நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

நாமக்கல்-கடலூர் இணையப் பயிலரங்குகள்

கடலூர் மாவட்ட மைய நூலகம் 
 
 கடந்த மார்ச்சு மாதம் 16.03.2009 வைகறை நான்கு மணியிருக்கும். கரூர் வள்ளுவர் விடுதியல் நல்ல தூக்கத்திலிருந்தேன். செல்பேசி மணி அடித்தது. மறுமுனையில் இன்னும் விழிக்கவில்லையா?. நான் பேராசிரியர் இராசசேகர தங்கமணி பேசுகிறேன் என்று பேராசிரியர் பேசினார். நான் நள்ளிரவு இரண்டு மணிக்குதான் படுத்தேன். இன்னும் ஒருமணி நேரத்தில் விழிக்கிறேன் என்று சொல்லி சிறிது நேரம் அயர்ந்து கிடந்தேன். 
 
 ஐந்து மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்து வரவேற்பறைக்கு வரும்பொழுது ஆறு மணி. எனக்காகப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி உந்து வண்டியில் காத்திருந்தார். அவர் வீட்டுக்குச் சென்று அவர்தம் வளமார்ந்த வீடு கண்டு மகிழ்ந்தேன். கரூவூரில் மனை வாங்கிப் புதியதாக வீடு கட்டித் தம் பணி சிறக்க வாழ்ந்து வருகிறார். இவர் தம் மக்கள் இருவர் அமெரிக்காவில் உள்ளனர். பேராசிரியர் இராசசேகர தங்கமணி எழுதிய பதிப்பித்த நூல்களை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினார். அவர் பெற்ற விருது, பட்டங்கள், பரிசில்களை எடுத்துக்காட்டி மகிழ்ந்தார். முற்றாக அனைத்தையும் பார்வையிட ஒருநாள் ஆகும். ஒரு மணி நேரத்தில் அவற்றை இயன்றவரை பார்த்தேன். அதற்குள் அவர் கணிப்பொறியைத் தமிழ் மென்பொருள் இறக்கித் தமிழில் தட்டச்சிடும்படி செய்தேன். அதற்குள் வழக்குரைஞர் இராம. இராசேந்திரன் அவர்கள் வள்ளுவர் விடுதியில் காத்திருப்பதைத் தொரிவித்தார். எனவே பேராசிரியர் இராசசேகர தங்கமணி என்னை வள்ளுவர் விடுதிக்கு உடன் அழைத்து வந்தார். 
 
 வழக்கறிஞரிடம் பேசிய பொழுது அவரின் தமிழார்வம் கண்டு வியந்தேன்.பல்வேறு தமிழ்நலம் சார்ந்த பணிகளில் அவர் ஈடுபட்டு வருவது அறிந்து மகிழ்ந்தேன். அவரிடம் என் நாமக்கல் செலவு பற்றித் தெரிவித்தபொழுது நாமக்கல்லில் உள்ள தமிழார்வலர்கள் சிலருக்குத் தொலைபேசியிட்டுப் பேசி என் வருகை பற்றி உரைத்தார். அவரிடமும் விரைந்து விடைபெற நேரந்தது. அதற்குள் முன்பே திட்டமிட்டபடி கரூர் நூலக அலுவலர் திருவாளர் செகதீசன் ஐயா அவர்கள் என் அறைக்கு வந்தார்கள். அனைவரும் சிற்றுண்டி உண்டோம். காலை 8.30 மணியளில் பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்களிடமும் நூலக அலுவலர் திரு.செகதீசன் அவர்களிடமும் விடைபெற்று 9.45 மணியளவில் நாமக்கல் சென்று சேர்ந்தேன். 
 
  நாமக்கல் மாவட்ட நூலகம் முகப்பு 
  நாமக்கல் மாவட்ட நூலகர்கள் 
 
 அங்கு நூலக அலுவலர் அவர்களும்  பொது உந்தில் வந்து என்னை அழைத்துச் சென்றனர். நாமக்கல் மாவட்டம் சார்ந்த நூலகர்கள் பலருக்குக் கணிப்பொறி, இணையம் சார்ந்த பயிற்சிகளை வழங்கினேன்.அனைவரும் கற்றுத் தெரிந்துகொண்டனர். மிகச்சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
மாவட்ட நூலக அலுவலர், நூலகர் 
 
  மாலை நான்கு மணியளவில் புறப்பட்டுப் புதுவை வரத்திட்டமிட்டிருந்தேன். அதற்கிடையில் திருவாளர் நா. ப. இராமசாமி ஐயாவுடன் மாரண்ணன் அவர்களும் வந்திருந்தார். நாமக்கல் இராமசாமி ஐயா தாம் முப்பதாயிரம் நூல்களைப் பாதுகாத்து வருவதைச் சொன்னார்கள். அதைக் காணாமல் வந்தால் என்னால் இரவு தூங்கமுடியாது எனக் கருதி அவர் நூலகம் சென்று அனைத்து நூல்களையும் மேலோட்டமாகப் பார்வையிட்டு மீண்டும் ஒருநாள் அமைதியாக வந்து பார்வையிடுவேன், பயன்கொள்வேன் என்று உரைத்து, ஐயாவிடம் விடைபெற்று மீண்டேன். 
 
  நூலகர் திரு. வேலு அவர்கள் என் உடன் வந்து உதவினார். 5.15 மணியளவில் பேருந்து ஏறிச் சேலம், விழுப்புரம் வழியாக நடு இரவு புதுவை வந்து சேர்ந்தேன். காலையில் என் கல்லூரிப்பணி முடிந்தேன் .மாலை நான்கு மணிக்கு முன்பே திட்டமிட்டபடி கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் கடலூர் மாவட்டம் சார்ந்த பல நூலகர்களுக்கு தமிழ் இணையம் சார்ந்த பயிற்சிக்கு அழைத்திருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் கல்பனா சேக்கிழார் அவர்களும் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தகுந்தது. 
 
கடலூர் மாவட்ட நூலக அலுவலர், நூலகர் 
 
கடலூர் மாவட்ட மைய நூலகத்தில்... 
 
நூலக அலுவலர் அவர்களும் நூலகரும் விழாவிற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர். 6 மணி வரை என் உரை அமைந்தது. இணையமும் மின்சாரமும் வாய்ப்பாக இருந்தன. ஆறு நாட்களாகப் பல்வேறு பயிற்சிபெற்ற அவர்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டி மகிழ்ச்சியூட்டினேன். அனைவரிடமும் விடைபெற்று இரவு வீடு வந்து சேர்ந்தேன். இரண்டு நாளும் கடுமையான பணி. கடுமையான உழைப்பு. ஆனால் பலருக்கு இணையம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியதில் அனைத்துத் துன்பங்களும் பறந்தன.

வியாழன், 2 ஏப்ரல், 2009

பிரஞ்சுப் பேராசிரியர் வெங்கடசுப்புராய நாயகர்

பேராசிரியர் வெங்கடசுப்புராய நாயகர்

 பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகர் பிரஞ்சு மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும் விளங்குபவர்.

 புதுவை இலாசுப்பேட்டையில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் மு. சு. ஆறுமுகநாயகர், இராசரத்தினம் அம்மாள். 03.04.1963 இல் பிறந்த இவர் தொடக்கக் கல்வியைப் புதுச்சேரி குளுனி, பாத்திமா பள்ளிகளில் பயின்றவர். பின்னர் தாகூர் கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை பிரஞ்சு பயின்றவர்.

 புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர்(1988). தமிழ், பிரஞ்சு வினைச்சொற்கள் ஒப்பாய்வு என்னும் பொருளில் ஆராய்ந்தவர். 1989 இல் தாம் படித்த தாகூர் கலைக்கல்லூரியில் பிரஞ்சு விரிவுரையாளராகப் பணியில் அமர்ந்தார். 1991-95 பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியிலும், 1996-99 வரை  காரைக்கால் ஔவையார் மகளிர் கல்லூரியிலும் பணியாற்றி, 1999 முதல் புதுச்சேரி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் பிரஞ்சுப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

 2006 இல் தம் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்து புதுவைப் பல்கலைக்கழகத்தின் பிரஞ்சுத் துறையின்வழிப் பட்டம் பெற்றார். பிளேசு சாந்திரர் என்னும் சுவிசில் பிறந்த பிரஞ்சு எழுத்தாளர்தம் புதினங்களில் விலகித் தப்புதல் என்னும் பொருள்கோள் கொண்டு ஆய்வு செய்தவர். இவர் நெறியாளர் செவாலியே இரா.கிருட்டினமூர்த்தி அவர்கள் ஆவார்.

 பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவும் பிரஞ்சு அரசும் வழங்கிய நிதியுதவியைப் பெற்றுப் பிரான்சு சென்று, பாரிசு நூலகங்களைப் பயன்படுத்தி மீண்டவர். புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழிலிருந்து பிரஞ்சுக்குச் சென்ற மொழிபெயர்ப்பு இலக்கியங்களைப் பற்றி ஆய்வு செய்தவர். பிரஞ்சிலிருந்து தமிழுக்குப் பல சிறுகதைகள், கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். திசையெட்டும், புது எழுத்து, காலச்சுவடு, தீராநதி, மணல்வீடு, அமுதசுரபி, அம்ருதா, தளம், பல்சுவைக் காவியம், வெல்லும் தூய தமிழ், வணக்கம் புதுவை, மீண்டும் அகரம்,  சூரியோதயம், நற்றிணை, கரந்தடி, யுகமாயினி உள்ளிட்ட இலக்கிய இதழ்களில் எழுதிவருகிறார். தமிழிலிருந்தும் பிரஞ்சுக்குப் பல படைப்புகளை மொழிபெயர்த்துவருகிறார்.

பிரான்சு அரசின் சார்பில் அழைக்கப்பெற்று, பலமுறை பிரான்சுக்குக் கல்விப்பயணம் மேற்கொண்டவர்.

இவர் வெளியிட்ட நூல்கள்:

  • பிரஞ்சு வழிப் பேச்சுத்தமிழ் கற்றல்(குறுந்தகடுடன்)
  • புதுச்சேரி பொது அறிவு நொடி வினா-விடைகள் - 2009
  • கலகம் செய்யும் இடதுகை (2012)
  • Le Kurunthokai, குறுந்தொகை பிரஞ்சு மொழிபெயர்ப்பு.மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம்.சென்னை.2023.
  • Les fleurs du Kuruntbokai, தமிழன்னை ஆய்வகம்,புதுச்சேரி 2023.
  • ஐங்குறுநூறு ( பிரஞ்சு மொழிபெயர்ப்பு)
  • அத்தையின் அருள் - 2013
  • அப்பாவின் துப்பாக்கி - 2013
  • கடவுள் கற்ற பாடம்(பிரெஞ்சு சிறுகதைகள், தமிழில்) - 2015
  • சூறாவளி, அடையாளத்தைத் தேடி அலையும் பெண்(குறுநூவல்) - 2015
  • ஃபுக்குஷிமா - 2016
  • விரும்பத்தக்க உடல் - 2018
  • ஆண்டன் செக்காவ், ஆகச்சிறந்த கதைகள், தடாகம் 2019
  • உல்லாசத் திருமணம்(பிரஞ்சுப் புதினம்), தடாகம் - 2020
  • வாழ்வு, இறப்பு - வாழ்வு(வாழ்க்கை வரலாறு) - 2020
  • வீழ்ச்சி (பிரஞ்சுப் புதினம்) - 2021
  • தண்டனை(பிரஞ்சுப் புதினம்) 2022
  • இல்லறவாசிகள் (பிரஞ்சுப் புதினம்) - 2023
  • பெருந் தொற்று, காலச்சுவடு, நாகர்கோயில், 2023
  • புகழ் பெற்ற உலக சிறுகதைகள்,மொழிபெயர்ப்பு மையம்.பொள்ளாச்சி.2023.
  • நாயகரின் நாயகர், அகநாழிகை 2023.
  • Pondicherry General knowledge quiz,அகநாழிகை, 2023.