புலவர் வெற்றியழகன்
புதுவைக்கு வரும்பொழுதெல்லாம் ஆ.
பிழைபொறுத்தான் அவர்கள் சென்னையில் வாழும்
புலவர் கு. வெற்றியழகனைப் பற்றி
எடுத்துரைத்து, அவரை அழைத்து, தொல்காப்பியம்
குறித்து உரையாற்றச் செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைப்பார்.
நானும் புலவர் வெற்றியழகனை, ஓரிரு
இலக்கிய நிகழ்வுகளில் முன்பு சந்தித்துள்ளேன்; மக்கள் செங்கோல் இதழில் அவர்தம் கட்டுரைகளைக்
கண்ணுற்றுள்ளேன்; அழைத்துப்
பயன்கொள்வோம் என்று அமைதி கூறி
அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்.
ஓரிருமுறை புலவர் கு.
வெற்றியழகனைச் செல்பேசியில் தொடர்புகொண்டு, புதுவைக்கு உரையாற்ற வருமாறு
அழைத்ததும் உண்டு. எங்களின் சந்திப்புக்கு வாய்ப்பு அமையாமல் இருந்தது. அண்மையில்
(21.07.2018) மதுரையில் ஓர் இலக்கிய நிகழ்வில் புலவர் கு. வெற்றியழகனைச் சந்தித்து,
நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. புலவர்
பெருமகனாருடன் உரையாடியபொழுது அவர்தம் வறுமை படர்ந்த இளமை வாழ்க்கை அறிந்து, பெருங்கவலையுற்றேன்.
கல்வியில் அவருக்கு இருந்த ஈடுபாடு கேட்டு, வியப்புற்றேன். காட்டாற்றில் எதிர்நீச்சலடித்து
வெற்றிப் பயணம் மேற்கொண்ட அவரின் வாழ்க்கை ஒரு திரைப்படம் போல் என் மனக்கண்ணில் விரிந்தது.
மு.இளங்கோவன், புலவர் வெற்றியழகன்
புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஊர் மரக்காணம் ஆகும்.
எயில்பட்டினம் என முன்பு அழைக்கப்பட்ட இவ்வூர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது.
சிறுபாணாற்றுப்படை என்னும் சங்க இலக்கிய நூலில்
இவ்வூரின் வளத்தைக் கற்று மகிழலாம். இவ்வூருக்கு அருகில் உள்ள ஊரணி என்ற ஊரில் பிறந்த
கு. ஜெயராமுலு, குடும்பத்தில் நிலவிய வறுமை விரட்ட, சென்னைக்கு ஒரு தேங்காய் வணிகரின்
சூழ்ச்சியால் பதினான்கு அகவையில் அழைத்துச் செல்லப்பட்டார். உள்ளூர் வணிகரிடம் பிள்ளையை
ஒப்படைத்த குடும்பத்தினர் ஏழு மாதங்களாகியும் தம் பிள்ளையைப் பற்றிய எந்த விவரமும்
தெரியாததால், தங்கள் பையனைத் தேடி, சென்னை சென்றனர். தேங்காய் மண்டியில் வேலை செய்த
தங்கள் பையனைக் கண்டுபிடித்தனர். குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்த மகிழ்வில்
திருவல்லிக்கேணியில் வாடகை வீட்டில் தஞ்சம் புகுந்தனர். சென்னைக்கு ஜெயராமுலுவாகச்
சென்றவர் எவ்வாறு வெற்றியழகனாக மாற்றம் பெற்றார் என்ற அவரின் வாழ்க்கை வரலாற்றைக் கேட்டு,
அவர்தம் வாய்மொழியாக யாவற்றையும் பதிவுசெய்துகொண்டேன். யான் கேட்ட புலவர் கு. வெற்றியழகனாரின்
வாழ்க்கைக் குறிப்பிலிருந்து....
ஜெயராமுலு...
மரக்காணம் அருகில் உள்ள, திண்டிவனம் வட்டத்திற்கு
உட்பட்ட ஊரணி என்ற ஊரில் 12.10.1936 இல் குப்புசாமி, முனியம்மாள் ஆகியோரின் தலைமகனாகப்
பிறந்தவர் ஜெயராமுலு. இவருடன் பிறந்தவர்கள் மூவர். ஓர் ஆண். இரு பெண்கள். ஊரணிக்கு
அருகில் உள்ள கழிக்குப்பம் என்னும் ஊரில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவர். இப்பள்ளியில்
நிகழ்ந்த கசப்பான அனுபவத்தால் அப்பள்ளியிலிருந்து விலகித் தம் ஊரினர் உருவாக்கிய திண்ணைப்பள்ளியில்
முத்து வாத்தியார் என்ற ஆசிரியரிடம் சிலகாலம் பயின்றவர். அங்குப் பார்த்தசாரதி மாலை,
விவேக சிந்தாமணி, அறப்பளீசுவரர் சதகம் உள்ளிட்ட நூல்களைப் பயின்றவர். முத்து வாத்தியார்
கண்டிப்புக்குப் பெயர்பெற்றவர். முதலில் வந்து வருகையைத் தெரிவிக்கும் மாணவனைத் தவிர
அனைத்து மாணவர்களும் ஆசிரியரின் பிரம்படியிலிருந்து தப்ப இயலாது. இரவு வந்து உங்கள்
வீட்டின் அருகில் இருந்து படிக்கின்றாயா என்று கவனித்தேன்? ஏன் படிக்கவில்லை என்று
ஒவ்வொரு மாணவரையும் கண்டிப்பாராம். இதனைக் கேள்வியுறும் மாணவர்கள் மறுநாள் முதல் வீட்டில்
உரக்க ஓசை எழுப்பிப் படிப்பது உண்டாம். காலைக்கடன் கழிக்கச் செல்லும்பொழுது விநாயகர்
அகவல் உள்ளிட்ட நூல்களைப் படிக்குமாறு ஆசிரியர் அக்காலத்தில் வலியுறுத்துவாராம். அதனால்
ஊரெங்கும் விநாயகர் அகவல் பாராயண ஒலி கேட்குமாம். அழகான கையெழுத்து வாய்க்கப்பெற்றது
அந்த ஆசிரியரின் தண்டனையால்தான் என்று வெற்றியழகனார் நன்றியுடன் குறிப்பிட்டார். வறுமை
காரணமாகச் சென்னையில் தேங்காய்க்கடையில் பணிபுரிவதற்காகச் சென்றவர், பின்னர் மளிகைக்
கடைக்குப் பணிமாறினார். மளிகைக்கடையில் பணியில்
இருந்தபொழுது பொருள்களை மடித்துக்கொடுக்கும் தாள்களைப் படித்துப்பார்ப்பது வழக்கம்.
அப்பொழுது ஒரு தாளில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அழகின் சிரிப்பு நூலில் இடம்பெறும்,
கிளையினில்
பாம்பு தொங்க
விழுதென்று,
குரங்கு தொட்டு
“விளக்கினைத்
தொட்ட பிள்ளை
வெடுக்கெனக்
குதிப்பதைப்போல்
கிளைதொறும்
குதித்துத் தாவிக்
கீழுள்ள
விழுதை யெல்லாம்
ஒளிப்பாம்
பாய் எண்ணி எண்ணி
உச்சி
போய்த் தன்வால் பார்க்கும்"
என்ற
கவிதை வரிகளைக் கண்ணுற்று, இதுபோல் கவிதைகள் இயற்ற வேண்டும் என்று உந்துதல் ஏற்பட,
தொடர்ந்து எழுதத் தொடங்கினார். 1954 ஆம் ஆண்டில் "நல்ல பிள்ளை" என்ற தலைப்பில்
இவர் எழுதிய பாடல் பூமாலை என்ற சிறுவர் இதழில் வெளிவந்தது. அன்று தொடங்கி தொடர்ந்து
எழுதிக்கொண்டே உள்ளார். படிக்க வேண்டும் என்ற வேட்கையால் தம் மளிகைக்கடைப் பணியை விடுத்து,
அச்சுக்கூடம் ஒன்றில் பணிக்குச் சென்றார். பகல்பொழுதில் அச்சுக்கூடப் பணி நிறைவுறும்.
எனவே இரவில் படிப்பதற்கு நேரம் கிடைத்தது.
சுப்பிரமணியன் என்ற நல்லோரின் துணையால், சென்னை
சிந்தாதிரிப்பேட்டையில் இயங்கிய சென்னை வேதாந்த
சங்கத் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து புலவர் செ. கோவிந்தராசனாரிடம் தொல்காப்பியம்,
நன்னூல், யாப்பருங்கலக் காரிகை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களைக் கற்றார். இலக்கணக்ககடல்
மே. வீ. வேணுகோபால பிள்ளையிடம் இலக்கண ஐயங்களைப் போக்கிக்கொண்டார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1969 இல் புலவர் வகுப்பில்
சேர்ந்து, 1973 ஆம் ஆண்டில் புலவர் பட்டயம் பெற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களைக்
கற்ற புலவர் வெற்றியழகன் தொடர்ந்து எழுதத் தொடங்கினார். பல நூல்களுக்கு மெய்ப்புப்
பார்த்து வழங்கும் பணியும் தொடர்ந்தது. தாமே நூலாசிரியராக மலர்ந்து பல நூல்களைத் தமிழன்னைக்குப்
படையல் செய்தார். முனிச்செல்வன், குப்புராமன், விறல் எழிலன் என்ற புனைபெயரிலும் எழுதியவர்.
புலவர்
வெற்றியழகனின் தமிழ்க்கொடைகள்:
1. வெற்றியழகன் கவிதைகள் (முதல் தொகுதி)
2. வெற்றியழகன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)
3. வெண்ணிலா (குறுங்காவியம்)
4. அறிவார்ந்த கதைகள்
5. அண்ணா ஆட்சியின் அருஞ்செயல்கள்,
6. அண்ணா
புகழ்மாலை
7. அமைதிக் கடல் அண்ணா
8. காவியக் கலைஞர்
9. தமிழர் வாழ்வியல்
10. புத்திசாலிக் கதைகள்,
11. தவறில்லாமல் தமிழை எழுத
12. தரமிகு தமிழ்க் கல்வி
13. அருந்தமிழ்ச் சான்றோர் அறுபத்து மூவர்
14. உரைக்கும் பொருளும் உண்மைப் பொருளும்
15. கலைஞர் நூறு
16. யாப்பரங்கம்
17. தொல்காப்பியம் எழுத்ததிகார எளிய உரை
18. தொல்காப்பியம் சொல்லதிகாரம் எளிய உரை
19. வெற்றியழகன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி)
20. அழியாத ஓவியம்
21. வழக்கமும் விளக்கமும்
22. நல்ல தமிழ் எழுத
23. இசைத்தேன்
உள்ளிட்ட
பல நூல்களைப் புலவர் வெற்றியழகன் வழங்கியுள்ளார்.
1964 இல் நீலாவதி அம்மையாரை மணம் செய்துகொண்ட இவர்களுக்கு
மூன்று மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இரண்டு மகன்: ஒரு மகள்.
1961 இல் புகுமுகத் தேர்வு, 1971 இல் இடைநிலைத்
தேர்வு, 1973 இல் இறுதி நிலைத் தேர்வு எழுதி வெற்றி கண்டவர். 1973 இல் புலவர் பட்டம்
பெற்றவுடன் ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியராகச் செல்ல நினைத்தாலும், தாம் பணிபுரிந்த
அச்சகத்தின் பணியால் அவ்வாய்ப்பை இழந்தார். பகுதி நேரப் பணியாகத் தமிழ்ந்நாட்டுப் பாடநூல்
நிறுவனத்தில் 1973 முதல் 1976 வரை பிழை திருத்தும் பணியை மேற்கொண்டார். அன்று தொடங்கி
இன்று வரை பிழை திருத்தும் பணியையே தம் வாழ்க்கைக்குரிய பணியாக ஏற்றுச் செய்து வருகின்றார்.
இவ்வகையில் ஆயிரக்கணக்கான நூல்கள் இவர் கண்பார்வையால் உயிர்பெற்றுள்ளன.
தமிழகத்தின் மூத்த தமிழறிஞர்களின் நூல்கள் மறுபதிப்புக்
கண்டபொழுது அவை பிழையின்றி வெளிவருவதற்குத் துணைநின்றவர். அவ்வகையில் பன்மொழிப்புலவர்
கா. அப்பாத்துரையார், மொழிஞாயிறு பாவாணர், பவானந்தம் பிள்ளை பதிப்பித்த யாப்பருங்கல விருத்தி, திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்,
காந்தளகம் தொகுப்பு முருகன் பாடல்கள், தொல்காப்பியம், கலைஞரின் பவழ விழா மலர், கலைஞரின்
கவிதை மழை, கலைஞரின் சிறுகதைக் களஞ்சியம், நா. கதிரைவேற் பிள்ளையின் தமிழகராதி, அபிதான
சிந்தாமணி, புலவர் குழந்தையின் இராவண காவியம், பாலகிருட்டின பிள்ளை பதிப்பித்த திருவருட்பா,
கா.சு. பிள்ளை பதிப்பித்த தனிப்பாடல் திரட்டு, பாரதிதாசன் கவிதைகள், உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாட்டு மலர், உலகத் தமிழச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கக் கட்டுரைகள் (எட்டுத்
தொகுதி), உள்ளிட்ட நூல்களை மெய்ப்புப் பார்த்து வழங்கிய பெருமைக்குரியவர்.
தமிழ் வளர்ச்சித்துறையில் பதிப்பாசிரியராக இருந்து
அறநெறிக் கருவூலம், பொன்மொழிக் களஞ்சியம், தமிழைப் பற்றிய வெளிநாட்டறிஞர் பொன்மொழிகள்
ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டரசின் பதினொன்றாம் வகுப்புப் பாட நூலில்
வரதட்சணை குறித்து இவர் எழுதிய பாடலும், பன்னிரண்டாம் வகுப்புப் பாட நூலில் இவர் இயற்றிய
குருதிக்கொடை என்ற தலைப்பில் அமைந்த பாடலும் பாடப்பகுதிகளாக இருந்துள்ளன.
தமிழகத்தில் நடைபெற்ற கவியரங்கம், கருத்தரங்கம்,
பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கட்டுரைப் போட்டிகள், கவிதைப் போட்டிகள், திருக்குறள்
போட்டிகள் ஆகியவற்றுக்கு நடுவராக இருந்துள்ளார்.
சிறப்பு
வகுப்புகள்:
யாப்பரங்கம் என்ற தலைப்பில் யாப்பிலக்கண வகுப்பு,
தலைநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் தொல்காப்பிய வகுப்பு, புறநானூற்றுப் பொழிவு, திருவள்ளுவர்
தமிழ் மன்றம் சார்பில் மூன்றாவது முறையாக நன்னூல் வகுப்பு, பெரியார் வாசகர் வட்டத்தின்
சார்பில் இராவண காவியப் பொழிவு, நங்கைநல்லூர் திருக்குறள் பேரவையின் சார்பில் நல்ல
தமிழறிவோம் வகுப்பு, திருவள்ளூரில் தொல்காப்பிய வகுப்பு எனப் பல்வேறு வகுப்புகளை நடத்தித்
தமிழ் இலக்கணம், இலக்கியம் பரப்பும் பணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்.
தமிழ்நாட்டரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, பன்னாட்டுத்
தமிழுறவு மன்றம் சார்பில் ஓங்கு தமிழ்ப் பாவலர் விருது, தலைநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில்
மொழிப்போர் மறவர் விருது, சென்னைத் தமிழ்ச் சுரங்கம் சார்பில் தொல்காப்பியர் விருது,
அண்ணா நகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் தொல்காப்பியர் சீர் பரவுவார் விருது உள்ளிட்ட
பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
கொள்கையும்
கோட்பாடும்:
திருக்குறள் கற்ற நாள் முதலாகப் புலால் மறுத்தவர்.
சீர்திருத்தச் சிந்தனையுடைவர். குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயரிடும் நோக்கினர். சீர்திருத்தத்
திருமணம் செய்துகொண்டவர். தம் இறப்புக்குப்
பிறகு உடலை மருத்துவ ஆய்வுக்கு வழங்குமாறு விருப்பம் தெரிவித்தவர். எங்கும் தமிழ்,
எதிலும் தமிழ் என்னும் விருப்ப உணர்வினர். மொழி, இன, நாட்டுப்பற்றுடன் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிவரும்
செம்மல் இவர்.
குறிப்பு:
என் கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாள்வோர், நூல் வரைவோர், களஞ்சியம் தொகுப்போர் எடுத்த
இடம் சுட்டுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக