நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 21 ஜூன், 2025

ஓலைச் சுவடி ஆய்வாளர் பேராசிரியர் வே. கட்டளை கைலாசம்

 

பேராசிரியர்  வே. கட்டளை கைலாசம் 

[பேராசிரியர் வே. கட்டளை கைலாசம் நெல்லை ம. தி. தா. இந்துக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து, பதிப்பித்தவர். கழி(ளி)யலாட்டம் குறித்து முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டவர். நெல்லை மாவட்ட இலக்கிய அறிஞர்கள் குறித்து ஆராய்ந்து வருபவர். சைவ இலக்கியங்களில் ஈடுபாடுகொண்டவர்.] 

பேராசிரியர் வே. கட்டளை கைலாசம் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டம், சிங்கிகுளம் என்னும் சிற்றூரில் சு. கட்டளை வேலாயுதம் பிள்ளை, மகாமாயியம்மாள் ஆகியோரின் நான்காவது மகனாக 12.04.1956 இல் பிறந்தவர். இவரது முன்னோர்கள் சிங்கிகுளம் கைலாசநாதர் கோவிலுக்கு அறக்கட்டளை நிறுவி, நாள் பூசையையும், சிறப்பு நாட்களுக்கான விழாக்களையும் நடத்தி வந்தனர். எனவே, இக்குடும்பத்தாருக்குக்கட்டளைஎன்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. 

கட்டளை கைலாசம் தனது தொடக்கப் பள்ளிப் படிப்பைச் சிங்கிகுளம்கைலாசபதி நடுநிலைப் பள்ளியில் தொடங்கியவர். உயர்நிலைப் பள்ளிக்கல்வியைப் பத்தமடை இராம சேசு ஐயர் பள்ளியிலும், பதினொன்றாம் வகுப்புப் படிப்பைக் (SSLC) கரிசல் சி.எம்.எஸ். பள்ளியிலும் பயின்றவர். 1972 இல் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூாயில் புகுமுக வகுப்பில் சேர்ந்தவர். அங்கு இளநிலை வேதியியல் (B.Sc. Chemistry) முடித்து, முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றார் (M.A.,). பின்னர் தூய சவேரியார் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் அறிவியல் ஆசிரியப் பயிற்சி (B.Ed.,) பெற்றார். 

1983 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் (அஞ்சல் வழி) முதுகலைப் பொருளாதாரப் பட்டம் (M.A., (Eco.) பெற்றவர். .தி.தா இந்துக் கல்லூரியில் பகுதி நேர இளம் ஆய்வாளர் பட்டப்படிப்பில் (M.Phil.,) சேர்ந்து 1986-இல் நிறைவு செய்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேரா. முனைவர். நெல்லை.                               . சொக்கலிங்கம் அவர்களின் வழிகாட்டலில்  1993 இல் முனைவர் பட்டம் பெற்றார்.  2010 இல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொலைநிலை தொடர் கல்வி வாயிலாக முதுநிலை யோகா (M.Sc., (YHE) பட்டமும் பெற்றவர். ‘சைவ சித்தாந்த இரத்தினம்பயிற்சியைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்றுள்ளார். 

ஆசிரியப் பணி்: 

1979 இல் புதுச்சேரி (புதுவை) பெத்தி செமினெரி மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தவர். அங்கு ஓராண்டுக் காலம் பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பட்ட முதுநிலைக் கல்விப் பட்டத்தில் (M.Ed.,) சேர்ந்து பட்டம் பெற்றார். 1980 இல் தூத்துக்குடி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1981 முதல் 1985 வரை திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப் பள்ளியிலும், 1985 முதல் 1996 வரை முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியிலும், மேனிலைப் பள்ளித் தமிழாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். 

            03.04.1996 இல் திருநெல்வேலி, மதுரைத் திரவியம் தாயுமானவர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியேற்றார். சூன் 2009 முதல் மே 2013 வரை .தி.தா. இந்துக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி, பணிநிறைவுப் பெற்றார். 33 ஆண்டுகளாகத் தமிழாசிரியப் பணியை மேற்கொண்டவர். இவர் 40 ஆண்டுகளாக ஓலைச் சுவடி ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டவர். 

