முனைவர் க.இளமதி சானகிராமன் அவர்கள்
புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையின் புல முதன்மையராகப்
பேராசிரியர் முனைவர் க. இளமதி சானகிராமன் அவர்கள் அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார். புதுவைப் பல்கலைக்கழகம் தொடங்கிய காலம் முதல் தமிழியல் துறையில் துணைப்பேராசிரியர்(1987),
இணைப்பேராசிரியர், பேராசிரியர் என்ற நிலைகளில்
பணியாற்றியவர். புதுவைப் பல்கலைக்கழகத்தின் விடுதிக் காப்பாளராகத்
தொடர்ந்து பணியாற்றுவது இவர்தம் கூடுதல் சிறப்பாகும். இவர்தம் பணிக்காலத்தில்
எம்போலும் மாணவர்களுக்கு நல்லறிவும் நற்பண்புகளும் ஊட்டி வளர்த்த பெருமைக்குரியவர்.
பேராசிரியர் க. இளமதி சானகிராமன் அவர்கள்
சித்தர் இலக்கியங்கள் குறித்த ஆய்வுகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வருபவர். இத்துறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லா வகையில் பெரும் புலமை பெற்றவர்.
இவரின் மேற்பார்வையில் பலர் இளம் முனைவர் பட்டங்களும், பலர் முனைவர் பட்டங்களும் பெற்றுள்ளனர். தடைகளைத் தகர்த்து, உயர்நிலை எய்திய பேராசிரியர் அவர்களுக்கு
அவர்களின் மாணவர்கள் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.
இவர்தம் பெருமைமிகு வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.
முனைவர் க. இளமதி அவர்கள் அரியலூர் மாவட்டம்
உடையார்பாளையத்தில் வாழ்ந்த புலவர் கு. கண்ணையா - தனலெட்சுமி ஆகியோரின் அன்பு மகளாக
18.10.1955 இல் பிறந்தவராவார். தொடக்கக்கல்வி,
உயர்நிலைக்கல்வியை உடையார்பாளையம் அரசு பள்ளியில் பயின்றும்,
புகுமுக வகுப்பு, இளங்கலை வகுப்பு ஆகியவற்றைக்
கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் பயின்றும் தம் கல்வியார்வத்தை மெய்ப்பித்தவர்.
மிகவும் பின்தங்கியப் பகுதியான இவ்வூரில் பிறந்து, உயர் கல்வி கற்று நேரிய வழியில் உயர்நிலைக்கு வருதல் அரிதினும் அரிது.
ஏற்பட்ட இடர்களை நீக்கி, உயர்நிலை எய்திய பேராசிரியர் அவர்களின் உழைப்பைப் போல் மாணவர்கள்
உழைத்தால் உயர்நிலை எய்தலாம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத்
தமிழ் இலக்கியம் பயின்றவர்(1980).
சித்தர் பாடல்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் 1987 இல் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் அதே
பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பொது நிருவாகம் (2005), இளங்கல்வியியல்
(1984), மொழியியல் - சான்றிதழ் (1982)
தெலுங்கு - சான்றிதழ் (1983), சைவ சித்தாந்தம் பட்டயம் (2001), மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்
இதழியல் துறையில் முதுகலைப் பட்டம் (1991), பெண்ணியவியல் -
முதுகலைப் பட்டயவியல் (2003) ஆகிய பட்டங்களையும்,
பட்டயங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுத் தம்
பல்துறைப் புலமையைப் பெருக்கிக்கொண்டவர்.
சித்தர் இலக்கிய அகராதி என்னும் தலைப்பில்
ஆய்வுத்திட்டம் மேற்கொண்டவர்.
பன்னாட்டுக் கருத்தரங்குகளை நடத்தியவர். பல்கலைக்கழகத்தின்
சார்பில் இரண்டுமுறைப் புத்தொளிப் பயிற்சிப் பணிகளைக் கவனித்தவர். பல்வேறு பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு பங்களிப்பு செய்தவர். பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு ஆய்வுரைஞர் குழு, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாடத்திட்டக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகவும் தேர்வுக்குழு உறுப்பினராகவும்
பணியாற்றி வருபவர்.
பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா சென்றுவந்தவர்.
பேராசிரியர் க.
இளமதி அவர்களின் தமிழ்க்கொடை:
- பேரின்பப் பெருவாழ்வு( 1988)
- சித்தர்களும் சமூகப் பார்வையும்
- சித்தர்களின் சிந்தனைகள்
- ஓம் சத்குரு அப்பா பைத்திய சுவாமிகளின் வாழ்வும் பணியும்
- நல்லாசிரியர் புலவர் கு.கண்ணையா வாழ்வும் பணியும்
- நம்மைப் போல் (சிறுகதைகள்)
- எரிமலையாய் (சிறுகதைகள்)
- மெழுகுவர்த்திகள் (சிறுகதைகள்)
- சிவவாக்கியார் பாடல்கள் செம்பதிப்பு
- கொங்கணிச் சித்தர் பாடல்கள் தொகுப்பும் திறனாய்வும்
- சித்தர் இலக்கியம்
- பெண்ணியம் பேச..
- சமயத்தமிழ்
உள்ளிட்ட பல நூல்களைத் தந்தவர். இவற்றுள் பல நூல்கள் பல்வேறு
பரிசில்களைப் பெற்றுள்ளன.
முனைவர் க.இளமதி அவர்களின் கணவர் பெயர் திருவாளர் சானகிராமன் ஆகும். இவர் பேராசிரியர் அவர்களின் அனைத்துப் பணிகளுக்கும் ஆய்வுகளுக்கும் துணைநிற்கும்
பேருள்ளம் படைத்தவர். மாணவர்களைத் தம் உடன் பிறந்தாராக நினைந்து
பழகும் இந்த இணையர் நீடுவாழ நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.