[முனைவர் கா. இராசமாணிக்கம் புதுச்சேரியில் வாழ்ந்துவரும் இசை, நாட்டிய அறிஞர் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக வாய்ப்பாட்டினைப் பயின்றவர். இளங்கலை – நாட்டியம் பயின்றவர். நாட்டியத்திற்கான தமிழ் உருப்படிகளில் இசை அமைதி என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இலக்கியங்களை நாட்டிய வடிவில் வழங்கிப் புகழ்பெற்றவர். பல்லாயிரம் மாணவர்களுக்கு இசை, நாட்டியம் பயிற்றுவித்து வருபவர்.]
கா. இராசமாணிக்கம் அவர்கள் 19. 07. 1963 இல் புதுச்சேரியில் உளைவாய்க்கால் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் பெயர் காத்தவராயன் – பச்சையம்மாள் என்பனவாகும். வில்லியனூர் விவேகானந்தா பள்ளியில் இளமைக் கல்வியை நிறைவு செய்தபின்னர். முத்தரையர்பாளையம் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பினைப் பயின்றவர்.
முனைவர் கா. இராசமாணிக்கம் அவர்கள் இசைத்துறையிலும் நாட்டியத்துறையிலும் பேரறிவுபெற்ற பெருந்தகையாளர். இவரும் இவரின் குடும்பத்தாரும் இசைத்துறைக்கும் நாட்டியத்துறைக்கும் ஆற்றிவரும் பங்கு சிறப்பிற்குரியனவாகும். முனைவர் கா. இராசமாணிக்கம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசை மாமணி என்னும் பட்ட வகுப்பில் நான்கு ஆண்டுகள் பயின்று வாய்ப்பாட்டில் புலமைபெற்றவர். கலைக்காவிரி இசைக்கல்லூரியில் பயின்று நாட்டியத்தில் இளங்கலைப் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இசையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். நாட்டியத்திற்கான தமிழ் உருப்படிகளில் இசை அமைதி என்னும் பொருளில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வழியாக முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக மேடைகளில் பாடிவரும் இவர், தஞ்சாவூர் கே. பி. கிட்டப்பா பிள்ளை அவர்களிடம் நாட்டியம் பயின்ற சீடர் ஆவார்.
1992 ஆம் ஆண்டு முதல் சங்கீத சலங்கை நாட்டியாலயா – கலையருவி என்னும் இசை நாட்டியப் பள்ளியை நடத்திப் பல்லாயிரம் மாணவர்களுக்கு, இசை நாட்டியத்தைப் பயிற்றுவித்து வருபவர். ஆதித்யா வித்யாசரமம் பள்ளியில் கடந்த இருபது ஆண்டுகளாக இசைத்துறை இயக்குநராக இருந்து பல மாணவர்களுக்கு இசையைப் பயிற்றுவித்து வருபவர். மாணவர்கள் நாட்டியக்கலையையும் இவரிடம் பயின்று வருகின்றனர்.
கா. இராசமாணிக்கம் பாடிய ஒலிவட்டுகள்
- இது நல்ல தருணம்
- மணல்மேட்டு மழலைகள்
- நாட்டியப் பாடல்கள்
- பாரதியார் பாரதிதாசன் பாடல்கள்
நாட்டியப்பணி
- அருங்கலைச்செல்வி ஆயி
- வளம் காண வாருங்கள்
- நிலமகள் நலம் காப்பாள்
- இராமாயணம்(சீதா கல்யாணம்)
- வீரத்தாய் (பாரதிதாசன்)
- மகுடத்தின் மணிகள்
- ஒரு காற்சிலம்பு நியாயம் கேட்கிறது.
- பாரதி போற்றுதும்
- புரட்சிக்கவி
- கொடி முல்லை(வாணிதாசன்)
ஆவணப்படங்களில் பாடியமை
- பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம்
- விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம்
அயல்நாட்டுப் பயணம்
பிரான்சு, செர்மனி, சுவிசர்லாந்து, டென்மார்க்கு, மலேசியா, ரியூனியன், கம்போடியா முதலான நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.
சங்கீத நாடக அகாதெமி, தென்னகப் பண்பாட்டு மையம் முதலிய நிறுவனங்களில் உறுப்பினராக இருந்து கலைத்தொண்டு செய்துள்ளார்.
இல்வாழ்க்கை
கா. இராசமாணிக்கம் அவர்கள் இராஜேஸ்வரி அவர்களை
1989 இல் திருமணம் செய்துகொண்டவர். இவரும் மிகச்சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர் ஆவார்.
இவர்களுக்கு இராஜ்குமார், இரஞ்சனி என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். அனைவரும்
இசைக்கலையை முறைப்படி பயின்று, பரப்பி வருகின்றனர். இக் கலைக்குடும்பம் தமிழ்போல் தழைத்து
இனிது புகழ்பெறுக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக