திருக்குறள் பெருமாள் (15.11.1914 – 28.07.2005)
[திருக்குறள் பெருமாள் புதுவை மாநிலத்தின் மூர்த்திக்குப்பம் ஊரினர். திருக்குறளையும் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் அனைத்தையும் மனப்பாடமாக ஒப்புவிக்கும் ஆற்றல் பெற்றவர். கடலூரிலிருந்து தென்மொழி இதழ் வெளிவந்தபொழுது, அதன் ஆசிரியர் பெருஞ்சித்திரனாருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் உதவியாக இருந்தவர். இவரின் இல்லம் தனித்தமிழ் அன்பர்கள் தங்கிச்செல்லும் இடமாக இருந்துள்ளது. பிரெஞ்சிந்திய விடுதலைப்போருக்குத் துணைநின்றவர். பாரதிதாசன், திருக்குறள் முனுசாமி ஆகியோரின் அன்பைப் பெற்றவர். அஞ்சல்காரராகவும் ஆசிரியராகவும் பணியாற்றி, நல்ல தமிழ்த்தொண்டர் என அனைவராலும் பாராட்டப்படுபவர்.]
திருக்குறள் குறட்பாக்களையும், பாவேந்தர் பாரதிதாசனார் பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்லி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் பேரறிவு பெற்றிருந்தவர் திருக்குறள் பெருமாள் ஐயா. புதுவை மாநிலம் பாகூருருக்கு அருகில் உள்ள மூர்த்திக்குப்பம் என்னும் ஊரில் வாழ்ந்த நாகப்பன், அமிர்தம்மாள் ஆகியோரின் மகனாக 15. 11. 1914 இல் பிறந்தவர்.
ஐந்தாம் அகவையில் திண்ணைப்பள்ளியில் அரியாங்குப்பம் ஜெகநாத ஆசிரியரிடம் கல்வி பயின்றவர். “அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை” என்று ஓதிப் படிப்பைத் தொடங்கியவர். இரண்டாம் வகுப்பு வரை மட்டும் படித்தவர். அப்பொழுது இவருக்கு குறிலும் நெடிலும் அறிமுகம் ஆயின. பாகூர்ப் பகுதியில் மேலும் படிக்க வாய்ப்பு இல்லாததால் தந்தைக்குத் துணையாக உழவுத்தொழிலில் ஈடுபட்டவர். ஊரில் பெரியோர்கள் – சான்றோர்கள் செய்யும் சொற்பொழிவுகளைக் கேட்டு, அரிய செய்திகளை மனத்துள் பதித்ததால் திருக்குறள் படிக்கும் ஆர்வம் இயல்பாக இவருக்கு ஏற்பட்டது.
மூர்த்திகுப்பத்துக்கு அருகில் உள்ள மணப்பட்டு என்னும் சிற்றூரில் 1944 முதல் 1950 வரை சிற்றூர்ப்புற மாணவர்களுக்குக் கல்வியைக் கற்பித்தவர். இவரிடம் பயின்ற பல மாணவர்கள் புதுச்சேரியில் ஆசிரியர்களாகவும் அதிகாரிகளாகவும் அமைச்சர்களாகவும் உயர்ந்துள்ளனர். “சத்திய சோதனை” என்னும் நூலினைப் படித்து, நாட்டு மக்களுக்காக உழைத்த பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட பாடலைப் பாடிக்காட்டியதை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு யாரோ தெரிவித்துவிட்டனர். இதனால் ழாந்தர்மேரி என்ற காவல்துறை அதிகாரி இவருக்குப் பல்வேறு தொல்லைகளை வழங்கியுள்ளார். அதனால் அருகில் உள்ள ஆங்கில இந்தியப் பகுதியான கடலூருக்குச் சென்றார். அங்கு இயங்கிய “பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டக்குழு”வில் 20.04.1950 இல் இணைந்து, கடலூருக்கு அருகிலுள்ள புதுவைப் பகுதிகளில் விடுதலைக்குக் குரல்கொடுத்தவர். தொண்டர்படைத் தலைவர் நெதலாவுக்கும் புதுவை வழக்கறிஞர் செல்லான் நாயக்கர் அவர்களுக்கும் ஒற்றனாக இருந்து, விடுதலைப் போராட்டச் செய்திப் பரிமாற்றத்திற்குத் துணைநின்றவர். அப்பொழுது புதுக்குப்பம் சி. நாராயணசாமி அவர்களுக்கு உதவிபுரிந்தவர்.
திருக்குறள் பெருமாள் உடல் வலிமையும் மன உறுதியும் மிக்கவர். துணிச்சல் மிகுதியாக இருந்ததால் யாருக்கும் அஞ்சாமல் பொதுப்பணிகளில் ஆர்வமாக ஈடபட்டவர்.
திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களின் “குறள்மலர்” என்ற வார இதழுக்குத் தொண்டாற்றியுள்ளார். இந்த இதழ் கடலூரிலிருந்து வெளிவந்தது. 1949 முதல் தொடங்கப்பட்ட திருக்குறள் அச்சகத்திலிருந்து இந்த இதழ் வெளிவந்தது. குறள்மலர் இதழில் பணியாற்றியதாலும், திருக்குறளை மக்களிடம் தொடர்ந்து பரப்பியதாலும் இவர் “திருக்குறள் பெருமாள்” என்று அழைக்கப்பட்டார். குறள் மலர் அச்சகத்திற்குப் பாவேந்தர் பாரதிதாசன் வந்து தங்கும்பொழுது, “என்னா பெருமாள் சிங்கம்” என்று அன்பொழுக அழைப்பதுண்டு. திருக்குறளார் முனுசாமி நா. பெருமாள் அவர்களை நண்பர்களிடத்து அறிமுகம் செய்யும்பொழுது சித்தன் என்றும், தொண்டன் என்றும் திருக்குறள் தூதன் என்றும் அறிமுகப்படுத்துவது உண்டு.
திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் விழுப்புரம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 1952 முதல் 1957 வரை கடமையாற்றியபொழுது திருக்குறளாருக்குத் தொண்டராகவும், பாதுகாவலராகவும் அவரின் வீட்டுக்குப் பொறுப்பாளராகவும் விளங்கிய பெருமை திருக்குறள் பெருமாள் ஐயாவுக்கு உண்டு.
1955 ஆம் ஆண்டு பாவேந்தரிடம் சென்று அவர் பெயரால் இயங்கும் புதுவை வடக்குச் சுற்றுச்சாலையில் ஏழைகளுக்காக அமைந்திருந்த பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும் பாவேந்தரின் அச்சகத்தில் அச்சுப்பணியில் துணைநின்றவர்.
குப்பம்மாள், திருக்குறள் பெருமாள்03.07.1957 இல் திருக்குறள் பெருமாள் - குப்பம்மாள் திருமணம் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தின் புகழ்பெற்ற அறிஞர்கள், பெரியோர்கள் முன்னிலையில் தமிழ்த் திருமணமாக மூர்த்திக்குப்பத்தில் இவரின் திருமணம் நடைபெற்றது. திருக்குறள் பெருமாள் அவர்களுக்குச் சூரியநாராயணமூர்த்தி, புகழேந்தி, குறிஞ்சி என்னும் மூவர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். சூரிய நாராயணமூர்த்தி என்பது தமிழின் செம்மொழிப் பெருமையை உலகுக்கு நினைவூட்டிய “பரிதிமாற்கலைஞர்” சூரியநாராயண சாத்திரியின் நினைவாக வைக்கப்பட்ட பெயராகும். சூரியநாராயண சாத்திரி என்பதில் சாத்திரி என்பதை நீக்கிவிட்டு, மூர்த்திக்குப்பம் ஊர்ப்பெயரின் முன்னொட்டை இணைத்து, சூரியநாராயண மூர்த்தி என்று திருக்குறள் பெருமாள் தம் முதல் மகனுக்குப் பெயரிடுமாறு சொல்லி, பாவேந்தர் இப்பெயரைச் சூட்டினார். சூரியநாராயணமூர்தியைப் பாவேந்தரும் அவர் மனைவியார் பழநியம்மாள் அவர்களும் அன்பொழுக வாழ்த்தியவர்கள் ஆவர்.
திருக்குறள் பெருமாள் அவர்களின் மனைவி குப்பம்மாள் அவர்கள் அன்பும் பண்பும் நிறைந்த பெருமைக்குரிய அம்மையார் ஆவார். தென்மொழிக் குடும்பமும், தனித்தமிழ் இயக்க அன்பர்களும் மூர்த்திக்குப்பம் வந்தால் கடல்மீனும் நண்டும் இறாலும் கொண்டு இனிய சுவைமிகு குழம்பினைப் படைத்து விருந்து புரப்பதை வழக்கமாகக் கொண்டவர். எண்பத்தைந்து அகைவைக்கு மேல் நலதுடன் வாழ்ந்துவரும் குப்பம்மாள் அவர்களை நல்ல நினைவாற்றலும் பார்வைப் பொலிவும் கொண்டு தம் கடந்த கால வாழ்க்கையை இன்றும் நினைவுகூர்கின்றார். தென்மொழி அன்பர்களுக்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குடும்பத்தினர்க்கும் தாம் ஆற்றிய தொண்டுகளை நினைவுகூர்ந்து தொடர்பினை நினைவூட்டுகின்றார். அதுபோல் இவர்களின் பிள்ளைகள் பாவலரேறு அவர்களின் குடும்பத்தின்மேல் கொண்டிருந்த பற்றினையும் அன்பினையும் கேட்கும்பொழுது இவர்களின் தமிழ்ப்பற்றும் பாசமும் வெளிப்படுகின்றது. அதனால்தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார் திருக்குறள் பெருமாளைப் போற்றிப் பாடியபொழுது குடும்பத்தலைவி குப்பம்மாளின் சிறப்பினை,
“முப்பொழு
திருப்பினும் முகங்கோ ணாத
குப்பம்மாள்
எனும் குடித்தனக் காரிக்குச்
செப்பமாய்
அமைந்த சிறப்பெலாம் என்னெனின்,
ஒப்புரைக்
கில்லாத் தென்மொழி உழைப்பால்
உடலும்
நெஞ்சமும் ஒருங்குறச் சோர்ந்து,
கடற்கரை
நண்ணும் காலத்தி லெல்லாம்,
கையில்
கிடைத்ததை, மடியில் நிறைத்ததை,
பையில்,
பானையில் கைவிட்டுத் துழவிக்
கொஞ்சங்
கொஞ்சமாய்க் கூட்டிச் சேர்த்ததை
எஞ்சுத
லின்றி எடுத்தெடுத் தீந்து
தென்மொழிக்
குடும்பம் தின்று மகிழ்வதைத்
தன்விழிப் பருப்பால் தான்விழுங் குவதே!
பெருமாள்
பெற்ற பெருமை எல்லாம்
திருக்குறள்
ஒன்று! தேய்விலா அன்பின்
குப்பம்மாள் எனும் குணக்குன்று ஒன்று!”
என்று
போற்றிப்பாடியுள்ளார்.
திருக்குறள் பெருமாளின் தனித்தமிழ்ப் பற்று
திருக்குறள் பெருமாள் தமக்கு அமைந்த திருக்குறள் புலமையாலும் திருக்குறளார் முனுசாமியின் தொடர்பாலும் பாவேந்தர் பாரதிதாசன் தொடர்பாலும் தமிழ் உணர்வுடன் இயங்கினார். அப்பொழுது(1959) கடலூரில் பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இதழ் தொங்கப்பட்டது. தமிழ் உணர்வாளர்கள் வந்து குழுமும் இடமாகக் கடலூர் மாறியது. தமிழ்ப்பற்று நிறைந்த திருக்குறள் பெருமாள் அவர்களின் குடும்பம் பெருஞ்சித்திரனாரின் குடும்பத்துடன் நன்கு பழகும் வாய்ப்பினைப் பெற்றது. அதுபோல் பெருஞ்சித்திரனாரும் தம் குடும்பத்தாருடன் தென்பெண்ணை ஆற்றைக் கடந்து மூர்த்திகுப்பம் வந்து, தங்கி, விருந்துண்டு செல்லும் தொடர்பினைக் கொண்டிருந்தனர். பெருஞ்சித்திரனாரின் நம்பிக்கைக்குரிய பெரியோராகத் திருக்குறள் பெருமாளும் அவர் குடும்பத்தினரும் விளங்கினர். அதுபோல் பேராசிரியர் தங்கப்பா உள்ளிட்டவர்களும் திருக்குறள் பெருமாளுடன் நல்ல தொடர்பில் இருந்தவர். திருக்குறள் பெருமாள் இல்லத்துக்குத் தனித்தமிழ் அன்பர்கள் பலரும் வந்து செல்லும் சூழல் அக்காலத்தில் இருந்தது. ஓலை வேயப்பட்ட தோப்பும் துரவுமாக இருந்த இயற்கை எழில் கொஞ்சிய திருக்குறள் பெருமாளின் இல்லம் தனித்தமிழ் அன்பர்கள் வந்து, தங்கிச்செல்லும் வேடந்தாங்கலாக இருந்துள்ளது.
திருக்குறள் பெருமாள் 1961 இல் அஞ்சல்துறையில் அஞ்சல்காரராகப் பணியில் இணைந்தார். 26 ஆண்டுகள் இப்பணியில் இருந்தவர். இதனால் அஞ்சல்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும்பொழுது அனைவரிடமும் நல்ல தமிழில் உரையாடித் திருக்குறளைச் சொல்லி, அனைவரிடத்தும் திருக்குறள் ஈடுபாட்டினை ஏற்படுத்தியவர். மாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் திருக்குறள் பற்றை ஏற்படுத்தியவர். முதியோர் பள்ளியில் உருவா 20 பெற்றுக்கொண்டு மாலைநேர ஆசிரியராகவும் பணியாற்றினார்.
திருக்குறள் பெருமாள் அவர்களின் நாட்டுப்பற்றினைப் போற்றும் வகையில் 02.08.1975 ஆம் ஆண்டு புதுச்சேரியின் மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் “தியாகி” என்ற பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்துள்ளார். நிறுவனங்களில் வேலை, கணக்கர் வேலை, சங்கிலி பிடித்து நிலம் அளக்கும் வேலை, மின்பணி, துறைமுக வேலை, ஆசிரியர் வேலை, உழவுத்தொழில், கொத்துவேலை, அச்சக வேலை எனப் பல வேலைகளைச் செய்தாலும் ஒழுக்கத்தையும் நேர்மையையும் தம் கண்களாகப் போற்றியவர். வறுமையிலும் எளிமையிலும் செம்மாந்த வாழ்க்கை நடத்திய இவர் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற பெருந்தகையாக வாழ்ந்துள்ளார். தம்மிடம் இருக்கும் கைப்பொருளைப் பிறருக்கு ஈந்துவக்கும் ஈகை உள்ளத்தினர்.
திருக்குறளிலும், பாவேந்தர் பாடல்களிலும் இவருக்கு இருந்த புலமையையும் பயிற்சியையும் அறிந்த தமிழ் உணர்வாளர்கள் தம் ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்து, மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இவரை அறிமுகம் செய்து உரையாற்றச் செய்துள்ளனர்.
பாகூர் வீரப்பன் ஆசிரியருடன் திருக்குறள் பெருமாள் இணைந்துகொண்டு இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் புதுதில்லி வரை தேசிக்கொடியைக் கையில் ஏந்தியவாறு சென்று கோரிக்கை வைத்தனர். மேலும் திருக்குறள் பெருமாள் அவர்களும் கோவைத் தொழிலதிபரும் அறிவியல் அறிஞருமான ஜி.டி. நாயுடு அவர்களும் நட்புடன் பழகியுள்ளனர்.
பாவேந்தரின் சத்திமுற்றப்புலவர் நாடகத்தை முழுவதுமாக மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றல்பெற்ற திருக்குறள் பெருமாள் பறம்புக்குடியில் நடைபெற்ற உலகத் தமிழ்க்கழக மாநாட்டில் அதனை நடித்துக்காட்டியவர்.
