நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 31 டிசம்பர், 2025

திருமழபாடி முனைவர் அ. ஆறுமுகம் மறைவு

  

முனைவர் . ஆறுமுகம் 

  அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் வாழ்ந்துவந்த மூத்த தமிழறிஞர் முனைவர் அ. ஆறுமுகம் அவர்கள் இன்று (31.12.2025) மாலை 4.30 மணிக்குத் தஞ்சை மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெருந்துயர் உற்றேன். பேராசிரியரின் உடல் நாளை (01.01.2026) மாலை திருமழபாடியில் நல்லடக்கம் செய்யப்படும். பேராசிரியர் அ. ஆறுமுகம் அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். திருவள்ளுவருக்குத் தாம் வாழ்ந்த திருமழபாடியில் சிலை எடுப்பித்த பேரறிஞர்; பன்னூலாசிரியர். அரியலூர் மாவட்டத்தின் தமிழ் அடையாளமாக விளங்கிய பேராசிரியர் அ. ஆறுமுகம் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். 

திருமழபாடி முனைவர் . ஆறுமுகம் அவர்களின் தமிழ் வாழ்க்கை: 

  முனைவர் . ஆறுமுகம் அவர்கள் அரியலூர் மாவட்டம் குன்னம் வட்டம், சாத்தநத்தம் என்ற ஊரில் வாழ்ந்த திருவாளர் அமிழ்தம், அருணாசலம் ஆகியோரின் மகனாக 11.06.1933 இல் பிறந்தவர். 19 ஆண்டுகள் பள்ளியிலும், 19 ஆண்டுகள் கல்லூரியிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர். சங்க இலக்கியத்தில் குடும்பம், உடைமை, அரசு என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். திருமழபாடியில் தமிழ்ச்சங்கம் நிறுவியும், திருவள்ளுவர் சிலை எடுப்பித்தும், தமிழறிஞர்களைத் திருமழபாடிக்கு அழைத்துச் சிறப்புச் செய்தும் தொண்டாற்றியவர். 2010 இல் தாய் தந்த வாழ்க்கைத் தேன் என்ற தலைப்பில் விரிவான தன்வரலாற்று நூலை எழுதியவர்

  கவிதை நூல்கள், கட்டுரை நூல்கள், தன்வரலாறு, வாழ்க்கை வரலாற்று நூல்கள், நாட்டுப்புற இலக்கிய நூல்கள், திருக்குறள் உரை, கட்டுரை நூல்கள் என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்

  பாவேந்தர் பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி இவர்தம் படைப்புகளை வெளியிட்டு வந்தவர். உலகத் திருக்குறள் மையத்தின் வாழ்நாள் உறுப்பினராக இருந்தவர். மாணவர்கள் திருக்குறளை ஒப்புவிக்கும் வகையில் திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி என்ற நூலை வெளியிட்டுள்ளார்

முனைவர் .ஆறுமுகனாரின் தமிழ்க்கொடை 

1.   பூம்புகாரின் புதுவரவு (1970)

2.   பாவேந்தரின் தமிழியக்கம் ஓர் ஆய்வு (1984)

3.   நாட்டுப்புற இலக்கியமும் பண்பாடும் (1984)

4.   திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (1993)

5.   குறள் விருந்து (1993)

6.   வாழ்க்கை இலக்கியம் (1994)

7.   சங்க இலக்கியத்தில் குடும்பம், உடைமை, அரசு (1994)

8.   திருக்குறள் நினைவேடு (1996)

9.   வளர்தமிழ் வழிகாட்டி (1996)

10. என்னையே நான் (தன்வரலாறு), (1997)

11. பாவேந்தர் தந்த பரிசு (1997)

12. சிலம்பும் நாட்டார் உரையும் (1998)

13. திருக்குறளில் புதிய பார்வை (1998)

14. ஊர்வல உணர்வுகள் (1999)

15. ஆற்றங்கரைக் குயில் (1999)

16. மணிக்குறள் நூறு (2000)

17.  வழியடைக்குங்கல் (2000)

18. எண்ணித்துணிக (2000)

19. அகமும் அழகும் (2001)

20. குயில் தந்த முத்தம் (2001)

21. ஆந்திரங் கண்ட அருந்தமிழ்(முனைவர் சிங்காரவேலர் வரலாறு) (2001)

22. சிலம்பின் மூன்று ஒலிகள் (2003)

23. தன்மானத் தமிழ் மறவர் (2003)

24. கவிவேந்தரின் கருத்துச்சோலை (2003)

25. பிறந்த மண்ணின் பிடிவரலாறு (2004)

26. அந்தமிழ்கண்ட அந்தமான்(பயண நூல்) (2004)

27. வாழ்வியல் வளங்கள் (2005)

28. திருக்குறள் கையேடு (2005)

29. .செ..வாழ்க்கை வரலாறு (2005)

30. படைப்புவேந்தரின் பன்முகப் பார்வை (2006)

31. திருக்குறள் தெளிவும் கருத்தும் (2007)

32. தமிழில் வெண்பா இலக்கியங்கள் (2007)

33. அரசியல் இமையம் அண்ணா (2009)

34. முந்துமா முதுமை,களப்பணித்தொகுப்பு (2009)

35. தமிழராய் வாழ்வோம் (2010)

36. தாய் தந்த வாழ்க்கைத் தேன் (தன்வரலாறு) (2012)

37. வண்டமிழ் வளர்த்த வரதராசனார் (2011)

38. தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் (2012)

புலவர் கரு. சின்னத்தம்பி

 

புலவர் கரு. சின்னத்தம்பி 

[புலவர் கரு. சின்னத்தம்பி அவர்கள் உடுமலைப்பேட்டையை அடுத்த பெருமாள்புதூரில் உழவர்குடியில் பிறந்தவர். ஓவிய ஆசிரியராகப் பணியைத் தொடங்கித் தமிழாசிரியராக மலர்ந்தவர். “முல்லைக் காடு” என்னும் கையெழுத்து ஏடு நடத்தியவர். பன்னூலாசிரியர்; தமிழகத் தமிழாசிரியர் கழகத்தில் பொறுப்பு ஏற்றவர். இவர் இயற்றிய திருமூர்த்திக் குறவஞ்சி சிற்றிலக்கிய வகையில் புதுமையான நூலாகும்.] 

புலவர் கரு. சின்னத்தம்பி அவர்கள் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் பெருமாள்புதூர் (கரட்டுப்புதூர்) என்னும் ஊரில் வாழ்ந்த பெ. கருப்பண்ணன், கருப்பாத்தாள் ஆகியோரின் அன்பு மகனாக 04.03.1947 இல் பிறந்தவர். ஊரை ஒட்டிய சிறு கரடும் அதன்மீது சிறு பெருமாள்கோவிலும் உள்ளதால்  பெருமாள்புதூர் என்று இவ்வூர் அழைக்கப்படுகின்றது. 

கரு. சின்னத்தம்பி முதல் வகுப்பையும் இரண்டாம் வகுப்பையும் திண்ணைப்பள்ளியில் பயின்றவர். மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பெருமாள் புதூர் தொடக்கப்பள்ளியில் பயின்றவர். ஆறு முதல் பள்ளியிறுதி வரையிலான வகுப்புகளைக் குமரலிங்கம் “போர்டு” பள்ளியில் பயின்றவர். 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் ஆர்வம் காட்டியதால் படிப்பில் கவனம் சிதறியது. இதனால் பள்ளியிறுதி வகுப்பில் மதிப்பெண் குறைந்தது. 1965 இல் ஒண்டிப்புதூரில் தங்கி, ஓவியப் பயிற்சி பெற்று, தமிழக அளவில் 16 வது இடத்தில் தேர்ச்சி பெற்றவர். 1967 நவம்பர் 29 இல் சல்லிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். 1968 இல் நிரந்தர ஓவிய ஆசிரியர் பணி இவருக்கு அமைந்தது. ஓவிய ஆசிரியராக இருந்தபொழுது முல்லைக்காடு என்னும் பெயரில் கையெழுத்து இதழினை நடத்தி, மாணவர்களின் படைப்பாற்றலை வளப்படுத்தியவர். 

கரு. சின்னத்தம்பி கல்வி மீது இருந்த ஆர்வம் காரணமாகப் புகுமுக வகுப்பினைப் பயின்று, நிறைவுசெய்தவர். ஆசிரியர் அரங்கநாதன் அவர்களின் நெறிகாட்டலில் புலவர் புகுமுக வகுப்பில் இணைந்து 1973 இல் புலவர் பட்டயத்தைச் சென்னைப் பல்கலைக்கழகம் வழியாகப் பெற்றவர். மேலும் சென்னைப் பல்கலைக்கழகம் வழியாகப் பயின்று, தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களையும் பெற்றவர் மதுரைப் பல்கலைக்கழகம் வழியாகப் பயின்று, பி.எட். பட்டம் பெற்றவர். கரு. சின்னத்தம்பி வரலாற்றுத் துறையிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். 

    வால்பாறை சின்கோனா அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியுயர்வுபெற்றுப் பணியாற்றியவர். பின்னர்க் குடிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.

    கரு. சின்னத்தம்பி அவர்கள் தம் இருபதாம் அகவையில் (1969) கருப்பாத்தாள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்குச் சி. மதிவாணன் என்ற மகனும் சி. தாமரைச்செல்வி என்ற மகளும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். 

உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1991 இல் தமிழாசிரியராகப் பணியில் இணைந்து 2005, மே மாதம் வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

கரு. சின்னத்தம்பி அவர்கள் ஆசிரியர் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றவர். பகுத்தறிவுச் சிந்தனையும், சீர்திருத்த எண்ணங்களும் கொண்ட கரு. சின்னத்தம்பி அவர்கள் தம் படைப்புகளில் இக்கருத்துகளைக் குழைத்து எழுதியுள்ளார். இவர் எழுதிய திருமூர்த்திக் குறவஞ்சி நூல் சிற்றிலக்கியங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது. 

திருமூர்த்தி மலையில் எழுந்தருளியுள்ள முருகனின் சிறப்பினைக் கூறும் வகையில் இப்பகுதியின் இயற்கை வளம் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இளம் அகவையில் திருமூர்த்தி மலைப்பகுதியில் சுற்றித் திரிந்து, இயற்கை அழகைச் சுவைத்தமை இப் படைப்பு நூலில் பளிச்சிடுகின்றன. இவர் இயற்றிய இச் சிற்றிலக்கியத்தில் இடம்பெறும் முருகன் - வள்ளி ஆகியோர் தமிழ் அடையாளமாகக் காட்டப்பட்டுள்ளனர். திருமூர்த்தி மலையில் சீர்திருத்தக் கருத்துகள் ஒலிப்பதை இச்சிற்றிலக்கியம் எடுத்துக்காட்டுகின்றது. சிங்கன் - சிங்கி உரையாடலில் சிங்கிக்குக் கிடைத்துள்ள அணிகலன்கள் யாவும் சூலூர் பாவேந்தர் பேரவை, திருக்குறள் பேரவை, கருவூர் திரு.வி.க. மன்றம், பாவலரேறு தமிழ்ப் பாசறை, பொள்ளாச்சி கம்பன் தமிழ்ச்சங்கம் முதலான அமைப்பினர் நல்கியவை என்று குறிப்பிட்டுள்ளமை இவர்தம் புதுமை விரும்பும் உள்ளத்துக்குச் சான்றாகும். 

கரு. சின்னத்தம்பியின் “திசைகள் முடிவதில்லை” என்னும் பாத்தொகுப்பு தமிழ் உணர்வு செறிந்த பாடல்களின் தொகுப்பாக விளங்குகின்றது. 95 தலைப்புகளில் அமைந்த பாக்களில் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது. புலவர் சு. நஞ்சப்பன், புலவர் துரை. தில்லான், புலவர் க. வீ. வேதநாயகம், புலவர் அருணா. பொன்னுசாமி, புலவர் க. வஞ்சிமுத்து, புலவர் தி. ஆறுமுகம் முதலான அறிஞர் பெருமக்களின் அணிந்துரைகளுடன் வெளிவந்துள்ள இந்த நூலில் இடம்பெறும் பாடல்கள் யாவும் தமிழ் உணர்வு, தமிழ் இசை, தமிழ்த்தொண்டர் பணிளை அறிமுகம் செய்வதாக உள்ளன. 

    கரு. சின்னத்தம்பி அவர்களின் பணிகளைப் பாராட்டிப் பல்வேறு அமைப்பினர் இவருக்குச் சிறப்பு ஆரம் (விருது) நல்கியுள்ளனர். அவற்றுள் தமிழகத் தமிழாசிரியர் கழகம் வழங்கிய “திருக்குறள் மாமணி”, கருவூர் திரு.வி.க. மன்றம வழங்கிய “கவியருவி”, உடுமலை இளங்கோவடிகள் முத்தமிழ் மன்றம் வழங்கிய “திருவள்ளுவர் தமிழ்க் கதிர்”, கோவை கவையன்புத்தூர் தமிழ்ச்சங்கம் வழங்கிய “குறள் செம்மல்” ஆகிய சிறப்பு ஆரங்கள் இவரின் சிறப்புரைப்பனவாகும்.

கரு. சின்னத்தம்பி அவர்கள் தம் பணியோய்வுக்குப் பிறகு மடத்துக்குளம் அருகில் உள்ள சோத்தம்பட்டியில் தம் தோட்டத்தில் வேளாண்மைப் பணிகளில் ஈடுபட்டு, அமைதி வாழ்க்கை வாழ்ந்துவருகின்றார். 

புலவர் கரு. சின்னத்தம்பியின் படைப்புகள் 

1.   சிலிர்ப்பு(பாத்தொகுப்பு) 2003

2.   நீரோட்டம்(குறுங்காவியம்) 2006

3.   திசைகள் முடிவதில்லை(பாத்தொகுப்பு) 2022

4.   ஓடைக்கரைத் தாழம்பூ(குறுங்காப்பியம்) 2024

5.   திருமூர்த்திக் குறவஞ்சி(சிற்றிலக்கியம்) 2025

6.   வேரில் வீழும் தூறல் (பாத்தொகுப்பு) 2025 

வெளிவர வேண்டியவை: 

7.   தாகம் தீர்ந்ததா?

8.   சிறைமீட்ட செந்தமிழ்

9.   பகைபோக்கிய பைந்தமிழ்

10. நட்புக் காத்த நற்றமிழ்

11. குமுறும் நெஞ்சம்

12. வாழ்க்கைச் சுழல்

13. விதிகாட்டுமா சதி

 


 





 

ஞாயிறு, 28 டிசம்பர், 2025

முனைவர் க. வீ. வேதநாயகம்

  

முனைவர் க. வீ. வேதநாயகம் 

[முனைவர் க. வீ. வேதநாயகம் ஈரோடு மாவட்டம் கணக்கம்பாளையத்தில் பிறந்தவர். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர். ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தமிழாசிரியராகவும், தலைமையாசிரியராகவும், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராகவும் பணியாற்றியவர், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவராகவும் பொறுப்பு ஏற்றவர். காரைக்கால் அம்மையாரையும் அக்கம்மாதேவியையும் ஒப்பிட்டு, முனைவர்பட்ட ஆய்வு செய்தவர். பன்னூலாசிரியர்] 

முனைவர் க. வீ. வேதநாயகம் அவர்கள் ஈரோடு மாவட்டம் கணக்கம்பாளையத்தில் வீரப்ப முதலியார், இராமாயம்மாள் ஆகியோரின் மகனாக 02.10.1950 இல் பிறந்தவர். கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவர். அருகில் உள்ள கள்ளிப்பட்டி என்னும் ஊரில் ஆறாம் வகுப்பு முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் (1967-71) தமிழ் பயின்றவர். அப்பொழுது அக்கல்லூரியில் பேராசிரியர்களாக விளங்கிய பெருமக்கள் வெ.சு. அழகப்பன், மு. இராமலிங்கம், சோமா, கோவிந்தராசன், சங்கரநாராயணன் பிள்ளை உள்ளிட்டோர் ஆவர். குமாரபாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஓராண்டு தமிழாசிரியர் பயிற்சி பெற்று, (1972) புலவர் ஆனவர். 

நீலமலை மாவட்டம் நடுவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1973 இல்  ஆசிரியர் பணியைத் தொடங்கிய முனைவர் க. வீ. வேதநாயகம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெ. மேட்டுப்பாளையம் என்னும் ஊரில் 1974 முதல் 1984 வரை ஆசிரியர் பணியாற்றியவர். பின்னர் பங்களாபுதூர் என்னும் ஊரின் அரசு மேல்நிலைப் பள்ளியில் (1984-1990) பணியாற்றியவர். 

மைசூரில் அமைந்துள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் பத்து மாதங்கள் கன்னடம் பயின்று பட்டயச் சான்று பெற்றவர். இக் கன்னட மொழியறிவு இவர்தம் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பெரிதும் உதவியது. 1990 முதல் 1995 வரை பள்ளித் துணை ஆய்வாளராக நிர்வாகப் பணியினை ஏற்றவர். 1995 முதல் 2000 வரை கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியேற்றவர்.  எழுமாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றியும், பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றியும் மாணவர்களின் உள்ளங்களில் தமிழ் பயிற்றுவித்தலால் புகழ்பெற்று விளங்கியவர். 

ஈரோட்டில் அனைவருக்கும் கல்வித்திட்டம் தொடங்கியபொழுது மேற்பார்வையாளராகத் தூக்கநாயக்கன் பாளையத்தில் பணியாற்றியவர். இவர்தம் நிர்வாகத் திறனுக்குப் பரிசு போலத் தாசப்ப கவுண்டன் புதூரின் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகவும் 2007 இல் மலையப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராகவும் பணியாற்றியவர். இக்காலகட்டத்தில் இவர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராகக் கூடுதல் பொறுப்பையும் வகித்தவர். கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றியபொழுது 2009 ஆம் ஆண்டு மே மாதம் தம் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்.  

முனைவர் க. வீ. வேதநாயகம் அவர்கள் பணியிலிருந்தபொழுது தமிழகத் தமிழாசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைசென்றவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டவர்(2005-2010) 

முனைவர் க. வீ. வேதநாயகம் அவர்கள் பாரதியார் பல்கலைக்கழகத்தின் வழியாக இளம் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்தவர். இவர்தம் ஆய்வுத் தலைப்பு “ஈரோடு மாவட்டச் சிறுதெய்வ வழிபாடு” என்பதாகும். இவரின் நெறியாளர், ஈரோடு கலைக்கல்லூரியில் பணியாற்றிப் பின்னர் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் நா. ஆறுமுகம் ஆகும். ஈரோட்டுப் பேராசிரியர் பாலமுருகன் அவர்களின் மேற்பார்வையில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் வழியாகக் காரைக்காலம்மையார் அக்கம்மாதேவி - ஓர் ஒப்பீடு என்னும் தலைப்பில் ஆய்வேடு அளித்து முனைவர் பட்டம் பெற்றவர் (இவ்வாய்வேடு பின்னாளில் வாழ்வியலும் வழிபாடும் என்னும் தலைப்பில் நூலாக்கம் பெற்றது.) 

முனைவர் க. வீ. வேதநாயகம் அவர்கள் 11.03.1973 இல் துளசி அவர்களைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் இல்லறப் பயனாய் மருத்துவர் வே. மோகன்குமார், ஆசிரியர் வே. மணிமேகலை ஆகியோர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். 

திருக்குறள் பேரவை வாயிலாகவும், தமிழ்வளர்ச்சித்துறை நிகழ்வுகள் வாயிலாகவும்  இவர் தமிழ்ப்பணியாற்றி வருபவர். முன்னாள் மாணவர்கள் சங்கம், தமிழகத் தமிழாசிரியர் கழகம் முதலான அமைப்புகளில் தம்மை இணைத்துக்கொண்டு தமிழ்ப்பணியாற்றிவரும் இவர் மிகச் சிறந்த ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். ஈரோட்டுப் புலவர் செ. இராசு அவர்களின் நெறிப்படுத்தலில் கொங்குநாட்டு வரலாறுகளைச் சொல்லும் அரிய நூல்கள் பலவற்றைப் படைத்துள்ளார். 

பவானி ஆற்றையும் அதனை ஒட்டியப் பகுதியையும் தம் பணிச்சூழலுக்கு உரிய பகுதிகளாகப் பெற்ற முனைவர் வேதநாயகம் அப்பகுதியின் மக்கள் வரலாற்றைக் கட்டுரைகளாகவும், நூல்களாகவும் தந்துள்ளார். அதுபோல் இராமானுசர் வந்துசென்ற தம் ஊரான கணக்கம்பாளையத்தின் சிறப்பினை “உடையவர் திருவடி” நூலில் சிறப்பாக விளக்கியுள்ளார்.  “முத்தமிழோடு நடந்த மூவர்” என்னும் தலைப்பில் அமைந்த நூலில் தேவாரத் தமிழ் தந்த ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் வரலாற்றைச் சிறப்பாக வடித்துத் தந்துள்ளார். “நம்ம ஊரு” என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள நூலில் தம் பிறந்த ஊரின் சிறப்புகளை உரிய சான்றுகளுடன் விளக்கி எழுதியுள்ளார். 

“புனல்பாய் மகளிராட வொழிந்த

பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்

சாந்து வருவானி நீரினும்

தீந்தண் சாயலன் மன்ற, தானே” (பதிற்றுப்பத்து  86) 

என்று போற்றப்படும் பவானி ஆற்றின் வளமும் வரலாறும் குறிப்பிட்டு, பவானி போற்றுதும் என்ற தலைப்பில் வேதநாயகம் எழுதியுள்ளார். பவானி ஆற்றின் சிறப்பினையும் அப்பகுதி மக்களின் சிறப்பினையும் தாங்கிய இந்த நூல் தமிழ் இலக்கிய உலகில் என்றும் போற்றப்படும் நூலாகும். தமிழாராய்ச்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் புலவர் முனைவர் க. வீ. வேதநாயகம் அவர்கள் தற்பொழுது கணக்கம்பாளையத்தில் அமைதி வாழ்க்கை வாழ்ந்துவருகின்றார். 

முனைவர் க. வீ. வேதநாயகம் அவர்களின் தமிழ்க்கொடை: 

1.   ஈரோடு மாவட்டச் சிறுதெய்வ வழிபாடு, 2009

2.   வாழ்வியலும் வழிபாடும், 2010

3.   உடையவர் திருவடி, 2015

4.   முத்தமிழோடு நடந்த மூவர், 2021

5.   பவானி போற்றுதும், 2021






 

வெள்ளி, 19 டிசம்பர், 2025

தகைசால் தமிழ்த் தொண்டர்கள்

 


  தகைசால் தமிழ்த் தொண்டர்கள் என்னும் தலைப்பில் 42 தமிழறிஞர்களின் வாழ்வும் பணியும் அடங்கிய நூலொன்றினை எழுதியுள்ளேன். இந்த நூலின் கட்டுரைகள் இணையத்தில் நான் முன்பு எழுதியவற்றின்  செம்மை வடிவம் ஆகும். நூல் அழகிய அமைப்பில் அச்சாக்கம் பெற்று,  என் கையினுக்கு இன்று (19.12.2025) கிடைத்தது

  பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார், தொல்காப்பிய அறிஞர் கு. சுந்தரமூர்த்தி, பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார், முனைவர் இரா. திருமுருகனார், அறிஞர் ஆ. சிவலிங்கனார், பேராசிரியர் இரா. சாரங்கபாணியார், தமிழ்நூற் கடல் தி.வே.கோபாலையர்,  பாவலர் மணி ஆ. பழநி, பேராசிரியர் அடிகளாசிரியர், பேராசிரியர் மருதூர் இளங்கண்ணன், பேராசிரியர் மு. சுந்தரேசம் பிள்ளை,  திருக்குறள் பெருமாள், கருப்பக்கிளர் சு. இராமசாமிப் புலவர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் வாழ்வும் பணியும் இந்நூலில் சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. 

தகைசால் தமிழ்த் தொண்டர்கள்  நூல் விரைவில் வெளியீடு காண உள்ளது. 

328 பக்கம் கொண்ட இந்த நூலின் விலை 350 உருவா ஆகும். 

தேவைக்குத் தொடர்புகொள்ளுங்கள்: 

மின்னஞ்சல்: muetamil@gmail.com 

பேசி - புலனம்: + 91 9442029053

 

திங்கள், 8 டிசம்பர், 2025

புலவர் சு. நஞ்சப்பன்

  

புலவர் சு. நஞ்சப்பன்

[புலவர் சு. நஞ்சப்பன் கோவையில் வாழ்ந்துவருபவர். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்து தமிழாசிரியர்களின் பல்வேறு உரிமைகளைப் போராட்டங்கள் வாயிலாகவும், கோரிக்கைகள் வாயிலாகவும் நிறைவேற்றித் தந்தவர். தமிழுணர்வு நிறைந்த இவர் பேச்சாளராகவும் புகழ்பெற்றவர்] 

தமிழ் கற்ற அறிஞர் பெருமக்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றியபொழுது அவர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு இணையாக நடத்தப்படாத ஒரு நிலைமை தமிழகத்துக் கல்வித்துறையில் முன்பு நிலவியது. 

பள்ளியில் ஆசிரியர்  வருகைப் பதிவேட்டில் தலைமை ஆசிரியர் பெயர் முதலில் இருக்கும்; அடுத்ததாகப் பட்டதாரி ஆசிரியர்கள் பெயர்கள் இருக்கும்; இதனையடுத்து இடைநிலை ஆசிரியர்களின் பெயர்கள் இருக்கும்; இவர்களுக்குப் பின் சிறப்பாசிரியர் பிரிவில் தமிழாசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கைத்தொழில் ஆசிரியர், ஓவிய ஆசிரியர்கள் பெயர்கள் என எழுதப்பட்டிருக்கும். இதனை தமிழகத் தமிழாசிரியர் கழகம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்று போராடியது. தமிழாசிரியர்களின் பெயர்கள் ஊதிய விகிதம், கல்வித்தகுதி, கற்பிக்கும் வகுப்பு இவற்றைக் கருத்தில் கொண்டு, பணிக்கால முன்னுரிமையைக் கணக்கில் கொண்டு  ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதப்பட வேண்டும் என்று கேட்டது. இவ்வாறு பெற்ற உரிமையால்தான்  இன்றைய பள்ளிக்கூட வருகைப் பதிவேட்டில்  தமிழ் பயின்றவர்களின் பெயர்கள் முன்னுக்கு நகர்ந்துள்ளன. 

மேலும் வித்துவான், புலவர் உள்ளிட்ட பட்டயப் படிப்புகள் படித்தவர்கள் கல்வித்தகுதி குறைந்தவர்களாகக் கருதப்பட்டிருந்தனர். அரசின் கவனத்துக்கு இதனைக் கொண்டுசென்ற பிறகு, இரண்டு தாள்களைக்  கூடுதலாகத் தேர்வு எழுதிப் பிலிட் பட்டம் பெற்று, மற்ற ஆசிரியர்கள் பெற்ற உரிமைகளைத் தமிழாசிரியர்கள் பெற்றார்கள்.. சிறப்பாசிரியர்கள் என்று இருந்தவர்கள் பதவி உயர்வுபெற முடியாத நிலைமையை அறிந்து தமிழாசிரியர்களை உதவி ஆசிரியர்கள் என்று பதவிப் பெயர் மாற்றுவதற்கு  ஒரு பெரும் அணி அக்காலத்தில் போராட வேண்டியிருந்தது.

தமிழாசிரியர்கள் தலைமை ஆசிரியர் ஆகலாம்; சான்றிதழ்களில் தமிழாசிரியர்கள்  சான்றொப்பம் இடலாம்;   பள்ளித் துணை ஆய்வாளர்கள் ஆகலாம்; மாவட்டக் கல்வி அலுவலர் ஆகலாம்; முதன்மைக் கல்வி அலுவலர் ஆகலாம்; இணை இயக்குநர் ஆகலாம்; இயக்குநர் ஆகலாம்  என்று பல்வேறு உரிமைகளைப் பெறுவதற்குத் துணிவும், பணிவும் கொண்டு இயங்கிப் பல்லாயிரம் தமிழாசிரியர் பெருமக்களைத் தலைமை தாங்கி வழிநடத்தியவர்  நாவுக்கரசர் புலவர் சு. நஞ்சப்பன் ஆவார்.  அவர்களின் தன் வரலாற்று நூலான  ஓடை நதியானது என்ற வாழ்வியல் சிந்தனை நூலினை அண்மையில் படித்து மகிழும் வாய்ப்பினைக் கருவூர்ப் புலவர் அருணா பொன்னுசாமி அவர்களும் புலவர் துரை. தில்லான் அவர்களும் எனக்கு உருவாக்கித் தந்தார்கள். 

பள்ளிக்குச் சென்று கடமையை ஆற்றிவிட்டு அன்றாடம் திரும்பும் எளியநிலைத் தமிழாசிரியராகப் புலவர் சு. நஞ்சப்பன் அவர்கள் இல்லை. இவர் தமிழாசிரியர்களை ஒன்றுதிரட்டி நடத்திய போராட்டங்களும் இழப்புகளும் துன்பங்களும் அறியும்பொழுது மிகப்பெரும் மாமலையாக விளங்கி, ஆசிரியப் பெருமக்களுக்கு அரணாக இருந்து பாதுகாத்துள்ள உயரிய வாழ்வினை அறிந்து வியப்புறுகின்றேன். இவரின் வாழ்க்கை தமிழர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியான வாழ்வாகத் தெரிகின்றது. 

புலவர் சு. நஞ்சப்பனார் தமிழாசிரியர்களின் உரிமைக்கு மட்டும் போராடியிருந்தால் உயர்வுபெற்ற புலவர்கள் – பயன்பெற்ற புலவர்கள் மட்டும் கொண்டாடியிருப்பார்கள். புலவர் சு நஞ்சப்பனாரோ தமிழாசிரியர் நலம் காத்தமைபோல் தமிழ் நலம் காக்கும் பணியிலும் ஈடுபட்டவர். தமிழ் வளர்ச்சிக்கு நடத்திய கருத்தரங்குகள், மாவட்டந்தோறும் நடத்திய பேரணிகள், தமிழ் எழுச்சி மாநாடுகள், தமிழ்ப் பயிற்சி அரங்கம், தமிழுக்குத் தொண்டு செய்தவர்களைப் போற்றியமை முதலியவற்றின் வழியாகத் தமிழகத்தில் புதிய தமிழ் எழுச்சிக்கு வித்திட்டவர். அரசு செய்த தமிழ்நலச் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்தவர். எனவே, இவர்தம் வரலாறு தமிழ் வரலாற்றின் ஒரு பகுதி; தமிழர் வரலாற்றின் ஒரு பகுதி எனலாம். 

1942 இல் தொடங்கப்பட்ட தமிழ் வித்துவான் சங்கம், 1946 இல் மாகாணத் தமிழாசிரியர் கழகமாக மலர்ந்து, 1956 இல் மாநிலத் தமிழாசிரியர் கழகமாகப் பொலிந்து, 1969 இல் தமிழகத் தமிழாசிரியர் கழகமாகப் பூத்து மணம்பரப்பியது.  புலவர் சு. நஞ்சப்பனார் தம் முன்னோர்கள் உருவாக்கிய தமிழகத் தமிழாசிரியர் கழகத்தில் 1970 அளவில் உறுப்பினராக இணைந்தார். பின்னர் மேட்டுப்பாளையம் வட்டத்தின் தலைவரானார்; பின்னர் கோவை மாவட்டத் தலைவரானார்; இயக்க ஈடுபாடும் தொடர்ந்த தொண்டுகளும் புலவர் சு. நஞ்சப்பனாரைத் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளராக்கின.  21. 02. 1988 முதல் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்துக்காகச் சென்னை எழும்பூரில் ஓர் கட்டடம் வாங்கப்பெற்று, இயக்கத்தின் சொத்தாக்கப்பட்டது. இதில் முழுமூச்சாக ஈடுப்பட்டு உழைத்தவர் நம் புலவர் சு. நஞ்சப்பனார் ஆவார். தமிழுக்கும் தமிழாசிரியர்களுக்கும் பெருமைதேடித் தந்த புலவர் சு. நஞ்சப்பனாரின் தமிழ் வாழ்க்கையை நண்பர்களுக்கு எடுத்துரைப்பதில் மகிழ்கின்றேன். 

புலவர் சு. நஞ்சப்பனாரின் தமிழ் வாழ்க்கை 

புலவர் சு. நஞ்சப்பன் கோவை மாவட்டம் மருதூரில் 14. 06. 1943 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் மூ. சுப்பைய கவுண்டர் – பெரியக்காள் என்பனவாகும். இவர்கள் உழவர் குடியைச் சேர்ந்தவர்கள். 

புலவர் சு. நஞ்சப்பன் தம் ஊருக்கு அருகில் உள்ள புங்கம்பாளையம் பள்ளியில் இளமைக் கல்வியைக் கற்றார். ஐந்தாம் வகுப்பு வரை இப்பள்ளியில் படிப்பு நடைபெற்றது.  ஆறாம் வகுப்பு முதல் ஆறுகல் தொலைவில் உள்ள காரமடையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். ஏழாம் வகுப்பு முதல் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போடிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு பரிசுகள் பெறத் தொடங்கினார். இதனால் பேச்சுத்துறையில் இவருக்கு ஆர்வம் உண்டானது. பள்ளிப்பருவத்தில் இவர்தம் தமிழுணர்வுக்குக் காரணமாக இருந்தவர் புலவர் கி. நஞ்சுண்டனார் ஆவார். அதுபோல் பள்ளியில் இவருக்கு ஓர் ஆண்டு கணக்குப் பாடம் நடத்தியவர் செ.அரங்கநாயகம். (பின்னாளில் தமிழ்நாட்டு அரசின் கல்வி அமைச்சராக இருந்தவர்). பதினொன்றாம் வகுப்பு வரை இப்பள்ளியில் இவர்தம் படிப்பு இருந்தது. பள்ளியிறுதி வகுப்பில் தேறி, அவிநாசி ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்று, ஆசிரியர் தகுதிபெற்றார். 1963 ஆம் ஆண்டு புலவர் சு. நஞ்சப்பனாரின் இருபதாம் வயதில் புயங்கனூர்  ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். நான்கு மாதங்களில் வச்சினம்பாளையம் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிமாறுதல் அமைந்தது. பின்னர்த் தாம் பயின்ற புங்கம்பாளையம் ஊராட்சி மன்ற நடுநிலைப் பள்ளியில் பணிமாறுதலில் இணைந்தார். 

தமிழை முழுமையாக அறிந்துகொள்ள காரமடையில் தமிழாசிரியராக இருந்த புளியம்பட்டி பெரும்புலவர் கணேசனார் அவர்களிடம் மாலைநேரத்தில் இலக்கண,  இலக்கியம் கற்று, வித்துவான் தேர்வெழுதி வென்றார். 12.08.1969 இல் தமிழாசிரியர் பணி பெரியபுத்தூரில் கிடைத்தது. 1971 இல் புயங்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். பணியில் இருந்தபடியே பி.லிட், முதுகலைப் பட்டங்களைப் பயின்று பெற்றார். 32 ஆண்டுகள் தமிழாசிரியர் பணியாற்றிய சு. நஞ்சப்பனார் 2001 ஆம் ஆண்டு பணியோய்வு பெற்றவர். பணியோய்வுக்குப் பிறகும் தமிழாசிரியர்களின் உயர்வுக்கும் உரிமைக்கும் தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநில மதிப்பியல் தலைவராக இவர்தம் பணி தொடர்கின்றது. 

புலவர் சு. நஞ்சப்பனாரின் தமிழ்க் குடும்பம் 

புலவர் சு. நஞ்சப்பனார் 02.09.1973 இல் அமராவதி அவர்களை மாண்புமிகு அமைச்சர் மு. கண்ணப்பன் தலைமையில் திருமணம் செய்துகொண்டார். கோவைத் தென்றல் மு. இராமநாதன், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் மே.சி. தூயமணி போன்ற சான்றோர்கள் வாழ்த்துரை வழங்கினர். இவர்களுக்கு இல்லறப் பயனாய் ந. எழில் (1974), ந. மதிவாணன் (1977) என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். ந. எழில் பொறியியல் பயின்று, அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றார். ந. மதிவாணன் உயர்கல்வி கற்று, கத்தார் நாட்டில் பணியாற்றி வருகின்றார். 

ந.அமராவதி, சு. நஞ்சப்பனார்

புலவர் சு. நஞ்சப்பனார் மிகச் சிறந்த தமிழறிஞர்களைத் தம் சுற்றமாகக் கொண்டு அரும்பணிகளை ஆற்றியவர். புலவர் துரை. தில்லான் அவர்களைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு நமது தமிழாசிரியர் என்னும் இதழை நடத்தியவர். அதுபோல் புலவர் அருணா பொன்னுசாமி, முனைவர் க. வீ. வேதநாயகம், சின்ன மணல்மேடு த. இராமலிங்கம், புலவர் பெ. கறுப்பண்ணன், புலவர் கோ, தமிழரசன் முதலான சான்றோர் பெருமக்களுடன் நல்லுறவு கொண்டு ஒரே குடும்பமாக இயங்கும் திறன் போற்றத்தக்கது.

புலவர் சு. நஞ்சப்பன் அவர்கள் பெற்ற விருதும் பாராட்டுகளும் 

  புலவர் சு. நஞ்சப்பன் அவர்களின் ஆசிரியப் பணியைப் பாராட்டித், தமிழக அரசு "நல்லாசிரியர் விருதினை" மேனாள் கல்வி அமைச்சர் க. அன்பழகன் அவர்களின் கையால் 05.09.1998 இல் வழங்கியது. 1991 இல் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் “நாவுக்கரச்சர்” என்னும் விருது வழங்கிப் பாராட்டியுள்ளார். கரூர் திரு. வி. க. மன்றம் “நகைச்சுவை நற்றமிழ் அரசு” விருது அளித்துப் பாராட்டியது. கோவை வேலுமணி அம்மையார் இலக்கியக் குழுவினர் “நாவரசு” என்று விருது வழங்கிப் பெருமை சேர்த்தனர். திண்டுக்கல் தமிழகத் தமிழாசிரியர் கழகம் சார்பில் “செந்தமிழ்ச் செல்வர்” என்னும் விருதும். மாநிலத் தமிழாசிரியர் கழகம் சார்பில் “திருக்குறள் மாமணி” என்னும் என்னும் விருதும் வழங்கிப் போற்றியுள்ளனர்.

  புலவர் சு. நஞ்சப்பன் அவர்கள் அமெரிக்கா, கத்தார், மலேசியா, சிங்கப்பூர் இலங்கை முதலான நாடுகளுக்குப் பயணம் செய்தவர். 

புலவர் சு. நஞ்சப்பன் தமிழ்ப்பற்றுடன் அறிவார்ந்த உரையாற்றுவதில் வல்லவர். இவர்தம் உணர்வு நிறைந்த பேச்சாற்றல் இவரைத் தமிழகத்துத் தமிழாசிரியர்களுக்கெல்லாம் தலைமை தாங்கி வழிநடத்தும் வாய்ப்பினை நல்கியுள்ளது எனலாம். 

புலவர் சு. நஞ்சப்பன் அவர்களின் தமிழ்க்கொடை: 

1.   இதழும் இயக்கமும் (2015)

2.   ஓடை நதியானது (2024)








 


புதன், 3 டிசம்பர், 2025

பாவலர் சின்ன மணல்மேடு த. இராமலிங்கம்

  

 சின்ன மணல்மேடு  . இராமலிங்கம்


[சின்ன மணல்மேடு  .  இராமலிங்கம் அவர்கள் தமிழாசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  புதுவெள்ளம் இதழின் ஆசிரியர்; பன்னூலாசிரியர். மரபுப் பாடல் எழுதுவதில் வல்லவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். தமிழக அரசின் பாடத்திட்டக் குழுக்களில் பணியாற்றியவர். வீராணம் ஏரிக்கரையில் உள்ள சின்ன மணல்மேடு என்னும் ஊரில் பிறந்தவர்.]


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிலிருந்து சேத்தியாத்தோப்பு வரை நீண்டு கிடப்பது  வீராணம் ஏரியாகும். முதலாம் பராந்தகசோழனின் இயற்பெயரான வீரநாராயணன் பெயரில் இவ்வேரி வீரநாராயணன் ஏரி என்று அழைக்கப்பெற்று, மக்கள் வழக்கில் இன்று வீராணம் ஏரி என்று குறைவுற்று வழங்குகின்றது. இப்பேரேரியின் நீர்வளத்தால் வாழைக்கொல்லை, கூளாப்பாடி, கந்தகுமரன், உத்தமசோழன் முதலான ஊர்களும் அதனைச் சுற்றியுள்ள பல நூறு ஊர்களும் வளம்பெற்றுத் திகழ்கின்றன. 

வீராணம் ஏரியின் நீர் வேளாண்மைக்கு இன்று உதவுவதுடன் சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் பணியையும் செய்கின்றது. அதுபோல் இந்த வீராணம் பகுதியில் தோன்றிய அறிஞர் பெருமக்கள் பலரும் இப்பகுதி மக்களுக்குக் கல்விபுகட்டும் பணியைச் செய்வதுடன் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்குத் துணைநிற்பவர்களாகவும், தூண்களாகவும் விளங்குகின்றனர். 

அவ்வகையில் தமிழாசிரியராகப் பணியாற்றியும் புதுவெள்ளம் என்னும் இலக்கிய இதழ் நடத்தியும், திருக்குறளுக்கு உரைவரைந்தும் அறிவுப்பணியாற்றிவரும் பாவலர் சின்ன மணல்மேடு த. இராமலிங்கம் அவர்களின் பணிகளைக் கருவூர்ப் பாவலர் அருணா பொன்னுசாமி அவர்கள் வழியாக அறிந்து பெரும் மகிழ்ச்சியுற்றேன்.  அறிஞர்கள் போற்றும் கவிதையாற்றலைக் கைவரப்பெற்ற த. இராமலிங்கம் அவர்களின் தமிழ் வாழ்க்கை இலக்கிய ஏடுகளில் பதிவுசெய்யப்பெற வேண்டிய பான்மையை உடையது. அவர்தம் வாழ்க்கையையும் தமிழ்ப் பணிகளையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன். 

த. இராமலிங்கம் அவர்கள் வீராணம் ஏரியால் வளம்பெற்றுத் திகழும் சின்ன மணல்மேடு என்னும் ஊரில் வாழ்ந்த கோ. தம்புசாமி – அம்மாக்கண்ணு ஆகியோரின் மகனாக 20.10.1949 இல் பிறந்தவர். உழவர்குடியில் தோன்றிய த. இராமலிங்கம் தம் நான்காம் அகவையில் தந்தையாரை இழந்தவர். தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். 

த. இராமலிங்கம் அவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சின்ன மணல்மேடு என்னும் தம் ஊரில் கல்வி பயின்றவர். தெ. நெடுஞ்சேரியில் ஆறு முதல் எட்டு வகுப்பு வரை பயின்றவர். காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் பள்ளியில் ஒன்பது முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர்.

  வடலூரில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்று(1966-1968), இடைநிலை ஆசிரியராகக் கொள்ளுமேட்டில் அமைந்துள்ள தனியார் பள்ளியொன்றில் 02.11.1968 ஆம் ஆண்டு முதல்  பன்னிரண்டரை ஆண்டுகள்  பணியாற்றியவர். 

1978 இல் தமிழக அரசும் பெற்றோர் ஆசிரியர் கழகமும் இணைந்து “பெரியார் என்னும் பேரொளி” என்னும் தலைப்பில் பாப் போட்டி நடத்தியது. அப் போட்டியில் கடலூர் மாவட்டத்தில் முதன்மை இடம் இவருக்குக் கிடைத்தது. இப்போட்டி'யின் முடிவு இவருக்கு, அடுத்த பணி உயர்வுக்கு ஆதரவாக இருந்தது. 

அரசுப் பணி கிடைத்து, சங்கராபுரத்தை அடுத்துள்ள பிரம்மகுண்டம் என்ற ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அதனை அடுத்து, பண்ணுருட்டியை அடுத்துள்ள காடாம்புலியூரில் உள்ள அரசுப் பள்ளியில் 1984 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1991 முதல் 2006 ஆம் ஆண்டு வரை பண்ணுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை கடலூர் மாவட்டம் காரைக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  முப்பத்தொன்பது ஆண்டுகள் மிகச் சீரும் சிறப்புமாகப் பணியாற்றிய த. இராமலிங்கம் வானொலிகளில் பேசியும், பல்வேறு இதழ்களில் எழுதியும் தம் படைப்புப் பணிகளைத் தொடர்ந்து செய்துவந்தவர். தினமணி, தென்மொழி, தீக்கதிர் முதலான ஏடுகள் இவர்தம் படைப்புகளைத் தாங்கிவருவன. இவர்தம் மரபுப் பாடல்கள் மிகச் சிறந்த உணர்ச்சிப்பாக்களாக விளங்குவனவாகும். சிறுவர் பாடல் புனைவதிலும் பெரும் ஈடுபாடுகொண்டவர்.

. இராமலிங்கம் அவர்கள் 27.08.1972 இல் தம் இருபத்து நான்காம் அகவையில் புலவர் கு. சாவித்திரி அவர்களை இல்லறத் துணையாய் மணந்துகொண்டார். கு. சாவித்திரி அவர்களும் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்களுக்கு இல்லறப் பயனாய் இரண்டு ஆண் மக்கள் வாய்த்தனர். முதல் மகன் மருத்துவர் இரா. இலெனின் அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகின்றார். இரண்டாவது மகன் இரா. கபிலன் பொறியியல் பயின்று, முதுநிலை மேலாளராகப் மணியாற்றி வருகின்றார். 

. இராமலிங்கம் அவர்கள் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொருளாளராகப் பொறுப்பு வகித்தவர். மேலும் கடலூர் மாவட்டத்துப் பொருளாளர், செயலர், தலைவர் பொறுப்புகளையும் ஏற்றுத் திறம்படச் செயல்பட்டவர். 

புலவர் புங்கனேரியான் அவர்களை அமைப்பாளராகக் கொண்டு காட்டுமன்னார்கோவிலில் 1972 முதல் இயங்கிய பாவேந்தர் பைந்தமிழ் மன்றத்தின் தலைவர், செயலாளராகப் பொறுப்பேற்றுத் திறம்பட நடத்தியவர். தமிழகத்து அறிஞர்களை அழைத்து, திங்கள்தோறும் விழாக்களையும், ஆண்டு விழாக்களையும் நடத்தி அப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். 

. இராமலிங்கம் அவர்கள் புதுவெள்ளம் என்ற திங்களிதழின் ஆசிரியராக இருந்து, 2016 முதல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியவர். தமிழ்நாட்டரசின் சமச்சீர் கல்விப் பாடநூல் உருவாக்கும் குழுவில் பணியாற்றியவர். 

த. இராமலிங்கம் அவர்கள் அறிவாற்றலில் நிறைந்து நிற்பவர் என்பதுபோல் தம் வளர்ச்சியில் துணைநின்ற புலவர் சு. நஞ்சப்பன், புலவர் பூ. தில்லைவளவன், புலவர் ந. செல்வராசன், புலவர் துரை தில்லான் முதலான சான்றோர்களிடத்து மிகுந்த நன்றியுணர்வுகொண்டவராக விளங்குகின்றார்.

  த.இராமலிங்கம் அவர்களின் தமிழ் ஈடுபாட்டினை அறிந்த பல்வேறு தமிழமைப்புகள் இவருக்குப் பின்வரும் விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கிப் போற்றியுள்ளன. 

1.   மறைமலையடிகள் விருது

2.   பாவேந்தர் மரபுப் பாவலர் விருது

3.   யாப்புநூல் புரவலர்

4.   எழுச்சிப் பாவலர்

5.   நடைமுறைப் பாவலர்

6.   கவிதைக் கனல்

7.   கவியருவி

8.   தகைசால் தமிழ்ப்பணிச் செல்வர்,

9.   மரபு மாமணி 

முதலான விருதுகள் குறிப்பிடத்தக்கன. 

. இராமலிங்கம் அவர்கள் தற்பொழுது நெய்வேலி முதன்மை வாயிலுக்கு எதிரில் உள்ள அண்ணா கிராமத்தில் அமைதி வாழ்க்கை வாழ்ந்துவருகின்றார். 

. இராமலிங்கம் அவர்களின் தமிழ்க்கொடை: 

1.   சூரியனைச் சுடும் நெருப்பு (பாடல்)

2.   வள்ளுவத்தில் காதல் (பாடல்)

3.   கிணற்றில் வீழ்ந்த கடல் (பாடல்)

4.   பாவம் குருவிகள் (உரைநடை)

5.   திருக்குறள் தெளிவுரை 








 

நன்றி: புலவர் அருணா பொன்னுசாமி, கரூர்