நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 2 ஜூன், 2014

இலக்கணப் பேரறிஞர் மருதூர் அரங்கராசன்…


முனைவர் மருதூர் அரங்கராசனார்

கல்லூரி மாணவனாக யான் இருந்தபொழுது பொதுநூலகம் ஒன்றில் ஓர் இலக்கண நூலை எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தபொழுது மருதூர் அரங்கராசன் என்ற பெயரைப் பார்த்து வியப்படைந்தேன். எங்களூருக்கு அருகில் இருந்த மருதூர், உடையார்பாளையம் உள்ளிட்ட ஊர்ப்பெயர்கள் அந்த நூலில் இருப்பதைக் கண்டு எனக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த நூலை அப்பொழுது மேலோட்டமாகப் புரட்டிவிட்டு, மருதூர் அரங்கராசன் யார்? என்ற வினவுதலில் ஈடுபட்டிருந்தேன்.

யாண்டு பல கழிந்தன. பின்னர் நெய்வேலியில் கல்லூரி முதல்வராக மருதூரார் பணியாற்றுவது அறிந்து பலவாண்டுகளுக்கு முன்னர் நேரில் சென்று கண்டுள்ளேன். அதன்பிறகு மடலிலும் தொலைபேசியிலும் தொடர்புகொண்டு ஐயாவிடம் உரையாடுவது உண்டு. பலவாண்டுகளாக ஐயாவின் பணிகளை முழுமையாக அறியும்பொருட்டு அவர்களின் தன்விவரக் குறிப்பைக் கேட்டுப் பார்த்து ஓய்ந்துவிட்டேன். திரு. இரா. பஞ்சவர்ணம் ஐயா அவர்களும் நானும் இணைந்து மருதூராரைச் சந்திக்க பலமுறை முயன்றும் தோற்றோம். நேற்று சென்னை செல்லும் வாய்ப்பு அமைந்ததைப் பயன்படுத்தி, ஐயாவின் இல்லம் சென்று அவர்களின் தமிழ்ப்பணியைப் பற்றி உரையாடி மீண்டேன். மருதூரார் அவர்களின் சிறப்பினை இத்தமிழுலகம் அறியும்பொருட்டு அவர்தம் வாழ்க்கைக்குறிப்பைப் பதிந்துவைக்கின்றேன்.

தமிழகத்தில் இலக்கணம் குறித்து ஆழமான ஆய்வுகளை நடத்தி, நூல்கள் வழியாக மக்களுக்கு அரிய செய்திகளைத் தந்துவரும் பேராசிரியர்களுள் முனைவர் மருதூர் அரங்கராசன் அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் மருதூர் என்னும் ஊரில் 09. 12. 1952  இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் கா. வை. இரா. சண்முகனார், அலர்மேல்மங்கை ஆவர்.

தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் மருதூரில் நிறைவு செய்த அரங்கராசனார், புகுமுக வகுப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இளம் அறிவியல் வகுப்பினைச் சென்னைத் தியாகராயர் கல்லூரியிலும் முதுகலைத் தமிழ் இலக்கியப்படிப்பைத் தஞ்சாவூர், பூண்டியில் அமைந்துள்ள திருபுட்பம் கல்லூரியிலும் பயின்றவர். அதன் பிறகு இளம் முனைவர் பட்டத்திற்குப் பொருள்கோள் என்ற தலைப்பில் ஆய்வுசெய்தவர். வேற்றுமை மயக்கம் என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். இவர்தம் நெறியாளராக இருந்து இலக்கணத் துறையில் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளராக இவரை வளர்த்தெடுத்த பெருமை முனைவர் பொற்கோ அவர்களுக்கு உண்டு. தம்மை நிறைபுலமைச் சான்றோராய் அமைத்துக்கொள்ள பல்வேறு துறைகளில் பட்டயம், சான்றிதழ்க் கல்வியைக் கற்றுள்ளார். அவற்றுள் சமற்கிருதம்- பட்டயம், மொழியியல் - சான்றிதழ் ,  முதுகலை கல்வியியல், முதுகலை உயர்கல்வியியல், பள்ளிக்கல்வி பட்டயம்,  ஆகியவை குறிப்பிடத்தகுந்தன.

                மருதூரார் சென்னை சர் மு. சித. மு. மேனிலைப் பள்ளியில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கியவர் (1979- 87). அதன் பின்னர் நெய்வேலி சவகர் அறிவியல் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியேற்று, தமிழ்த்துறைத் தலைவராகவும், கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்(1993-2011). சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரகராதியின் செம்பதிப்புப்பணியில் இணைப்பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர்(2011-2013). சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் விருந்துநிலைப் பேராசிரியராகவும், இலக்கணப் பாடநூல் எழுதுநர், பாடப்பொருள் மதிப்பீட்டாளர் என்ற நிலைகளிலும் பணியாற்றும் பெருமைக்குரியவர்.

               
மருதூராரின் தமிழ்க்கொடை:

1.            பொருள்கோள், 1979
2.            இலக்கண வரலாறு: பாட்டியல் நூல்கள், 1983
3.            தமிழில் மரபுத் தொடர்கள், 1998
4.            தமிழில் வேற்றுமைகள், 2000
5.            தமிழில் வேற்றுமை மயக்கம், 2000
6.            தவறின்றித் தமிழ் எழுத... 2005
7.            யாப்பறிந்து பாப்புனைய... 2005(தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)
8.            ஓர் அழுகை ஆதரவு தேடுகிறது 1984 (புதுக்கவிதைத் தொகுப்பு)
9.            பண்டைய ரோமானியர்களின்
                பெயர்சூட்டு விழாவும் பெயரீட்டு முறையும் (அச்சில்)
10.          நாளும் நல்ல தமிழ் எழுத ...(அச்சில்)
11.          தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும் (பதிப்பாசிரியர்), 2007
12.          திருக்குறள் உணர்த்தும் வாழ்வியற் கோட்பாடுகள் (ப.ஆ.) 2008
13.          ஆய்வு நோக்கில் சங்க இலக்கியம் (பதிப்பாசிரியர்), 2009
14.          செவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புறக் கலைகளின் தாக்கம், (ப.ஆ.), 2014

தொடர்பு முகவரி :    

மருதூர் அரங்கராசன்  (S. RENGARAJAN)
 5, பாலாசி அடுக்ககம் 12, மூன்றாவது முதன்மைச் சாலை
காந்தி நகர், அடையாறு,  சென்னை – 600 020
கைப்பேசி  : + 91  96002 44444
மின்னஞ்சல்: marudurar@yahoo.co.in


குறிப்பு: கலைக்களஞ்சியத் தொகுப்பாளர்கள், கட்டுரையாளர்கள் இக்குறிப்புகளை எடுக்கும்பொழுது எடுத்த இடம் குறிப்பின் மகிழ்வேன்.

1 கருத்து:

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

தங்களுடைய பதிவின் மூலமாக திரு மருதூர் அரங்கராசன் அவர்களைப் பற்றி அறிந்தேன். பல அறிஞர்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உங்களின் மூலமாகக் கிடைக்கின்றது. நன்றி.