இல்வாழ்க்கை: 

முனைவர் கட்டளை கைலாசம் 26.10.1983 இல் மல்லிகாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மருத்துவர் வசந்த் என்னும் மகன் உள்ளார். இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். 

சைவ சபையின் தலைவர்

1886 - ஆம் ஆண்டு தமிழ் மொழி ஓம்பல், திராவிட மதமாகிய சைவசமய உணர்வை நிலைபெறச் செய்தல் போன்ற நோக்கங்களோடு தோன்றிய பாளையங்கோட்டை சைவ சபையில் 2018 முதல் 2022 வரை சைவ சபையின் துணைத் தலைவராகவும் 2022 முதல் 2023 வரை சைவ சபையின் தலைவராகவும் பணியாற்றியவர்.

ஆய்வுப் பணி் :

1. இளம் நிலை ஆய்வு (M.Phil.) - ‘இசக்கியம்மன் வழிபாடு (சிங்கிகுளம் வட்டாரம்)” (1986)

2. முனைவர் பட்ட ஆய்வு (Ph.d) - கழி(ளி)யலாட்டம் ஓர் ஆய்வு” (1993) 

ஆய்வுத் திட்டங்கள் 

1. ‘அரவான் வழிபாடு” (1994)

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அஃப் கில்டபைட்டலுடன் ((Prof. Alf Hiltebeital) இணைந்து ஆய்வு மேற்கொண்டு கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.

2. ‘தமிழகத் தென்மாவட்ட நாட்டார் (கருநாடகம்) நாடகம்” 2006 முதல் 2008 வரை, பல்கலைக் கழக மானியக் குழுவின் (UGC) நிதி உதவியுடன் சிற்றாய்வுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

3. தேசிய சுவடி இயக்கம் (NMM) மற்றும் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் இணைந்து நடத்திய சுவடிக் கணக்கெடுப்பின் 2006 ஆம் ஆண்டு தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு ஓலைச்சுவடிகள் வைத்திருப்போரின் முகவரிகள் இவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

4. ‘சித்தர் தத்துவமும் வேதாந்திரியமும்என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

ஆய்வு நெறியாளர் 

முனைவர் கட்டளை கைலாசம் அவர்களின் மேற்பார்வையில் இளம் ஆய்வாளர் (M.Phil.) - 60 பேர் பட்டம்பெற்றுள்ளனர். மேலும் இவரின் மேற்பார்வையில்  முனைவர் பட்டம் பெற்றோர் - 12 பேர் ஆவர். 

வெளியிட்ட நூல்கள்: 

1. இந்திய மொழிகளும் இலக்கியங்களும் (2002)

2. இய()க்கியம்மன் (2006)

3. கழியல் ஆட்டம் நிகழ்த்துக்கலை (2009)

4. சித்தர் தத்துவமும் வேதாந்திரியமும் (2016)

5. சுவடிகளின் சுவடுகள் (2017)

6. ஏடும் எழுத்தும் (2018)

7. தாமிரவருணித் தமிழ் வனம் (2021)

8. தமிழ் மரபில் கிஸ்தவம் (2023)

9. .வே.சா. நெல்லையில் கண்டதும் காணாததும் (2024) 

அரிய ஓலைச்சுவடிகள் பதிப்பு

1. அவேசு நாடகம்

2. அர்சிய சிஷ்ட ஞானப்பிரகாசியார்

3. கனிகூர்ந்தம்மாள் நாடகம்

4. முருகர் ஒயில்க்கும்மி

5. செட்டியாபத்து அஞ்சுவீட்டுசாமி கும்மிப்பாடல்

6. செட்டியாபத்து அஞ்சுவீட்டுசாமி திருமணிக்கும்மி

7. வள்ளியம்மை கலியாண வாழ்த்து

8. நாடார் இனத் திருமண வாழ்த்து

9. விடுகதை பாட்டும் உரையும்

10. வினோத கதை 

இவர் எழுபதிற்கும் (70) மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். 

