பேராசிரியர் வெ. அ. நாகரத்தினம்
[வெ. அ. நாகரத்தினம் அவர்கள் கோயம்புத்தூரில் வாழ்ந்துவரும் தமிழ்ப் பேராசிரியர்; பன்னூலாசிரியர்; அறிஞர் கு. அருணாசலக் கவுண்டர் அவர்களிடமிருந்து அரிய நூல்களைப் பெற்றுவந்து, தாம் பணியாற்றிய சேரன் கலை அறிவியல் கல்லூரியில் ஒப்படைத்தவர். “கோவை மாவட்ட அகமுடையார் (தேவர்) குலமரபும் பண்பாடும்“ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வுசெய்தவர். “கலித்தொகையில் உருவமும் உள்ளடக்கமும்” என்னும் தலைப்பில் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவிற்காகப் பெருந்திட்டப்பணியைச் செய்தவர். கலைஞரும் தொல்காப்பியரும் என்ற ஆய்வு நூலையும் படைத்துள்ளார்.]
பேராசிரியர் வெ. அ. நாகரத்தினம் அவர்கள் கோவை மாவட்டம் வெள்ளலூரில் வாழ்ந்த அங்கண்ணத் தேவருக்கும் பேச்சியம்மாளுக்கும் நான்காவது மகளாகப் பிறந்தவர் (18.02.1960). தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் வெள்ளலூரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர்(1976 வரை). புகுமுக வகுப்பினைப் பீளமேடு கிருட்டினாம்பாள் கலை அறிவியல் கல்லூரியில் பயின்றவர். கணிதவியல் பட்ட வகுப்பினை கோவை, நிர்மலா மகளிர் கல்லூரியில் பயின்றவர். முதுகலைத் தமிழ் இலக்கியப் படிப்பினைக் கோவை, பி.எஸ்.ஜி. கலை,அறிவியல் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர். ஆய்வியல் நிறைஞர் படிப்பினைக் கோவைப் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயின்று “கலித்தொகையில் இயற்கை” என்னும் தலைப்பில் ஆய்வேடு ஒப்படைத்துப்(1987) பட்டம் பெற்றவர். தம் முனைவர் பட்ட ஆய்வினைக் “கோவை மாவட்ட அகமுடையார்(தேவர்) குலமரபும் பண்பாடும்” (1997) என்ற தலைப்பில் மேற்கொண்டு, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சைவ சித்தாந்தப் பாடத்தினை இரண்டு ஆண்டுகள் பயின்று, “சைவ சித்தாந்த இரத்தினம்” என்னும் பட்டம்பெற்றவர்.
பேராசிரியர் வெ. அ. நாகரத்தினம் அவர்கள் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் புகழ்மிக்க பேச்சாளர்கள், எழுத்தாளர்களான வலம்புரி ஜான், சாலமன் பாப்பையா, சிலம்பொலி செல்லப்பன், லேனா தமிழ்வாணன், ஈரோடு தமிழன்பன், புட்பவனம் குப்புசாமி, பேராசிரியர் அப்துல்காதர், சுகி சிவம், ஜெயகாந்தன், கவிஞர் அறிவுமதி உள்ளிட்டோரைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து, மாணவர்களுக்குத் தமிழின்பம் கிடைக்கச் செய்தவர். புலவர் செ. இராசு, கல்வெட்டியல் அறிஞர் பூங்குன்றனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களுடன் பழகிய பெருமைக்குரியவர்.
பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும், தேசியக் கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கிய பெருமைக்குரியவர். மாணவர்களிடத்தும், நண்பர்களிடத்தும் அன்புடன் பழகும் பண்பினைப் பெற்றவர். பல்வேறு கல்வி நிறுவனங்களின் அழைப்பினை ஏற்றுத் தம் தமிழறிவை அடுத்த தலைமுறையினருக்கு ஆர்வமுடன் கற்பிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்.
2011 முதல் 2013 வரை பல்கலைக்கழக நல்கைக் குழு வழங்கிய நிதி உதவியுடன் “கலித்தொகையில் உருவமும் உள்ளடக்கமும்” என்ற தலைப்பில் பெருந்திட்டப் பணியைச் செய்து ஒப்படைத்தவர்.
வெ. அ. நாகரத்தினம் அவர்கள் பணிபுரிந்த கல்லூரிகள்:
· சேரன்
கலைஅறிவியல் கல்லூரி காங்கேயம். தமிழ்த்துறைத் தலைவர் (1994 முதல்2005
வரை)
·
எஸ்.எம்.எஸ்.
கல்லூரி, கோவை
(2005 – 2007)
· அரசுக்
கல்லூரியில் உதவிப்பேராசிரியர் பணி கிடைத்து, 2007 டிசம்பர்
26 இல் திருப்பூரில் அமைந்துள்ள எல்.ஆர்.ஜி.
கல்லூரியில் பணியேற்றவர்.
· கோவை அரசுக் கல்லூரிக்கு 2010 இல் மாறுதலாகி வருகை தந்த பேராசிரியர் நாகரத்தினம் அவர்கள் 2018 வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
வெ. அ. நாகரத்தினம் அவர்களின் தமிழ்க்கொடை:
1. கோவை நாட்டுப்புறப்
பாடல்கள்(2006)
2. அறிஞர் பேராசிரியர்
வெள்ளிமலையவர்களின் இலக்கியப் பணி(2014)
3. அருள்மிகு ஸ்ரீதேனீஸ்வரர்
திருக்கோயில் வரலாறு(2015)
4. கவிஞர் சென்னிமலை
தண்டபாணியின் இலக்கியப் பணி(2016)
5. அருள்மிகு ஆனைமலையம்மன்
தலவரலாறு(2019)
6. அருள்மிகு
இருளப்பசாமி (எ) உமாமகேஸ்வரர் தலவரலாறு
7. கலைஞரும் தொல்காப்பியமும்(2023)
வெளிவர உள்ள நூல்கள்:
1. கலித்தொகை உருவமும்
உள்ளடக்கமும்
2. பழமை சொல்லும்
பழமொழிகள்
3. கொங்கு மண்ணில் பெண்ணியம்
வெ. அ. நாகரத்தினம் அவர்கள் பெற்ற விருதுகள்
·
அன்னை
விருது, தமிழ் ஐயா கல்விக்கழகம், ஔவைக் கோட்டம்
· நல்லாசிரியர் விருது, தேவர் சமூக கல்வி அறக்கட்டளை இராமநாதபுரம்
·
சக்தி
விருது, திருப்பூர் அரிமா சங்கம்
· கலைஞர்
தமிழ் ஆய்வறிஞர் விருது, தமிழ் ஐயா கல்விக்கழகம், திருவையாறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக