[மோ. இசரயேல் மொழியியல் பேராசிரியர் ஆவார். ஒடிசாவின் பழங்குடி மக்களின் மொழியான குவி மொழி குறித்து ஆய்வு செய்து, நூல் எழுதியவர். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் பர்ரோ அவர்களின் மேற்பார்வையில் முதுமுனைவர் பட்ட ஆய்வு செய்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெருமைக்குரியவர்]
பேராசிரியர் மோ. இசரயேல் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகில் உள்ள செம்பொன்விளை என்னும் சிற்றூரில் 24.12.1932 பிறந்தவர். இவர்தம் தந்தையார் பெயர் மோட்சக்கண் என்பதாகும். மோ. இசரயேல் எட்டாம் வகுப்பு வரை பள்ளியில் முறைப்படி பயின்றவர். தம் முயற்சியின் துணைக்கொண்டு தமிழ் வித்துவான் தேர்வெழுதித் தமிழாசிரியராகத் தம் பணியைத் தொடங்கியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். தம் முனைவர் பட்ட ஆய்வினைப் பேராசிரியர் மு. வரதராசன் அவர்களின் நெறிப்படுத்தலில் 1965 இல் செய்தவர். இவர்தம் முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு “Treatment of Morphology in Tolkappiyam” என்பதாகும்.
நாகர்கோவில் இந்துக்கல்லூரி, இசுகாட் கிறித்தவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். பிறகு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் 1968 இல் பணியில் இணைந்தவர். பின்னர் அப்பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியராக உயர்ந்தவர். இங்கிலாந்து, அமெரிக்கா, செர்மனி, உருசியா, பிரான்சு ஆகிய நாடுகளுக்குச் சென்று மொழியியல் சார்ந்த பேரறிவினைப் பெற்றவர். இவர் இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டி. பர்ரோ அவர்களின் மேற்பார்வையில் தம் முதுமுனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்தியவர்(1973-74). அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும், இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
பேராசிரியர் மோ. இசரயேல் அவர்களின் நெறிப்படுத்தலில் 31 பேர் முனைவர் பட்ட ஆய்வு செய்து, பட்டம் பெற்றுள்ளனர். ஆறு நூல்களையும் 175 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஒடிசாவின் பழங்குடி மக்கள் பேசும் குவி(Kuvi) என்னும் மொழியை ஆராய்ச்சி செய்து, அம் மொழிக்கு இலக்கணமும் அகராதியும் உருவாக்கியவர். இது இவர்தம் மிகச் சிறந்த அறிவுத்துறைப் பங்களிப்பாகும். இந்த ஆய்வு பின்னாளில் நூல் வடிவம் பெற்றது(1979). இந்த நூலுக்கு இசரயேல் அவர்கள் வரைந்துள்ள முன்னுரையும், பேராசிரியர் டி.பர்ரோ எழுதியுள்ள ஆய்வுரையும் குறிப்பிடத்தக்கன. இந்த நூலைத் தம் நெறியாளரும், பேராசிரியருமாகிய மு.வ. அவர்களுக்குப் படையல் செய்துள்ளமை மோ. இசரயேல் அவர்களின் நன்றியுணர்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
பேராசிரியர் மோ. இசரயேல் அவர்கள் தம் பல்கலைக்கழகப் பணியோய்வுக்குப் பிறகு தொடர்ந்து மொழியாராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர். பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவிலும் பல்வேறு பல்கலைக்கழக, கல்லூரிப் பாடத்திட்டக் குழுக்களிலும் இணைந்து பங்களிப்பு நல்கியவர். திராவிட மொழியியல் கழகத்திலும் பொறுப்பு ஏற்றுத் திறம்படப் பணியாற்றியவர். என்சைக்கிளோபீடியா ஆப் பிரிட்டானிக்காவிலும் இவர்தம் திராவிட மொழிகள் குறித்த கட்டுரை இடம்பெற்றுள்ளது. சென்னை ஆசியவியல் நிறுவனத்திலும் இவர் ஆட்சிக்குழுவில் இருந்துள்ளார்.
பேராசிரியர் மோ. இசரயேல் அவர்கள் கெலன் எமரால்டு அவர்களை 1962 இல் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு அருள் அரசு, அருள் அறம் என்னும் இருவர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். இவர்கள் இருவரும் பேராசிரியர்களாக உயர்ந்துள்ளனர்.
பேராசிரியர் மோ. இசரயேல் அவர்களின் தமிழ்க்கொடைகளுள் சில:
1. இலக்கண ஆய்வு- பெயர்ச்சொல், சிந்தாமணி வெளியீடு,
மதுரை, 1976
2. இலக்கண ஆய்வு- வினைச்சொல், சிந்தாமணி வெளியீடு,
மதுரை, 1976
3.
இடையும்
உரியும், சர்வோதயா இலக்கியப் பண்ணை, மதுரை, (1977)
4. A Grammar of THE KUVI LANGUAGE (1979)
நன்றி:
பேராசிரியர் வி. இரேணுகாதேவி, மதுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக