நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 10 மே, 2009

சிறந்த பதிவருக்கான விருது பெற்றேன்...


எழுத்தாளர் முருகேசப்பாண்டியன் அவர்களிடம் விருதுபெறல்

சென்னை தமிழ் ஸ்டுடியோ.காம் குறும்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்பு. ஒவ்வொரு மாதமும் குறும்படம் எடுக்கும் கலைஞர்கள் ஒன்றுகூடி சிறந்த குறும்படங்களை வெளியிட்டும் விவாதித்தும் குறும்படங்கள் தரமானவையாக வெளிவர இந்த அமைப்பினர் பாடுபடுகின்றனர்.

இந்த அமைப்பு சிறந்த வலைப்பதிவர்களைத் தேர்தெடுத்து விருது வழங்கி வருவதையும் தம் பணியாகச் செய்து வருகின்றது.அந்த வகையில் என் வலைப்பதிவுச் செய்திகளை உற்று நோக்கிய இந்த அமைப்பு என் பதிவுச்செய்திகள் அடிப்படையிலும், தொடர்ந்த என் தமிழ் இணையப் பணியை ஊக்குவிக்கும் வகையிலும் நேற்று(09.05.2009) சென்னை இக்சா மையத்தில் நடைபெற்ற விழாவில் சிறந்த வலைப்பதிவருக்கான விருதை வழங்கியது.

எழுத்தாளர் ந.முருகேசப்பாண்டியன் அவர்கள் விருது வழங்கினார். கலைத்துறை சார்ந்த பல்வேறு இயக்குநர்கள் நடிகர்கள் கலந்துகொண்டனர். என் நண்பர்கள் நடிகர் தமிழியலன், இயக்குநர் அ.சந்திரசேகரன், அருண் உள்ளிட்டவர்கள் வந்திருந்தமை மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்


அரங்கில் தமிழ் ஸ்டுடியோ


விருது வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தும் பதிவுகள் குறித்தும் மு.இ.உரை


மு.இ, முருகேசப்பாண்டியன், அருண், தமிழியலன், அ.சந்திரசேகர்

வெள்ளி, 8 மே, 2009

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பதாம் கருத்தரங்கம் 2009 மேத் திங்கள் 23,24 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. இந்தியா முழுவதிலிருந்தும் பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள் வருவதுடன் மலேசியா,சிங்கப்பூர் சார்ந்த பேராசிரியர்களும் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர்.

490 ஆய்வுக்கட்டுரைகள் படிக்கப்பெற உள்ளன.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.கற்பக குமாரவேல்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சபாபதி மோகன்,பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ஔவை.நடராசனார் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.முன்பே திட்டமிடப்பட்டு,பதிவு செய்யப்பெற்றக் கருத்தரங்கு ஆதலின் இது குறித்த விளக்கம் பெற விரும்புவோர் பேராசிரியர் மு.மணிவேல் அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.
அவர்தம் செல்பேசி எண் : + 98655 34622