நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 13 அக்டோபர், 2015

ஹாங்காங்கு தமிழ்ஓசை வானொலி உரை பதிவான வரலாறு(எழுத மறந்த கதை)




  இணையம் வழியாகப் பல தமிழன்பர்கள் அவ்வப்பொழுது புதிது புதிதாக அறிமுகமாவது உண்டு. சிலரின் தொடர்பு வளர்பிறையாக வளர்ந்து ஒளிவிடும். சிலரின் தொடர்பு தேய்பிறையாகத் தேய்ந்து நினைவிலிருந்து மறைந்து போவதும் உண்டு. ஏதேனும் உதவி வேண்டிச் சிலர் தொடர்புகொள்வார்கள். உதவி பெற்ற கையுடன் மறந்துவிடுவார்கள். மறைந்தும் விடுவார்கள். நம் பணிகளை அறிந்து சிலர் உதவ முன்வருவார்கள். சிலர் இணைந்து பணிபுரிய அழைப்பார்கள். இவ்வாறு சற்றொப்ப பத்தாண்டுகளாகப் பலரைக் காணமுடிந்துள்ளது.

  சில மாதங்களுக்கு முன்பு தைவான் பாலாசி வேலு அவர்கள் வலையாபதி என்ற இணைய இதழைப் பார்வைக்கு அனுப்பியிருந்தார். அயலகத்திலிருந்து தமிழ்ப்பணிபுரியும் அவருடன் அமைந்த நட்பு உயர்வானது. அவர் ஆய்வு மாணவர். படிப்புக்கு இடையே நேரம் ஒதுக்கித் தமிழைப் போற்றுவது அறிந்து மகிழ்ந்தேன். அவ்வப்பொழுது தொலைபேசியிலும், இணையம் வழியும் உரையாடுவோம்.

  ப. சுந்தரேசனார் ஆவணப்படப் பணிகள், உலகத் தொல்காப்பிய மன்றப் பணிகள் குறித்து உரையாடுவோம். தைவான், ஹாங்காங்கில் நடைபெறும் தமிழ் முயற்சிகள் பற்றி எனக்கு அவர் செய்திகளைக் கூறி மகிழ்வார்.

 ஒருமுறை உரையாடிக்கொண்டிருந்தபொழுது ஹாங்காங்கு வானொலியில் தமிழ் ஒலிபரப்புக்கு நேரம் கிடைத்துள்ளதாகவும், கிழமைதோறும் ஒரு மணி நேரம் தமிழ் ஒலிபரப்பு இருக்கும் எனவும் குறிப்பிட்டார். அப்பொழுது இந்த முயற்சியில் ஈடுபட்டு உழைக்கும் நண்பர் இராம் பற்றி கூறினார். ஒருநாள் இராம் அவர்கள் தொலைபேசியில் அழைத்தார். தம் நிகழ்ச்சித் தயாரிப்பு குறித்தும், அதில் ஒரு மணிநேரம் தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் குறித்த நேர்காணலில் பங்கேற்க வேண்டும் எனவும் கூறினார். நண்பர் பாலா அவர்களின் அறிமுகத்தால் இந்த வாய்ப்பை இராம் எனக்கு வழங்கினார்.

 முனைவர் ஔவை நடராசனார், முனைவர் பர்வீன் சுல்தானா உள்ளிட்டவர்களின் பேச்சுகள் முதலில் ஒலிபரப்பான விவரம் சொல்லி, அதற்கு நிகரான தரத்தில் நேர்காணல் இருக்க வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பை எனக்குச் சொன்னார்கள்.

 இராம் அவர்கள் குறிப்பிட்ட நாளில் உரிய நேரத்தில் என்னை அவர்கள் செல்பேசியில் அழைப்பதாகவும், அவர்களின் வினாக்களுக்கு விடைதருதல் வேண்டும் என்றும் முடிவானது. என் வீட்டில் இருந்து பேசினால் செல்பேசி சரியாக இயங்காது. நடுத்தெருவில் நின்று கத்தினால்தான் மறுமுனைக்குச் செல்லும். செல்பேசிக் கோபுரங்கள் சரியாக இல்லாமல் என் பேச்சுத் தடைப்படும் என்று உணர்ந்து நான் பணி செய்த பழைய நிறுவனத்தின் வளாகத்திலிருந்து விடைதரத் திட்டமிட்டேன். காவலரிடம் சொல்லி ஒருமணிநேரம் என் பேச்சின் இடையே தடை வராமல் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டேன். ஆர்வமுடன் இராம் அவர்களின் அழைப்புக்குக் காத்திருந்தேன். உரிய நேரத்தில் வானொலிப் பதிவுக்காக அழைத்தார்கள்.

 தீபா சுவாமிநாதன் அவர்களும் தேவி சதீஷ் அவர்களும் உரையாடி என்னிடம் செய்திகளைப் பெற்றுக்கொண்டிருந்தனர். கோபுரச் சிக்கலால் என் குரல் ஹாங்காங்கு ஒலிப்பதிவுக்கூடத்தில் துல்லியமாகப் பதிவாகதத் தன்மையைக் குறிப்பிட்டார்கள். தரைவழி இணைப்பிலிருந்து உரையாட இயலுமா என்றார்கள். மீண்டும் “வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக” வீட்டுக்குத் திரும்பினேன்.

 சற்றுமுன் ஆர்வமாக வீட்டிலிருந்து புறப்பட்ட நான் சற்றுநேரத்தில் பரபரப்புடன் வீடு திரும்பியதைக் கண்டு மனைவியும், மக்களும் ஏதோ நடந்துள்ளது என்று கவனித்து நிலைமையைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

 ஹாங்காங்கு ஒலிப்பதிவுக்கூடத்திலிருந்து அழைப்புமணி மீண்டும் ஒலித்தபொழுது நம் வீட்டை ஒட்டி ஊர்நாய்கள் எனக்குப் போட்டியாக ஆர்ப்பாட்டம் செய்வதுபோல் பெருங்குரல் எழுப்பிக் குரைத்தன. அவற்றை விரட்டிவிட்டு, என் மனைவியைக் காவலுக்கு வைத்து வீட்டில் நுழைந்து கதவைத் தாழிட்டேன். நான் வெளியில் வரும்வரை கதவு திறக்க வேண்டாம் என்று ஓர் அன்புக்கட்டளை.

 நேர்காணல் மீண்டும் தொடங்கியது. நாய்களின் குரைத்தல் ஒலி சற்று அடங்கியிருந்தது. நான் மெதுவாகப் பேசுவதும், பாடுவதுமாக இருந்தேன். பிள்ளைகள் சுவரோரம் பதுங்கி நான் பாடுவதைக் கேட்டார்கள். அக்கம் பக்கம் குடியிருந்தோர் இடையூறாக நினைத்தல் கூடாது என்று சற்று அடங்கிப் பாடவேண்டியதாயிற்று.

 நாட்டுப்புறப் பாடல்கள் என்பவை திறந்த வெளியில் மகிழ்ச்சியுடன் அமைதியாகப் பாடவேண்டிய பாடல்களாகும். ஆனால் எனக்குப் பல தடைகள் இருந்து மனத்தடையை உண்டாக்கியது. இருந்தாலும் ஒரு மணிநேரம் என் பேச்சு பதிவு செய்யப்பட்டது.

 நெருக்கடிகளில் நடந்த பதிவு எவ்வாறு ஒலிபரப்பாகுமோ என்ற ஒரு தயக்கம் எனக்கு இருந்தது. பல நாட்டு நண்பர்கள் கேட்கும் பாடல் சிறப்பாக இருந்தால் மீண்டும் வாய்ப்புகள் கிடைக்கும் எனவும், இல்லையேல் குழுக்கூட்டம் நடத்தும் நண்பர்கள் கூடிவிவாதிக்க வழிசெய்துவிடுமே என்ற ஒரு கவலை இருந்தது.

 ஒலிபரப்பு நாள்(08.08.2015) தெரிந்தது. இரவு 9 மணி முதல் 10 மணிவரை என் உரை ஒலிபரப்பாகும் என்று தெரிந்தது. அன்று நான் சென்னையில் இருக்க வேண்டிய நிலை. எனவே சென்னைப் பணிகளை முடித்துக்கொண்டு நிகழ்ச்சி கேட்க இரவு 9 மணிக்குப் புதுவை திரும்ப நினைத்திருந்தேன். ஆறு மணிக்குதான் சென்னை திருவான்மியூரில் பேருந்தேறினேன். வண்டி இந்த வேகத்தில் சென்றால் ஒன்பதரை மணியாகும். இடையில் உணவுக்கு மரக்காணத்தில் நின்றால் பத்தாகிவிடும் என்று நினைத்தேன். என் கடிகாரமுள் வேகமாக ஓடுவதாகவும், அமர்ந்து பயணம் செய்த பேருந்து நகர்வதாகவும் உணர்ந்தேன். 

 பத்துமணிக்கு மரக்காணத்தில் வண்டியை நிறுத்தி ஓட்டுநர் உண்டுமுடித்து, ஒரு பையில் தேவையானவற்றைக் கட்டி வாங்கிக்கொண்டு வந்தார். வண்டியை அவர் செலுத்திப் புதுவை வந்துபொழுது பத்தே முக்கால் மணி. இல்லம் செல்லும்பொழுது மணி பதினொன்றாகியிருந்தது. ஹாங்காங்கு வானொலியின் தமிழோசையில் என் குரல் காற்றில் கலந்ததையும், அதனை உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் கேட்டுள்ளனர் என்பதையும் காலையில் வந்திருந்த மின்னஞ்சல்கள் உணர்த்தின. நண்பர் திரு. இராம் அவர்கள் மறுநாள் அனுப்பிய இணைப்பில் என் பதிவினைக் கேட்டு ஆறுதல் பெற்றேன். தமிழ் ஓசை நண்பர்களுக்கு என்றும் நன்றியன்.



சனி, 10 அக்டோபர், 2015

நெதர்லாந்து நினைவுகள்….(1)


ஈரோமாசுடு ஒற்றைக் கோபுரம்

இரவு பதினொரு மணிக்குப் புறப்படுவதுபோல் பாரிசில் உள்ள பன்னாட்டுப் பேருந்து நிலையத்தில் முன்பதிவு செய்திருந்தேன். அரை மணி நேரத்திற்கு முன்பாகவே பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். ஈரோலைன்சு (eurolines) நிறுவனப் பேருந்தில் நெதர்லாந்துக்குச் செல்லும் பயணிகள் ஆர்வமுடன் ஏறி அமர்ந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து புறப்பட்டது, விமானம் செல்வதுபோல் ஆடாமலும் அசையாமலும் பேருந்து மெதுவாக தார்ச்சாலையில் ஊர்ந்து முன்னேறியது. முன் பின் அறிமுகம் இல்லாத ஊருக்குச் செல்கின்றோமே என்ற நினைவுகளுடன் மெதுவாக வரலாற்றை நினைவுகூர்ந்தேன்.

நெதர்லாந்துக்காரர்கள் நம் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி உள்ளிட்ட ஊர்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கைப்பற்றி ஆட்சிபுரிந்தவர்கள். பொருள்களை விற்கவும் வாங்கவுமாக நம் நாட்டைப் பயன்படுத்தியவர்கள். அவர்கள் தமிழகத்தின் பல கலைப்பொருள்கள், ஆவணங்கள், சிலைகள், நூல்களைக் கொண்டு சென்றவர்கள் என்பதை நினைத்துப் பார்த்தேன். புகழ்பெற்ற இலெய்டன் செப்பேடுகள் பற்றி வரலாற்றில் படித்தமை நினைவுக்கு வந்தன. நம் நாட்டுச் சிலைகள், வலம்புரிச் சங்குகள் உள்ளிட்ட அரிய பொருள்கள் நெதர்லாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ள செய்திகள் நினைவுக்கு வந்தன. ஓரிரு மணி நேரத்தில் கண்ணயர்ந்தேன்.

