நீண்ட நாட்களாகத் திருவனந்தபுரம் செல்லவேண்டும் என்ற வேட்கை இருந்தது. உரிய சூழலும் காலமும் கனிந்துவரவில்லை. இலங்கை, வண்ணாரபண்ணையைச் சேர்ந்த தா. பொன்னம்பலம் பிள்ளையின் தொல்காப்பியத் தொண்டினையும், சைவ சமயப் பணியையும் அறிந்தபொழுது, அவர் பணியாற்றிய திருவனந்தபுரத்துக்குச் சென்றுவர வேண்டும் என்று திட்டமிட்டேன். போக்குவரவுக்கு வாய்ப்பாகத் தொடர்வண்டியில் பதிவுசெய்துகொண்டேன். கொப்பம்பட்டி சிவ. முத்துக்குமாரசாமியாரின் நெறிகாட்டலில் தொடர்வண்டிப் பயணம் எளிமையானது.
தா. பொன்னம்பலம் பிள்ளையின் பிறந்த தெரு, ஊர், நாடு சார்ந்தவர்களைக் கடந்த ஆறு திங்களாகத் தொடர்புகொண்டும் போதிய விவரங்களைப் பெற இயலாமல் தேடிக்கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைப் பேராசிரியர் இரகுபரன் அவர்கள் எனக்கு அனுப்பிய சில குறிப்புகள் பொன்னம்பலம் பிள்ளை குறித்த ஆய்வில் முதலடி எடுத்து வைப்பதற்குத் துணையாக இருந்தன. அதன் பிறகுதான் தா. பொன்னம்பலம் பிள்ளையின் மகனார் மாசிலாமணி அவர்களையும் மாசிலாமணியாரின் துணைவியார் மங்களம்மாள் அவர்களையும் குறித்த விவரங்களைப் பல நூல்களின் வழியாக அறியலுற்றேன். தா. பொன்னம்பலம் பிள்ளை திருவிதாங்கூர் அரண்மனையில் ஆணையராகப் பணியாற்றிய விவரம் பல குறிப்புகளில் உறுதிப்பட்டது. எனவே திருவனந்தபுரத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் சக்குடி பொ. சீனிவாசன் அவர்களிடம் என் திருவனந்தபுரத்துச் செலவு குறித்து உரையாடி, என் வருகையை உறுதிப்படுத்தினேன். தமக்குக் கல்லூரித் தொடங்கி நடைபெற்று வருவதாகவும். தம் ஆய்வு மாணவர் திரு. முனிராஜ் தொடர்வண்டி நிலையம் வந்து வரவேற்பார் எனவும் சக்குடி பொ. சீனிவாசன் தெரிவித்தார்.
ஒரு கிழமைக்கு முன்பாகத் திருவனந்துபுரத்து நண்பர்களிடம் தா. பொன்னம்பலம் பிள்ளையின் நூல்கள், வாழ்க்கைக் குறிப்புகள் குறித்த விவரங்களைக் கேட்டவண்ணம் இருந்தேன். அனைவரும் தெரியவில்லை என்றே உரைத்தனர். ஓரிரு நாள்களுக்கு முன்பாகத் திருவனந்தபுரத்தின் பேராசிரியர் நைனார் அவர்களிடம் என் வருகையைத் தெரிவித்தேன்.
சைவப்பிரகாச சபை சார்ந்த முனைவர் கு. குற்றாலம் பிள்ளை அவர்களிடமும் பேசினேன். மேலும் சபையின் செயலாளர் சைவத்திரு. திருநாவுக்கரசு ஐயாவிடம் பேசி, தா. பொன்னம்பலம் பிள்ளை அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்குத் திருவனந்தபுரம் வரும் நோக்கத்தினைச் சொல்லி, என்னுடன் உரையாடுவதற்கு அன்புகூர்ந்து நேரம் ஒதுக்குங்கள் என்று சொல்லியிருந்தேன்.
02.06.2026 இரவு அனந்தபுரி விரைவு வண்டியில் புறப்பட்டு, 03.06.2026 காலை 9.30 மணிக்குத் திருவனந்தபுரத்தை அடைந்தேன். முனைவர் பட்ட ஆய்வாளர் முனிராஜ் அவர்கள் என்னை வரவேற்கும் முகமாகத் தொடர்வண்டி நிலையம் வந்திருந்தார். நாங்கள் முன்பே தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்வில் சந்தித்துள்ளோம். என் பேச்சினை அவர் பதிவுசெய்து, பாதுகாப்பதைக் காட்டியதும் வியப்பில் ஆழ்ந்தேன். இருவரும் ஒரு தானியில் ஏறிக்கொண்டு பேராசிரியர் சீனிவாசன் இல்லம் சென்றோம்.
சற்று
நேரத்தில் நான் குளித்து முடித்துப் புறப்படுவதற்கும், பேராசிரியர் சீனிவாசனார் இல்லம்
வருவதற்கும் சரியாக இருந்தது. இரண்டு நாள் பயணமாகத் திருவனந்தபுரம் வந்த காரணத்தைச்
சொன்னேன். இரண்டு நாளில் யார் யாரை, எப்பொழுது சந்திப்பது என்று திட்டமிட்டோம். அவருக்கு
அலுவலகப் பணி இருந்ததால் எங்களுக்குச் சில வழிகாட்டலைச் சொல்லிவிட்டு, சைவப் பிரகாச
சபையின் தலைவர் திருநாவுக்கரசு ஐயாவின் இல்லத்தில் கொண்டுவந்துவிட்டு, என்னை அறிமுகம்
செய்துவிட்டு, அவர் அலுவலகம் சென்றார்.
சைவப் பிரகாச சபையின் செயலாளர் திருவாளர் திருநாவுக்கரசு அவர்கள் பழுத்த சைவக் குடும்பத்தில் தோன்றிய பெருந்தகை ஆவார். திருவனந்தபுரத்தின் பழைய வரலாறுகளை விரல்முனையில் வைத்துள்ளவர். மாளிகை போன்ற தம் வீட்டைப் பராமரிக்க இயலாமையால், இப்பொழுது புதிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றார்கள். தா. பொன்னம்பலம் பிள்ளையின் சுருக்கமான வரலாற்றைச் சொல்லி, மேலதிக விவரம் வேண்டினேன். திருவனந்தபுரத்தின் நூற்றாண்டு வரலாற்றையும் அரசகுடும்பத்தின் நல்லறத் தொண்டுகளையும் நன்கு அறிந்து வைத்திருந்த அவரிடம் உரையாடியபொழுது, தா. பொன்னம்பலம் பிள்ளை காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்துள்ளார் என்ற விவரம் தெரிந்தது. பிற விவரங்களை அவராலும் நினைவுகூர இயலவில்லை.
எங்கள் உரையாடல் தருமபுரம் திருமடம், திருப்பனந்தாள் காசித் திருமடம் சார்ந்தும் அத்திருமடங்களின் குருமகா சந்நிதானங்களின் சமயப் பணிகள் குறித்தும் நீண்டது. பகலுணவுக்கு அரசு ஐயா அழைத்தார்கள். ஆனால் நாங்கள் பேராசிரியர் சீனிவாசனின் இல்லத்து உணவுக்காக வேறொரு தானியைப் பிடித்துக்கொண்டு, இல்லம் அமைந்துள்ள பிரேம்நகர் விரைந்தோம்.
பேராசிரியர்
சீனிவாசன் இல்லத்தில் அவரும், ஆய்வாளர் முனிராஜும், நானும் என மூவரும் பகலுணவு முடித்தோம்.
பிற்பகல் திட்டமிடலை வகுத்துக்கொடுத்த சீனிவாசனார் மீண்டும் அலுவலகம் சென்றார். நானும்
முனிராஜும் திருவனந்தபுரம் மாநில நடுவண் நூலகத்துக்குச்(Kerala State Central
Library) சென்றோம். பழம்பெருமை வாய்ந்த கட்டடக்கலை
நுட்பம் பொருந்திய அந்த நூலகத்தின் அரிய ஆவணங்களைப் பராமரிக்கும் பகுதிக்குச் சொன்று,
தா. பொன்னம்பலம் பிள்ளை குறித்த நூல்கள், குறிப்புகள், படங்களைத் தேடினோம். கணினியில்
உள்ளீடு செய்து பாதுகாக்கும் சிறப்பு மென்பொருளின் துணையுடன் தேடியும் எந்தக் குறிப்பும்
கிடைக்கவில்லை. அவர் இயற்றியதாகச் சொல்லப்படும் வஞ்சி மாநகர் நூலும் கிடைக்கவில்லை.
திருவிதாங்கூர் மேனுவல், அரசிதழ்களைப் பார்க்குமாறு நூலக அதிகாரிகள் நெறிகாட்டினார்கள்.
இரண்டு மணிநேரம் தேடியும் எந்தக் குறிப்பும் அங்குக் கிடைக்கவில்லை. நூலகத்தின் அலுவலர்கள்
அனைவரும் அன்புடன் உதவ முன்வந்தமை நெஞ்சில் நிலைபெற்றுள்ளது. இது நிற்க.
திருவனந்தபுரத்து
அரசு அலுவலகங்கள் அடைக்கும் மாலை நேரம் வந்ததால் சாலையில் போக்குவரவு கூடியது. நாங்கள்
வேறொரு தானியைப் பிடித்துக்கொண்டு அருகில் உள்ள பல்கலைக்கழகத்துக் கல்லூரிக்குச் சென்று,
தமிழ்த்துறையை அடைந்தோம். கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் அருணகிரி
அவர்களின் தலைமையில் அன்புடன் வரவேற்றனர். துறையின் பேராசிரியர்கள் அனைவரையும் ஓரிடத்தில்
கண்டமை மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ்த்துறையில் பணியாற்றிய மூத்த பேராசிரியர்களின்
படங்களைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் பாதுகாத்து வருவதுடன், அவர்களின் சிறப்புகளை
என்னிடம் பகிர்ந்துகொண்டனர். இக்கல்லூரியில்தான் தத்துவத்துறையில் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை
பேராசிரியராகப் பணியாற்றியதை நினைவூட்டினர். சுந்தரம் பிள்ளையின் நண்பராக விளங்கியவர்
நம் தா. பொன்னம்பலம் பிள்ளை என்பதை முன்னரே நான் அறிந்துள்ளேன். இரட்சண்ய யாத்திரிகம்
பாடிய எச். ஏ. . கிருட்டினப் பிள்ளை தமிழ்த்துறையில் பணியாற்றியதையும் அப்பொழுது அறியமுடிந்தது. அவர்தம் திருவுருவப் படம் துறையில்
போற்றிப் பாதுகாக்கப்படுகின்றது.
பேராசிரியர்களிடம்
விடைபெற்று மீண்டும், திருவனந்தபுரம் சைவப்பிரகாச சபைக்கு வந்தோம். சபை இன்னும் திறகப்படவில்லை.
தேநீர் குடித்து மீண்டும் திரும்ப நினைத்தோம். அந்தச் சாலையில்தான் எழுத்தாளர் நீல.
பத்மநாபன் இல்லம் உள்ளது என்று பேராசிரியர் சீனிவாசன் நினைவூட்டினார். நீல. பத்மநாபன்
நலம் குறைந்து, ஓய்வில் இருப்பதால் அவரைப் பார்ப்பது இடையூறாக இருக்கும் என்று நினைத்து,
அவர் வீட்டை மட்டும் பார்த்துவிட்டு, மீண்டும்
சைவ சபைக்கு வந்தோம்.
திருவாளர் அரசு ஐயா அவர்கள் சைவப்பிரகாச சபை குறித்தும், இங்குள்ள நூல்கள் குறித்தும் விரிவான விளக்கங்களைத் தந்தார். சபையின் வரலாறு நூற்றாண்டுப் பழைமைகொண்டது. 1885 ஆம் ஆண்டு, சித்திரைத் திங்கள் முதல் நாள் தோற்றம்பெற்ற சைவப்பிரகாச சபை திரவியம் பிள்ளை(வலிய மேலெழுத்து பிள்ளை). பெ.சுந்தரம் பிள்ளை, சுவாமிநாத பிள்ளை முதலான சான்றோர் பெருமக்களால் இச்சபை தோற்றம்பெற்று, வளர்ந்தது.
பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கே.என்.சிவராஜ பிள்ளை, தி. இலட்சுமணபிள்ளை முதலான அறிஞர்களால் மேலும் இச்சபை பெருமைபெற்று வளர்ந்தது. சபை பல நூல்களை வெளியிட்டுள்ளது. பல அறிஞர்களை உருவாக்கியுள்ளது. பலரைச் சொற்பொழிவாற்றச் செய்து, மிகச் சிறந்த சமயப்பணி ஆற்றிவருவதை அறிந்து மகிழ்ந்தேன். மாணவர்களுக்கான போட்டிகளை நடத்திப் பரிசு வழங்கிப் பாராட்டுகின்றது. அரசு ஐயா சபையில் உள்ள நூல்களின் பட்டியலை மென்படியாக எனக்கு வழங்கி உதவினார்கள். மேலும் சபை வெளியிட்ட அறிஞர் இரவீந்திரன் அவர்கள் வெளியிட்ட நூல்களையும் அவர்தம் பணிகளையும் எனக்கு அறிமுகம் செய்தார். திருவாளர் அரசு ஐயாவிடம் விடைபெற்றுக்கொண்டு நண்பர் சீனிவாசன் இல்லம் திரும்பி, இரவு ஓய்வெடுத்தோம்.
இரண்டாம் நாள் செலவு...
இரண்டாம் நாள் காலையில் பேராசிரியர் சீனிவாசனின் இல்லத்துக்கு அருகில் இருக்கும் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்துக்குச் சென்றேன். அங்குள்ள நூலகர் அன்புடன் வரவேற்று, நூலகச் சிறப்பைச் சொன்னார்கள். 1963 இல் தொடங்கப்பட்ட திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் வைர விழா கண்ட பெருமை பெற்றது.
இந்த நூலகத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் மொழிசார்ந்த நூல்கள் உள்ளன. தமிழ்நூல்கள் இருபத்தைந்தாயிரத்திற்கும் மேல் உள்ளன. திருவனந்தபுரத்துத் தமிழ்ச்சங்கத்திற்கு வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் கட்டி, இதழ்கள் தொடர்ந்து எனக்குக் கிடைப்பதற்கு வழிசெய்தேன். திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அறிவியல் அறிஞர் முத்துராமன் ஐயாவிடம் என் வருகையைத் தொலைபேசியில் பேசித் தெரிவித்தேன். தமிழ்ச்சங்கத்து நூலகத்தைப் பயன்படுத்தவும், சிறப்பு மலர்களைப் பெற்றுக்கொள்ளவும் வழிசெய்தார்கள்.
திருவனந்தபுரத் தமிழ்ச்சங்கத்தின் மகளிர் அணியின் பொறுப்பாளர்கள் சிலர் வருகைபுரிந்து,
தங்கள் நூல்களை அன்புடன் வழங்கி மகிழ்ந்தனர். அனைவரிடமும் உரையாடிக்கொண்டிருக்கும்பொழுது
பேராசிரியர் மா. நயினார் அவர்கள் வருகைபுரிந்து,
தம் தமிழ்ப்பணிகளையும் நூல் வெளியீட்டுப் பணிகளையும், திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்
குறித்தும், தமிழ்ப்பணியில் திருவனந்தபுரத்து அறிஞர்களின் பங்களிப்பையும் நினைவுகூர்ந்தார்கள். அவ்வகையில் முனைவர் நயினார் அவர்களின் நீலகண்ட சிவம், கிரிசித்தியானி வணக்கம், குருதிப்பூ முதலிய நூல்களை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். உரையாடலின் இடையில் பேராசிரியர் மோதிலால் நேரு அவர்களுடன் தொலைபேசியில் பேசித் தா. பொன்னம்பலம் பிள்ளை குறித்த சில விவரங்களைப்
பெற்றேன்.
திருவனந்தபுரம்
தமிழ்ச்சங்கம் சென்று நூலகத்தைப் பயன்படுத்தியமை வாழ்வில் இனிய பொழுதாகும். பெருங்கொடை
நல்கிய தமிழ்க்குடி மக்களால் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் பல்வேறு விழாக்களை நடத்தியும் விருதுகளை வழங்கியும் தமிழ்ப்பணியாற்றி வருகின்றது. இச்சங்கத்தின் பணிகளை அறிந்த தமிழக அரசும் பிற
தனியார் அமைப்புகளும் சங்கத்தைச் சிறந்த தமிழ்ச் சங்கமாகப் போற்றிப் பாராட்டி வருகின்றது.
கேரளத் தமிழ் என்னும் இதழின் வழியாகத் தமிழ்ச்சங்கத்துப் பணிகளை நாம் அறிந்துகொள்ள
இயலும்.மீண்டும் ஓர் அமைதிப்பொழுதில் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்துக்கு வருதல் வேண்டும்
என்ற நினைவுடன் அங்கிருந்தவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, பகலணவுக்குப் பேராசிரியர்
சீனிவாசனார் இல்லம் திரும்பினேன்.










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக