[ஆங்கிலம், தமிழ் என்னும் இரு மொழிகளிலும் ஆற்றல் பெற்ற முனைவர் ப. மருதநாயகம் அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்; பதிப்பாசிரியர்; உரையாசிரியர். உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும் தமிழ் அமைப்புகளிலும் சொற்பொழிவாற்றிய பெருமைக்குரியவர். இந்தியாவில் கன்னியாகுமரி தொடங்கி, காசுமீரம் வரை இந்தியக் கல்விப்புலங்களில் இவர் குரல் ஓங்கி ஒலித்துள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வுத் தகைஞராக இருந்து ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. தமிழிலும் ஆங்கிலத்திலும் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவரின் நூல்கள் உலக அளவிலான ஒப்பியல் பார்வை கொண்டவை.]
புதுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் க. ப. அறவாணன் அவர்களின் தலைமையில் இயங்கிய தமிழியல் துறையில் யான் இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாக இருந்தபொழுது (1992-93) ஆங்கிலத்துறையில் பணியாற்றிய பேராசிரியர் ப. மருதநாயகம் ஐயாவின் சிறப்புகளை எம் உடன் பயிலும் மாணவர்களும் எங்களுக்குப் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களும் வியப்புடன் பேசிக்கொள்வார்கள். பெயரளவில் மட்டும் மருதநாயகம் அவர்களை அக்காலத்தில் அறிந்திருந்தேன். அவர்களை நேரில் காணும் பேறு பெற்றிலேன். அவர் அமெரிக்க நாட்டில் ஹவாய்ப் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பதும் உலக நாடுகளில் வலம் வந்து தமிழ்ச் சிறப்பைப் பேசுபவர் என்பதும் இளம் மாணவர்களாகிய எங்களுக்கு மருதநாயகம் ஐயாவின் மேல் மிகப்பெரும் மதிப்பை உருவாக்கியிருந்தது. பின்னாளில் செம்மொழி நிறுவனத்தில் மருதநாயகம் அவர்கள் பணியாற்றிய காலத்தில் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. அவர்தம் பொழிவுகளைக் கேட்டது அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழாக்கள் பலவற்றிலாகும்.
நானும் அமெரிக்காவிற்கு உரையாற்றச் சென்றபொழுது சில நேரங்களில் வானூர்திப் பயணம் ஒரே வானூர்தியில் இருக்கும். அதனால் தனிப்பட்ட முறையில் தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்து ஐயா உரைக்கும் கருத்துகளைச் செவிமடுத்துள்ளேன். பின்னர் ஆய்வறிஞர் கு. சிவமணி அவர்களுடன் ப. மருதநாயகம் ஐயாவின் இல்லத்திற்குச் சென்று அவர்தம் பேச்சுகளைப் பல மணி நேரம் ஒளிப்பதிவு செய்து, இணையத்தில் பதிவு செய்துள்ளமையும், இணையம் ஏற்றப்பட வேண்டிய ஐயாவின் பேச்சுகள் தொடர்ந்து என்வழியாகப் பதிவாகி வருகின்றமையும் தமிழுக்கு ஆக்கமான வினைப்பாடுகளாகும்.
பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்கள் நாம் வாழும் காலத்தில் நம்முடன் வாழும் பேரறிஞர் ஆவார். உலக இலக்கியங்களையும், தமிழ் இலக்கியங்களையும் ஒருசேர இணைத்துப் பேசும் பேராற்றல் பெற்றவர். தமக்கென்று தனித்த ஆய்வுப்போக்குகளையும் கொள்கைகளையும் கொண்டவர். எவ்விடத்தும் தம் கருத்துகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தும் பேராளுமைகொண்டவர். மிகச் சிறந்த தமிழ் ஆளுமையாக விளங்கும் ப. மருதநாயகம் அவர்களின் தமிழ் வாழ்க்கையை உலகத் தமிழர்களின் பார்வைக்குக் கொண்டு வருவதை என் தலையாயக் கடமையாக நினைக்கின்றேன்.
ப. மருதநாயகம் அவர்களின் தமிழ் வாழ்க்கை:
பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்கள் திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக விளங்கும் உறையூரில் 03.06.1939 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் மூ. பரமசிவம்- வள்ளியம்மை ஆவர். இவருடன் பிறந்தவர்களுள் ஆடவர் நால்வர்; மகளிர் இருவர் ஆவர். பள்ளிப்படிப்பை உறையூரில் சேஷ ஐயங்கார் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். இளங்கலைப் பட்டப்படிப்பைத் தூய வளனார் கல்லூரியில் கற்றுத் தேர்ந்தவர். இவர் ஆங்கிலம், தமிழ், அமெரிக்க இலக்கியம் ஆகிய மூன்றிலும் முறையே சென்னைப் பல்கலைக்கழகம்(1975), மதுரை காமராசர் பல்கலைக்கழகம்(1982), அமெரிக்க நாட்டு ஹவாய் பல்கலைக்கழகம்(1975) ஆகியவற்றில் பயின்று, முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். தொன்மத் திறனாய்வு பற்றிய ஆய்வேட்டிற்காக ஆங்கிலத்தில் முனைவர் பட்டமும் தெ.பொ.மீ. பற்றிய ஆய்வேட்டிற்காகத் தமிழில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ்ச் செவ்விலக்கியங்கள் – ஒப்பியல் பார்வை என்னும் ஆங்கிலக் கட்டுரைத் தொகுதிக்காகப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதல் டி. லிட். பட்டத்தைப் பெற்றவர்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்லூரிகள்,
பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிப் பல்லாயிரம் மாணவர்களுக்குப் பயிற்றுவித்துள்ளார்.
புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு புதுவை
மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர். பன்னிரண்டு
ஆண்டுகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வுத் தகைஞராகப் பணியாற்றறிய
பெருமைக்குரியவர்.
மொரீசியசு நாட்டில் உள்ள மகாத்மா காந்தி உயர்கல்வி நிறுவனத்தில் பேரறிஞர் அண்ணா இருக்கைப் பேராசிரியராக முதன்முதல் அழைக்கப்பெற்று, அண்ணா பிறந்தநாள் சொற்பொழிவு வழங்கியவர். மேலும் அண்ணா பற்றிய நூல்கள் வெளிவருவதற்குரிய திட்டப்பணிகளை வடிவமைத்து வழங்கியவர்.
கனடாவில் கார்ல்டன் பல்கலைக்கழகம், பிரான்சு நாட்டில் ரென் 2 ( Rennes-2) பல்கலைக்கழகம், ரியூனியன் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இலண்டன் பல்கலைக்கழகம், ஜெர்மனியின் ஹைடல்பர்க்குப் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு, சொற்பொழிவுகளை நிகழ்த்திய பெருமைக்குரியவர்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை(FeTNA) ஆண்டுதோறும் அமெரிக்க மண்ணில் நடத்தும் பேரவை விழாக்களில் பால்டிமோர் (2005), ராலே (2009), சார்ல்சுடன் (2011), வாசிங்டன் (2013), பால்டிமோர் (2017), டல்லஸ் (2018) ஆகிய நகரங்களில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்குகளில் புறநானூறு, திருக்குறள், குறுந்தொகை, குறிஞ்சிப்பாட்டு, தனிநாயக அடிகளின் தமிழ்ப்பணிகள் போன்ற தலைப்புகளில் கட்டுரை வழங்கிய பெருமைக்குரியவர்.
ஆக்ஸ்போர்டு பாட்லியன் நூலகத்திலும், இலண்டன் பிரிட்டிஷ் நூலகத்திலும் எல்லீசரின் கையெழுத்துப் படிகளை ஆய்வுசெய்து, அன்னாரின் மூன்று அதிகாரத் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலையும், தமிழ் யாப்பிலக்கணம் குறித்த நூலையும் பதிப்பித்துள்ளார். சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள தொகுதிகளில் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், நாவல் பகுதிகள் பல இடம்பெற்றுள்ளன. இவருடைய ஆங்கில, தமிழ், அமெரிக்க, கனடா நாட்டு இலக்கியங்கள் குறித்த நூனூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் தமிழ் ஆய்விதழ்களிலும், மேல்நாட்டு ஆய்விதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவர் எழுதிப் பதிப்பித்துள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட ஆங்கில நூல்களும் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும் பதிப்பித்த பத்து நூல்களும் உலகளவிலான ஒப்பியல் பார்வையைக் கொண்டவை.
பேராசிரியர் மருதநாயகம் அவர்களின் இல்லறச் சிறப்பு:
பேராசிரியர் ப. மருதநாயம் அவர்கள் கமலா அம்மையாரை 1969 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 ஆம் நாள் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரமேஷ், இரவி, அஷோக் என்னும் மூன்று ஆண் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இவர்கள் மூவரும் மருத்துவர்களாக இங்கிலாந்தில் பணியாற்றுகின்றனர்.
பேராசிரியர் ப. மருதநாயகம் பெற்றுள்ள விருதுகளும் பரிசில்களும்:
1. கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது
(2022), செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
2. கலைஞர் மு. கருணாநிதி விருது(ஆங்கிலம்), தென்னிந்திய
புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம், 2021
3. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்
விருது, தமிழ் வளர்ச்சித்துறை, 2018
4. சிறந்த தமிழ்க் கல்வியாளர், வேலன் இலக்கிய வட்டம்,
இலண்டன் 2018
5. குலோத்துங்கள் விருது, குலோத்துங்ககன் தமிழ்
மேம்பாட்டு அறக்கட்டளை, 2017
6. சிறந்த தமிழறிஞர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு
மையம், கோவை, 2014
7. செம்மொழிச் செம்மல், தமிழ்மொழி அகாதெமி,
2016
8. மகா வித்துவான் நினைவுப் பொற்கிழி விருது,
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம்,2015
9. தமிழறிஞர், சிகாகோ தமிழ்ச்சங்கம், அமெரிக்கா,
2020
10. தமிழறிஞர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்,
2013
11. சாதனையாளர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின்
கூட்டமைப்பு, வட கரோலினா
12. தமிழறிஞர், மேரிலாந்து தமிழ்ச்சங்கம், அமெரிக்கா,
2005
13. தமிழறிஞர், புதுவைத் தமிழ்ச்சங்கம்,2021
14. சாதனையாளர், புதுவை நற்பணி மன்றம், 2008
15. இலக்கியத் திலகம், காஞ்சி காமகோடி பீடம்,
2018
16. இலக்கியச் சுடர், காஞ்சி காமகோடி பீடம்,
2022
17. மனோன்மணியம் சுந்தரனார் விருது, புதுவை சங்கரதாஸ்
சுவாமிகள் இயல் இசை நாடக சபா, 2007
18. தமிழறிஞர் விருது, பாவாணர் கோட்டம், முறம்பு,
2018
19. எல்லீசர் விருது, தமிழக ஆளுநர்- 2024
பேராசிரியர்
ப. மருதநாயகத்தின் நூல்கள்:
1. கிழக்கும்
மேற்கும் - 1991
2. celebrations and
Detractions: Essays in Criticism - 1993
3. Quest for Myth: LeslieFiedler”s Critical Theory and
Practice - 1994
4. Across Seven Seas: Essaus in Comparative Literature - 1994
5. The Tamil Canon: Comparative Readings -
1998
6. Decolonoisation and After:Studies in Indian and Canadian
Writings - 1999
7. திறனாய்வாளர்
தெ.போ.மீ. - 1999
8. மேலைநோக்கில்
தமிழ்க்கவிதை - 2001
9. சங்கச்சான்றோர்
முதல் சிற்பி வரை - 2003
10. புதுப்பார்வைகளில்
புறநானூறு - 2004
11. பாரதி
ஆறு பாரதிதாசன் பத்து - 2004
12. அயோத்திதாசரின்
சொல்லாடல் - 2006
13. Sirpi: Poet as Sculptor
- 2006
14. சங்க இலக்கிய ஆய்வு தெ.போ.மீ.
யும் மேலை அறிஞரும்: - 2008
15. வள்ளலார்
முதல் சிற்பி வரை - 2008
16. ஒப்பில்
வள்ளுவம் - 2008
17. From Homer to Sri Aurobindo - 2008
18. The Treasure – Trove of time and the Verse-Key; An English
Translation of
Kalaignar M. Karunanidhi’s (காலப்பேழையும் கவிதைச் சாவியும்) - 2009
19. சிலம்பின்
ஒலி: ஆறுபரல்கள் - 2010
20. நானும்
என் தமிழும் - 2011
21. Ancient Tamil Poetry and Poetics - 2011
22. A New Star in the Epic Sky: Kulothungan’s Journey of Man, -
2012
23. பேராசிரியர்
நன்னன் - 2012
24. Warning Kings and Wandering Bards: Studies in Puranaanuru -
2012
25. தமிழின்
செவ்வியல் தகுதி - 2013
26. Tolkappiar to Kulothungan:Dimensions of the Tamil Mind
- 2013
27. Kalaignar Karunanidhi:Hero as Artist - 2013
28. பாரதி
பதினாறு - 2014
29. பிறமொழி
இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம் - 2014
30. மேலைமெய்யியலுக்கு
வழிகாட்டிய வள்ளுவம் - 2015
31. பக்தி
இயக்கமும் தமிழ்க்கவிதை வளர்ச்சியும் - 2015
32. மேலைநோக்கில்
குலோத்துங்கன் கவிதைகள் - 2016
33. C.N. Annadurai: Statesman,Scholar and custodian of Social
Justice - 2016
34. மேலைநோக்கில்
புறநானுற்றுப் பாடல்கள் - 2017
35. தேவநேயப்பாவாணர்
சொல்லாய்வும் சொல்லாடலும் - 2017
36. உலகமொழிகளில்
தூய்மை இயக்கங்கள் - 2018
37. ஒப்பில்
வள்ளுவம் (விரிவாக்கப் பதிப்பு) - 2018
38. The Glory that was Tamil Culture - 2018
39. மேலைநோக்கில்
தமிழ் நாவல்கள் – 1 - 2019
40. மேலைநோக்கில்
தமிழ் நாவல்கள் – 2 - 2019
41. மேலைத்திறனாய்வு
அணுகுமுறைகள் தமிழ்ச் சான்றுகள் -
2019
42. வள்ளுவர்
வாழ வைத்த உவமைகள் -
2019
43. தொல்காப்பியம்:
முதல்முழு மொழிநூல் - 2019
44. தொல்காப்பியம்:
எழுத்து(உரை) - 2019
45. தொல்காப்பியம்:
சொல்(உரை) - 2019
46. தொல்காப்பியம்:
பொருள் (உரை) - 2019
47. சங்கச்
சான்றோர் வழியில் தங்கப்பா -
2019
48. வடமொழி
ஒரு செம்மொழியா ? - 2020
49. திறனாய்வாளராக
உரையாசிரியர்கள் - 2021
50. Twelve Custodians of Tamil Culture - 2021
51. Overshadowed Tamil Classics
- 2022
52. On Translating Tamil Classics - 2022
53. ஒப்பில்
தொல்காப்பியம் - 2022
54. உயர்தனிச்
செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் - 2022
55. Tirukkural as the book of the world - 2022
56. ஒப்பில்
கம்பன் - 2022
57. Tamil Poetry since Bharati
- 2022
58. தமிழும்
வடமொழியும் மெய்யும் பொய்யும் - 2022
59. ஹோமரின்
இலியத் காப்பியம் மொழிபெயர்ப்பு - 2022
60. திருக்குறள்:
மூலமும் உரையும் - 2023
61. தமிழின்
தொன்மை: மேலை மொழியியலார் பார்வையில்
- 2023
62. The Greatest Books of the world - 2023
63. Tamil and Sanskrit: Myth and Reality - 2023
64. சங்க கால ஔவையார் - 2023
65. பண்ணிசை
மரபில் காரைக்கால் அம்மையார் - 2023
66. தமிழ்க்
காப்பிய மரபில் சிலப்பதிகாரம் – 2023
67. தமிழ்
மரபில் உவமை – 2023
68. உரைச்சிந்தனை
மரபு: நச்சினார்க்கினியர் – 2023
69. உரைச்சிந்தனை
மரபு: பேராசிரியர் - 2023
70. தமிழர்
அழகியல் - 2023
71. சமஸ்கிருதத்தில்
தமிழ்ச்சிந்தனை மரபு - 2023
72. இலத்தீனில்
தமிழ்ச் சிந்தனை மரபு -
2023
குறிப்பு: இக்கட்டுரையின் குறிப்புகளை எடுத்தாளும் அன்பர்கள் எடுத்த இடம் சுட்டுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக