நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 22 ஜூலை, 2015

அரவணைப்பு அறக்கட்டளையின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா!


 பாகூர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாண்புமிகு பேரவைத் தலைவர் வ. சபாபதி அவர்கள் நிதியுதவி வழங்குதல்

அரவணைப்பு அறக்கட்டளையின் சார்பில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா  புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் வ. சபாபதி அவர்களின் தலைமையில் 19.07.2015 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரண்டரை இலட்சம் ரூபாய் நிதியுதவி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தந்தையை இழந்த மாணவர்களின் கல்விநலனுக்கு அரவணைப்பு அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவி வழங்கி வருகின்றது. அந்த வகையில் இரண்டாம் ஆண்டு நிதியுதவி வழங்கும் விழா புதுச்சேரி சற்குரு ஓட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பேராசிரியர் மு. இளங்கோவன் வரவேற்றார். பேராசிரியர் இரா.. குழந்தைவேலனார் நோக்கவுரையாற்றினார். அரங்க. மாரிமுத்து அவர்கள் முன்னிலையுரையாற்றினர்.


 பொறியாளர் கு.இளங்கோவன் எழுதிய A Layman's Peak-Reach என்ற நூலினைப் பேரவைத்தலைவர் வ. சபாபதி அவர்கள் வெளியிட, பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா, பேராசிரியர் ப.அருளி ஆகியோர் முதலிரு படிகளைப் பெற்றுக்கொண்டனர். அருகில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், பேராசிரியர் இராச. குழந்தைவேலனார், அரங்க. மாரிமுத்து, செ. திருவாசகம் உள்ளிட்டோர்.

அரவணைப்பு அறக்கட்டளையின் நிறுவுநர் குவைத்து கு. இளங்கோவன் அறிமுகவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை உரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாகூர் அரசுப்பள்ளி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுவைப் பல்கலைக்கழகம், போப் ஜான்பால் கல்வியியல் கல்லூரி சார்ந்த மாணவர்கள் நிதியுதவி பெற்றனர். மேலும் இந்தியக் குடியரசுத்தலைவரின் செம்மொழி இளம் அறிஞர் விருதுபெற்ற முனைவர் ஏ. எழில்வசந்தன் அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பாராட்டு செய்யப்பட்டது. செ. திருவாசகம் நன்றியுரை வழங்கினார்.


1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.