08.02.1985 இல் “நடமாடும் தமிழ்” என்ற பட்டம் வழங்கப்பெற்றவர். சென்னைப் பாவேந்தர் பாசறை அமைப்பினர் “பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர்” (29.04.1998) என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.
இவர்தம் தமிழ்ப் பணியைப் போற்றும் வகையில் 1990 செப்டம்பர் முதல் தேதியிலிருந்து வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கட்குப் புதுவை அரசின் கல்வித்துறை வழங்கும் உதவித்தொகையைப் பெற்றவர்.
தமிழ்நாடு அரசு புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு விழாவின் பொழுது(1991) பாவேந்தர் புகழ் பரப்புநர் என்று சான்று வழங்கிச் சிறப்பித்தது.
திருக்குறள் பெருமாள் அவர்களின் தமிழ்ப்பற்றையும், பாவேந்தர் பாடல்களிலும் திருக்குறளிலும் இவருக்கு இருந்த புலமையினையும், மாண்புநிறைந்த பண்புநலன்களையும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் மிகச் சிறந்த பாடல் ஒன்றியற்றி இவர்தம் பெருமையை நிலைப்படுத்தியுள்ளார். அப்பாடல் இதோ:
திருக்குறள்
பெருமாள்!
துருவுந்
தூசியும் துவைந்த புழுதியும்
எருவுஞ்
சேறும் இறுகக் காய்ந்தே,
உருளை
ஓரத்தும், உட்புற அச்சிலும்,
இருகால்
மிதியிலும், கம்பிகள் இடுக்கிலும்,
அடையடை
யாக அப்பிக் கிடந்து,
கடகடத்
தாடுங் கற்கா லத்துக்
கட்டை
வண்டிபோல் காட்சி யளிக்கும்
குட்டை யான மிதிவண்டிக் கூடு.
அமரும்
இருக்கையில் ஆயிரம் கிழிசல்!
சுமைகள்
வைத்திடுஞ் சுமப்பான் ‘தொட! தொட!’
கால்மிதிக்
கட்டைகள் கழன்று கழன்று
சாலையில்
ஆளைச் சாய்த்திடும் நாடகம்!
கிழிசல்
வேட்டி ஓரத்தைச் சுருட்டி
மைசேர்
பற்களால் மென்று குதப்பி
ஆளைத்
தள்ளும் ‘அழகிய’
தொடரி!
ஏனிவ்
விரைவென இடையிடை மடங்கி
ஊன்றிக்
கொள்ளும் ஒற்றைக்கால் தாங்கி!
கணகணக்
காத கருந்தலைப் பருமணி!
தொணதொணக்
கின்ற தொடரிச் சக்கரம்!
உராய்ந்து
கிரீச்சிடும் நெளிந்த உருளைகள்!
மரமரக் கின்ற மண்பொதி தடைகள்!
இத்தகு
பெருமையோ டெவ்விடத் தாகிலும்
தத்தட
தடவெனும் மிதிவண்டி ஒன்று
சாய்ந்த
நிலையில் சாலையோ ரத்துக்
காய்ந்த
உடலொடு காண்பீ ராயின்
அந்த
வண்டிதான் திருக்குறள் பெருமாள்
சொந்த வண்டி-எனச் சொல்லுக துணிந்தே!
அந்த
வண்டிக்கு அண்மையில் உள்ள
சந்திலோ
பொந்திலோ சாலைக் கடையிலோ
எங்கோ
தான்அவர் இருந்திடல் வேண்டும்!
இங்கவர்
தோற்றம் எப்படி என்றால்,
இயம்பிடு
கின்றேன்; மனத்தில் இறுத்துக;
நயம்படும் அவர்புகழ் நாற்புறம் நாட்டுக!
கோணியில்
தைத்த குப்பா யம்போல்
சாணி
நிறத்தினில் தொளதொள சட்டை!
ஏறியும்
இறங்கியும் ஏழெட்டுக் கிழிசலால்
மாறியும்
மடிந்தும் தொங்கிடும் வேட்டி!
உழைப்பின்
மிகுதியால் ஓதந் தாக்கிடும்
தலைப்புறம்
மறைக்குமோர் தலைமுண் டாசு!
முண்டாசின்
உட்புறம் கறுப்பும் வெளுப்புமாய்
உண்டு.
இல்லை எனுமா றுரைக்குந் தலைமயிர்!
மொச்சைக்
கொட்டைபோல் இருந்த பல்லெலாம்
பச்சுப்
பச்சென விழுந்திட்ட பைவாய்!
வாய்மிசை
மருங்கிலும் முகவாய்ப் புறத்திலும்
தோய்ந்த
வெண்மயிர் துளிர்த்த ஒளிமுகம்!
தளர்ந்த
மேனி; தளராத வீறு!
கிளர்ந்த
நகைமுகம்; கிறக்கிடும் உரைத்திறன்
உருக்குலைத்
திட்ட உடல்தான் என்னினும்
கருக்குலை
யாத கழகத் தமிழ், அவர்!
சாறு
பிழிந்த சக்கைதான் எனினும்
வீறு குறையாத் தீந்தமிழ் வேங்கை!
பாரதி
தாசனார் பாடல்கள் முற்றும்
ஊரதி
ரும்படி உணர முழக்கித்
தெருத்தெரு
வாகத் திண்ணை திண்ணையாய்த்
திருக்குறள்
பயிற்றிடும் திறல்மிகு ஆசான்!
அலைவுறும்
விழிகளால் அள்ளி விழுங்கி
உலைப்பட்
டடைபோல் உருப்பல சமைக்கும்
அங்காந்த
நெஞ்சம்! அயர்விலா விளைவு!
மங்காத
உணர்வு! மலையாத துணிவு!
‘உருவுகண் டெள்ளாமை வேண்டும்’ என் குறட்கே
ஒருதனி உருவமாய் உலவுந் திருக்குறள்!
சட்டைப்
பையினுள் கைவிட் டெடுத்தால்
கற்றைப்
பழந்தாள்; கணக்கிலாக் குறிப்புகள்!
கடைக்குறிப்
பன்று! காலங் காலமாய்
இடையிடைக்
கேட்டவை, எண்ணத் தெழுந்தவை,
பாக்களின்
அடிகள், பற்பல கருத்துகள்,
நீக்கமற்
றவரின் நினைவினில் தோய்ந்த
குறட்பா
விளக்கம்-எனுந்தாட் குவியல்
வரவும்
செலவும் சட்டைக்கு வாரா.
கைப்பிடி
அறுந்து தொளையிட்டு முடிந்த
பையொன்று கையில்; அதனுள் பலபடி!
மூர்த்திக்
குப்பம் எனும்மூ தூரின்
சீர்த்திக் கிவருடைச் சிறப்பைக் கூறலாம்!
அஞ்சற்
காரராய் ஆற்றும் பணியுடன்
எஞ்சும்
பொழுதெலாம் எந்தமிழ்த் தொண்டராய்
உலாவரு
கின்றார்; ஊரவர் இவர்பால்
பலாப்பழந் தீக்களாய்ப் பறப்பதைப் பார்க்கலாம்!
மடல்கள்
கொடுப்பார்; மக்களைக் கண்டால்
சடக்கென
இறக்குவார்; சாலையென் றாலும்,
சிற்றுண்டி,
தேநீர்ச் சிறுகடை யெனினும்,
வெற்றிலை
பாக்கு விற்பவர் என்னினும்,
அவலிடிக்
கின்ற ஆயாள் எனினும்,
துவளாத நெஞ்சோடு துணிந்து, ஆங் கிறங்கி,
நலங்கேட்
பதுபோல் நாலைந்து குறட்பா
வலிந்து
புகுத்தித், தமிழ்வர லாறு,
“படிபடி’ என்னும் பாவேந்தர் பாடல்,
அடிதொறும்
எதுகை அடுக்கி வரும், அவர்
‘சத்தி முத்தப் புலவ’ரின் பாட்டுள்
ஒத்த
நிகழ்ச்சிக் கோரிரண் டடிகள்
நொண்டி
யடிப்பது போல் சில நொடிகள்
வண்டியை
ஒருகையில் பிடித்த வாறே
கொட்டி
விட்டுக் குபுக்கெனத் தாவி
ஒட்டு
வண்டியை ஒட்டிச் செல்லுவார்!
‘தென்மொழி’ப் படைஞர்க்கு அடைவீடு அவர்மனை!
பன்மாண்
திறலோ டிதழ்வினை பகிர்ந்து,
தேர்ந்து
முடித்துத் திங்களில் ஒருமுறை-
காரியும்
ஞாயிறும் கடற்கரை அடுக்கும்
முழுப்பொழு
தெல்லாம் மூர்த்திக் குப்பம்
திருக்குறள்
பெருமாள் சிறுகுடில் திண்ணை
தூளி
படுக்கும்!
தென்மொழித் தம்பியர்
தோளொடு
தோள்கள், தூய்தமிழ் நெஞ்சுகள்
கலந்துற
வாடும் கருத்துப் பொழிவுகள்,
புலந்துண
வுண்ணும் பொலிந்த காட்சிகள்,
நாட்டுதற் கியலா நாடக இலக்கியம்!
ஊட்டுதற்கலையும்
உள்ளமும் கையுமாய்
முப்பொழு
திருப்பினும் முகங்கோ ணாத
குப்பம்மாள்
எனும் குடித்தனக் காரிக்குச்
செப்பமாய்
அமைந்த சிறப்பெலாம் என்னெனின்,
ஒப்புரைக்
கில்லாத் தென்மொழி உழைப்பால்
உடலும்
நெஞ்சமும் ஒருங்குறச் சோர்ந்து,
கடற்கரை
நண்ணும் காலத்தி லெல்லாம்,
கையில்
கிடைத்ததை, மடியில் நிறைத்ததை,
பையில்,
பானையில் கைவிட்டுத் துழவிக்
கொஞ்சங்
கொஞ்சமாய்க் கூட்டிச் சேர்த்ததை
எஞ்சுத
லின்றி எடுத்தெடுத் தீந்து
தென்மொழிக்
குடும்பம் தின்று மகிழ்வதைத்
தன்விழிப் பருப்பால் தான்விழுங் குவதே!
பெருமாள்
பெற்ற பெருமை எல்லாம்
திருக்குறள்
ஒன்று! தேய்விலா அன்பின்
குப்பம்மாள்
எனும் குணக்குன்று ஒன்று!
தப்பில்
லாமல் தமிழ்ப்பணி செய்யும்
திருக்குறள்
பெருமாள் குடும்பம்
இருக்குநாள் எல்லாம் இருக்குமெந் தமிழே!
- பாவலரேறு பெஞ்சித்திரனார், கனிச்சாறு தொகுதி 3, பாடல் 132
திருக்குறள் பற்றுடனும், தமிழ் உணர்வுடனும் வாழ்ந்த திருக்குறள் பெருமாள் 28.07.2005 இல் இயற்கை எய்தினார். புதுவையிலும் தமிழகத்திலும் வாழும் தமிழ் உணர்வாளர்களால் இன்றும் இவரின் பணி நினைவுகூரப்படுகின்றது.
புதுவைத் தமிழறிஞர்கள் அனைவராலும் போற்றப்படும் திருக்குறள் பெருமாள் அவர்களின் புகழ்வாழ்க்கை நூற்றுப்பத்து ஆண்டுகளைக் கடந்துள்ளது. எனவே அவர் நினைவைப் போற்றும் வகையில் அவர் பெயரை ஏதேனும் ஒரு நிறுவனத்திற்குச் சூட்டி, அவர் பணிகளை என்றும் நிலைநிறுத்துவது கற்றறிந்தோர் கடமையாகும்.
மூர்த்திக்குப்பத்தில் உள்ள திருக்குறள் பெருமாள் வீடு(இன்றையத் தோற்றம்)
குப்பம்மாள், மு.இளங்கோவன், பெ. புகழேந்தி
நன்றி:
திரு.
பெ. சூரியநாராயணமூர்த்தி
திரு.
பெ. புகழேந்தி
திரு.
திருநாவுக்கரசு (நண்பர்கள் தோட்டம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக