நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 11 ஜூன், 2014

சிற்றிலக்கிய வேந்தர் புலவர் மா. திருநாவுக்கரசு…


புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள்

கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் வளங்கொழிக்கும் ஊராக விளங்குவது திருமழபாடி என்னும் ஊராகும். பாடல்பெற்ற திருக்கோயிலும், திருமழபாடித் தமிழ்ச்சங்கமும் பெரும் பேராசிரியர் ஆ. ஆறுமுகம் ஐயா அவர்களும் இவ்வூரின் அளப்பரும் சொத்துக்களாகும். இவ்வூருக்கு மேலும் பெருமை சேர்க்கும் பெருமக்களுள் புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிடத்தக்கவர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் மெய்யன்பராக விளங்கும் மா.திருநாவுக்கரசு அவர்கள் பழகுதற்கு இனிய பண்பாளர். மிகச் சிறந்த தமிழ்ப்பற்றாளர். பல நூறு தமிழ்த்திருமணங்களை முன்னின்று நடத்திய பெருமகனார். திருக்குறள் வகுப்பு, பெரிய புராண வகுப்புகளை அச்சிற்றூரில் மாதந்தோறும் ஏற்பாடு செய்து அவ்வூர் மக்களுக்குத் தமிழறிமுகம் செய்வதைத் தலையாயப் பணியாகச் செய்து வருபவர்.

திருமழபாடித் தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக அமைதியாகத் தமிழ்ப்பணி செய்யும் மா. திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய ப. சுந்தரேசனார் அன்னம் விடு தூது என்னும் நூலை நான் மாணவப்பருவத்திலேயே கற்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. எங்கள் ஆசிரியர் குடந்தை கதிர். தமிழ்வாணன் ஐயா இந்த நூலை வழங்கிப், படிக்கும்படி அறிவுறுத்தினார்கள். பல்லாண்டுகளுக்குப் பிறகு புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் தமிழ்ப்பணியைப் போற்றி அண்மையில் கங்கைகொண்ட சோழபுரத் தமிழ்ச்சங்கத்தின் தொடக்க விழாவில் சிறப்புச் செய்யும் சூழல் அமைந்தது. அதன் பிறகு திருமழபாடிக்குக் களப்பணியின் பொருட்டு அண்மையில் சென்றபொழுது குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களுக்கும் இவர்களுக்குமான அன்பு அறிந்து மகிழ்ந்தேன். மேலும் புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் சிற்றிலக்கியப் பணியறிந்து அவர்களை நெஞ்சார வாழ்த்தி மகிழ்ந்தேன். மரபுக்கவிதையை மறையவிடாமல் தொடர்ந்து பாடலியற்றும் இவர்களைப் போன்றவர்களைத் தமிழுலகும் எதிர்பார்க்கின்றது.

இன்றைய ஆரவார ஆர்ப்பாட்ட ஊடக உலகில் இப்பெருமக்களின் பணிகள் வெளியுலகிற்குத் தெரிய வாய்ப்பு இல்லை.  இவர்கள் எந்த வட்டத்துக்குள்ளும் அடங்காதவர்கள். பரிசுகளுக்கும் பட்டங்களுக்கும் விருதுகளுக்கும் ஆள் பிடித்து அலையும் போலி ஆர்ப்பாட்ட மாந்தர்கள் மலிந்து கிடக்கும் இற்றை உலகில் உண்மையான தமிழ்ப்பணியாற்றும் இப் பெருமகனாரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி வைப்போம் என்று ஐயா மா. திருநாவுக்கரசு அவர்களின் எளிய தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் வைத்தியநாதன்பேட்டை என்னும் சிற்றூரில் வாழ்ந்த திருவாளர் மாணிக்கம் பிள்ளை, திருவாட்டி அங்கம்மாள் ஆகியோரின் மகனாக 10.03.1932 இல் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பி. லிட், வித்துவான் பட்டங்களைப் பெற்றவர். இடைநிலைத் தமிழாசிரியராக அரசு பள்ளிகளில் 32 ஆண்டுகள் தமிழ்ப்பணி செய்தவர்.

திருமழபாடி அப்பர் அருள்நெறி மன்றத்தின் செயலாளராக 25 ஆண்டுகள் பணியாற்றியவர். திருமழபாடித் தமிழ்ச்சங்கத்தின் பெருமைக்குரிய செயலாளராக 1980 முதல் இருந்து தொடர்ந்து தமிழ்ப்பணி புரிபவர். திருமழபாடி பெரிய கோயிலில் நான்கரை ஆண்டுகள் சமய வகுப்புகள் நடத்தியவர். அப்பர் அருள்நெறிக்கழகத்தின் வாயிலாக 44 கிலோ எடையில் அப்பர் ஐம்பொன் சிலை நிறுவத் துணைநின்றவர்.

திருமழபாடித் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 700 கிலோ எடையில் திருவள்ளுவர் வெண்கலச் சிலை நிறுவக் காரணமாக இருந்தவர். வானொலி நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவன நிகழ்ச்சிகளில் உரையாற்றிய பெருமைக்குரியவர்.

புலவர் மா. திருநாவுக்கரசு வழங்கிய தமிழ்க்கொடை:
  • பண்ணாராய்ச்சி வித்தகர் ப. சுந்தரேசனார்                            அன்னம்விடுதுதூது(1991)
  • மருத்துவ வள்ளல் விசுவநாதம் கொண்டல்விடு தூது (1998)
  • திருமகள் மலர்விடு தூது(1994)
  • நல்லாசிரியர் இரத்தினசபாபதியார் சங்குவிடு தூது(1997)
  • திருப்பூசை செல்வர் மூக்கப்பிள்ளை சந்தனவிடு தூது(2003)
  • அருள்மிகு பழநியப்பர் பொன்விடு தூது
  • அருள்மிகு அழகம்மை பிள்ளைத்தமிழ்(2004)
  • பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழ்(2003)
  • கப்பலோட்டிய தமிழன் பிள்ளைத் தமிழ்(அச்சில்)
  • பெருந்தலைவர் காமராசர் மயில்விடு தூது
  • நேரு மாமா பாடல்கள்
  • பழங்கதைகளும் புதிய பாடல்களும்
  • முத்துக்குமார் இலக்கண வினா-விடை(1991)


புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் பெற்ற சிறப்புகள்:

புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் தமிழ்ப்பணியைப் போற்றி அரியலூர் மணிமன்றம் தூதிலக்கியத் தோன்றல்(1997) என்னும் சிறப்பினை வழங்கியும், திருத்தவத்துறை அறநெறிக் கழகம் மரபுக்கவிமணி என்னும் பட்டம் வழங்கியும்(1989), திருவையாறு ஔவைக்கோட்டம் புலவர் மாமணி(2009) எனும் பட்டம் வழங்கியும்,  குடந்தை புனிதர் பேரவை சிற்றிலக்கியச் செல்வர்(2008) என்னும் பட்டம் வழங்கியும், திருச்சிராப்பள்ளி திருமுறை மன்றம் சைவத் தமிழறிஞர் விருது அளித்தும், சூரியனார் கோயில் ஆதீனம் சிவநெறி வித்தகர்(2012) என்னும் பெருமை தந்தும் பாராட்டியுள்ளன. புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் சிற்றிலக்கியங்கள் கல்லூரிகளில் பாட நூல்களாக இருந்துள்ளன. இவர்தம் படைப்புகளைப் பலர் ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளனர்.

புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் துணைவியார் சுகந்தம் அம்மையாருடன் இல்லற வாழ்வில் ஈடுபட்டு  ஆண்மக்கள் இருவரும் பெண்மக்கள் மூவருமாக ஈன்றெடுத்துப் புகழ்வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.

புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் முகவரி:

புலவர் மா. திருநாவுக்கரசு
4/82 நடுத்தெரு, திருமழபாடி – 621851
அரியலூர் மாவட்டம்

குறிப்பு: கலைக்களஞ்சியம் உருவாக்குவோர், கட்டுரை படைப்போர், நூல் எழுதுவோர் இக்கட்டுரைப் பகுதியை எடுத்தாள நேரும்பொழுது எடுத்த இடம் சுட்டின் மகிழ்வேன்.

கருத்துகள் இல்லை: