நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
ச.அகத்தியலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ச.அகத்தியலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

உலகை வலம் வந்த தமிழரிமா முனைவர் ச.அகத்தியலிங்கம்...


முனைவர் ச.அகத்தியலிங்கனார்

சற்றொப்ப இருபதாண்டுகளுக்கு முன் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் இளங்கலைத் தமிழிலக்கியம் பயின்றபொழுது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றிற்கு என் பேராசிரியர் முனைவர் துரை. உலகநாதன் அவர்கள் என்னை அழைத்துச் சென்றிருந்தார். அன்றைய நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்த முனைவர்.ச. அகத்தியலிங்கம் அவர்களைக் கண்டும் அவர்கள் உரைகேட்டும் அறிஞர் அவையில் முந்தியிருக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அது முதல் ச.அகத்தியலிங்கனாரைப் பல கருத்தரங்குகளில் கண்டு உரையாடியுள்ளேன்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்த பொழுதும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுதும் பேராசிரியருடன் கலந்து பழகும் வாய்ப்பு எனக்கு மிகுதியாக இருந்தது.

சிங்கப்பூரில் 2001 ஆம் ஆண்டு நடந்த உலகத்தமிழாசிரியர் மாநாட்டில் பழையன புகுதலும் என்னும் தலைப்பில் கட்டுரை படிக்க அவையில் நின்றேன். அவையை வணங்கி, என் கட்டுரை கடைசியாக அமையும் கட்டுரை என்றேன். உடன் குறுக்கிட்டு ச.அகத்தியலிங்கனார் நிறைவாக அமையும் கட்டுரை எனத் திருத்தம் சொன்னார்கள். அவர்களும் முனைவர் திண்ணப்பன் அவர்களும் நானும் சிங்கப்பூர் அரசு அளித்த ஒரு விருந்தில் கலந்துகொண்டு நெடுநாழிகை உரையாடியமை வாழ்வில் மறக்க இயலா ஒன்றாகும். அதுபொழுது எடுக்கப்பெற்ற படம் வேறு ஒரு பதிவில் உள்ளது.காண்க.

பல கருத்தரங்குகள், மேடைகளில் ச.அகத்தியலிங்கனாரை நான் கண்டு அவர்களின் தமிழ்ப்பற்று, உணர்வு, வீறு கண்டு மகிழ்ந்துள்ளேன்.மேடை என்று சொன்னால் அரிமா போலப் பெருங்குரலில் பேசுவார்கள். நண்பர்களிடம் அன்பொழுகப் பேசுவார்கள். தன் கருத்தைத் தானாட்டித் தனாது நிறுத்துவார்கள். உலக மொழிகள் பற்றி மிகச் சிறந்த விளக்கம் தருவார்கள்.

அமெரிக்க மண்ணில் ஆங்கிலேயர்களுக்குத் தமிழின் சிறப்பை எடுத்துரைத்து அவர்கள் உள்ளதில் படிந்திருந்த சமற்கிருத மாயையை அடித்து நொறுக்கித் தமிழின்பால் அவர்களின் கவனத்தை இழுத்தவர் நம் ஐயா அவர்கள். தொல்காப்பியம் சங்க இலக்கிய மாண்புகள், தமிழின் சிறப்புகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறப்பாக எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர். சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள சிறந்த பகுதிகளை உள்ளம் ஒன்றி விளக்கும் காட்சிகள் நம் மனக்கண்ணில் என்றும் நின்று நிலவும்.

இப்பெருமைக்கு உரிய தமிழரிமா ச.அகத்தியலிங்கனார் 04.08.2008 புதுச்சேரிக்கு அருகில் உள்ள கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் மகிழ்வுந்தில் வந்துகொண்டிருந்தபொழுது மகிழ்வுந்தின் மேல் சரக்குந்து மோதி நேர்ச்சிக்குள்ளாகி மறைவுற்ற செய்தி நண்பர் தி.நெடுஞ்செழியனார் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் வழி அறிந்து வருந்தினேன். என் பேராசிரியர் முனைவர் அ.அறிவுநம்பி (புதுவைப் பல்கலைக்கழகம்) அவர்களிடம் நடந்தவற்றை விளக்கமாக அறிந்துகொண்டேன்.

இணையம் வழியாக இச்செய்தியை உலகம் முழுவதும் உடன் தெரிவித்தேன். என் செய்தி தாட்சுதமிழ், A.O.L ,தமிழ்மணம் வழியாக உலகத் தமிழர்களைச் சென்றடைந்தது. தினமணி இதழின் விழுப்புரம் செய்தியாளர் திரு.செயப்பிரகாசு உள்ளிட்ட செய்தியாளர்களுக்கு என் வழியாகச் ச.அகத்தியலிங்கனார் பற்றிய செய்திகள் வழங்கப்பட்டன. புதுச்சேரி சார்ந்த தமிழ் உணர்வாளர்களுக்கும், அறிஞர்களுக்கும் இச் செய்தியைத் தெரிவித்தேன்.

என் இணையப் பக்கம் வழியாகச் செய்தி அறிந்த மறைமலை ஐயா, ஆ.இரா.சிவக்குமாரன் (சிங்கப்பூர்), சிவகுருநாதப் பிள்ளை (இலண்டன்), நா.கணேசன் (நாசா விண்வெளி ஆய்வு மையம்,அமெரிக்கா) உள்ளிட்ட அன்பர்கள் பலரும் என்னுடன் துன்பத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இரவு சிப்மர் மருத்துவமனை சென்று துணைவேந்தரின் உடலைக் கண்டு வருத்தமுற்று நின்றேன். முனைவர் செ.வை. சண்முகம்.முனைவர் அரங்க பாரி உள்ளிட்ட பேராசிரியர்களையும் ச.அகத்தியலிங்கனாரின் குடும்பத்தினரையும் கண்டு ஆறுதல் கூறி மீண்டேன். இன்று காலை என் அலுவல்களை முடித்துக்கொண்டு சிப்மர் மருத்துவமனைக்குச் சென்றேன்.5 நிமைய இடைவெளியில் துணைவேந்தரின் உடலை எடுத்துக்கொண்டு உறவினர்கள், அறிஞர்கள் சிதம்பரம் சென்றதாக அறிந்தேன். மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் அகத்தியலிங்கனாரின் பெயர்த்தி அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் பற்றி வினவியும் அவர்களைக் கண்டும் மீண்டேன்.

துணைவேந்தரின் உடல் 1.50 மணிக்குச் சிதம்பரம் மாரியப்பா நகர் சென்றடைந்தது. அவரின் உடலைக் கண்டு வணக்கம் செலுத்த அவரின் மாணவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்து குவிந்திருந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மருத்துவர் மா.இராமநாதன். பதிவாளர் முனைவர் இரத்தினசபாபதி, தமிழ்த்துறைப் பேராசிரியர் அரங்க. பாரி உள்ளிட்ட பேராசிரியப் பெருமக்கள், மொழியியல் துறை சார்ந்த பேராசிரியர்கள் மிகுதியான அளவில் திரண்டிருந்தனர்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் இன்று விடுமுறை அறிவிக்கப்பெற்றுத், துணைவேந்தரின் இறப்பிற்கு சிறப்புச் செய்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம.இராசேந்திரன், பல்துறைப் பேராசிரியர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் வந்திருந்தனர்.

முனைவர் பொற்கோ,முனைவர் கி.அரங்கன், முனைவர் செ.வை.சண்முகம், முனைவர் இராதா செல்லப்பன்.முனைவர் ஒப்பிலா மதிவாணன், முனைவர் கி.கருணாகரன், முனைவர் இரா.சாரங்கபாணி, முனைவர் காமாட்சிநாதன் உள்ளிட்ட அறிஞர்கள் துணைவேந்தர் உடலுக்கு வணக்கம் செலுத்தினர்.

05.08.2008 இரவு ஏழரை மணிக்கு மாரியப்பா நகருக்கு அருகில் உள்ள சுடுகாட்டில் துணைவேந்தரின் உடல் எரியூட்டப்பட்டது. உலகம் முழுவதும் சென்று தமிழுக்குக் குரல் கொடுத்த தமிழ் அரிமா முனைவர் ச.அகத்தியலிங்கனார் இனி அவர்களின் செயலால் என்றும் நினைவுகூரப்படுவார்.

தமிழையும் தொல்காப்பியத்தையும் உலக அளவில் பரப்பிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ச.அகத்தியலிங்கம் மறைவு...



தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்றவருமான முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்கள் (அகவை 79) புதுச்சேரி அருகே கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் நடைபெற்ற மகிழ்வுந்து விபத்தில் 04.08.2008 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் நேர்ச்சி இடத்திலேயே இறந்தார். அவர் துணைவியார் பொன்னம்மாள் அவர்களும் (அகவை 78) ஓட்டுநர் சீவபாலன் (அகவை 28) அவர்களும் சிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு இறந்தனர். அகத்தியலிங்கனாரின் பெயர்த்தி இலதா பிரியா (அகவை 22) மருத்துவமனையில் சேர்க்கப்பெற்றுள்ளார்.

மறைந்த துணைவேந்தர் அவர்களுக்கு இரண்டு பெண்மக்கள். 1.சண்முகசுந்தரி. இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்விப் பிரிவில் திருச்சி அலுவலகத்தில் பணிபுரிகிறார். 2.அருணாசலவடிவு. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராப் பணிபுரிகின்றார். துணைவேந்தரின் மறைவைக் கேள்வியுற்ற அவரின் குடும்பத்தினரும், நண்பர்களும் மாணவர்களும் உடல் வைக்கப்பெற்றுள்ள சிப்மர் மருத்துவமனைக்குத் திரண்டுவந்துள்ளனர்.

இன்று (05.08.2008) நண்பகல் மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்குப்பிறகு பிற்பகல் 3 மணியளவில் துணைவேந்தர் வாழ்ந்து வந்த சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள அவர்தம் இல்லத்தில் மக்களின் பார்வைக்குத் துணைவேந்தரின் உடல் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ பேராசிரியர் செ.வை.சண்முகம் உள்ளிட்ட அறிஞர்கள் ச.அகத்தியலிங்கனாரின் உடலுக்கு வணக்கம் செலுத்த உள்ளனர்.

முனைவர் ச. அகத்தியலிங்கனாரின் வாழ்க்கைக் குறிப்பு

ச.அகத்தியலிங்கனார் நாகர்கோயில் அருகில் உள்ள கேசவன்புதூரில் 1929 ஆகத்து மாதம் 19 ஆம் நாள் பிறந்தவர். பெற்றோர் சண்முகம் பிள்ளை அருணாசல வடிவு.நாகர் கோயில் இந்து கல்லூரியில் இளம் அறிவியல் கணக்குப்பாடம் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர்.இங்குப் பயிலும்பொழுது குமரி அனந்தன் அவர்கள் இவருக்கு நெருங்கிய நண்பரானார்.

கேரளா பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியன் அவர்களின் மேற்பார்வையில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் மற்றுமொரு முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாறு அமெரிக்காவில் இவர் முனைவர் பட்டம் பெற்றபொழுது உலகின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார்.

மொழியியல் துறையில் தமிழ் மொழியின் சிறப்பு அறியப்படாமல் இருந்தது. இம் மேல்நாட்டுச் சிந்தனை மரபை உடைத்துத் தமிழுக்கு உலக அளவில் புகழ் கிடைக்கவும் உலக மொழியியல் அறிஞர்கள் தமிழின் பக்கம் கவனத்தைத் திருப்பவும் அகத்தியலிங்கனாரின் பணி குறிப்பிடும்படியாக இருந்தது. அயல்நாட்டு மாணவர்கள் தமிழ் கற்கவும் தமிழ்மொழியின் அமைப்பை ஆராயவுமான சூழலை உருவாக்கியவர்.

அமெரிக்காவில் பணிபுரிந்த பேராசிரியர் ஏ.கே.இராமானுசம் தமிழின் சிறப்புப் பற்றிய நூல்கள் எழுதக் காரணமாக இருந்தவர்.அறிஞர் கார்ட்டு, பாண்டே, தாமசு டிரவுட்மண்டு உள்ளிட்டவர்களுக்கு நெருக்கமாக இருந்து தமிழ் பயிற்றுவித்தவர்.அவர்களால் மதிக்கப் பெற்றவர். தமிழ்த்துறை, ஆங்கிலத் துறை, மொழியியல் துறை சார்ந்த பேராசிரியர்கள் பலருக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்தி முனைவர் பட்டம் பெறக் காரணமாக இருந்தவர். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மொழியியல் அறிஞர்கள் பலரும் ச.அகத்தியலிங்கனாரின் மாணவர்களாக விளங்கியவர்களே.

பொற்கோ, கி.அரங்கன், கருணாகரன் செ.வை.சண்முகம் க.இராமசாமி உள்ளிட்ட அறிஞர்கள் மொழியியல் துறையில் சிறந்த ஆய்வுகளை நிகழ்த்த நம் அகத்தியலிங்கனார் காரணமாக அமைந்தார்கள். இவரிடம் மொழியியல் கற்றவர்கள் உலக அளவில் உள்ளனர். இவர் தமிழ் ஆங்கிலம் மலையாளம் மொழிகளில் நல்ல புலமைபெற்றவர்.

அகத்தியலிங்னார் தாம் பயின்ற இந்து கல்லூரியில் தமிழ்விரிவுரையாளர் பணியைத் தொடங்கித் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சில காலம் இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். 1968 முதல்1989 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தமிழ்த்துறையில் புல முதன்மையராகவும் பணிபுரிந்தவர். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் வருகைதரு பேராசிரிராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தவர்.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியாகவும் மைசூர் செம்மொழி நிறுவனத்தில் முதுநிலை ஆய்வறிஞராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.


சிங்கப்பூரில் ச.அகத்தியலிங்கம், சுப.திண்ணப்பன், மு.இளங்கோவன்(2001)

உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் தமிழ் அமைப்புகள் மொழியியல் அமைப்புகளில் பொறுப்பு வகித்த பெருமைக்கு உரியவர்.அனைத்து இந்திய மொழியியல் கழகத்தை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர். இதன் வழியாக தரமான தமிழ் மொழியியல் ஆய்வுகள் வெளிப்பட்டன.பல ஆய்வாளர்கள் உருவானார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றிலும் மொழியியல் வரலாற்றிலும் அகத்தியலிங்கனாரின் பணிகள் என்றும் நினைவுகூரும் வண்ணம் பல உள்ளன.

அகத்தியலிங்கனார் தமிழில் 24 நூல்களையும் ஆங்கிலத்தில் 9 நூல்களையும் எழுதியுள்ளார். 200 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வரைந்த மெருமைக்கு உரியவர். இவை யாவும் மொழியியல், சங்க இலக்கியம், தொல்காப்பியம் பற்றியன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். உலக மொழிகள் பற்றி இவர் எழுதிய நூல்கள் உலக மொழிகள் பலவற்றின் வரலாற்றையும் சிறப்பையும் அதன் அமைப்புகளையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

அதுபோல் சங்க இலக்கியம் குறித்துச் சங்கத்தமிழ் என்னும் பெயரில் 5 தொகுதிகளை எழுதியுள்ளார். உலகமொழிகள் என்ற வரிசையில் 7 தொகுதிகள் வெளிவந்துள்ளன. தொல்காப்பியம் பற்றி 3 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவர்தம் தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் பலவும் உலகத்தரம் வாய்ந்த இதழ்களில் வெளிவந்துள்ளன.

அகத்தியலிங்கனார் இதுவரை 55 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்திய பெருமைக்கு உரியவர். இவரின் மொழியியல் பணிகள் ஆய்வுகள் நூல்கள் இவருக்கு உயரிய விருதுகள் பட்டங்கள் பதவிகள் கிடைக்க காரணமாயின. அவ்வகையில் இவர் தமிழக அரசின் திரு.வி.க.விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். உலக நாடுகள் பலவற்றிற்கு இவர் பயணம் செய்து தமிழின் பெருமை பற்றி பேசிய பெருமைக்கு உரியவர். பல பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு அறிவுரைஞர் குழு எனப் பலவற்றறில் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

பணி ஓய்வு பெற்ற பிறகும் தம் இல்லத்தில் அமர்ந்தபடியே பல்வேறு ஆய்வுகளைச் செய்துவந்தார். உலக நாடுகள் இவரை அழைத்துப் பெருமை கொண்டன. அவ்வகையில் அண்மையில் சிங்கப்பூர் சென்று ஆய்வரங்கில் கலந்துகொண்டு உரையாற்றி மீண்டுள்ளார். எதிர்பாராமல் நடந்த சாலை விபத்தில் இயற்கை எய்திய ச.அகத்தியலிங்கனாரின் பிரிவு அறிந்து தமிழ் அறிஞர் உலகமும் மொழியியல் துறையினரும் கலங்கி நிற்கின்றனர்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2008

மொழியியல் பேரறிஞர் ச.அகத்தியலிங்கம் அவர்கள் சாலை நேர்ச்சியில் மறைவு...



உலகத்தமிழ் உணர்வாளர்களே!...
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும்,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியில் துறையின் முன்னாள் பேராசிரியரும் பல்வேறு ஆராய்ச்சி நூல்களை எழுதித் தமிழின் சிறப்பை உலக அளவில் நிலைநிறுத்தியவருமாகிய முனைவர் ச.அகத்தியலிங்கம் ஐயா அவர்கள் புதுச்சேரி அருகே உள்ள கிளியனூர் அருகில் இன்று காலை (04.08.2008)11 மணியளவில் நடந்த சாலை விபத்தில் இயற்கை எய்தினார்.இதனை அறிவிக்க மிகுந்த மனத்துயரம் அடைகிறேன்.

துணைவேந்தரின் உடல் புதுச்சேரி சிப்மர் மருத்துவமனைக்கு எடுத்துவரப் பெற்றுள்ளது.அவர்தம் துணைவியார் அவர்கள் சிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பிறகு இயற்கை எய்தியுள்ளார்.ஓட்டுநர்,துணைவேந்தர் அவர்களின் பெயர்த்தியார் காயத்துடன் சிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனக் கிளியனூர் காவல்நிலையத்தில் தொடர்பு கொண்டு கேட்டபொழுது அறியமுடிகிறது.உடல் ஆய்வுக்குத் துணைவேந்தரின் உடல் இன்று உட்படுத்தப்பட்டு பின்னர் அவர் ஊருக்கு எடுத்துச்செல்லப்படும்.

முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்கள் அமெரிக்காவில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.திராவிடமொழிகள் பற்றிய அவர்தம் நூலும் சங்க இலக்கியம் பற்றிய அவர்களின் நூலும் குறிப்பிடத்தகுந்தன.உலக அளவில் தமிழ் மொழியியலுக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்தவர்.அவர்தம் மாணவர்களும்,மொழியியல் துறையும் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளனர்.உலக நாடுகள் பலவற்றிற்குச் சென்று தமிழின் சிறப்பையும், மொழியிலின் மேன்மையையும் வெளிப்படுத்தியவர்.




புதுச்சேரி சார்ந்த தமிழ் உணர்வாளர்கள்,அறிஞர்கள்,பேராசிரியர்கள் துணைவேந்தரின் உடலுக்குச் சிறப்புச்செய்ய அணி அணியாகப் புறப்பட்டவண்ணம் உள்ளனர்.
பின்னர் விரிவாக எழுதுவேன்.

புதுச்சேரியிலிருந்து...
மு.இளங்கோவன், பிற்பகல் 3.10