நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 19 பிப்ரவரி, 2022

பேராசிரியர் முனைவர் க. இராமசாமி

 


பேராசிரியர்  . இராமசாமி 

பேராசிரியர் முனைவர் . இராமசாமி அவர்கள் அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி என்னும் சிற்றூரில் 1949 செப்டம்பர் 10 அன்று கந்தசாமி வள்ளியம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தவர். பேராசிரியர் அவர்கள் பதினோராம் வகுப்பு (1965) வரையிலா பள்ளிப் படிப்பினைத் தம் பிறந்த ஊரான பொன்பரப்பியில்  மேற்கொண்டவர். பதினோராம் வகுப்புப் பொதுத் தேர்வில் இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றுத் தேறியமை குறிப்பிடத்தக்கதாகும். 

தஞ்சாவூர் மன்னர் சரபோசி அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்து ஓராண்டுப் புகுமுக வகுப்பினையும் மூன்றாண்டுகள் இளம் அறிவியல் (வேதியியல்) பட்டப் படிப்பினையும் முடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. கணக்கு, அறிவியல் பாடங்களில் இவருக்கு ஆர்வம் உண்டெனினும் தமிழில் கல்லூரியிலேயே முதல் மதிப்பெண் பெற்றுத் தேறினார். மொழியார்வம் அனைத்தையும் விஞ்சிநின்றது. 

அரியலூர் மாவட்டம் அழகாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆகஸ்டு 1969 தொடங்கி ஏப்ரல் 1970 வரையிலான ஒன்பது திங்கள் காலம் தற்காலிக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 1970 சூலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பு கிட்டிற்று. முதுகலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். 1972 டிசம்பரில் இவருக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் ஆய்வு மாணவனாகச் சேர வாய்ப்பளிக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவித்தொகை 1973 சூனிலிருந்து கிடைத்தது. பேராசிரியர் . அகத்தியலிங்கம் அவர்களின் மேற்பார்வையில் தமிழ், ஆங்கிலப் பெயரெச்சத் தொடர்கள் - ஓர் உறழ்வாய்வு (A Contrastive Analysis of the Relative Clauses in Tamil and English) என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டார்

அவ்வமயம் புகழேணியில் இருந்த மாற்றிலக்கணக் கோட்பாட்டினைப் பின்பற்றி இவ்வாய்வு அமைந்ததால் பெருமிதத்துடன் இராமசாமி அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டார். மேலும் இரண்டாண்டுகள் பகுதி நேரமாகப் படித்து இந்தியில் பட்டயப்படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். மைசூரில் பணி வாய்ப்பு கிடைத்து அங்குப் பல ஆண்டுகள் பணிபுரிந்தபின் 1988 இல் - மிகவும் காலந்தாழ்ந்து பேராசிரியர் செ.வை.சண்முகம் அவர்களை மேற்பார்வையாளராகக் கொண்டு தன் ஆய்வேட்டினை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அளித்து முனைவர் பட்டத்தினைப் பெற்றார்

1980 ஆம் ஆண்டு 19 மே இல் இவர் மைசூரில் அமைந்துள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (உயர்கல்வித் துறை, மனித வள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு) ஒரு தற்காலிகப் பணியில் சேர்ந்தார். 1983 இல் ஒன்றியப் பொதுப் பணித் தேர்வாணையத்தின் (Union Public Service Commission) மூலம் தமிழ் விரிவுரையாளர் பணி கிடைத்தது. இது ஒரு நடுவண் அரசுப் பணி. தமிழ் அறிமுகம் இல்லாதவர்களுக்குப் (பிற மாநிலத்தவருக்கும் பிற நாட்டினருக்கும்) பத்து மாத காலத் தீவிர முழு நேரப் பயிற்சியின் மூலம் தமிழ் கற்றுக்கொடுக்கும் இந்தப் பணி புதுமையானது; உலகில் வேறெங்கும் காணப்படாதது. பல்வேறு மொழியினருடனும் பல்வேறு நாட்டினருடனும் உறவாடும் வாய்ப்பு ஒரு பெரும் பேறாக அமைந்தது.

முனைவர்  க. இராமசாமி 

தமிழ்நாடு தவிர்ந்த பிற மாநில ஆசிரியர்கள் நூற்றுக் கணக்கானவர்களுக்கும் சீனா, ஃபிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், அமெரிக்கா, மொரிசியஸ், ரீயூனியன் போன்ற நாடுகளைச் சார்ந்தவர்களுக்கும் தமிழ் கற்பித்த பட்டறிவு இராமசாமி அவர்களுக்கு வாய்த்தது. தமிழ் கற்பிப்பதோடு அன்றிப் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் இங்கே இவருக்குக் கிடைத்தது. உள மொழியியல், மொழிபெயர்ப்பியல், கோட்பாட்டு மொழியியல் போன்ற துறைகளில் தனது அறிவை வளப்படுத்திக்கொண்டார். தனிப்படவும் பிற அறிஞர்களோடு இணைந்தும் இவர் எழுதி வெளிவந்துள்ள நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் பலவாகும். காலப்போக்கில் இணைப்பேராசிரியர், பேராசிரியர் போன்ற உயர் பணிகள் இவருக்குக் கிட்டின. இவரது மேற்பார்வையிலும் வழிகாட்டுதலிலும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் எண்மர். இவர்களுள் சிலர் நம் நாட்டின் மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்

பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு மதிப்பீட்டாளராகவும் வாய்மொழித் தேர்வாளராகவும் பணியாற்றியவர். சாகித்ய அகடமி விருதுகள் தேர்வுக் குழுவில் நடுவர்களில் ஒருவராக இருந்துவருகிறார். கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சிகள் நூற்றுக்கணக்கானவற்றில் உரையாற்றியவர். தாமே முன்னின்று உலக அளவிலான, தேசிய அளவிலான மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் முதலானவற்றை நடத்தியவர். பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் பணி நியமனக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கல்விக் குழு உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். அரசுப் பணி தொடர்பாக நேபாளம், மொரிக்ஷீயஸ், மலேசியா போன்ற அயல்நாடுகளுக்குச் சென்றுவந்திருக்கிறார்

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இவர் பேராசிரியர் - துணை இயக்குநர் பொறுப்பில் இருந்தபோது இந்திய மொழிகளில் நூல்கள், சிற்றிதழ்கள் வெளிவருவதை ஊக்குவிக்கும் திட்டத்தினையும் மைதிலி, போடோ, நேபாளி, சந்தாளி ஆகிய புதிய பட்டியல் மொழிகளின் வளர்ச்சிக்கான திட்டத்தினையும் சிறப்பாகச் செயற்படுத்திக்காட்டியிருக்கிறார். சாகித்ய அகடமியோடு இணைந்து சிறந்த இந்தியப் புதினங்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியினைச் செம்மையாகச் செய்துவந்தார். நிறுவனத்தின் ஏழு மண்டல மொழி மையங்களையும் (மைசூர், பூனே, கௌகாட்டி, பட்டியாலா, லக்னௌ, சோலன், புபனேஸ்வர்) கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தார்

2004 அக்டோபர் 12 இல் இந்திய அரசு தமிழுக்குச் செம்மொழி என ஏற்பு வழங்கியது. இந்த ஏற்பு வழங்கப்படுவது தொடர்பான அடிப்படைப் பணிகளை மேற்கொண்டது இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்தான். பரிந்துரைகளை வடிவமைத்து அனுப்பியதிலும் அறிவிப்பு வருவதற்கு முன்பு அமைச்சக அளவில் எழுந்த சில சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் முயற்சியிலும் பேராசிரியர் இராமசாமி அவர்களுக்குப் பங்குண்டு. செம்மொழியென ஏற்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து செம்மொழித் தமிழுக்கான ஒரு வரைவுத் திட்டம் 2005 இல் உருவாக்கப்பட்டு அதைச் செயற்படுத்தும் பணி இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நிறுவன இயக்குநர் இத்திட்டத்திற்கான தலைமைப் பொறுப்பினைப் பேராசிரியர் . இராமசாமி அவர்களிடம் ஒப்படைத்தார். புதிய திட்டம் என்பதால் பல்வேறு இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் இடையில் செயற்படுத்த வேண்டியிருந்தது

செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் உருவாக்கப்பட்டு இதில் மூதறிஞர்கள், இளம் அறிஞர்கள், அலுவலகப் பணியாளர்கள், பொறியாளர்கள் என ஏறத்தாழ 120-இற்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தம் செய்யப்பட்டனர். தொல்காப்பியர் விருது,(1) குறள்பீட விருது,(2) இளம் அறிஞர் விருது,(5) ஆகிய விருதுகள் குடியரசுத் தலைவரால் ஒவ்வோராண்டும் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் வாழும் தமிழறிஞர்கள் தமிழியலோடு தொடர்புடைய பல்துறை அறிஞர்கள் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்முனைவர் பட்ட ஆய்வு செய்வோர்க்கும் முனைவர் பட்ட மேலாய்வு செய்வோர்க்கும் பல்கலைக்கழக மானியக் குழு வழங்குவதைப் போன்ற உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் மாநாடுகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் நூற்றுக்கணக்கில் ஏற்பாடுசெய்யப்பட்டன. பயிற்சியாளர்களுக்கும் பயிற்றுநர்களுக்கும் இலவயமாகச் சங்க இலக்கிய நூல்களும் தொல்காப்பிய மூல, உரை நூல்களும் வழங்கப்பட்டன. பழந்தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகள் குறித்த விழிப்புணர்வு நாடெங்கிலும் உருவாக்கப்பட்டது. தொடங்கப்பட்ட ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே உயராய்வு மையத்தை இந்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாக மாற்றுவதற்கான நிரந்தர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 2007 - ஆகஸ்ட் திங்களில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டு, 2008, மே 19 - இல் சென்னைக்குக்    கொண்டுவரப்பட்டது. இத்துணைப் பணிகளிலும் மையமாக இருந்து செயற்பட்டவர் பேராசிரியர் . இராமசாமி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

பேராசிரியர் . இராமசாமி அவர்கள் 2008 ஆகஸ்டு இறுதியில் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திலிருந்து பணிநிறைவு பெற்றார். சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தினை வளர்த்தெடுக்கும் பணிக்கெனப் பொறுப்பு அலுவலராகச் செப்டம்பர் இறுதியில் ஒப்பந்தப் பணியமர்த்தம் செய்யப்பட்டார். அப்போது தமிழக முதல்வராக இருந்த முத்தமிழறிஞர்   டாக்டர் கலைஞர் அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கிய இந்நிறுவனத்தினைச் சட்டப்படிப் பதிவுசெய்தல், நிறுவனத்திற்கெனத் தமிழக அரசால் பெரும்பாக்கத்தில் வழங்கப்பட்ட 17 ஏக்கர் நிலத்தினைச் சமன்செய்து சுற்றுச்சுவர் எழுப்பவும் கட்டடங்கள் கட்டவும் ஏற்பாடுசெய்தல், பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம் தோற்றுவித்தல் போன்ற பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டார். மேலும் டாக்டர் கலைஞர் அவர்கள் அளித்த ஒரு கோடி ரூபாயில் அறக்கட்டளை நிறுவி ஆண்டுதோறும் செம்மொழித் தமிழுக்குப் பணியாற்றிய அறிஞர்களுக்குப் பத்து லட்சம் ரூபாயும் பத்து சவரனிலான டாக்டர் கலைஞர் உருவம் பொறித்த பதக்கமும் ஐம்பொன்னாலான திருவள்ளுவர் திருவுருவச்சிலையும் வழங்க ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளைத் தலைவர்      டாக்டர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலுடன் நிறைவேற்றினார். சமஸ்கிருதம் உட்பட்ட பிற செம்மொழிகளுக்கு முன்மாதிரியாக மிகச் சிறப்பாக வளர்ச்சியை நோக்கிச் சென்றது இந்நிறுவனம். 2013 அக்டோபர் இறுதிவரை இங்குப் பணியாற்றினார்

தற்போது தமிழ்க் கல்வி, தமிழ்வழிக் கல்வி, பிறமொழிக் கல்வி, தூய்மையான சுற்றுச்சூழல், இயற்கையோடு இயைந்த வாழ்வு போன்றவை குறித்து மக்களிடையே விழிப்பணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு என்னும் பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றினை அரியலூரில் உருவாக்கிச் செயலாளராகப் பொறுப்பேற்று நடத்திவருகிறார்