இடையில் விழித்துப் பார்த்தபொழுது நெதர்லாந்து நாட்டில் பேருந்து முன்னேறிச் சென்றுகொண்டுள்ளமை தெரிந்தது. இடையில் சிறு நகரங்களில் ஓரிருவர் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தனர். பேருந்து ஓட்டுநர் முதியவராக இருந்தார். அனைவரிடமும் உற்ற நண்பனைப் போல் மகிழ்ச்சியுடன் உரையாடியபடி இருந்தார். இடையில் வேறொரு இளைஞர் மாற்று ஓட்டுநராக வந்து அமர்ந்தார். அவரிடம் நான் இறங்கவேண்டிய இடத்தை நினைவூட்டி வந்து மீண்டும் அமர்ந்தேன். தூக்கம் இல்லை.

வைகறை 5.15 மணிக்கு  நெதர்லாந்து நாட்டின் தென் காக் (Den Haag) பேருந்து நிலையத்தில் வண்டி நின்றது. ஓரிருவர் என்னுடன் இறங்கினர். ஆள் அரவம் இல்லை. எங்கும் அமைதி நிலவியது.  காலை 6.20 மணிக்குதான் என்னை அழைத்துச் செல்ல பொறியாளர் கோபி வருவார். அதுவரை அங்கு நிற்பதைவிட ஆள் அரவம் உள்ள இடத்திற்குச் செல்லலாம் என நினைத்து, கீழ்த்தளத்தில் இருந்த தொடர்வண்டி நிலையம் சென்றேன். எங்கும் தானியங்கிப் படிக்கட்டுகள் அழைத்துச் செல்கின்றன. இந்த இடத்தில் குளிர் இல்லை. காவல் துறையினர் இங்கும் அங்கும் நடந்தபடி இருந்தனர். வெளியூருக்குச் செல்லும் பயணிகள் முதல் தொடர்வண்டியைப் பிடிக்க விரைந்து வந்துகொண்டிருந்தனர். தொடர்வண்டிகள் சில வருவதும் போவதுமாக இருந்தன. அருகில் இருந்த வீசுபலகையில் அமர்ந்தேன். குளிர் சில்லிட்டது. கையுறை உள்ளிட்டவற்றை அணிந்து உடலைக் காத்தேன். நேரம் மெதுவாக நகர்ந்தது.


பொறியாளர் கோபி அவர்கள் 6.20 மணிக்கு வந்து சேர்ந்தார். அவரின் இல்லத்திலிருந்து அப்பொழுதுதான் முதல் வண்டி வரும் நேரம் என்று குறிப்பிட்டார். இருவரும் உரையாடியபடி பத்து நிமையப் பயணத்தில் கோபி இல்லம் சென்றோம். தெருவில் எங்கும் அமைதி குடிகொண்டிருந்தது. முறைப்படுத்தப்பட்ட சாலைகள் கண்டு வியந்தேன். கோபியின் துணைவியார் வதனா அவர்கள் வரவேற்றார். ஒருமணிநேரம் ஓய்வெடுக்கும்படி சொன்னார்கள். சற்றுக் கண்ணயர்ந்தேன்.

8.30 மணியளவில் எழுந்து குளித்து முடித்தேன். வெண்பொங்கல் விருப்பமாக உண்டேன். நானும் கோபியும் கறிகாய் வாங்குவதற்குச் சந்தைக்குச் சென்றோம். முதலில் வீட்டுக்கு வேண்டிய மளிகைப் பொருள்களை வாங்கினோம். ஒரு பஞ்சாபியர் கடை. பலவாண்டுகளாக இங்குக் கடை நடத்துவதாக கடையின் உரிமையாளரான ஒரு பெண்மணி தெரிவித்தார். இந்தியாவில் உள்ள அனைத்துப் பொருள்களும் அங்குக் கிடைக்கின்றன. கோவைக்காய் முதல்  கொத்துமல்லி வரை அனைத்தையும் வாங்கிக்கொண்டு அடுத்து, அருகில் இருந்த சந்தைக்குப் புறப்பட்டோம்.





நம் ஊர்போல் பழங்களையும், மீன்களையும் கூவிக் கூவி விற்கின்றனர். மீன்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. பல்வகை மீன்கள், நண்டுகள், கருவாடுகள் எங்கும் காட்சிக்கு இருந்தன. எந்த இடத்திலும் ஈ, கொசு  நடமாட்டம் இல்லை. மிகத் தூய்மையாகப் பதப்படுத்தப்பட்டுப் பொருள்கள் விற்கப்படுகின்றன. மீன் வாங்கிக்கொண்டோம். பழங்களும், வேறு சில பொருள்களும் வாங்கிக்கொண்டோம். சீனாவிலிருந்து வந்த இஞ்சியும், இசுபெயினிலிருந்து வந்த இஞ்சியும் பெரிய வடிவில் தூய்மையாகப் பளிச்சிட்டுக் காணப்பட்டன. உருளை, தக்காளி யாவும் வாட்டம் இல்லாமல் அப்படியே எடுத்து உண்ணத் தூண்டும் நிலையில் இருந்தன. சந்தையை முழுமையாக ஒரு வட்டம் அடித்துப் பார்த்தோம். இடையில் தென் காக்கு நகரத்தையும் பார்வையிட்டோம். மேலும் நெதர்லாந்து நாட்டின் பாராளுமன்றத்தையும் பார்வையிட்டோம். ஒரு பூங்காவில் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. 


அண்மையில் அவர் பிறந்தநாள் என்பதால் அன்பர்கள் மலர்தூவி மாலையிட்டிருந்தனர். அனைத்தையும் பார்வையிட்டபடி இல்லம் திரும்பும்பொழுது பகல் இரண்டுமணி இருக்கும்.


 பகல் உணவு முடித்தோம். உலகக் குற்றவியல் நீதி மன்றத்தைப் பார்க்கும் வாய்ப்பும் அமைந்தது. உலகின் புகழ்பெற்ற பல வழக்குகள் இங்கு நடைபெற்றுள்ளன என்று நண்பர் கோபி விவரித்தபடி வந்தார். அங்கிருந்து புறப்பட்டு, இலெய்டன் நோக்கிச் சென்றோம்.


நெதர்லாந்தின் முதன்மை நகரங்களுள் இலெய்டன் முதன்மையான ஒன்றாகும். இங்கு அருங்காட்சியகங்கள் உள்ளன. மக்களுக்கு உரிய பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. தொடர்வண்டி, பேருந்து என அனைத்து வசதிகளும் உண்டு. பல்கலைக்கழகமும் உண்டு. நாங்கள் சென்ற அந்த நாள் உள்ளூர் விடுமுறை நாளாம். அன்று இலெய்டன் மக்கள் அனைவரும் தங்களின் தேசியத் திருநாளை ஒன்றுகூடி, கொண்டாடிக் கொண்டிருந்தனர். குடை இராட்டினம், கடைத்தெருக்கள் என ஊரே அமர்க்களப்பட்டது. மக்கள் உண்பதும், குடிப்பதுமாக இரு மருங்கும் இருந்த கடைகளில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அனைவரும் குடும்பம் குடும்பமாக நகரை வலம் வந்தனர். அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்ததால் நாங்களும் திருவிழாவைக் காண வந்தவர்கள் போல் ஒரு நெடுந்தூர நடைபோட்டு மீண்டும் தொடர்வண்டி நிலையம் வந்தோம்.





அங்கிருந்து ரோட்டர்டாம் என்ற துறைமுக நகரம் சென்றோம். கண்கொள்ளாக் காட்சியாக அந்த ஊர் இருந்தது.

அங்கு இருந்த ஈரோமாசுடு (Euromast) என்ற  புகழ்பெற்ற ஒற்றைக் கோபுரத்தைப் பார்வையிடச் சொன்றோம். 185 மீட்டர் உயரம் உடைய அந்த ஒற்றைக் கோபுர நெடுமுடியிலிருந்து பார்வையிட்டால் ரோட்டர்டாம் நகரத்தின் எங்கும் நிறைந்த அழகுக்காட்சியின் ஆட்சியைக் கண்டு மகிழமுடியும். இதற்குத் தனியான நுழைவுச்சீட்டினைப் பெற்று மாடிப் படியேறியும், தூக்கியில் சென்றும் பார்வையிடவேண்டும். இதனைப் பார்வையிட மக்கள் தொகை தொகையாக வந்தவண்ணம் உள்ளனர். கோபுர முடி வரை ஏறி நின்று அரைமணி நேரத்திற்கும் மேலாக இயற்கைக் காட்சிகளைப் பார்த்தோம். அருகில் உள்ள நீர்நிலைகளில் கப்பல்களும், படகுகளும் போவதும் வருவதுமாக இருந்தன. பிறகு ரோட்டர்டாம் பாலம் பார்த்தபடி பலநிலைகளில் படம் எடுத்துக்கொண்டோம். ரோட்டார்டாமிலும் கப்பல், படகு போக்குவரவு சிறப்பாக உள்ளது. விண்ணைத்தொடும் கோபுரங்கள் நெதர்லாந்து நாட்டின் வளமை காட்டி நிற்கின்றன.

ஈரோமாசுடு கோபுரத்தில் பொறியாளர் கோபி அவர்களுடன்

ரோட்டர்டாம் பாலத்தில் மு.இளங்கோவன்

நடைபாதை, மிதிவண்டிப் பாதை, படகுப்பாதை, தொடர்வண்டிப் பாதை, பேருந்துப்பாதை என ஊரில் அனைத்து வகையிலும் பயணம் செய்ய வசதி உள்ளது. பயண அட்டை ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு எந்த வண்டியிலும் நாம் பயணம் செய்துகொள்ளலாம். போகும் தூரத்திற்கு உரிய காசைக் கணினி கழித்துக்கொள்ளும். விடுமுறை நாளிலும், போக்குவரவு நெரிசல் இல்லாத நேரங்களிலும் பயணம் செய்தால் 40 விழுக்காடு சலுகை விலையில் பயணம் செய்யவும் இயலும். எங்கும் கணினிமயப்படுத்தப்பட்ட நாடாக நெதர்லாந்து விளங்குகின்றது. நாட்டையும் மக்களையும் சிந்திக்கும் ஆட்சியாளர்களால் இந்த நாடு ஆளப்படுவதால் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது. நம் ஊரில் ஒரு தானியங்கி வங்கிச் சேவையைக் கூட ஒழுங்காகப் பயன்படுத்தமுடியாத நிலையை நினைத்து வருந்தினேன்.


 அவையல்கிளவி முழக்கும் நம் நாட்டுப் பேருந்து ஓட்டுநர்களைப் போன்ற மாந்தர்களையோ, சீறிப் பாய்ந்து செல்லும் சென்னை நகர உந்துவண்டியோட்டிகளையோ, சாலையில் தவறி நடந்தவர்களைச் சுடுசொல்லால் சுட்டெரிக்கும் இழிமகன்களையோ நெதர்லாந்தில் யாண்டும் கண்டிலேன். அனைவர் முகத்திலும் அன்பொழுகும் பார்வை.  அனைவருக்கும் மதிப்பை வழங்கி மகிழும் மேன்மைக் குணம். உதவுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால் பரந்த மனத்துடன் உதவும் இயல்பு ஒவ்வொருவரிடமும் குடிகொண்டுள்ளன.

நெதர்லாந்து குறித்த அனைத்து விவரங்களையும் பொறியாளர் கோபி அவர்கள் தெரிந்து வைத்திருந்ததால் அவருடன் உரையாடியபடிச் செல்வது இனிய அனுபவமாக இருந்தது. ரோட்டர்டாம் நகரின் பகல் காட்சியைக் கண்ட கண்கள் இரவுக்காட்சியையும் கண்டு மகிழ்ந்தன. அங்கிருந்து தொடர்வண்டியில் இரவு 9 மணியளவில் கோபி அவர்களின் இல்லம் திரும்பினோம்.
நெடுந்தொலைவு நடந்த காரணத்தால் கால்கள் அயர்வுற்று இருந்தன. உறக்கம் கண்களைத் தழுவின. இன்று பார்க்க நினைத்த இலெய்டன் அருங்காட்சியகம் நாளையாவது பார்க்க  வாய்ப்பு அமையுமா? என்று எண்ணியபடி கண்ணயர்ந்தேன்.