நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

மொழிபெயர்ப்பாளர் பி. பாண்டியன் இ.ஆ.ப.



 பி. பாண்டியன் ...

ஓய்வு கிடைக்கும்பொழுதெல்லாம் அகவை முதிர்ந்த அறிஞர் பெருமக்களிடம் உரையாடுவதை நான் வழக்கமாகக் கொண்டவன். யாருடன் உரையாடினாலும் எங்களின் உரையாடல் இலக்கியம், இலக்கணம், அரசியல், பதிப்பு வரலாறு, இருபதாம் நூற்றாண்டின் தமிழ்வளர்ச்சி என்ற பொருண்மைகளில் இருக்கும். அவ்வகையில் சென்னையில் வாழும் அறிஞர் பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களுடன் உரையாடும்பொழுது தகவல் களஞ்சியமாகச் செய்திகளைக் கொட்டி மகிழ்வார். மொழிபெயர்ப்புகள் குறித்தும், சமய இலக்கியம் குறித்தும், ஆங்கிலப் பேச்சுகள் குறித்தும் இவருடன் உரையாடினால் ஆலமரத்தடியில் அமர்ந்து,தித்திக்கத் தித்திக்கப் பழந்தின்னு தேனை ஊற்றிக் கொப்பளித்தஉணர்வைப் பெற முடியும்

அறிஞர் பாலசுப்பிரமணியனார் அவர்களுடன் ஒருநாள் உரையாடிக் கொண்டிருந்தபொழுது திரு. பாண்டியன் ... அவர்களின் பணிகளை அறிவீர்களா? என்று கேட்டார்கள். இல்லை என்று உரைத்தேன். பழந்தமிழ் நூல்களை மொழிபெயர்த்ததுடன்  தாகூரின் படைப்புகள் அனைத்தையும் தமிழில் பெயர்த்த பெருமைக்குரியவர் எனவும், படைப்பு நூல்கள் பலவற்றைத் தந்தவர் எனவும் குறிப்பிட்டார்.

திரு. பாண்டியன் ஐயா அவர்களைச் சந்திக்க நாளும் நேரமும் கேட்டேன். செவ்வி அமைந்தது. எண்பத்தைந்து அகவை கொண்ட திரு. பி. பாண்டியனார் அவர்கள் சென்னையில் தம் தமிழ்ப்பணியைத் தவப்பணியாகச் செய்துகொண்டு வாழ்ந்துவருகின்றார்கள். தமிழ் அறிஞர் சி. இலக்குவனார் அவர்களின் மாணவரான இவர், இந்திய ஆட்சிப் பணியில் தேர்ச்சிபெற்று மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். இவரின் தமிழப் பணிகளைக் கண்டபொழுது மலைப்பு ஏற்பட்டது. இப்பெருமகனாருக்கு உரிய சிறப்பும் பெருமைகளும் கிடைக்க வேண்டும் என்று அன்னாரின் தமிழ் வாழ்க்கையையும் பணிகளையும் இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

திரு. பாண்டியன் .. அவர்கள் பன்மொழியறிஞர். பாவலர். மொழிபெயர்ப்பாளர், சிறந்த ஆட்சியர். படைப்புநூல்கள் பலவற்றை வழங்கியவர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் தந்துள்ளார். எனினும் இவர்தம் படைப்புகள் போதிய கவனம் பெறாமலும் உரிய சிறப்புகள் இவருக்குக் கிடைக்காமலும் உள்ளன.

விருதுநகர் மாவட்டம் கன்னிசேரிபுதூர் என்னும் ஊரில் திருவாளர்கள் . பிச்சைப்பிள்ளை, காளியம்மாள் ஆகியோரின் மகனாக 23.01.1931 இல் பிறந்தவர். இளமைக் கல்வியை முதலிப்பட்டியில் படித்தவர். உயர்நிலைக் கல்வியைச் சாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். தமிழறிஞர் சி. இலக்குவனார் அவர்கள் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரியில் பணியாற்றியபொழுது இவர் கல்லூரிக் கல்வி பயின்றவர். பி. பாண்டியன் அவர்கள் இளங்கலைப் பொருளாதாரம் படித்தவர்.

