நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 24 ஜூலை, 2016

புலவர் பொ.வேல்சாமியின் உரைகளை ஆவணமாக்கும் பணி!

புலவர் பொ.வேல்சாமி

புலவர் பொ. வேல்சாமியின் கட்டுரைகளைக் காலச்சுவடு, தீராநதி, கவிதாசரன் உள்ளிட்ட ஏடுகளில் படித்ததுண்டு. ஆய்வு மாணவனாக இருந்த காலத்தில் ஐயம் ஏற்படும்பொழுது அவருடன் உரையாட நினைத்தாலும் இருப்பிடம் அறியாது, காலங்கள் உருண்டோடின. சிலவாண்டுகளுக்கு முன்னர் நாமக்கல் சென்ற ஓர் இளங்காலைப் பொழுதில் பொ. வேல்சாமியின் இல்லம் சென்று கண்டுவந்தேன். அதன் பிறகு ஓய்வு கிடைக்கும்பொழுதெல்லாம் இருவரும் உரையாடுவோம். சில நேரம் உரையாடல் மணிக்கணக்கில் நீள்வதும் உண்டு. பயனுடைய செய்திகளை  அமுதசுரபிபோல வழங்குவதில் ஆர்வம் கொண்டவர். தமிழ் நூல்கள் இணையத்தில் கிடைப்பதைக் கண்டு அதனை உடனுக்குடன் தெரிவிப்பவர். அரிய பழைய நூல்களை மின்படிகளாக மாற்றி வைத்துள்ள இணையதளங்களின் முகவரிகளை எடுத்துரைப்பவர். தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் இந்த முயற்சியில் ஈடுபடவேண்டும் என்ற தம் விருப்பத்தை ஒவ்வொரு முறையும் கூறத் தயங்குவதில்லை. இவரின் இல்லத்தின் அருகில் நாம் இருந்தால் நம் அறிவுத்தாகம் தணிப்பார் என்று நினைத்து, ஏமாற்றம்கொள்வதுண்டு.

பதிப்புச் சார்ந்த செய்திகளில் எனக்கு ஐயம் ஏற்பட்டால் உடனே பொ. வேல்சாமியை அழைத்து, தெளிவு பெறுவேன். உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பைத் தொடங்க நினைத்தபொழுது நோக்கம் கூறினோம்; ஆர்வமாகத் தழுவி அன்புமொழிகளைத் தந்தவர். இந்த மன்றத்தின் பொழுது, சற்றும் தயங்காமல் இணைந்துகொண்டவர். தொல்காப்பியம் தொடர்பில் சலிப்பில்லாமல் மணிக்கணக்கில் செய்திகளைச் சொல்பவர்.

தொல்காப்பியத்தின் பழைய பதிப்புகள் குறித்து விரல்முனையில் செய்திகளை வைத்திருப்பவர். பிற நூல்களைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் தொல்காப்பியம் பற்றியும், சங்க நூல்கள் பற்றியும் அறிவித்திருந்த நூற்றாண்டுப் பழைமையுடைய அறிவிப்புகளை நினைவூட்டுபவர்; ஆங்கிலப் பாதிரிமார்கள் தம் நூல்களிலும், அகரமுதலிகளிலும், நூலடைவுகளிலும் தொல்காப்பியம் குறித்து, வெளிப்படுத்தியுள்ள செய்திகளை நுட்பமாக விளக்குபவர். இவ்வாறு ஒவ்வொரு நாளும் நான் மணிக்கணக்கில் கேட்கும் உரைகளை உலகம் கேட்கவேண்டும் என்று உறுதிபூண்டேன்; அந்த உரைகளும் உலகு உள்ளவரை நிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வேட்கையுற்றேன்.

பொ. வேல்சாமியைப் புதுச்சேரிக்கு ஒருமுறை வந்து, உலகத் தொல்காப்பிய மன்றத்தில் சொற்பொழிவாற்றும்படிக் கேட்டுக்கொண்டேன். நாளும் நேரமும் வாய்க்கவேண்டும் என்று இருவரும் மாதக் கணக்கில் காலம் கடத்தினோம். நான் கனடாவில் நடைபெற்ற உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கிற்குச் சென்று, திரும்பிய பிறகு பொழிவை வைத்துக்கொள்ளலாம் என்று மனத்தளவில் உறுதியுரைத்தார்; உரைத்தபடி நாளும் கொடுத்தார். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் ஏழாம் பொழிவுக்கு வருகை தரும் பொ. வேல்சாமியின் வருகைக்குக் காத்துக்கிடந்தேன்.

தொல்காப்பிய மன்றப் பொழிவுகள் மாலை 6.30 மணிக்குத் தொடங்கி, இரவு 8 மணிக்கு நிறைவுறும். தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, தலைமையுரை எனப் பதினைந்து நிமையம் கழிந்தாலும் ஒன்றேகால் மணிநேரம் சிறப்புரை அமையும். ஒன்றேகால் மணிநேரத்தில் பொ.வேல்சாமியின் பொழிவை அடக்கமுடியாது என்ற நினைவு எனக்குப் பிறகுதான் வந்தது.

பொ. வேல்சாமி அவர்களோ நாமக்கல்லில் முட்டைவணிகம் செய்யும் தொழில் முனைவர். அவரின் நிறுவனத்தில் சரக்குந்து ஓட்டவும், முட்டைகளைக் கணக்கிடவும், பணத்தை வாங்கி வைக்கவும் எனப் பல பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் மேற்பார்வையிடும் பொறுப்பு இவருக்கு உண்டு. வணிகத்தை விட்டுவிட்டு, தமிழ்க்காப்பு முயற்சிக்கு முதல்நாளே புதுச்சேரிக்கு வர வேண்டும் என்று கேட்க எனக்குத் தயக்கம் இருந்தது. இருப்பினும் என் விருப்பத்தைச் சொன்னதும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன் முதல்நாள் இரவே புதுச்சேரிக்கு வர ஒப்புதல் தந்தார். தொல்காப்பியப் பொழிவுக்குரிய நாளும் வந்தது. பொ. வேல்சாமி தம் மகிழ்வுந்தில் புதுச்சேரிக்கு வந்துகொண்டிருப்பதை அறிவித்தவண்ணம் இருந்தார். அவர் தங்குவதற்கு ஒரு விடுதியை ஏற்பாடு செய்திருந்தேன். இரவு பதினொரு மணியளவில் புதுவை வந்து சேர்ந்தார். கையில் இருந்த சிற்றுண்டியைக் கொடுத்து, உண்டு, ஓய்வெடுக்கும்படிக் கேட்டுக்கொண்டு இல்லம் திரும்பினேன்.

23. 07. 2016 காலை 7 மணியளவில் விடுதியின் கதவைத் தட்டினேன். குளித்து முடித்தார்; உடைமாற்றிக்கொண்டு உடன்புறப்பட்டார். இந்த நேரத்தில் ஒளி ஓவியர் திரு. சிவக்குமாரும் வந்து இணைந்துகொண்டார்; சிற்றுண்டி முடித்தோம். புதுவையின் கடற்கரை ஒட்டிய கழிமுகப் பகுதியில் இருந்த அமைதியான தென்னந்தோப்பில் எங்களின் மகிழ்வுந்து நின்றது. படப்பிடிப்புக்கு ஆயத்தமானோம். ஒளிப்பதிவுக் கருவிகளைப் பொருத்தினோம்; பொ. வேல்சாமியை இருக்கையில் அமரவைத்து, அவரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் உரைப்பகுதிகளை நினைவூட்டிப் பேசும்படிக் குறிப்பிட்டோம்.
பொ. வேல்சாமியுடன் உரையாடும் மு..இ.

பொ.வேல்சாமி தமிழின் பன்முகத் தளங்களைக் கற்றறிந்தவர். கரந்தைப் புலவர் கல்லூரியின் மாணவர். பேராசிரியர்கள் அடிகளாசிரியர், ச.பாலசுந்தரம் போன்றவர்களிடம் பழந்தமிழ் நூல்களைப் படித்தவர். இலங்கைப் பேராசிரியர். கா. சிவத்தம்பியுடன் பழகி ஆய்வுப்போக்குகளை அறிந்தவர். இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு, வரலாறு, சமூகவியல், கோட்பாட்டு ஆய்வுகளைக் கற்றுத் துறைபோனவர். எனவே இவரின் பேச்சை ஒரு வரம்பிட்டு அடக்க வேண்டும் என்று நினைத்தேன். இல்லையென்றால் பேச்சு வேறு வேறு வடிவங்களைப் பெற்றுவிடும் என்று நினைத்தேன். கரைபுரண்டு ஓடும் காவிரியாற்றைக் கரைக்குள் அடக்கி, கல்லணை கட்டித் தேக்கி, அதன் வேகத்தை வயலுக்குள் அமைதியாக்கி அனுப்பும் ஓர் உழவனைப் போல் புலவர் பொ. வேல்சாமியின் பேச்சை அமைக்க நினைத்து, சில தலைப்புகளில் தங்கள் பேச்சு இருக்கும்படி விரும்புகின்றேன் என்று கூறினேன். முழுவதும் உடன்பட்டதுடன் தலைப்புகளையும் செப்பமாக அமைக்க அறிவுறுத்தினார். அந்த வகையில்,

1.            நானும் தமிழும்
2.            தமிழ் மரபில் தொல்காப்பியம் பெற்ற இடம்
3.            தொல்காப்பியமும் வடமொழி மரபும்
4.            தொல்காப்பியமும் உரையாசிரியர்களும்
5.            தொல்காப்பியத்தைத் தமிழ்மக்கள் மறந்த வரலாறு
6.            தொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு
         
என்ற தலைப்புகளில் அமையும்படி பொ. வேல்சாமியின் உரையைக் காணொளியில் பதிவு செய்தோம். ஒளி ஓவியர் திரு. சிவக்குமாரும் அவரின் உதவியாளரும் என் உள்ளக் குறிப்பறிந்து மிக உயர்ந்த தமிழ்ப்பணிக்குத் துணைநின்றனர். எங்களின் படப்பிடிப்புப் பணிக்கு வழக்கம்போல் இடமளித்து உதவிய திரு. செயப்பிரகாஷ் இராசு அவர்கள் என்றும் தமிழர்களின் நன்றிக்குரியவர். பொ. வேல்சாமியின் வாய்மொழியில் தமிழர்கள் தங்கள் பழம்பெருமையை விரைவில் கேட்டும், பார்த்தும் மகிழலாம்.

பதிந்த காட்சிகளைக் கண்டு மகிழ்தல்

படப்பிடிப்பில் இணைந்த முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்

படப்பிடிப்பில்...

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மற்றுமொரு அரிய தமிழ்ப்பணியில் ஈடுபட்டுள்ளீர்கள். வேல்சாமி ஐயாவைப் பற்றி அனைவரும் அறிவோம். தங்களது பணி சிறக்க வாழ்த்துகள்.