பதிப்புப் பணி் 

1. ‘ஆய்வுச் சிந்தனை”- ஆய்வாளர்களின் கட்டுரைகள் அடங்கிய (2006, 2007, 2008, 2009, 2010)

2. புதுமைப்பித்தன் நூற்றாண்டு மலர் (2006)

3. வெள்ளக்கால் . சுப்பிரமணிய முதலியார் 150வது ஆண்டு மலர் (2008)

4. கோம்பி விருத்தம் (மறுபதிப்பு) (2008)

5. அண்ணா நூற்றாண்டு ஆய்வு மலர் (2010)

6. மடல்அவிழ் சைவம் (2018)

7. மனுநெறித் திருநூல் ரூ ஆங்கிலியர் அந்தாதி (2018)

8. .வே.சு.வின் படைப்புலகம் தொகுதி - 2 (2012) 

சிறப்பு விருதுகள் 

1. பைந்தமிழ்த் தொண்டர் - சைவ சமய மாநாடு 2018

பாளையங்கோட்டை சைவ சபை

2. தருமை ஆதீனப்புலவர், (ஓலைச்சுவடித் துறை)

மற்றும் பொற்பதக்கம் - தருமை ஆதீனம் 14.11.2024

3. செந்தமிழ் வளர் செம்மல் - பாரதியார் உலகப் பொதுச்சேவை

நிதியம், திருநெல்வேலி 20.02.2025 

40 ஆண்டுகளாக ஓலைச்சுவடிகளைத் தேடுதல், அதனைப் பாதுகாத்து அச்சேற்றுதல், கணினியில் பதிவு செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு இயங்கி வருகிறார். இவர் போலும் அறிஞர்களைப் போற்றுவது தமிழர் கடமையாகும்.











வெள்ளி, 20 ஜூன், 2025

பேராசிரியர் சீனிவாச கண்ணன்

 

முனைவர் சீனிவாச கண்ணன்


[பேராசிரியர் சீனிவாச கண்ணன் விருதுநகர் மாவட்டம் விழுப்பனூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். சென்னையில் வாழ்ந்து வரும் தமிழ்ப் பேராசிரியர்; ஆண்டாள், பெரியாழ்வார் பாசுரங்கள்: சமூக, சமயப் பண்பாட்டு ஆய்வு என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். விசாகப்பட்டினம் என்னும் பெயர் தமிழ்க் கல்வெட்டில் குலோத்துங்கசோழப்பட்டணம் என்று அழைக்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டுச் சான்றுகளின் துணையுடன் எழுதியும் பேசியும் வருபவர்; பன்னூலாசிரியர்] 

தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம் அவர்களின் நூல்களைத் தேடி, சில அயல்நாட்டு நூலகங்களுக்கு அண்மையில் சென்றிருந்தேன். கோடை விடுமுறைக் காலம் இதற்கு வாய்ப்பாக இருந்தது.  பணிநாளில் நாளும் கல்லூரி செல்லும் நான் விடுமுறைக் காலங்களில் வாய்ப்புக்கு ஏற்பவே  அலுவலகம் செல்ல இயலும். மற்ற நேரங்களில் இல்லிருந்து ஆய்வுப்பணிகளில் மூழ்கிக் கிடப்பதும் வழக்கம். 

12.05.2025 நாளிட்டு ஒரு விரைவு அஞ்சல் என் அலுவலக முகவரிக்கு வந்திருந்ததைச் சில நாள் கழித்தே பார்க்க முடிந்தது. பேராசிரியர் சீனிவாச கண்ணன் அவர்கள் சென்னையிலிருந்து எழுதியிருந்தார்கள். மடல் செய்தி கண்ணில்பட்டவுடன் அந்த மடலின் முதன்மை கருதி, உடன் தொலைபேசியில் பேராசிரியர் அவர்களைத் தொடர்புகொண்டு, தங்கள் மடலைப் பார்ப்பதில் காலம் தாழ்ந்தமைக்குப் பொறுத்தருளும்படி வேண்டிக்கொண்டேன். இரவு நேரத்தில் ஓய்வில் பேசுவதாகச் சொல்லி இணைப்பிலிருந்து விடுபட்டேன். அந்த அரிய மடலை மீண்டும் மீண்டும் படித்தேன். 

மடலின் உள்ளடக்கம் இதுதான்: 

பேராசிரியர் சீனிவாச கண்ணன் அவர்கள் தம் அருமைப் புதல்வரைப் பார்க்க, விசாகப்பட்டினம் சென்றதாகவும், அங்குள்ள காட்சியகத்தில் தமிழ்க் கல்வெட்டு ஒன்றைக் கண்டதாகவும், அக்கல்வெட்டுச் செய்தியில் விசாகப்பட்டினம் என்னும் பெயரைக் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகாரத் தொண்டைமான் குலோத்துங்க (குலொத்துங்க) சோழபட்டணம் என்று மாற்றினான் எனவும், இக்கல்வெட்டு இன்றும் விசாகப்பட்டினத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் இச்செய்தி கலிங்கத்துப்பரணியிலும் பிற வரலாற்றுப் பக்கங்களிலும் இடம்பெறவில்லை எனவும் மடலில் எழுதப்பட்டிருந்தது. மேலும் இச்செய்தியைத் தினமணி நாளிதழின் இணைப்பு இதழ்களில் தம்மால் கட்டுரையாக எழுதப்பட்டுள்ளதையும் தெரிவித்ததுடன், உரிய கல்வெட்டையும் படமாக எனக்கு அனுப்பியிருந்தார். பேராசிரியர் சீனிவாச கண்ணனின் தமிழ்ப்பற்றையும், ஆய்வு ஆர்வத்தையும் மடலில் கண்டு மகிழ்ந்தேன். 

இச்செய்தியை வேறுவகையில் குறிப்பிட்டு, அறிஞர் கே.பி. கிருட்டினன் என்பார் தமிழ்ப்பொழில் இதழில் 1964, மார்ச்சு, ஏப்பிரல் இதழில் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. அக்கட்டுரையில், 

“பந்தலாயினிக் கொல்லத்தைச் சேர்ந்த கண்டன் சந்திரைய செட்டியார் என்பவர் சக வருஷம் 1172 ஆம் ஆண்டு அதாவது வீர நரசிங்க தேவனின் 15 ஆம் ஆட்சியாண்டில் (கி.பி 1250-51) குலோத்துங்க சோழபட்டினம் என்ற மறுபெயர்கொண்ட விசாகப்பட்டினத்தில் கருமாணிக்காழ்வாருக்கு ஒரு சனிவார மண்டபம் கட்டுவித்த செய்தியைத் தமிழில் தெரிவிக்கிறது” (பக்கம் 325, தமிழ்ப்பொழில், 1964, மார்ச்சு, ஏப்பிரல்) 

என்று ஒரு செய்தி பதிவாகியுள்ளது. 

மேற்கண்ட தமிழ்ப்பொழில் செய்திக்கு அரண்சேர்க்கும் வகையில் நம் பேராசிரியர் சீனிவாச கண்ணன் அனுப்பியிருந்த கல்வெட்டுச் செய்திகளும் படங்களும் எனக்குப் புதிய வெளிச்சங்களையும் நம்பகத் தன்மையையும் தந்தன. சீனிவாச கண்ணன் இக்கல்வெட்டுச் செய்தியை ஒட்டித் தமிழிலும் ஆங்கிலத்திலும் அரிய கட்டுரைகளை எழுதியுள்ளமை இவர்தம் ஆய்வு ஆர்வத்தைக் காட்டியது. 