சாத்தூரில் பத்தாம் வகுப்பில் பயின்ற நாள்முதல் கவிதை புனையத் தொடங்கினார். தமிழ் இலக்கண இலக்கியங்களை வாய்ப்பு அமையும்பொழுதெல்லாம் பயின்றார். தம் இயற்பெயரிலும், பேகன் என்ற புனைபெயரிலும் தொடர்ந்து எழுதிவருகின்றார்.

1954 இல் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. 1955 இல் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.டி படிப்பைப் படித்தார்.

1955 இல் சமூகக் கல்வி அமைப்பாளர் என்ற பொறுப்பில் திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் அரசுப்பணியில் இணைந்தார். அருப்புக்கோட்டை, அலங்காநல்லூர், வத்தலகுண்டு, மதுரை உள்ளிட்ட ஊர்களில் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றியவர்.

அரசின் போட்டித் தேர்வு எழுதி மாவட்ட துணை ஆட்சியராகப் பணியேற்றார் (1972). 1980 ஆம் ஆண்டில் ... அதிகாரியாக நியமிக்கப்பெற்றுச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஊர்களில் மாவட்ட ஆட்சியராக 1982 முதல் 1987 வரை பணியாற்றியவர். 1988 இல் இவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு இளங்கோ, அதியமான், பேகன், சிற்றரசு, காளீசுவரன் என்று ஆண்மக்கள் ஐவர் மக்கட் செல்வங்களாக வாய்த்தனர்.

நம் தமிழ் இலக்கியச் செல்வங்கள் உலகம் முழுவதும் செல்ல வேண்டும் எனவும், அதற்கு மொழிபெயர்ப்புகளே பெரும் துணைசெய்யும் எனவும் உணர்ந்து, மொழிபெயர்ப்பைத் தம் மூச்சாக நினைத்து உழைத்தவர். இந்த அகவையிலும் தொடர்ந்து படைப்புகளை எழுதி வெளியிட்டு வருகின்றார்.

தாகூரின் நூலினைக் காதல்பரிசு என்னும் தலைப்பில் மொழிபெயர்த்து 1972 இல் வெளியிட்டார். இதுவரை இந்நூல் 21 பதிப்பு கண்டுள்ளது. கீதாஞ்சலி மொழிபெயர்க்கப்பட்டு இதுவரை 11 பதிப்பு வெளிவந்துள்ளது. கீதாஞ்சலி நூலில் தாகூரின் வங்கமொழி வடிவம் - அவர் பெயர்த்த ஆங்கிலப் பெயர்ப்பு- ஆங்கிலத்திலிருந்து பாண்டியன் அவர்கள் பெயர்த்த தமிழ்ப்பெயர்ப்பு என்று மூன்று மொழிகளில் அமைந்த பதிப்பாக இப்பதிப்பு வெளிவந்துள்ளது.

இறையருட் பாடல்களடங்கிய பல தொகுதிகளை ஒலிவட்டுகளாக வெளியிட்டுள்ளார். இவர் பாடல்கள் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பெற்றுப்பாடப்பெற்றுள்ளன. இவரின் மொழிபெயர்ப்புப் பணிகளை உலகம் அறிய வேண்டும், உலக மக்கள் பயன்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் இணையத்தில் அனைவருக்கும் இலவசமாக வழங்கியுள்ளமை இவர் கொடையுள்ளத்திற்குச் சான்றாகும்.

பிரசண்டவிகடன், அமுதசுரபி, தமிழ்நாடு உள்ளிட்ட ஏடுகளில் எழுதிய பெருமைக்குரியவர்.

தமிழின் அரிய நூல்களான மணிமேகலை, சூளாமணி, கலித்தொகை, பரிபாடல் உள்ளிட்ட நூல்களை இவர் மொழிபெயர்த்துள்ளமை தமிழர்களால் நன்றியுடன் எண்ணிப்பார்க்க வேண்டிய பணிகளாகும். மணிமேகலை நூலுக்கு உரைவரைந்த .வே.சா. போன்ற அறிஞர் பெருமக்கள் அதில் இடம்பெறும் சமயம் சார்ந்த சொற்களுக்குப் பொருள் விளங்காமல் இடர்ப்பட்டதைத் தம் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளனர். அதுபோல் சூளாமணி நூலுக்கு கருப்பக்கிளார் இராமசாமிப் புலவர் உள்ளிட்டவர்கள் உரை எழுதத் தயங்கிய பொழுது பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் முன்வந்து உரை வரைந்த பெருமையை அவர்களின் வாழ்க்கை வரலாற்றால் அறியலாம்.

கற்பார்க்கு அறைகூவல் விடுக்கும் சூளாமணியைப் படிப்பது பெரும்புலவர்க்கே வாய்த்த ஒன்றாகும். அதனை மொழிபெயர்ப்பது என்பது அரிதினும் அரிய செயலாகும். அதுபோல் பரிபாடல் நூலினைப் படித்துப் பொருள் விளங்கிக்கொள்ள சான்றோர் பெருமக்களே மருளும் நிலை உண்டு. ஏனெனில் இசைகுறித்த பல செய்திகள் அந்த நூலில் உள்ளன. இந்த நூல்களை ஆங்கிலத்தில் பெயர்த்துள்ள பாண்டியனாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். முத்தொள்ளாயிரம் நூலினைச் செம்மொழி நிறுவனத்திற்காகப் பெயர்த்து, அந்நூலும் அச்சுவடிவம் கண்டுள்ளது.

பி.பாண்டியன் அவர்களின் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்தபொழுது முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் பொற்கோ உள்ளிட்டவர்கள் ஆங்கில ஏடுகளில் மதிப்புரை எழுதிப் பாராட்டினர்.

 ஆங்கிலம் அறிந்தவர்கள் தமிழ் இலக்கியச் சிறப்பினை உணரவேண்டும் என்று நம் பாண்டியனார் அவர்கள் வழி செய்துள்ளமை தமிழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

  பி.பாண்டியன் அவர்கள் யோகக் கலையில் வல்லவர். எனவே கவியோகி பேகன் எனப் போற்றப்படுபவர். பி.பாண்டியனார் அவர்களின் நூல்கள் அனைத்தும் புகழ்பெற்றப் பதிப்பகங்கள் வழியாக வெளிவந்து உலகம் முழுவதும் பரவ வேண்டும். அப்பொழுது தமிழ்ப்புகழ் உலகமெலாம் எதிரொலிக்கும்.

பி. பாண்டியனார் உடல்நலம் பெற்று அன்னைத் தமிழுக்கு இன்னும்பல பணிசெய்ய அன்புடன் வாழ்த்துகின்றேன்!

பி. பாண்டியன் அவர்களின் தமிழ்க்கொடையுள் சில:

ஆங்கிலத்தில் வெளிவந்தவை:

1.   மணிமேகலை (Manimekalai – English (Full Epic))
2.   முத்தொள்ளாயிரம்
3.   பரிபாடல்
4.   கலித்தொகை
5.   வளையாபதி, குண்டலகேசி
6.   சூளாமணி

தாகூர் நூல்களின் மொழிபெயர்ப்பு

கீதாஞ்சலி
காதல்பரிசு
உடைந்தகூடு
சித்திரா
சிதறிய பறவைகள்
பிறைநிலா
தபால்காரன்
அஞ்சலகம்,
அத்தை
பரீட்சார்த்தம்

படைப்புநூல்கள்

தமிழ்த்தாய் பிள்ளைத்தமிழ்
கவிஞர் பேகன் கவிதைகள்
முருகு ஆயிரம்
செவ்வியல் தமிழுக்குச் சீராட்டு
திருக்குறள் இசையமுதம்
கவியோகி காவடிச்சிந்து
மெய்யுணர்வியம்










பி. பாண்டியனார் இணையதளத்தைப் பார்வையிடுவதற்கும் பயன்கொள்ளுவதற்கும் இங்குச் சொடுக்கவும்



****குறிப்பு: இக்கட்டுரையை எடுத்தாளுவோர்,  வடிவம் மாற்றி, வேறு தளங்களுக்குக்  கட்டுரை வடிப்போர் அன்புகூர்ந்து எடுத்த இடம் சுட்டுங்கள்.

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அறிஞர்கள் வரிசையில் பாண்டியனாரைப் பற்றிய பதிவினைக் கண்டேன். தங்களின் மூலமாக பல அறிஞர்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. நன்றி.