நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

செவாலியே, பேராசிரியர் க. சச்சிதானந்தம்

 

செவாலியே க. சச்சிதானந்தம் 

     [செவாலியே க. சச்சிதானந்தம் அவர்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவர். தமிழ் ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளை அறிந்தவர். பிரஞ்சுக்காரர்களுக்குத் தமிழும், தமிழ் மாணவர்களுக்குப் பிரஞ்சும் பயிற்றுவித்தவர். பிரஞ்சு மொழி இலக்கியங்களைக் கதைகளாகவும், கட்டுரைகளாகவும் மொழிபெயர்த்து வழங்கியவர். முப்பத்தைந்து ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்தம் பணிகளைப் பாராட்டிப் பிரான்சு நாட்டு அரசு இவருக்கு 2006 ஆம் ஆண்டில் “செவாலியே” என்ற உயரிய விருதளித்துப் பாராட்டியுள்ளது. 94 அகவை ஆகும் இப்பெரியோர் பிரஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு நூல்களை மொழிபெயர்த்து வழங்கும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றார்.] 

பிரான்சிலிருந்து புதுச்சேரிக்கு வந்திருந்த நண்பர் கோவிந்தசாமி செயராமன் அவர்களிடம் பிரான்சில் நடைபெறும் தமிழ் இலக்கிய நிகழ்வுகள் குறித்தும், நூல் வெளியீடுகள் குறித்தும், தமிழர்களின் வாழ்க்கைச்சூழல் குறித்தும் உரையாடிக்கொண்டிருந்தபொழுது எங்களின் பேச்சு, பிரஞ்சுப் பேராசிரியர் ’செவாலியே’ க. சச்சிதானந்தம் குறித்துத் திரும்பியது. பேராசிரியர்  க. சச்சிதானந்தம் அவர்கள் பிரான்சு நாட்டு அரசின் உயரிய விருதான ’செவாலியே’ விருதுபெற்ற பெருமைக்குரியவர். புதுச்சேரியைச் சேர்ந்தவர். அவரைப் பிரான்சில் ஒருமுறை சந்தித்திருந்தாலும்(27.09.2015) மனம் திறந்து அன்றைய பொழுதில் அங்கு உரையாடமுடியாதபடி சூழல் இருந்தது. புதுவைக்கு அருகில் பலவாண்டுகளாக வாழ்ந்துவரும் அவரைச் சந்தித்து, உரையாடி அவர்தம் பணிகளை அறிய நினைத்திருந்தேன். ஆனால் என் விருப்பம் நிறைவேறாமல் காலங்கள் உருண்டோடிக்கொண்டிருந்தன. 

க. சச்சி அவர்களைச் சந்திக்க விரும்பும் என் விருப்பத்தைச் சொன்னவுடன் கோவிந்தசாமி செயராமன் அவர்கள் கடலூர் மாவட்டம் நல்லாத்தூரில் தங்கியிருந்த நம் பேராசிரியரைத் தொடர்புகொண்டு, சந்திக்க வரும் வேட்கையைச் சொன்னார்கள். மறுநாள்(12.10.2024) சந்திக்க, நாளும் நேரமும் உறுதியானது. குறித்த நேரத்தில் புறப்பட்டு, நல்லாத்தூரை அடைந்தோம். நல்லாத்தூர் என்பது சிவப்பிரகாச சுவாமிகள் அடக்கமான ஊராகும். மேலும் புகழ்பெற்ற சிவன்கோவிலும், பெருமாள் கோவிலும் இவ்வூருக்குப் பெருமை சேர்க்கின்றன. இயற்கையான சிற்றூர்ப்புறச் சூழல்களை நிறைத்துக்கொண்டு, நகரத்து மாந்தர்களை ஆர்வமுடன் வரவேற்கும் அழகுநிறைந்த ஊர் இதுவாகும். முன்னமே இவ்வூருக்கு ஒருமுறை சென்றுள்ளேன்; இவ்வூரின் நீர்நிலைகளை ஒட்டிய வயல்வெளிகளில் காலார நடந்துள்ளேன். எனினும் இந்த ஊரில்தான் பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்கள் வாழ்ந்து வருகின்றார் என்ற செய்தி அந்தநாளில் எனக்குத் தெரியாது. இது நிற்க. 

பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்கள் நல்லாத்தூரில் உள்ள தம் தாய் மாமன் வீட்டில் வாழ்ந்து வருகின்றார். எங்களை அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் அன்பொழுக வரவேற்றனர். தாம் பிறந்த இடம் இதுதான் என்று பேராசிரியர்  அவர்கள் இல்லத்தின் ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டி, மகிழ்ந்தார்கள். தமக்கு 94 அகவை ஆகின்றது என்று ஊக்கமுடைய இளைஞரைப்போல் உரைத்தார். கண் பார்வையும் செவிப்புலனும் பேச்சுறுப்புகளும் சிறப்புடன் செயலாற்றுகின்றமையைக் கண்டு மகிழ்ந்தோம். அறிவு ததும்பும் முகமும், அன்பு கனிந்த அகமும் அவரிடம் இருக்கக் கண்டேன். உரையாடலில் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் தெறித்து ஓடின. தம் மனைவியைப் பலவாண்டுகளுக்கு முன்னமே இழந்த நிலையிலும் தம் பிள்ளைகளை வளர்ப்பதற்காக மறுமணம் செய்துகொள்ளவில்லை என்ற உண்மையை மனந்திறந்து உரைத்தார். தம் பிள்ளைகளை யாதொரு குறையுமில்லாமல் படிக்க வைத்து ஆளாக்கியதாகவும் அனைவரும் நல்ல நிலையில் பிரான்சு நாட்டில் பணியிலிருந்தபடி, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். 

பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது அவரின் இளம்பருவத்து வாழ்க்கையைக் குறித்தும், ஆசிரியர் பணி குறித்தும், குடும்பப் பொறுப்புகள் குறித்தும், தம் பிள்ளைகளின் வளர்ச்சி குறித்தும், தம் ஈடுபாடான பணிகளுக்குக் கிடைத்த பாராட்டுகள், விருதுகள் குறித்தும், தாம் செய்த அறப்பணிகள் குறித்தும் மனந்திறந்து உரையாடினார். அவரின் உயர்வுக்குக் காரணமாக அமைந்தது அவரின் நன்றி பாராட்டும் உள்ளமே என்பதை அவரின் உரையாடல்களின் வழியாக நான் கவனித்தேன். தம் செல்வத்துப் பயன் ஈதல் என்பதை உணர்ந்து, அறக்கட்டளைகள் பல நிறுவித் தம் விருப்பங்கள் தொடர்ந்து நடைபெற வழிசெய்துள்ள பாங்கும், இறையீடுபாட்டின் காரணமாகப் பல பொதுத்தொண்டுகள் ஆற்றியுள்ளதையும் அறிந்து பேருவகையுற்றோம். 

தன் தாய்மாமன் வீட்டில் வளர்ந்தமை, தம் தாய்மாமன் வழி இலக்கிய அறிவு, உலகியல் அறிவு பெற்றதை அவர் எடுத்துரைத்து, அக்குடும்பத்தின் 94 அகவைப் பேரன் என்பதை அவர் நினைவுகூர்ந்தபொழுது அவரின் மேம்பட்ட உயர்ந்த உள்ளம் எனக்குப் புரியத்தொடங்கியது. தம்முடன் பழகியவர்கள் அவ்வப்பொழுது வந்து, தம்மைப் பார்த்துச் செல்வதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். வாய்ப்பு அமையும்பொழுது மீண்டும் வந்து பார்த்துச் செல்லுமாறு எங்களிடமும் சொன்ன, அவரிடம் பிரியா விடைபெற்று வந்தபொழுதும் அவரின் வாழ்க்கை வரலாறு என் நெஞ்சில் நினைவுக்குறிப்புகளாக நிலைபெற்றுள்ளது. 

செவாலியே க. சச்சிதானந்தம் வாழ்க்கைக் குறிப்பு: 

க. சச்சிதானந்தம் அவர்கள் கடலூர் மாவட்டம் நல்லாத்தூரில் 30.11.1930 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் சவுளி அ. சி. கணேசன் முதலியார், செல்வாம்பாள் ஆவர். புதுச்சேரியில் உள்ள சொசியெத்தே புரோகிரெசீஸ்து பள்ளியிலும் பெத்தி செமினார் பள்ளியிலும் தம் தொடக்கக் கல்வியைப் பயின்றவர். பின்னர் தமிழிலும் பிரெஞ்சிலும் பிரவே(Brevet) பயின்றவர். அதன் பின்னர் தமிழில் பி.லிட், முதுகலை பயின்றவர். பிரெஞ்சு மொழியில் பக்கலோரெயா (Baccalaureat), திப்ளோப் சுப்பேரியேர் (D.S.), Alliance Frse, Paris ஆகிய படிப்புகளை நிறைவுசெய்துவிட்டு, ஆசிரியர் பயிற்சியில் சான்றிதழும் பெற்றவர்.(C.A.P. Certificat Aptitude Pedagogique). தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு மொழியில் வல்லுநரான க. சச்சிதானந்தம் அவர்கள் தமிழுக்குப் பிறமொழிச் செய்திகளைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் நூல்வடிவில் தந்து மொழிப்பணியாற்றியுள்ளார். முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பல்லாயிரம் மாணவர்களுக்குப் பிரஞ்சு மொழியையும் தமிழையும் பயிற்றுவித்துள்ளார். இவர்தம் இலக்கியப் பணியைப் பாராட்டி, பிரஞ்சு அரசு 2006 ஆம் ஆண்டு செவாலியே என்ற உயரிய விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது. 

க. சச்சிதானந்தம் அவர்களுக்குக் கிடைத்துள்ள சிறப்புகள்: 

பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்களின் வாழ்நாள் பணியைப் பாராட்டிப் பல்வேறு இலக்கிய அமைப்புகளும் நிறுவனங்களும் பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் செய்துள்ளன. 

1.   பிரஞ்சு தமிழ் ஆய்வு மாமணி

2.   சான்றோர் மாமணி (2000)

3.   சிறுவர் மனச்செம்மல் (சங்கரதாஸ் நாடக மன்றம்)

4.   மொழியாக்கச் செல்வர் (புதுவைக் குழந்தை எழுத்தாளர் சங்கம்)

5.   செவாலியே தெ. பால்மு அக்காதெமிக் விருது

6.   செந்நாப் புலவர் விருது (2014)

7.   தமிழ்ப்பணிச் செம்மல் விருது (பிரான்சு திருவள்ளுவர் கலைக்கூடம்)

8.   கம்பன் விருது (பாரிசு கம்பன் கழகம்) 

முதலியன குறிப்பிடத்தக்க விருதுகளும் பெருமைகளுமாகும்.  

க. சச்சிதானந்தம் அவர்களின் தமிழ்க்கொடைகள்:



 

1.   அருமைக் கதைகள் 50

2.   அழகுக் கதைகள் 50

3.   ஈய் நகர வானங்

4.   ஏழைகள் (Les Miserables, V. Hugo)

5.   ஒரு நாள் ஒரு கதை (365 கதைகள்)

6.   கட்டுரைக் களஞ்சியம்

7.   கருணை மறவன்

8.   குரங்குக் காடு

9.   சங்கர்

10. சிவப்புப் பாறை

11. சின்னஞ்சிறு பிரஞ்சுக் கதைகள்

12. சுவையான பிரஞ்சுக் கதைகள்

13. சுவையான பிரஞ்சுக் கதைகள் இருபது

14. சுவையான பிரஞ்சுப் பக்கங்கள் -1

15. ஞான மகன்

16. நல்ல கதைகள் 100

17. நல்ல நல்ல கதைகள்

18. நல்லன நானூறு

19. நாள் ஒன்று கதை ஒன்று (365 கதைகள்)

20. நீதி நூல்கள்

21. பரிசு

22. பாடும் பறவை

23. பிரஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை

24. பிரஞ்சு இலக்கியக் கதைகள்

25. பிரஞ்சுத் தத்துவக் கதைகள்

26. பிரஞ்சு நகைச்சுவை 1, 2

27. பிரஞ்சு நகைச்சுவை-300

28. பிரஞ்சு நன்னெறிக் கதைகள்

29. பிரஞ்சு நாட்டுப்புறக் கதைகள்

30. பிரஞ்சு நாடோடிக் கதைகள் 1, 2

31. பிரஞ்சு வட்டாரக் கதைகள்

32. பிரஞ்சுப் பூக்கள்

33. பிரஞ்சுப் பொன்மொழிகள் 1000

34. பிரெஞ்சுக் கவிதைகள்

35. புகழ்பெற்ற பிரஞ்சுக் கதைகள்

36. பொனாப்பர்த்தின் பகைச் சிறுவன் (Le Moucheron de Bonaparte)

37. போல், விர்ழினி (அச்சில்)

38. மாய ஈட்டி

39. மிகமிக நல்ல கதைகள்

40. விக்தோர் உய்கோ

41.   ஜானகி

கருத்துகள் இல்லை: