நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 1 மே, 2024

தொல்காப்பிய உரையாய்வு அறிஞர் முனைவர் ச. குருசாமி

 

முனைவர் . குருசாமி 

[பேராசிரியர் ச. குருசாமி அவர்கள் சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்டுள்ள பழைய உரைகளை முழுமையாகக் கற்று, ஆய்வு செய்த பேரறிஞர். தம் ஆய்வுப் பரப்பாகத் தொல்காப்பிய உரையாசிரியர்களை அமைத்துக்கொண்டு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், பேராசிரியர், கல்லாடர்  உள்ளிட்டவர்களின் உரைகளை ஆராய்ந்து தனித்தனி நூலாக வெளியிட்ட பெருமைக்குரியவர். களவியல் உரை, யாப்பருங்கல விருத்தியுரை குறித்தும் சிறந்த ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளவர். இராணி பதிப்பகம் என்ற பெயரில் இவர்தம் பதிப்பகம் வழியாக இவரின் நூல்கள் வெளிவந்துள்ளன.] 

முனைவர் ச. குருசாமி அவர்கள் நாமக்கல் மாவட்டம் குட்டாம்பட்டி என்னும் ஊரில் 06.06.1951 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் சி. கு. சர்வம் ஐயா – கெங்கம்மாள் ஆகும். இவர்தம் பெற்றோர் உழவுத்தொழிலைச் செய்துவந்த பெருமக்கள் ஆவர். எளிய குடும்பப் பின்னணியில் தோன்றித் தம் கடும் உழைப்பால் முன்னேறித் தமிழ் அறிஞராக மிளிர்ந்தவர் பேராசிரியர் ச. குருசாமி. 

முனைவர் ச. குருசாமி அவர்கள் தம் இளமைக் கல்வியைப் பிறந்த ஊரான குட்டாம்பட்டியில் படித்தவர். புகுமுக வகுப்பினைச் சேலம் அரசு கலைக்கல்லூரியில் பயின்றவர்(1967-68). இளங்கலை வகுப்பினை ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரியில் பயின்றவர் (1970-73). முதுகலைப் பட்டத்தைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று, பெற்றவர்(1973-75). “சங்க காலச் சேரர் அரசியல் நெறிமுறைகள்” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக முனைவர் பட்டம் பெற்றவர்(1991). 

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக 1975 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து, 2009 இல் பணி ஓய்வு பெற்றவர். 

பணிச்சூழலும் ஆய்வுநூல் உருவாக்கமும்: 

பேராசிரியர் ச. குருசாமி அவர்கள் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயிலும்பொழுதே இலக்கண ஈடுபாடு உடைய மாணவராக விளங்கியவர். பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் க. ப. அறவாணன் அவர்கள் ஒருமுறை ’தொல்காப்பியம் - நன்னூல் ஒப்பீடும் வேற்றுமைகளும்’ குறித்து ஒரு கட்டுரை வரையுமாறு சொன்னபொழுது, மிகச் சிறந்த கட்டுரையை உருவாக்கிய இவரைப் பேராசிரியர் அறவாணனார் பாராட்டி ஊக்கப்படுத்தினார். பேராசிரியர்கள் அ. மு. பரமசிவானந்தம், இரா. சீனிவாசன், கலைமாமணி இரா. குமரவேலன் உள்ளிட்ட பேராசிரியர்களிடம் பயின்றமையை இவர் நன்றியுடன் குறிப்பிடுவது உண்டு. இவர் பேராசிரியராகப் பணியாற்றியபொழுது பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர்.  முதுகலை மாணவர்களுக்கு இலக்கணத்தைப் பாடமாகப் பயிற்றுவிக்கும் வாய்ப்பினைப் பெற்ற முனைவர் ச.  குருசாமி அவர்கள் அப்பொழுது ஆர்வமாகத் தொல்காப்பியத்தைப் பயிற்றுவித்தார். சற்றொப்ப இருபதாண்டுகள் தொல்காப்பியத்தைப் பயிற்றுவித்த பட்டறிவு உடையவர். 

பச்சையப்பன் கல்லூரியில் “பச்சையப்பன் ஆய்வரங்கம்” என்ற பெயரில் ஆய்வரங்கம் நடைபெறுவது வழக்கம். ஆய்வரங்கின் பயனாக ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் “தமிழ் ஆராய்ச்சி நூல்” உருவானது. அதில் “நிகண்டுகள்” குறித்து முனைவர் ச. குருசாமி ஆய்வுக்கட்டுரை எழுதினார். தமிழ் ஆராய்ச்சி நூலின் இரண்டாம் தொகுதிக்கு “உரையாசிரியர்கள்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுமாறு பேராசிரியர் தெ. ஞா. நம் பேராசிரியர் குருசாமியாரைப் பணித்தார். இவர்களும் உரையாசிரியர் குறித்து ஆழமாகச் சிந்தித்தார். ஆனால் இரண்டாம் தொகுதி வெளிவரவில்லை. இவ்வாறு உரையாசிரியர்கள் என்று பொதுவாகச் சிந்தித்த குருசாமியார் பின்னாளில் தொல்காப்பிய உரையாசிரியர்கள் குறித்துத் தனித்தனியாக நூல் எழுதும் வாய்ப்பினைப் பெற்றார். 

2007 - 2008 ஆம் ஆண்டுகளில் இளம்பூரணர் உரைநெறி, சேனாவரையர் உரைநெறி, பேராசிரியர் உரைநெறி, நச்சினார்க்கினியர் உரைநெறி குறித்த இவர்தம் ஆய்வு நூல்கள் வெளிவந்தன. இச் சூழலில் அந்த நூல்களின் வெளியீட்டு விழா 2009 ஆம் ஆண்டில் பேராசிரியர் இரா. குமரவேலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 

நூல்கள் வெளியீட்டு விழா (2009)

இளம்பூரணர் உரைநெறி நூல் குறித்து முனைவர் இராம. குருநாதனும், சேனாவரையர் உரைநெறி குறித்து முனைவர் இ. சுந்தரமூர்த்தியும், பேராசிரியர் உரைநெறி குறித்து முனைவர் க. ப. அறவாணனும், நச்சினார்க்கினியர் உரைநெறி குறித்து முனைவர் தெ. ஞானசுந்தரமும் அறிமுகவுரையாற்றினார். முனைவர் ஔவை. து. நடராசனார் அவர்கள் சிறப்புரையாற்றி, நூலாசிரியர் ச. குருசாமியைப் போற்றிப் பாராட்டினர். 

தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைநெறிகள் குறித்த நான்கு நூல்களையும் கண்ணுற்ற மொழியியல் அறிஞர் முனைவர் இரா. கோதண்டராமன் அவர்கள் செம்மொழி நிறுவனத்திற்காகத் தெய்வச்சிலையார் உரைநெறியை எழுதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பேராசிரியர் ப. மருதநாயகம், முனைவர் க. இராமசாமி உள்ளிட்ட அறிஞர்களின் நெறிகாட்டலில் தெய்வச்சிலையார் உரைநெறி நூல் செம்மொழி நிறுவனத்தின் வாயிலாக உலகுக்குக் கிடைத்தது. 

முனைவர் ச. குருசாமியார் ஆய்வார்வம்: 

ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து, பலர் பட்டம் பெறுவதற்குக் காரணமாக விளங்கியவர். பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கியுள்ளதுடன், பல பயிலரங்குகளில் கருத்தாளராக அழைக்கப்பெற்று, உரையாற்றிய பெருமைக்குரியவர். 

புகுமுக வகுப்பில் படிக்கும் காலத்திலேயே (1967-68) மொழிப் போராட்டங்களில் கலந்துகொண்டு, தம் மொழிப்பற்றை வெளிப்படுத்தியவர். 

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கிளைத் தலைவராகவும் சென்னை மண்டலச் செயலாளராகவும் சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றியவர். ஆசிரியர் இயக்கங்கள் சார்ந்த போராட்டங்களில் கலந்துகொண்டு, உரிமைகளை மீட்பதற்குச் சிறைசென்றவர். 

இல்லற வாழ்வு: 

பேராசிரியர் ச. குருசாமியார் அவர்கள் 02.06.1978 இல் திருவாட்டி இராணி அவர்களைத் திருமணம் செய்து, இல்லற வாழ்வை இனிதே நடத்தி வருபவர். இவர்களுக்குப் பனிமலர், இரேகா என்னும் இரண்டு பெண் மக்கள் வாய்த்தனர். இவர்கள் இருவரும் உயர்கல்வி கற்று, உயர் பணிகளில் உள்ளனர். 

ச. குருசாமியார் தம் வாழ்நாள் பணியாகத் தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைகளை நுட்பமாக ஆராய்ந்து, அவர்களின் தொல்காப்பியப் புலமையையும் உரைவரையும் பெரும்புலமையையும் தமிழுலகத்திற்கு நூல்களின் வழியாக அறிமுகம் செய்த பெருமைக்குரியவர். இவர்போல் தொல்காப்பிய உரைகள் என்ற ஒற்றைப் புலத்தைத் தேர்ந்தெடுத்து, உழைத்து, ஆராய்ந்து, அறிவுமுத்துகளை வெளிக்கொணர்ந்த பேராசிரியர்கள் அரிது எனலாம். இவர்தம் பணிகளைப் போற்றிப் புதுவையில் உள்ள உலகத் தொல்காப்பிய மன்றம் இவருக்குப் பாராட்டு விழாவினை விரைவில் நடத்த உள்ளது. 

முனைவர் ச. குருசாமி அவர்களின் நூல்களில் தொல்காப்பிய உரைகளின் பதிப்பு வரலாறு, உரையாசிரியர்களின் வரலாறு, உரைநெறிகள் யாவும் மிகவும் நுட்பமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அரிய குறிப்புகளை எடுத்துக்காட்டுவதும், பழைய இதழ்களில் வெளியான செய்திகளைத் தேடித் திரட்டி, ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதும் இவரின் ஆய்வு ஆர்வத்தைக் காட்டுவன. தம் ஆய்வுப்பணிகளுக்குப் பெரிதும் துணைநின்ற அறிஞர்களை நன்றியுடன் நினைத்து உருகும் முனைவர் ச. குருசாமி அவர்கள் தம்முடன் பணியாற்றிய முனைவர் ம. இரா. அரசு அவர்களின் துணையையும் ஒத்துழைப்பையும் தொல்காப்பிய ஆய்வுக்குத் தம்மை ஆற்றுப்படுத்தியமையையும் நன்றியுடன் போற்றுவது இவர்தம் சால்புக்குச் சான்றாகும். 

பேராசிரியர் ச குருசாமி அவர்களின் தமிழ்க்கொடை: 

1.   இளம்பூரணர் உரைநெறி (2007)

2.   சேனாவரையர் உரைநெறி (2007)

3.   நச்சினார்க்கினியர் உரைநெறி (2008)

4.   பேராசிரியர் உரைநெறி (2008)

5.   கல்லாடனார் உரைநெறி (2017)

6.   தெய்வச்சிலையார் உரைத்திறன் (2019)

7.   தெய்வச்சிலையார் உரைநெறி (2022), செ.த.ம.நிறுவனம்.

8.   களவியல் உரைநெறி (2022)

9.   விருத்தியுரைகாரர் உரைநெறி (2022)







ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

சிட்னியில் யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளாருக்குச் சிலைத் திறப்பு…

  

விபுலாநந்த அடிகளார் சிலைத் திறப்பு விழா- சிட்னி (29.03.2024)
குணரத்தினம் ஐயா, மனோ அம்மா, பேராசிரியர் பாலசுந்தரம், சந்திரிகா சுப்பிரமணியம், அனகன் பாபு, மன்னர் மன்னன், மு.இளங்கோவன்

விபுலாநந்த அடிகளார் சிலைத் திறப்பு விழா- சிட்னி

  ஆத்திரேலியா நாட்டின் சிட்னி மாநகரில் யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளாருக்குச் சிலை ஒன்று நிறுவ வேண்டும் என்று அங்கு வாழும் உதயசூரியன் இதழாசிரியர் திரு. குணரத்தினம் அவர்கள் பலவாண்டுகளாக முயற்சி செய்துவந்தார்கள். 2019 ஏப்ரல் திங்களில் நான் முதல் முறையாக ஆத்திரேலியா சென்றபொழுதும் என்னிடம் நேரில் நினைவூட்டினார்கள். அன்று முதல்  ஒற்றை மாந்தராகக் கடுமையாக உழைத்து, ஒரு சிலையை நிறுவுவதற்குப் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்து, நிறைவாகச் சிலையைத் திறப்பதற்கு நாளும், நேரமும் குறித்தார்கள். சிலைத்திறப்பின் பொழுது அடிகளாரின் பெருமைகளை நினைவுகூரும் கட்டுரைகள், வாழ்த்துச் செய்திகளைத் திரட்டி, நினைவு மலர் ஒன்று வெளியிடவும் முனைந்தார்கள். 

விபுலாநந்த அடிகளார் சிலைத்திறப்பு நிகழ்வில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ் அன்பர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்க வேண்டும் என்ற வகையில் பலரையும் மகிழ்ச்சியுடன் விழாக்குழுவினர் அழைத்தார்கள். அவ்வகையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை உருவாக்கி, அடிகளாரின் பெருமைகளை உலக அரங்கில் அனைவரும் மீண்டும் நினைவுகூர்வதற்கு வழியேற்படுத்திய நானும் பங்கேற்க வேண்டும் என்று விரும்பி, திருவாளர் குணரத்தினம் ஐயா  அவர்களும் அவர்களின் துணைவியார் மனோ அம்மா அவர்களும் எனக்கும் அன்பு அழைப்பு விடுத்தார்கள்.  கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தாலும் பணிச்சுமையும், முன்பே ஏற்றுக்கொண்ட சில பணிகளும், குடும்பப் பொறுப்புகளும் மனத்துக்குள் தயக்கத்தை ஏற்படுத்தின. இருப்பினும் திரு. குணரத்தினம் ஐயா அவர்களின் அன்பும் அம்மா அவர்கள் என் மீது காட்டும் பாசமும் ஆத்திரேலியாவுக்குச் செல்ல வேண்டும் என்ற உந்துதலை எனக்குத் தந்தன. 

அந்த நாட்டிற்குச் செல்வதற்கு நுழைவுச் சீட்டு எடுக்கும் பணியில் முனைந்தபொழுது என் கடவுச்சீட்டைப் புதுப்பித்தல் நலம் என்று பயண முகவர் குறிப்பிட்டார். உடன் கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டேன். இரண்டு கிழமையில் கடவுச்சீட்டின் புதுப்பித்தல் பணி முடிந்தது. பின்னர் நுழைவுச்சீட்டினைப் (விசா) பெறுவதற்குரிய ஆவணங்களைத் திரட்டி, அதனையும் குறிப்பிட்ட நாளுக்குள் பெற்றேன். இவை யாவும் முடிவதற்குள் விழா நடைபெறும் நாளும் நெருங்கியது. இறுதி நேரத்தில் பயணத்தை உறுதிப்படுத்தியதால் வானூர்திச் சீட்டு விலை அதிகமாக இருந்தது. எனினும் ஆத்திரேலியா நாட்டிற்குச் செல்வதையும் அடிகளார் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதையும் மகிழ்ச்சியான தமிழ்க் கடமையாக ஏற்றுக்கொண்டு, புறப்பட்டேன். 

ஆயிடை, 

சிட்னியில் 29.03.2024 இல் நடைபெறும் விபுலாநந்த அடிகளார் சிலைத்திறப்பு விழாவில் கனடா நாட்டிலிருந்து பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்களும், அவர்களின் துணைவியாரும், மலேசியாவிலிருந்து ஆசான் மன்னர் மன்னன் மருதை அவர்களும், இலங்கையிலிருந்து மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்துப் பொறுப்பாளர்களும், மெல்பர்ன் நகரத்திலிருந்து எழுத்தாளர் செயராம சர்மா, பொறியாளர் நடேசன் சுந்தரேசன், வழக்கறிஞர் “பாடும்மீன்” சிறீ கந்தராசா உள்ளிட்ட தமிழ் அன்பர்களும் கலந்துகொள்ள உள்ளதை அறிய முடிந்தது. அனைவரும் முதல் நாளே சிட்னிக்கு வந்துசேர்ந்திருந்தார்கள். 

29.03.2024 மாலை 5 மணிக்கு, சிட்னி, துர்க்கையம்மன் கோவிலின் அரங்கத்தில் விழாவில் கலந்துகொள்ளும் நோக்கில் விபுலாநந்த அடிகளார் மீது அன்புகொண்டிருந்த தமிழன்பர்கள் ஒன்றுதிரண்டிருந்தனர். திரு. குணரத்தினம் ஐயா அவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் நண்பர்களும் திரண்டிருந்தனர். எழுத்தாளர் மாத்தளை சோமு ஐயா, வழக்கறிஞர்  மாறன் நந்தன் சிதம்பரம், வழக்கறிஞர் சந்திரிகா சுப்பிரமணியன், தொழிலதிபர் அனகன் பாபு, “இன்பத் தமிழ் ஒலி” பிரபாகரன் பாலசிங்கம், “தாயகம் ஒலிபரப்புச் சேவை” பாலா விக்னேஸ்வரன், ஒளி ஓவியர் இலாவண்யன், கண்ணன் உள்ளிட்ட நண்பர்களை அரங்கில் கண்டு உரையாடியமை மகிழ்ச்சியளித்தது. அரங்கத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த விபுலாநந்த அடிகளாரின் சிலை, அறிஞர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. மலர்தூவி அனைவரும் அடிகளார் படிமத்தை வணங்கினோம். பின்னர் அரங்கில் நடைபெற்ற மேடை நிகழ்வில் அடிகளாரின் பெருமைகளை விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களாகிய நாங்கள் அரங்கில் இருந்த ஆர்வலர்களுக்கு எடுத்துரைத்தோம். விழா மலரும், நினைவு விருதும் எங்களுக்கு வழங்கப்பட்டன. 

இலங்கையின் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைதீவில் பிறந்த விபுலாநந்த அடிகளார் யாழ் நூல் உருவாக்கியமையாலும், சிவாநந்த வித்தியாலயம் உள்ளிட்ட கல்வி நிலையங்களைத் தோற்றுவித்ததாலும், இராமகிருஷ்ண மடத்தின் துறவியாக இருந்து, சமயப்பணிகள் பல ஆற்றியதாலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி, அளப்பரிய தமிழ்த்தொண்டாற்றியதாலும் நம் நெஞ்சங்களில் என்றும் நிலைபெற்று வாழ்வார். அடிகளாரின் சிலையைச் சிட்னியில் நிலைபெறச் செய்தமையால் திரு. குணரத்தினம் அவர்களும் நீடுபுகழ் பெற்று, நெடுவாழ்வு வாழ்வார் என்பதில் ஐயமில்லை.


குணரத்தினம்  அவர்கள் மு.இளங்கோவனுக்குச் சான்றிதழ் வழங்குதல்


விபுலாநந்த அடிகளார் சிலைத் திறப்பு விழா- சிட்னி


மாத்தளை சோமு, ந. சுந்தரேசன், மு.இளங்கோவன், இலாவண்யன்








ஒளி ஓவியர் கண்ணன், மு.இளங்கோவன்