நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 8 மே, 2012

பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் தனிப்பாடல்கள்

 பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராக விளங்கியவர் என்பதை நாம் அறிவோம். அவர் மிகச்சிறந்த நாடக ஆசிரியரும் ஆவார். அவர் பாட்டியற்றும் திறனும் பெற்றிருந்தார். தஞ்சை மாவட்டத்தில் பெரும்புயற்காற்று வீசிய போது அவரியற்றிய தனிப்பாடல்கள் புகழ்வாய்ந்தனவாகும். சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் கருப்பக்கிளார் சு.இராமசாமி புலவரால் வெளியிட்ட தனிப்பாடல்கள் நூலின் தொகுதி 4(வெளியீடு 1964, பக்கம் 253-257) இல் வெளியாகியுள்ள இந்தப் பாடல்களை அமெரிக்காவில் வாழும் முனைவர் நா.கணேசன் அவர்கள் தம் நூலகத்திலிருந்து எனக்கு மின்வருடி அனுப்பியிருந்தார். என் வலைப்பூவில் பதிகின்றேன். பெருமழைப்புலவர் எழுத்துகளில் ஈடுபாடுகொண்டுள்ள தமிழுலகம் இப்பாடல்களைச் சுவைத்து இன்புறுக)

   [“சோழவள நாடு சோறுடைத்து” என்று ஒளவையார் என்னும் நல்லியற் புலவராற் புகழப்பட்ட சோழ வள நாட்டில் தஞ்சை மாவட்டம். திருத்தருப்பூண்டி வட்டத்தைச் சார்ந்த மேலைப் பெருமழை யென்னும் சிற்றூரில் வாழ்ந்த வேலுத்தேவர் என்பவருக்கு மைந்தனாகப் பிறந்தார் சோமசுந்தரனார். இவர் பிறந்த நாள் கி.பி. 1909ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் ஐந்தாம் நாள். இவர் திண்ணைப்பள்ளியிற் கற்கும் போதே தமிழ் மொழியார்வம் உள்ளத்தெழத் தெள்ளிய தமிழ்நூல் பல கற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்க் கல்லூரியில் முறையே பயின்று புலவர் வகுப்புத் தேர்ந்து நற்சான்றிதழும் பெற்றார். பின்னர்த் தம்மூர் வந்துசேர்ந்து உழவுத் தொழிலையே விழைந்து புரிந்து வாழ்ந்தார். தமிழாசிரியர் வேலை பார்க்குந் தகுதிபெற்றும் அவ்வேலைக்கு முயலாது தம் வாழ்வு நடத்தினார். இவரது செந்தமிழ்ப் புலமையைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் உணர்ந்து பல நூல்களுக்கு உரை யெழுதுமாறு வேண்டினர். அதற்கியைந்து சூளாமணி, குறுந்தொகை, பரிபாடல், ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு முதலிய நூல்களுக்கு உரையெழுதி யுதவினார். இரண்டொரு நாடக நூல்களும் உரைநடை நூல்களும் எழுதியிருக்கின்றார்.]

[தஞ்சை மாவட்டத்தில் புயற்காற்று வீசியபோது பாடியன.]

பித்தேறி னானிறைவன் நல்லருளைக்
கைவிட்டான் பெருங்காற் றானான்
மத்தேறி யுடைதயிர்போல் மன்னுயிர்கள்
உடைந்தொழிய மயக்கஞ் செய்தே
செத்தேயிங் கொழிகவெனச் சினந்திட்டான்
பேய்போலச் சீறா நின்றான்
கொத்தேறு குழலுமையும் முகிலாயங்
கவனோடே கூடி னாளால்!
(அ – ரை.) கொத்து – பூங்கொத்து. முகில் – மேகம். (1)

திடுதிடென உலகதிரத் திசைநடுங்க
வானிருளத் தெய்வ மஞ்சச்
சடசடவென் றொலிபடத்தீந் தருவெல்லாம்
வேரோடே சாய்ந்து வீழக்
கடகடவென் றேநகைத்தான்! கடல்பெருகித்
திடரேறிக் கலகஞ் செய்யப்
படபடவென் றேமாந்தர் பயத்தாலே
குலைநடுங்கிப் பதைத்து வீழ்ந்தார்!
(அ – ரை.) வான் இருள – விண் இருளையடைய. தீந்தரு – நல்லமரங்கள். (2)

எளியோர்கள் சிறுகுடிலும் எழிலோங்கு
மாளிகையும் இரைந்து சீறித்
துளியோங்கு மழையோடே சூறைவளி
சாடுதலால் சுவர்கள் சாயப்
புளியோங்கு மாமரமே தென்னைமரம்
வாழைமரம் புதல்பூண் டோடே
களியோங்கு பைங்கூழும் கரும்புகளும்
பாழாகிக் கழிந்த வாலோ!
(அ – ரை) சூறைவளி – சூறாவளி என்னும் பெருங்காற்று. கழிந்த – அழிந்தொழிந்தன. (3)

