[தொல்காப்பியச் செம்மல் ஆ. காளியப்பன் கோவை மாவட்டம், பேரூரை அடுத்த பூலுவப்பட்டி ஊரினர். பேருந்து நடத்துநர்; அஞ்சல் அதிகாரி; தமிழாசிரியராகவும், துணைத் தலைமையாசிரியராகவும் பணியாற்றியவர். ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட பன்னூலாசிரியர். பேரூர் தவத்திரு மருதாசல அடிகளார், நா. க. நிதி ஆகியோரின் உதவியுடன் தொல்காப்பியருக்குச் சிலை நிறுவியவர். தொல்காப்பியக் கூட்டங்களை நடத்தித், தொல்காப்பியப் பரவலுக்கு வழிகண்டவர்].
தொல்காப்பியப் பணியிலும் தமிழ்ப் பணியிலும் தம் வாழ்க்கையை ஒப்படைத்துக்கொண்ட புலவர் ஆ. காளியப்பனார் கோயம்புத்தூர் மாவட்டம், பேரூருக்கு அருகில் உள்ள பூலுவப்பட்டியில் 13.05.1954 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் ஆறுக்குட்டி – முத்தம்மாள் என்பனவாகும். தொல்காப்பியர் தமிழ்ச் சங்கமம் என்னும் அமைப்பை நிறுவியவர். தொல்காப்பியருக்குச் சிலை எடுப்பித்த முயற்சியாலும், தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ் எழுதிய வகையிலும், தொல்காப்பியம் சார்ந்த மாதக் கூட்டங்கள், ஆண்டு விழாக்களை நடத்திவரும் வகையிலும் இவர்தம் தொல்காப்பியப் பணி ஈடு இணையற்றவையாகும்.
இளமைக் கல்வி:
ஆ.காளியப்பனார் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பூலுவப்பட்டியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பயின்றவர். ஆறு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை ஆலாந்துறை அரசு உயர்நிலைப்பள்ளியில்(1972) பயின்றவர். ஆலாந்துறைப் பள்ளித் தமிழாசான் “தமிழவேள்” ந. இராமசாமி இவர்தம் தமிழுணர்வுக்கும் கல்விக்கும் அடிப்படை அமைத்தவர் ஆவார். அருந்தமிழை ஊட்டியது பேரூர் சாந்தலிங்கர் தமிழ்க் கல்லூரியாகும். கல்லூரி நிறுவுநர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் இவர்தம் குடும்ப நிலையறிந்து, கல்லூரியில் தங்கிப் பயில்வதற்குரிய ஆதரவினை நல்கினார். கல்லூரியில் நல்ல மதிப்பெண் பெற்ற காளியப்பனார் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதர் தேர்வு எழுதி, வெற்றிபெற்றவர்.
இல்வாழ்க்கை:
ஆ. காளியப்பனாரின் துணைவியார் பெயர் அம்சவேணி என்பதாகும். இவர்களின் திருமணம் 01.09.1982 இல் நடைபெற்றது. இவர்களுக்கு இந்துமதி, உமாபதி என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.
கோவையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கிளை தொடங்கப்பட்டபொழுது அதன் செயற்குழு உறுப்பினராகச் செயல்பட்டவர். வேளாண்மை உழைப்புச் செய்யும் தொழிலாளர்களுடன் இணைந்து சங்கம் உருவாக்கி, அவர்களுக்கு எழுத்தறிவை ஊட்டும் பணியில் ஈடுபட்டவர். மே தினம் கொண்டாடி, செங்கொடி ஏற்றியவர். அதனால் பண்ணை முதலாளிகளால் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்டு, சிறைசென்றவர். பேருந்தில் பயணச்சீட்டு ஆய்வாளராகப் பணிசெய்தவர். அப்போது பள்ளி, கல்லூரி மாணாக்கருக்குப் பயணச்சலுகை அளித்து, அவர்களுக்கு உதவியவர். அஞ்சலகக் கிளை அதிகாரி பணி ஏற்றபொழுது ஊரில் அனைத்துக் குடும்பங்களையும் அஞ்சலகச் சிறுசேமிப்புத் திட்டத்தில் இணைத்து மக்களின் சேமிப்புப் பழக்கத்துக்கு வழிசெய்தவர். பணியோய்வுக்குப் பிறகு போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளித்து, அதன் மூலம் 6 ஆசிரியர்களும் 4 கிராம நிர்வாக அதிகாரிகளும் பணிபெற்றுள்ளனர். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நெறியாளராகச் செயல்படுபவர்.
ஒடிசாப் புயல், கொரானா பெருந்தொற்றுத் தாக்கம், நெல்லை வெள்ளப் பெருக்கு, வயநாடு நிலச்சரிவு என இயற்கைச்சீற்றங்களின்பொழுது முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கித் தம் கருணை உள்ளத்தை வெளிப்படுத்தியவர். பேரூர் கல்லூரிக்கு வளமான வகுப்பறை அமைக்க உரூ 10, 000 வழங்கியவர்.
காந்தி கலா நிலையம் பள்ளிக்கு ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு உதவ உரூ 50,0000 வைப்பு நிதி வைத்துள்ளவர். தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் கட்ட உரூ. 10000, அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவைக்கு உரூ 10,000 தந்தவர். தாம் பயின்ற ஆரம்பப் பள்ளிக்கு உருவா 17000 மதிப்புடைய அச்சுப்பொறி வாங்கிக் கொடுத்தவர்.
தமிழ்ப்பணி:
ஆ.காளியப்பனார் பெரிச்சிபாளையம் அரசு உதவிபெறும் இடைநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் இணைந்தவர். அதனை அடுத்து உடுமலை, கரட்டூர் காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியேற்றவர். பின்னர் முதுகலைத் தமிழாசிரியர், துணைத் தலைமையாசிரியர் பொறுப்புகளையும் அப்பள்ளி நிர்வாகம் இவருக்கு வழங்கியது.
120 -இற்கும் மேற்பட்ட கட்டுரைகள், பல நூல்களை எழுதியவர். கடந்த 26-04-2021 சித்திரை முழுநிலவு அன்று இவர் இயற்றிய தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ் நூல் பேரூர், தவத்திரு சாந்தலிங்கர் திருமடத்தில் வெளியிடப்பட்டது அந்நூல் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தமிழ் முதுகலை மாணாக்கர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழும் முனைவர் நா. க. நிதி, புலவர் ஆ. காளியப்பனார் இணைந்து பேருர் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்களின் பேராதரவில், உலகிலேயே முதன்முதலாக ஐம்பொன்னாலாகிய 270 கிலோ எடையுள்ள 6 இலட்சம் மதிப்புள்ள தொல்காப்பியர் சிலையைப் பேரூர் தமிழ்க்கல்லூரியில் திறப்பதற்கு முன்னோடியாக உழைத்தவர். சிலைத்திறப்பின் பொழுது தொல்காப்பியத்தை முழுமையாக மனனம் செய்த தேனிச் சிறுமிகளுக்கு 42 ஆயிரம் உரூபாய் வழங்கிச் சிறப்பித்தவர்.
செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரன் அவர்களைக் கொண்டு 10 நாட்கள் தொல்காப்பியம் பற்றிப் பேசவைத்து, அனைவருக்கும் தொல்காப்பிய அறிமுகம் ஆவதற்கு வழிசெய்தவர். இரா. இளங்குமரனாருக்குப் பணமுடிப்பும் வழிச்செலவும் வழங்கி மகிழ்ந்தவர். அதுபோல் தஞ்சை முனவைர் இரா. கலியபெருமாள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னை ஆய்வறிஞர் முனைவர் ப. மருதநாயகம், முனைவர் இ. சுந்தரமூர்த்தி, புதுச்சேரி முனைவர் ப. பத்மநாபன் ஆகிய தமிழ்ச் சான்றோர்களை அழைத்து வந்து தம் அமைப்பின் சார்பில் பேச வைத்தவர்.
பேரூர் ஆதீனம் அருள் ஆணைப்படி, ஆ. காளியப்பனார் தொல்காப்பியர் தமிழ்ச் சங்கமம் என்னும் அமைப்பினை 05-09-2017 இல் தொடங்கியவர். அரசுப் பதிவுடன் (110/2018) இவ்வமைப்பு இயங்கி வருகிறது. இவ்வமைப்பின் சார்பில் தொடர்ந்து 106 திங்கள்களைக் கடந்து, தொல்காப்பியச் சிறப்புரைகள் இடையறாது நிகழ்ந்து வருகின்றன. தொல்காப்பியப் பொழிவு கேட்க வருகின்றவர்களுக்கு நண்பகல் உணவும், கையுறையும் நூல்களும் வழங்கப்படுகின்றன. அதன்மூலம் சிறு எழுத்தாளர்கள் நூல்கள் வெளியிடப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டுள்ளனர். பல பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் பயிற்சிகள் வழங்கி, மேடையமைத்துத் தரும் பணியைக் காளியப்பனார் செய்துவருகின்றார்.
ஒவ்வொரு ஆண்டும் தொல்காப்பியர் நாள், திருவள்ளுவர் நாள், தாய்மொழி வளர்ச்சி நாள் கொண்டாடுவதில் ஆர்வம்கொண்டு செயல்படுபவர். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவினை வேற்று மாநிலத் தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து நடத்தி வருபவர். இதுவரை பத்தராவதி, புவனேசுவரம், புதுச்சேரி, அந்தமான், கொச்சி. மணிப்பூர் மோரே முதலான ஊர்களில் பொங்கல் விழாக்கள் நடைபெற்றுள்ளன.
தொல்காப்பியச் சங்கமம் மூலம் தொல்காப்பியத்தை ஆய்வு செய்யும் ஒரு மாணவனுக்கு ஆண்டுதோறும் உரூ. 10500 வழங்கும் வகையில் வைப்பகத்தில் உரூ 1,50,000 இவர் முயற்சியால் வைப்புத்தொகை வைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் புலவர் ஆ. காளியப்பனார் அவர்களுக்கு உள்ள ஈடுபாட்டால் தொல்காப்பியா, தொல்காப்பியன் எனப் பெயர் வைக்கும் குழந்தைகளுக்கு உரூ 5000 வழங்கவும் வழிசெய்துள்ளார்.
16-4-2022 அன்று தொல்காப்பியர் நாள் விழாவினைப் பேரூர் அடிகளார் முன்னின்று நடத்தி வைத்தார். அப்போது அமெரிக்கா, மலேசியா நாடுகளைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர். கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் அரசு விருது பெறும் விருதாளர்களை அழைத்துச் சிறப்புச்செய்து அவர்களை ஊக்கப்படுத்தும் பணியைத் தொய்வின்றிச் செய்து வருபவர்.
ஆ. காளியப்பனாரின் வாழ்க்கை வரலாற்றினைப் பேரூர் தமிழ்க்கல்லூரி “கொங்கு நாட்டு யாப்பறி புலவர்கள்” என்ற நூலாக வெளியிட்டுச் சிறப்பித்து உள்ளது. கொச்சி தமிழ் ஐக்கியச் சங்கமும், எர்ணாகுளம் தமிழ் இலக்கிய வட்டமும் இணைந்து கேரள உயர்நீமன்றத் தலைமை நீதியரசர் P.S கோபிநாதன் அவர்களின் கையால் இவருக்குத் “தொல்காப்பியச் செம்மல்” எனும் விருதினை வழங்கியுள்ளது.
தலைநகர் (புது தில்லி) தமிழ் கலை இலக்கிய மாநாட்டில் இவருக்குத் “தொல்காப்பியர் விருது” வழங்கப்பட்டது. இவர்தம் புலமையை உணர்ந்த பேரூர் மற்றும் காமாட்சிபுரி ஆதீனங்களின் அதிபர்கள் இவரைத் தத்தம் ஆதீனப் புலவராக அமர்த்திப் பெருமைசேர்த்துள்ளனர்.
உடல்நலம்
பாதிக்கப்பட்ட நிலையிலும் தமிழுக்குத் தொண்டாற்றும் ஆ. காளியப்பனார் போன்ற
தமிழ்த்தொண்டர்களால்தான் தமிழ் நிலைபெற்று வருகின்றது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக