[புலவர் கரு. சின்னத்தம்பி அவர்கள் உடுமலைப்பேட்டையை அடுத்த பெருமாள்புதூரில் உழவர்குடியில் பிறந்தவர். ஓவிய ஆசிரியராகப் பணியைத் தொடங்கித் தமிழாசிரியராக மலர்ந்தவர். “முல்லைக் காடு” என்னும் கையெழுத்து ஏடு நடத்தியவர். பன்னூலாசிரியர்; தமிழகத் தமிழாசிரியர் கழகத்தில் பொறுப்பு ஏற்றவர். இவர் இயற்றிய திருமூர்த்திக் குறவஞ்சி சிற்றிலக்கிய வகையில் புதுமையான நூலாகும்.]
புலவர் கரு. சின்னத்தம்பி அவர்கள் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் பெருமாள்புதூர் (கரட்டுப்புதூர்) என்னும் ஊரில் வாழ்ந்த பெ. கருப்பண்ணன், கருப்பாத்தாள் ஆகியோரின் அன்பு மகனாக 04.03.1947 இல் பிறந்தவர். ஊரை ஒட்டிய சிறு கரடும் அதன்மீது சிறு பெருமாள்கோவிலும் உள்ளதால் பெருமாள்புதூர் என்று இவ்வூர் அழைக்கப்படுகின்றது.
கரு. சின்னத்தம்பி முதல் வகுப்பையும் இரண்டாம் வகுப்பையும் திண்ணைப்பள்ளியில் பயின்றவர். மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பெருமாள் புதூர் தொடக்கப்பள்ளியில் பயின்றவர். ஆறு முதல் பள்ளியிறுதி வரையிலான வகுப்புகளைக் குமரலிங்கம் “போர்டு” பள்ளியில் பயின்றவர். 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் ஆர்வம் காட்டியதால் படிப்பில் கவனம் சிதறியது. இதனால் பள்ளியிறுதி வகுப்பில் மதிப்பெண் குறைந்தது. 1965 இல் ஒண்டிப்புதூரில் தங்கி, ஓவியப் பயிற்சி பெற்று, தமிழக அளவில் 16 வது இடத்தில் தேர்ச்சி பெற்றவர். 1967 நவம்பர் 29 இல் சல்லிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். 1968 இல் நிரந்தர ஓவிய ஆசிரியர் பணி இவருக்கு அமைந்தது. ஓவிய ஆசிரியராக இருந்தபொழுது முல்லைக்காடு என்னும் பெயரில் கையெழுத்து இதழினை நடத்தி, மாணவர்களின் படைப்பாற்றலை வளப்படுத்தியவர்.
கரு. சின்னத்தம்பி கல்வி மீது இருந்த ஆர்வம் காரணமாகப் புகுமுக வகுப்பினைப் பயின்று, நிறைவுசெய்தவர். ஆசிரியர் அரங்கநாதன் அவர்களின் நெறிகாட்டலில் புலவர் புகுமுக வகுப்பில் இணைந்து 1973 இல் புலவர் பட்டயத்தைச் சென்னைப் பல்கலைக்கழகம் வழியாகப் பெற்றவர். மேலும் சென்னைப் பல்கலைக்கழகம் வழியாகப் பயின்று, தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களையும் பெற்றவர் மதுரைப் பல்கலைக்கழகம் வழியாகப் பயின்று, பி.எட். பட்டம் பெற்றவர். கரு. சின்னத்தம்பி வரலாற்றுத் துறையிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
வால்பாறை
சின்கோனா அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியுயர்வுபெற்றுப் பணியாற்றியவர்.
பின்னர்க் குடிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
கரு. சின்னத்தம்பி அவர்கள் தம் இருபதாம் அகவையில் (1969) கருப்பாத்தாள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்குச் சி. மதிவாணன் என்ற மகனும் சி. தாமரைச்செல்வி என்ற மகளும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர்.
உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1991 இல் தமிழாசிரியராகப் பணியில் இணைந்து 2005, மே மாதம் வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கரு. சின்னத்தம்பி அவர்கள் ஆசிரியர் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றவர். பகுத்தறிவுச் சிந்தனையும், சீர்திருத்த எண்ணங்களும் கொண்ட கரு. சின்னத்தம்பி அவர்கள் தம் படைப்புகளில் இக்கருத்துகளைக் குழைத்து எழுதியுள்ளார். இவர் எழுதிய திருமூர்த்திக் குறவஞ்சி நூல் சிற்றிலக்கியங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது.
திருமூர்த்தி மலையில் எழுந்தருளியுள்ள முருகனின் சிறப்பினைக் கூறும் வகையில் இப்பகுதியின் இயற்கை வளம் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இளம் அகவையில் திருமூர்த்தி மலைப்பகுதியில் சுற்றித் திரிந்து, இயற்கை அழகைச் சுவைத்தமை இப் படைப்பு நூலில் பளிச்சிடுகின்றன. இவர் இயற்றிய இச் சிற்றிலக்கியத்தில் இடம்பெறும் முருகன் - வள்ளி ஆகியோர் தமிழ் அடையாளமாகக் காட்டப்பட்டுள்ளனர். திருமூர்த்தி மலையில் சீர்திருத்தக் கருத்துகள் ஒலிப்பதை இச்சிற்றிலக்கியம் எடுத்துக்காட்டுகின்றது. சிங்கன் - சிங்கி உரையாடலில் சிங்கிக்குக் கிடைத்துள்ள அணிகலன்கள் யாவும் சூலூர் பாவேந்தர் பேரவை, திருக்குறள் பேரவை, கருவூர் திரு.வி.க. மன்றம், பாவலரேறு தமிழ்ப் பாசறை, பொள்ளாச்சி கம்பன் தமிழ்ச்சங்கம் முதலான அமைப்பினர் நல்கியவை என்று குறிப்பிட்டுள்ளமை இவர்தம் புதுமை விரும்பும் உள்ளத்துக்குச் சான்றாகும்.
கரு. சின்னத்தம்பியின் “திசைகள் முடிவதில்லை” என்னும் பாத்தொகுப்பு தமிழ் உணர்வு செறிந்த பாடல்களின் தொகுப்பாக விளங்குகின்றது. 95 தலைப்புகளில் அமைந்த பாக்களில் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது. புலவர் சு. நஞ்சப்பன், புலவர் துரை. தில்லான், புலவர் க. வீ. வேதநாயகம், புலவர் அருணா. பொன்னுசாமி, புலவர் க. வஞ்சிமுத்து, புலவர் தி. ஆறுமுகம் முதலான அறிஞர் பெருமக்களின் அணிந்துரைகளுடன் வெளிவந்துள்ள இந்த நூலில் இடம்பெறும் பாடல்கள் யாவும் தமிழ் உணர்வு, தமிழ் இசை, தமிழ்த்தொண்டர் பணிளை அறிமுகம் செய்வதாக உள்ளன.
கரு.
சின்னத்தம்பி அவர்களின் பணிகளைப் பாராட்டிப் பல்வேறு அமைப்பினர் இவருக்குச் சிறப்பு
ஆரம் (விருது) நல்கியுள்ளனர். அவற்றுள் தமிழகத் தமிழாசிரியர் கழகம் வழங்கிய “திருக்குறள்
மாமணி”, கருவூர் திரு.வி.க. மன்றம வழங்கிய “கவியருவி”, உடுமலை இளங்கோவடிகள் முத்தமிழ்
மன்றம் வழங்கிய “திருவள்ளுவர் தமிழ்க் கதிர்”, கோவை கவையன்புத்தூர் தமிழ்ச்சங்கம் வழங்கிய
“குறள் செம்மல்” ஆகிய சிறப்பு ஆரங்கள் இவரின் சிறப்புரைப்பனவாகும்.
கரு. சின்னத்தம்பி அவர்கள் தம் பணியோய்வுக்குப் பிறகு மடத்துக்குளம் அருகில் உள்ள சோத்தம்பட்டியில் தம் தோட்டத்தில் வேளாண்மைப் பணிகளில் ஈடுபட்டு, அமைதி வாழ்க்கை வாழ்ந்துவருகின்றார்.
புலவர் கரு. சின்னத்தம்பியின் படைப்புகள்
1. சிலிர்ப்பு(பாத்தொகுப்பு) 2003
2. நீரோட்டம்(குறுங்காவியம்) 2006
3. திசைகள் முடிவதில்லை(பாத்தொகுப்பு) 2022
4. ஓடைக்கரைத் தாழம்பூ(குறுங்காப்பியம்)
2024
5. திருமூர்த்திக் குறவஞ்சி(சிற்றிலக்கியம்)
2025
6. வேரில் வீழும் தூறல் (பாத்தொகுப்பு) 2025
வெளிவர வேண்டியவை:
7. தாகம் தீர்ந்ததா?
8. சிறைமீட்ட செந்தமிழ்
9. பகைபோக்கிய பைந்தமிழ்
10. நட்புக் காத்த நற்றமிழ்
11. குமுறும் நெஞ்சம்
12. வாழ்க்கைச் சுழல்
13. விதிகாட்டுமா சதி




.jpeg)

.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக