நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 4 மார்ச், 2015

வ. சுப. மாணிக்கனாரின் இருபத்து ஆறாம் ஆண்டு இளைஞர் இலக்கிய விழா



மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கனாரின் இருபத்து ஆறாம் ஆண்டு இளைஞர் இலக்கிய விழா நடைபெற உள்ளது. தமிழார்வலர்களை விழாக்குழுவினர் அழைத்து மகிழ்கின்றனர்.

நாள்: 08.03. 2015 ஞாயிற்றுக்கிழமை, நேரம்: மாலை 6- 00 மணி

இடம்: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை- 1

மதுரையில் அமைந்துள்ள கங்கை காவேரி வணிக நிறுவனத்தின் உரிமையாளர் தமிழ்ச்செம்மல் திரு. இராம. விசுவநாதனார் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நெறிநூல்களை மாணவர்கள் உள்ளத்தில் பதிய வைக்க அவர்தம் ஆசான் மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிகனார் பெயரில் போட்டியொன்று நடத்திப் பெருந்தொகையைப் பரிசிலாக மாணவச் செல்வங்களுக்கு வழங்கி வருகின்றார். அந்த வகையில் இந்த ஆண்டும் விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

வேளாண் சுப. சொக்கலிங்கம் ஐயா தலைமையில் நடைபெறும் விழாவில் சாத்திரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இரா. சீனிவாசன் அவர்கள் மதுரையும் தமிழும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். புலவர் சுப.இராமச்சந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்க உள்ளார்.

செல்வி இ. செல்வமீனா மூதுரை பற்றியும், செல்வி ம. லவந்திகா வெற்றி வேற்கை பற்றியும், செல்வி ச. மோகனப்பிரியா நல்வழி பற்றியும் செல்வி சு. கு. யோகேசுவரி நன்னெறி பற்றியும் சிறப்புரையாற்ற உள்ளனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசில்களை நடராசபுரம் திரு. இராம. சுப்பிரமணியன் அவர்கள் வழங்க உள்ளார்.

குறள்வேந்தர் மீ. கந்தசாமிப் புலவர் நினைவு 21 ஆம் ஆண்டு ஏழிளந்தமிழ், திருக்குறள் எழுதும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.


முன்மாதிரியாக இருந்து தமிழகத்தில் தமிழ் வளர்க்கும் இராம. விசுவநாதன் ஐயாவைப் போன்ற புரவலர்கள்தான் இற்றைத் தமிழகத்திற்குத் தேவை. வாழ்க மதுரை இராம. விசுவநாதனார்!

திங்கள், 2 மார்ச், 2015

முரசு அஞ்சலின் முப்பதாம் ஆண்டு நிறைவு விழா




முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் என்ற மூன்று பெயர்களும் இணையத்துறையில் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர்கள். இதில் முரசு அஞ்சல் தமிழ்த் தட்டச்சுத்துறையில் பரவலாக அனைவருக்கும் உதவும் மென்பொருளாக உள்ளது. செல்லினம் கையடக்கக் கருவிகளில் தட்டச்சிட உதவுவோருக்கு மிகப்பெரும் பயன் நல்கும் மென்பொருள். செல்லியல் என்பது செய்தி ஏடாக இணையத்தில் கோலோச்சுகின்றது.

இம்மூன்றையும் தமிழுலகுக்கு வழங்கியவர் திரு. முத்து நெடுமாறன் ஆவார். மலேசியாவின் புகழ்பெற்ற பாவலரான முனைவர் முரசு.நெடுமாறன் அவர்களின் அருமைப் புதல்வர்தான் நம் முத்து அவர்கள். இவர்தம் இயற்பெயர் முத்தெழிலன். திரு. முத்து அவர்கள் தந்தையார் வழியில் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் நிலையில் தொடர்ந்து சிந்திப்பவர். கணினியிலும், கையடக்கக் கருவிகளிலும் தமிழை உள்ளிட்டுத் தமிழர்கள் அனைவரும் தடையின்றித் தமிழைப் பயன்படுத்த வழிகண்டவர். உலக அளவில் பல முன்னணிக் கணினி நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிபவர். பல நாட்டு அரசுகளின் தொழில்நுட்பம் சார்ந்த அறிவுரைஞர் குழுவில் இடம்பெற்றுள்ளவர்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நான் பணிசெய்தபொழுது திரு. முத்து அவர்களை 1997 இல் முதன் முதல் சந்தித்தேன். அப்பொழுது சென்னைப் பல்கலைக்கழகத்தில் முத்து அவர்கள் பேசியபொழுது முனைவர் பொற்கோ உள்ளிட்ட யாவரும் கேட்டு மகிழ்ந்தோம்.

ஒரு மழைநேரத்து மாலைப்பொழுதில் சென்னை அடையாற்றில் அவரை ஒரு புகைப்பட நிலையம் அழைத்துச் சென்று படம் எடுத்தேன். அதன்பிறகு தினமணிக்கதிரில் முத்து அவர்களின் பணிகளை அறிமுகம் செய்து ஒரு கட்டுரை எழுதிய நினைவு வந்து அலைமோதுகின்றது. பின்னர் மலேசியா சென்றபொழுது அவர்களின் இல்லம் சென்று கண்டு உரையாடினேன்.

சிலவாண்டுகளுக்கு முன் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அவரின் உரையமைய ஏற்பாடுகள் நடந்தபொழுது அருகிருந்து கண்டு மகிழ்ந்தவன். முத்து அவர்களின் தலைமையில் அந்தப் பாடத்திட்டக் குழுவில் இணைந்து பணிபுரிந்தமை வாழ்வில் நினைக்கத் தகுந்த பொழுதுகள். கையடக்கக் கருவிகளில் தமிழை உள்ளிட அவர் மேற்கொண்ட முயற்சிகளையும், அவர்தம் உரையையும் கேட்டு அரங்கில் இருந்த அனைவரும் பாராட்டி மகிழ்ந்தோம்.


கடந்த பதினெட்டு ஆண்டுகளாக அவர்தம் பணிகளை அருகிருந்து கண்டு வியந்துள்ளேன். நண்பர்கள் உரைக்கக் கேட்டும் பூரித்துள்ளேன். முத்து அவர்களின் பணிகள் இத்தமிழுலகு உள்ளவரை போற்றப்படும். அவரும் அவர்தம் நிறுவனமும் பொன்விழா கண்டு புவிபோற்ற வளர வாழ்த்துகின்றேன்!