நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

டெனிஸ் மொழியில் திருக்குறள் வெளியீடு!


 தமிழர்களின் அறிவுப்பெருநூலான திருக்குறள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (15.06.2019) டென்மார்க்கு நாட்டில் ஆத்திசூடி டெனிஸ் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவில் திருக்குறளையும் டெனிஸ்மொழியில் வெளியிடவேண்டும் என்ற வேண்டுகோள் தமிழ் அன்பர்களால் முன்வைக்கப்பட்டது .  அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தமிழ் டெனிஸ் சமூக இலக்கிய இணைவகத்தைச் சார்ந்த அன்பர்கள் இப்பெரும்பணியில் ஈடுபட்டு, திருக்குறள் டெனிஸ் மொழிபெயர்ப்பு நூலினை உருவாக்கி, அச்சிட்டு வருகின்றனர்.

 திருக்குறள்- டெனிஸ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா வரும் 2021 சனவரி 15 (தைத் திங்கள் 2) ஆம் நாள் திருவள்ளுவர் திருநாளில் டென்மார்க் நாட்டில் அமைந்துள்ள ஓகூஸ் நகரில் நடைபெற உள்ளது. டென்மார்க்கு, நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்சு, நோர்வே, செர்மனி, பின்லாந்து, சுவிசர்லாந்து, சுவீடன், கனடா, அமெரிக்கா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து திருக்குறள் ஆர்வலர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், அரசு அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

 தமிழகத்திற்கும், டென்மார்க்கு நாட்டிற்கும் பலநூறு ஆண்டுகள் தொடர்பு உண்டு. டென்மார்க்கு நாட்டிலிருந்து வருகைதந்து, தரங்கம்பாடியில் தங்கி, அச்சுக்கலைக்கு அடிமனையிட்டவர்கள் டெனிஸ்மொழிக்காரர்கள். அவர்களின் மொழியில் நம் திருக்குறளை மொழிபெயர்த்து வழங்குவதால் டெனிஸ்மொழிக்காரர்களுக்குத் தமிழின் சிறப்பு புலனாகும். மேலும் அந்நாட்டில் வாழ்ந்துவரும் பல்லாயிரக் கணக்கான நம் தமிழ்க் குழந்தைகள் டெனிஸ் மொழியின் ஊடாகவும் திருக்குறளைக் கற்க வழியேற்படும். 

 திருக்குறள் டெனிஸ் மொழிபெயர்ப்பை வெளிக்கொண்டுவரும் தமிழ் டெனிஸ் சமூக இலக்கிய இணைவகத்தைச் சார்ந்த அன்பர்களுக்கு எம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

                                  தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

                                   பரவும்வகை செய்தல் வேண்டும்!   - பாரதியார்

                                                                                       


வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அமைதி அறக்கட்டளை நிறுவுநர் பால் பாஸ்கர் மறைவு!

 

                                                                   பால் பாஸ்கர்

திண்டுக்கல்லில் அமைதி அறக்கட்டளையை நிறுவி, கல்விப்பணியும், சமூகப் பணியும் ஆற்றிவந்த அண்ணன் திரு. பால் பாஸ்கர் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று(20.08.2020) இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து வருந்துகின்றேன். அன்னாரைப் பிரிந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல் உரியதாகும்.

பால்பாஸ்கர் அவர்கள் அன்பும் அமைதியும் விரும்பும் தமிழ்நேயர். மாந்தநேயம் கொண்ட கல்வி ஆர்வலர். பிறருக்கு உதவுவதில் பேரீடுபாடுகொண்டவர். அண்மையில் இவருடன் தொடர்புகொண்டு, என் ஆய்வுத் தொடர்பாக சில விவரங்களை வேண்டியிருந்தேன். பெற்றுத் தருவதாகவும், திண்டுக்கல் வந்துசெல்ல வேண்டும் எனவும் அன்புடன் வேண்டினார்.

14.12.2011 இல் அவர்தம் அமைதி கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்தி, பலநூறு மாணவர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்த பெருமை திருவாளர் பால் பாஸ்கர் அவர்களுக்கு உண்டு. என்னைச் சிறப்பு அழைப்பாளராக அழைத்து, பெருமைப்படுத்தினார். நண்பர் திரு. பாரதிதாசன் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, என்னை ஊக்கப்படுத்தினார்.

தமிழ் உணர்வாளர்களின் திண்டுக்கல் முகவரியாக விளங்கிய அண்ணன் பால்பாஸ்கரின் நினைவுகளைப் போற்றுவோம்!

சனி, 8 ஆகஸ்ட், 2020

ச. பவானந்தம் பிள்ளை

 ச. பவானந்தம் பிள்ளை
(1876-1932)

 தஞ்சை, கருந்தட்டாங்குடியில் வாழ்ந்த முத்துசாமிப் பிள்ளை, சந்திரமதி ஆகியோரின் மகனாக 1876 - இல் பிறந்தவர். சரவண பவானந்தம் பிள்ளை என்பது இவரின் இயற்பெயராகும். இளமைக் கல்விக்குப் பிறகு சட்டம் படிக்க இங்கிலாந்து செல்ல விரும்பிய இவரைத் தாய் தடுத்தமையால் காவல்துறைப் பணியில் இணைந்தவர் (1899). 1908 இல் உதவி ஆணையராகவும் (A. C), 1918 இல் காவல்துறையின் சென்னைத் துணை ஆணையராகவும் (D. C.) பணியாற்றியவர். இவர்தம் கடமையுணர்வையும், ஒழுங்கினையும் போற்றி, ஆங்கிலவரசு இவருக்குத் "திவான் பகதூர்" என்ற பட்டத்தை வழங்கியது. தமிழறிவுடன் ஆங்கில அறிவும் பெற்றவர். வேப்பேரியில் தௌடன் பேருந்து நிலையம் அருகில் பவானந்தர் கழகம் (Bavanantham Academy) உருவாக்கியவர். இந்நூலகத்தில் நாற்பதாண்டுகளாக இவர் சேமித்த நூல்கள், ஓலைச்சுவடிகள், கையெழுத்துப்படிகள் பாதுகாக்கப்படுகின்றன. சட்டத் தேர்வுக்குப் பயன்படும் வகையில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். 

 பவானந்தர் கழகம் சார்பில் பேரகத்திய விருத்தி, தொல்காப்பியம் – பேராசிரியர், நச்சினார்க்கினியர் உரை, யாப்ருங்கல விருத்தியுரை, பழைய உரைகளைத் தழுவி நன்னூலுக்கு  உரை, வீரசோழியம், நம்பியகப்பொருள், இறையனார் களவியல் உரை ஆகிய நூல்கள் தரமான அச்சில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியில் பவானந்தருக்கு உற்றுழி உதவும் அறிஞர் குழு துணைசெய்துள்ளமையை இங்கு நினைத்தல் தகும். கா.ரா.கோவிந்தராச முதலியார், மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை உள்ளிட்டோர் இம்முயற்சியில் துணைநின்றுள்ளனர். நாடகவியல் விளக்கம், பரதசாத்திர விளக்கம், வேதாந்த சித்தாந்த தத்துவ ஞானம், நீதிக் கவித்திரட்டு முதலிய நூல்களையும் எழுதியுள்ளார். அரிச்சந்திரன், காணாமற் போன கணையாழி, பாதுகாப் பட்டாபிசேகம், சகுந்தலை உள்ளிட்ட நூல்களும் இவர்தம் படைப்புகள் என்று அறியமுடிகின்றது (வாழ்வியற் களஞ்சியம்,தொகுதி:12, பக்கம் 191). தமிழ் ஆங்கில அகராதி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இவர் 20.05.1932 இல் இயற்கை எய்தினார்.

 தமிழுக்குத் தம் பொருளை வழங்கிச் சென்ற வள்ளலைப் போற்றுவோம்!

 

பேராசிரியர் சி. நல்லதம்பி மறைவு!

  பேராசிரியர் சி. நல்லதம்பி

 ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் சி. நல்லதம்பி அவர்கள் இயற்கை எய்திய செய்தியை நண்பர்களின் முகநூல் பதிவுகள் வழியாக அறிந்து பெருந்துயருற்றேன். பேராசிரியர் சி. நல்லதம்பி அவர்களை, நான் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்ற காலத்திலிருந்து நன்கு அறிவேன். திருப்பனந்தாள் கல்லூரியில் முதுகலை- தமிழ் இலக்கியம் பயின்ற அவர், தருமபுர ஆதீனத்திற்கு உரிமையுடைய கல்லூரியில் இளம் முனைவர் பட்டம் படித்ததாக நினைவு(1990).

 திருப்பனந்தாள் ஏழுகடை மாடியில் தங்கியிருந்து, அவருடன் பழகிய நினைவுகள் நெஞ்சில் தோன்றி மறைகின்றன. சி.நல்லதம்பி அவர்கள் மு. வரதராசனார் நூல்களில் ஆழ்ந்த பயிற்சியுடையவர். மண்குடிசை, கள்ளோ காவியமோ, அகல்விளக்கு என அவர் வழியாகவே எங்களுக்கு மு.வ. புதினங்கள் அறிமுகம்.

 மு.வ. புதினங்களில் இடம்பெறும் ஒவ்வொரு பாத்திரங்களையும் அலசி ஆராய்ந்து பேசும் ஆற்றல் உடையவர். அந்தப் புதினங்களில் இடம்பெறும் நற்பண்பு உடைய கதைமாந்தர்களைப் போல் நேரிய வழியில் நடந்தவர். எளிமையானவர். உதவும் உள்ளம்கொண்டவர். அறத்தின்மேல் நம்பிக்கை கொண்டவர். போலிகளைப் புறந்தள்ளியவர். உள்ளும் புறமும் ஒன்றாக இருந்தவர்.  சாலையில் செல்லும்பொழுது நாமெல்லாம் ஏதேனும் குறுக்கு வழி இருந்தால் விரைந்து செல்வதற்கு வாய்ப்பாக குறுக்குவழியில் நடப்போம். ஆனால் நேர்பாதை தொலைவாக இருந்தாலும் அந்த நேர்பாதையில்தான் நடந்து செல்வார். தருமபுரம் கல்லூரியில் பயின்றபொழுது நேர்வழியாகச் சென்று, திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்ததை அடிக்கடி நினைவுகூர்வார்.

 பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நேர்காணலில் சந்திக்க நேர்ந்தது. அதே அன்புநிலை மாறாமல் உரையாடி, ஊக்கப்படுத்தினார். என் கல்லூரிக் கால வாழ்க்கையையும் விடிய விடிய அவருடன் தருக்கம் செய்த நினைவுகளையும் நினைவுகூர்ந்தமை வியப்பாக இருந்தது. தமிழாய்வுத்துறையில் ஈடுபட்டு உழைத்துவரும் என் முயற்சியைக் கேள்வியுற்று மனந்திறந்து பாராட்டினார். தாம் கல்லூரி மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக வகுப்பெடுத்து வருவதாகவும், அதனால் பல மாணவர்கள் பயன்பெற்றுள்ளதாகவும் உரையாடலில் தெரிவித்தார். பயிற்சிக்கு உரிய கட்டணமாக எதனையும் பெறுவதில்லை எனவும் விரும்பினால் தரலாம் என்றும் அறிவித்து, தமிழ்த்தொண்டாற்றி வந்துள்ளார்.

 கல்லூரிப் பேராசிரியர்களின் பணி நிரந்தம் சார்ந்த போராட்டத்தில் ஈடுபட்டு, வேலூர் சிறையில் சிறைவாழ்க்கையை அனுபவித்தவர்.

 சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வீ. அரசு அவர்களின் அன்புக்குரிய மாணவராக வளர்ந்தவர். அவரிடம் பயிற்சியெடுத்து, ஆடல் பாடல்களில் ஈடுபட்டதை நன்றியுடன் நினைவுகூர்ந்தவர்.

 நல்லதம்பி என்ற பெயருக்கு ஏற்ற வகையில் நல்லதம்பியாகவே வாழ்ந்து மறைந்த பேராசிரியர் அண்ணன் சி. நல்லதம்பி அவர்களின் நினைவினைப் போற்றுவோம்!