அரியலூருக்கு அருகில் அமைந்துள்ள வள்ளலார் கல்வி நிறுவனத்திற்குத் தமிழக ஆளுநர் திருமிகு கே.ரோசய்யா அவர்களை 2013 நவம்பரில் வரவழைத்து நிறுவனரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய கொ.இரா.விசுவநாதன் அவர்களின் நூற்றாண்டு விழாவினைச் சிறப்பாக கொண்டாடத் துணைபுரிந்தார். 2015 சூலை 17 அன்று அரியலூரில் முதல் புத்தகத் திருவிழாவினை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ..ஜெ.அப்துல்கலாம் அவர்களை வரவழைத்துத் தொடங்கிவைத்ததுடன் தொடர்ந்து சூலை 26 வரை பல்வேறு அறிஞர்களையும் அழைத்துச் சிறப்பித்தார். பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடனும் பேரளவிலான வாசகர் வருகையுடனும் புத்தக விற்பனையுடனும் வெகு சிறப்பாகப் புத்தகத் திருவிழா நிறைவேறியது. அதுபோலவே இரண்டாவது அரியலூர்ப் புத்தகத் திருவிழா 2016 சூலை 15 முதல் 24 வரை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளிலும் புத்தகத் திருவிழா இனிதாக நடைபெற்றது. தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் மூலமாக மேலும் பல சமூகப் பணிகளை மேற்கொள்ள முனைந்து பாடுபட்டுவருகிறார்

கன்னட அறிஞர்களும் ஒடிய மொழி வல்லுநர்களும் பேராசிரியர் . இராமசாமி அவர்களை அடையாளங்கண்டு தத்தம் செம்மொழித் திட்ட வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர். தமிழ் மக்களில் பலர் இவரது செம்மொழித் தொண்டினைப் புரிந்துகொண்டுள்ளனர். கலைஞராலும் அவரது செயலர்களாலும் செம்மொழி இராமசாமிஎன அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றுசெம்மொழி’ ‘செம்மொழியார்’ ‘செம்மொழிச் செம்மல்என்னும் அடைமொழிகள் இயற்பெயர் இன்றியே வழங்கப்பட்டுவருகின்றன

2015-ஆம் ஆண்டில் செங்குந்தபுரம் அலமேலு இராமலிங்கம் அறக்கட்டளைசெம்மொழிச் செல்வர்விருதும், 2016-ஆம் ஆண்டில் திருவையாறு அவ்வைக் கோட்டம் தமிழ் ஐயா கல்விக் கழகம்ஔவை விருதும், 2018-ஆம் ஆண்டில் இராசபாளையம் திருவள்ளுவர் மன்றம்செம்மொழிச் செம்மல்விருதும், 15.04.2018 இல் புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றம்செம்மொழிச் செம்மல்விருதும், சென்னை              . மெய்யப்பன் அறக்கட்டளைசிறந்த தமிழறிஞர்விருதும், 2019- ஆகஸ்டு 10 அன்று சென்னையில் அறவாணர் சாதனைவிருதும், வி.சி., சார்பாக 2021 -டிசம்பர் 24 அன்றுசெம்மொழி ஞாயிறுவிருதும் இவருக்கு வழங்கிச் சிறப்பித்தனர். 

தவத்திரு குன்றக்குடி அடிகளார் சிறப்பிக்கும் காட்சி


இந்திய மொழிகளின் வளர்ச்சிப் பணிக்காக டிஏவி கல்வி நிறுவனங்களால் 15-02-1993-இல் தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிலும் செம்மொழித் தமிழ்ப் பணிக்காக முன்னாள் மத்திய அமைச்சர் திரு.அர்ஜுன் சிங் அவர்களின் தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முன்னிலையில் ஆகஸ்ட் 2007 ல் சென்னையில் நடைபெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் தொடக்க விழாவிலும் இவர் பாராட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத் தக்கதாகும். 

தொடர்புடைய பதிவுகள்: 

1.பழைய பதிவு

2. கங்கைகொண்டசோழபுரம், உலகத் தொல்காப்பிய மன்றம்

கருத்துகள் இல்லை: