்றுக்கொள்ள முடியாது. இது முற்றாக மாற்றம் ஆகும். இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.நாம் எழுதும் சொற்களில் இவ்வகை எழுத்துகள்தான் (அதாவது கி,கீ,மு,மூ) அதிகம் புழங்குகின்றன. இவ்வாறு வரும் 72 எழுத்துகளைப் புதிய குறியீடுகளால் எழுதத் தொடங்கினால் கற்றவர்களால் தமிழைப் படிப்பதே இயலாததாகிவிடும். புதியவர்கள் எப்படித் தமிழ் கற்பார்கள்?ஆகவே, சீர்மைக்கும் மாற்றத்திற்கும் அறிஞர்கள் வேறுபாடு உணர வேண்டும்.

இவ்வாறு முப்பதாண்டுக் காலம் எழுத்துத்திருத்தம் வலியுறுத்திவரும் அறிஞர்கள் எதிர்வரும் செம்மொழி மாநாட்டில் தங்கள் விருப்பத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கின்றனர். இவர்களை உலகெங்கும் பரவி வாழும் தமிழறிஞர்களில் பெரும் பிரிவினர் இணையம் வழியாகக் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொருவரும் தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் என்ற போர்வையில் திருத்த முனைந்தால் தமிழ்மொழியின் அமைப்பு கட்டுக்குலையத் தொடங்கும் எனவும் இத்தகு செயலால் இதுவரை அச்சான நூல்களைப் படிப்பதில் மிகப்பெரிய சிக்கல் எழும் என்கிற கருத்து வலியுறுத்தப்படுகிறது. எளிமைப்படுத்த என்று முனைந்து தமிழ் வளர்ச்சிக்கு இடையூறு செய்துவிடக்கூடாது என்கிற நியாயமான அச்சத்தையும் பல அறிஞர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சீன, சப்பான் மொழிகள் சிக்கலான குறியீடுகளையும் அதிக எண்ணிக்கையிலான எழுத்துக்களையும் கொண்டுள்ளன. அவர்கள் இதுபோன்ற திருத்த வேலைகளில் ஈடுபடாமல் உலகில் வெளிவரும் அறிவு நூல்களை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வகையிலும் மொழிபெயர்க்கப்பட்டவற்றை மக்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் வகையிலும் செயல்படுகின்றனர். தாய்மொழிவழிக் கல்விக்கு அங்கெல்லாம் முதன்மையிடம்தான். ஆனால் இங்கு அந்த நிலையில்லை.

பெரும்பாலான தமிழறிஞர்கள் கணிப்பொறி நுட்பம் அறியாதவர்களாக இவ்வளவு காலமும் இருந்ததால் கணிப்பொறிக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்கிற முழக்கம் முன்பு காதுகொடுத்துக் கேட்கப்பட்டது. இம்முழக்கம் இப்பொழுது வலுவிழந்துவிட்டது. ஏனெனில் தமிழறிஞர்கள் இப்பொழுது மடிக்கணினியுடன் வலம்வரத் தொடங்கிவிட்டனர். மதுரையில் அமர்ந்தபடி ஒரு பேராசிரியர் அமெரிக்காவில் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளருக்குச் சிலப்பதிகாரம் நடத்தும் அளவிற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். எனவே தமிழ் எழுத்துத் திருத்தம் என்றவுடன் இது கணிப்பொறி தெரிந்தவர்கள் எடுக்க வேண்டிய முடிவு என்கிற காலம் மலையேறிவிட்டது. தமிழும்,மொழியியலும், கணினியும், இணையமும் அறிந்த தமிழ்ப்பேராசிரியர்களைக் கேட்டு எடுக்க வேண்டிய முடிவாகிவிட்டது.

கனடா நாட்டில் வாழும் அறிஞர் ஈழத்துப்பூராடனார்(அகவை 82) முதன்முதலாகக் கணிப்பொறி கொண்டு அச்சிட்டு நூல் வெளியிட்டவர் (1984).அவர் நூற்றுக்கணக்கான நூல்களைப் பழைய எழுத்து முறையிலேயே இன்றும் வெளியிட்டு வருகிறார்.இனியும் தொடர்ந்து வெளியிட உள்ளதாகவும் எழுத்துச் சீர்திருத்தத்தால் அச்சிடும் இடம்,தாளின் அளவு,செலவு அதிகரிக்குமே தவிர வேறொரு பயனும் இல்லை என்கிறார். பிற நாடுகளில் நூலகங்களில் உள்ள நூல்களைப் படிக்க ஆள் இல்லாமல் போவார்கள் என்று குறிப்பிடும் அவர் இன்று கல்வெட்டுகளை,ஓலைச்சுவடிகளைப் படிக்க ஆள் தேடுவதுபோல் எதிர்காலத்தில் தமிழ் நூல் படிப்புக்கு ஆள்தேடும் நிலையைத் தமிழுக்குப் புதிய எழுத்துச்சீர்திருத்தம் உண்டாக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்.

எழுத்துத் திருத்தத்தில் கவனம் செலுத்துவதற்கு மாறாக நம் இணையப்படைப்புகள் உலகம் முழுவதும் செல்வதால் அதற்கேற்ற ஒருங்குகுறியில்(யுனிகோடு)கவனம் செலுத்த வேண்டும். தரப்படுத்தப்பட்ட எழுத்துகளில் இணையத்தில் இருக்கும் படைப்புகள் யாவும் ஒருங்குகுறிக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். குறிப்பாகத் தமிழர்களின் பொதுச்சொத்தான தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளம் முதலில் ஒருங்குகுறிக்கு மாறவேண்டும். அதனை அடுத்துத் தமிழக அரசின் தளம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தளம் யாவும் உடனடியாக ஒருங்குகுறிக்கு மாற வேண்டும்.

ஏழாண்டுகளாக(2003) ஒருங்கு குறி பயன்பாட்டுக்கு வந்து உலகெங்கும் இவ்வகை எழுத்துகள் பயன்பாட்டில் இருப்பதைப் புறக்கணிக்கக்கூடாது. தரப்படுத்தப்பட்ட எழுத்துகள் ஒருங்குகுறிக்கு மாற்றுவதற்கு ஆகும் காலம் மிகவும் குறைவாகும். செலவு இல்லை என்றே சொல்லலாம். அரசும் அனைத்துத் துறையினரும் தமிழ் ஒருங்குகுறி எழுத்தில்தான் அச்சிட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் தமிழ் வளங்கள் உலகம் முழுவதும் பரவும்.எனவே உலகத் தமிழர்களுக்கு இனிப்பான செய்தி தர அரசு நினைத்தால் ஒருங்குகுறியை ஏற்று அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும்.

தமிழகத்தில் புற்றீசல் போல ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகிவிட்டன. அனைத்துப் பிள்ளைகளும் ஆங்கில நூல்களைப் படிக்கின்றனர். அவ்வாறு இருக்கத் தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.அதனையும் இல்லாமல் செய்யும் நிலைக்கு எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்துவிடும் எனத் தமிழ்ப்புலவர்கள் அஞ்சுகின்றனர்.எனவே எழுத்துத்திருத்தம் பற்றி இனி யோசிக்கத் தேவையில்லை. எழுதப்பட்டுள்ள நூல்களைப் படிக்க தமிழ்வழிப் பள்ளிகளை அரசு நடத்த வேண்டும் என்பதும் தமிழ்வழிக் கல்விக்கு அரசு ஆணையிடவேண்டும் என்பதும் உலகச்செம்மொழி மாநாட்டின் குறிக்கோளாகவும் அறிவிப்பாகவும் இருக்க வேண்டும் என்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்னும் பழைய எழுத்துவடிவில் எழுதுவதையே வழக்கமாகவும்,வசதியாகவும் நினைக்கும் தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்று கூறி இப்பேச்சுக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் எழுத்துச்சீர்திருத்தம் தொடர்பிலான பாடம்

நனி நன்றி: தமிழ்ஓசைநாளிதழ்,சென்னைப் பதிப்பு(31.01.2010)

1.அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் பேச்சு

2.எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப்போக்கு,கனடாவில் வாழும் பேராசிரியர் செல்வா கட்டுரை இங்கே

3.தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத்துச்சீர்திருத்தம் பற்றி இங்கே

2திரு.இரவியின் கட்டுரை இங்கே

4.மலேசியா திரு.சுப.நற்குணன் கட்டுரை இங்கே

5.தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய கட்டுரையறிய
எழுத்து மாற்ற வரலாறு என்ற பகுதியைப் பார்க்கவும்

6.திருவாளர் பெரியண்ணன் சந்திரசேகரன் அவர்களின் அரிய கட்டுரை

7.கணியத்தமிழ் நிறுவனம் வா.செ.கு எழுத்துருக்கான அறிவிப்பு

சனி, 30 ஜனவரி, 2010

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நடந்தது...

தமிழ்வெளி திரட்டியை அறிமுகப்படுத்தும் நான் 

ஓராண்டுக்கும் மேலாகத் திட்டமிட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவதற்கு ஏற்பாடு செய்தோம். தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பழ.முத்துவீரப்பனார் அவர்களின் பெரும் முயற்சியிலும் திட்டமிடலிலும் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வ.செயதேவன் அவர்கள் கணிப்பொறி, இணையம் பயன்படுத்தி ஆய்வு செய்யும் பேராசிரியர்களுள் குறிப்பிடத் தகுந்தவர். எனவே அவர்களை வாழ்த்துரைக்க அழைக்க முன்பே முடிவு செய்திருந்தோம். மேலும் கணினி, இணையத்துறையில் தொழில்நுட்பம் தெரிந்துகொண்டு அடக்கமாகப் பணிபுரிபவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்களும் முன்பே பல பயிலரங்குகளில் கலந்துகொண்டு எனக்கு ஒத்துழைப்பு நல்கியவர்களுமான தமிழ்நிலவன், முரளி, ஒரிசா பாலு, விசயகுமார் (சங்கமம் லைவ்) ஆகியோர்கள் பங்குபெற்றால் நிகழ்ச்சியைச் சிறப்பாக அமைக்கலாம் என்று பேராசிரியரிடம் தெரிவித்து இசைவு பெற்றேன். அனைவருக்கும் எழுதியதும் அனைவரும் வருவதாக ஒத்துக்கொண்டனர். இது நிற்க. 

 இப்பயிலரங்கச் செய்தி பல்வேறு வலைப்பதிவர்களாலும், இணையத் தளங்களாலும் உலகிற்கு அறிவிக்கப்பட்டது. தமிழ்வெளி திரட்டி தம் முகப்புப் பக்கத்தில் வைத்து நிகழ்ச்சி சிறக்க உதவியது. மேலும் தட்சு தமிழ்,பதிவுகள்(கனடா) சென்னை ஆன்லைன் உள்ளிட்ட இதழ்கள் தங்கள் பக்கங்களில் செய்திகளை வெளியிட்டன. இணையத்துறையில் சிறு பயன்பாட்டு முயற்சி நடந்தாலும் ஓடிச்சென்று பாராட்டும் இயல்புகொண்ட கணித்தமிழார்வலர்கள் பலரும் தனிமடலிலும் குழு விவாதங்களிலிலும் வாழ்த்தினர். 

  29.01.2010 இரவு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்தில் தங்கிக்கொள்ள எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெங்களூரிலிருந்து தமிழ்நிலவனும், கிருட்டினகிரியிலிருந்து செல்வமுரளியும். சென்னையிலிருந்து பேராசிரியர் செயதேவனும், பாலு அவர்களும் இரவு வந்துவிட்டனர். நான் மட்டும் புதுச்சேரியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு காலை 8 மணிக்குத் தில்லையை அடைந்தேன். பாலு அவர்கள் திருமுதுகுன்றம் சென்று அங்கிருந்து சில வரலாற்று முதன்மையான இடங்களைப் பார்வையிட்டபடி தில்லைப் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தார். நானும் புலவர் வி.திருவேங்கடமும் (அகவை 73). இவர் இப்பொழுது தமிழ்த் தட்டச்சு பழகி இணையத்தில் உலாவருகிறார்). 

 ஒரிசா பாலுவுடன் இணைந்துகொண்டு விருந்தினர் இல்லம் சென்றோம். நிலவன் முரளி, பேராசிரியர் செயதேவன் உள்ளிட்ட அனைவரும் சிற்றுண்டிக்குப் பிறகு விழா நடைபெறும் அரங்கிற்குச் சென்றோம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று (30.10.2010) காலை 10.15 மணிக்குத் தொடக்கவிழா எளிமையாக நடந்தது. 

 தமிழ்த்துறையின் சார்பில், பொறியியல் கல்லூரியில் உள்ள கணினித்துறை அரங்கில் நடைபெற்ற பயிலரங்கின் தொடக்க விழாவில் தமிழ்த்துறைத் தலைவரும் மொழிப்புல முதன்மையருமான பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழகப் பல்கலைக்கழங்களில் முன்னோடிப் பல்கலைக்கழகமான இங்குத் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுவதால் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கணினி, இணையத்தில் பெரிய அளவில் பங்களிப்பு செய்யமுடியும் எனவும் ஆய்வுத்துறையில் முன்னோடியாக விளங்கமுடியும் என்றும் முத்துவீரப்பன் கூறினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கணினித்துறைத் தலைவர் பேராசிரியர் இராமலிங்கம் அவர்கள் வாழ்த்துரையில் கணினி, இணையத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். 

  சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புநிலைப் பேராசிரியர் முனைவர் வ. ஜெயதேவன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தமிழ் ஆய்வுலகில் ஈடுபடுபவர்களுக்குக் கணினியும், இணையமும் பெரிய அளவில் பயன்படுகிறது என்று கூறியதுடன் சென்னைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள தமிழ்ப் பேரகராதிக்கு உரிய அரிய நூல்கள் சிலவற்றின் விவரங்களை இணையத்தின் வழியாக அறியமுடிந்தது என்று கூறி அனைத்துத் தமிழ் அறிஞர்களும் இணையத்தைப் பயன்படுத்து வேண்டும் என்று வேண்டுகோளை வைத்தார். குறிப்பாக ஈழத்துப்பூராடனாரின் நீரர நிகண்டு, பே.க.வேலாயுதத்தின் சங்கநூற் சொல்லடியம் என்ற இரு அரிய நூல்களைத் தாம் இணையத்தின் வழியாகப் பெற்றதைச் சிறப்பாகக் குறிப்பிட்டார். 

    நான் தமிழ் இணையப் பயிலரங்கம் பற்றிய அறிமுக உரையாற்றினேன். பின்னர் 11 மணிக்குத் தொடங்கிய பயிலரங்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் ஐம்பதின்மர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இன்று உள்ளூர் விடுமுறை என்பதாலும் (வடலூர் தைப்பூசம்) சிலர் புத்தொளிப் பயிற்சிக்குச் சென்றதாலும் எண்ணிக்கை அளவுக்குள் இருந்தது. இவர்களுக்குத் தமிழ் இணையம் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் காட்சி வழியாக விளக்கினேன். இதில் தமிழ் 99 விசைப்பலகையின் அமைப்பு, தட்டச்சிடும் முறை, மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், மின்னஞ்சல் செய்வது, உரையாடுவது, வலைப்பூ உருவாக்குவது பற்றி எடுத்துரைத்தேன். நண்பர்கள் முரளியும், நிலவனும் தொழில்நுட்பப் பகுதியைக் கவனித்துக்கொண்டனர். சிறிதும் குறைபாடு இல்லாமல் பயிலரங்கம் நிகழ்ந்தது. 

  தமிழில் புகழ்பெற்ற இணையதளங்களான மதுரைத்திட்டம், தமிழ்மரபு அறக்கட்டளை, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய நூலகம், புதுச்சேரி பிரஞ்சு நிறுவன நூலகம், விக்கிப்பீடியா தளம் உள்ளிட்ட பல தகவல்களை எடுத்துக்காட்டினோம். காந்தளகம் தளம் உள்ளிட்டவற்றை விளக்கினோம். பன்னிரு திருமுறை மிகச்சிறப்பாக அத்தளத்தில் இடம்பெற்றுள்ளதை அவைக்கு நினைவுப்படுத்தினோம். நூலகம் தளம் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைப் பாதுகாப்பதை எடுத்துரைத்தோம். சுரதா தளத்தின் பன்முகப் பயன்பாட்டை விளக்கினோம். தமிழ் கணினித் துறைக்கு உழைத்த காசி ஆறுமுகம், முகுந்தராசு, கோபி உள்ளிட்டவர்களின் பங்களிப்பை எடுத்துரைத்தோம். தமிழ் விக்கிப்பீடியாவின் அகரமுதலி முயற்சிக்கும் கட்டுரை உருவாக்கத்துக்கும் உழைக்க ஒரு வேண்டுகோள் வைத்தோம். 

  புகழ்பெற்ற எழுத்தாளர்களான மாலன், செயமோகன், இராமகிருட்டினன், பத்ரி இவர்களின் தளங்களை அறிமுகம் செய்தோம். எழுத்துகளை எவ்வாறு ஒருங்குகுறிக்கு மாற்றுவது என்று எடுத்துரைத்தோம். எங்களின் விளக்கவுரைகளைக் கண்டு மகிழ்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியின் கணினித்துறைத் தலைவர் தம் ஆய்வகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான கணிப்பொறிகளைத் தமிழில் தட்டச்சிடும்படியாக மாற்றும்படி ஆணையிட்டார். ஒரு மணிநேரத்திற்குள் அனைத்துக் கணினியும் தமிழ்மயமானது. இன்று தமிழில் வெளிவரும் இணைய இதழ்களை எடுத்துக்காட்டி புகழ்பெற்ற இணைய இதழ்களைக் காட்சிப்படுத்தினோம்.

     தமிழர்கள் உலகத்தை வீட்டில் இருந்தபடியே வலம்வர முடியும் என்று கூறிய நான் கணிப்பொறி,இணையத்தைப் பயன்படுத்த ஆங்கில அறிவு அவசியம் இல்லை என்று கூறியதுடன் தமிழில் அரிச்சுவடி தெரிந்தவர்கள் கூட இணையத்தைப் பயன்படுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் கூறினேன். வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வாளர்கள் ஒரு செல்பேசியில் ஆயிரம் நூல்களை அடக்கிவைத்துள்ள செய்திகளைப் பயிலரங்கில் எடுத்துக்காட்டி விளக்கினேன். பெங்களூர் பேராசிரியர்கள் தமிழில் தட்டச்சிட்டால் தானே படிக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளதையும் எடுத்துரைத்தேன். மாலை அமர்வில் பெங்களூரைச் சேர்ந்த கணினி வல்லுநர் தமிழ் நிலவன், செல்வமுரளி, ஒரிசா பாலு ஆகியோர் இணையதளப் பாதுகாப்பு, இணையத்தில் பணம் சம்பாதிப்பது பற்றி உரையாற்றினர். வலைப்பூ உருவாக்குவது பற்றி விளக்கியதில் நிலவனின் பங்கு மிகுதி. ஒரிசா பாலு தமிழ் ஆய்வுக்குரிய ஆதாரங்கள் உலக அளவில் பரந்து கிடக்கின்றன என்பதைக் காட்சி வழி விளக்கினார். அவரின் விக்கி மேப்பியா விளக்கம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

  ஒரிசா பாலு விளக்கவுரை 

 பல்கலைக்கழகத்தின் மற்ற துறைப் பேராசிரியர்களும் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மாலை ஐந்து மணியளவில் பேராசிரியர் மாலினி அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு பயிலரங்கம் நிறைவுற்றது. கலைந்துசென்ற பேராசிரியர்கள் மெதுவாகப் பேசியது இவ்வாறு எங்கள் காதில் விழுந்தது. "அடுத்த மாதம் சம்பளத்தில் கணினி வாங்குவதுதான் முதல் செலவு". பார்வையாளர்களாகப் பேராசிரியர் பழ.முத்துவீரப்பன், பேராசிரியர் இராமலிங்கம்

  பேராசிரியர் பழ.முத்துவீரப்பனும் பேராசிரியர் வ.செயதேவனும்

  முனைவர் பழ.முத்துவீரப்பன் வரவேற்புரை 

  பேராசிரியர் மூவேந்தன், பேராசிரியர் மலர்க்கொடி உள்ளிட்டோர் 

பேராசிரியர்கள்