விசாகப்பட்டினத்தில் உள்ள அக்கல்வெட்டுச் செய்தி இது: 

ஸ்வஸ்திஸ்ரீ ஸகரையண்டு ஆயிரத்

தொருநூற்றெழுபத்திரண்டாவதில் வீரனார

சிங்கதெவற்கி யாண்டு யரு வதில் பந்தலாயிநி

க்கொல்லத்து கண்டந் சந்திரைய செட்டியார் தர்மம்

விஸாகப்பட்டினமாந குலொத்துங்க சோழப்பட்டிணத்தில் கருமா

ணிக்க ஆழ்வாற்கு சநிவாரமண்டபம் கட்டுவிச்சார் சந்திரசெட்டியார்”


 

பேராசிரியர் சீனிவாச கண்ணன் எடுத்துக்காட்டும் மேற்கண்ட கல்வெட்டுச் செய்தி முதன்மையானது ஆகும். தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான கலிங்கத்துப் பரணி இலக்கிய நயத்தால் நம் உள்ளம் ஈர்க்கும் நூலாகும். அரிய வரலாற்றுக் குறிப்புகளும் அந்த நூலில் உள்ளன. ஆனால் குலோத்துங்கசோழனின் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் விசாகப்பட்டினத்தைக் குலோத்துங்கசோழபட்டணம் என மாற்றிய குறிப்பு இந்நூலில் இடம்பெறவில்லை என்பதை ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளமை போற்றத்தக்கது. தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த இச்செய்தியை முனைவர் கண்ணன் பல்வேறு அரங்குகளிலும் ஆய்வு இதழ்களிலும் வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வருவது மகிழ்ச்சிக்கு உரியது. 

பேராசிரியர் சீனிவாச கண்ணன் அவர்களின் தமிழ் வாழ்க்கை: 

பேராசிரியர் சீனிவாச கண்ணன் விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் வட்டம், விழுப்பனூர் என்னும் சிற்றூரில் 10.12.1947 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் சீனிவாசன் - இலக்குமி என்பனவாகும். கண்ணன் அவர்கள் தொடக்க, உயர்நிலைப் படிப்புகளை வத்திராயிருப்பு என்னும் ஊரில் பயின்றவர்.  தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் இளம் அறிவியல் - விலங்கியல் பயின்றவர். மேலும் கல்வியியல் படிப்பும் அக்கல்லூரியில் இவருக்கு வாய்த்தது. பேராசிரியர் கண்ணன் முதுகலைத் தமிழ் இலக்கியத்தைச் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் முனைவர் பட்ட ஆய்வை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் க.த. திருநாவுக்கரசு அவர்களின் நெறியாள்கையிலும் செய்தவர். இவரின் முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு: ஆண்டாள், பெரியாழ்வார் பாசுரங்கள்: சமூக, சமயப் பண்பாட்டு ஆய்வு என்பதாகும். 

1974 ஆம் ஆண்டு முதல் சென்னைத் துரைப்பாக்கம் தன்ராஜ் பெயித் ஜெயின் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கியவர். 2006 ஆம் ஆண்டு பணிநிறைவு பெற்றவர். 2006 முதல் 2007 வரை மதுரவாயல், தமிழ்நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியும், 2007 முதல் 2017 வரை சுயநிதிக் கல்லூரிகளில் தமிழ்ப்பணியாற்றியும் தமிழ்த்தொண்டு செய்தவர். 

சென்னைத் தொலைக்காட்சியில்(பொதிகை) தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் சென்னை அகில இந்திய வானொலியில் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராகவும் நாளிதழ்களில் கட்டுரைகளை எழுதிவரும் எழுத்தாளராகவும் விளங்குபவர். 

ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து நல்ல ஆய்வேடுகள் உருவாவதற்குத் துணைநின்றவர். 

பேராசிரியர் சீ. கண்ணன் அவர்களுக்கு 1977 இல் திருமணம் நடைபெற்றது. இவர்தம் துணைவியார் பெயர் விசயலெட்சுமி என்பதாகும். இல்லறப் பயனாய் இவர்களுக்குக் கவிதா, விஜய் கிருஷ்ணா என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

முனைவர் சீ. கண்ணன் எழுதிய வ.உ.சி. ஒரு பன்முகப் பார்வை (உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு), ஆழ்வார்கள் ஆராதித்த வள்ளுவம் முதலிய நூல்களின் ஆசிரியாகவும் விளங்குபவர். அகவை முதிர்ந்த நிலையிலும் சென்னையில் இருந்தபடி, வைணவ இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டும், பிற தமிழாராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டும் தமிழ்த்தொண்டாற்றி வருகின்றார்.