நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

பேராசிரியர் பொ. நா. கமலா

பேராசிரியர் பொ. நா. கமலா

   தமிழகத்தில் நடைபெறும் கருத்தரங்குகளில் - ஆய்வரங்குகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு கட்டுரை படைப்பது, கருத்தரங்கத் தலைமை தாங்குவது, நூல் வெளியிடுவது என்று தேனீயைப் போல் சுறுசுறுப்பாக இயங்கும் பேராசிரியர் பொ. நா. கமலா அவர்களைக் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக நன்கறிவேன். 86 அகவை நிரம்பியவர்; முனைவர் பொ.நா. கமலா அவர்கள் இடைநிலைப் பள்ளி ஆசிரியையாகத் தம் பயிற்றுவித்தல் பணியைத் தொடங்கியவர்; பின்னாளில் சிவகாசி எஸ்.ஆர்.எப் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிப் பல்லாயிரம் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியச் சிறப்பினை எடுத்துரைத்த பெருமைக்குரியவர். வாழ்வில் ஏற்ற இறக்கங்களையும், இன்ப துன்பங்களையும் எதிர்கொண்டாலும் தம் ஆராய்ச்சிப் பணியில் சமரசம் இன்றி உழைத்துவருபவர். 

  மார்பகப் புற்றுநோயால் தாக்குண்ட பேராசிரியர் அவர்கள் அதுகுறித்த விழிப்புணர்வூட்டும் கட்டுரைகள் அடங்கிய ரோஜாவுக்கு…! என்னும் தலைப்பில் நூல் எழுதிப் பெண்களுக்கு அந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்கு உரிய ஒன்றாகும். தொல்காப்பியம் குறித்து இவர் வரைந்துள்ள கட்டுரைகளும் நூல்களும் தமிழ் இலக்கிய உலகில் இவருக்கு மிகச் சிறந்த ஆய்வறிஞர் என்ற பெருமையைத் தேடித்தரும். அரசின் பெருமைகளையோ, விருதுகளையோ, பணமுடிப்பையோ பெறுவதற்குரிய பண வலிமையோ, பதவிப் பெருமையோ அற்ற மூத்த பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இவண் பதிந்துவைக்கின்றேன்.

  பேராசிரியர் பொ. நா. கமலா அவர்கள் 23.02.1936 இல் விருதுநகரில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் பொ. நாகரத்தினம், சரசுவதி அம்மாள். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மும்பை மாதுங்காவில் பயின்றவர்(1941-1951). பள்ளியிறுதி வகுப்பினை விருதுநகர் சத்திரிய மகளிர் பள்ளியில் பயின்றவர். இடைநிலை ஆசிரியர் பயிற்சி, தமிழ் வித்துவான் வகுப்புகளைப் பயின்ற பிறகு தனித்தேர்வராக இளங்கலைத் தமிழ், முதுகலைத் தமிழ் பயின்றவர்((1967). 1978 இல் இளம் முனைவர் பட்ட வகுப்பினை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று(1978) மு.வ.பதக்கம் வென்றவர்.  அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் பகுதிநேரமாக முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு, “இதழ்ச் சிறுகதைகளில் பணிமகளிர் சிக்கல்கள்” என்னும் தலைப்பில் ஆய்வேடு வழங்கியவர். இவர்தம் நெறியாளர் முனைவர் மீனாட்சி முருகரத்தினம் ஆவார்.  காந்திய சிந்தனைகளில் பட்டயமும், அடிப்படை மொழியியல், பயன்பாட்டு மொழியியலில் சான்றிதழும் பெற்றவர். 

பேராசிரியர் பொ. நா. கமலா அவர்கள் தமிழக, இந்திய, உலக அளவில் நடைபெற்ற 170 – இற்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கியுள்ளார். இவற்றுள் கைதராபாத் பல்கலைக்கழகம், கௌகாத்தி பல்கலைக்கழகம், தில்லிப் பல்கலைக்கழகம், சாதவ்பூர் பல்கலைக்கழகம், குல்பர்கா மத்திய பல்கலைக்கழகம் இந்திராகாந்தி தேசிய இனக்குழு மக்கள் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றியமை நினைவுகூரத் தக்கவை. தமிழ்ப்பணிகளுக்காக 25 – இற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார். அவற்றுள் அறவாணர் வாழ்நாள் சாதனையாளர் விருது, ஏலாதி இலக்கிய விருது, சிவகாசி ஆர்ட்சு கிளப் – வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், அறிவியல் தமிழ்க் கழகம், கலை இலக்கியப் பெருமன்றம், DLA, Linguistics Society of India, அஞ்சிறைத் தும்பி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக இருந்து பணியாற்றி வருபவர். 

முனைவர் பொ.நா. கமலா அவர்களின் தமிழ்க்கொடை: 

1.   பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் (1994)

2.   தொல்காப்பியத்தில் நவீன சிந்தனைகள் (1997)

3.    நவீனக் கோட்பாட்டு ஆய்வுகள் ( 1999)

4.   CHEMBUR MURUGAN TEMPLE, MUMBAI

A Living Monument of Cultural Exchanges (2003)

5.   புற்றில் பிறந்த பூபாளம் (கவிதை) ( 2006)

6.   ரோஜாவுக்கு…! (2007)

7.   தொல்காப்பியர் முதல் தெரிதா வரை ( 2007)

8.   To My Beloved Rose (2012)

9.   க.ப. அறவாணரின் பன்முகச் சிந்தனைகள் (2012)

10. இறைச்சி (2013)

11. தொல்காப்பியரின் கவிதையியல் (தொகுதி) 2013

12.  தெரிதாவின் மானுடவியல் சொல்லாடல்களில்

அமைப்பும் குறியும் விளையாட்டும்(மொழிபெயர்ப்பு) (2015)

13. Songs of Dawn Born in Cancer (2018)

14. DNA Approach to Tolkappiyar’s Poetics (2019)

15. தொல்காப்பியப் பாமாலை (2020)

16. Style Variations of Kannaki (2021)

17. தொல்காப்பியரின் கவிதையியல் டி.என்.ஏ. அணுகுமுறை (2022)

 

கருத்துகள் இல்லை: