[திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்துவரும் பேராசிரியர் சு. திருஞானம் அவர்கள் இயற்பியல் பேராசிரியர் ஆவார். முசிரியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மிகச் சிறந்த சித்தமருத்துவ அறிஞர்; வர்மக்கலை வல்லுநர்; இசையாய்வாளர். மூலிகை மருத்துவம் குறித்துப் பல நூல்களை எழுதியவர். அறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் தாள முழக்கியல் என்னும் நூலைப் பதிப்பித்து வெளியிட்ட பெருமைக்குரியவர்.]
திருச்சிராப்பள்ளியில் யான் முனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்தியபொழுதில் (1993-1997) எனக்கு அறிமுகமானவர் பேராசிரியர் சு. திருஞானம் ஆவார். கொடுங்கூர் வறுமைப்பிடியில் நான் சிக்கியிருந்து, ஆய்வேடு எழுதப்பெற்றும் அதனைத் தட்டச்சிட்டு வழங்க இயலாமல் தத்தளித்தபொழுது என் ஆய்வேட்டை வடிவமைத்து, அச்சிட்டு அந்நாளில் தந்த பெருமை பேராசிரியர் சு. திருஞானம் ஐயாவுக்கும் அவர்களின் அருமைத் திருமகளார் தி. மதியரசி அவர்களுக்கும் உரியதாகும்.
நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வேடு அளித்து முனைவர் பட்டம் பெற்ற பிறகு, ஒராண்டு இடைவெளியில் பத்துத் திங்கள் இசையறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் உதவியாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது திருச்சிராப்பள்ளி, கலைஞர் கருணாநிதி நகரில் இசையறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் சிறப்புப் பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வேற்பாட்டைச் செய்தவர் பேராசிரியர் சு. திருஞானம் ஆவார்.
வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் இசையாய்வு சார்ந்த உரையால் அமையும் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவது யார்? என்று நினைந்தபொழுது தமிழ்த்தந்தி சிவலிங்கனார் அவர்கள் தலைமை தாங்கியதாக நினைவு வருகின்றது. திருச்சிராப்பள்ளி சார்ந்த அறிஞர்கள் பலர் அவ்வுரை கேட்க வந்திருந்தனர். நானும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரைகேட்டேன். அப்பொழுதுதான் இயற்பியல் பேராசிரியராகிய சு. திருஞானம் அவர்களின் இசைத்துறைப் புலமையை அறிந்தேன். அவர்களுக்கு இசையின் மீது இருந்த ஈடுபாட்டால்தான் வீ. ப. கா. சுந்தரத்தின் பழந்தமிழ் இலக்கியத்தில் தாள முழக்கியல்(1995) என்னும் நூலை வெளியிட்டிருந்தார்கள். ஒலியியல் துறையில் வல்லுநர் என்பதால் திருஞானம் ஐயாவுக்கு இசை குறித்த மிகச் சிறந்த ஆராய்ச்சி அறிவு இருந்ததை அன்பர்கள் வழியாக அறிந்துகொண்டேன்.
பேராசிரியர் திருஞானம் ஐயா அவர்கள் சித்த மருத்துவத்தில் வல்லவர் என்பதும், தம் பேராசிரியர் நண்பர்களுக்கும் பிற பொதுமக்களுக்கும் சித்தர் வழியில் மருந்துகளை உருவாக்கி, நோய்நீக்கும் பணியைச் செய்து வருவதையும் அவரிடம் மருந்து வாங்கி உண்டு, நலம்பெற்றவர்களையும் நான் நன்கு அறிவேன்.
காலச்சக்கரம் பலவாண்டுகள் உருண்டுகொண்டிருந்தது. யானும் பணியின் பொருட்டுப் பல ஊர்களில் வாழ நேர்ந்தது. எனினும் திருச்சிராப்பள்ளி அன்பர்கள் யாரையேனும் காண நேர்ந்தால் திருஞானம் ஐயாவின் நலம் வினவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதுபோல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராக விளங்கும் பேராசிரியர் தி. அருட்செல்வி அவர்களைக் காணும்பொழுதும் தந்தையாரின் நலம் கேட்டு, மனம் நிறைவடைவேன்.
அண்மையில் திருச்சிராப்பள்ளிக்குத் தமிழகன் ஐயாவின் நூல் வெளியீட்டு விழாவுக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்தபொழுது பேராசிரியர் சு. திருஞானம் ஐயா அவர்களை நேரில் கண்டு, நலம் அறிந்து மகிழ்ந்தேன். அவர்களின் சித்த மருத்துவப்பணி, தமிழ்ப்பணிகளை அறிந்து உவந்தேன். உலகத் தமிழர்களின் பார்வைக்கு நம் காலத்தில் வாழும் சித்த மருத்துவப் பேரறிஞர் ஒருவரின் தமிழ் வாழ்வை அறிமுகம் செய்துவைப்பதில் மகிழ்கின்றேன்.
பேராசிரியர் சு. திருஞானம் அவர்களின் அறிவுலக வாழ்க்கை:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நாட்டரசன்கோட்டையில் வாழ்ந்த சு. அம்மாளு, மா. சுப்பையா ஆகியோரின் அன்புமகனாக 09.11.1942 இல் பேராசிரியர் சு. திருஞானம் அவர்கள் பிறந்தவர். ஈச்சங்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றவர். அதன் பிறகு கோவிலூர் அரசு உயர்தொடக்கப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்றவர். ஒன்பது முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை திருவையாறு சீனிவாசராவ் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர்(1955-58). மன்னர் சரபோஜி கல்லூரியில் புகுமுக வகுப்பு, இளம் அறிவியல் வகுப்பு - இயற்பியல் பிரிவில் பயின்றவர். முதுநிலை அறிவியல் படிப்பினைத் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரியில் பயின்றவர்(1963-1965). சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் (M.Phil.) படிப்பினைப் படித்து, நிறைவுசெய்தவர். இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டயங்களையும் பெற்றவர்.
பேராசிரியர் பணி
பேராசிரியர் சு. திருஞானம் அவர்கள் தஞ்சாவூர், திருபுட்பம் கல்லூரியில் 1965-66 இல் தம் பேராசிரியர் பணியைத் தொடங்கியவர். பின்னர்த் திருச்சிராப்பள்ளி, பெரியார் அரசு கலைக்கல்லூரி, மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர் முதலான ஊர்களில் அமைந்துள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றி, நிறைவாக முசிரி அரசு கலைக்கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வுபெற்றவர்(1999-2001). தமிழகத்துக் கல்லூரிகளில் பணியாற்றிப் பல்லாயிரம் மாணவர்களுக்குப் பயிற்றுவித்த பெருமைக்குரியவர்.
1986 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் பரம்பரை சித்த மருத்துவரிடம் முறையாகப் பயிற்சிபெற்று, இதுவரை தொடர்ந்து சித்த மருத்துவத்துறைக்குப் பங்களிப்பு நல்கிவருபவர். மருந்து செய்முறையிலும், நோய் நாடுவதிலும், நோய் முதல்நாடுவதிலும் அதுதணிக்கும் முறையினையும் நன்கு அறிந்த அறிஞர் இவர்.
இசைத்தமிழ் ஈடுபாடு
1965 இல் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் நூலினைப் படித்து, ஆராய்ந்ததிலிருந்து பேராசிரியர் சு. திருஞானம் அவர்களுக்கு இசையில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. யாழ்நூல் உள்ளிட்ட இசையாய்வு நூல்களைப் பயின்று இசை நுட்பங்களை அறிவதற்குப் பொன்மலை ஜி.கே.கணேசன் என்ற இசையாசிரியரிடம் 1970 முதல் 1972 வரை முறையாக இசைப்பயிற்சி பெற்றவர்.
அனைத்து இந்திய வானொலி நிகழ்வுகளில் பங்குகொண்டு, ஒலி எவ்வாறு உண்டாகின்றது? எக்ஸ் கதிர்கள், லேசர் குறித்த பொருண்மைகளில் உரையாற்றியுள்ளார். அதுபோல் தினம் ஒரு மூலிகை என்னும் தலைப்பிலும் பலநாள் வானொலியில் உரையாற்றியுள்ளார்.
மூலிகைப் பயன்பாடு, மூலிகைகளைக் காட்சிப்படுத்தல் என்ற வகையில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு மூலிகை குறித்த விழிப்புணர்வு ஏற்படுதவற்குப் பல அமைப்புகளுடன் இணைந்து, மூலிகைக் கண்காட்சிகளை நடத்தியவர்.
இல்வாழ்க்கை:
பேராசிரியர் சு. திருஞானம் அவர்கள் 1968 ஆம் ஆண்டு தி. செயலட்சுமி அவர்களை இல்வாழ்க்கைத் துணையாக ஏற்றவர். இவர்களுக்குத் தி. அருட்செல்வி, தி. மதியரசி, தி. அருண்மொழி, தி. அம்பலவாணர் முதலிய மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.
பேராசிரியர் சு. திருஞானம் அவர்களின் தமிழ்க்கொடை:
1. இயற்பியல் துணைப்பாட நூல் (பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்காக)
2. மூலிகை மருத்துவம் – தொகுதி (1992)
3. திருக்கோவில் மரங்களின் மருத்துவப் பயன்கள்(1998)
4. Indian medicinal Plants and Home
Remedies (2010)
5. மூலிகை மருத்துவம் (2015)
பேராசிரியர் சு. திருஞானம் அவர்களின் முயற்சியால் இசையறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் தாள முழக்கியல் என்ற அரிய நூல் வெளிவந்தமையும் போற்றுதலுக்கு உரியது.
சித்த மருத்துவத்துறைக்கும், இசைத்துறைக்கும் தொண்டாற்றியுள்ள பேராசிரியர் சு. திருஞானம் அவர்களை அரசு அமைப்புகளும், தனியார் அமைப்புகளும் அழைத்துப் போற்றும் நாளே தமிழுக்கு ஆக்கமான நாளாக இருக்கும்.
இயற்பியல் அறிஞராகத் துலக்கம்பெற்று, சித்த
மருத்துவ வல்லுநராக ஒளிவீசி, இசையாராய்ச்சியாளராக நிறைவாழ்வு வாழ்ந்துவரும் பேராசிரியர்
சு. திருஞானம் அவர்கள் தமிழ் வாழும் காலம்வரை நிலைத்த புகழ்பெற்று வாழ நெஞ்சார வாழ்த்துகின்றேன்.






