நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழியக்கன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழியக்கன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜூலை, 2015

மரபுக்கொரு தமிழியக்கன்


                                                             
                                                       

                          புதுச்சேரியில் புகழ்பெற்ற தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன் ஆவார். கவிஞரேறு வாணிதாசனாரின் அன்புக்குரிய மாணவர். இவர்தம் பாடல்கள் தமிழ்மரபு போற்றுவன. இவர் பற்றி முன்பும் எழுதியுள்ளேன். தம் ஆசான் திறம் நினைந்து பன்மணிமாலை எனும் பாத்தொகுப்பை வழங்கியுள்ளார். நாளை வெளியீடு காண உள்ள இந் நூலுக்கு யான் வரைந்த அணிந்துரை இஃது.                                                                                              

அறத்திற்கொரு புலவன் திருவள்ளுவன்; சொல்லுக்கு ஒரு புலவன் கம்பன்; தனித்தமிழுக்கு ஓர்அரிமா பாவாணர் எனத் தனித்திறம் பெற்றோர் வரிசை நீளும்;  அவ்வரிசையில்  மரபுக்கொரு  புலவர் தமிழியக்கன் என்னுமாறு இலக்கணமரபு, இலக்கிய மரபெனத் தலைசிறந்து நிற்பவர் - எந்தை, என் ஆசானெனப்  போற்றத் தக்கவர், தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன். அகத்திலும்  புறத்திலும் மரபுவழாது ஒண்டமிழுக்கு உரம்சேர்க்கின்றவர் இவர்; இதனை, இலக்கியமாகவும், இலக்கணமாகவும் தந்துள்ள நூல்களே வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்வுயர்வுக்குக் காரணமாய் அவரே இயம்புவனவாகவும், நாம் உணர்வனவாகவும், கீழ்வருவன புலப்படுத்தும்:

# தக்க பருவத்தில் கவிஞரேறு வாணிதாசனாரை ஆசானாகப் பெற்றமை;

# தனித்தமிழ் இதழ்களான தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் போன்றவற்றின் தொடர்புகள், இவற்றின் சிறப்பாசிரியரான, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நேரடித் தொடர்புகள்;

# தனித்தமிழ் அரிமா தேவநேயப்பாவாணருடன் இலக்கண இலக்கியம் சார்ந்த நேரடித் தொடர்புகள்     இவற்றால், ‘தனித்தமிழ்ப் பாவலர்' தமிழியக்கன் எனப் போற்றப்பட்டவர்.                               

தம் ஆசானாம்- கவிஞரேறு வாணிதாசனாரின், நூற்றாண்டு விழா நினைவாக இன்றவர் ஆக்கி வெளியிட்டுள்ள மரபிலக்கியமான கவிஞரேறு வாணிதாசனார் பன்மணிமாலை' என்னுமிந்நூல் பன்மணிகளாகவே  மின்னுகின்றன. இதனைப் புலவரேறு வ.கலியபெருமாள் அவர்கள் திறம்பட ஆய்வு செய்துள்ளார்; ஆதலின் யான் நூலாய்வில் புகாமல் சிலவற்றைக் கூறிக் கற்க வழிவிடுகிறேன்.

மரபிலக்கியத்தில் இரட்டை மணிமாலை, நான்மணி மாலை என்பனவே காணப்படினும், அவற்றின் வழி, பன்மணிமாலை எனும் புதிய மரபாக்கம் தான் கவிஞரோறு வாணிதாசனார் பன்மணிமாலை'. தம் ஆக்கங்களில் ஏதாவதொரு புதுமையைக் காட்டித் தம் ஆசானைப் பின்பற்றி நிற்கிறார். இயற்கையப்          போற்றுதல், புரட்சிக் கருத்துகளைப் போற்றுதல், பகுத்தறிவுக் கருத்துகளைப் போற்றுதல் போன்ற பிறவற்றிலும் புதிய, மரபுநெறி வழா முறைகளைப் பின்பற்றுவதில் தமிழியக்கன் தனித்தே விளங்குகிறார்.

இந்நூலாசிரியர் வாணிதாசனாரின் மாணவராதலின் நூல்நெடுக ஆசானின், சிறப்புகளாக அன்பு, அமைந்த பண்பு, விருந்தோம்பல், விழுதுகளை உருவாக்கும் வேட்கை, செயல், கல்விச்சிறப்பு, பாப்புனை  திறம், ஆக்கிய நூல்கள், அடைந்த சிறப்புகள், தமக்கும் ஆசானுக்கும்  உள்ள தொடர்புகள்  எனத் தம் ஆசான் சிறப்புகளையே விரிவாகக் கூறிச் செல்கிறார்.

கவிஞரேறு வாணிதாசனாரைத், தனித்தமிழ்ப்பாவலர் தமிழியக்கனார், தம் படைப்புகளின் வழி, மொழி, இனம், நாடு, பகுத்தறிவுக்கொள்கை, பொதுவுடைமைக் கொள்கை ஆகியவற்றுடன் இலக்கிய இலக்கணப் போக்கில், புதுமை, தொல்புகழ் மரபு மாறாத புலமை, இவற்றோடு தொடர்ந்து பீடுநடை போடுகிறார் என்பதை இந்தப் படைப்பாலும் அறியலாம்.

வாணிதாசனாரின் வளமான மரபுக்குத் தரமான தமிழியக்கன் எடுத்துக்காட்டாகத் திகழ்வது கண்டு, கற்போர் நெஞ்சம் களிப்புறும்; பாராட்டும்! 

வாழ்க வளர்க அவர்தம் தனிதமிழ்த்தொண்டு! 

வெள்ளி, 23 நவம்பர், 2012

வினைத்தொகை விரட்டும் தனித்தமிழியக்கன் பாடல்கள்…



புதுச்சேரியில் வாழும் பாவலர்களுள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரிய பாவலராகத் தமிழியக்கன் அவர்கள் விளங்குகின்றார். இவர்தம் பாட்டு நூல்கள் யாவும் தனித்தமிழில் விளங்கும் சிறப்புடையன. அதுபோல் மரபுநெறி நின்று தமிழ்ச்செழுமைக்குக் களம் அமைப்பனவாகவும் விளங்குகின்றன.

தனித்தமிழ்ப்பாவலர் தமிழியக்கனின் பாட்டுநூல்களை இளம் அகவைமுதல் கற்று மகிழ்ந்துள்ளேன். சேவலின் கூவல் என்னும் பெயரில் இவர் எழுதிய அரிய நூலைக் கற்று மகிழும் வாய்ப்பு எனக்கு அண்மையில் அமைந்தது. கலிப்பா  வகையுள் அரிதான கலிநிலைத்துறை வகையில் 66 பாடல்களைக் கொண்டு "ஒரு சேவலின் விடியல் கூவல்" அமைந்துள்ளது.

சேவலின் கூவல் நூல் மாணவர்களுக்கு நல்லறம் புகட்டும் வாழ்த்துப் பாடலாகத் தொடங்கிய முயற்சியால் விளைந்துள்ளது. தனிமரம் தோப்பானது போல் தனிப்பாடல் தொகுப்பாகியுள்ளது. தமிழ்நெறிநின்று மரபுப்பாடல் இயற்றுவார் அருகிவரும் இற்றைவேளையில் கலிநிலைத்துறையின் பல வடிவங்களில் தமிழுக்கு அணிசேர்க்கும், அறநெறியுரைக்கும் இந்தப் பாட்டுநூலை வழங்கிய பாவலரைப் போற்ற வேண்டும்.

சீர்மரபுக் கலிமண்டலம்(12), சீரமரபுக் கலிநிலைத்துறை(05), சீர்மரபுக் கலித்துறை(1), கலவைச் சந்தமரபுக் கலிநிலைத்துறை(09), சந்த மரபுக் கலித்துறை(13), சந்த மரபு கலிமண்டலம்(26) என்னும் பாவைகையில் பாடல்களைப் பொருத்தமுற யாத்துள்ளார்.

சேவலின்கூவல் என்னும் இந்த நூலுக்குத் தனித்த சிறப்பு என்னவெனில் நூலாசிரியரே உரையாசிரியராகவும் மலர்ந்துள்ளமை பாராட்டிற்குரிய ஒன்றாகும். எம் போலும் இளையர்கள் மருளும் இடங்களுக்கு நுட்பமும் நயமும் தோன்ற உரையாசிரியரின் உயர்குணம் விளங்க உரைகண்டுள்ளமையால் அறிஞர்களால் இந்நூல் போற்றப்படும். உரையாசிரியரின் உரையால் பாடல்களைக் கற்கும்பொழுது பொருள் மயக்கம்கொள்ளவோ, ஐயுறவு கொள்ளவோ தேவையில்லாமல் போனது. 

கழகப்புலவருக்கு நிகராகப் போற்றப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரானர் அவர்கள் நூறாசிரியம் நூலுக்கு உரைகண்டுள்ளமை போன்று தமிழியக்கனார் சேவலின் கூவலுக்கு உரைகண்டுள்ளார்.

சேவலின் கூவல் நூல்பாடல்கள் அரும்பெரும்புலமை வாய்த்தவர்களுக்குப் பெருவிருந்தாக இருக்கும். மாணவர்களுக்கு அறவுரை பகர்வதுபோல்  இருப்பினும் அனைத்து மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்குச் சிறந்த நெறிநூலாக இருக்கும். இருபதாம் நூற்றாண்டில் மாணவர் நலம் கருதி எழுதப்பெற்றுள்ள பாட்டுநூல்கள், பாடல் படைப்புகள் யாவும் தனித்தனியாகத் தொகுத்துப்பார்க்கவேண்டும், ஆய வேண்டும் என்ற உந்துதலை இந்தநூல் எனக்குத் தந்தது.

மொழி, இனம், நாடு, மக்கள், அரசியல், பகுத்தறிவு, வேலைவாய்ப்பு, மாணவர் குமூகம், இயற்கை, தாய்மொழிவழிக்கல்வி, தேர்தல், அரசியல் உள்ளிட்டப்  பொருண்மைகளில் இந்த நூலின் பாடல்கள் உள்ளன.

பகுத்தறிவுசார்ந்த குமூகமாகத் தமிழ்க்குமூகம் உருவாகும்பொழுதுதான் முறையான வளர்ச்சி ஏற்படும் என்பது பாவலரின் அசைக்கமுடியாத நம்பிக்கை. திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்க நெறிகளைத் தம் வாழ்வில் வரித்துக்கொண்டவர் பாவலர் ஆதலின் இவ்வியக்க நோக்குகள் பாடல்களில் மின்னி மிளிர்கின்றன.

இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் எழுச்சியுற்ற திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கம் தமிழர்களை எழுச்சிகொள்ளச்செய்ததுபோல் இவ்வியக்கத்தினரின் படைப்புகளும் தமிழகத்தை எழுச்சிகொள்ளச்செய்தது. அந்த வகையில் தமிழியக்கனின் படைப்புகள் தமிழ்நெறிகாட்டும் தரத்தினைக் கொண்டனவாகும். 

சேவலின்கூவல் என்னும் படைப்பில் குறைந்த அடிகளில் நிறைந்த பொருள்களைப் பொதித்து வைத்துள்ளமை பாவலரின்  உலகியலறிவுக்கும் நிறைபுலமைக்கும் சான்றாகும். திருவள்ளுவப் பேராசான் குறளடியில் ஏழ்கடலைப் புகுத்தியமை போன்று தமிழியக்கனும் ஓரடிக்குள் பெரும்பொருளை நுட்பமாகப் பொதித்துவைத்துள்ளார். இந்நூற் பாடல்களைக் கற்பாரின் புலமைக்கும், அறிவுக்கும் ஏற்ப விரித்துப் பொருள்கொள்ளமுடியும்.

சில பாடல்கள் எளிய நடையில் அமைந்து தெளிந்த நீரோடை போலும் பொருள் தந்து நிற்கின்றன.

அண்டி வாழ வந்த வர்க்கு மன்பினால்
உண்டி யோடு யாவும் ஈந்த உண்மையால்
பண்டி ருந்த பண்பு மேன்மை, பாடெலாம்
மண்டி யிட்டு வன்ம வாழ்வில் மாய்ந்ததே!(46)

இப்பாடலில் வந்தேறிகளுக்கு வளம் நல்கிய தமிழினம் இன்று அடிமைப்பட்டுக் கிடக்கும் வரலாற்றை அமைதியாகப் பதிந்து வைத்துள்ளமையைப் பார்க்கின்றோம்.

தாய்மொழிவழிக் கல்விச் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் பாடலொன்றில் அழகிய உவமைகாட்டி இளம் நெஞ்சில் நம்பிக்கை கொளுத்துகின்றார்.

தம்பீ! உன்னால் தான்மொழி ஓங்கும்! தடைவெல்வாய்!
நம்பிக் கற்பாய்! செம்மொழி தாங்கி நலம்கொள்வாய்!
தும்பிக் கென்றார் தோள்தர வந்தார்? துவளாமே,
எம்பிக் காற்றாய்த் தொண்டுசெய்! பாரே, எழுமுன்னே! (50)

இந்தப் பாடலில் தும்பிக்கு(வண்டு) உயரே பறக்க யார் கற்றுத்தந்தது? அதன் முயற்சியால் பறப்பதுபோல் நீயும் உன்முயற்சியால் தாய்மொழி காக்கும் செயலில் பிறர் துணையின்றிச் செயல்படுக என்கின்றார்.

பகுத்தறிவின் மேன்மையைப் பாவலர் பல இடங்களில் முன்மொழிந்துள்ளார்.

மூவிரண்டு அறிவு எனவும், பகுத்தறிவு எனவும், வீங்கிய அறிவு எனவும் வேறு வேறு பெயர்களில் இந்தப் பகுத்தறிவுப்  பரப்புரை நிகழ்ந்துள்ளது.

அகத்தின் உணர்வைத் தெளிவாய்! அறிவால் நெறிகாண்!
மிகுத்த துயரோ உலகில் பிளவாம்! மிகுசீர்,
பகுத்தறிவுகொள்! பழகின் பலவாம் பயனாம்!
தொகுத்த முறைசேர் நிறைசெம் மொழியாம் தமிழ்பேண்! (44)

இந்தப் பாடலில் பகுதறிவும் தமிழ்ப்பற்றும் இரண்டு கண்ணாகப் போற்றப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழுக்கு வளம்சேர்க்கும் படைப்பை நல்கிய பாவலரைப் போற்றி வாழ்த்துகின்றேன்.

(தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கனின் ஒரு சேவலின் விடியல் கூவல் நூலுக்கான அணிந்துரை)

வியாழன், 18 செப்டம்பர், 2008

தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன்


பாவலர் தமிழியக்கன்

பாவலர் தமிழியக்கன் அவர்கள் புதுச்சேரி மாநிலம் பாகூர் வட்டம் சேலிய மேட்டில் 24.02.1946 இல் பிறந்தவர்.பெற்றோர் கி.இராமு,இராசம்மாள் ஆவர். இவர்தம் இயற்பெயர் இரா.வேங்கடபதி ஆகும்.உயர்நிலைப் படிப்பைப் பிரஞ்சுமொழி வழியாகக் கற்றவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்சுமொழி அறிந்தவர்..கருநாடக இசையிலும்,யாப்பறிவும் நிரம்பப் பெற்றவர். இலக்கிய, இலக்கண அறிவை கவிஞர் வாணிதாசன் வழியாகப் பெற்றவர்.

மொழிஞாயிறு பாவாணர்,பாவேந்தர்,பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் ஆழ்ந்த பற்று கொண்டவர்.புதுச்சேரி மாநிலத்தின் பல பள்ளிகளில் ஆசிரியராகவும் பின்னர் அரசு தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரி யராகவும் விளங்கியவர்.பள்ளியில் நல்லாசிரியராக விளங்கிய இவருக்குப் புதுச்சேரி அரசின் இராதாகிருட்டிணன் விருது,இந்திய நாட்டரசின் நல்லாசிரியர் விருது உள்ளிட்ட உயரிய விருதுகள் பல கிடைத்துள்ளன.

கம்பன் புகழ்ப்பரிசில்,அன்னை தெரேசா இலக்கிய விருது உள்ளிட்டவையும் இவர் பெற்ற சிறப்புகளுள் அடங்கும்.
தமிழிக்கனார் பல்வேறு பாட்டரங்குகளிலும் கலந்துகொண்டு பாடல் வழங்கியுள்ளார்.கவிஞர் வாணிதாசன்,பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட பெரும் பாவலர்களின் தலைமையில் பாட்டரங்கேறிய பெருமைக்குரியவர்.

தமிழியக்கனின்  பாடல்கள் சில பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. அறிவியல் செய்திகளைப் பாட்டாக்கியும் பாவாணர்,வாணிதாசன் மேல் பிள்ளைத்தமிழ் பாடியும் புகழ்பெற்றவர்.

இவர்தம் படைப்புகளை விடுதலை,உண்மை,இனமுரசு,கண்ணியம், கவிஞன்,தென்மொழி, தமிழ்ச்சிட்டு, கவியுகம்,கவிக்கொண்டல்,வெல்லும் தூயதமிழ், தெளிதமிழ்,தேனருவி உள்ளிட்ட இதழ்கள் வெளியிட்டு வருகின்றன.பாட்டும் உரையும் வரையும் ஆற்றல்கொண்ட இவர் தம் நூல்களின் பட்டியல் கீழ்வருவனவாகும்.

01.அறிவியல் இலக்கியம்
02.உயிரியல் பாட்டு
03.நிலைத்திணைப் பாட்டு
04.உயிரியல் மாமாவின் அறிவியல் கதைகள்
05.வாணிதாசன் பிள்ளைத்தமிழ்
06.எழுச்சி விதைகள்
07.பாவாணர் பிள்ளைத்தமிழ்
08.எழிலின் சிரிப்பு
09.தமிழ்மகள் பாவை
10.முல்லைப்பண்ணில் ஒரு முகாரி
11.வேலிகள்
12.சிறுபறை(சிறார் பாடல்கள்)

நிலைத்திணைப்பாட்டு(1989)
உயிரியல் பாட்டு(1986)
அறிவியல் இலக்கியம்(இ.ப.1987)
பாவாணர் பிள்ளைத்தமிழ்(1996)
முல்லைப்பண்ணில் ஒரு முகாரி(2001)
வாணிதாசன் பிள்ளைத்தமிழ்(1994)


பாவலர் தமிழியக்கன் அவர்களின் முகவரி:
பாவலர் தமிழியக்கன்
54,முதல் தெரு,தெ.இராமச்சந்திரன் நகர்,
புதுச்சேரி-605 013
பேசி : 0413- 2240115