நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 24 டிசம்பர், 2011

பொன்னி இதழாசிரியர்கள் முருகு.சுப்பிரமணியன், அரு.பெரியண்ணன் வாழ்க்கைக் குறிப்பு


பொன்னி இதழாசிரியர் முருகு.சுப்பிரமணியன்

 திராவிட இயக்கம் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய இயக்கமாகும். இந்த இயக்கத்தின் கொள்கைகளைப் பறைசாற்றும் வகையில் பல ஏடுகள் உணர்வாளர்களால் நடத்தப்பெற்றுள்ளன. சற்றொப்ப முந்நூறுக்கும் மேற்பட்ட திராவிட இயக்க ஏடுகள் தமிழகத்தில் வெளிவந்துள்ளன. இவற்றுள் பொன்னி ஏடு 1947 இல் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்தது. பின்னர் சென்னையிலிருந்தும் வெளிவந்தது. 1953 அளவில் இந்த இதழ் நிறுத்தப்பட்டது.

 பொன்னி இதழில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பாடல்களை வெளியிட்டும் அதற்குத் தகுந்த படங்களை முகப்பில் வெளியிட்டும் இதழாசிரியர்கள் பாவேந்தர் புகழ்பரப்பியுள்ளனர். பாரதிதாசன் பரம்பரை என்ற ஓர் இலக்கிய அணி இந்த இதழின் வழி உருவானது. தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான அகிலன், கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், தில்லை வில்லாலன் எனப் பலர் இந்த ஏட்டில் எழுதியுள்ளனர்.

 பொன்னி இதழை நடத்திய முருகு.சுப்பிரமணியன், அரு.பெரியண்ணன் ஆகியோரின் படங்களையும், வாழ்க்கைக் குறிப்பையும் இங்கு இணைக்கின்றேன். தொடர்ந்து பொன்னி குறித்து எழுதுவேன். மேலும் விவரம் வேண்டுவோர் நான் பதிப்பித்த பொன்னி ஆசிரியவுரைகள், பொன்னி பாரதிதாசன் பரம்பரை, பொன்னி சிறுகதைகள் (வெளிவர உள்ளது) ஆகியவற்றைப் பார்க்கலாம்.


முருகு சுப்பிரமணியன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

முருகு சுப்பிரமணியன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோனாப்பட்டு என்னும் ஊரில் வாழ்ந்த முருகப்பன், சிவகாமி ஆச்சிக்கு மகனாகப் (5.10.1924-இல்) பிறந்தவர். திருச்சிராப்பள்ளி அர்ச். சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் 1939 - ஆம் ஆண்டு ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்தார். அவர்தம் தமிழாசிரியர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை என்பவர் முருகுவின் கட்டுரை புனையும் ஆற்றலைப் பாராட்டி ஊக்குவித்தார். 1942 - இல் முருகுவின் படிப்பு முதலாண்டு பல்கலைக்கழக வகுப்போடு முடிந்தது. படிப்பு முடியும் முன்னரே இளந்தமிழன் என்னும் திங்கள் இருமுறை ஏட்டைத் தொடங்கினார். கையெழுத்துப்படியாக இந்த ஏடு ஏறத்தாழ மூன்றாண்டுகள் வெளி வந்தது. இளந்தமிழன் ஆசிரியர் முருகு என வெளிவந்தது. அதுமுதல் முருகு. சுப்பிரமணியன் ஆனார்.

இளம் அகவை முதல் பாவேந்தர் பாடல்களிலும் திராவிட இயக்கக் கொள்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 1944 - 45 ஆம் ஆண்டுகளில் காரைக்குடியில் வெளிவந்த குமரன் என்னும் வார ஏட்டில் முருகு துணையாசிரியராகவும் நிர்வாகியாகவும் பணிபுரிந்தார். குமரன் இதழாசிரியர் சொ. முருகப்பா அவர்களிடம் இதழியல் நுட்பங்களை அறிந்து கொண்டார். 1947 - இல் பொங்கல் நாளையொட்டி, பொன்னி என்னும் இதழைத் தொடங்கினார். இது தமிழ் இலக்கிய உலகில் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்டது.

1953 - ஆம் ஆண்டு முருகு மலேசியா சென்றார். தமிழ்நேசன் இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார். 1954 - இல் சிங்கப்பூர் சென்று தமிழ்முரசு என்னும் நாளிதழில் துணையாசிரியரானார். மலேசியாவில் வெளிவந்த தமிழ்நேசன் இதழின் தலைமையாசிரியர் பொறுப்பை 1962 - முதல் ஏற்றார். எழுத்துத் துறையில் பலர் உருவாகத் துணையாக இருந்தவர். இவர் 1984 ஏப்ரல் 10 - இல் இயற்கை எய்தினார். இவர்தம் மக்கள் மலேசியாவில் புகழ் வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். (விரிவான செய்திகளுக்குச் சிந்தனையாளன் இதழில் சூன் 2003 - இல் வெளிவந்த எம் கட்டுரையைக் காண்க.)



அரு. பெரியண்ணன்

அரு பெரியண்ணன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

அரு பெரியண்ணன் அவர்கள் புதுக்கோட்டையை அடுத்த ஆத்தங்குடியைச் சேர்ந்தவர். இவர் பிறந்த ஆண்டு 12.8.1925 ஆகும். இளம் அகவை முதல் திராவிட இயக்க உணர்வுடன் வளர்ந்தவர். தம் பகுதிக்கு வந்த திராவிட இயக்கத் தலைவர்களை வரவேற்று விருந்தோம்பியவர். புதுக்கோட்டையில் செந்தமிழ்ப் பதிப்பகம் என்னும் பெயரில் அச்சகம் நடத்தியவர். இதன்வழித் திராவிட இயக்க நூல்கள் பலவற்றை வெளியிட்டு அப்பகுதியில் புகழ்பெற்றவர். முருகு சுப்பிரமணியன் துணையுடன் பொன்னி இதழை வெளியிட்டவர். முருகு வெளிநாடு சென்ற பிறகு பொன்னி இதழை முன்னின்று நடத்தியவர் இவரே ஆவார். எதனையும் திட்டமிட்டுச் செய்து முடிக்கும் ஆற்றலுடையவர். வேகமாக வினையாற்றும் இயல்புடையவர். இவர்தம் மக்கள் நற்பண்பு உடையவர்களாகவும் உயர்கல்வி வாய்த்தவர்களாகவும் விளங்குகின்றனர்.

1 கருத்து:

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

வணக்கம்! பதிப்பாசிரியர்கள் பற்றிய தங்கள் பதிவுகள் தொடரட்டும்.