காற்றென்றே யிருந்திட்டார் காலையிலே
மாலையிலே கடுங்காற் றாகிக்
கூற்றென்றே உருக்கொண்டு கூ! கூ! வென்
றேயார்த்துக் குமைத்தல் கண்டார்
மாற்றொன்றும் அறியாதே மாந்தரெலாந்
திகைத்திட்டார் மகார்கள் தம்மைப்
போற்றும்வகை அறியாதே தாயரழப்
புதல்வர்களும் பொருமி னாரால்.
(அ – ரை.) கூற்று – நமன். ஆர்த்து – ஆரவாரித்து. மகார் – மக்கள். (4)

பட்டினியால் வாடுகின்ற ஏழைகுடில்
பெரும்பொருளே படைத்து வாழ்வோர்
கட்டியுயர் நீண்மாடம் சிறார்பயிலும்
கூடங்கள் சிதைந்து யாவும்
குட்டிநெடுஞ் சுவராகப் பாழ்படுப்ப
அச்சுவரைக் குறுகி நின்றே
ஒட்டியுயிர் ஓம்பினரால் மானிடவர்
சுவரின்றேல் ஒருவ ருய்யார்!
(அ – ரை.) குட்டி நெடுஞ்சுவர் – நீண்ட குட்டிச்சுவர். ஓம்பினர் – பாதுகாத்தார். (5)

ஆடிழந்தேம்! என்றழுதார்! ஆனிழந்தேம்!
என்றழுதார்! அந்தோ! வாழும்
வீடிழந்தேம்! என்றழுதார்! மேதையிலா
மானிடவர்! விண்ணிற் றோயுங்
கோடிருந்தே வாழ்குரங்குங் குதித்தாடும்
அணிற் குழுவும் பிறவுங் கீதம்
பாடிமமகிழ் பறவைகளும் இழந்தேமென்
றழுவாரைப் பார்த்தி லேமால்.
(அ – ரை.) மேதை – பேரறிவு. கோடு – கொம்பு. (6)

‘நில்லாது பொருளுலகின் நில்லாது
யாக்கையிவை நிலையென் றெண்ணி
ஒல்லாத தீவினைசெய் துழலாதீர்!
அறஞ்செய்ம்மின்! உலகீர்!’ என்றே
சொல்லாலே மெய்ந்நூல்கள் சொல்வனவும்
கேளாராய்ச் சுகித்து வாழும்
கல்லாத புல்லருநேர் கண்டுணர
வகைசெய்தான் காற்றுத் தேவன்.
(அ – ரை.) ஒல்லாத – செய்யக்கூடாத. யாக்கை – உடல். (7)

‘சிற்றுயிரும் சிற்றுடலும் சின்னாளும்
உடையீரே! செருக்கேன் மின்னே!
உற்றுயிர்வாழ் உலகெல்லாம் ஒருநொடியின்
நீறாக்கி ஊதித் தீர்ப்பேம்!
பெற்றவுயர் யாக்கையினாற் பெறுபயனும்
பெறீர்தெய்வம் பேணீர்! வீணீர்!
உற்றநும வாழ்க்கையிஃதிங் குறுஞ்சிறுமை
கண்டிமென்’ றுணர்த்தி னானால்!
(அ – ரை) செருக்கு – களிப்பு. பேணீர் – போற்ற மாட்டீர். (8)

காற்றாகி உயிர்க்குயிராய்க் காப்பானும்
நீயொருநாட் கருணை மாறிக்
கூற்றாகிச் சினஞ்சிறந்து கொல்வானும்
நீயென்னில் யாமென் செய்கோம்?
தேற்றாதே பெரும்பாவம் செய்கின்றேஞ்
சிறுமையினாற் செய்கை! தேறிப்
போற்றாதேம்! எனினுமெமைப் பொருளாகச்
சீறுவதோ! புகழான் மிக்கோய்!
(அ – ரை.) செய்கைதேறி – செய்யுஞ் செய்கையில் தெளிவடைந்து. (9)

படைத்திடுவாய் உலகுயிரைப் பரிந்தோம்பிக்
காத்திடுவாய்! பரனே! மீண்டுந்
துடைத்திடுங்கால் காற்றாகிக் கூற்றாகிச்
சூழ்பிணியாய்த் துயரே செய்து
புடைத்திடுவாய் எனினுமிவை அருளென்றே
புகல்கின்றார் புலமை நூலோர்
சடைத்திகழும் பெருமா! நின் றிருவருளே
வெல்கவெனத் தாழ்வே மன்னோ.
(அ – ரை.) பரிந்தோம்பி – அருள்கூர்ந்து. சூழ்பிணி – உண்டாகும் நோய். சடைத்திகழும் – சடைவிளங்கும். (10)

மேலும் அறிய

1 கருத்து:

valaiyakam சொன்னது…

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

நன்றி

வலையகம்