நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 12 அக்டோபர், 2024

மொழியியல் அறிஞர் இரா. கோதண்டராமன்

 

முனைவர் இரா. கோதண்டராமன் 

[இரா. கோதண்டராமன் அவர்கள் தமிழ், மொழியியல் பயின்ற அறிஞர் ஆவார். பன்மொழி அறிவு பெற்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் கல்வி பயின்ற பெருமைக்குரியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகம், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் முதலிய நிறுவனங்களில் பணியாற்றியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதியுள்ள நூல்கள் மொழியியல் துறையிலும், தமிழ் இலக்கணத்துறையிலும் இவருக்கு அமைந்த புலமைத்திறத்தை எடுத்துரைப்பனவாகும். தற்பொழுது புதுச்சேரியில் வாழ்ந்துவருகின்றார்.] 

புதுவைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கு நான் புதுச்சேரிக்கு வந்தபொழுது(1992-93) புதுவை, சின்ன சுப்பராயப் பிள்ளை வீதியின் மாடியில் செயல்பட்டுக்கொண்டிருந்த புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் அறிஞர்களின் சிறப்புப் பொழிவுகளைக் கேட்பதற்குச் செல்வது உண்டு. அப்பொழுது அறிஞர் இரா. கோதண்டராமன் அவர்களின் அறிமுகம் எனக்கு அமைந்தது. என் மூத்த நண்பர் புலவர் பாளை எழிலேந்தி அவர்கள் வழியாகவும் முனைவர் இரா, கோதண்டராமன் அவர்களின் மொழியியல் துறைப் பங்களிப்புகளை அறிந்திருந்தேன். 20.5.1994 இல் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனக், கருத்தரங்கில் மரபுக் கவிதைகள் தோற்றமும் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வழங்கிய நினைவும் எனக்கு உள்ளது. இடையில் என் படிப்பு, பணிகள் என்று பல ஊர்களுக்கு அலைந்து, மீண்டும் புதுச்சேரியில் பணியில் இணைந்தபொழுது அறிஞர் இரா. கோதண்டராமனாரின் தொடர்பு துளிர்விட்டது. அவர்களின் இல்லம் அமைந்துள்ள தொல்காப்பியர் வீதியை ஒட்டி, ஒவ்வொரு நாளும் அலுவலகம் சென்றாலும். அவர்தம் இல்லம் சென்று சந்திக்கும் சூழல் வாய்க்கவில்லை.

கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்துக் கருத்தரங்கையொட்டி, நடைபெற்ற கண்காட்சிக்குத் தொல்காப்பிய அறிஞர்களின் படங்களைத் தேடியபொழுது, நான் விரும்பும் தரத்தில் இரா. கோதண்டராமன் அவர்களின் படங்கள் இணையத்தில் இல்லை. எனவே, அவர்தம் வீட்டுக்குச் சென்று நேரில் உரையாடவும், அவர்களின் ஆராய்ச்சிப் பணியையும் நூல் வெளியீட்டுப் பணியையும் அறியும் வாய்ப்பு அமைந்தது. 

நான் பயிற்றுவிக்கும் தொல்காப்பியப் பாடத்தை ஒட்டி எங்களின் உரையாடல் நகரத் தொடங்கியது. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் இடம்பெறும் அளபெடைகள் குறித்தும், செருவக்களம் எருவங்குழி, செம்முக்கடிது கம்முக்கடிது, பொருவக்கடிது குறித்தும் தொல்காப்பியரும் உரையாசிரியர்களும் சிந்தித்துள்ள பாங்கினை ஆர்வமுடன் பேராசிரியர் இரா. கோ.  பகிர்ந்துகொண்டார்கள். பேராசிரியர் இரா. கோதண்டராமன் அவர்களுடன் உரையாடிய சில மணி நேரத்தில் அவரின் தொல்காப்பியப் புலமையும் பயிற்சியும், மொழியியல் கண்கொண்டு பார்க்கும் அவர்தம் அறிவியல் பார்வையும் எனக்கு வியப்பினை ஏற்படுத்தின. ஆயிடை, அவர்தம் வாழ்க்கை வரலாற்றையும் அவர்தம் வாய்மொழியாக அறிந்துகொள்ளமுடிந்தது. 

இரா. கோதண்டராமனின் ஆய்வுலக வாழ்க்கை 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்துள்ள கொத்தாம்பாக்கம் என்னும் சிற்றூரில் வாழ்ந்த இராமானுஜ ரெட்டியார்க்கும் குப்பம்மைக்கும் தலைமகனாக 08.08.1936 இல் பிறந்தவர் (பள்ளிச் சான்றிதழில் 15.01.1937 என்று இருக்கும்). திண்ணைப்பள்ளியிலும், ஐந்தாம் வகுப்பு வரை உதவிபெறும் பள்ளியிலும் பயின்ற இவர் ஆறாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை வளவனூர் பள்ளியில் பயின்றவர். பள்ளி இறுதி வகுப்பினை விழுப்புரம் முனிசிபல் பள்ளியில் பயின்றவர். பள்ளிப் பருவத்தில் திருவாளர்கள் சுந்தரமூர்த்தி, ஆறுமுக முதலியார், இரத்தின முதலியார் முதலிய ஆசியப் பெருமக்களின் உதவியால் நல்லறிவு வாய்க்கப்பெற்றவர். இண்டர் மீடியட் என்னும் படிப்புக்குக் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் சேர்வதற்கு அக்காலத்தில் புகழுடன் விளங்கிய திரு. கோவிந்தசாமி படையாட்சியார் பரிந்துரையில் சேர்வதற்கு முனைந்தார். பேரறிஞர் அண்ணா அவர்களின் இல்லத்தில் இரவு தங்கி, அவரின் பரிந்துரையால் காஞ்சிபுரத்தில் இடமும் கிடைத்தது. எனினும் காஞ்சிபுரக் கல்லூரியில் சேர்வதைத் தவிர்த்து, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தம் இண்டர்மீடியட் வகுப்பினை அறிவியல் பிரிவில் பயின்றார்(1954-1956)). அறிஞர் மு.வ. அவர்களின் பரிந்துரையால் பச்சையப்பன் கல்லூரியில் பி. ஏ. ஆனர்சு வகுப்பில் 1956 முதல் 1959 வரை சேர்ந்து படித்தார். பின்னர் அக்கல்லூரியில் முதுகலை வகுப்பில் தரம் உயர்த்தப்பட்டு, தமிழ் பயின்ற முதுகலை மாணவராக வெளிவந்தார். 

1960 ஆம் ஆண்டு இரா. கோதண்டராமன் அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இவரின் துணைவியார் பெயர் சாந்தகுண பூஷணம் ஆவார். இரா.கோதண்டராமன் அவர்களின் பணிநிலை நெய்வேலியில் மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறையில் அமைந்தது. 4 ஆண்டுகள் பணிபுரிந்தபொழுது பழங்குடி மக்களின் (சோளகர், ஊராளி) மொழிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டார். 1966 முதல் 1968 ஆம் ஆண்டு வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் படித்தார். அப்பொழுது இவருக்கு உதவித்தொகை 120 ஆகும். தொ.பொ. மீனாட்சிசுந்தரம், ச.அகத்தியலிங்கம் உள்ளிட்ட மொழியியல் அறிஞர்களிடம் படித்த பெருமைக்குரியவர். மலையாள மொழியை எழுதவும் பேசவும், படிக்கவுமாக அறிந்தவர். பன்மொழியறிவால் பின்னாளில் மொழியியல் ஆய்வுத்துறையில் பெரும்புகழ் ஈட்டமுடிந்தது. 

1968 முதல் 1973 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் ச. அகத்தியலிங்கம் அவர்களின் மேற்பார்வையில் மொழியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு பட்டம்பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அறிஞர் மு.வ. அவர்கள் துணைவேந்தராகப் பணியமர்த்தப்பட்ட பிறகு இரா. கோதண்டராமன் அங்குத் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் இணைந்தார்.  ஒன்பது ஆண்டுகள்(1973-1982) தமிழிலக்கணமும், ஆறு ஆண்டுகள் அமெரிக்க மாணவர்களுக்கு American Institute of Indian Studies சார்பில் தமிழ் பயிற்றுவிக்கும் பணியிலும் இருந்தார். 

திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்துலகத் திராவிட மொழியியல் கழகத்தில் மொழியியல் பிரிவில் முதுநிலை ஆய்வாளராகவும் பேராசிரியராகவும் ஏழு ஆண்டுகள் (1982-1988) பணிபுரிந்தவர். புதுச்சேரியில் இருந்த புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக அறுபத்து மூன்று மாதங்கள் (1989-1994) பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வறிஞராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்(2007-2014). 

Tamil Syntax – New Perspectives  என்ற இவர்தம் நூலினைப் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் தமிழ் மொழியியல் குறித்து ஆங்கிலத்தில் அமைந்த அரிய நூலாகும். 

இரா.கோதண்டராமனின் அறிவுக்கொடை 

  1. வாழிய செந்தமிழ் (2007), உ.த.நி. வெளியீடு
  2. தமிழெனப்படுவது (2004) உ.த.நி. வெளியீடு
  3. தமிழ் செய்த வினை(2021), தமிழ்ப் பல்கலைக்கழகம்
  4. The Riddle That is Tamil (2019), ISDL, Thiruvananthapuram
  5. Dynamics of Tamil Finite System, (2010), CICT, Chennai






கருத்துகள் இல்லை: