நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 24 ஜூலை, 2018

புலவர் வெற்றியழகனின் தமிழ் வாழ்க்கை...


புலவர்  வெற்றியழகன்

  புதுவைக்கு வரும்பொழுதெல்லாம் . பிழைபொறுத்தான் அவர்கள் சென்னையில் வாழும் புலவர் கு. வெற்றியழகனைப் பற்றி எடுத்துரைத்து, அவரை அழைத்து, தொல்காப்பியம் குறித்து உரையாற்றச் செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைப்பார். நானும் புலவர் வெற்றியழகனை, ஓரிரு இலக்கிய நிகழ்வுகளில் முன்பு சந்தித்துள்ளேன்; மக்கள் செங்கோல் இதழில் அவர்தம் கட்டுரைகளைக் கண்ணுற்றுள்ளேன்; அழைத்துப் பயன்கொள்வோம் என்று அமைதி கூறி அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்.

  ஓரிருமுறை புலவர் கு. வெற்றியழகனைச் செல்பேசியில் தொடர்புகொண்டு, புதுவைக்கு உரையாற்ற வருமாறு அழைத்ததும் உண்டு. எங்களின் சந்திப்புக்கு வாய்ப்பு அமையாமல் இருந்தது. அண்மையில் (21.07.2018) மதுரையில் ஓர் இலக்கிய நிகழ்வில் புலவர் கு. வெற்றியழகனைச் சந்தித்து, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. புலவர் பெருமகனாருடன் உரையாடியபொழுது அவர்தம் வறுமை படர்ந்த இளமை வாழ்க்கை அறிந்து, பெருங்கவலையுற்றேன். கல்வியில் அவருக்கு இருந்த ஈடுபாடு கேட்டு, வியப்புற்றேன். காட்டாற்றில் எதிர்நீச்சலடித்து வெற்றிப் பயணம் மேற்கொண்ட அவரின் வாழ்க்கை ஒரு திரைப்படம் போல் என் மனக்கண்ணில் விரிந்தது.

மு.இளங்கோவன், புலவர் வெற்றியழகன்

  புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஊர் மரக்காணம் ஆகும். எயில்பட்டினம் என முன்பு அழைக்கப்பட்ட இவ்வூர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. சிறுபாணாற்றுப்படை  என்னும் சங்க இலக்கிய நூலில் இவ்வூரின் வளத்தைக் கற்று மகிழலாம். இவ்வூருக்கு அருகில் உள்ள ஊரணி என்ற ஊரில் பிறந்த கு. ஜெயராமுலு, குடும்பத்தில் நிலவிய வறுமை விரட்ட, சென்னைக்கு ஒரு தேங்காய் வணிகரின் சூழ்ச்சியால் பதினான்கு அகவையில் அழைத்துச் செல்லப்பட்டார். உள்ளூர் வணிகரிடம் பிள்ளையை ஒப்படைத்த குடும்பத்தினர் ஏழு மாதங்களாகியும் தம் பிள்ளையைப் பற்றிய எந்த விவரமும் தெரியாததால், தங்கள் பையனைத் தேடி, சென்னை சென்றனர். தேங்காய் மண்டியில் வேலை செய்த தங்கள் பையனைக் கண்டுபிடித்தனர். குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்த மகிழ்வில் திருவல்லிக்கேணியில் வாடகை வீட்டில் தஞ்சம் புகுந்தனர். சென்னைக்கு ஜெயராமுலுவாகச் சென்றவர் எவ்வாறு வெற்றியழகனாக மாற்றம் பெற்றார் என்ற அவரின் வாழ்க்கை வரலாற்றைக் கேட்டு, அவர்தம் வாய்மொழியாக யாவற்றையும் பதிவுசெய்துகொண்டேன். யான் கேட்ட புலவர் கு. வெற்றியழகனாரின் வாழ்க்கைக் குறிப்பிலிருந்து....

ஜெயராமுலு...

  மரக்காணம் அருகில் உள்ள, திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட ஊரணி என்ற ஊரில் 12.10.1936 இல் குப்புசாமி, முனியம்மாள் ஆகியோரின் தலைமகனாகப் பிறந்தவர் ஜெயராமுலு. இவருடன் பிறந்தவர்கள் மூவர். ஓர் ஆண். இரு பெண்கள். ஊரணிக்கு அருகில் உள்ள கழிக்குப்பம் என்னும் ஊரில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவர். இப்பள்ளியில் நிகழ்ந்த கசப்பான அனுபவத்தால் அப்பள்ளியிலிருந்து விலகித் தம் ஊரினர் உருவாக்கிய திண்ணைப்பள்ளியில் முத்து வாத்தியார் என்ற ஆசிரியரிடம் சிலகாலம் பயின்றவர். அங்குப் பார்த்தசாரதி மாலை, விவேக சிந்தாமணி, அறப்பளீசுவரர் சதகம் உள்ளிட்ட நூல்களைப் பயின்றவர். முத்து வாத்தியார் கண்டிப்புக்குப் பெயர்பெற்றவர். முதலில் வந்து வருகையைத் தெரிவிக்கும் மாணவனைத் தவிர அனைத்து மாணவர்களும் ஆசிரியரின் பிரம்படியிலிருந்து தப்ப இயலாது. இரவு வந்து உங்கள் வீட்டின் அருகில் இருந்து படிக்கின்றாயா என்று கவனித்தேன்? ஏன் படிக்கவில்லை என்று ஒவ்வொரு மாணவரையும் கண்டிப்பாராம். இதனைக் கேள்வியுறும் மாணவர்கள் மறுநாள் முதல் வீட்டில் உரக்க ஓசை எழுப்பிப் படிப்பது உண்டாம். காலைக்கடன் கழிக்கச் செல்லும்பொழுது விநாயகர் அகவல் உள்ளிட்ட நூல்களைப் படிக்குமாறு ஆசிரியர் அக்காலத்தில் வலியுறுத்துவாராம். அதனால் ஊரெங்கும் விநாயகர் அகவல் பாராயண ஒலி கேட்குமாம். அழகான கையெழுத்து வாய்க்கப்பெற்றது அந்த ஆசிரியரின் தண்டனையால்தான் என்று வெற்றியழகனார் நன்றியுடன் குறிப்பிட்டார். வறுமை காரணமாகச் சென்னையில் தேங்காய்க்கடையில் பணிபுரிவதற்காகச் சென்றவர், பின்னர் மளிகைக் கடைக்குப் பணிமாறினார்.  மளிகைக்கடையில் பணியில் இருந்தபொழுது பொருள்களை மடித்துக்கொடுக்கும் தாள்களைப் படித்துப்பார்ப்பது வழக்கம். அப்பொழுது ஒரு தாளில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அழகின் சிரிப்பு நூலில் இடம்பெறும்,

கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று, குரங்கு தொட்டு
“விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதிப்பதைப்போல்
கிளைதொறும் குதித்துத் தாவிக்
கீழுள்ள விழுதை யெல்லாம்
ஒளிப்பாம் பாய் எண்ணி எண்ணி
உச்சி போய்த் தன்வால் பார்க்கும்"

என்ற கவிதை வரிகளைக் கண்ணுற்று, இதுபோல் கவிதைகள் இயற்ற வேண்டும் என்று உந்துதல் ஏற்பட, தொடர்ந்து எழுதத் தொடங்கினார். 1954 ஆம் ஆண்டில் "நல்ல பிள்ளை" என்ற தலைப்பில் இவர் எழுதிய பாடல் பூமாலை என்ற சிறுவர் இதழில் வெளிவந்தது. அன்று தொடங்கி தொடர்ந்து எழுதிக்கொண்டே உள்ளார். படிக்க வேண்டும் என்ற வேட்கையால் தம் மளிகைக்கடைப் பணியை விடுத்து, அச்சுக்கூடம் ஒன்றில் பணிக்குச் சென்றார். பகல்பொழுதில் அச்சுக்கூடப் பணி நிறைவுறும். எனவே இரவில் படிப்பதற்கு நேரம் கிடைத்தது.

  சுப்பிரமணியன் என்ற நல்லோரின் துணையால், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இயங்கிய  சென்னை வேதாந்த சங்கத் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து புலவர் செ. கோவிந்தராசனாரிடம் தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக் காரிகை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களைக் கற்றார். இலக்கணக்ககடல் மே. வீ. வேணுகோபால பிள்ளையிடம் இலக்கண ஐயங்களைப் போக்கிக்கொண்டார்.

  சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1969 இல் புலவர் வகுப்பில் சேர்ந்து, 1973 ஆம் ஆண்டில் புலவர் பட்டயம் பெற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்ற புலவர் வெற்றியழகன் தொடர்ந்து எழுதத் தொடங்கினார். பல நூல்களுக்கு மெய்ப்புப் பார்த்து வழங்கும் பணியும் தொடர்ந்தது. தாமே நூலாசிரியராக மலர்ந்து பல நூல்களைத் தமிழன்னைக்குப் படையல் செய்தார். முனிச்செல்வன், குப்புராமன், விறல் எழிலன் என்ற புனைபெயரிலும் எழுதியவர்.

புலவர் வெற்றியழகனின் தமிழ்க்கொடைகள்:

1.   வெற்றியழகன் கவிதைகள் (முதல் தொகுதி)
2.   வெற்றியழகன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)
3.   வெண்ணிலா (குறுங்காவியம்)
4.   அறிவார்ந்த கதைகள்
5.   அண்ணா ஆட்சியின் அருஞ்செயல்கள்,
6.   அண்ணா   புகழ்மாலை
7.   அமைதிக் கடல் அண்ணா
8.   காவியக் கலைஞர்
9.   தமிழர் வாழ்வியல்
10. புத்திசாலிக் கதைகள்,
11. தவறில்லாமல் தமிழை எழுத
12. தரமிகு தமிழ்க் கல்வி
13. அருந்தமிழ்ச் சான்றோர் அறுபத்து மூவர்
14. உரைக்கும் பொருளும் உண்மைப் பொருளும்
15. கலைஞர் நூறு
16. யாப்பரங்கம்
17. தொல்காப்பியம் எழுத்ததிகார எளிய உரை
18. தொல்காப்பியம் சொல்லதிகாரம் எளிய உரை
19. வெற்றியழகன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி)
20. அழியாத ஓவியம்
21. வழக்கமும் விளக்கமும்
22. நல்ல தமிழ் எழுத
23. இசைத்தேன்

உள்ளிட்ட பல நூல்களைப் புலவர் வெற்றியழகன் வழங்கியுள்ளார்.

  1964 இல் நீலாவதி அம்மையாரை மணம் செய்துகொண்ட இவர்களுக்கு மூன்று மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இரண்டு மகன்: ஒரு மகள்.

  1961 இல் புகுமுகத் தேர்வு, 1971 இல் இடைநிலைத் தேர்வு, 1973 இல் இறுதி நிலைத் தேர்வு எழுதி வெற்றி கண்டவர். 1973 இல் புலவர் பட்டம் பெற்றவுடன் ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியராகச் செல்ல நினைத்தாலும், தாம் பணிபுரிந்த அச்சகத்தின் பணியால் அவ்வாய்ப்பை இழந்தார். பகுதி நேரப் பணியாகத் தமிழ்ந்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தில் 1973 முதல் 1976 வரை பிழை திருத்தும் பணியை மேற்கொண்டார். அன்று தொடங்கி இன்று வரை பிழை திருத்தும் பணியையே தம் வாழ்க்கைக்குரிய பணியாக ஏற்றுச் செய்து வருகின்றார். இவ்வகையில் ஆயிரக்கணக்கான நூல்கள் இவர் கண்பார்வையால் உயிர்பெற்றுள்ளன.

  தமிழகத்தின் மூத்த தமிழறிஞர்களின் நூல்கள் மறுபதிப்புக் கண்டபொழுது அவை பிழையின்றி வெளிவருவதற்குத் துணைநின்றவர். அவ்வகையில் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், மொழிஞாயிறு பாவாணர், பவானந்தம் பிள்ளை பதிப்பித்த  யாப்பருங்கல விருத்தி, திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், காந்தளகம் தொகுப்பு முருகன் பாடல்கள், தொல்காப்பியம், கலைஞரின் பவழ விழா மலர், கலைஞரின் கவிதை மழை, கலைஞரின் சிறுகதைக் களஞ்சியம், நா. கதிரைவேற் பிள்ளையின் தமிழகராதி, அபிதான சிந்தாமணி, புலவர் குழந்தையின் இராவண காவியம், பாலகிருட்டின பிள்ளை பதிப்பித்த திருவருட்பா, கா.சு. பிள்ளை பதிப்பித்த தனிப்பாடல் திரட்டு, பாரதிதாசன் கவிதைகள், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர், உலகத் தமிழச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கக் கட்டுரைகள் (எட்டுத் தொகுதி), உள்ளிட்ட நூல்களை மெய்ப்புப் பார்த்து வழங்கிய பெருமைக்குரியவர்.

  தமிழ் வளர்ச்சித்துறையில் பதிப்பாசிரியராக இருந்து அறநெறிக் கருவூலம், பொன்மொழிக் களஞ்சியம், தமிழைப் பற்றிய வெளிநாட்டறிஞர் பொன்மொழிகள் ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

  தமிழ்நாட்டரசின் பதினொன்றாம் வகுப்புப் பாட நூலில் வரதட்சணை குறித்து இவர் எழுதிய பாடலும், பன்னிரண்டாம் வகுப்புப் பாட நூலில் இவர் இயற்றிய குருதிக்கொடை என்ற தலைப்பில் அமைந்த பாடலும் பாடப்பகுதிகளாக இருந்துள்ளன.

 தமிழகத்தில் நடைபெற்ற கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கட்டுரைப் போட்டிகள், கவிதைப் போட்டிகள், திருக்குறள் போட்டிகள் ஆகியவற்றுக்கு நடுவராக இருந்துள்ளார்.

சிறப்பு வகுப்புகள்:

  யாப்பரங்கம் என்ற தலைப்பில் யாப்பிலக்கண வகுப்பு, தலைநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் தொல்காப்பிய வகுப்பு, புறநானூற்றுப் பொழிவு, திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் மூன்றாவது முறையாக நன்னூல் வகுப்பு, பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் இராவண காவியப் பொழிவு, நங்கைநல்லூர் திருக்குறள் பேரவையின் சார்பில் நல்ல தமிழறிவோம் வகுப்பு, திருவள்ளூரில் தொல்காப்பிய வகுப்பு எனப் பல்வேறு வகுப்புகளை நடத்தித் தமிழ் இலக்கணம், இலக்கியம் பரப்பும் பணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்.

  தமிழ்நாட்டரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் ஓங்கு தமிழ்ப் பாவலர் விருது, தலைநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் மொழிப்போர் மறவர் விருது, சென்னைத் தமிழ்ச் சுரங்கம் சார்பில் தொல்காப்பியர் விருது, அண்ணா நகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் தொல்காப்பியர் சீர் பரவுவார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

கொள்கையும் கோட்பாடும்:

  திருக்குறள் கற்ற நாள் முதலாகப் புலால் மறுத்தவர். சீர்திருத்தச் சிந்தனையுடைவர். குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயரிடும் நோக்கினர். சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவர்.  தம் இறப்புக்குப் பிறகு உடலை மருத்துவ ஆய்வுக்கு வழங்குமாறு விருப்பம் தெரிவித்தவர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்னும் விருப்ப உணர்வினர். மொழி, இன, நாட்டுப்பற்றுடன் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிவரும் செம்மல் இவர்.

குறிப்பு: என் கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாள்வோர், நூல் வரைவோர், களஞ்சியம் தொகுப்போர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

திங்கள், 23 ஜூலை, 2018

அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுடனான சந்திப்பு!


முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்

 மதுரை இலக்கிய நிகழ்வு நிறைவுற்றதும், தானி ஒன்றில் ஏறி அமர்ந்து தொடர்வண்டி நிலையம் நோக்கி விரைந்தேன். இரவு 11 மணிக்குத் தொடர்வண்டி. 10.45 மணிக்கு நிலையத்தை நெருங்கினேன். நான் பயணம் செய்யும் தொடர் வண்டி அரை மணி நேரம் காலம் தாழ்ந்து வரும் என்ற குறிப்பறிந்து மெதுவாக நடைமேடை நோக்கி முன்னேறினேன். ஆயிடை, அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் நின்றுகொண்டிருந்தார். என்னை அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். பழைய நினைவுகள் வரப்பெற்றவராக அன்புடன் நலம் வினவினார். இருபதாண்டுகளாக அவருடன் தொடர்பு உண்டு எனினும் இன்றுதான் மனந்திறந்து உரையாடுவதற்கு வாய்ப்பு அமைந்தது. அவர் பயணம் செய்யும் அதே தொடர்வண்டியில்தான் நானும் பயணம் செய்யவேண்டும். கூடுதல் சிறப்பு என்னவெனில் இருவரும் ஒரே பெட்டியில் பயணம் செய்ய உள்ளதை அறிந்ததும் எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி.

 வண்டி அரை மணி நேரம் காலம் தாழ்ந்து வர உள்ளதை அவரிடம் சொல்லி, நடைமேடையில் இருந்த இருக்கையில் அமர்ந்தோம். நான் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்ச்சியை எடுத்துரைத்தபொழுது, தாமும் இலக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றி, மீளும் செய்தியைத் தெரிவித்தார். எங்களின் உரையாடல் எழுத்தாளர்கள் - சமகால இலக்கியம் நோக்கி மெதுவாக நகர்ந்தது. என் உள்ளங்கவர்ந்த எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் பற்றியும், அவர்தம் இலக்கிய ஆளுமை குறித்தும் சில வினாக்களைத் தொடுத்தேன். மகிழ்ச்சியுடன் தம் எண்ணங்களைத் திருப்பூரார் பகிர்ந்துகொண்டார். "சாயங்கால மேகங்கள்" என்ற நா.பா.வின் படைப்பினைப் பற்றி எடுத்துரைத்து, சில வரிகளை நினைவூட்டினேன். ஊக்கமடைந்த திருப்பூரார் தமக்கும் நா.பா. வுக்குமான இலக்கிய உறவு பற்றி மனந்திறந்து பேசினார். நா.பா. வின் பிற புகழ்பெற்ற படைப்புகளை எனக்கு அறிமுகம் செய்தார். தாம் சுவைத்த நா.பா.வின் பாத்திரங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். அவர் குடும்பத்துள் ஒருவராக, உற்ற நண்பராக விளங்கிய கடந்த கால வாழ்க்கையை என்னுடன் உரிமையுடன் பகிர்ந்துகொண்டார். எங்களின் பேச்சு ஜெயகாந்தன் படைப்புகள் குறித்தும் அவரின் இலக்கிய வாழ்க்கை குறித்தும் நகர்ந்தது. நான் அறியாத, ஜெயகாந்தனின் படைப்பு நுட்பங்கள் பலவற்றைத் திருப்பூரார் எனக்கு அறிமுகம் செய்தார்.

 அறிவிப்பு ஒன்று ஒலித்தது. நாங்கள் பயணம் செய்யும் அனந்தபுரி விரைவு வண்டி மேலும் ஒரு மணி நேரம் காலம் தாழ்ந்து வரும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அருகில் இருந்த மக்கள் பலரும் சோர்வடைந்து, நின்ற கோலத்தைக் கிடந்த கோலமாக்கினர். தொடர்வண்டியின்  காலத்தாழ்ச்சி அறிந்து நானும் திருப்பூராரும் மகிழ்ச்சியுற்றோம். உரையாடல் தொடர்ந்தது. தி.ஜானகிராமன் படைப்புகள் குறித்தும் அவரின் படைப்பு நுட்பங்கள் குறித்தும் திருப்பூரார் எனக்கு ஒரு வகுப்பு எடுத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. தி.ஜானகிராமனைப் படித்து முடிக்க வேண்டும் என்று உந்துதலை அவரின் உரையாடல் எனக்கு ஏற்படுத்தியது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி படைப்புகள் குறித்தும் பல செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். ஜெயமோகன் படைப்புகள் குறித்தும் உரையாடினோம்.

 திருப்பூரார் தம் தந்தையார் குறித்தும், அவரின் பணிநிலையால் பல ஊர்களில் படிக்க நேர்ந்தமை குறித்தும், குடும்பம் குறித்தும் பல செய்திகளை மனந்திறந்து பகிர்ந்துகொண்டார். சென்னையில் தாம் சந்தித்த இலக்கிய ஆளுமைகள் குறித்தும், அவர்களிடம் கற்றுக்கொண்ட உயர்பண்புகள் குறித்தும் ஓர் ஆசிரியர் மாணவனுக்கு எடுத்துரைப்பதுபோல் பொறுப்புடன் எனக்கு எடுத்துரைத்தார். திருப்பூராரை அடையாளம் கண்டுகொண்ட அவர் வாசகர்கள் சிலர் இடையில் புகுந்து வணக்கம் சொல்வதும், அவர்களை வாழ்த்தி வழினுப்புவதையும் திருப்பூரார் மேற்கொண்டார்.

 மு.வ. வின் இலக்கியப் படைப்புகள் பெருந்திரள் மக்களைச் சென்றடைந்தமையையும், பலர் அவர் நூல்களைப் படித்து மனம் மாற்றம் பெற்றனர் என்பதையும் எடுத்துரைத்த திருப்பூர் கிருஷ்ணன் மூத்த எழுத்தாளர்கள் கு. அழகிரிசாமி, கி. ரா. உள்ளிட்டவர்களின் இலக்கியச் சுவையூட்டும் படைப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

 எழுத்தாளர் சுஜாதா, கவிஞர் வாலி உள்ளிட்டவர்களின் படைப்பாளுமை மற்றும் பழகும் குணம் குறித்து அரிய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். எழுத்தாளர் அகிலன் தன் விருப்பம் ஒன்றை, நா.பா.விடம் எடுத்துரைக்க, அது அந்நாள் முதல்வர் எம்.ஜி. ஆர் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு நூலாசிரியர் பலருக்கு உதவியாக இருந்தமையையும் நினைவூட்டினார். நா.பா.வின் துணிவும், இலக்கியச் செம்மாப்பும் எனக்குப் புலப்பட்டன.

 இரசிகமணி டி.கே.சி. யின் கம்பராமாயண ஆர்வம் குறித்து, யான் அறியாத பல சுவையூட்டும் நிகழ்வுகளை எடுத்துரைத்தார். கல்கி, இராஜாஜி உள்ளிட்டோரின் படைப்புகள், அவர்களின் இலக்கியப் பணிகளும் எங்களின் உரையாடலில் இடம்பெற்றன.

 சமகால எழுத்துகளை ஆர்வமுடன் கற்றுள்ள திருப்பூர் கிருஷ்ணன், சமகால எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகிய பேரனுபவம் வாய்த்தவராக விளங்குவதை அறிந்து வியப்புற்றேன். ஒரு தகவல் சுரங்கமாகவும், சமகால இலக்கியப் போக்குகளை அறிந்தவராகவும் விளங்கும் திருப்பூர் கிருஷ்ணன் ஓர் இலக்கியப் பல்கலைக்கழகமாக விளங்குவதை அறிந்து மனதார அவரை வணங்கினேன். இவர்போலும் எழுத்தாளர்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்புரைகள் நிகழ்த்தினால் கடந்த நூறாண்டுகளாகச் சிறந்த விளங்கிய படைப்பாளர்கள், படைப்புகள் குறித்த நல்ல அறிமுகம் மாணவர்களுக்குச் சென்று சேரும் என்பது என் நம்பிக்கை.
மு.இளங்கோவன், முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்