வே.இளங்கோ, நடுவில் நூலகர் திரு. நரேந்திரன், மு.இளங்கோவன்
மிகப் பலவாண்டுகளுக்கு முன் வாய்மொழிப் பாடல்கள்(2001)
என்ற என் நூலை வெளியிட அண்ணன் அ. தேவநேயன் அவர்களின் உதவியை நாடினேன். அப்பொழுது தேனாம்பேட்டையில்
அலுவலகம் வைத்திருந்த திரு. மறைமணி, திரு. வே. இளங்கோ ஆகியோர் கையில் என்னைத் தேவா அவர்கள் ஒப்படைத்தார்.
மறைமணி அண்ணன் பின்னாளில் சிங்கப்பூரில் வேலைபார்த்தார். இப்பொழுது சென்னையில் இயற்கை
வேளாண்மைப் பணிகளில் தம்மைக் கரைத்துக்கொண்டுள்ளார்.
திரு. வே. இளங்கோ அவர்களின் நட்பு வளர்பிறைபோல்
வளர்ந்தது. அண்ணன் இளங்கோ அவர்கள் மிகச் சிறந்த புத்தக வடிவமைப்பாளர். இவரும் ஓவியர்
புகழேந்தியும் இணைந்து உருவாக்கிய புத்தகங்கள் மிகச் சிறந்த நேர்த்தியுடன் வெளிவந்தன.
தமிழ் மீட்பர் கல்பாக்கம் வேம்பையன் ஐயா அவர்களின் திருமகனார்தான் அண்ணன் வே.இளங்கோ.
அண்ணன் வே. இளங்கோ அவர்களின் இல்லம் செல்லும்பொழுதெல்லாம் அருகிருக்கும் கணினியைத் தொட்டுக்கூட
நான் பார்த்ததில்லை. மின்சாரத்துக்கு அஞ்சுவதுபோல் எச்சரிக்கையுடன் தொடாமல் இருப்பேன்.
ஆனால் இன்று கணினியுடன் அமைந்த தொடர்பு வேறுவகையாகப் போய்விட்டது. இது நிற்க.
அண்ணன் வே.இளங்கோ அவர்கள்தான் என் திருமண
அழைப்பிதழ் அச்சிடல் தொடங்கி, அனைத்து நூல்களையும் வடிவமைத்து வழங்கியவர். நான் பணியின்
நிமித்தம் ஆர்க்காட்டில் இருந்தபொழுது அண்ணியார் திருவாட்டி இரேவதி அவர்களுடன் எங்கள் இல்லம் வந்து
வாழ்த்தி மகிழ்ந்தவர்(2003). அண்ணியார் இரேவதி அவர்கள்தான் முதன்முதல் சென்னையில் அரங்கம்
ஒன்றில் என்னைப் பேச வைத்தவர். சைதாப்பேட்டையில் மறைமலையடிகள் பாலம் இருக்கும் பகுதியில் இருந்த அரசு பள்ளியொன்றில்
என்னை ஆசிரியர்கள், மாணவர்கள் நடுவில் பேச வைத்தார். எழுத்தாளர் சூரியச்சந்திரனும்
உடன் பேசினார். ஆர்க்காட்டில் பணியில் இருந்த நாள்வரை அடிக்கடி சென்னை- கலைஞர் கருணாநிதி
நகரில் உள்ள அண்ணன் வே.இளங்கோ அவர்களின் இல்லத்தில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
புதுச்சேரியில் பணி கிடைத்தபிறகு அண்ணன்
வே.இளங்கோ அவர்களைச் சந்திக்க வாய்ப்பில்லாமல் போனது. அவரும் அரபு நாடொன்றுக்குப் பணியின்
நிமித்தம் போனதால் தொடர்பு முற்றாக இல்லாமல் போனது. சில மாதங்களுக்கு முன்பு பிரெஞ்சு
ஆய்வு நிறுவனத்திற்கு எங்கள் மாணவர்களுடன் சென்று நூலகத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது
அண்ணன் வே.இளங்கோ அவர்கள் எதிர்ப்பட்டார். இருவராலும் இன்ப அதிர்ச்சியிலிருந்து மீளவே
முடியவில்லை. ஒருவருக்கொருவர் நலம் வினவிக்கொண்டோம். இல்லத்துக்கு வரும்படி அழைத்தேன்.
வேறொரு முதன்மைப்பணியின் காரணமாக வந்ததால் மீண்டும் ஒருமுறை வருவதாக உரைத்து விடைபெற்றார்.
அண்ணன் அருகில் இல்லாமல் அரபு நாடொன்றில்
இருந்தாலும் “உணர்ச்சிதாம் நட்பாம் கிழமை தரும்” என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்க நட்பு
நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும். வாழ்க வே.இளங்கோ!
2 கருத்துகள்:
நட்பின் பெருந்தக்க யாவுள
தங்களின் நட்பு நெகிழ வைத்துவிட்டது.
கருத்துரையிடுக